Advertisement

அத்தியாயம் பதினைந்து:
“எனக்கு தெரியாம வந்த ஒன்னு ரெண்டு மாப்பிள்ளையும் பெரிய சொத்தை”
“உங்கப்பா கிட்ட உன்னை பொண்ணு கேட்டேன், அவர் மதிக்கவேயில்லை, அது இன்னும் ஆத்திரம் கொடுத்துச்சு”
“எங்கம்மா கிட்ட பொண்ணு கேட்க சொன்னேன். உனக்கு அந்த தகுதியில்லை, வேலைக்கு போனவன் எல்லாம் ஆசைப் படக் கூடாது சொன்னாங்க. அது இன்னும் வெறி கிளப்பிச்சு”
“இதுல வர்ற மாப்பிள்ளைக்கு என்னோட ஃபாக்டரி பார்ட்னர்ஷிப் பேச, இன்னும் வெறி வெறியா வந்துடுச்சு, நான் யார்ன்னு காண்பிக்க நினைச்சேன், காண்பிச்சேன், உன்னை கல்யாணத்துக்கு தானா ஒத்துக்கற மாதிரி செஞ்சேன், இப்போ நீ என் கைல இருக்க” என்று சொன்னவன் சொல்லி முடித்த திருப்தியில் சில நிமிடங்கள் மெளனமாக,
பெல் அடித்தது, உணவு வந்திருக்கும் என்று புரிந்தவனாக அவனை அணைத்து இருந்தவளை குனிந்து பார்க்க உறங்கியிருந்தாள். “என்ன தூங்கிட்டாளா? நான் பேசினதை கேட்டாளா இல்லையா?” என்று தோன்ற,
இதோ மூன்று மாதம் ஆகிவிட்டது இன்னம் அவனுக்கு தெரியாது தான் பேசினதை முழுதாய் கேட்டளா என்று.
“நான் பேசினதை கேட்டியா” என்று சில முறை கேட்பான்.
முழுதாய் கேட்டிருந்தாலும் அவனிடம் அதை காண்பிக்கவில்லை, “எதுவரை கேட்டேன் எப்போ தூங்கினேன்னு தெரியலை” என்பாள்.
ஆம்! தெரிந்த மாதிரி காண்பித்து கொள்ள விருப்பமில்லை. நடந்ததை மாற்றவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது, தன்னுடைய திருமணம் தடை பட்டதற்கு அவன் தான் காரணம் என்று புரிந்தது. அதை தெரிந்த மாதிரி காண்பித்து பின் அவனோடு சகஜமாய் வாழ மனம் ஒப்பவில்லை, ஆனால் அவனில்லாமல் வாழவும் விருப்பமில்லை.
அதனால் தெரிந்த மாதிரி காண்பிக்கவேயில்லை!
மீண்டும் அவன் பேச வந்த போது “இது என்ன ஹிஸ்டரியா நான் தெரிஞ்சிக்க, கல்யாணமே முடிஞ்சிடுச்சு, இன்னும் தெரிஞ்சு என்ன பண்ண?”
“அது உன்னை ஏன் கல்யாணம் பண்ணினேன்னு?” 
“இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் நம்மை பிடிச்சிருக்கு, விட்டுட்டு இருக்க முடியாதுன்னு ஒரு ஃபீல் இருக்கு, போதும் விடு” என்று விட்டாள்.
பின் அதனை பற்றி நினைப்பதுமில்லை, நினைவில் வர ரவீந்திரன் விடவில்லை, பெயரில் இருந்து இந்திரனுக்கு ஏற்ப மன்மதனாய் தான் இருந்தான்.
“நீ ரொம்ப கெட்ட பையன்” என்ற வார்த்தை அவளின் வாய் மொழியாக அடிக்கடி வரும், ஆனால் அது செல்லமாயும் வரும் அலறலாயும் வரும்.
இத்தனை உழைப்பை போட, பலன் அடுத்த மூன்று மாதத்தில் ஷர்மிளா குழந்தை உண்டாகினாள். இந்த ஆறு மாதங்கள் அவளுக்குள் நிறைய பொறுமை வந்து விட்டது.
