Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு :
காலையில் எழுந்து அவன் கீழே வந்த போது குளித்து முடித்து புடவை கட்டி சமையலறையில் இருந்தாள். என்ன? எதுவும் செய்யவில்லை, வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தாள். அவன் வந்து அமைதியாய் அமர, தாத்தா அவனிடம் “எப்போடா வந்த” என,
“நைட் வந்தேன் தாத்தா” என்றான்.
இவனின் குரல் கேட்கவும் இவனுக்கு காஃபி கலந்து ஷர்மிளாவிடம் அவனின் சித்தி கொடுக்க, அவளும் அமைதியாய் கொண்டு வந்து கொடுத்தாள். அவளின் முகத்தை பார்த்தாள் அழுதது நன்கு தெரிந்தது. ஆனால் அது மட்டுமே வித்தியாசம், பழைய நிமிர்வு வந்திருக்க அழுகை எல்லாம் ஓடியிருந்தது.
இவனின் மனதிலும் நேற்றிருந்த சலிப்பு சோர்வு எதுவுமில்லை, குற்றவுணர்ச்சியும் முன் நிற்கவில்லை. இவனுமே இயல்பாய் தான் இருந்தான்.   
காஃபியை வாங்கிக் கொண்டே “நாம சாப்பிட்டுட்டு ஊருக்கு கிளம்பலாமா?” என்றான்.
“நீங்க எப்படி சொன்னாலும் சரி” என்று முடித்துக் கொண்டாள்.
“அப்பாவை அம்மாவை, இல்லை சித்தி சித்தப்பாவை கூட கூட்டிக்கோடா, வந்து விட்டுட்டு வரட்டும்” என்று தாத்தா சொல்ல,
“இல்லை, தாத்தா வேண்டாம்” என்று மறுத்து விட்டான்.
“என்னடா உன் பிரச்சனை? உங்கம்மா வாய் உனக்கு தெரியாததா? நீயே அவளை கோபிச்சிட்டா எப்படி?”  
“ப்ச், விடுங்க தாத்தா, நாம அதை பத்தி இப்போதைக்கு பேச வேண்டாம்” என்றவன், வேகமாக குளித்து வந்து டிபன் உண்டு, கிளம்பிவிட்டனர்.
இரண்டு பெட்டியை தூக்க முடியாமல் தூக்கி வந்த சீதா அவனின் முன் வைத்தவர், “இதெல்லாம் ஷர்மிளாவோட நகை எடுத்துட்டு போங்க” என்றார்.
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, வந்ததிலிருந்து ஒரு வார்த்தை ரவி அவரிடம் பேசியிறாததால் அந்தக் கடுப்பில், “சரி பார்த்துக்கோ” என்று ஒரு எக்ஸ்ட்ரா பிட்டை போட, அவ்வளவு தான் அவனுக்கு வந்ததே கோபம்,
“ம்ம், பொட்டியை திறந்து என் தலையில கொட்டுங்க. என்னை உயிரோட கொல்ல தானே நீங்க இருக்கீங்க, எதுக்கு உங்களுக்கு இவ்வளவு பேச்சு. அது அவ நகைன்னா அவ கிட்ட குடுங்க, என்கிட்டே இல்லை. ஒத்தை பைசா கையில இல்லாம போய் இவ்வளவு சம்பாதிச்சவனுக்கு இந்த நகையெல்லாம் ஒரு விஷயமா?” என்று வேகமாய் சென்று காரில் அமர்ந்து கொண்டான்.
ஷர்மிளா சீதாவை பார்த்த பார்வையில் கொஞ்சம் கண்டனம் தெரிந்தது. “என்னோட நகை அவருக்கு எப்படி தெரியும்? ஏன் இப்படி பேசறீங்க அத்தை? அவர் என்ன செய்தாலும் பாதிக்கப் படப் போறது நான். கல்யாணத்துக்கு முன்ன நீங்க பேசலாம் உங்க பையன், இப்போவும் பேசலாம், உங்க பையன் தான். ஆனா என்னை வெச்சு பேசாதீங்க இந்த மாதிரி சண்டை போடும் போது, மனசுக்கு கஷ்டமா இருக்கு, இந்த மாதிரி ஏதோ ஒன்னு தான் அன்னைக்கு சொல்லாம கொல்லாம போனார். பின்ன இன்னைக்கு ஏன் சண்டை இழுக்கறீங்க!” என்றாள் எல்லோர் முன்னுமே.
