Advertisement

அத்தியாயம் இருபது :
வீடு வந்து விட்டனர். வீட்டை நிர்வகிக்கும், சமைக்கும் கணவன் மனைவிக்கு விடுப்பு கொடுத்து விட்டதால் கௌசல்யா எல்லா பொறுப்பையும் வீடு வந்தவுடனே தனதாக்கி கொண்டாள்.
ஷர்மிளா இப்போது கர்ப்பமாக இருக்கிறாள், மருத்துவமனை வாசத்திற்கு பின் வந்திருக்கிறாள் என்பது வேறு. உண்மையில் இதெல்லாம் ஷர்மிக்கு வராது. அவளுக்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. கற்றுக் கொள்ளும் அவசியமும் வரவில்லை.
முன்பும் வீட்டு நிர்வாகம் அவளின் அம்மா, பின் ரவி, அவன் வந்த பிறகு விசாலி, இங்கே மணமாகி வந்த பிறகு ரவியே.
அதனால் இப்படி எல்லாம் தனதாக்கி சூழலை விரைந்து கையிலெடுக்கும் கௌசியை ஷர்மிக்கு பிடித்தது. எப்போதும் சீதாவுடன் பார்த்ததால் பெரிதாக கௌசி தனித்து தெரியவில்லை. இப்போது தனித்து தெரிந்தாள்.        
“ரூமிற்கு சென்று படு” என்றதற்கு, “இல்லை ஹால்ல இருக்கேன்” என்று ஷர்மி அங்கேயே தான் இருந்தாள். ஹாஸ்பிடலில் இருந்த வரை படுத்து தானே இருந்தாள்.
“எதுன்னாலும் எனக்கு போன் பண்ணு, ஃபாக்டரி எல்லாம் போட்டது போட்டபடி வந்துட்டேன். என்னனு பார்த்துட்டு சீக்கிரம் வந்துடறேன்” என்று ரவி சொல்லிச் சென்றான்.
சந்தோஷும் இவளை விட்டதும் கிளம்பி இருந்தான், “ஈவ்னிங் வர்றேன் பேபி” என்றபடி. 
அப்போதே மணி பன்னிரண்டு கௌசல்யா மதிய உணவிற்கு தயார் செய்ய, வாசன் மகளுக்கு உதவ சமையல் அறையில் இருந்தார்.
வேகமாக உணவை தயார் செய்த போது ஒன்றரை மணி நேரம் ஆகி விட, அதனை கொண்டு வந்து உணவு மேஜையில் வைத்த கௌசி, “அண்ணி சாப்பிட வாங்க” என்றாள்.
ஷர்மிக்கும் நல்ல பசி, உண்டு முடித்தவள், “நான் போய் தூங்கட்டுமா?” என்று கேட்க,
“என்ன அண்ணி நீங்க என் கிட்ட பெர்மிஷன் கேட்கறீங்க?”
“இல்லை, எனக்கு பெருசா எதுவும் தெரியாது. ஆனா ஹெல்ப் பண்ண வரலாம்னா அந்த சமைக்கற ஸ்மெல் எனக்கு வாமிட்டிங் சென்சேஷனா இருக்கு. அது தான் வரலை!” என்று விளக்கம் கொடுக்க,
“அண்ணி போங்க, போய் ரெஸ்ட் எடுங்க!” என்று சொல்ல,
அப்போதும் ஷர்மி தயங்கி பார்க்க, “என்ன அண்ணி?” என்றாள்.
“அது நான் போன பிறகு என்ன ஆச்சு” என்று கேட்க,
“அண்ணாக்கு ரொம்ப கோபம், அம்மாவை திட்டி எங்களை அப்போவே ஊருக்கு அனுப்பிட்டார். திரும்ப முந்தா நேத்து நைட் நீங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கறதை விசாலி அத்தை அம்மா கிட்ட சொல்லியிருப்பாங்க போல, அம்மா என்கிட்டே சொன்னாங்க, நான் அப்பா கிட்ட சொன்னேன்”
“தாத்தாவும் பாட்டியும் என்னவோன்னு பயந்துட்டாங்க. அவங்க ஊருக்கு வர்றேன்னு பிடிவாதம், அப்பா தான் நாங்க முதல்ல போய் பார்க்கறோம்னு என்னை கூட்டிட்டு வந்துட்டார்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள்.
