Advertisement

அத்தியாயம் பதினொன்று :
ஒரு வாரம் ஆகிற்று திருமணம் முடிந்து, இன்னும் ஷர்மிளா இங்கே கும்பகோணத்தில் தான் இருந்தாள். மூன்று நாள் இருந்த உறவுகள் எல்லாம் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். நாள் அவ்வளவு உசிதமாய் இல்லாததினால் ஐந்து நாட்களுக்கு பிறகு தான் நன்றாய் இருந்ததினால், அன்று கொண்டுபோய் விடலாம் என்று முடிவெடுத்து இருந்தனர் வீட்டின் பெரியவர்கள்.
ஷர்மிளாவும் அவர்களோடு பொருந்த முயன்றாள், ஒட்டாத தன்மை முக சுணக்கம் என்று எதையும் காண்பிக்கவில்லை. உண்மையில் ஒட்ட முடியவில்லை. தனியாய் வளர்ந்தவளுக்கு அந்த சூழலோடு பொருந்த நாள் பிடிக்கும். நான்காம் நாள் நாளை கொண்டு போய் விடலாம் என்று முடிவெடுத்து “நாளைக்கு போகலாம்” என்று சொல்லிவிட,
“இல்லை, வேண்டாம், அவர் வந்து அழைச்சிட்டு போகட்டும்” என்று சொல்லிவிட்டாள். அவளின் குரலுக்கு யாராலும் மறுத்து பேச முடியவில்லை.
இந்த ஐந்து நாட்களும் ரவியும் அழைக்கவில்லை இவளும் அழைக்கவில்லை.. அவனும் “வா” என்று கூப்பிடவில்லை, இவளும் “ஏன் விட்டு போனாய்” என்று சண்டை பிடிக்கவில்லை.
சந்தோஷ் கேட்ட போது “இங்க வீட்ல பழகட்டும்னு விட்டுட்டு போயிருக்கார்” என்று முடித்துக் கொண்டாள். அதுவே கேசவனிடமும் சொல்லப்பட்டது. அவர்கள் எல்லாம் கூட்டு குடும்பம் எனும் போது அவர்களின் பழக்கம் என்று நினைத்து விட்டனர்.
ரவீந்திரனுக்கு மனது முழுக்க ஒரு குற்றவுணர்ச்சி, திருமணம் நன்றாய் நடந்து முடியும் வரை அது ஒன்றே குறிக்கொளாய் இருக்க, அதன் பிறகு அம்மா இப்படி பேசிவிட.. ப்ச் என்ன இது என்ற சலிப்பு வந்து விட்டது கூடவே திருமணதிற்காய் அவன் இறங்கி செய்த வேலைகள் அது அவனை வதைக்க ஆரம்பித்தது, அவனின் நியாய மனது அவனை எட்டி எட்டி உதைக்க ஆரம்பித்தது.
“ஒரு பெண்ணை உன்னால் காதலிக்க வைக்க முடியவில்லை, இவ்வளவு தில்லு முள்ளு செய்து அவளை திருமணம் செய்து கொண்டாய், நீ செய்தது சரியா.. அவளுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்பது வேறு.. உண்மையில் வேறு யாரையாவது பிடித்திருந்தால், அதையும் விட வளர்த்து விட்ட கேசவனை நீ வஞ்சித்து இருக்கிறாய், அவரின் மகளுக்கு திருமணம் செய்ய விடாமல்” என்று மனசாட்சி உதைக்க, இப்போது அப்படி ஒரு கோபம் அவனுக்கு அவன்மீதே வந்தது.
ஆனாலும் இந்த யோசனைகள் ஓடினாலும் ரவீந்திரனுக்கும் தலைக்கு மேல் வேலை இருந்தது. அவன் சீர் குலைத்ததை எல்லாம் சீர் செய்து கொண்டிருந்தான். அதனால் முதலில் இதனை சரி செய்து விடுவோம் என்று பேயாய் உழைத்து கொண்டிருந்தான்.
