Advertisement

“ம்ம், இப்போ கூட ஒன்னுமில்லை, என் குழந்தையை பெத்து என் கையில குடுத்துட்டு, நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு ஒன்னுமில்லை” என்றான்.
அவளின் கண்களில் கரகரவென்று நீர் இறங்கியது.
“ம்ம், முன்னமே உன்னை கல்யாணம் பண்ணிக்க க்யுல நின்னாங்க. இப்போ இன்னும் நிற்பாங்க” என்று சொல்ல,
ஷர்மிளாவால் தாளவே முடியவில்லை, அவளின் இயலாமையை நினைத்து. ஆனாலும் மனதில் ஒரு வைராக்கியம் இவன் முன் வெடித்து விடாதே என்று.
கண்களில் நீரோடு அவனை வெறித்து பார்க்க, “உன் வாய் என்ன ஆனாலும் குறையாது. கல்யாணத்துக்கு முன்ன தான் என்னை அசிங்கப் படுத்துவ எல்லார் முன்னேயும்னா, இப்போவும் அப்படியா?”
“போடி, இனி வராத, ஊருக்குள்ள குடிச்சு அடிச்சு நாலு பொண்ணுங்களோட சுத்தறவனுக்கு எல்லாம் அவனை விட்டு போகாம, அவனை விட்டுக் குடுக்காம, இருக்குற பொண்ணுங்க இருக்காங்க. ஆனா எனக்கு பாரு, என்ன சொன்னேன் வீட்டை விட்டு போற, போடி, எனக்கு நீ வேண்டாம், இவ்வளவு நாள் நாம வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு தான் இல்லையா?”  என்று சொல்லி திரும்பி நடக்க,
சந்தோஷ் ரவி சமாதானம் செய்தும் இவள் வரவில்லையா என்று தான் தோன்றியது. அவர்கள் பேசியது இவனுக்கு தெரியாதே.
“என்ன ஷர்மி அவர் தான் சமாதானம் செய்யறார் தானே” என்று சொல்ல,
“போலாம்ண்ணா” என்றாள் வெளியே வராத குரலில்.
“என்னடா பிடிவாதம்?” என்று சலிப்பாய் சொன்ன போதும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
அவன் அமர்ந்து காரை எடுக்க, கண்மூடி சாய்ந்து கொண்டாள், கண்களில் மட்டும் நிற்காமல் நீர் வந்தது! உணவின் பாதியில் தான் வாக்கு வாதங்கள். இதோ உணவு பாதியில் நின்றிருக்க, உணவு உண்ட கை கூட கழுவவில்லை. மனம் வெகுவாய் ரணப்பட்டது.  
உள்ளே சென்றவன், அவனின் அப்பாவின் அருகில் தான் நேராய் சென்றான்.
“பா, உங்க மனைவி கிட்ட சொல்லிடுங்க, அவங்க பையன் செத்து போயிட்டான்னு” என்று சொல்லி நடக்க,
சீதாவிற்கு அவனின் கோபம், ஆற்றாமை, ஆத்திரம் எதுவும் புரியவில்லை!
எப்போதும் போல “அவன் செத்து போயிட்டான்னு நான் ஏன் நினைக்கணும்? நான் செத்து போயிட்டேன்னு அவனை நினைக்க சொல்லுங்க” என்றார்.
“இவன் என்னவோ செஞ்சு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அது ஷர்மியே சொல்றாள்ள, உன்னை கல்யாணம் பண்ணிக்காம இருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்னு, இவன் தான் விடலை சொல்றா. அவங்க தொழில்ல அவ்வளவு பிரச்சனை பண்ணினான். வேற என்ன பண்ணினானோ?” என்று சொல்லிவிட,
“என்ன பேசற நீ சீதா” என்று வாசன் அதட்ட
“மா” என்று கௌசல்யா அதட்ட, அவ்வளவு தான் எரிமலையாய் ஏதோ ஒன்று பொங்க, அவனின் அம்மாவை பார்த்தவன் பேச ஆரம்பித்தான்.
“ம்ம், பெத்து மூணு வேளை சாப்பாடு போட்டு வளர்த்தா அவங்களுக்கு பேரு அம்மா தான். நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். அதனால் நான் செத்து போயிட்டேன்னு நினைச்சிக்கோங்கன்னு சொன்னேன்” என்று பேச,
“டேய், என்னடா பேசற நீ! வார்த்தைக்கு வார்த்தை செத்துப் போயிட்டேன்னு” என்று வாசன் அதட்ட,
“அது நிஜம்பா பொய்யில்லை, நான் இனி இவங்க பையன் கிடையாது! எவ்வளவு நல்ல எண்ணம் என் மேல. ஏன் வேலைக்காரனா பொறந்தா வேலைகாரனா தான் சாகணுமா? முதலாளி ஆகக் கூடாதா?”