இப்படி ஷர்மிளா பேசுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சீதா பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.
“இனிமே இப்படி பேசாதீங்க அத்தை, சீக்கிரம் ஊருக்கு வந்து அவரோட ராசியாயிடுங்க” என்று அழைப்பை வைத்து சென்றாள்.
“நீங்க அம்மா பையன் சண்டை போடுங்க, ஆனா என்னால, இல்லை என்னை முன் நிறுத்தி  சண்டை வரக் கூடாது” என்று ஸ்திரமாய் சொல்லி கிளம்பினாள்.
எல்லோருக்கும் மண்டையை உருட்டுவதை தவிர வேறு வழி இல்லை .. ஆம்! ஷர்மியினது எப்போதும் ஆளுமையான பேச்சு தானே!
திரும்பி காரின் அருகில் சென்றவள், “பொசுக்கு பொசுக்குன்னு கோபிச்சிகிட்டு வந்து உட்கார்ந்துட்டா, என்னோட பேகேஜஸ் எல்லாம் யார் தூக்கிட்டு வருவா. எனக்கு வெயிட் தூக்கி பழக்கமில்லை, அங்க இருக்குறவங்க எல்லாம் வயசானவங்க, இறங்கி வாங்க” என்று கறாரான குரலில் சொன்னாள்.
நேற்று இவளா தேம்பி தேம்பி அழுதாள் என்ற பார்வை பார்த்வனிடம், “அது நேத்தைக்கு இது இன்னைக்கு” என்றாள்.
“என்னோட பார்வை கூட உனக்கு புரியுதா?”  
“புரியும், ஆனா உங்களை நான் பார்க்க மாட்டேன்” என்று சொல்ல,
“திமிர்டி” என்றவனிடம் எதுவும் பேசாமல் திரும்பி நடக்க, வேறு வழியில்லாமல் அவனும் இறங்கி வந்தான்..
வந்தவன் “போயிட்டு வர்றோம்” என்று முகத்தை தூக்கி சொல்லிச் சொல்ல, ஒரு சின்ன சிரிப்போடும் தலையசைப்போடும் ஷர்மிளாவும் கிளம்பினாள்.
“பத்து நாள் நம்ம வீட்ல இருந்தா, ஆனாலும் அவளை என்னால புரிஞ்சிக்க முடியலை” என்று சீதா கணவரிடம் சொல்ல,
“உனக்கு புரிஞ்சா என்ன? புரியலைன்னா என்ன? அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டா போதும். ரொம்பவும் அவனோட சண்டை போடாதே. அப்புறம் ஊர் பக்கம் எட்டிப் பார்க்காம போயிடப் போறான். இன்னும் ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு நிக்கறா, அவன் தயவு நமக்கு வேணும். வயசான பிறகு நம்மை பார்த்துக்க ஆள் வேணும் ரொம்ப அவனை பேசாதே. ஷர்மிளா ரொம்ப தெளிவா தான் இருக்கா, அவனை பார்த்துக்குவா” என்றார் தந்தையாக.
“அப்போ, அப்போ என் பையன் எனக்கில்லையா” 
“ம்ம், பேசி பேசி துரத்திடவேண்டியது, அப்புறம் எனக்கு இல்லையா கேட்க வேண்டியது, வாயை மூடிட்டு இருடி முதல்ல” என்று வாசன் கடுப்பாக பேச,
“அடுத்த முறை அவன் என் கண்ணில் மாட்டட்டும், அவனை என்ன செய்கிறேன் பார்” என்று மனதிற்குள் நினைத்தவர் வெளியில் சொல்லவில்லை.
பின்னே ரவீந்திரனின் அம்மா என்றால் சும்மாவா!     
