Advertisement

அத்தியாயம் பதிமூன்று :
சந்தோஷும் வீட்டிற்கு வந்து விட, ஷர்மியும் சந்தோஷும் சலசலவென்று பேச, ரவி அதற்குள் இட்லி வைத்து தேங்காய் சட்னி செய்தான். இருவருமே அதை உண்பார்கள் என்று தெரியும். அவர்களின் உணவு முறை இவனுக்கு அத்துப்படி. அவனின் கண்காணிப்பில் தானே இருவரும். ஆனால் அப்போதெல்லாம் ஒரு முறை கூட ஷர்மிளாவை திருமணம் செய்ய நினைத்ததேயில்லை. 
ஷர்மிளாவின் பேச்சினில் எதோ ஒரு புள்ளியில் அது ஆரம்பித்து, அதில் தீவிரமாய் இறங்கி இதோ முடிந்து விட்டது.    
உணவை, அதற்கு தேவையானதை எல்லாம் ரவியே செய்து கொள்வான். அவனுக்கு சமைப்பது பிடிக்கும். ஆனால் இதுவரை யாருக்கும் செய்ததில்லை.       
அண்ணன் தங்கை இருவருமே கவனிக்கவில்லை, யாரோ சமைப்பதை தான் இதுவரை இருவருமே சாப்பிட்டவர்கள் என்பதால் அந்த நேரத்திற்கு சமையலறை செல்லவே அவர்களுக்கு ஞாபகமில்லை.
எல்லாம் அவன் டைனிங் டேபிளில் பரப்பி.. “சாப்பிட வாங்க” என, அப்போது தான் கவனித்தனர்.
“சாரி, நான் கவனிக்கலை, நான் வந்து ஹெல்ப் பண்ணியிருக்கணும்” என்றாள் சங்கடமாக.
“என்ன ஹெல்ப் பண்ணியிருப்ப, அடுப்பை பத்த வெச்சிருப்பியா” என்றான் சிரிப்போடு.
“அட ரவி, உங்க கைல லைட்டர் எடுத்து கொடுத்திருப்பா” என்றான் சந்தோஷ் இன்னம் சிரிப்போடு.
ரவி உள்ளே செல்லவும், “அவங்க உன்னை விட பெரியவங்க, கால் ஹிம் மாமா சந்தோஷ்” என்றாள் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக.
சந்தோஷ் “ஆங்” என்று பார்க்க,
“எஸ் ப்ராக்டிஸ் பண்ணிக்கோ” என்றவளிடம்,
“எப்படி நீ இப்படி மாறிட்ட” என்றான் சந்தோஷமாகவே.
“பின்ன சண்டை இழுத்து பிடிச்சு ஐ டோன்ட் வான்ட் டு காம்ப்ளிகேட் திங்க்ஸ், பட் இனிமே எதாவது பண்ணினான், தொலைச்சிடுவேன் அவனை” என,
“ஓய் பேபி, என்னை சொல்லிட்டு நீ மரியாதை இல்லாம பேசற”
“நான் இபோ தான் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்” என்று சொல்லி டைனிங் டேபிள் முன் அமர்ந்தாள்.
ரவி கையில் பொடி நல்லெண்ணையோடு வந்தவன் “தண்ணி எடுத்து வை” என்று ஷர்மிளாவை சொல்ல,
“இதோ” என்று அதனை மட்டும் எடுத்து வந்தவள் அமர,
பின்பு உண்டு முடித்து சந்தோஷ் கிளம்பும் போது, “அங்க லோன்லியா ஃபீல் பண்ணினா இங்க வந்துடு டா அண்ணா” என்றாள்.
“என்ன இது?” என்று தங்கையின் தலையை பிடித்து ஆட்ட,
“இது இவர் வீடு மட்டுமில்லை எனக்கும் தான் வந்துடு, இங்க இன்னொரு ரூம் கூட இருக்கு. நீ இருந்துக்கலாம், இல்லை உனக்கு சௌகரியமா இல்லைன்னா பெரிய வீடு கூட போயிடலாம்”
“வந்தவுடனே அவருக்கு செலவு வைப்பியா என்ன?”
“ம்ம், கொஞ்சம் நேரம் போற காரே ஒன்னே கால் கோடியாம், வீடு மாத்த மாட்டாங்களா? அதெல்லாம் மாத்துவாங்க, நீ வந்துடு” என்று கட்டாயப் படுத்துவது போல பேசினாள்.
ஒளித்து மறைத்து எல்லாம் பேசவில்லை அங்கே தான் ரவீந்திரனும் இருந்தான்.
திருமணம் தான் இப்போது, ஆனால் ரவி ஒன்றும் அவர்களை தெரியாதவன் அல்ல, அவர்களும் ரவியை தெரியாதவர்கள் அல்ல, பலவருடமாய் தெரிந்தவன், வீட்டினுள் தினமும் பார்த்தவர்கள்.
