Advertisement

அவள் பேச பேசவே காரின் சாவியை எடுத்துக் கொண்டு, “வா” என்பது போல சைகை காண்பித்து ரவி விரைய, “பேபி, நாங்க வர்றோம். நீ ரெடியா இரு. இப்போ ஹாஸ்பிடல் போகலாம்” என்று சந்தோஷ் பேச, அவர்கள் வீடு செல்ல நாற்பது நிமிடம் ஆகியது. ஆம்! ஃபாக்டரி வீட்டில் இருந்து சற்று தொலைவு தான்.   
“மாமா ஃபைல் எடுக்க வேண்டாமா?” என்று சந்தோஷ் கேட்க,
“எல்லாம் ஒரு செட் எப்பவும் செராக்ஸ் கார்ல இருக்கும், ஏதாவது எமெர்ஜென்சின்னா இருக்கட்டும்னு” என்று ரவி சொல்ல,
சிறு சிறு விஷயங்கள் கூட கவனம் செலுத்துவான் என்பதற்கு இதுவே சாட்சி!
உள்ளே சென்றனர், ஹாலில் தான் அமர்ந்திருந்தாள்.
மாலை நெருங்கி விட, கேசவனும் வீடு வந்திருந்தார், விசாலியும் இவள் வீட்டில் இருப்பதால், வேலைக்கு செல்லவில்லை. அதனால் அவர்களும் ஹாலில் தான் இருந்தனர்.
“குடிக்க எதுவும் கொண்டு வரட்டுமா?” என்று அப்போது தான் விசாலி கேட்டுக் கொண்டிருந்தார்.
“வேணும்னா நானே கேட்கறேன்” என்று விட்டு அமர்ந்திருந்தாள். அப்போதும் எனக்கு தொந்தரவாய் இருக்கிறது ஹாஸ்பிடல் செல்ல அமர்ந்திருக்கிறேன் என்று கூறவில்லை.
வேகமாய் ரவி உள்ளே வர, அவன் வீட்டுனுள் எல்லாம் வரமாட்டான் காரில் தான் அமர்ந்து கொண்டு அழைப்பான் என்று ஷர்மி நினைத்திருக்க, அவனோ உள்ளே வேகமாய் வந்தான்.
ஷர்மி முன் நிற்க அவளோ முகத்தை வேறு புறம் திருப்பினாள். “வாங்க ரவி” என்று கேசவனும், “வாங்க தம்பி” என்று விசாலியும் ஒரு சேர கூற,
அதெல்லாம் ரவி கண்டு கொள்ளவே இல்லை, அவளின் முன் நின்றவன், “என்ன பண்ணுது?” என்றான் அதட்டலாக சற்று அவளை அளவெடுத்தபடி, முகமும் கண்களும் வீக்கத்தை காண்பித்தது, பாதத்தை பார்த்தான் அதுவும் ஏகத்திற்கும் வீக்கம் காண்பித்தது.
முகமும் அதீத சோர்வு தான்!
“என்ன பண்ணுது?” என்றதற்கு அவளிடம் பதிலே இல்லை, ஷர்மியின் தாடையை அழுத்தமாக பற்றி முகத்தை அவனை நோக்கி திருப்பினான், அவளின் கண்களை நேராக பார்த்து, “நம்ம சண்டை அப்புறம், என்ன பண்ணுது?” என்றான். அவனையே தான் ஷர்மியும் பார்த்திருந்தாள். ஆனால் பதில் சொல்லவில்லை.  அந்த பார்வை ஏதோ செய்தது ரவீந்திரனை.
ஒரு முரட்டுத்தனமான செயல், “என்ன இது இப்படி செய்கிறான்?” என்று தான் எல்லோரும் பார்த்தனர்.
அப்போதும் ஷர்மி வாயை திறக்காமல் இருக்க, கேசவன் ஏதோ பேச வர சந்தோஷ் பேசவேண்டாம் என்பது போல தலையசைக்க அவர் அமைதியாகிவிட்டார்.
விசாலி கவலையாய் பார்த்திருந்தார்.
“இது குழந்தை விஷயம் ஷர்மி, நம்ம சண்டை நம்மோட, சொல்லு” என்று அதட்டலை கைவிட்டு சற்று தணிந்த குரலில் பேசினான்.
அது அவளிடம் வேலை செய்ய, கண்களில் வேகமாய் நீர் நிறைந்தது.
“என்ன பண்ணுது?” என்றான்.
“அது நேத்து இருந்து என் ஹார்ட் பீட் எனக்கு கேட்டுட்டே இருக்கு” என்றாள்.