காரில் ஏறியதும் சீட்டை நன்றாய் சாய்த்து கண் மூடிக் கொண்டவள் தான், உறங்க ஆரம்பிக்க… சிறிது தூரம் சென்றதும் இரவு அவன் சரியாய் உறங்காததினால் உறக்கம் வரும் போல தோன்ற, தேசிய நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அவனும் சீட்டில் சாய்ந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் ஷர்மி கண் விழித்து பார்க்க கார் நின்று கொண்டிருந்தது “இதென்ன நிறுத்திட்ட” என்று சொல்லியவள் தானாகவே “நிறுத்திடீங்க” என்று சொல்ல,
“அவ்வளவு கஷ்டப்பட்டு நீ மரியாதை குடுக்க வேண்டாம்”
“இந்த மரியாதை உங்களுக்கு இல்லை எனக்கு, என் வீட்டுக்காரரை மரியாதையில்லாம பேசினா, எனக்கு அது அசிங்கம், அது நானா இருந்தாலும். தனியா பேசறது தான் எல்லோரும் இருக்கும் போதும் வரும். என்ன இந்த பொண்ணு இப்படி பேசுது இவங்கம்மா சரியா வளர்க்கலையோன்னு நினைக்கக் கூடாது இல்லையா?” என்று நீண்ட விளக்கம் கொடுக்க,
“அம்மாடி, உனக்கு ரொம்ப தொலைநோக்கு பார்வை” என்றான் கிண்டலாக.
“இப்ப எதுக்கு நிறுத்தின, இல்லையில்லை நிறுத்தினீங்க”
“நீ தூங்கற, எனக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கு, அதுதான் நிறுத்திட்டேன்” என்று சொல்லி கதவை திறந்தவன் இறங்கி நீரில் முகத்தை கழுவ, அவளும் இறங்கி நின்றாள். மொட்டை வெயில் கொழுத்தியது..
“நம்ம புது கார் நல்லா இருக்கா?” என்று வந்து கேட்க,
அப்போது தான் அதனை கவனித்தாள், “நல்லா இருக்கு” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொள்ள அவனுக்கு சப்பென்று ஆனது.
கூடவே “கதற விட்டு வேற வழியில்லாம கல்யாணம் முடிக்க வெச்சிருக்குற, இதுக்கு மேல நீ எதிர்பார்க்கறது அதிகம்” என்று மனதிற்கு சொல்லிக் கொண்டவன் சற்று சோர்ந்து போனான் தான். இதோ இந்த ஒன்பது வருடங்களாக அவனின் சாதனைகள் ஏராளம், ஆனால் பகிர்ந்து கொள்ள ஆள் கிடையாது, அவனை பாராட்ட ஆள் கிடையாது.
இந்த கார் அவனின் நீண்ட நாள் கனவு! திருமணத்தின் போது தான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தான்! அதுவரை எவ்வளவு பணம் இருந்த போதும் வாங்கவில்லை!   
தட்டிக் கொடுக்க ஆளின்றி, பாராட்ட ஆளின்றி, புகழ்ந்து பேச ஆளின்றி, ஆங்கீகரிக்க ஆளின்றி, ஒரு மனிதன் விடாமல் போராடுவது , முன்னேற்றம் வந்த பிறகும் விடாமல் முன்னேற்றத்தின் பின் பயணிப்பது, மிக மிக கடினம். அதனை சிறு மனசுணக்கமும் இன்றி செய்து கொண்டிருந்தான்.
இப்போது இத்தனை நாளில்லாமல் ஷர்மிளாவின் அங்கீகாரத்திற்கு மனம் விரும்பியது .  
முகத்தை அழுந்த துடைத்து கொண்டவன் காரில் ஏறி அமர, அவளும் அமர்ந்தவள் சீட்டை நேராக்கி உட்கார்ந்து கொண்டாள்.
