Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு :
என்னவோ ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது ஷர்மிளாவிற்கு, அப்பாவிடம் வீடு வேண்டும் என்று பேசிவிட்டாள். அது தெரிந்தால் ரவி என்ன சொல்லுவானோ என்ற தயக்கம்.
ஆனாலும் “போடி” என்று சொன்னானே, அதையும் விட “உனக்கு முன்பே கியூவில் நின்றார்கள் இப்போது இன்னும் நிற்பார்கள்” என்று சொன்னானே. மனது நினைக்கும் போதே வலித்தது. “எப்படி என்னை பார்த்து அப்படி சொல்ல முடியும்” என்ற கோபம் என்பதை விட ஒரு வருத்தம், ஒரு ஆற்றாமை, ஒரு இயலாமை. சில நிமிடம் வாயிலில் நின்றாள்.     
பின் உள்ளே சென்றவள் சமையலறை சென்று “நான் எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா போர் அடிக்குது” என்றாள் கௌசல்யாவிடம்.
“ஒன்னும் வேணாம் அண்ணி, நாம நாலு பேர் தானே, இது ஒரு சமையலா?” என்று கௌசல்யா சொல்ல,
“சரி, நீ சமை, நான் பார்திட்டு இருக்கேன்”
“என்ன சமைக்கலாம் சொல்லுங்க?”  
“உனக்கு எது ஈசியோ அது”
“எனக்கு எல்லாம் ஈசி தான், உங்களுக்கு என்ன பிடிக்கும் சொல்லுங்க”
“சப்பாத்தி செய்வோமா”
“சப்பாத்தி, குர்மா” என்று முடிவு செய்த கௌசி, அதன் வேலைகளை செய்ய, கவனமாய் பார்த்துக் கொண்டாள் ஷர்மி.
நடு நடுவில் சந்தேகம் வேறு கேட்க…
“எதுக்கு அண்ணி இவ்வளவு கேள்வி, நீங்க சமைக்க போறீங்களா? போங்க நீங்க…” என்று சிரித்த கௌசி, “நாங்க இல்லைன்னா அண்ணா சமைப்பான் உங்களுக்கு, நீங்க கேட்கற கேள்வியை பார்த்தாலே உங்களுக்கு கிட்சன்னு இது பேர் மட்டும் தான் தெரியும் போல” என்று இலகுவாய் பேசினாள் கௌசி.
“ஒன்னும் ப்ராப்ளம் இல்லை, மெதுவா நான் கத்துக்குவேன்” என்றாள் உறுதியான குரலில் ஷர்மிளா.
“பாரு அண்ணா இந்த அண்ணியை” என்று கௌசி ஷர்மிக்கு பின் புறம் பார்த்து பேச,       
ஒரு சேரில் அமர்ந்திருந்தவள் திரும்பி பார்த்தாள்.
சுவரில் சாய்ந்து கை கட்டி அவளை தான் பார்த்து இருந்தான்.
“என்னவாம்?” என்று பார்வையை ஷர்மி மீது வைத்து கேள்வியை கௌசி நோக்கி கேட்க…
“சமைக்க கத்துக்கறாங்கலாம்” என்று கௌசி புன்னகைக்க, அதற்கு பதில் எதுவும் பேசவில்லை ரவி.
கௌசி குர்மா வைத்து முடித்து இருந்ததால், “அண்ணா பார்த்துக்கோ” என்று சொல்லி வெளியில் சென்று விட்டாள்.
“இன்னும் எவ்வளவு நேரம் சமையல் அறையில இருக்குற உத்தேசம்” என்றான்.
மெதுவாக எழுந்தவள் வெளியில் வர, உடல் சோர்ந்து முகம் சோர்ந்து ஒரு மாதிரி வெளிறி தெரிந்தாள் ஷர்மிளா.