மாலை அவள் அலுவலகத்தில் இருந்து வந்ததும் “சசிம்மா, நான் கொஞ்சம் நேரம் தூங்கறேன்” என்று சொல்ல,
“வெளக்கு வெக்கற நேரத்துல தூங்க கூடாதும்மா, கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இருங்க சாப்பிட்டு சீக்கிரம் தூங்கலாம்” 
“கொஞ்சம் நேரம்” என்று அவரிடம் சொல்லி சென்று படுத்துக் கொண்டாள்.
ஆம்! புது வீட்டிற்கு வந்திருந்தனர் பெரிய வீடு, சசிகலாவையும் ரமேஷையும் இங்கே வீட்டிற்கு அழைத்துக் கொண்டான், அவர்களுக்கு வேறு ஆட்கள் வேலைக்கு விசாலியின் அம்மா பார்த்துக் கொடுத்து விட்டார்.
இவனுக்கு புதிதாய் யாரையும் விட முடியாது, இப்போது வீட்டு கவலையின்றி, சமையல் கவலையின்றி இருக்கிறான்.
எட்டு மணிக்கு ரவி வந்த போதும் அவள் உறக்கதில் இருக்க,
“எழுந்துரு சாப்பிட்டு தூங்கு” 
எழுந்தவள் “எல்லாம் உன்னால தான்” என்று சிடுசிடுத்தாள்,
“என்ன என்னால?” 
“எது சாப்பிட்டாலும் வாமிட் வருது, டயர்டா இருக்கு” 
“அம்மாவை வரச் சொல்லட்டுமா”
“வேண்டாம், வேண்டாம், உங்க ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ண என்னால முடியாது. சண்டை போட மாட்டேன்னா கூட்டிவாங்க” 
“அது என்னால் முடியாது” 
“பசிக்குது” 
உணவு அவனே எடுத்து வர ஒரு வாய் உண்டதும் வயிற்றை பிரட்டி வந்தது. வாமிட் செய்து வந்தவளிடம், மீண்டும் சாப்பிடக் கொடுத்தான். மீண்டும் வாமிட் வர.. சோர்ந்து போனாள்.  
“இது எப்போ நிற்கும்”
“டாக்டர் சொன்னாங்க தானே, இன்னும் கொஞ்சம் நாள் சரியாகிடும்”
“எல்லாம் உன்னால தான்” என்று அவன் மீது கோபப்பட்டாள்.
“இதென்ன இப்படி ஒரு பொய், சில சமயம் டயர்டா இருக்கு விடுடின்னு சொன்னா, நீ விட்டிருக்கியா, அப்புறம் பேபி தான் ஃபார்ம் ஆகும்” என்று அவன் பேச,
தலையணை ஒன்று அவனை நோக்கி பறந்து வந்தது “இரு உன்னை பக்கத்துல விடறேனான்னு பாரு”
“சரி விடாத” என்று அசால்டாய் சொன்னான். பின்னே அவனில்லாமல் தூங்கவே மாட்டாள்.
அவளே சொல்லிக் கொள்வாள் “அம்மா பக்கத்துல கூட ஒரு வயசுக்கு மேல நான் தூங்கினதில்லை, எப்படி உனக்கு இப்படி அடிக்ட் ஆகிட்டேன் தெரியலை. நீ பக்கத்துல படுத்தா தான் தூக்கமே வருது” என்பாள்.
இப்படியாக அவர்கள் வாழ்க்கை சீராக சென்றது, அவனால் தான் தன் திருமணம் தட்டி போனது என்பதை மறந்தும் அவள் ஞாபகத்தில் கொண்டு வர வில்லை.
நான் எனது மனது என்று இருந்தவன் இப்போதும் அப்படித்தான் இருக்கிறான்.
நான் – ஷர்மிளா , எனது – ஷர்மிளா , மனது – ஷர்மிளா தான்!
அவளுக்கு மட்டும்மல்ல அவனுக்கும் அவளை விட்டு இருக்கவே முடியாது. இரவு உறங்கும் போது அருகில் நெருங்கி படுத்த ரவீந்திரனை “நீ பக்கத்துல வராத போ” என்று தள்ளி விட்டாள்.