பத்து நாட்கள் பேப்பர் ஃபாக்டரியில் எல்லாம் சரி செய்து விட்டான். பண பரிவர்த்தனை எல்லாம் சரி செய்து விட்டான். முறுக்கு கம்பிகளின் ஃபாக்டரியில் கேசவனின் பங்கை சரி செய்து அதற்குரிய தாஸ்தாவேஜூகளை அவரிடம் கொண்டு போய் அவரின் பேப்பர் ஃபாக்டரியில் கொடுத்தான்.
அவர் “இல்லை, உங்க கிட்டயே இருக்கட்டும், எப்படி இருந்தாலும் அது ஷர்மிளாக்கு கொடுக்கறது தான் ரவி” என்றார்.
புதிதான மரியாதை பன்மை ரவிக்கு என்னவோ போல இருக்க “நீ வா போன்னு சொல்லுங்க மாமா” என்றான்.
புன்னகைத்தவர் “எப்போ ஷர்மிளாவை கூட்டிட்டு வரீங்க” என,
ரவி பதில் சொல்லாமல் பார்க்க, “சரி. எப்போ கூட்டிட்டு வர” என,
“அங்கே தான் நைட் கிளம்பறேன். காலையில் போய்டுவேன். பின்ன மதியம் போல கிளம்பி, இங்க நைட் வந்துடுவோம். இந்த நேரம் எல்லாம் உங்க பொண்ணுக்கு ஓகேன்னா” என்று சொல்ல, அவரின் முகத்தில் விரிந்த சிரிப்பு.
“எப்போ வீட்டுக்கு வர்றீங்க?” என்றவரிடம்,
“ஷர்மிளாவை கேட்டுட்டு சொல்றேன்” என்றான்.
இப்படி வார்த்தைக்கு வார்த்தை ஷர்மிளாவை கேட்டுட்டு சொல்றேன் என்றது கேசவனுக்கு அப்படி ஒரு திருப்தியை கொடுத்தது.
அவருக்கு என்ன தெரியும் முதல் ராத்திரிக்கு ஏற்பாடு செய்திருந்தால் அலங்காரம் செய்து கொண்டு நின்றிருந்த பெண்ணை திரும்பியும் பாராமல், சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி வந்து விட்டான் என்று.  அவரிடம் இரவு கிளம்புகிறேன் என்று சொன்னாலும், வேலையெல்லாம் முடித்து விட்டதால் உடனே கிளம்பிவிட்டான். முடிந்தால் உடனே இரவே திரும்பிவிடலாம் என்று, அவனுக்கு தங்கும் எண்ணமெல்லாம் இல்லை.
அவர் வந்து கூட்டி போகட்டும் என்று ஷர்மி சொன்னதாக சொன்ன பிறகு தான், அது தான் அவளுக்கு கொடுக்கும் மரியாதை என்று புரிய, சொல்லாமல் வந்தது வேறு மனதை இடிக்க, கிளம்பிவிட்டான். அதுவரையும் அவளை அழைக்க வில்லை. வேறொன்றுமில்லை பயம். பயமே! எப்படி அவளை எதிர்கொள்வது என..
ஷர்மிளா அவனின் மனைவியாகும் வரை அவளை பார்த்து வராத பயம் இப்போது வந்தது. எதற்கென்றே தெரியவில்லை. அவன் கொடுத்த கட்டாயமாயும் இருக்கலாம். ஆனாலும் வெளியில் காண்பித்தால் அது ரவீந்திரன் அல்லவே!       
இரவு உணவு நேரம் தான் முடிந்து தான் வீடு செல்ல முடிந்தது. எல்லோரும் உறங்கியிருக்க இவனுக்கு கதவை திறந்தது அவனின் அப்பா. இவனை பார்த்ததும் கோபப்பட்டார், அவன் உள்ளே வந்ததுமே “இப்படியாடா பண்ணுவ? உன்னோட சண்டை உங்கம்மாவோட? அதுக்கு அந்த பொண்ணு என்ன பண்ணும்? இப்படியா சொல்லாம கொள்ளாம போவ” என்றார்.
