Advertisement

“இல்லை, உனக்கு தெரியாது ரவிக்கு கோபம் வந்தா பிசினெஸ் எல்லாம் டிஸ்டர்ப் பண்ணுவாங்க, நாம ஏழை ஆகிடுவோம்” என்று சொல்ல,
அம்மாடி இவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்னை பற்றி என்று தோன்ற ரவீந்திரன் ஸ்தம்பித்து விட்டான்.
“அப்படி எல்லாம் பண்ண மாட்டார் பேபி. அப்படியே பண்ணினாலும் நம்ம பிசினெஸ் பண்ணனும்னு நினைச்சா தானே நாம ஏழை ஆவோம். நாம அதை வித்துடலாம். அப்போ நாம ஏழை ஆக மாட்டோம், நானும் அப்பாவும் இருக்குற வரை உன்னை விடவே மாட்டோம். உன்னை விட எங்களுக்கு எதுவும் முக்கியமில்லை உனக்கு புரிஞ்சதா?” என்று சந்தோஷ் சொல்லவும், கௌசி வரவும் அந்த பேச்சை விட்டவன்,
“எதையும் நினைக்கக்கூடாது, இப்போ நீ சந்தோஷமா இருக்கணும், அது தான் என்னோட பேபியோட பேபிக்கு நல்லது” என்றான் சிறு குழந்தைக்கு சொல்வது போல.
கேசவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவருக்கு பேசவே வரவில்லை. ஷர்மிளா இப்படி எல்லாம் மனவுளைச்சலில் இருப்பாள் என்று அவருக்கு தெரியவில்லை.
அவருடைய வாழ்க்கை பாணி வேறு தான், விசாலியுடனான அவருடைய வாழ்கையும் அவருக்கு திருப்தியே. ஆனால் அதற்காக மக்களை விட்டுக் கொடுப்பவர் கிடையாதே.
எப்படி இவ்வளவு தன்னம்பிக்கை அற்று போனால் அவரின் பெண் என்று புரியவில்லை. வெளியே காண்பிக்கும் தைரியம் அவளிடம் இல்லை போல என்று நினைத்தவர் ஓய்ந்து போனார்.               
அதுவரை ஸ்பீக்கரில் இருந்த கைபேசியை சந்தோஷ் அணைத்தான்.
ஃபாக்டரிக்கு செல்லும் பாதி வழியில் இருந்தான் ரவி. வாழ்க்கையும் அவனை பாதி வழியில் நிறுத்தி விட்ட எண்ணம் தான்.
இவ்வளவையும் மனதில் இந்த இரண்டு நாட்களாக யோசித்தாளா இல்லை முன்னம் இருந்தே இந்த நினைப்பு இருந்ததா? எதுவாகினும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒன்றுமே இல்லை. அவளுக்கு தான் நம்பிக்கையை கொடுக்கவே இல்லையா என்றதில் மனதே விட்டு போனது.
என் கணவன் எனக்காக எதுவும் செய்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு ஏன் வரவில்லை? உண்மையில் விசாலியின் விஷயம் தெரிந்த பிறகு கேசவனிடம் பேசுவதை விட்டு இருந்தாள்.
வெகு அவசியத்திற்கு மட்டுமே பேச்சு, ஆனால் அந்த அப்பாவை சட்டென்று நம்ப முடிகிறது என்னை முடியவில்லை. எங்கே தவறி விட்டேன் வாழ்க்கையில் என்று அளவளாவிய வருத்தம் மனதில் வந்து அமர்ந்து கொண்டது.
“பா” என்று கேசவனை அழைத்த ஷர்மி, “இது என்னோட பெர்சனல் நீங்க நான் பேசினதை உங்களுக்கு யார் எவ்வளவு க்ளோஸ்சா இருந்தாலும் ஷேர் பண்ணக் கூடாது. அப்படி பண்ணுனீங்க? அப்புறம் எனக்கு அப்பா வேண்டாவே வேண்டாம் சொல்லிடுவேன், சந்தோஷ் உனக்கும் தான்!” என்று சொல்ல,
“இல்லை, சொல்ல மாட்டேன்” என்று கேசவன் ஸ்திரமாய் சொன்ன பிறகு தான் முகம் தெளிந்தாள்.