“ஒஹ்” என்று முடித்துக் கொண்டாள் ஷர்மிளா. வேறு எதுவும் கேட்கவில்லை, பின் உறங்க சென்று விட, ரவீந்திரன் வந்த போது மாலை ஐந்து மணி.
நேரே சென்று ஷர்மியை பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில், பின் உணவு உண்ண வந்தவன் வேகமாய் உண்பதிலேயே அவனின் பசியின் அளவு தெரிந்தது.
கௌசி மௌனமாய் பரிமாறினாள், உண்டு முடித்தவனிடம் “அண்ணா மதியம் சாப்பிடலையா? நீங்க வர முடியலைன்னா அங்கேயே சாப்பிட வேண்டியது தானே கேண்டீன்ல”
“இல்லை கௌசி, வந்துடலாம்னு இருந்தேன். அதான் எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துட்டேன், இனி நாளைக்கு தான் போகணும்” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே, விசாலியும் கேசவனும் வந்தனர் கூட விசாலியின் அம்மாவும்.
நேற்று ஹாஸ்பிடல் வந்தது தான் கேசவனும் விசாலியும், “நாளை டிஸ்சார்ஜ் வர வேண்டியதில்லை” என்று ரவி சொல்லியிருக்க அவர்கள் வந்திருக்கவில்லை.
விசாலியின் அம்மா ஹாஸ்பிடலில் வந்து பார்க்க கேட்டிருக்க அதற்குள் ஷர்மி டிஸ்சார்ஜ் ஆகியிருக்க, பார்க்க வந்தனர்.
அவர்களை பார்த்த ரவிக்கு முகம் மாறாமல் “வாங்க” என்று சொல்ல வெகுவாய் சிரமப் பட்டு போனான்.
நிச்சயம் இன்றைய மனநிலையில் ஷர்மி அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியாது. உண்மையில் ஷர்மியை விட அவனுக்கு தான் பொறுக்க முடியாமல் போகப் போகிறது என்று தெரியவில்லை. “ஹி இஸ் லைக் அ மான்ஸ்டர்” என்ற கூற்றை உறுதிப் படுத்தப் போகிறான் என்று தெரியவில்லை.     
கௌசி தான் வீட்டின் ஆளாக “வாங்க, வாங்க” என்று முகம் மலர உபசரித்தவள், அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“ஷர்மி ஹாஸ்பிடல்ல இருந்தா இல்லையா? அம்மா பார்க்கணும்னு பிடிவாதம்” என்று விசாலி தயங்கி தயங்கி ரவியோ சொன்னார்.
“என்ன பதில் சொல்வது?” என்று கூட ரவிக்கு வரவில்லை.
“அதனால என்ன அத்தை? இருக்கட்டும். ஆனா அண்ணி இப்போ தான் தூங்கினாங்க. டாக்டர் தூங்கும் போது எழுப்ப வேண்டாம் சொல்லியிருக்காங்க, நீங்க பேசிட்டு இருங்க அண்ணி எழுந்தா பாருங்க இல்லை இன்னொரு நாள் பார்க்கலாம்” என்றாள் தெளிவாய்.
அம்மாவின் சாமார்த்தியம் அண்ணனின் தைரியம் எல்லாம் ஒருங்கே அவளுக்கு வந்திருந்தது.
“என்ன சாப்பிடறீங்க? காபி யா? டீ யா? அப்பா பேசிட்டு இருங்க” என்று கேட்டு சொல்லி உள்ளே சென்றவள், அடுப்பில் பாலை சிம்மில் வைத்து, மெதுவாக யாரின் கவனமும் கவராமல் அண்ணி ரூம் சென்றாள்.
அப்போது கண் விழித்து ஷர்மி எழுந்து அமர்ந்திருக்க, “அண்ணி அத்தையோட அம்மா உங்களை பார்க்க வந்திருக்காங்க, நீங்க தூங்கறீங்க டிஸ்டர்ப் பண்ண முடியாது சொல்லிட்டேன்”
“உங்களுக்கு அவங்களை பார்க்க முடியும்னா வாங்க, இல்லை தூங்கறாங்கன்னு சொல்லிக்கறேன்” என்று சொன்னார்.
