Advertisement

அத்தியாயம் பதினெட்டு :
கண்கள் எரிந்தன, சிறிது நேரம் எனக்கு ஓய்வு கொடேன் என்று கெஞ்சியது. இடத்தை விட்டு எழுந்தவன் சென்று முகத்தை கழுவிக் கொண்டு வந்து மீண்டும் அலுவலை பார்க்க அமர்ந்து விட்டான்.
ஒரு நாள் கடந்து விட்டது. இன்னும் வீடு செல்லவில்லை. இங்கேயே ஃபாக்டரியிலேயே இருந்து கொண்டான்.
எல்லாம் தப்பாய் செய்து விட்டதாய் ஒரு எண்ணம். இந்த திருமணம் செய்திருக்க வேண்டாமோ என்ற எண்ணம். அவ்வளவு தானா இருவரும் வாழ்ந்த வாழ்க்கை? எப்படி சொல்ல முடியும் அந்த வார்த்தையை யாரையாவது திருமணம் செய்திருக்கலாம் என்று, அதுவும் எல்லோர் முன்பும்.
“என்ன நான் குறைந்து விட்டேன்? எதற்கு இந்த இரவு பகல் பாராத உழைப்பு! எதற்கு இந்த முன்னேற்றம்! என்னுடைய வெற்றிகளில் சந்தோஷ படக் கூட ஆளில்லாமல்” என்று தான் தோன்றியது.
எவளோ என்னவோ சொல்லி விட்டு போகிறாள் என்று விடாமல் நான் எதற்கு அவளை இப்படி வருடக் கணக்கில் போராடி அதையும் இதையும் செய்து திருமணம் செய்ய வேண்டும்.
தப்பு உன் மீது அவளை எத்தனை வருடமாய் பார்க்கிறாய். ஷர்மி பேசினால் நீ எந்த வகையில் குறைந்து விடுவாய். என்னவோ பேசிவிட்டு போகிறாள் என்று எப்போதும் போல விடாமல் அவளை கார்னர் செய்து அவளை திருமணம் செய்து, இப்போது உனக்கு கிடைத்தது என்ன?
இப்படி ஒரு அவமானம் தேவையா?     
அவளின் அப்பா திருமணம் செய்து வந்த போது கூட அந்த வீட்டை விட்டு ஷர்மியின் கால்கள் வெளியில் சென்றது இல்லை. இப்போது என்ன சொன்னேன் நான், எதுவும் சொல்லவேயில்லை. அம்மா மேலே உள்ள கோபத்தை என்னிடம் காண்பிப்பாளா, என்னிடம் சண்டை போட்டிருந்தால் கூட வேறு. ஆனால் வீட்டை விட்டு செல்வாளா?
“ப்ச்” சலிப்பாய் கண்களை மூடி அந்த சேரில் சாய்ந்து கொண்டான்.
என்ன முயன்றும் மனது அந்த நிமிடம் வரை சமன் படவே இல்லை.
ஊருக்கு சென்ற பிறகு அப்பா அழைத்து ஊருக்கு வந்து விட்டோம் என்று சொன்னார். அவரிடமே சொல்லிவிட்டான் “ஏதாவது முக்கியமான விஷயம்னா கூப்பிடுங்க, வேற எதுக்கும் கூப்பிடாதீங்கப்பா” என்று.
“டேய், அம்மாவை உனக்கு தெரியாதா?” என்று அவர் சமாதானம் செய்ய, பதிலே பேசாமல் வைத்து விட்டான்.
ஷர்மிளாவிற்கோ என்னவெல்லாம் பேசி விட்டான் என்னை ரவி என்ற ஆதங்கம் அவமானம். குழந்தையை பெற்று அவனிடம் கொடுத்து விட்டு நான் வேறு திருமணம் செய்து கொள்ளட்டுமாம். எவ்வளவி திமிர். அதையும் விட, ரவி இப்படி பேசியும் அவனை தேடும் மனம், அவன் அருகில் இல்லாமல் அணுகாத உறக்கம் பாடாய் படுத்தியது.
உண்மையில் உறக்கமும் வரவில்லை, உணவும் இறங்கவில்லை. குழந்தைக்காக முயன்று சாப்பிட்டாலும் சில நிமிடங்களில் வாய் வழியாகவே வெளியே வந்து விடுகிறது.   
