Advertisement

அத்தியாயம் பதினாறு :
இருவருக்கும் ஒருவருக்கொருவர் விஷயம் தெரியும் என்று தெரிந்த பின்பு வாழ்க்கை இயல்பாய் சென்றாலும், மனதில் ஒரு நெருடல் இருவருக்குமே. எங்கேயோ ஒரு இடத்தினில் ஒரு அபஸ்வரம், ஒரு அன்யோன்ய குறைவு.
இது தெரிந்தால் தன்னால் அவனுடன் கொஞ்சல் குலாவல்கள் என்று ஈடு பட முடியாது என்று தெரிந்து தான் அதனை தெரிந்த மாதிரி ஷர்மிளா காண்பித்து கொள்ளவில்லை. இப்போது அவளாக வாயை விட்டு விட்டாள்.
மனதில் ஏதோ ஒரு மூலையில் இருக்கப் போய் தானே அது வார்த்தையாக வந்து விட்டது.  
இப்போது எல்லாம் சரியாகிவிட்டாலும் செய்த தப்பு இல்லை என்றாகிவிடுமா என்ன?
நீ உயர்வானவனாய் கூட இரு, வந்த மாப்பிள்ளைகள் உனக்கு கீழாய் கூட இருக்கட்டும், அதற்காக “எங்களுக்கு தான் திருமணம் நடக்க இருந்தது” என்று பரப்பி ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்துவது சரி கிடையாது அல்லவா?
திருமணதிற்கு முன்பு அது தெரியாவிட்டாலும் அது தெரிந்த பிறகு என்ன செய்தேன் ஒன்றுமே செய்யவில்லையே, இது தான் என் வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்டு விட்டேனே அது தவறா மனதில் மட்டுமல்லாமல் மூளையிலும் ஒரு பக்கம் இது ஓட உறுத்திக் கொண்டே இருந்தது.
அவனிடம் கோபிக்க வேண்டும் தள்ளி நிற்க வேண்டும் என்று பலவாறு நினைக்க அதுவும் முடியவில்லை. பார்க்குமுன் சண்டை பிடிக்க நினைக்கும் மனம் பார்த்த பிறகு ஒன்றையும் நினைக்காது. அவனை ஒட்டிக் கொண்டே அலைவாள்.
ஏன் என்னால் முடியவில்லை என்ற கழிவிறக்கம் மனதை ஆட்டிப் படைக்க, அதற்கும் துணையாய் மனம் அவனை தான் தேடியது.
ஆனால் வாய் வார்த்தையாக எதுவும் ரவீந்திரனிடம் பேசிக் கொள்ளவில்லை.        
ஏதாவது இதை பற்றி பேசுவாளா என்று முகத்தை முகத்தை தனிமையில் எப்போதும் ரவி பார்க்க, ம்கூம் அதனை பற்றி பேசவேயில்லை. அவனாய் விளக்கம் சொல்ல ஆரம்பித்தாலும் நாம வேற பேசலாமா என்று சிறு குழந்தையாய் அவன் மேல் ஏறி அவனை கட்டிக் கொள்பவலை அவனும் தான் என்ன செய்வான்.
திருமணதிற்கு முன் இருந்த ஷர்மிளா வேறு திருமணதிற்கு பிறகு இருக்கும் ஷர்மிளா வேறு தான். எதற்கும் ரவியை தான் மனம் தேடியது. சந்தோஷிற்கு இப்படி செய் அப்படி செய் என்று அதட்டியவளா இவள், அப்பாவின் செய்கை தெரிந்த பின் அவரிடம் சண்டையிட்டு இதுவரை முகம் திருப்பி நிற்பவள், விசாலியை சற்றும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதவள், ரவியிடம் நேர் எதிர் தான். முழு சரணாகதி தான்!    
அது அவளுக்கும் புரிய “நான் ஏன் இப்படியாகிவிட்டேன்” என்ற கேள்வி அவளுள்.
அவளுக்கு ரவியை பிடித்திருக்கின்றது, அதனால் தான் இப்படி என்று புரிந்தாலும் அது எப்படி இவன் செய்ததை எல்லாம் நான் மறந்து விட்டேன் என்பதாக தான் அவளின் மனது.
நான்… எனது… மனது…. ஏன் இப்படி என்ற கேள்வி அவளுள்?