“இல்லை, தூங்கறதான தூங்கு, இப்போ எனக்கு தூக்கமில்லை” என்று அவன் சொல்ல,
“இல்லை, பரவாயில்லை” என்றவள் “ஏதாவது பாட்டு போடுங்க” என,
“உனக்கு பிடிச்சதை போட்டுக்கோ, மொபைல்ல இருக்கு, சிஸ்டம் கூட  ப்ளுடூத் கனக்ட் பண்ணிக்கோ” என்று அவளிடம் மொபைலை கொடுத்து விட்டு அவன் சாலையில் கவனமாக..
“பூவாடைக் காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதாம் பூவெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே” என்று ஆரம்பிக்க..
ரம்மியமான ஒரு பயணமாய் அமைந்தது.   
ஆம்! ஷர்மிளாவிற்கு நல்ல ரசனை என்பதனை விட அது அவனோடு ஒத்துப் போயிற்று. எப்போதும் முன்னேற்றத்தின் பணத்தின் பின் ஓடிக் கொண்டே இருப்பவன். அவனுடைய ரசனைகளை எங்கோ அவனுள் புதைந்து போயிற்று.  
மதிய உணவிற்காய் ஒரு உணவகத்தில் நிறுத்த, “உனக்கு நல்ல ரசனை, நல்ல நல்ல பாட்டு போட்ட, எனக்கு ரொம்ப பிடிச்சது” என்று சொல்லிக் கொண்டே இறங்கினான்.  
“நீங்க கேட்க மாட்டீங்களா”
“ம்கூம், இல்லை, எப்போவாவது ரொம்ப வெக்ஸ் ஆகும் போது டீ வீ ல   ஏதாவது படம் மட்டும் பார்ப்பேன், அதுவும் மோஸ்ட்லி எனக்கு புரியாத மொழி பார்ப்பேன்”
“ஏன்” என்றவளிடம்,
“அப்போ தான் அந்த படம் என்னை பிடிச்சு வைக்கும், அதாவது அது புரியறதுக்காக அதையே பார்த்திட்டு இருப்பேன் இல்லைன்னா என் யோசனை எங்கேயோ பிசினெஸ்க்கு போயிடும்”
“அம்மாடி, பெரிய பிசினெஸ் மேக்னெட் மாதிரி ஒரு பில்ட் அப்” என்று மனதில் நினைத்ததை அப்படியே சொல்ல வேறு செய்ய.. ஷர்மிளாவின் பாவனையில் கிண்டல் இருந்தாலும் எப்போதும் போல அவனை அது மட்டும் தட்டும் கிண்டல் இல்லை. ஒரு விளையாட்டு பாவனை தான். அதனால் இந்த முறை அவளின் பேச்சு அவனை பாதிக்கவில்லை. 
சிரித்தவன் “கார் நல்லாயிருக்கான்னு கேட்டேன், அதோட விலை சொல்லலையே, ஒன்னே கால் கோடி, சொந்தமா வாங்கியிருக்கேன், லோன் கிடையாது, சொல்லு நான் பிசினெஸ் மேக்னெட்டா இல்லையா, உங்கப்பா கிட்ட கூட இவ்வளவு விலையில கார் கிடையாது”
“நான் உன்னை பிசினெஸ் மேக்னட்ன்னு கல்யாணம் பண்ணலை” என்றாள் முறுக்கியவளாக,
“அதுதான் தெரியுமே, பறக்க விட்ட பஞ்சை வந்து கூட்டுன்னு சொன்னதுக்கு தானே கல்யாணம் பண்ணின” என்றான் அசால்டாய். 
முறைத்தாலும் சிரிப்பும் கூட வந்தது ஷர்மிளாவிற்கு. அதற்குள் டேபிள் வந்து அமர்ந்தனர், “சொல்லு” என்று அவளின் புறம் மெனு கார்டை நகர்த்தினான், அவள் சொல்லி முடிக்க. “இது ரெண்டு பேருக்கு பத்தாதே” என்றான்.
“நான் எனக்கு மட்டும் தான் சொன்னேன், உங்களுக்கு பிடிச்சதை சொல்லுங்க”  
“எனக்கு அப்படி எதுவும் கிடையாது, எல்லாம் சாப்பிடுவேன், நீயே சொல்லு” என்று மெனுவை அவளின் புறம் நகர்த்தினான்.
