Advertisement

பின் அண்ணனும் தங்கையும் தான், அப்போது தான் ஷர்மி சந்தோஷின் முகத்தை கவனித்து “ஏன் சந்தோஷ் ஒரு மாதிரியா இருக்க?” என்றாள்.
“ஒன்னுமில்லையே” என்றான்.
“இல்லை, ஏதோ இருக்கு” என்று அவனை தெரிந்தவளாக பேச,  
“ஒன்னுமில்லை” என்றான் பிடிவாதமான குரலில்.
“ஏதாவது சொன்னாரா? ரவி வரட்டும்!” என்று கோபமாய் பேச,
“ப்ச், பேபி, முதல்ல இப்படி அவர் கூட சண்டை போடறதை நிறுத்து. நீ இன்னும் சின்ன பொண்ணு கிடையாது. நீ பேசி அவரையும் பேச வைக்காதே” என்றான் ஆர்டர் போல.
அவனின் சத்தத்தில் ஷர்மி அமைதியாகி விட, “எந்த டென்ஷனும் இழுக்காத, முதல்ல உன் உடம்பை பாரு, நீ தனி ஆளு கிடையாது. உன்னோட எல்லாம் குழந்தையும் பாதிக்கும், மனசை அமைதியா வெச்சிக்கோ சந்தோஷமா வெச்சிக்கோ” என்றான்.
“அமைதியா வெச்சிக்கலாம், சந்தோஷமா எப்படி வெச்சிக்க? எனக்கு தெரியலையே!” என்றாள்.
“நீ அமைதியா இரு, சந்தோஷம் தானா வரும்!” என்றான்.
“என்னவோ நீ சரியில்லை போ” என்று பேசியவள் அமைதியாய் கண்ணை மூடிக் கொண்டாள்.
“தூங்கு நீ” என்றவன், அவனும் நன்றாய் சாய்ந்து அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டான்.
கிட்ட தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்தில் அமைதி மட்டுமே அண்ணனும் தங்கையும் உறங்கியிருந்தனர்.   
ஒரு மணி நேரத்தில் கௌசியும் ரவியும் வந்திருந்தனர். வாசனை வீட்டில் இருக்க சொல்லியிருந்தான். அவர்கள் வந்து ரூமின் கதவை திறந்தால் அண்ணனும் தங்கையும் ஆளுக்கு ஒரு புறம் நல்ல உறக்கத்தில்.
சத்தம் செய்யாமல் இருவரும் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரத்தில் தானாய் சந்தோஷ் விழித்து விட்டான். இவர்களை பார்த்ததும் சாய்ந்து அமர்ந்து இருந்தவன் நேராய் அமர,      
அதனை பார்த்த கௌசல்யா எழுந்து தட்டை எடுத்தவள், “கை கழுவிக்கங்க” என்றாள்.
“இல்லை, வேண்டாம் பசியில்லை” என்றான்.
“ஏன் பசியில்லை” என்று மெல்லிய குரலில் அதட்டிய ரவி, “நேத்து இருந்தே நீ சரியா சாப்பிடலை, சாப்பிடு சந்தோஷ்” என்றான்.
தன்னை ரவி கவனிக்கின்றான் என்பதே மனதிற்கு இதமாக இருந்தது. அமைதியாக கை கழுவி தட்டை வாங்கிக் கொண்டான்.
ஆவி பறக்க பறக்க சூடான சாதம், அதில் முதலில் கொஞ்சமாய் பொடி போட்டு நெய் விட்டாள். உண்ண ஆரம்பித்த பிறகு தான் பசியையே உணர்ந்தான். வேகமாய் உண்ண பின்னர் பருப்பு போட்டு நெய் விட்டவள் உருளை கிழங்கும் அப்பளமும் வைக்க, அதை உண்டவனுக்கு சாதம் வைத்து ரசம் விட, அதையும் உண்டு முடித்தவனிடம் சாதம் வைக்க போக, அப்போது தான் சுற்றம் பார்த்தவன் “நீங்க சாப்பிட்டீங்களா” என்றான்.
“அண்ணா, இங்க சாப்பிட்டாங்க. நான் அண்ணி சாப்பிட்டதும் சாப்பிடறேன், அவசரத்துக்கு இது தான் செய்ய முடிஞ்சது”  
“நல்லாயிருக்கு, எனக்கு போதும்”  
“இருங்க, கொஞ்சமா சாதம் வெச்சு தயிர் போட்டுக்கங்க” என்றாள், சொன்னதை செய்யவும் செய்தாள். உண்டு முடித்தவுடன் அவனின் கையில் இருந்து தட்டை வாங்க முற்பட, சந்தோஷ் கொடுக்கவில்லை, பிடிவாதமாய் மறுத்து விட்டான். “நான் கழுவி தர்றேன்” என்று.