“பா பசிக்கிது, சாப்பிட ஏதாவது குடுங்க, அம்மாவை கூப்பிடாம குடுக்க முடிஞ்சா குடுங்க, இல்லை வேண்டாம்”  
“வரும் போதே சாப்பிட்டுட்டு வர வேண்டியது தானே? என்ன இருக்கு தெரியலையே” என்றவர் சமையலறையை பார்க்க மாவு இருந்தது. அவரே தோசை வார்த்து பொடி வைத்துக் கொடுத்தார், யானை பசிக்கு சோளப் பொறி தான், ஆனாலும் உண்டான். சூடாய் அப்பா பால் வேறு கொடுக்க அதையும் குடித்தவன்,
“ஷர்மி எங்க இருக்கா?” என,
“உன் ரூம்ல” என்றவரிடம்,
“நாங்க ஊருக்கு கிளம்பறோம்” என,
இத்தனை நாட்களில் ஷர்மிளாவை அறிந்தவராக “வந்தா கூட்டிட்டு போ. நான் இங்க தான் உட்கார்ந்து இருக்கேன். எதுன்னாலும் வந்து சொல்லு!” அவன் மாடியேறி ரூம் கதவை திறக்க முற்பட அது தாளிடப் பட்டு இருந்தது. மெதுவாய் தட்டினான், அது திறக்கும் வழியாய் காணோம் எனவும் ஃபோன் செய்து “கதவை திற” என,
அவனின் அழைப்பை பார்த்ததும் இத்தனை நாளாய் இல்லாமல் எதற்கு இப்போது அழைக்கிறான் என்ற எண்ணம் தான். வருவது தெரியாதே! எடுப்பதா வேண்டாமா என்ற பட்டி மன்றம் நடத்தி அவள் எடுக்கவும் தான் இப்படி அவன் சொல்ல.. பொங்கியதே கோபம்.  
“யார் நீ? எதுக்கு தொறக்கணும்? முடியாது போடா! சொல்லாம கொள்ளாம விட்டுட்டு போனவனுக்கு எல்லாம் கதவை திறக்க முடியாது” என்று அவளின் வார்த்தைகள் அடுத்த நொடி தெறித்து விழுந்தன.
எப்போது எப்போது வருவான் அவனை கிழித்து துவைத்து காயப் போட காத்திருந்தாள் என்றே சொல்ல வேண்டும்! அவனையே பிடிக்காது, கட்டாயத்தில் நடந்த திருமணம். இதில் தெரிந்தவன் அவன் ஒருவனே! அவனின் அம்மாவிடம் ஒரு நாள் பழகியிருக்கிறாள், இதில் விட்டு சென்று விட்டான்.
இந்த பத்து நாட்களாக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் என்னவோ என் வாழ்க்கை என்று ஒரு பயம் மனதில் கிளம்ப, தனியாய் நின்றது அவளுக்கு தானே தெரியும். அந்த பயம் இப்போது கோபமாய் வெடித்துக் கிளம்பியது கூடவே அழுகையும், என்ன நினைத்துக் கொண்டிருகின்றான் இவன் என்னை என்பது போல!   
யாரோடும் பேசப் பிடிக்காத போதும், எல்லோருடனும் பேசி சிரித்து வைத்து, அதையும் விட எல்லோரும் அவளின் முகத்தை முத்தை பார்க்க வேறு செய்ய, நரகம் தான்.
“ம்கூம் இது ஆகாது” என்று நொடியில் புரிந்தவன், “நீங்க தூங்குகப்பா” என்று அப்பாவிடம் சொல்லி மீண்டும் வந்து கதவை தட்ட ஆரம்பித்தான்.
மெல்லியதாய் சீராய், கூடவே கைபேசியில் திரும்ப அழைப்பு, விடாமல்.
எரிச்சலானவள் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் கதவை திறந்து விட, உடனே உள்ளே நுழைந்து கொண்டான். ஷர்மிளாவை பார்க்க அவளின் முகம் அழுகையில் தான் துடித்து கொண்டிருந்தது.
“நீ என்னை பழிவாங்கரதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டயா, அதுக்கு தான் உடனே விட்டுட்டு போயிட்டியா?” என்றாள் கண்களும் உதடுகளும் துடிக்க, இத்தனை வருடத்தில் அவனுக்கு தெரிந்து ஷர்மிளா இப்படி கலங்கி அவன் பார்த்ததேயில்லை.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை ஷர்மி, அம்மாக்கும் எனக்கும் சண்டை, கோபத்துல போயிட்டேன்” என்றான் தயக்கத்தோடு.