உண்மையில் மனித மனம் ஏன் எதனால் எப்படி என்ற கணக்கீடுகளுக்கு அப்பாற்பட்டது, படைத்த இறைவனால் கூட கணக்கிட முடியாது, எப்போது அது எப்படி மாறும் என்பது. இது நிதர்சனம்.     
நாட்கள் கடக்க கடக்க ரவியால் இயல்பாய் கூட இருக்க முடியவில்லை, அமைதியாகி விட்டான், ஷர்மிளாவிற்கான கவனிப்பு அக்கறை எல்லாம் இருந்தாலும் என்னவோ அதில் குறைவதாய் ஷர்மிளாவும் உணரத் துவங்கினாள்.
இதோ ஏழாம் மாதத்தில் வளைகாப்பிற்கு நாள் குறிப்பதற்காக ரவியின் அப்பாவும், அம்மாவும், அவனின் கடைசி தங்கை கௌசல்யாவும் வந்திருக்க, கேசவனும் விசாலியும் வந்தனர். ரவி அலுவலகம் சென்றிருந்தான்.
“வாங்க” என்று மரியாதையாய் வந்து வரவேற்று விட்டு ஷர்மி ஒதுங்கி அமர்ந்து கொண்டாள். விசாலியிடம் முகம் திருப்பவில்லை. 
ஆம்! உன் அப்பாவின் மனைவியாய் அவருக்கு உரிய மரியாதையை நீ கொடுத்து தான் ஆக வேண்டும் வேண்டும் என்று ரவி கட்டளையாய் சொல்லியிருந்தான்.
சிலவற்றை ரவீந்திரன் சொல்லும் த்வனியிலேயே அதனை மீறும் தைரியம் ஷர்மிளாவிற்கு வருவதில்லை. விசாலியிடம் ஒதுங்கிக் கொள்வாள், முன்பு போல அலட்சியப் படுத்துவது எல்லாம் கிடையாது.
“வாங்க” என்று சொல்லி அவள் தள்ளி நின்று விட சீதாவும் கௌசல்யாவும் தான் வந்தவர்களை கவனித்தனர். பலகாரம் பட்சனை பில்டர் காபி என்ற கும்பகோணத்தின் சிறந்த கவனிப்பாக அது இருக்க,
விசாலியும் சீதாவுடன் இயல்பாய் பொருந்தி போக,
நாள் பார்த்து குறிக்கப்பட்டது , விஷேஷம் கும்பகோணத்தில் என்று முடிவும் செய்யப் பட்டது,
என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்று எங்களுக்கு அதிகம் பரிட்சயமில்லை, எதுவாகினும் நீங்கள் சொல்லுங்கள் முறையை செய்து விடுகிறோம் என்று கேசவன் சொல்லிவிட,
பின்பு சீதா அவர்களிடம் என்ன எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல, அவர்கள் லிஸ்ட் எடுத்துக் கொள்ள, இப்படியாக பொழுதுகள் சென்று மதிய உணவு நேரமும் வர, அப்போது தான் ரவி வந்தான்.
வந்தவர்களை “வாங்க மாமா, வாங்க அத்தை” என்று சொல்லியவன் ஷர்மியை பார்க்க அவள் ஓரிடத்தில் அமர்ந்திருக்க, முகமும் வாட்டமாய் இருப்பது போல தோன்ற, அவளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். அமர்ந்தவன் அவளின் கையை யாரும் அறியாத வண்ணம் பிடித்துக் கொண்டு “என்ன?” என்பதாய் அவளை பார்த்து புருவம் உயர்த்த, அவனை பார்த்து முறைத்தவள் பின்பு திரும்பிக் கொண்டாள்.
“என்ன ஆச்சு? நம்ம அம்மா எதுவும் சுதப்பிச்சோ?” என்று தான் ரவிக்கு தோன்ற, உண்மையில் அது தான் நடந்திருந்தது.  
பிறகு உணவு உண்ண அழைக்க, ரவியின் அப்பா, ரவி, கேசவன், விசாலி அமர.. சீதா ஷர்மியையும் அமர்ந்து கொள்ள சொல்ல,
“சந்தோஷ் வருவான் அவனோட சாப்பிடறேன்” என்று முடித்துக் கொண்டாள்.
அவள் சொல்லி சிறிது நேரம் கழித்தே சந்தோஷ் வந்தான், எல்லோரும் பாதி உணவில் இருந்தனர். சந்தோஷ் வரவுமே சீதா “நீயும் வந்து உட்காருப்பா” என,
ரவி அம்மாவை முறைக்க, கௌசல்யா வாய் திறந்தே சொன்னாள், “அண்ணி தான் அவங்க அண்ணாவோட சாப்பிடறேன் சொன்னாங்க தானே, நீ எல்லோருக்கும் பரிமாறு மா” என்று சொல்ல.. பிறகே விட்டார்.