“ஏண்டி சும்மா பக்கம் கூட படுக்க விட மாட்டியா”
“மாட்டேன் நீ என் ரகசியம் எல்லாம் சொல்ற”
“எந்த ரகசியம் சொல்றேன், இதையா சொன்னேன் இல்லை இதை சொன்னேனா?” என்று ஆரம்பித்து அவளின் செய்கைகளை பச்சை பச்சையாய் விளக்கி பேச,
“டேய், நீ இப்போ வாயை மூடு இல்லை கடிச்சு வைப்பேன்” 
அதற்காக தானே இந்த பேச்சே, அவன் வாயை மூடவில்லை, இவளும் கடித்து தான் வைத்தாள்! அவனின் அதரங்களை, என்னுடைய அந்தரங்கத்தை பேசாதே என்பது போல, ஆனால் மீண்டும் அங்கே ஒரு அந்தரங்கம் தான் ஆரம்பித்தது.
“நினைக்கவேயில்லை உன் பின்ன இப்படி சுத்துவேன்னு” என்று ரவி சொல்ல,
“நானும் தான் நினைக்கலை” என்று ஷர்மிளாவும் சொல்ல,
“நாங்களும் தான் நினைக்கவில்லை” என்று அவர்கள் இருவரின் மனதும் சொன்னது.
உண்மையில் அந்த நிமிடம் ஷர்மிளாவின் மனது மிகவும் நிறைவாய் தான் இருந்தது. அதற்காக நடந்ததை மன்னித்து விட்டாள் என்று சொல்ல முடியாது. ஆனால் மறக்க நினைத்தால் என்பது நிஜம். ஆனால் அதிலும் நடப்பது என்னவென்றால், மறக்க நினைத்தது கூட ஞாபகத்தில் வரவே இல்லை.
இதோ இந்த ஆறு மாத வாழ்க்கையில் ரவீந்திரன் என்ற மனிதன் இன்றியமையாதவனாகிப் போனான் என்பது வெகு நிஜம். அவனை காதலிக்கின்றாளா தெரியாது, அதை சொல்லிக் கொண்டதும் கிடையாது.
அவனில்லாமல் வாழ முடியாது என்பது கிடையாது, ஆனால் அவனில்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக் கூட பிடிக்கவில்லை.
இன்னும் “ஐ லவ் யூ” என்ற வார்த்தை பரிமாற்றம் இருவரிடமுமே இல்லை. ஷர்மிளாவும் சொன்னதில்லை ரவியும் சொன்னதில்லை.    
ஏதோ தன்னை பிடித்ததினால் இப்படி அதையும் இதையும் செய்து திருமணம் செய்து கொண்டான் என்பது வேறு. ஆனால் இந்த திருமணம் எதற்கு பழி வாங்கவா நான் சொன்ன வார்த்தைக்கு, அது மட்டும் அவளுக்கு புரியவேயில்லை.
ஏனென்றால் அப்படி எதுவும் நடக்கவில்லையே. வாழ்க்கையை அனுபவித்து தானே வாழ்கிறார்கள்.
இதோ காலையில் இன்னும் ஷர்மி படுக்கையில் இருக்க, நேரம் காலை எட்டு மணி என்று காண்பிக்க,
“எழுந்திரு ஷர்மி டைம் ஆச்சு” என்று சொல்லிக் கொண்டே குளித்து முடித்து, ஒரு வேஷ்டியும், கை வைத்த பனியனுமாய் இருந்தான் ரவி.
அவன் சாமி கும்பிடப் போகிறான் என்று அவன் அந்த உடையில் இருக்க தெரிந்து கொண்டவள் வேறு புறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.
ஆம்! அவனின் அரையடி ஷார்ட்ஸ் அவர்களின் படுக்கையறைக்குள் மட்டும் தான் என்றாகிவிட, ஏழு முறை உடை மாற்றியா வெளியே போக முடியும், அதுவும் முக்கால் ஷார்ட்ஸ் என்றாகிவிட, அதுவும் இரவு மட்டும் தான். காலையில் குளித்து முடித்ததும் அவனுக்கு இந்த உடை தான் என்று கட்டளையே பிறப்பித்து இருந்தாள் ஷர்மிளா.  