“ஷர்மி என்ன மேலோகத்துல இருந்து குதிச்சு வந்தாளா? அவளும் நம்மை போல மனுஷி தானே! பொண்ணு கேளுங்கன்னு சொன்னா நீ வேலைக்காரன் சொல்றீங்க, கேட்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க”
“இப்போ, இப்போ, இன்னைக்கு அவங்க வீட்டுக்கு போறதுக்கு பேச்சு வந்தப்போ, அது என்ன உனக்கு புது இடமா நீ அங்க வேலை செஞ்சவன் தானேன்னு கேவலமா பேசறாங்க இவங்க”
“வேலை செஞ்சவன்னு சொன்னா கேவலமா?” சீதா கேட்க,
“வேலை செஞ்சவன்னு சொன்னா கேவலமில்லை, ஆனா அவங்களுக்கு கீழ நானுன்னு சொல்றீங்க. ஏதோ பணம் நகைக்கு ஆசைப்பட்டு ஷர்மியை கல்யாணம் பண்ணின மாதிரி பேசறீங்க”
“என்னவோ நான் நியாயத்தை பேசுவேன்னு உண்மையை பேசுவேன்னு தேவையில்லாததை பேசி வைக்கறீங்க. உங்க வயித்துல நான் பொறந்தா என்னை என்னவேனா கேவலப்படுத்தலாம்னு பட்டா போட்டு குடுத்திருக்கேனா?”
“என்னோட கடுமையான உழைப்பு, என்னோட புத்திசாலிதனம், என்னோட நெறிமுறையான வாழ்க்கை எதுவும் தெரியலையா உங்களுக்கு?”
“தொழில்ல தொந்தரவு குடுத்தேன்னா, ஏன் குடுத்தேன்? நான் சம்பாதிச்சது அதை எவனுக்கோ தூக்கி குடுப்பாங்க, அதை நான் வேடிக்கை பார்ப்பேனா? ஏன் மரியாதையா தானே கேட்டேன் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் செஞ்சு குடுங்கன்னு. எனக்கு பக்கத்துல கூட நிக்க முடியாதவனை கூட்டிட்டு வந்து, நான் சம்பாதிச்ச சொத்தை எழுதி கொடுத்து, இவனுங்க இவன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நினைப்பாங்க? நான் அவனுங்களை ஒன்னும் செய்யாம விடணும். ஏன் அவனுங்க பரம்பரை சொத்து இருக்கே, அதை கொடுத்து கல்யாணம் பண்றது”   
“என்ன பெருசா தொந்தரவு குடுத்தேன்? அவனுங்களுக்கு சமாளிக்க துப்பில்லை. அவங்க சொத்தை வெச்சு பொண்ணுக்கு கல்யாணம் பேசணும் நான் சம்பாதிச்சதை கிடையாது. என் சம்பாத்தியம் நான் காப்பாதினா நான் கெட்டவனா?”  
“ஒரு பைசா சொந்தமா சம்பாதிச்சா அதோட அருமை பெருமை தெரியும். யாரோ குடுக்கறாங்க சமைச்சு சாப்பிடறீங்க, இதை தவிர உங்களுக்கு வேற என்ன தெரியும்?” என்று விளாசி விட்டான்.
அவனை நிறுத்த யாராலும் முடியவில்லை!
“இப்படி ஒரு அம்மா எனக்கு தேவையே இல்லை. உங்களுக்கும் எனக்கும் இனி ஒன்னும் கிடையாது. நான் இனி தனி தான்! என்னை விட்டு போனவளும் தேவையில்லை, நீங்களும் தேவையில்லை, என்ன நினைச்சிட்டு இருக்கீங்க என்னை பத்தி நீங்க எல்லாம்” என்று கர்ஜித்தான்.
வாசனும் கௌசல்யாவும் அதிர்ந்து நின்றனர். ஏதோ அம்மா பையன் சண்டை என்று நினைத்தால் இது மிகவும் பெரிதாகிவிட்டது என்று புரிந்தது.    
“பா, கொஞ்சம் நேரத்துல கார் வரும், சொல்லிடுவேன். நீங்க ஊருக்கு கிளம்பிடுங்க. இனி என்னை பார்க்க வராதீங்க” என்று சொன்ன போது அவனின் குரல் கரகரத்ததோ?
“யாரும் எனக்கு வேண்டாம் நான் இனி தனி தான்!” என்று சொன்னவன்,
வீட்டில் வேலை செய்பவர்களிடம் “அவங்க கிளம்பினதும் சாவியை கொண்டு வந்து பாக்டரில குடுத்துடுங்க. உங்களுக்கு ஒரு வாரம் லீவ். நான் சொன்ன பிறகு வந்தா போதும், ஊருக்கு போயிட்டு வாங்க!” என்று கையில் வந்த பணத்தை அவர்களிடம் கொடுத்தவன் காரை எடுத்து ஃபாக்டரிக்கு கிளம்பிவிட்டான்.
அப்போதும் சீதா “எவ்வளவு திமிர் இவனுக்கு, இவன் செஞ்சதை யாரும் சொல்லக் கூடாதாமா, என்னை அம்மா இல்லன்னு சொன்னா சொல்லிட்டு போறான்” என்றார்.