கௌசியின் இந்த சுபாவம் ஷர்மியை கவர, “என்ன பண்ணட்டும் நீ சொல்லு?” என்றாள் புன்னகையுடன்.
இரண்டு நாட்களில் கௌசி அண்ணியின் முகத்தில் பார்க்கும் முதல் புன்னகை.
“இப்படியே சிரிச்சிட்டே இருங்க” என்று கௌசி நெட்டி முறிக்க, ரவி சரியாக உள்ளே வந்தான்.
அவனுக்குமே அதை பார்த்ததும் சிரிப்பு. “என்ன கௌசி பண்ற?”  
“அதுவா அண்ணி அழகா இருந்தாங்க திருஷ்டி எடுத்தேன்”  
ஷர்மி அடுத்த நொடி அவளையும் அறியாமல் சொன்னாள் “உன்னை விடவா நான் அழகு” என்று.
ஆம்! கௌசி அவளின் அண்ணனை போல மிக அழகான பெண்.
ரவி இதை சொன்ன ஷர்மியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். இதை சொல்லும் மனது அழகல்லவா?
“நீங்க தூங்கறீங்க சொல்லவா” என்ற கௌசியிடம்,
“எதுக்கு வேண்டாம்?” என்று ரவி பதில் கொடுத்தான்.
“விசாலி அத்தையோட அம்மா சும்மா தேவையில்லாததை பேசி வைப்பாங்க” என்று கௌசி சொல்ல..
“அதெல்லாம் ஷர்மியே பார்த்துக்குவா? அவ பார்த்துக்கலைன்னா நான் பார்த்துக்குவேன். என்ன எங்கம்மா தான் என்னை ஏகத்துக்கும் டென்ஷன் பண்ணிடுவாங்க” என்று ஷர்மியை பார்த்தபடி சொன்னான்.
ஷர்மியிடம் எந்த பிரதிபளிப்பும் இல்லை.
மெதுவாக இறங்கியவள் கௌசியிடம் “நீ போ கௌசி, நான் ஃபிரெஷ் ஆகிட்டு வர்றேன்” என்று சொல்ல,
கௌசி சென்று விட, ரவி அங்கேயே அமர்ந்திருந்தான். சண்டை போடும் ஷர்மி கூட அவனை தள்ளி நிறுத்துவதாய் அவனுக்கு எண்ணம் வந்ததில்லை. ஆனால் இந்த பாவனை தள்ளி நிறுத்தியது.  
மெதுவாக வந்தவள் ரவியிடம் எதுவும் பேசாமல் வெளியே செல்ல, அவளுடன் ரவியும் சென்றான்.
அதற்குள் கௌசி எல்லோருக்கும் காஃபி கொடுத்துக் கொண்டிருக்க, சந்தோஷும் வந்து விட்டிருந்தான்.
அவனின் அப்பாவின் பக்கத்தில் அமர்ந்து “எதுக்குப்பா இப்போ இவங்களை கூட்டிட்டு வந்தீங்க?” என்று மெல்லிய குரலில் அதட்டிக் கொண்டிருந்தான்.
“நான் மட்டும் தனியா தான் கிளம்பிட்டு இருந்தேன், இவங்க திடீர்ன்னு வந்து குதிச்சிட்டாங்க, வேற வழியில்லாம விசாலியையும் கிளப்பிட்டு வந்தேன்” என்று அவர் சொல்ல,
“பேபி மட்டும் டென்ஷன் ஆகட்டும், உங்களுக்கு இருக்கு…” என்று சொல்ல, சரியாக அப்போது ஷர்மிளா வர, எழுந்த சந்தோஷ் “பேபி, எப்படி இருக்கு இப்போ” என்று அருகில் சென்றான்.
அவனின் கையை பிடித்துக் கொண்டவள் “நல்லாயிருக்கேன்” என்ற தலையசைப்பு, தனியாக இருந்த ஒரு சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டே “வாங்க” என்றாள் பொதுவாய்.
“நல்லாயிருக்கியாம்மா இப்போ, உடம்பு பரவாயில்லையா?” என்று கேள்வி கேட்டவர் ஷர்மி பதில் சொல்லும் முன்னமே, “என்ன தொந்தரவாச்சு உடம்புக்கு?” என்றார்.
