Advertisement

அத்தியாயம் பத்தொன்பது :
ஒரு முழு நாள் ஆனது ஷர்மியின் உடல் நிலை இயல்பிற்கு திரும்ப, ஊரில் யார்க்கும் ரவி சொல்லவில்லை. ஆனால் விசாலி சீதாவிடம், ஷர்மிக்கு உடல் நிலை சரியில்லை ஐ சீ யு வில் அட்மிட் செய்திருக்கிறான் ரவி என்று சொல்லியிருக்க, அவர் கௌசியிடம் சொல்ல, இப்படியாக கும்பகோணத்தில் வீட்டில் இருப்பவர் அத்தனை பேருக்கும் விஷயம் தெரிந்திருக்க, ஊரில் இருந்து வந்த அழைப்பு எதுவும் எடுக்கவில்லை.
உண்மையில் அவன் எந்த அழைப்பையுமே எடுக்கவில்லை. அவனும் சந்தோஷும் அந்த ஐசீயு வாசலில் இரவு முழுவதும் அமர்ந்திருந்தனர்.
இருவரும் ஒருவருக்கொருவர் பேசக் கூட இல்லை. அமைதியாய் அமர்ந்திருந்தனர். சந்தோஷ் விசாலியையும் கேசவனையும் வீட்டிற்கு அனுப்பியிருந்தான். “அவளுக்கு ஒன்னுமில்லை பா, மானிடர் தான் பண்றாங்க. நீங்க கிளம்புங்க காலையில வாங்க” என்று.
ரவி அரை மணிக்கு ஒரு முறை உள்ளே சென்று பார்த்து வந்தான். சந்தோஷ் செல்லவேயில்லை. தங்கை ஒரு வார்த்தை கூட தன்னுடைய உடல் நிலையை சொல்லவில்லையே என்பது அவனின் மனதை வெகுவாக பாதித்து இருந்தது.
ரவி தான் கட்டாயப் படுத்தி அவனை இரவு உணவு உண்ண கூட அழைத்து சென்று வந்தான்.
ஒரே ஒரு வார்த்தை தான் சந்தோஷ் சொல்லியிருந்தான், “என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலை, ஏதாவது ஆகியிருந்தா?” என்று. சந்தோஷின் குரலில் இருந்த வருத்தமும் பயமும் ரவியை அசைத்தது.
அதனால் ரவி “நீ வீட்டுக்கு செல் நான் மட்டும் இருந்து கொள்கிறேன்” என்றெல்லாம் சொல்லவில்லை. அது அவனை இன்னும் காயப்படுத்தும் புரிந்தவனாக. 
எல்லாம் விட ஷர்மியும் ரவியை கண்களில் பார்த்துக் கொண்டாள் அவ்வளவே, ரவியிடம் பேச முயற்சி செய்யவே இல்லை.            
மறுநாள் அதிகாலையில் கிளம்பி மனது கேட்காமல் வாசனும் கௌசல்யாவும் கிளம்பி வந்திருந்தனர். சீதாவை “வா” என்று இவர்கள் அழைக்கவேயில்லை. எல்லோருக்கும் பயம் ஷர்மிக்கோ குழந்தைக்கோ எதுவும் ஆகிவிடுமோ என்று.
சீதாவை நிற்க வைத்து தான் “என்ன உனக்கு அப்படி ஒரு ஆணவம் எனக்கு தான் எல்லாம் தெரியுமுன்னு. அப்படி பார்த்தா நான் தான் உன் மாமியார். நான் சொல்வதை இனி நீ கேள், பிறகு அவளிடம் சொல்வாய்” என்று ஏகத்திற்கு பேசியிருந்தனர்.
“இதோ ஒன்றுமேயில்லாமல் இருந்த குடும்பத்தை எடுத்து நிறுத்தி தங்கைகளை திருமணம் செய்து கொடுத்து என்று இத்தனை பொறுப்பாய்             இருக்கும் மகனை எப்போதும் பேசி வருத்தப் படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் இருவருக்கும் இடையில் திருமணமான நாளே அவனை போக வைத்து பிரச்சனை செய்து, இப்போது அங்கு சென்று பிரச்சனை செய்து, இதோ பிள்ளைதாச்சி பெண்ணை ஹாஸ்பிட்டலில் படுக்க வைத்து விட்டாய்” என்று ஏகமாய் சாடி விட, வாசன் ஒரு வார்த்தை கூட பேசாமல், சீதாவை ஒதுக்கி வைத்து மகளை கூட்டிக் கொண்டு மனது கேளாமல் கும்பகோணத்தில் இருந்து வந்து விட்டார்.