சந்தோஷ் சென்று ஷர்மியின் பக்கம் அமர்ந்தவன் “ஏன் பேபி டல்லா இருக்க” என்று கேட்க,
என்னவோ சந்தோஷ் கேட்கவும் அழுகை வரும் போல தோன்ற “இருடா  அண்ணா வர்றேன்” என்று சொல்லி அவளின் ரூம் உள்ளே சென்று விட்டாள்.
இவர்கள் உணவு உண்டு முடிக்கும் வரை வரவில்லை.
உண்டவுடன் அவர்களின் அறைக்குள் ரவி விரைந்து செல்ல, அங்கே கண்டது தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்த ஷர்மிளாவை தான்.
“ஷர்மி என்ன?” என்று பதறி ரவி அருகில் செல்ல,
“நீ போடா, நீ வராத போடா” என்று அவனை திட்டிக் கொண்டே அவன் அருகில் சென்றதும் அவனை கட்டிக் கொண்டு இன்னும் அழ,
“என்ன ஷர்மி? என்னடா? சொன்னா தானே தெரியும், எதுவும் வலிக்குதா?” என்று ரவி கேட்க,
“ம்ம், வலிக்குது” என்று சொல்ல,
“எங்கே?” என்று இன்னும் பதறியவனிடம்,
“இங்கே” என்று நெஞ்சை தொட்டுக் காட்ட,
“அங்கேயா ஏன்?” என்று அவன் அதனை தொட்டு ஆராய விழைய,
“பக்கி” என்று அவனை தள்ளி விட்டவள், “இப்படி தான் என்னவோ செஞ்சு என்னை மயக்கி வெச்சிருக்கிற, தூரப் போ” என்று கோபப்பட்டவள்,   
“என் மனசு வலிக்குது” என்று சொல்ல,
“என்ன ஆச்சு சொன்னா தானே தெரியும்” என்றான் பொறுமையாக.  
“அம்மா வீட்ல தான் பிரசவம் பார்க்கணுமாம், வளைக்காப்பு முடிஞ்சு கூட்டிட்டு போனா பின்ன குழந்தை பிறந்த பிறகு தான் இங்க வரணுமாம், உங்க அம்மா சொல்றாங்க, அது தான் வழக்கமாம்” என்று சொல்ல,
“ப்ச்” என்று சலித்தவன் “இந்த அம்மாவோட” என்று முனகி,
“வளைக்காப்பு அவங்க நடத்தினா தானே, அது நடக்கவே வேண்டாம், நாமளே செஞ்சிக்கலாம், வா” என்று சொல்லி, “சும்மா அழுவியா நீ எதுனாலும் என்கிட்டே சொல்லணும்” என்று அதட்டினான்.
“என்ன சொல்லணும், அவங்களுக்கு தெரியாதா? நான் அங்க வீட்ல எங்கப்பாவோட மனைவி கிட்ட பேச மாட்டேன்னு, எல்லாம் உன்னால தான், நீ கல்யாணம் ஆன அன்னைக்கே என்னை விட்டுட்டு போனதால தான் எல்லோருக்கும் இப்படி தைரியம். எல்லாம் உன்னால போ, போ” என்று அவனிடம் சண்டையிட,
அம்மாடி இவள் இதை விடவே மாட்டாள் என்று நன்கு புரிந்தவன், அதனை விட்டு அவளை சமாதானம் செய்ய முயன்றான்.  என்ன சமாதானம் சொல்லியும் சமாதானமாகவே இல்லை.
சந்தோஷ் அதற்குள் என்னவோ என்று பார்க்க மேலேறி வந்து விட்டவன் அவர்களின் ரூம் கதவை தட்ட, எட்டி பார்த்தவன் “வா சந்தோஷ்” என,
சந்தோஷை பார்த்ததும் இன்னும் அழுகை பொங்கியது. “என்ன பேபி? என்ன ஆச்சு?” என்று பதறி அவளின் அருகில் செல்ல,
“எனக்கு இவன் வேண்டாம் போ, இவனால தான் எல்லாம்” என்று அழ,
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவன் திகைத்து விழித்தான். அப்போதும் ரவி எதுவும் செய்து விட்டானோ என்று எண்ணவில்லை.