அதனால் அவனை பற்றி பேசுவதற்கும் தயக்கமில்லை, சந்தோஷிடம் அவன் முன் பேசுவதற்கும் தயக்கமில்லை.
ரவீந்திரனுக்கு தோன்றியது இது தான், “தோடா, கல்யாணத்துக்கு முன்னமே நான் அங்க இருந்தப்போ அவ்வளவு செலவுக்கு பணம் கேட்பான். இப்போ பணத்துக்கு யோசிக்கிறான், மாறிட்டானா, இல்லை பணம் இவங்கப்பா கொடுக்கறதில்லையா?” என்ற ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.         
“நானும் வந்துட்டா அப்பா ஃபீல் பண்ணுவார்” என்று தங்கையிடம் சொல்ல,   
“அதெல்லாம் பண்ண மாட்டார், நீ தனியா நினைக்கும் போது இங்க வந்துடு சரியா” என்றாள் பெரிய மனுஷியாய்.
“சரி” என்று தலையசைத்து சந்தோஷ் கிளம்ப,
அவன் சென்றதும் “நான் அவனை கூப்பிட்டேன், உங்களுக்கு பிரச்சனையில்லையே”  
“அது கூப்பிடும் முன்ன கேட்டிருக்கணும்” என்று புன்னகைத்தவன்,
“உன்னை விட பிரச்சனை எனக்கெதுவுமே இல்லை. என்னை நல்லவனாக்கறதும் நீதான், கெட்டவனாக்கறதும் நீதான்” என பேச,
“தோடா, என்ன சினிமா டையலாக் இது”
“நம்மளோடது தான்” என்று சொல்லி உள்ளே வர, அவனோடு அவளும் வந்தாள். அதுவரை படுக்கையறை உள் அவள் வரவில்லை.. மிக பெரிய கட்டில். நேற்று இரவும் அருகில் தான் படுத்தனர். ஆனால் அழுத அழுகையில் அது அவளின் கவனத்தில் இல்லவே இல்லை..
அவள் அந்த யோசனைகளில் இருக்க..
“சந்தோஷ்க்கு பணம் எதுவும் தேவையா? என்ன செலவு செய்யறான்? யாரோட பழகறான் எல்லாம் பார்த்துக்கோ, முன்ன விட அவன் பொறுப்பு தான் இப்போ. ஆனாலும் பார்த்துக்கோ, எல்லோரையும் சட்டுன்னு நம்பிடுவான், உன்னை மாதிரி ஷார்ப் கிடையாது. உங்கப்பா எல்லாம் பார்ப்பாரா தெரியலை. நான் இருந்தப்போ உங்களை எல்லாம் பார்த்ததில்லை, இப்போ எப்படின்னு தெரியாது, நாம் தான் பார்க்கணும்” என்று சொல்லவும்..
அவனை பார்த்தவள் “இவ்வளவு அக்கறை இருக்குறவங்க, எதுக்கு அவ்வளவு ட்ரபிள் கொடுத்தீங்க”
“நீ எனக்கு வேணும்னு நினைச்சேன், அதனால் தான் அந்த ட்ரபிள் , மத்தபடி நீங்க நல்லா இருக்க கூடாதுன்னு நினைச்சு எல்லாம் பண்ணலை, நிஜம்மா எல்லாம் சரி பண்ணிட்டேன், பார்ட்னர் ஷிப் கூட திரும்ப குடுத்துட்டேன், அது ஷர்மிக்குன்னு உங்கப்பா சொன்ன போது கூட இருக்கட்டும், அப்புறம் பார்த்துக்கலாம் சொல்லிட்டேன். இதெல்லாம் நமக்கு ஒண்ணுமில்லை, இன்னும் என்னோட தூரம் எங்கயோ இருக்கு” என்று கண்களில் கனவுகளோடு பேசினான்.
“பார்றா, பக்கதுல இருக்குற நான் கண்ணுக்கு தெரியலை, தூரமா இருக்குற ஒன்னை பேசறான். பெட்ரூம்க்கு கூட்டிட்டு வந்துட்டு என்னை பார்க்காம பிசினெஸ் பார்க்கறான் இவனை என்ன சொல்ல” என்று மனதிற்குள் நினைத்தவள் சிரித்து விட,  
“எதுக்கு சிரிக்கிற? என்னால முடியாதுன்னா?” என்று ரவி, ஷர்மி கிண்டல் செய்வதாய் நினைக்க,
“இல்லையில்லை, வேற ஒன்னு” என்று அவள் இன்முகமாகவே சொன்னாள்.    
“என்ன சொல்லு?” என்றவனிடம்,
“கண்டிப்பா சொல்றேன், ஆனா இப்போ இல்லை” என்று பேச,      
“நீ தூங்கு” என்று சொல்லி விளக்கணைத்து வெளியே வந்தான்.