உணவு வர நேரமாக.. “ம்ம், எப்படி உடனே கல்யாணத்துக்கு ஓகே சொல்லி எங்கப்பாம்மாவை வந்து பொண்ணு கேட்க சொல்லிட்ட.. ஒரு பஞ்சை சுத்தம் பண்ண சொன்னதுக்கு உடனே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்ட, இது தெரியாம நானும் வீணா என்னென்னவோ பண்ணிட்டேன் இல்லைன்னா முன்னையே இதை பண்ணியிருப்பேன்” என்றான் பாவம் போல.
“என்ன கொழுப்பா?”  
“ஹேய், நானெல்லாம் ஃபிட்டாக்கும், எங்க என் உடம்புல கொழுப்பிருக்கு பார்த்து சொல்லு” என்று வம்பு செய்தவன்,
“எதுக்கு அப்படி பஞ்சை பறக்க விட்ட” என்றான் சீரியசாக.  
“முதல்ல உங்களை நினைச்சு அந்த தலைகாணியை எட்டி உதைச்சு விட்டேன், அப்போவும் என் ஆத்திரம் அடங்கலை, அப்புறம் நீங்க குளிக்க போயிட்டீங்களா, கிட்சன் போய் கத்தி எடுத்து தலைகாணியை பஞ்சு பஞ்சா பறக்க விட்டுடேன்” என்று கதை சொன்னாள்.
“அப்புறம் வந்து சுத்தம் பண்ணச் சொன்னவுடனே, கல்யாணத்துக்கு ஏன் ஓகே சொன்ன? அந்த எட்டி உதைச்சதையும், கத்தி எடுத்து குத்தினதையும் என்கிட்டே வந்து செய்ய வேண்டியது தானே”
“பார்றா” என்று வியந்தவள் போல ஒரு பாவனை கொடுத்து,
“இது ரெண்டும் என்னால உங்க கிட்ட செஞ்சிருக்க முடியும், ம்ம்ம், இன்னும் நான் அவ்வளவு லூஸ் ஆகலை” என்றாள் பாவனையாக.
அவனும் விட்டேனா என்று “அப்போ எவ்வளவு லூஸ் ஆகிட்ட” என்றான்.
“ம்ம்ம், உங்களை கல்யாணம் பண்ற அளவுக்கு லூஸ் ஆகிட்டேன்” என்று பதில் கொடுத்தாள்.  
“உன்னை யாராவது பேச்சுல ஜெயிக்க முடியுமா?” என,
“அதுதான் நீங்க இருக்கீங்களே, சும்மா பேச்சு தான் நான், வெத்து வேட்டு” என்று அவளை அவளே சொல்லிக் கொண்டவள்.. பின்பு சீரியசாக பேச ஆரம்பித்தாள்.
“அது அப்பாவும் ரொம்ப அப்செட், சந்தோஷ் இன்னுமே அப்செட், ஆனாலும் அவங்க கொஞ்சம் நாள்ல நீ எல்லாம் நிறுத்திடுவன்னு நினைச்சு இருந்தாங்க, எனக்கு தோணிச்சு நீ நிறுத்த மாட்டேன்னு. அவங்களுக்காக மட்டும் தான் கல்யாணம் பண்ணினேன்”
“ஆனா என்கிட்டே இப்போ நல்லா பேசற, அந்த கோபம் எல்லாம் காமிக்காம”
“இனிமே காமிச்சா வாழ்க்கையில நான் தானே லூசர், எனக்கு லூசரா இருக்க வேண்டாம். ஆனா நீங்க செஞ்ச எதுலையுமே எனக்கு உடன் பாடு கிடையாது” என்றாள்.
“தெரிஞ்சிக்குவேன், நீங்க பண்ணின எல்லாத்தையும் தெரிஞ்சிக்குவேன். ஆனா எப்போன்னா, அது தெரிஞ்சாலும் நான் உங்களை விட்டு போக மாட்டேன்னு எனக்குள்ள ஒரு கான்ஃபிடன்ஸ் வருமில்லையா? அப்போ தெரிஞ்சிக்குவேன்!”