“அப்போ நானு, இப்போ மட்டும் எதுக்கு வந்த? எனக்கு உன்னையே பிடிக்காது, எப்படி உன் வீட்ல இருப்பேன்னு யோசிக்க மாட்டியா?”
“இது நம்ம வீடு இனிமே திருத்திக்கோ”  
“அதெல்லாம் முடியாது, இன்னும் எங்கப்பாவுக்கு லாஸ் பண்ணுவியா, பண்ணிக்கோ, என்னை அடிப்பியா, அடிச்சிக்கோ, எதுவும் நான் செய்ய மாட்டேன்” என்று அழுது கொண்டே பேச, ரவியின் மனதிற்கு கஷ்டமாய் போனது.
“கல்யாணம்னா என்ன அவ்வளவு ஈசியா உனக்கு? நீ இப்படி எல்லாம் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா, நான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லாமையே எல்லாம் ஃபேஸ் பண்ணியிருப்பேன்” எனப் பேச, அது இன்னுமே அவனை காயப் படுத்தியது.
கல்யாணமாகாமல் வேண்டாம் என்றால் சரி ஆகியும் இப்படி சொன்னால், அது முழுக்க முழுக்க அவனின் தோல்வி தானே!   
“ப்ச், முதல்ல அழுகையை நிறுத்து” என்றான் அதட்டலாக. அவன் செய்த தவறை மறைக்கவே இந்த அதட்டல். பின்னே அவன் செய்தது தவறு என்று புரிந்தது ஆனால் இன்னும் அது மிகப் பெரிய தவறு என்று புரியவில்லை.   
“அதெல்லாம் நிறுத்த முடியாது” என்று ஒ வென்று அழுக, வேகமாய் கதவை மூடினான், சப்தம் வெளியே கேட்காமல்.
பின் அருகில் வந்தவன் “அழாத தப்பு தான், சொல்லாம போனது தப்பு தான், அழாத ப்ளீஸ்” என,
“இல்லை எனக்கு வருது நான் அழுவேன்” என்று சொல்ல,
“அதுதான் சாரி சொல்றேன் தானே”
“எனக்கு உன்னை பிடிக்காது, உன்னோட சாரி எனக்கு வேண்டாம்”
“சரி வேற என்ன வேண்டும்?”
“சும்மா பேசாத, எனக்கு உன்னை அடிக்கணும் போல, மண்டையை உடைக்கணும் போல ஆத்திரம் வருது”.
அருகில் நெருங்கி நின்றவன் “அடிச்சிக்கோ” என,
கைகளினால் அவனின் இரு புஜங்களிலும் மாற்றி மாற்றி அடித்தவள், அவன் அசையாமல் நிற்கவும் பின் முகத்தை மூடிக் கொண்டு தேம்பி தேம்பி அழ, ரவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
“அழாதடி ப்ளீஸ், நான் பழிவாங்க எல்லாம் செய்யலை”
“நீ எதுக்கோ செஞ்ச, ஆனா நிச்சயமா என்னை பழி தான் வாங்கிட்ட. அம்மா இல்லாத பிள்ளைகளை யாரும் என்னவும் செய்யலாம்ன்றதுக்கு நான் தான் உதாரணம் போல. இவ்வளவு பெரிய பொண்ணு எனக்கே இப்படின்னா இன்னும் குட்டி குழந்தைங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க?” என்று தேம்பி தேம்பி அழ, அவனால் தேற்றவும் முடியவில்லை.
விடாது மன்னிப்பை வேண்டினான். அவனின் மன்னிப்பையும் ஏற்கவில்லை.
“எல்லோர் முன்னையும் என்னை அசிங்கப் படுத்திட்ட நீ. எல்லோர் முன்னையும் இது தான் நீ எனக்கு தேடி தர்ற மரியாதையா? அதுவும் சாதாரண நாள்ன்னா கூடப் பரவாயில்லை. ரூம்ல டெகரேட் செஞ்சு, என்னையும் இதை பண்ணு அதை பண்ணுன்னு அலங்காரம் செய்யச் சொல்லி…” அம்மாடி இது அவனின் ஞாபகத்திலேயே இல்லை..