இப்படியாக மாறிப் போனான் ரவீந்திரன்.  
“நான் வர்றதுக்குள்ள நீ எழுந்திருக்கிற” என்று சொல்லிக் கொண்டே அவன் வெளியே செல்ல, சுகமாய் இழுத்து போர்த்திக் கொண்டாள். 
அதிக நேரம் வணங்க மாட்டான், பத்து நிமிடமே, வணங்கி அவன் வர, ஷர்மிளா மீண்டும் சுகமான உறக்கத்தின் பிடியில்.
முகம் மட்டுமே தெரிய, போர்வையை பிடித்து இழுக்க நினைத்தவனுக்கு அவளை பார்த்தும் அதற்கு மனமேயில்லை. அந்த வெண்ணிற மெத்தையில் வெண் பஞ்சு பொதிகையாய் தான் அவள் படுத்திருக்க, அங்கே கருமையாய் தெரிந்தது அவளின் குழல் மட்டுமே!
அவர்களுடன் ஏழு வருடங்கள் சேர்ந்து வசித்திருந்தாலும், இரண்டு வருடங்கள் அதி தீவிரமாய் அவளை திருமணம் செய்ய நினைத்திருந்தாலும், அவளின் தோற்றத்தை ரசித்து பார்ப்பது என்பது திருமணதிற்கு பிறகு தான். அதற்கு முன் கிடையவே கிடையாது. 
இன்று அப்படி ஒரு காலை பொழுதாகிப் போக ஷர்மிளாவை கொஞ்சத் தோன்ற படுத்து அவளை அணைத்துக் கொண்டான்..
அதில் ஷர்மியின் உறக்கம் களைய, அவனின் அணைப்பு அதுவும் காலை வேளையில், அப்படி ஒரு மகிழ்வு மனதினை முகிழ்த்த, பின்புறமாய் அவளை அணைத்து அவன் பிடித்திருக்க, வேகமாய் முன் புறம் திரும்பி அவனின் நெஞ்சினில் முகம் புதைத்து கொண்டவள், “இந்த பனியன் என்னை டிஸ்டர்ப் பண்ணுது, இருந்தாலும் பரவாயில்லை, நீ ரொம்ப வாசனையா இருக்க” என்று கட்டிக் கொண்டாள்.
அவளை அணைத்து படுத்திருந்த ரவி எதுவுமே பேசவில்லை! அந்த நொடியை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
சில நொடிகள் அவனின் அணைப்பை ஆழ்ந்து அனுபவித்தவள், “என்ன ஆச்சர்யம் காலையில நீங்களாவே இன்னைக்கு வந்து என்னை கட்டி பிடிச்சிருக்கீங்க, உலக மகா அதிசயம் இது” என்றாள் சற்று கிண்டலாக.
பின்னே அவனின் கொஞ்சல்கள் குலாவல்கள் எல்லாம் இரவு படுக்கையறைக்குள் வந்த பிறகு மட்டுமே. அதுவரை அவனின் வாழ்க்கை முறையை அப்படி ஒரு நேர்த்தியாய் கொண்டு செல்வான். மனது சிறிதும் அலைபாயாது.
காலை ஐந்து மணிக்கு எழுவது, பின்பு சில எளிய உடற் பயிற்சி, பின்பு என்னவோ பரீட்சைக்கு படிப்பவன் போல பேப்பரை படிப்பான், பின்பு டீ வீ யில் வர்த்தக செய்திகளை பார்ப்பான்.. பின்பு குளிப்பான், கடவுளை வணங்குவான், உணவு உண்பான், அலுவலகம் கிளம்புவான்.
இடையில் ஷர்மியை “எழுந்திரு, குளி, ரெடியாகு, டைம் ஆகுது” இப்படி தான் போகும்.
இதையும் விட, அலுவலகத்தில் “இவன் என் கணவனா?” என்ற சந்தேகம் எப்போதும் ஷர்மிளாவிற்கு வரும், ஏனென்றால் அவளிடம் அவனின் நடவடிக்ககைள் எல்லாம் அப்படி தான் இருக்கும்.