எல்லாம் ரவி பார்த்து தான் இருந்தான்.    
கௌசல்யாவின் மனதில் எதுவும் இல்லை. அண்ணியின் அண்ணன் நன்றாக கவனிக்க வேண்டும் அவ்வளவே. அதையும் விட யாருக்கு உணவளித்தாலும் அவள் அப்படி தான்! பெரிய கூட்டு குடும்பத்தில் பொறுப்புகளோடு வளர்ந்த பாங்கு!
ஆனால் அம்மா உடல் நிலை சரியில்லாது போன பிறகு சந்தோஷிற்கு இப்படி யாரும் கவனித்து உணவு கொடுத்ததில்லை. என்னவோ மனதிற்கு அவ்வளவு இதமாய் இருந்தது. அதுவும் போதும் என்ற பிறகு, இன்னும் கொஞ்சம் வெச்சிக்கங்க என்று யாரும் சொன்னதேயில்லை.
ஷர்மிக்கு அது வராது. அவளையே யாராவது பார்த்து பார்த்து தான் கவனிக்க வேண்டும். இன்னும் அவளுக்கு பெரிதாய் பொறுப்புகள் வரவில்லை. வரும் அவசியம் ரவி விடவில்லை. இந்த பிரச்சனை என்று இப்போது ஒன்று வராமல் இருந்திருந்தால் உண்மையில் ஷர்மியை ரவி பார்த்து பார்த்து தான் தாங்கினான்.      
இப்படி கவனித்த பாங்கு, சந்தோஷை முதல் முறையாக கௌசியை கவனிக்க வைத்தது.
இவர்களின் பேச்சுக்கு கூட ஷர்மி கண் திறக்கவில்லை. அப்படி ஒரு அசந்த உறக்கம்.
“நீ சாப்பிடு கௌசி. அவ இப்போதைக்கு எழுந்துக்குற மாதிரி இல்லை” என்று ரவி சொல்ல,
“உனக்கும் வைக்கவா அண்ணா”  
“அவ எழுந்ததும் அவளுக்கு கொடு, கண்டிப்பா பாதிக்கு மேல சாப்பிட மாட்டா, அப்புறம் நான் சாப்பிட்டுக்கறேன்” என்றான்.
ஆம்! வீட்டில் பல சமயம் உணவு சாப்பிட முடியாமல் “எனக்கு போதும் நீங்க சாப்பிடுங்க” என்று அவனின் புறம் தான் தள்ளுவாள், அவளின் வழக்கம் தான்.
நேற்றிலிருந்து ரவியும் சந்தோஷும் ஹாஸ்பிடலில், இப்போது ரவி வீடு சென்று குளித்து வந்திருக்க, சந்தோஷை பார்த்த ரவி “வீட்டுக்கு போய் குளிச்சு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வா, நைட் நான் கூட கொஞ்சம் கண் அசந்தேன். நீ தூங்கவேயில்லை, போயிட்டு வா, எப்படியும் நாளைக்கு தான் அனுப்புவாங்க” என்றான்.
சந்தோஷும் சரி என்று தலையசைத்து கிளம்பி விட, அங்கிருந்த நீள பென்ச் போன்ற ஒன்றில் “அண்ணா, அண்ணி எழுந்தா எழுப்புங்க” என்று சொல்லி கௌசி படுத்து விட்டாள். நடு இரவில் கிளம்பி வந்தது களைப்பாய் இருந்தது.
இப்படியாக கௌசி அண்ணனையோ அன்னியையோ சற்றும் தொந்தரவு செய்யாமல் ஆனாலும் நன்றாய் பார்த்துக் கொண்டாள், அடுத்த நாள் வீடு செல்லும் வரையிலுமே.
டிஸ்சார்ஜ் சொன்னவுடனே சற்று நேரம் கௌசியை வெளியே இருக்க சொன்னவன், மனைவியின் அருகில் அமர்ந்து, “நான் அப்படி பேசியிருக்க கூடாது, தப்பு தான். வீட்டுக்கு போகலாம் வா” என்றான். கைதேர்ந்த வியாபாரி தொழிலில் மட்டும்மல்ல மனிதர்களை கையாள்வதிலும் தான். இல்லையென்றால் இந்த வெற்றி சாத்தியமில்லையே. இப்போது மனக் கசப்புகளை பிடித்து வைத்தால், அவனின் மனைவிக்கும் குழந்தைக்கும் தானே பாதிப்பு.