ரவிக்கு அவ்வளவு கோபம் பொங்கியது. “ஒரு சண்டை, அதில் என் மண்டையை உடைத்தாலும் பரவாயில்லை. இவள் எதற்கு இப்படி உடம்பை கெடுத்துக் கொள்கிறாள்” என்று ஆத்திரமும் ஆதங்கமும் ஒரு சேர வந்தது.    
ஷர்மிளா வெளியே சென்றதும் இவன் உள்ளே சென்று சாத்துக்குடி ஜூஸ் செய்தவன், ஹாலில் அமர்ந்திருந்த அவளிடம் “குடி” என்று வந்து நீட்டிக் கொண்டே,
“கௌசி, அப்பாக்கு உனக்குக்கு ஜூஸ் போட்டிருக்கேன் எடுத்துக்கோ” என்று குரல் கொடுத்தான்.
ஷர்மி தானாய் கேட்டாள், “உங்களுக்கு”, அவனை கண்டுகொள்ளக் கூடாது என்று நினைத்தாலும் வாய்மொழி அதுவாக உதிர்ந்தது.   
“வேண்டாம்” என்று தலையசைக்க, அவளினது பெரிய கிளாஸ் டம்பளர்.
“நீங்க கொஞ்சம் குடிச்சிட்டு குடுங்க” என்று நீட்ட,
“ஏன் நீ குடிச்சிட்டு குடுத்தா நான் குடிக்க மாட்டேன்னு சொல்லியிருக்கேனா?” என்றான்.
ஷர்மி பதிலே பேசவில்லை. அவள் அருந்திவிட்டு பாதி கிளாஸ் நீட்ட, “இன்னும் கொஞ்சம் குடி” என்று சொல்லி அவள் குடித்த பிறகு மீதம் குடித்து எழுந்தவன்,
“எனக்கு பசிக்கலை, எனக்கு வெயிட் பண்ண வேண்டாம். நீ சாப்பிட்டிட்டு தூங்க வா” என்றவன் அவனின் அறைக்குள் புகுந்து கொண்டான்.
“ஏன் வேண்டாம்?” என்று ஷர்மி கேட்க கூட இடம் கொடுக்கவில்லை, சென்று விட்டான்.
ரவி ஹாஸ்பிடலில் இருந்ததற்கும் இங்கே இருப்பதற்கும் வித்தியாசம் தெரிய, தான் வீட்டை பற்றி பேசியது அவனுக்கு தெரிந்திருக்கும் என்று கனவா கண்டாள்.
இன்னும் கோபம் போகவில்லை போல, வேறு வழியில்லாமல் என்னை கூட்டிக் கொண்டு வந்து விட்டான் போல என்று தோன்ற அப்படி ஒரு சோர்வு தோன்றியது.
இரண்டு மூன்று நாட்களாய் சரியான உறக்கம் இல்லாதவன், உறங்கி இருந்தான். ஆனால் ஹாஸ்பிடலில் பின்பு அன்று மதியம் என்று சற்று உறங்கி இருந்தவளுக்கு உறக்கம் வருவேனா என்று இருக்க,
சேரில் அமர்ந்து கால்களை கட்டில் மேல் வைத்து நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டவள் உறங்கும் கணவனை தான் பார்த்து இருந்தாள்.
“ஏன் இவன் என்ன செய்தாலும் முழு மனதாய் தான் திருமணம் செய்தேன், இவனோடு நன்றாக வாழ வேண்டும் என்று தானே நினைத்தேன். அப்புறம் ஏன் இப்படியானது. இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம். இவனை விட்டு என்னால் இருக்க முடியாது இருப்பது போல இவனுக்கு ஏன் இருக்கவில்லை?”
“நான் மிகவும் பலகீனமாகிவிட்டேனா, இவன் என்ன செய்தாலும் பொறுத்து போகிறேனா. போடா என்று சொல்லி என்னால் ஏன் போக முடியவில்லை” என்று தோன்ற அழுகை தான் வந்தது. எதற்கென்று தெரியாத ஒரு அழுகை.