பின்பு மாலை ஐந்து மணிக்கு அவளை கிளப்பி, எட்டு மணிக்கு இவன் வந்து, ஒன்பது மணிக்கு மேல் இவர்களின் அறைக்குள் வரும் போது தான் அவனின் மன்மத பரிமாணம் எல்லாம். அதுவரை இவனா அவன் என்ற தோற்றம் தான்.
ஒரு முறை கேட்டும் கூட இருக்கிறாள் “ஹே, நீங்க என்ன ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டியா” என,
வாழ்க்கை, அதில் அவனின் இலக்கு முன்னேற்றம் மட்டுமே ஆகிப் போக, அந்த ஓட்டத்தில் அவன் இளைப்பாறும் இடம் ஷர்மிளாவாகிப் போனாள்.    
அதனால் தான் இன்று அவனாய் வந்து அணைக்கவும் “உலக மகா அதிசயம்” என்றவள் மீண்டும் அவனை வாசனை பிடிக்க,
“ம்ம், இந்த அதிசயம் எதனாலன்னா நீ எனக்கு முன்ன ஒரு நாள் கூட எழுந்ததில்லை. ஒரு நாள் கூட எனக்கு முன்ன குளிச்சதில்லை, ஒரு நாள் கூட என் முன்ன கலர்ஃபுல்லா வந்ததில்லை, இதெல்லாம் நடந்திருந்தா நான் உன்னை கட்டில்ல இழுத்து கூட போட்டு, கட்டி பிடிச்சிருப்பேன்” என்றான்.
“தோடா, ஒரு கட்டி பிடிக்கு இதெல்லாம் செய்யணுமா, நீ சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்ட, இப்படி எல்லாம் உன் மனைவி கிட்ட நீ எதிர் பார்க்கக் கூடாது”  
“வேணும்னா நீ டெய்லி குளிச்சு சாமி கும்பிட்டு வந்து நில்லு, நான் உன்னை கட்டிலுக்கு இழுத்து கட்டி பிடிச்சிக்கறேன்” என்று பாவனையாய் சொல்ல,
அப்படி ஒரு சிரிப்பு பொங்க, ரவி சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான்..
“டேய், என்னை கிண்டல் பண்ணி சிரிச்ச…” என்று ஷர்மி தலையை தூக்கி மிரட்ட மிரட்ட அப்படி ஒரு சிரிப்பு பொங்கியது ரவீந்திரனிற்கு.  
அந்த சிரிப்பு ஷர்மிளாவை கவர, மிரட்டலை விட்டு அவனை ரசித்து பார்க்க..
“ஆனாலும் அநியாயம் பண்ணறடி நீ” என்று சலுகையாய் அவளிடம் குறை பட்டான்.
“நீ என்னை கல்யாணம் பண்ண பண்ணின அநியாயத்தை விடவா” என்று அவளையும் மீறி சொல்லிவிட,
ரவியின் சிரிப்பு அப்படியே நின்று விட்டது.
ஷர்மிளா “அச்சோ” என்பது போல நாக்கினை கடிக்க,
“சோ, உனக்கு தெரியும். அன்னைக்கு நான் பேசினதை கேட்டுட்ட நீ” என்று சொல்லிக் கொண்டே அவளின் பற்களின் இடையில் கடிபட்டிருந்த நாக்கினை மெதுவாய் விரல்கள் கொண்டு பிரித்து விட்டான்.
அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் அவனுள் மீண்டும் முகம் புதைத்து இறுக கட்டிக் கொண்டாள்.
“ஷர்மி..” என்று அவளின் பதிலிற்காய் அவன் குரல் கொடுக்க,
“நாம இதை பத்தி இப்போல்ல எப்போவும் பேச வேண்டாம்” என்றவளின் குரல் ஸ்திரமாய் ஒலிக்க,
“இப்போல்ல ஆனா எப்போவாவது பேசணும்” என்ற ரவியின் குரலும் அவளையும் விட ஸ்திரமாய் ஒலித்தது. 
  
         
    
         
                  
                                         
              

Advertisement