அவர்களின் வீடே அவ்வளவு அமைதியாய் இருந்தது, அங்கே ஆட்கள் இருக்கிறார்களா என்று கூட யாருக்கும் தெரியாது.
அங்கே சமையலறை சத்தம் தவிர வேறு சத்தங்கள் இல்லை. ஆம்! யாரும் யாரிடமும் பேசுவது இல்லை.
என்ன நடந்தது என்று கேசவனுக்கும் விசாலிக்கும் தெரியாது. அவர்கள் தான் கிளம்பி விட்டனரே. சீதா பேசியதை எல்லாம் சந்தோஷ் சொல்லவில்லை. கணவன் மனைவி என்று வரும் போது அது ஒரு பெரிய விஷயமும் அல்ல, இவர்கள் இருவரும் தானே முட்டிக் கொண்டனர்.
“ஷர்மிக்கும் மாமாக்கும் பிரச்சனை, கோவிச்சிக்கிட்டு வந்துட்டா, மாமா கூப்பிட்டார். ஆனா இவ போகலை” என்றான்.
சந்தோஷிற்கு என்ன தெரியும் ரவி ஷர்மியை மீண்டும் அழைக்கவேயில்லை, அவன் போடி என்று விட்டான் என்பதை.
கேசவன் “என்ன ஷர்மி, அப்பா கொண்டு போய் விடட்டுமா” என்றார்.  
“ஏன் நான் இங்க இருக்கக் கூடாதா?” என்று விட அவரால் என்ன சொல்ல முடியும்.
மனதின் ஒரு புறம் ரவியை தேடினாலும், இன்னொரு புறம் கோபம் கோபம் கோபம் மட்டுமே.
எல்லாம் விட ஒரு இயலாமை, அது கொடுத்த ஒரு அழுத்தம், அவளை உறங்க விடவில்லை. இது சாதாரண சண்டையா இல்லை உண்மையில் அவளை வேண்டாம் என்று விட்டானா, குழந்தை பிறந்த பிறகு அவளை நிற்கதியாய் விட்டு விடுவானா? இந்த திருமணம் நடந்த முறை அவன் நினைப்பது தான் என்று காண்பித்து கொடுத்து இருந்ததே. அது போல செய்து விடுவானோ, நான் எங்கே போவேன்? என்னால் என் குழந்தை இல்லாமல் முக்கியமாய் இவன் இல்லாமல் தனியாய் இருக்க முடியுமா? இந்த சிந்தனைகள் அவளுக்கு அப்படி ஒரு மனஅழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது.          
ஏழாம் மாதம் வளைக்காப்பு செய்ய பேசியிருக்க, இதோ இவள் வந்து இங்கே உட்கார்ந்து கொள்ள யாரிடம் பேசுவர். விசாலி சீதாவை அழைத்து பேச, அவர் “நானே பேசிக்கறேன்னு ரவி சொல்லிட்டான்” என்று விட்டார்.
ஆம்! வாசன் அவரிடம் பேசுவதில்லை, இரண்டு நாட்களாக பேசாததே அவரின் வாயை ஏகத்திற்கும் கட்டி போட்டிருந்தது.
சந்தோஷ் அலுவலகத்தில் இருக்க ஷர்மியின் அழைப்பு. “அண்ணா டேய், எனக்கு செக்அப் போகணும், ஃபைல் அங்க வீட்ல இருக்கு, வரும் போது வாங்கிட்டு வா” என்றாள்.
சந்தோஷ் மேலே பேசும் முன்னமே ஷர்மி போனை வைத்து விட்டாள்.
ஆம்! வந்த அன்றாவது சிறிது நேரம் உறங்கினாள். நேற்று இரவு முழுவதும் என்ன செய்தும் உறக்கம் வரவில்லை. உடல் என்னவோ செய்தது. பயமாகி விட்டது. வயிற்றில் குழந்தை இருக்கிறதே.     
சந்தோஷ் சென்று ரவியின் வீடு பார்க்க பூட்டிய வீடு தான் தெரிந்தது.
வாட்ச்மேனிடம் கேட்க “ரெண்டு நாளா சார் ஃபாக்டரில தான் இருக்கார்” என்றான்.
“என்ன டா இது, இந்த ஷர்மியை என்ன பண்ண?” என்று தான் மனம் நினைத்தது. அவனுக்கு தான் ரவீந்திரனை பற்றி தெரியவில்லையே.