சத்தம் போடாமல் அழ வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு கேவல் தோன்ற, அந்த சத்தத்தில் ரவி விழித்து விட, அழுத இவளை பார்த்ததும் பதறி எழுந்து “என்ன? என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
அவசரமாய் அழுகையை நிறுத்த முற்பட்டு “ஒன்னுமில்லை” என்று பதட்டத்தோடு சொன்னாள்.
“இப்படி அழுதுட்டு இருக்க, கேட்டா ஒன்னுமில்லைன்னு சொல்ற! என்ன பண்ணுது உடம்பு ஏதாவது பண்ணுதா?” என்றான் கவலையாக.
“இல்லை” என்பது போல ஷர்மிளா தலையசைக்க,   
“அப்போ மனசை குழப்பற ரைட்” என்றவன், நேரத்தை பார்த்து “பால் சாப்பிட்டியா” என்றான்.
“இல்லை, வேண்டாம் சொல்லிட்டேன்” என்றாள்.
“கண்ணை துடை அழக் கூடாது” என்று அதட்டி வெளியே சென்றான். சில நிமிடங்களில் பாலோடு வந்தவன் “குடி” என்று கொடுக்க,
“நீங்க சாப்பிடலை”
“அப்போ பசிக்கலை, இப்போ பசிக்குது. நான் சாப்பிட்டு வர்றேன். நீ இதை குடிச்சிட்டு தூங்கு” என்றவன் வெளியே சென்று விட, 
ரவி என்னவோ அவளை தவிர்ப்பது போல தோன்ற மீண்டும் அழுகை வந்தது, ரவி உண்டு உள்ளே வரும் போது பாத்ரூமில் அவள் வாமிட் செய்யும் சத்தம் தான் கேட்க,
பாத்ரூம் கதவை வேறு தாளிட்டு இருக்க, “கதவை திற ஷர்மி” என்று தட்டினான்.
அவனுக்கு பயம் இன்று தானே ஹாஸ்பிடலில் இருந்து வந்தோம் மயக்கம் ஏதாவது வந்தால் என்ன செய்வது என்று.
முகம் கழுவி அவள் கதவை திறக்க, “உன்னை யார் கதவை தாழ்பாள் போட சொன்னா, இனி போடக் கூடாது” என்று அவளை மிரட்ட மீண்டும் அழுகை வந்தது ஷர்மிக்கு.
மீண்டும் ஷர்மி அழுவதை பார்த்தவனுக்கு கவலையாகிப் போனது “என்னடி உன் பிரச்சனை? சொன்னா தானே தெரியும், அழுதுட்டே இருக்க, உனக்குள்ள இன்னொரு உயிர் இருக்குன்னாவது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று கத்தினான். 
“அதுக்கு தானே என்னை கூட்டிட்டு வந்தீங்க, இல்லைன்னா அப்படியே விட்டு இருப்பீங்க தானே! ஐ அம் நோ வேர் தானே உங்களுக்கு! பேபி பெத்து குடுத்துட்டு போயிட்டே இரு சொல்றீங்க தானே! நான் வேண்டாம் தானே! நான் வேண்டாம் தானே!” என்று பதிலுக்கு அவளும் அழுகையோடு கத்த,
“ப்ச், அதெல்லாம் கோபத்துல சொல்றது, திரும்ப நான் தானே வந்தேன். அது உனக்கு தெரியலையா? நீ என்ன சின்ன பிள்ளையா? நல்லா இருக்குற உடம்பை அதையும் இதையும் நினைச்சு கெடுத்துக்கற, ஏதாவது இழுத்து விடு, எதுக்கு உனக்கு சிரமம்ன்னு நானே உன்னை கொன்னு போட்டுடறேன். அப்போ கூட உன்னை கொன்னு தான் போடுவேன். எப்படியோ போன்னு எல்லாம் விட மாட்டேன்!” என்றான் காட்டமாக.