சற்று நேரம் சாலையில் இருந்தவன், பின் வீட்டை நோக்கி காரை திருப்பினான்.
ரவி மீண்டும் வீடு வர, அவனை பார்த்த கேசவனிற்கு என்ன பேசுவது என்று கூடத் தெரியவில்லை. சந்தோஷ் அவனை எதிர்பார்த்து இருந்தான்.
ஷர்மி தான் “இப்போ தான் போனீங்க” என்று கேள்வி கேட்க,  
“ஒரு முக்கியமான வேலைன்னு போனேன், அப்புறம் பண்ணிக்கலாம் தோணிச்சு வந்துட்டேன்” என்று சந்தோஷ் அருகில் அமர்ந்தான்.
அமர்ந்தவன் சந்தோஷின் கைகளை தட்டிக் கொடுத்து ஷர்மி அறியாமல் “தேங்க்ஸ்” என்றான்.
ஷர்மி பார்க்கவைல்லை ஆனால் கேசவன் கவனித்து விட, குழப்பமாய் பார்த்தார், ஆனால் ஏனென்று கேட்கவில்லை.
கேசவனின் முகம் அப்படி ஒரு சோர்வையும் வருத்தத்தையும் காண்பித்தது.
ஆனால் என்ன பேசிவிட முடியும் அவனால், அதையும் விட எதையும் பேசவும் விருப்பமில்லை. முதலில் பெண்ணுக்கே அவன் நம்பிக்கை கொடுக்கவில்லை என்பது திண்ணமாகி விட்டது. இதில் அவளின் அப்பாவிடம் மீண்டும் உங்களின் பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று சொல்வது எந்த வகையிலும் அவரை சரி படுத்தாதே. இது காலம் செய்ய வேண்டிய மாற்றம் என்று யோசித்தவனுக்கு அவனை அறியாமல் பெருமூச்சு வந்தது.
அமைதியாய் தான் அமர்ந்திருந்தான் பேச்சு எதுவும் யாரிடமும் கொடுக்கவில்லை. சந்தோஷும் கேசவனும் கூட பேசவில்லை.
அங்கே அப்படி ஒரு அழுத்தமான அமைதி.
வாசன் அதுவரை அங்கே வரவேயில்லை. “கௌசி” என்று அழைத்த ஷர்மி தான் “மாமா ஏன் அங்கேயே இருக்கார், இங்க வர சொல்லு” என்றாள்.
வாசன் வந்தவர் ஏதோ பேச்சு கொடுக்க, சில வார்த்தைகள் அங்கே பேசப் பட, கேசவனும் சந்தோஷும் கிளம்பினர்.
ஷர்மி அவர்களை கார் வரை சென்று வழியனுப்ப, இவர்கள் மூவரும் நின்று விட்டனர்.               
கேசவனின் வெறுமையான முகத்தை பார்த்தவளுக்கு என்னவோ போல இருக்க, “பா, நீங்க இப்படி இருந்தா நான் சொல்லியிருக்கவே கூடாதோ தோணுது. எதுவும் பிரச்சனையில்லைப்பா, பிரச்சனை ஆகாது, ஒரு வேளை ஆனான்னு தான் யோசிச்சேன்” என்று சொல்ல,
“உனக்கு ரவியை பிடிக்கலையா ஷர்மி” என்று கேசவன் கேட்க,
“தெரியலைப்பா, உண்மையா எனக்கு தெரியலை! ஆனா ஒரு ரெண்டு நாள் கூட அவரில்லாம எனக்கு இருக்க முடியலை. பாருங்க ஐ சீ யு போய் அட்மிட் ஆகிட்டேன்” என்றாள் கலவரமான குரலில்.
இந்த பதிலில் சற்று தெளிந்த கேசவன், “உன்னோட பயம் ரவி உன்னை விட்டுடுவானோன்னு நீ நினைச்சா அதுக்கு அவசியமேயில்லை. எனக்கு அவனை இத்தனை வருஷமா தெரியும் கண்டிப்பா விடமாட்டான்” என்றார்.