“என்ன ஆச்சு மாமா?”  
“ஒன்னுமில்லை நான் பார்த்துக்கறேன், இப்போ முதல்ல உங்கப்பாவும் அம்மாவும் கிளம்புறாங்க, அவங்களை அனுப்புவோம்”  
“கண்ணை துடை முதல்ல” என்று அவளை அதட்டலிட்டு, அவளை முகம் கழுவ செய்து, அதனை துடைத்து, எதோ சிறு குழந்தைக்கு செய்வது போல செய்து அவளை ரூமின் வெளியே அழைத்து வந்தான்.
சந்தோஷ் அமைதியாய் எல்லாம் பார்த்திருந்தான். என்னவோ மனம் நிறைவாய் உணர்ந்தது.
“முகத்தை சிரிச்ச மாதிரி வெச்சிக்கற, என்னை மூஞ்சின்னு திட்டுற மாதிரி முகத்தை வெச்ச பிச்சுடுவேன்” என்று மிரட்டி அழைத்து வந்தான்.
பின்பு அவர்கள் விடை பெற “என்னடா முகம் வாடி தெரியுது” என்று கேசவனும் கேட்க,
“ஒண்ணுமில்லை டயர்டா இருக்குப்பா”  
விசாலி வேறு “நான் வேணா முன்ன போறேன், நீங்க பேசிட்டு வாங்க” என்றாள், ஒரு வேளை தன்னால் தானோ என்று நினைத்து சொல்ல,
இப்போது ஷர்மிளா அவரை நேரடியாய் முறைத்து பார்த்தாள்.
அவர் பயந்து என்னவோ ஏதோவென்று “நான் கிளம்புறேன்” எனவும்,
மகளின் செய்கையில் கேசவனுக்கு என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை.
இப்போது ஷர்மி ரவியை முறைக்க,
“அவளுக்கு என்னவோ மூட் அப்செட் என்மேல், நீங்க எங்கேயும் இல்லை, நீங்க டென்சன் ஆகி என்னையும் பண்ணாதீங்க. ப்ளீஸ் உட்காருங்க” என்றான்.
“என்னடா பண்ணின அவளை, அழுத மாதிரி இருக்கா” என்று சீதா சீறிப் பாய,
“அம்மா, நீ கொஞ்சம் நேரம் பேசாம இரு” என்று பொறுமையாகவே சொன்னான்.
“நீ என்னடா பண்ணின” என்று மீண்டும் அதட்ட,
“ம்ம், என்னை விட்டு அவளை போகக் கூடாதுன்னு அதட்டினேன். நீ அஞ்சு மாசம் அவளை அனுப்பிவியா” என அவள் சொன்னதை அவன் சொன்னதாக பேச,
“ஏண்டா, அம்மா வீட்டுக்கு போய் அக்கடான்னு இருந்துட்டு வரட்டும் டா. விசாலி நல்லா கவனிச்சிக்குவா” என்று அப்போதும் சீதா பேச,
“நீ எங்கம்மாவே இல்லை, மங்கம்மா” என்று மனதிற்குள் நினைத்தவன் அவரை முறைத்து பார்க்க,
அவரை தவிர அங்கிருந்த அனைவருக்குமே இது ஷர்மிளா தான் சொல்லியிருப்பாள் என்று புரிந்தது.
கேசவன் அவராகவே “அதுக்கு எதுக்கு விட்டுட்டு இருக்கணும், ரவி நீங்களும் அங்கேயே வந்துடுங்க” என்றார்.
“அதுதானே நீயென்ன அங்க இருக்காதவனா, அங்கே தானே அத்தனை வருஷம் வேலை செஞ்ச, நீயும் அங்க போய் இருந்துக்கடா” என்று சொல்ல
ரவி கடுப்பின் உச்சிக்கு செல்லப் போக..
“அச்சோ, அன்று போல இன்றும் கோபித்து நம்மை விட்டு செல்லப் போகிறான்” என்று ஒரு நொடி பயந்து விட்ட ஷர்மிளாவின் கண்களில் நீர் கரகரவென்று இறங்க,
அவளையே கவனித்து இருந்த சந்தோஷ் “என்ன பேபி, என்ன பண்ணுது, ஏன் அழற?” என்று கேட்க,
வேகமாக அவளின் புறம் திரும்பிய ரவி அவளை பார்த்ததும்,
“ஷர்மி” என்று வேகமாய் ஒரு அதட்டலிட,
“இல்லை, நான் அழலை” என்று சொல்லும் போதே ஷர்மி தேம்பி விட,
“ப்ச், நீ வா” என்று அவளை கை பிடித்து அவர்களின் ரூமின் உள் அழைத்து சென்றான்.