அடுப்படியில் எல்லாம் ஒதுங்க வைத்து பாத்திரம் கழுவ போட்டு வந்தவன், “பால் குடிக்கிறியா” என்று கேட்க, அவளுக்கு பாத்திரம் எல்லாம் ஒதுங்க செய்ய வேண்டும் என்பது ஞாபகத்தில் கூட இல்லை, அமைதியாய் படுத்திருந்தாள்.
“ம்ம், வேண்டாம், நிறைய சாப்பிட்டுட்டேன், வயிறு ஃபுல்”, உடை கூட மாற்றவில்லை.. நேற்று அழுத அழுகையின் அலுப்பு இன்னுமே இருந்தது.
ரவி உள்ளே வந்தவன் ஒரு அவசரக் குளியல் போட்டு வர.. அன்றாவது முட்டி தொடும் ஷார்ட்ஸ் போட்டிருந்தான், இன்று அந்த ஷார்ட்ஸ் தொடை வரை மட்டுமே இருக்க, பார்த்தவள், “என்ன டிரஸ் இது?” என்று முகம் சுளித்தாள்.
“ஏன் இதுக்கென்ன?”
“ஆறடி இருக்க, இதுல அரையடிக்கு ஒரு டிரெஸ்ஸை போட்டு உடம்பை மறைச்சிட்டு, இதுக்கென்ன கேட்டா நான் என்ன சொல்ல முடியும்”
“அட இது நம்ம பெட்ரூம், நீ என் மனைவி, இதுல முழு டிரஸ்லயா சுத்த முடியும்”
“அதெல்லாம் முடியாது, எனக்கு கூச்சமா இருக்கு, நீ முதல்ல டீ ஷர்ட் போடு”
“அட என்ன கொடுமை இது, உன்னை அரை குறையா சுத்த விடறேன் என் முன்ன” என்று முனகிய போதும் தப்பாமல் செய்தான்,
“என்ன? என்ன சொன்னீங்க?”
“ம்ம், உன்னை என்னை மாதிரி சுத்த விடறேன்னு சொன்னேன்” என்று அவன் சொன்ன போது அவன் டீ ஷர்ட் அணிந்து முடித்திருக்க,
“ம்ம், இது ஓகே” என்றாள்.  
அவனுக்கு சிரிப்பு வந்தது. “இதுக்கே இப்படின்னா மத்ததெல்லாம் எப்படி?”
“ம்ம், முதல் ராத்திரில சொல்லாம கொள்ளாம ஓடிப்போனவன், மத்தது பத்தி எல்லாம் நினைக்ககூடாது”  
“அதுலயே தெரியலையா? நான் உன்னை அதுக்காக கல்யாணம் பண்ணலைன்னு”
“அது தான் எனக்கு தெரியுமே, தோ இப்போ கூடத் தெரியுதே” என்று மனதிற்குள் நினைத்தவள் வெளியில் “வேற எதுக்காக கல்யாணம் பண்ணுனியாம், ஓஹ் ஒரு வேளை எனக்கு கல்யாணம் ஆகலைன்னு வாழ்க்கை கொடுத்தியோ” என்று அவள் கிண்டலாக சொன்னாலும் அதில் இருந்த வலி புரிய,
“உனக்கென்ன வயசு, இருபத்தி மூணு, இதெல்லாம் கல்யாணமாகலைன்னு ஃபீல் பண்ற வயசா என்ன?” என்றான் தன்மையாகவே.
“அது எனக்கு தெரியாது, ஆனா ரெண்டு வருஷமா எனக்கு இது பெரிய டார்ச்சர். மாத்தி மாத்தி மாப்பிள்ளைங்க, ஏன்னு ரீசன் தெரியாம ரிஜெக்ஷன், அப்புறம் எனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாம மாப்பிள்ளைங்க, இதுல அவங்க விசாலியோட என்னால ஒரே வீடு ஷேர் பண்ண பிடிக்கலை, எப்போடா வீட்டை விட்டு போவோம்னு”
“அதுக்காக கல்யாணம் நடக்கணும்னு நினைச்சேன். வீட்டை விட்டு வேலை தேடி கூட போகலாம். ஆனா அது அப்பாவை கீழ இறக்கி காட்டும். ரெண்டாம் கல்யாணம் பண்ணி பொண்ணை விட்டுட்டான்னு, அதனால் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகும், சில சமயம் இந்த மாப்பிள்ளைங்க வரும் போது” என்று மனதை சற்றும் மறையாமல் சொன்னாள். வேறு மாதிரி சொல்ல வேண்டும் என்றால் மனம் விட்டு பேசினாள். அவனிடம் அது தானாகவே வந்தது.

Advertisement