“சரி பா” என்று தலையாட்டியவளின் மனதில் இருந்தது ஒன்று தான். “அவன் விடுவானா மாட்டானா என்பது இங்கே பேச்சில்லை, அவன் போடி சொன்ன பிறகும் எனக்கு போக வழியில்லாம நான் இங்க வந்திருக்கேன். அவன் சாரி கேட்டு என்னை கூட்டிட்டு வந்தாலும் அவன் எனக்காக தான் அதை செஞ்சிருப்பான். அவனுக்காக கிடையாதே” என்ற நினைப்பே! 
“நான் ரவி கிட்ட பேசட்டுமா” என்றார்.
“பா, ப்ளீஸ் ஒன்னும் வேண்டாம்”
“கணவன் மனைவிக்குள்ள சண்டை எல்லாம் சாதாரணம், அதுக்காக நீ இவ்வளவு குழப்பிக்காதே. ரவி நிச்சயம் தப்பானவன் கிடையாது. அப்படி ஒரு இடத்துல நான் உணர்ந்து இருந்தா கூட அவனை நம்பி உங்களை எப்படி நம்ம வீட்ல விட்டிருப்பேன்”
“அவனுக்கும் எனக்கு பிரச்சனையே உன்னால தான்”
“அவன் ரொம்ப தன்மானம் பார்ப்பான். அவனை சீண்டினா தான் உங்களுக்குள்ள ப்ராப்ளம் வரும். அதை மட்டும் செய்யாதே” என்று ரவியை பற்றி நன்கு தெரிந்தவராக மகளுக்கு சொல்லி அவர் கிளம்ப, சந்தோஷ் வெறும் பார்வையாளன் மட்டுமே!
என்னவோ சந்தோஷிற்கு அப்படி ஒரு நம்பிக்கை! ரவிக்கு ஷர்மியின் மனநிலை தெரிந்து விட்டது அவன் பார்த்துக்கொள்வான் என்பது போல.
ஷர்மி அவர்களை அனுப்பி வீட்டின் உள் நுழைந்த போது கௌசி ரவியிடம் கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது, “அண்ணா வேலை இல்லை சொன்ன, பின்ன கிளம்பி போன, திரும்ப வந்துட்ட, இப்போ ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றது தான்.
ரவி கௌசியிடம், “இதுக்கு நான் கண்டிப்பா பதில் சொல்லணுமா?” என்று கேட்ட விதத்திலேயே கௌசி கப் பென்று வாயை மூடிக் கொண்டாள். அதை பார்த்த ஷர்மிக்கு இன்னும் பயமானது.
மெதுவாக உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள். .
அவளிடம் பயத்தை பார்த்த ரவிக்கு அப்படி ஒரு கோபம் வர, எழுந்து ரூமின் உள் சென்று விட்டான்.
ஷர்மிளாவின் பயம் அவனால், அவனால் மட்டும் என்று ரவீந்திரனுக்கு புரியவில்லை. மிக மிக தைரியமான பெண் ஆனால் அவளை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த முறை, அதன் பின் அவளை வீட்டில் விட்டு வந்தது, இதையெல்லாம் விட அவள் அவனுக்கு முக்கியம் என்று எந்த இடத்திலும் உணர்த்தாதது, அதுவே அவளின் பயங்களுக்கு காரணம் என்று புரியவில்லை.    
அதை உணராமல் இதுவரை தாங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்ற கேள்வி மட்டுமே ரவியின் முன் பூதாகரமாக நின்றது.
“அந்த நம்பிக்கையை நான் கொடுக்கவில்லையா இல்லை திருமணத்திற்கு முன் எப்போதும் தப்பாய் நினைப்பாளே அப்படி தான் இன்னம் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாளா” என்று தோன்ற,
“எதுவாகினும் அவள் நன்றாய் பெற்று பிழைக்க வேண்டும் முதலில், உன்னுடைய கோபத்தை காண்பிக்காதே” என்று சொல்லிக் கொண்டான்.  
  
       
   
                            

Advertisement