Advertisement

அத்தியாயம் பதினேழு :
கௌசல்யா உள்ளே வந்தவள் “அண்ணி சாரி, அம்மா அப்படி தான், நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்று சொல்ல,
ஷர்மிளா அதற்கு ஒரு புன்னகை மட்டுமே கொடுத்தாள் சோர்ந்த புன்னகை, நிறைய அழுதிருப்பாள் என்று அவளின் கண்களை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
அவள் உணவை விழுங்க சிரமப் பட்டுக் கொண்டிருக்க, “கொஞ்சம் மோர் கொண்டு வரட்டுமா, நீங்க அப்படியே அதை குடிச்சிட்டே சாப்பிடுங்க” என்று கௌசல்யா சொல்ல,
ஷர்மிளா பதில் சொல்லும் முன்னமே ரவி சொன்னான் “கொண்டு வா” என்று.
கௌசல்யா செல்லவும், சந்தோஷ் மெதுவாக ஷர்மிளாவிடம் “பேபி, நீ இப்படி அழக் கூடாது. இது உன்னோட ஹெல்த்க்கும் நல்லதில்லை, அதே சமயம் பேபிக்கும் நல்லதில்லை. நீ எவ்வளவு தைரியமான பொண்ணு! ஒண்ணுமேயில்லாத விஷயத்துக்கு அப்செட்டாவியா” என்று பேசினான்.
“நான் உன்கிட்ட அட்வைஸ் கேட்டேனா? வாயை மூடு நீ!” என்றாள் கோபமாக.
“என்ன இப்படி பேசற ஷர்மி?” என்று ரவி அதட்ட,
“என் அண்ணா! நான் எப்படி வேணா பேசுவேன். என் அண்ணா கிட்ட பேச நீ சொல்லணும்ன்ற அவசியமில்லை!” என்று அதற்கும் அவனிடம் காய்ந்ததாள்.
“நீ ரொம்ப பண்ற ஷர்மி” என்று விட்டான் கோபமாக ரவி. எரிச்சலாக வந்தது அம்மா சொன்னால் அதையா செய்யப் போகிறோம் அதற்கு எதற்கு இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று.
ரவியின் வார்த்தைகள் அது சொல்லப் பட்ட விதம் ஷர்மியை ஏகத்திற்கும் சீண்ட, “ஆமாம்! அப்படி தான் பண்ணுவேன்! என்ன பண்ணுவீங்க என்னை, விட்டுட்டு போய்டுவீங்களா” என்றாள் கோபமாக.
ரவியின் பொறுமை பறக்க, “ஏய், என்னடி உளர்ற?” என்றான் அவளையும் விட கோபமாக.
“மாமா ப்ளீஸ், நீங்களும் கோபப்படாதீங்க” என்றான் சந்தோஷ்.
எதையும் கருத்தில் கொள்ளாமல் “போ, போ, யாரும் எனக்கு தேவையில்லை. இது என் வீடு! நான் இங்க தான் இருபேன். யாருக்கும் என் கூட இருக்க முடிஞ்சா இருங்க, இல்லை நீங்க போங்க. நான் எங்கேயும் போக மாட்டேன். நான் இங்கே தான் குழந்தை பெத்துக்குவேன். நான் எங்கேயும் போக மாட்டேன். யார் வீட்டுக்கும் போக மாட்டேன். எனக்கு வளைகாப்பும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்!” என்று ஷர்மி கத்து கத்து என்று கத்தினாள். 
ரவியும் சந்தோஷும் செய்வதறியாது திகைத்தனர்.
சத்தம் கேட்டு கௌசல்யாவும் சீதாவும் வாசனும் கூட வந்து விட்டனர்.
அவர்களை பார்த்ததும் இன்னும் கத்தினாள் “எனக்கொன்னும் வளைக்காப்பு வேண்டாம். இது என்னோட வீடு. நான் இங்க தான் இருப்பேன். என்னை யாரும் போன்னு சொல்ல முடியாது, வேணும்னா உங்க பையனை கூட்டிட்டு போங்க”
“இப்படி பேசி பேசி தான் கல்யாணமான நாளே உங்க பையனை துரத்தி விட்டீங்க”
“நான் முதல்லேயே உங்க கிட்ட சொல்லியிருக்கேன் திரும்பவும் அதே வேலை தான் பண்றீங்க நீங்க”
“நான் இந்த வீட்டுக்கு கல்யாணம் செஞ்சு வந்திருக்கேன். நான் முக்கியமா உங்களுக்கு இல்லை எங்கப்பாவோட ரெண்டாவது பெண்டாட்டி முக்கியமா” என்று கத்தினாள்.