அங்கே பெண் துணை இல்லை ஏதேனும் தேவையிருந்தால் என்ன செய்வது என்று கௌசியையும் கூட்டிக் கொண்டு வந்தார். கௌசியை பொறுத்தவரை எங்கே எப்படி நடந்து கொள்வது என்று தெரியும். அனுசரித்து போய்விடுவாள், அதையும் விட எல்லாவற்றையும் சிறப்பாய் எடுத்துக் கட்டி செய்யவும் செய்வாள்.
அதனால் கௌசியையும் உடன் அழைத்துக் கொண்டார். 
இவர்கள் வந்து சேர்ந்த நேரம் தான் ஷர்மியை ஐ சீ யு வில் இருந்து ரூமிற்கு மாற்றினர்.
அங்கே இருந்து ரவி முகம் சுருக்கி தான் இவர்களை பார்த்தான். “நீ போன் எடுக்கவே இல்லை, என்னவோ ஏதோன்னு பயமாகிப் போச்சு, பாட்டியும் தாத்தாவும் கிளம்பி வர்றேன்னு சொன்னாங்க, நான் பார்த்துட்டு வர்றேன்னு நான் தான் கிளம்பி வந்தேன். கூட எதுவும் தேவையா இருக்குமோன்னு கௌசியையும் கூட்டிட்டு வந்தேன்” என்றார் படபடவென்று.
ஹாஸ்பிடல் ரூம் எல்லாம் கேசவனுக்கு அழைத்து தான் தெரிந்து கொண்டார். அதிலேயே அங்கிருந்தவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்று தெரிந்து தான் இருந்தது. 
வாசனுக்கு பயம் எங்கே மகன் எல்லோர் முன்னும் “எதுக்கு வந்தீங்க?” என்று கேட்டு விடுவானோ என்று.
அவருக்கு ரவி என்ன செய்வான் பேசுவான் என்ற அனுமானம் எல்லாம் இல்லை.
அங்கே தான் கேசவனும் விசாலியும் சந்தோஷும் இருந்தனர். சற்று பெரிய ரூம் என்றாலும் ஆறு பேர் இருக்கவும் கசகசவென்று இருக்க, “பா, நாம வெளில இருக்கலாம்” என்று சந்தோஷ் விசாலியையும் கேசவனையும் நாசூக்காய் அழைத்து சென்றான்.
அவர்களும் காலையில் வந்திருந்தனர். அவர்களும் அங்கேயே இருந்தனர். “தேவையில்லை, நானும் சந்தோஷும் இருக்கிறோம்” என்று சொன்னாலும் அசையவில்லை.           
ஷர்மிக்கு இவர்கள் ஊருக்கு சென்றதும் திரும்ப வந்ததும் தெரியாது. “ஏன் இப்படி பேசுகிறார்?” என்று பார்த்திருந்தாள். கௌசி அண்ணன் ஏதுவும் திட்டி விடுவானோ என்று பதட்டத்துடன் பார்க்க,
“எல்லோர் முன்னமும் விளக்கம் குடுத்து ஏன் இப்படி பண்ணறீங்க, ஏன் பா எல்லோரும் என்னை மாத்தி மாத்தி கீழ இறக்கறீங்க” என்றான் வேதனையான குரலில்.
“நீதான் ஃபோன் பண்ணினா எடுக்கலை”
“எனக்கு என்ன தெரியும் நீங்க ஷர்மி ஹாஸ்பிடல்ல இருக்குறது கேட்கறதுக்காக கூப்பிடறீங்கன்னு. ஷர்மி இங்க இருக்கான்னு நான் சொல்லவே இல்லை, அப்போ எனக்கு நீங்க அதுக்கு கூப்பிடறீங்கன்னு எப்படி தெரியும்?”
“எனக்கு இவ டென்ஷனே பெருசு, அதுல யார் கூடவும் பேசப் பிடிக்கலை, ஏன்பா இப்படி பேசறீங்க?”என்றவனின் குரலில் அப்படி ஒரு வருத்தம்.
“வில்லன் ரேஞ்ச்க்கு ட்ரீட் பண்றீங்க என்னை. அப்படி தான் நடந்துக்க வெக்கறீங்க, இவ்வளவு நாள் என் குடும்பம்னு உழைச்சதுக்கு அர்த்தமே இல்லாம பண்ணறீங்க”  என்றான் சலிப்பான குரலில். ஷர்மி அவனையே தான் பார்த்திருந்தாள்.