அவனின் வார்த்தைகள் எல்லாம் சற்றும் ஷர்மியை அசைக்கவில்லை.
“நீங்க போக மாட்டீங்களா? போவீங்க, என்னை விட்டுட்டு போவீங்க! கல்யாணம் அன்னைக்கே போய் என்னை எல்லோர் முன்னமும் தலை குனிய வெச்சீங்க. அதனால தான் என்னை எல்லோரும் கீழ பார்க்கறாங்க! உங்கம்மா என்னை அதனால தான் எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அங்க போ இங்க போன்றாங்க” என்று பேச…
“தோ பார், அது நடந்துடுச்சு அவ்வளவு தான், அதையே பிடிச்சிட்டு தொங்கினா நான் ஒன்னும் பண்ண முடியாது, மனுஷனை நம்பணும். நீ எப்பவுமே என்னை நம்ப மாட்ட, இப்போ நீ போய் தூங்கு முதல்ல!” என்று அவளை அதட்டி அனுப்பினான்.
பின்பும் ஷர்மி பேச வர, அவளின் மேல் வாமிட் செய்த வாசம் ஹாஸ்பிடல் வாசம் என்று வர, “ஹாஸ்பிடல்ல இருந்து வந்து குளிச்சியா நீ?” என்றான்.
“டிரஸ் மாத்தினேன், குளிக்கலை” என்று தலையசைக்க…
“உட்காரு” என்றவன் பாத்ரூம் உள்ளே சென்று கெய்சர் போட்டு, பாத்ரூம் நன்றாக கிளீன் செய்து, தண்ணீர் பிடித்து, அவளின் துணியை எடுத்து போட்டு “குளிச்சிட்டு வா” என்றான்.
உண்மையில் ஷர்மிளாவை கண்ணுக்குள் வைத்து தான் தாங்கினான். ஆனால் ஐ லவ் யு என்ற வார்த்தையோ நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்ற வார்த்தையோ செய்கையோ இருக்காது. அதனால் அவளை பிடிக்காது என்று கிடையாது அல்லவா. ஷர்மிக்கு அது புரியவில்லை. அவளை பற்றி அவளை விட நன்கு புரிந்தவன் என்பது தான் உண்மை.      
அவள் “குளிக்கணுமா?” என்று சலிப்பாய் கேட்க,
“கண்டிப்பா குளிக்கணும், போ!” என்று துரத்தி அவள் குளித்து வரவும், இவனும் குளித்து வந்து, “எல்லாம் வாமிட் பண்ணிட்ட, திரும்ப பசிக்குதா?” என,
“இல்லை” என்று அவள் சொல்லவும், “தூங்கு” என்றான்.
ஷர்மிளா போய் படுத்துக் கொள்ள, வெளியில் சென்று எல்லாம் பூட்டி இருக்கிறதா என்று மீண்டும் சரி பார்த்து அவன் வந்து படுக்க, அருகில் படுத்திருந்தவளுக்கு அவனை அணைத்து பிடிக்க அப்படி ஒரு ஆவல் கிளம்பியது. “போடி” என்றவனை நெருங்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை.
இல்லையென்றால் ரவி அருகில் வர வேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டாள், இந்நேரம் மேலே ஏறி படுத்திருப்பாள். அவனுக்கு தூங்க முடியுமா முடியாதா என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு சிறு தடை கூட ஷர்மிக்கு ரவியிடம் கிடையாது. ஆனால் “உனக்கு கியூவில் நிற்பார்கள்” என்ற வார்த்தை வெகுவாக காயப்படுத்தி இருந்தது.  