“இப்போ நல்லாயிருக்கேன்” என்று மட்டும் ஷர்மி சொல்ல
“ஏதோ கடவுள் புண்ணியம், இந்த மாதிரி சமையத்துல நாம ஜாக்கிரதையா இருக்கணும்” என்றார்.
“சரி” என்று அவள் சொல்ல,
“ரெண்டு நாளைக்கு முன்ன நாள் குறிக்க வந்தாங்களே? என்ன நாள் குறிச்சீங்க” என்று ஆரம்பிக்க,
“அதெல்லாம் தாத்தாவும் பாட்டியும் சொல்லுவாங்க” என்று ரவி முந்திக் கொண்டான்.
பின் “ஒரு வரன் வந்திருக்கு சந்தோஷ்க்கு பார்க்கலாமா?” என்றார் பொதுவாய்.
சந்தோஷ் என்ன இது புதிதாய் என்பது போல பார்த்தான் அவனுக்கு எதுவும் தெரியாது.
“என்னப்பா?” என்றான் கேசவனை கேட்க
“ஜாதகம் கேட்டாங்கடா குடுத்தேன், இது என்னன்னு எனக்கே தெரியாதே” என்றார்.
கேசவனும் சந்தோஷும் விசாலியை பார்க்க “அம்மா சொன்னாங்க, நான் தான் எல்லோரும் இருக்கும் போது பேசலாம்னு சொன்னேன். இப்போ பேசுவாங்கன்னு எதிர்பார்க்கலை” என்றார் சங்கடமாக.
ஷர்மி சந்தோஷை தான் பார்த்தாள்.
“எனக்கு தெரியாது” என்று எல்லோர் முன்னமும் உதடு பிதுக்கினான் சந்தோஷ்.
“பெரியம்மா, தப்பா எடுக்காதீங்க. நாங்க இப்போ சந்தோஷ்க்கு கல்யாணம் பண்றதா இல்லை. முதல்ல ஷர்மிக்கு நல்ல படியா குழந்தை பிறக்கணும். அப்புறம் பார்த்துக்கலாம். அப்போவும் பாருங்க மாமாக்கு நிறைய சொந்தம் கிடையாது. அதனால அவருக்கு அதிகமா ஆளுங்களை தெரியாது. அவருக்கு இந்த மாதிரி பொண்ணு பார்க்கற விஷயத்துல எல்லாம் விவரம் பத்தாது”
“நான் என்னவோ சந்தோஷ்க்கு பார்த்து செய்வேன், விசாலி அத்தை இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷம் இருக்குமா? அந்த ரெண்டு வருஷமா தான் நான் அங்க இல்லை!”
“மத்தபடி சந்தோஷ் ஷர்மி எல்லாம் வளர்ந்தது என் கண் முன்னால. அதுலையும் அவங்களை பார்த்துக்கிட்டதே நான் தான். அதனால அவன் கல்யாணம் என் பொறுப்பு, நான் அவங்கப்பாக்கே அந்த உரிமையை குடுக்கலை” என்று ஸ்திரமாய் பேசினான்.
ரவி அப்படி பேசுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
“என்ன மாமா நான் சொல்றது சரி தானே, உங்களுக்கு எதுவும் பிடிக்கலையோ?” என்று கேட்டான்.
உண்மையில் கேசவனுக்கு ஆட்களை தெரியவே தெரியாதே, “நீ சொன்னா சரி ரவி” என்று விட்டார்.
ஏன் அப்படி பேசினான் என்று யாருக்கும் தெரியாத போதும் ஷர்மிக்கு நன்கு தெரிந்தது. இவளுக்கு ஒரு முறை இப்படி தானே வரன் கொண்டு வந்தார். அதனை கொண்டு அவன் கட்டன் ரைட்டா பேசினான்.
எதையும் எதையும் ரவி மறப்பதில்லை என்பதற்கு ஒரு உதாரணம் அது.
ஆனால் வரன் கொண்டு வந்தது மட்டும் காரணமல்ல. அவனின் தொழிலை வேறு பங்கு போட்டு கொடுத்தார் அல்லவா. அது ஷர்மியின் ஞாபகத்தில் இல்லை.
ஆனால் ரவியின் ஞாபகத்தில் நன்றாக இருக்கிறதே.

Advertisement