“தூங்குனியா இல்லையா?
“தூங்கலை, தூக்கம் வரலை” என்றாள்.
எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர் யாரும் இடையில் வரவில்லை. ஆனாலும் அவள் சொல்வதை மனம் பதைத்து பார்த்திருந்தனர்.
அவர்களை திரும்பி பார்த்தவன் “அவ தூங்கறாளா இல்லையான்னு கூட பார்க்க மாட்டீங்களா?” என்றான்.
உண்மையில் முதல் நாள் சந்தோஷ் அவள் உறங்கும் வரையிலும் பார்த்து தான் சென்றான். ஆனால் சிறிது நேரத்திலேயே விழித்து விட்டாள். நேற்று பதினோரு மணி வரை பேசி இருந்து அவளுக்கு போர்வை எல்லாம் போர்த்தி ஏ சீ ஆன் செய்து தான் சென்றான்.
அவள் உறங்க மாட்டாள் என்றெல்லாம் நினைக்கவில்லை.
“சந்தோஷை திட்டக் கூடாது” என்றாள் ரோஷமாக.
“பின்ன கொஞ்சுவேனா, எந்திரி முதல்ல, ஹாஸ்பிடல் போலாம்” என்றான்.
அவள் எழுந்து நிற்கவே லேசாய் தலை சுற்ற அவனின் புஜங்களை பற்றி நின்றாள். அதில் இன்னுமே பயந்து விட்டான்.  
அவளை பார்க்க “ஒன்னுமில்லை, லேசா தலை சுத்துச்சு” என,
“சாப்பிட்டியா?”
“ம்ம்” என்றவள், “ஆனா எல்லாம் வாமிட் வந்துடுச்சு, நிக்கவேயில்லை, அதனால் டயர்டா இருக்கு” என,
அதெல்லாம் சந்தோஷிற்கு தெரியவில்லை. பதறி விட்டான் “எனக்கு தெரியாது” என்றான் அவசரமாக.
கேசவன் விழித்து நின்றார். விசாலிக்கு மிகுந்த பயமாகி விட்டது. 
பார்த்து பார்த்து சந்தோஷை விட்டு, என்ன சாப்பிட வேண்டும்? குடிக்க வேண்டும்? சாப்பிட்டாளா? எல்லாம் பார்த்தார்கள். ஆனால் வாமிட் செய்தது தெரியவில்லை! அவளும் சொல்ல வில்லை.
ரவி பின் எதுவும் பேசவில்லை, அவளின் தப்பு மட்டும் கிடையாதே, என்ன கோபம் என்றாலும் இந்த சமயம் அவளை வெளியில் விட்டிருக்க கூடாது. அவளாய் சென்றாலும் கேட்டை இழுத்து மூடி அவளை செல்லாமல் நிறுத்தியிருக்க முடியாதா?
பல வருடங்களாக இந்த வீட்டை விட்டு போகும் வரை சந்தோஷையும் ஷர்மியையும் பார்த்துக் கொண்டதே ரவி தானே. இந்த வீட்டில் அப்படி பெரிதாய் பொறுப்பு கிடையாது. விசாலியை பற்றி ரவிக்கு தெரியாது, அப்படியே இருந்தாலும்  விசாலியிடம் இவள் பழகவே மாட்டாள்.
மனம் நொந்தவன் பின் ஷர்மியிடமும் எதுவும் பேசவில்லை. அவளை அழைத்து காருக்கு வந்தவன், ஹாஸ்பிடல் கிளம்ப, வீட்டினர் மூவரும் நின்ற இடத்தில் நின்றனர். அவர்களுக்கு ஒன்றுமே ஓடவில்லை. சந்தோஷ் அப்படியே அமர்ந்து விட்டான்.
வாமிட் செய்தது எல்லாம் ஷர்மி சொல்லவே இல்லை. இதோ ஹார்ட் பீட் ஏதோ அவளுக்கே கேட்கிறது என்று சொல்கிறாள் அதையும் சொல்லவில்லை.
“நாம ஹாஸ்பிடல் போகலாம் சந்தோஷ்” என்று விசாலி நிகழ்வுக்கு கொண்டு வர, வேகமாய் பின் கிளம்பினர்.
ஆனால் அவர்கள் சென்ற போது ரவி தலையை பிடித்துக் கொண்டு ஐ சீ யூ வாசலில் அமர்ந்திருந்தான்.