அவளின் இந்த பதில் ரவிக்கு அப்படி ஒரு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. கூடவே “சரி” என்று சொல்லி விட்ட பிறகு மனதளவில் மிகவும் தன்னை தயார் படுத்திக் கொண்டாள் என்று புரிந்தது.
“அந்த நாளுக்காக வெயிட் பண்ணிட்டே இருப்பேன்” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ஐ திங்க் உங்களுக்கு என்னை பத்தி நிறைய தெரியும், எனக்கு உங்களை பத்தி ஒன்னும் தெரியாது. ஆனா எனக்கு தெரிஞ்சிக்க அவசரமும் இல்லை” என்றாள்.
இந்த ஷர்மிளா அவனுக்கு புதிது.. திரும்ப ரவியும் எதுவும் பேசவில்லை.. உணவு வந்ததும் உண்டு கிளம்பிய பின் வீடு வந்து தான் நிறுத்தினான். மதிய பேச்சிற்கு பிறகு ஒரு பெரிய மௌனம் ஆட்கொண்டது.
“நான் சந்தோஷை பார்த்துட்டு வரட்டுமா? இவ்வளவு நாள் அவனை பார்க்காம இருந்ததில்லை. நீங்க என்கூட சரியா பேசலை, அதனால ஏதாவது உளறிடுவேன் அழுதுடுவேன்னு அவன் கிட்டயும் சரியா பேசலை”  
“முதல்ல இந்த பெட்டி எல்லாம் வீட்ல கொண்டு போய் வைப்போம், கல்யாணமாகி முதல் முதல்ல போகும் தனியா போகக் கூடாது.  சந்தோஷை வேணா வரச் சொல்லு” என்றான்.
“ஏன் நீங்க வர மாட்டீங்களா?”  
“அதுக்கெல்லாம் நல்ல நேரம் பார்க்க வேண்டாமா? எனக்கு தெரியலை!” என்று உதடு பிதுக்க,
“சரி பெட்டியெல்லாம் தூக்கிட்டு வாங்க” என்று அவள் ஃபோனை பேசிக் கொண்டே மேலே ஏற ஆரம்பித்தவள், சட்டென்று திரும்பி “நான் இதை வேலைக்காரனா நினைச்சு சொல்லலை, என் வீட்டுக்காரனா தான் சொல்றேன்” என்றாள்.
“உன்னை கல்யாணம் பண்ணனும் நினைச்சேன், பண்ணிட்டேன், இனி நீ என்னை என்ன பண்ணினாலும் எனக்கு பிரச்சனையில்லை” என்று சொல்லிக் கொண்டே அவன் பாட்டிற்கு தூக்கி கொண்டு மேலே ஏறினான்.
என்னவோ அந்த நிமிடம் அவளுடைய வாழ்க்கை சுவாரசியமாய் இருக்கும் என்று ஷர்மிளாவிற்கு தோன்றியது, கூடவே அவனின் செய்கைகளும் ஞாபகத்தில் வந்தது.. பிடிக்குமா பிடிக்காதா குழப்பம் சூழ..
“அண்ணா டேய், நான் சென்னை வந்துட்டேன், வா” என்று செல்லம் கொஞ்சினாள். ரவி அதை கேட்டுக் கொண்டே தான் அவளை கடந்தான்.
கடக்கும் போது பேகேஜ் தூக்கி நடப்பதால் இடம் போதாமல் அவளை உரசி கொண்டு ஏற, “என்ன இது உரசறீங்க” என்று மேலே வந்ததும் கேட்டவளிடம்,
“எப்படி உரசினேன், இப்படியா?” என்று மீண்டும் அவளைப் பிடித்து நிறுத்தி அவளை வேண்டுமென்றே மெதுவாய் இதமாய் பதமாய் உரசியவன் “அது ஏறும் போது இடம் பத்தலை” என்று சிரிப்போடு கூற,
“ஆங்” என்று பார்த்திருந்தாள்.    
         
       

Advertisement