ரவீந்திரனுக்கு அழைப்பு விடுத்தான், அவன் எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஃபாக்டரி சென்றான்.
அங்கே சென்று பார்த்தால் ரவி அவனின் அறையில் இருக்கையில் கண்மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான். மிகுந்த ஓய்ந்த தோற்றம். இரு நாட்கள் வளர்ந்து தாடி, இப்படி ஒரு தோற்றத்தில் ரவியை சந்தோஷ் பார்த்ததேயில்லை.
இவன் கதவை நாசுக்காய் இருமுறை தட்டி உள்ளே வந்தது கூட தெரியவில்லை.
“மாமா” என்று அழைக்க, கண்திறந்தான்.
இவனை பார்த்ததும் ஒரு நொடி என்ன என்பது போல பார்த்தவன், பின் “என்ன சந்தோஷ்?” என்றான் இயல்பாகவே.
“ஷர்மி செக் அப் போகணும்னு ஏதோ ஃபைல் கேட்டா” என்றான்.
“செக் அப் பா, போன வாரம் தானே போயிட்டு வந்தோம், அதுக்கு இன்னும் நாள் இருக்கே, இப்போ போக வேண்டியது இல்லையே, இப்போ எதுக்கு போகணும் சொல்றா” என்றான்.
சந்தோஷின் முகமும் குழப்பம் காண்பிக்க, “செக் அப் போகணும் மட்டும் சொன்னா, வேற எதுவும் சொல்லையே மாமா” என்றான்.
“ஃபோன்ல கேளு, என்ன பண்ணுதுன்னு” என்றான் பரபரப்பாக.  
அவனின் பரபரப்பு சந்தோஷையும் தொற்ற, ஷர்மியை அழைத்தவன், அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு “பேபி என்ன பண்ணுது?” என்றான்.
“என்ன பண்ணுதுன்னா?” என்று அவள் பதிலுக்கு கேட்க,
“இப்போ உனக்கு செக் அப் போக வேண்டியது இல்லையாமே, என்ன பண்ணுது எதுக்கு இப்போ போகணும்னு மாமா கேட்டார்” என்று சொல்ல,
“ஏன் அதை அவர் கேட்க மாட்டாராமா? கேட்க மாட்டார்! அது தான் என்னை வேண்டாம் சொல்லிட்டாரே! எப்போ இவ சண்டை போடுவா நமக்கு சான்ஸ் கிடைக்கும்னு இருந்திருக்கார் போல, தொலைஞ்சது சனியன்னு விரட்டி விடலாம்னு இருந்திருக்கார். நான் தான் அது தெரியாம கல்யாணமாகி அவரோட வாழ வந்த நாள்ல இருந்து ஒரு நாள் கூட அவரை விட்டு எங்கேயும் போகாம அவரை டார்ச்சர் பண்ணினேன் போல” என்று படபடவென்று பேசினாள்.
ஷர்மியின் குரல் அழுகையின் ஆரம்பத்தில் இருந்தது. ஏதேதோ பேசுவதில் இருந்தே ரவிக்கு புரிந்தது அவனின் பேச்சு ஷர்மியை மிகவும் பாதித்து இருப்பது.
“இது என்ன?” என்பது போல நினைத்து ரவியை பார்த்தான் சந்தோஷ்.
ஆனாலும் உடனே சமாளித்து, “நீ வேண்டாம் போன்னு கோபத்துல சொல்றது தான், நீ சண்டை வரும்போதெல்லாம் என்னை கூட தான் போடா சொல்லுவ” என்றான் சமாதானமாக.
“ப்ச்” என்று சலித்த ரவி, “என்ன பண்ணுதுன்னு கேளு முதல்ல” என்று அதட்டினான்.  
அது ஷர்மிக்கும் கேட்டது. “என்ன பண்ணுதுன்னு எனக்கு தெரியலை. ஆனா ஏதோ பண்ணுது அதுக்கு தான் ஹாஸ்பிடல் போகணும்னு சொல்றேன்” என்றாள் இப்போது குரலை தெளிவாக்கி. அவளுமே பயந்திருந்தாள் அதனால் தான் அவளாகவே ஹாஸ்பிடல் போகலாம் என்று பைல் கேட்டாள்.

Advertisement