“என்ன? என்ன ஆச்சு?” என்று பதறி சந்தோஷ் விரைய,
“எமெர்ஜென்சின்னு சொல்லிட்டாங்க, பல்ஸ், ஹார்ட் பீட் எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கு, பேபி மானிட்டர் பண்ணனும்னு ஐ சீ யு ல அட்மிட் பண்ணிடாங்க” என்றான்.
அரை மணிநேரம் சென்ற பிறகு வந்த மருத்துவர், “பேபி நல்லா இருக்காங்க, எங்களுக்கு ஒன்னும் அப்நார்மலா தெரியலை, பட் உங்க மனைவி, அவங்களுக்கு ஹார்ட் பீட் ஏன் அவ்வளவு ரெயிஸ் ஆகியிருக்கு தெரியலை. என்ன ஆச்சு?” என்றார்.
“எங்களுக்குள்ள சண்டை, அவ அம்மா வீட்டுக்கு போனா, ஆனா அங்கே ஒன்னும் ப்ராப்லம் இல்லை, சரியா தூங்கலை சொன்னா” என்றான்.
“எல்லாரும் ஒரே மாதிரி கிடையாது, அவங்களுக்கு இதெல்லாம் ஸ்ட்ரெஸ் குடுக்கும்னா விட்டு கொடுத்து போங்க, ஐ திங்க் ஷி இஸ் பேணிக். ரொம்ப பயந்து இருக்காங்க, கன்சீவா இருக்குறதால பெருசா மெடிசின் போடலை, ஜஸ்ட் மானிட்டர் தான், அதனால தான் ஐ சீ யு. ரிஸ்க் எதுவும் ஆனா மெடிசின் போட்டு தான் ஆகணும். ஆனா ரிஸ்க் எதுவும் ஆகாதுன்னு நம்புவோம். அவங்களோட ஹார்ட் பீட் அன்ட் பல்ஸ் நார்மல் ஆகி, அப்புறமும் ஒரு நாள் ஹாஸ்பிடல் இருந்து தான் அனுப்புவேன்”
“ஐ சீ யு ல நாங்க யாரையும் பெர்மிட் பண்றதில்லை, ஆனா உங்க ஃவைப் உங்களை கூட இருக்கச் சொல்றாங்க. உங்க ட்ரெஸ்ல போக முடியாது. ஐ சீ யு டிரஸ் கொடுக்க சொல்லியிருக்கேன், அதை போட்டுட்டு போங்க” என்று சொல்ல,
விரைந்து அவர் சொன்னதை செய்தான்.
வெளியே இருந்த மூவரும் தடதடக்கும் இதயத்தோடு இருந்தனர்.    
உள்ளே சென்றவன் ஷர்மியை பார்க்க, அவளை சுற்றி உபகரணங்கள். அம்மாடி என்ன இது என்று பயந்து விட்டான். ஆனால் பயத்தை காண்பிக்கவில்லை.   
விழித்து தான் இருந்தாள், இவனை பார்த்ததும் கணகளில் நீர் நிறைய,
“ஒன்னுமில்லை, ஒன்னுமில்லை, அழக்கூடாது” என்று அவளின் கையை பிடித்தான்.
முகத்திலும் ஏதோ மாட்டியிருக்க, குழந்தையை தொட்டு காண்பித்தாள்.
“பேபி இஸ் ஃபைன் , உனக்கும் ஒன்னுமில்லை, உன்னோட ஹார்ட் பீட் அன்ட் பல்ஸ் ரேட் அதிகமாயிருக்கு நீ தூங்காததினால” என்று சொல்லி கை பிடித்து பக்கத்தில் அமர்ந்தான். அவளின் பயத்தை போக்க வேண்டியது அவசியம். உண்மையில் ஒன்றுமில்லை தான். ஆனால் எப்படி இப்படி இழுத்து விட்டுக் கொண்டாள் என்று புரியவில்லை. அதனால் உள்ளதை உள்ள படி சொன்னவன்,   
“சாரி, நான் என்ன பேசியிருந்தாலும் சாரி, உன்னை எங்கேயும் அனுப்ப மாட்டேன். நீ என்னோட தான் இருப்ப, நீ என்னை நம்பணும் சரியா, இப்போ நீ தூங்கு, அப்போ தான் சரியாவ” என்றான்.
அதன் பிறகு தான் சற்று கண்ணயர்ந்தாள், “ஒன்றுமேயில்லாத விஷயம், இதுவரை எப்படி வந்தது. இவ்வளவு பலவீனமானவளா ஷர்மிளா” என்று தோன்ற, கூடவே “எல்லாம்  உன்னால்…” என்று மனது மூளை எல்லாம் அலற,
அப்படியே அமர்ந்திருந்தான்.       
            

Advertisement