அவளுக்கு நன்றாய் தெரியும் நிச்சயம் ரவி இல்லாமல் அவளால் இருக்கவே முடியாது என்று. அது தான் அந்த அவளின் நிலை. அதனால் விளைந்த சுய பச்சாதாபம், என்னை அவன் தேடுவதில்லை, நான் மட்டும் ஏன் தேடுகிறேன் என்று எண்ணம் அவளை பதட்டம் கொள்ள செய்தது.
இப்போதும் அவனை அணைக்க அணு அணுவும் துடிக்க அங்கே படுக்கவே முடியவில்லை. மெதுவாய் எழுந்தாள்.
“என்ன?” என்றவனிடம் ஒற்றை விரலை காண்பிக்க…
“இப்போ தானே படுக்க வந்த?”
“வந்தா… இப்போ வருது” என்று முனகிக் கொண்டே செல்ல,
“அம்மாடி, இவ குழந்தை பெத்து எடுக்கறதுக்குள்ள நான் ஒரு வழியாகிடுவேன் போலவே. மை ஜூனியர் சீக்கிரம் வந்துடு பேபி, நீ பாய் யா கேர்ள் ளா தெரியலை. யாரா இருந்தாலும் வந்து உங்க அம்மாவை சமாளிக்க எனக்கு கம்பனி கொடு” என்று மானசீகமாக நொந்து கொண்டே பிறக்கப் போகும் குழந்தையோடு பேசினான்.
சிறிது நேரம் கழித்து வந்தவள் படுத்துக் கொண்டாலும் அசைந்து கொண்டே இருக்க, “என்ன தான் பண்ணுது உனக்கு?” என்று ரவி எழுந்து அமர்ந்து விட்டான்.
“தூக்கம் வரலை” என்று பரிதாபமாய் சொல்ல.
ரவிக்கு தெரியாதா என்ன அவனின் அருகாமைக்கு ஏங்குகிறாள் என்று.   
“கண்மூடு முதல்ல, அப்போ தான் தூக்கம் வரலாமா வேண்டாமா யோசிக்கும். கண்ணை இப்படி முழிச்சு முழிச்சு வெக்காதே” என்றவன் அவளை நெருங்கி அருகில் படுத்துக் அணைத்து கொள்ள…
மீண்டும் அப்படி ஒரு அழுகை பொங்கியது ஷர்மிளாவிற்கு.
“நிஜமாவே என்னால முடியலை? என்ன வா வேணா இருக்கட்டும், அழாத தூங்கு!” என்றான் அணைப்பை விலக்காமல்.
சிறிது நேரத்தில் அழுகை நின்று ஒரு சோர்வு ஆட்கொள்ள, அழுது கொண்டே இருந்ததில் கண்ணயர்ந்தாள்.
உறக்கத்தில் அவளை சுற்றி இருந்த அவனின் கையை இறுக்க பிடித்து வேறு கொள்ள, “நான் நினைத்தது போல இவள் தைரியசாலி அல்ல” என்று தான் தோன்றியது ரவீந்திரனுக்கே.
அவனுக்கு புரியவில்லை. இது ஷர்மிக்கு அவனின் மீதான பிடித்ததின் வெளிப்பாடு. “ஏன் எனக்கு இவனை இவ்வளவு பிடிக்க வேண்டும்?” என்ற விஷயத்தின் வெளிப்பாடு. “இவன் என்னை போ என்று சொல்லிவிட்டால் என்னால் இவனை விட்டு தனியாக எப்படி இருக்க முடியும்?” என்ற வெளிபாடு.
“உன்னை விட மாட்டேன்” என்று அவன் வாய்மொழியாக சொன்னால் கூட “நீயில்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று அவன் சொல்ல வேண்டும் என்பதல்ல ஆனால் நினைக்க வேண்டும் என்று நினைக்கும் விஷயத்தின் வெளிப்பாடு என்று.
எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், சில சமயம் பைத்தியகார மனது பலதும் நினைக்க தானே செய்யும்.  
  
  
                 
     
   
  
         

Advertisement