“அம்மா, என்ன செய்து விட்டேன் நான்” என்று அதிர்ந்து விட்டான்.
அவனின் பாட்டி “சடங்கெல்லாம் ஏற்பாடு செய்திருக்கின்றோம்” என்று சொன்ன போதும் “நான் என்ன அதற்கு அலைகிறேனா, அதற்கா அவளை திருமணம் செய்திருக்கிறேன்” என்ற எண்ணம் தான்.
அம்மா அவன் மீது வாயால் சொன்ன குற்றச்சாட்டை அவள் கண்களால் வெளிப்படுத்தி இருந்தது அவனை மீறி எல்லாம் செய்ய வைத்தது, உடனே வீட்டை விட்டு செல்ல வைத்தது. அப்போதும் “அனுப்புங்கள்” என்று சொன்னான் தான், ஆனால் மேம்போக்காய் விட்டு விட்டான். இல்லையென்றால் அழுத்தி சொல்லி அழைத்து சென்றிருக்க முடியும். ஆனால் செய்யவில்லையே!          
“எனக்கு எவ்வளவு அசிங்கம்மா போச்சு, என்னால யார் முகத்தையும் பார்க்க முடியலை. ஆளாளுக்கு எனக்கு சமாதானம் சொல்றாங்க. என்னை பரிதாபமா பார்க்கறாங்க. இப்படி விட்டுட்டு போயிட்டு என்னை கொண்டு வந்து விடச் சொல்ற, நான் என்ன திருட்டு கல்யாணமா பண்ணிக்கிட்டேன். அப்படி பண்ணனும்னு நினைச்சிருந்தா காலேஜ்ல என் பின்ன சுத்தினவன் யாரையாவது பண்ணியிருப்பேன்” பேசிக் கொண்டே சென்றால், அவளை நிறுத்தவே முடியவில்லை.
“ஒரு நாள் ஒரு நிமிஷம் கூட அப்படி யாரையும் நான் நினைச்சதில்லை. உன்னோட சேர்த்து என்னை பேசின போது கூட எனக்கு கோபம் தான் வந்தது. அப்போ கூட உன்னை நான் நினைச்சதில்லை. என்னை ஃபோர்ஸ் செஞ்சு கல்யாணம் பண்ணி, விட்டுட்டு போயிட்ட, எனக்கு உன்னை பிடிக்கலை, ஐ டோன்ட் வான்ட் டு பீ இன் யுவர் லைஃப்” என்று தேம்பி தேம்பி அழுது கொண்டேயிருந்தாள்.
ஷர்மியினது இயல்பு இப்படி அழுவதே இல்லை, மிகவும் மன அழுத்தத்தில் இருக்கின்றாள் என்பது புரிய, “இன்னும் போக மாட்டேன், எங்கேயும் போக மாட்டேன்” என்று பேசிக் கொண்டே அவளை கை பிடித்து நகர்த்தி படுக்கையில் விட,
“போ, போ” என்று அப்போதும் அவனை அடித்து விட்டு படுத்துக் கொண்டவளின் தேம்பல் வெகு நேரம் இருக்க, எப்படியோ அவள் உறங்கி விட்டாள், ஆனால் ரவீந்திரன் உறங்கவே இல்லை.
அவர்களின் தொழிலின் நஷ்டத்தை பத்து நாளில் சரி செய்து விட்டான், ஆனால் அவனின் வாழ்க்கை பயம் கொடுத்தது, இன்னமும் பிடிக்கவில்லை என்ற வார்த்தை தான் அவளிடம்.
எப்போதாவது அவளுக்கு என்னை பிடிக்குமா? இல்லை வாழ்க்கை முழுவதுமே என்னை வேலை செய்பவனாய் தான் பார்ப்பாளா? இப்போது நானே தேவையில்லாத வேலை செய்து வைத்திருக்கின்றேன், அவளை விட்டு சென்று.
எத்தனை போராட்டங்களுக்கு பிறகு இந்த திருமணம், இதில் என்ன செய்து வைதிருக்கின்றாய் நீ, மனது சலிப்பாய் உணர்ந்தது..
    
  
     

Advertisement