சந்தோஷிற்கு பொறுக்கவேயில்லை, பெரியவர்களிடம் எப்போதும் மரியாதையாக பேசுபவன், இன்று சீதாவிடம் “அத்தை நீங்க எப்பவுமே இப்படி தானா” என்று சலிப்பாய் சொல்லி,
“பா, நீங்க கிளம்புங்க, அவ சரியாகிடுவா, மாமா பார்த்துக்குவார்” என்று சொல்லி கேசவனையும் விசாலியையும் கிளப்பி, அவர்கள் சென்றதும், என்ன உணவு இருக்கிறது என்று பார்த்து, அதை ஒரு ப்ளேட்டில் வைத்து ஷர்மிளாவிற்காய் எடுத்து சென்றான்.
“பாருடி இந்த கூத்தை, அவ எதுக்கு அழறான்னே தெரியலை, உங்கண்ணன் தான் தாங்கறான்னா, அவ அண்ணன் அதுக்கு மேல தாங்கறான். வந்தவங்க என்ன நினைப்பாங்க, நான் ஏதோ கொடுமை பண்றேன்னு நினைக்க மாட்டாங்க” என்று பேச
“பின்ன நீதான் பண்ற, அண்ணி அவங்க அம்மா வீட்டுக்கு போக விரும்ப மாட்டாங்கன்னு தெரிஞ்சும் நீ சொல்லலாமா”  
“சொன்னா என்னடி? விசாலி நல்ல மாதிரி, இவ தான் முறுக்கிட்டு திரியறா, அவங்க கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகப் போகுது, இன்னுமா முகத்தை தூக்கி வைப்பா, அவளும் மனுஷி தானே”  
“ம்ம், நீ இப்படி ஒரு பஞ்சாயத்தை பேசு, அண்ணன் வந்து நீ முதல்ல ஊருக்கு கிளம்புன்னு துரத்த போறான்” என்று கௌசல்யா பேச,
“என்னை துரத்திடுவானா அவன்?” என்று அதற்கும் சிலுப்ப,
“நீயெல்லாம் அடங்க மாட்ட, எப்படியோ போ” என்று சலித்து கௌசல்யா அவளும் அண்ணியை பார்க்க சென்று விட்டாள்.
எதுவும் பேசாமல் ரவியின் அப்பா எல்லாம் பார்த்திருக்க, “நீங்களும் ஏதாவது சொல்லுங்க” என்று நொடித்தார்.
“என்ன சொல்ல? அதுதான் கேப்பே விடாம நீயே பேசிக்கிற, நீ பண்ற கலாட்டால ஷர்மிளாக்கு குழந்தை பிறக்கற வரை நீ இங்க எட்டி பார்க்காதன்னு ரவி சொல்லப் போறான்”  
“சொல்லிடுவானா அவன்?” என்று அதற்கும் சிலுப்ப,
அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். 
அங்கே ஷர்மிளாவை சமாதானப் படுத்த என்ன முயன்றும் ரவியால் முடியவில்லை. தேம்பியபடி தான் இருந்தாள்.
அந்த அழுகை ரவியை விட்டு அவளால் இருக்க முடியாது என்றதினால் வந்த அழுகை, அவன் எவ்வளவோ செய்தும் என் மனம் ஏன் இப்படி நினைக்கிறது என்றதினால் வந்த அழுகை! விசாலி இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்பது கூட இரண்டாம் பட்சம் தான்.  
அவளை அதட்டி உருட்டி ரவியும் சந்தோஷும் சாப்பிட செய்ய..
“எத்தனை நாள் நான் சாப்பிடாம இருந்திருக்கேன், அழுதிருக்கேன், என்னையெல்லாம் யாரு திரும்பி பார்த்தா, சாப்பிட்டனான்னு கூட யாரும் பார்க்க மாட்டாங்க, புருஷனும் பார்க்கலை, புள்ளையும் பார்க்கலை, இவ குடுத்து வெச்சவ, எல்லோருக்கும் அந்த கொடுப்பினை கிடைக்கறது இல்லை” என்று அதற்கும் சீதா சொல்ல
உண்மையும் வீடுகளில் அதுதானே!          
       
  
               
        

Advertisement