பின் அவன் அமைதியாய் அமர்ந்து கொள்ள, வாசனும் எதுவும் பேசவில்லை அவரும் அமர்ந்து கொண்டார்.
இவர்களின் வாக்குவாதங்களை ஷர்மி பார்த்துக் கொண்டிருந்தாலும் எதுவும் பேசவில்லை.
“பா, அண்ணியை பார்க்க தானே வந்தோம். அவங்க எப்படி இருக்காங்கன்னு கேட்காம என்ன பண்றீங்க?” என்று தந்தையை அதட்டி, “எப்படி இருக்கீங்கன்னு அண்ணி இப்போ” என்று கௌசி ஷர்மியை நெருங்கி கேட்க,
“நல்லா இருக்கேன்” என்றாள் குரலில் அவ்வளவு சோர்வு.
“என்ன சாப்பிட்டீங்க?” என்றாள்.
“இன்னும் ஒன்னும் சாப்பிடலை, காலையில இட்லி சாப்பிட்டேன்”   
கௌசி உடனே நேரம் பார்த்தாள்  அது ஒரு மணி என்று காண்பிக்க, “சாப்பாடு என்ன அண்ணா?” என்றாள்.
“ஹாஸ்பிடல்ல குடுப்பாங்க” என்றான்.
அவன் சொன்ன நிமிடம் உணவு வந்திருக்க, அதை வாங்கி வைத்தவள், கைகளை கழுவ சென்றாள்.
ஆனால் ஷர்மியின் கண்கள் ரவியை பார்க்க, அது சொன்ன மொழி புரிந்து அருகில் சென்றான். அவளுக்கு எழுந்து அமர சிரமாமயிருக்க, அவனின் கை பிடித்து எழ முற்பட, “இரு” என்றவன், கட்டிலில் உள்ள விசை கொண்டு அதை அமரும் விதம் அமைத்து அவளை வசதியாய் அமர வைத்தான்.
பேசவில்லை என்றாலும் வேறு யாரையும் அருகில் விடவில்லை. அவளுக்கு இந்த சூழலில் யாருடனும் பழகும் பேசும் மன்நிலை இல்லவே இல்லை.  
“வேண்டாம் நீ, போடி” என்று துரத்தி விட்டவன் தான். மனதில் நன்கு அச்சாணியாய் பதிந்து இருந்தாலும், வேறு யாரையும் அருகில் விட விருப்பமில்லை.
சந்தோஷ் இருந்தால் அவனை தேடியிருப்பாள் அவனானால் ஒதுங்கி தான் இருந்தான், தங்கையின் மேல் வானலவிற்கு வருத்தம் இருந்தது.
கௌசி கை கழுவி வந்தவள் என்ன இருக்கின்றது என்று பார்த்து அண்ணனிடம் “நீ கை கழுவு அண்ணிக்கு ஹெல்ப் பண்ணு” என்று சொல்ல, உண்மையில் ஷர்மியின் மனதிற்கு அவ்வளவு ஆசுவாசமாய் இருந்தது.
ரவி கை கழுவி வரவும் “அண்ணா, சாப்பிட்டதும் கூப்பிடு, வெளில இருக்கோம்” என்றவள், “அப்பா வாங்க” என்று வெளியில் சென்று விட்டாள்.
ஒரு வார்த்தை கூட ஷர்மி ரவியிடம் பேசவில்லை, மௌனமாய் உணவை முடித்தாள். மிகவும் சொற்ப அளவே உணவு உள்ளே இறங்க, “இன்னும் சாப்பிடு” என்றவனிடம் “முடியலை போதும்” என்று விட்டாள்.
மீதமிருந்த உணவை அவன் உண்டு பார்க்க, ஹாஸ்பிடல் உணவு என்ன அருசுவையோடா இருக்கும், ஆனாலும் மோசமில்லை தான், உண்டவன் திரும்ப எல்லோரையும் உள்ளே அழைத்தான்.
“சாப்பிட்டாங்களா அண்ணா?”  
“கொஞ்சமா தான் சாப்பிட்டா, மீதி நான் தான் சாப்பிட்டேன்”  
“சரி, நீ இரு, இங்க சாப்பாடு எப்படியோ தெரியலை. நான் வீட்டுக்கு போய் சமைச்சிட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று உடனே கிளம்பினாள்.
“சந்தோஷ் நீ இரு, நான் இவங்களை வீட்ல விட்டுட்டு வர்றேன்”  என்று ரவியும் கிளம்பினான்.
கேசவனும் விசாலியும் மதிய உணவிற்கு அனுப்பினான் சந்தோஷ்.

Advertisement