அதையும் விட ரவி நன்றாய் உணர்ந்தது ஷர்மிளாவால் தன்னை தவிர யாரோடும் ஒன்ற முடியாது என்பதை தான். அவள் அருகாய் நினைப்பது சந்தோஷையும் அவனையும் தான். ஆனால் தன்னை பார்த்துக்கொள்ள சந்தோஷை தேடவில்லை, ரவியை தான் தேடினாள்.      
ஷர்மி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். எல்லா வேலைகளுக்கு அவனை தேடின போதும் அவசியத்திற்கு தான் வார்த்தைகள். கோபம் தான் ஆற்றாமை தான், ஆனாலும் மனது அவனை தான் தேடியது.
ரவியும் பதில் சொல் என்று வற்புறுத்த எல்லாம் இல்லை, அவளின் மௌனத்தை சம்மதமாய் எடுத்தவன், வேகமாய் டிஸ்சார்ஜ் வேலைகளை பார்க்க, கௌசி ஷர்மிக்கு உதவ, அப்போது தான் வந்த சந்தோஷ் வேடிக்கை மட்டுமே பார்த்தான். என்னவோ தங்கை தள்ளி நிறுத்தி விட்டது போன்ற உணர்வு எழுவது தடுக்க முடியவில்லை.      
அவனின் முக வாட்டத்தை கவனித்தவள், “சந்தோஷ் என்ன ஆச்சு?” என்றாள் ஷர்மிளா.
“என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே?” என்று அவன் சொல்ல,
“இல்லை, எனக்கு ஏதோ டிஃப்பரன்ஸ் தெரியுது, என்ன ஆச்சு?” என்றாள் பிடிவாதமான குரலில்.
“ஒன்னுமில்லை பேபி” என்றான் அவனும், அதை போல பிடிவாதமான குரலில்.
சரியாக ரவி உள்ளே நுழைய, “சந்தோஷை ஏதாவது சொன்னீங்களா அவன் ஏன் இப்படி இருக்கான்” என்று ரவியை கேட்க,
“நான் ஒன்னும் சொல்லலை, நீ எதுவும் சொல்லலைன்னு அவன் அப்படி இருக்கான்” என்று ரவி சொல்லிவிட்டான்.
“நான் என்ன சொல்லலை”
“உனக்கு உடம்பு சரியில்லைன்னு”
“நான் தான் சொன்னேனே, என் ஃபைல் எடுத்துட்டு வா, செக் அப் போகணும்னு உன் கிட்ட தானே சொன்னேன்”
“ஆனா என்னவோ பண்ணுதுன்னு ஏன் சொல்லலை?”
“என்ன பண்ணுதுன்னு தெரியலை, அப்போ என்ன சொல்வேண்டா அண்ணா” என்றாள். மனதில் இருந்த வருத்தம் முகத்தில் தெரிந்தது.
ஆம்! என் கணவன் என்னுடன் இல்லை, அதனால் உண்ண முடியவில்லை உறக்கம் வரவில்லை என்றா சொல்ல முடியும்.
முயன்று கண் மூடி கொண்டவள், “நோ, டென்ஷன் பேபி, இப்போ உனக்கு உன்னோட பேபி ரொம்ப முக்கியம்” என்று அவளுக்கு அவளே மனதில் சொல்லிக் கொள்ள,
“என்ன பண்ணுது பேபி?” என்று பதறி சந்தோஷ் அருகில் அமர்ந்தான்.
கண்திரந்தவளின் கண்களில் கண்ணீர், “ஒன்னுமில்லை சந்தோஷ்” என்று அண்ணனின் கையை பிடித்துக் கொண்டாள்.  
“ஏதாவது பண்ணுதா, டாக்டர் கிட்ட சொல்லலாம்” என்றான் ரவி.
“இல்லை” என்பது போல தலையசைத்தவள், “நோ, நான் நல்லா இருக்கேன், நல்லா இருப்பேன், இப்படி ஹெல்த் ஸ்பாயில் பண்ண மாட்டேன்” என்றவளின் குரலில் அப்படி ஒரு உறுதி.
அந்த உறுதி ரவியை யோசிக்க வைத்தது.                                         

Advertisement