“உங்களை அம்மா சொன்னா என்ன? சொல்லைன்னா என்ன? உங்களை அம்மா சொல்ல இன்னும் ரெண்டு பொண்ணுங்க நாங்க இருக்கறோம். உங்களுக்கு நீங்க பண்ணின தப்பே புரியலை. அண்ணிக்கும் அண்ணாக்கும் சண்டை உங்களால, அண்ணி போனதுக்கு நீங்க தான் காரணம்”
“இப்போ அண்ணா அவங்களை வேண்டாம்னு சொல்றாங்க. உங்களால எல்லாம் உங்களால, உங்களுக்கு நீங்க செஞ்சு வெச்ச பிரச்சனையோட அளவே புரியலை”
“அண்ணிக்கு அவங்க அம்மா வீட்ல போய் இருக்க இஷ்டமில்லைன்னு எல்லோருக்கும் தெரியும். இப்போ நீங்க செஞ்ச வேலையால அவங்க அங்க போயிருக்காங்க. அவங்களுக்கு அது ரொம்ப மன உளைச்சலை கொடுக்கும்”  
“அவங்க கர்ப்பமா இருக்காங்க, அவங்க மனசு நிம்மதியா இருக்க வேண்டாமா? எங்களுக்கு இப்படி புருஷனை விட்டு பிரியற ஒரு நிலைமை வந்தா உங்களுக்கு எப்படி இருக்கும், இப்போ அண்ணி கோபப்பட்டு போனதுக்கு நீங்க தான் காரணம் ம்மா” என்று அவரை சராமாரியாய் குற்றம் சொல்ல,
சீதாவிற்கு மனதிற்குள் உதைத்த போதும் “அவங்க சண்டை போட்டு போனா நான் எப்படிடி காரணமாவேன்” என்று சப்பை கட்டு கட்டினார்.
“நீ பேசாதம்மா” என்று சொன்னவள், “உங்களால தான் பா எல்லாம். இவங்களை பேசாம அடக்கி வைக்க மாட்டீங்களா?” என்றவள் ரூமின் உள் சென்றால் பெட்டியை கட்ட, வேறு என்ன செய்ய முடியும் அவளால்?”
சரியாக அரைமணிநேரம் கார் ஒன்று வர “நான் ஒன்னும் அந்த கார்ல வர மாட்டேன், நாம பஸ்ல போகலாம்” என்று சீதா பேச,
“கௌசி, உங்கம்மாவை ஒழுங்கா கார்ல ஏற சொல்லு, அவளுக்கு என்ன சொன்னாலும் புரியறது இல்லை. நீ சொன்ன மாதிரி நான் சரியில்லை போல”
“உங்க அண்ணி அண்ணன் சேர்ந்து இருக்குற வரை உங்கம்மாவோட எனக்கு பேச்சில்லை” என்று முடித்து விட்டார்.
சீதா இதை எதிர்பார்க்கவில்லை!
ஏன் கௌசியே எதிர்பார்க்கவில்லை! “அப்பா” என்றாள் இயலாமையோடு.
“என் பையன். அவன் தலையெடுத்ததுல இருந்து நமக்கு எந்த குறையுமில்லை. பணக் கஷ்டமும் இல்லை. அதையும் விட மூணு பொண்ணுங்களுக்கு நல்ல இடத்துல சீரும் சிறப்புமா கல்யாணம் செஞ்சிருக்கோம். இருக்க வீடு கட்டி கொடுத்து சௌகர்யமா வெச்சிருக்கான், இதுக்கு முன்ன அவனோட சண்டை போட்டு பணம் எதுவும் வாங்காம கொஞ்சம் கஷ்டப்பட்டோம். அது ஒன்னுமில்லை. ஆனா இப்போ என் பையன் என்னை வீட்டை விட்டு ஏறக் குறைய துரத்தி இருக்கான், யாரால இவளால, இன்னும் என்னை எங்க கொண்டு போய் நிறுத்தப் போறாளோ” என்று கோபமும் ஆதங்கமும் கலந்து பேசிய வாசன்,   
“ப்ச், போய் கார்ல ஏறு, உங்கம்மாவை ஏறச் சொல்லு” என்றவர் ரமேஷை அழைத்து “நாங்க கிளம்பறோம்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
உண்மையில் கோபம் அதனால் ஊருக்கு செல்லுங்கள் என்று விட்டான். அது வீட்டை விட்டு துரத்துவது போல வரும் என்று சற்றும் ரவிக்கு தோன்றவில்லை. தோன்றியிருந்தால் அவன் வீட்டை விட்டு சென்றிருப்பான்.
மொத்தத்தில் மனைவியையும் “போ” என்று சொல்லி, பெற்றவர்களையும் “போ” என்று சொல்லி மீளாத பழி சொல்லுக்கு ஆளாகி விட்டான்.  
  
  
             

Advertisement