“இப்படி பேசாத ஷர்மி” என்று ரவி அவளை பேசாமல் நிறுத்த முற்பட,
“அதெல்லாம் நிறுத்த முடியாது, போ, போ” என்றாள் ரவியை பார்த்து.
அப்போதும் விட்டேனா என்று “நல்லது சொன்னா தப்பா உனக்கு, உன் பிறந்த வீடு வேண்டாமா?” என்று சீதா பேச,
இவ்வளவு சொல்லியும் எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் இவர்கள் இப்படி பேசுகிறார்களே என்ற ஆத்திரம் அதீதமாய் பொங்க, “நீங்க ரொம்ப பேசறீங்க” என்று சீதாவை கை நீட்டி பேசினாள்.
ரவி இடையில் வந்தவன் “கை நீட்டி எல்லாம் பேசாதே, மரியாதை கிடையாது ஷர்மி” என்று அவளை அதட்டியவன், “அம்மா நீங்க போங்க” என்ற சொல்ல,
“ம்ம், எனக்கு மரியாதை தெரியாது. ஆனா தெரியவும் வேணாம். ஐ ரியல்லி ஹேட் யூ. எல்லாம் எல்லாம் உன்னால தான். எங்கேயாவது கல்யாணம் செஞ்சு நிம்மதியா இருந்திருப்பேன். நீ தான் விடலை” என்று எல்லோர் முன்னும் பேச,
ரவிக்கு மிகவும் தலையிறக்கமாய் போனது.
“மா, நீ வா” என்று கௌசல்யா தான் சூழல் புரிந்து சீதாவின் கையை பிடித்து இழுக்க, திரும்பவும் சீதா ஏதோ பேச வர,
“மாமா தயவு செஞ்சு அத்தையை கூட்டிட்டு போங்க, இப்போ அவ கர்ப்பமா இருக்கா. இந்த சூழ்நிலையில சரியோ தப்போ அவளை கொஞ்சம் அமைதியா விடுங்க” என்று சற்று அதட்டலாய் சந்தோஷ் சொல்லிவிட,
“சந்தோஷ்” என்று ரவி அவனை வேகமாய் அதட்டி விட்டான்.
மிக மிக கணமான சூழல்!
சந்தோஷின் முகமும் சற்று சுருங்கி விட்டது.
எல்லோர் முன்னும் சந்தோஷை அதட்டியது ஷர்மிக்கு பிடிக்கவேயில்லை.   
“ஏதாவதுன்னா நீங்க என்னை தான் அதட்ட முடியும். எங்கண்ணாவை எல்லாம் முடியாது. இப்போ என்ன நான் அம்மா வீடு போகணும், எனக்கு பிடிக்கலைன்னாலும் போகணும், எனக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சாலும் உங்க அம்மா போக சொல்வாங்க,  அவ்வளவு தானே! அதுக்கு எதுக்கு வளைக்காப்பு, நான் இப்போவே போறேன்” என்றவள்,
“நீ வாடா அண்ணா” என்று சொல்லி சந்தோஷின் கையை பிடித்துக் கொண்டு ரூமின் வெளியே நடந்தாள்.
“ஹே பேபி, என்ன இது? விடு, விடு, அவர் என்கிட்டே பேசறார் உனக்கென்ன, அது அவருக்கும் எனக்கும் உள்ளது” என்று சந்தோஷ் பேச பேச இழுத்துக் கொண்டு நடந்தாள்.
ரூமை விட்டு வெளியே, பின்பு அப்படியே வீட்டை விட்டு வெளியே,
கௌசல்யா தான் அதனை பார்த்து வந்து “அண்ணா, அண்ணி வீட்டை விட்டு போறாங்க” என்றாள்.
ரவி ஷர்மியின் பேச்சுக்களில் சொல்வதறியாது செய்வதறியாது நின்று கொண்டிருந்தான். கௌசல்யா சொல்லவும் “என்ன” என்று அதிர்ந்தவன் வேகமாய் சென்று பார்க்க,
சந்தோஷின் காரில் அமர்ந்து இருந்தவள் சந்தோஷிடம் காரை கிளப்பச் சொல்லி வழக்காடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் காரின் உள் அமர்ந்திருக்க சந்தோஷ் அவளின் கதவின் புறம் நின்றிருந்தான்.
ரவியின் கோபம் பலபல மடங்கு பெருக, தன்னை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தவன், வாயிற் கதவில் சாய்ந்து நின்று பார்க்க ஆரம்பித்தான்.
சந்தோஷ் “எடுக்க மாட்டேன், நீ இறங்கு” என்று வாதாடிக் கொண்டிருந்தான்.
இதையெல்லாம் ரவி வேடிக்கை பார்த்து நின்றிருந்தான்.
கௌசல்யா மனம் பொறுக்காமல் “அண்ணா, நான் போய் கூப்பிடவா” என அருகில் நிற்க,
அவளை திரும்பி பார்த்தவன் “ஒரே ஒரு உதவி மட்டும் செய், தயவு செஞ்சு அம்மாவை மட்டும் இங்க வர விடாதே” என்றான் வெறுப்பான குரலில்.
சீதா அப்போது தான் அங்கே வந்தவர் வெளியே காரை நோக்கி செல்ல முற்பட, “மா” என்று சீதாவை பிடித்து நிறுத்துக் கொண்டாள், அசையவிடவில்லை.
சந்தோஷ் இவனை பார்த்ததும் விரைந்து வந்தவன், “மாமா கூப்பிடுங்க, அவ ஏதோ கோபத்துல பேசறா, போறா” என்றான்.
ரவி அசையவில்லை!
“மாமா, இது ஈகோக்கான நேரமில்லை. அவ கன்சீவா இருக்கா, அவ என்னையும் உங்களையும் விட யாரோடையும் க்ளோஸ் கிடையாது. அதுவும் இப்போ உங்க கூட தான் அதிகம். உங்களை விட்டுட்டு அவளால இருக்க முடியாது கூப்பிடுங்க” என்றான் ஏறக்குறைய கெஞ்சும் குரலில்.
ரவி அசையவேயில்லை!
ஆம்! எங்கேயாவது கல்யாணம் செஞ்சு நிம்மதியா இருந்திருப்பேன், நீ தான் விடலை” என்றது காயப் படுத்தி இருந்தது.
“அவ்வளவு தானா, இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை” என்று தோன்றியது. “அப்படி என்ன நிம்மதியில்லாமல் இருக்கும் அளவிற்கு இங்கே பிரச்சனை” என்று தான் தோன்றியது.
அவன் திருமணதிற்கு முன் செய்ததை கொண்டு ஷர்மி பேச,
அவனோ திருமணத்திற்கு பிறகான தங்களின் வாழ்க்கையை நினைத்தான்.
“மாமா ப்ளீஸ்” என்றான் கெஞ்சலான குரலில் சந்தோஷ்.
“நீ ஒரு நிமிஷம் இங்க இரு” என்று சொல்லி, ஷர்மிளாவை நோக்கி நடந்தான், வெகு நிதானமான நடை! முகத்தில் அப்படி ஒரு தீவிரம்! பாவம் ஷர்மிளாவிற்கு இன்னும் ரவியை புரியவில்லை தெரியவில்லை! அவனின் கோபம் தானே இந்த திருமணத்தின் அடிப்படையே! இப்போது திரும்ப அப்படி ஒரு கோபம் அவனிடம்.  
ரவி அருகில் வர, “அவன் அழைத்தாலும் செல்லக் கூடாது, நான் என்ன விளையாட்டு பொம்மையா, இவன் அம்மா எப்போதும் எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் பேசுகிறார்கள்” என்று கொந்தளித்து இருக்க…
இன்னும் இன்னும் மனம் கொந்தளிக்க போகிறது என்று ஷர்மிளாவிற்கு தெரியவில்லை.
அருகில் வந்தவன் ஷர்மியின் புறம் இருந்த கார் கண்ணடியில் கை ஊன்றி “ம்ம், அப்புறம்” என்றான் தோரணையாய்.  
அதில் அப்படி ஒரு அந்நியத்தன்மை தெரிய, ஷர்மி அவனை அதிர்ந்து பார்த்தாள்.

Advertisement