Advertisement

கணபதியே அருள்வாய்
நான்… எனது… மனது…
அத்தியாயம் ஒன்று :
“காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடி பட…”
என்று பின்னணியில் ஓடிக் கொண்டிருக்க, ஏதோ கணக்கை ஆராய்ந்து கொண்டிருந்தான் ரவீந்திரன், அவன் முன் பொறுமை உடைபடும் விளிம்பில் இருந்தாள் ஷர்மிளா. வந்து அமர்ந்தது தெரிந்திருந்தும் தலையை தூக்கி பார்க்கவில்லை, என்னவென்றும் கேட்கவில்லை. சில நிமிடம் பார்த்தவள் அவளாய் ஆரம்பித்தாள். 
“எனக்கு பணம் வேணும்”
“எவ்வளவு”
“ரெண்டு லட்சம்”
“என்னது ரெண்டு லட்சமா?” என்று குரலில் ஒரு திகைப்பை வெளிப்படுத்தி ஷர்மிளாவை நிமிர்ந்து பார்த்தான் ரவீந்திரன்.
“பத்து நிமிஷமா முன்னாடி உட்கார்ந்து இருக்கேன் தலையை நிமிர்த்தவேயில்லை.. பணம் கேட்டவுடனே டபக்குன்னு தலையை தூக்கறான் என்னவோ இவன் அப்பன் வீட்டு பணம் மாதிரி.. ஆளும் அவனும்” என்று மனதிற்குள் கரித்து கொட்டினாள் ஷர்மிளா.
ஆளும் அவனும் என்று திட்டப் பட்ட ரவீந்திரன் நிஜமாகவே பார்ப்பவரை ஆளும் அவனும் என்று சொல்வது போல தான் இருப்பான், ஆனால் ஷர்மிளா சொன்ன அர்த்தத்தில் அல்ல.. அழகனாய், வசீகரனாய், கம்பீரனாய், அசட்டுத்தனங்களின்றி, கூர்மையான பார்வையோடு எதிரில் இருப்பவரை கவரும் வகையில் தான் இருப்பான்..
சொல்லப் போனால் அவனின் தோற்றமே அவனின் பெரிய பலம்..
மனதில் நினைத்தது மட்டுமல்லாமல் அதனை ஷர்மிளா வெளியிலும் சொல்ல வேறு செய்தாள், “பத்து நிமிஷமா முன்னால உட்கார்ந்து இருக்கறேன், தலை தூக்கலை, பணம் சொன்னவுடனே அப்படி வாயை பொளக்கற”
“ம்ம் அதுவா, பணம் ஒரு அழகான விஷயம். அதனால அதை சொன்னவுடனே வாயை பொளந்துட்டேன். ஆனா நீ.. உன்னை யாரு பார்ப்பா? அது தான் தலையை தூக்கலை” என்றான் அவளை விடவும் அலட்சியமாய்.
“என்ன திமிர் உனக்கு?”
“நீ சாப்பிடற சாப்பாடை தானே சாப்பிடறேன். அதுலயும் உன்னை விட அதிகமா சாப்பிடறேன். அப்போ உன்னை விட எனக்கு அதிகம் இருக்கும் தானே”
“தேவையில்லாம பேசாத பணம் வேணும்”
“எதுக்குன்னு சொல்லு”
“அதெல்லாம் சொல்ல முடியாது”
“சொன்னா குடுக்கலாமா, வேண்டாமா, யோசிப்பேன், இல்லைன்னா அதுவும் இல்லை”
“ஏய், என்ன இது? என் அப்பாவோட பணம்” என்று டென்ஷனில் எழுந்து ஷர்மிளா கத்த..
“உங்கப்பா பணம் தானே, உன் பணம் இல்லையே, அவர் வந்து சொல்லட்டும் கொடுக்கறேன்”
“நீ ரொம்ப பண்ற” என்று ஆத்திரத்தில் ஷர்மி அதிகாரமாய் உரைத்தாள்.
“இந்த அதிகாரமா பேசற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம். அப்புறம் உன் அப்பா சொன்னா கூட உனக்கு பணம் கிடைக்காது” என்றான் அதையும் விட அதிகாரமாய்.
“இரு உன்னை என்ன பண்றேன் பாரு?”
“போடி” என்று மனதிற்குள் நினைத்தவன் அதை வெளியில் சொல்லாமல் கண்களால் காண்பிக்க..
அவனை முறைத்து அந்த ஆபிஸ் ரூமை விட்டு வெளியில் சென்றாள்.
வெளியில் சந்தோஷ் காத்திருந்தவன் “என்ன குடுத்துட்டானா?” என்றான்.
“ம்ம் உன் மூஞ்சி, அவன் குடுத்துட்டாலும், உன்னால கண்டவன் கிட்ட எல்லாம் நான் சண்டை போட வேண்டி இருக்கு” என்று அண்ணனிடம் பாய்ந்தாள்..
“ஹேய் இப்படி சொன்னா எப்படி? உன்னை நம்பி தானே இருக்கேன்.. என்னோட பர்த்டே பார்ட்டி இன்னைக்கு. நமக்கு இருக்குற வசதிக்கு நான் அதை குடுக்கலைன்னா என்னை எல்லோரும் கேவலமா பார்ப்பாங்க. ஜஸ்ட் டூ லேக்ஸ் தான் கேட்கறேன்”
“அதெல்லாம் என்னால அவன் கிட்ட சொல்ல முடியாது”
“சரி அட்லீஸ்ட் ஒரு லட்சம் வாங்கு.. நான் பாக்கி நிஷா கிட்ட வாங்கிக்கறேன்”
“ப்ச், சந்தோஷ் பொறுப்பில்லாம இருக்காத, இது நம்ம பணம் இது நமக்கு பெரிய பணமும் கிடையாது. அதிகாரமா பேசி, அவன் கிட்ட வாங்கறதுக்கு என்ன?”
“அவன் கிட்டயா நானும் பேசணும்னு தான் போவேன். ஆனா அவனை பார்த்தாலே எனக்கு வார்த்தையே வராது, என்னை முறைச்சு பார்ப்பான்”
“அப்படிப்பட்டவன் எதுக்கு நம்மகிட்ட வேலைக்கு அப்பாக்கிட்ட சொல்லி தூக்கிடுவோம்”
“அதெல்லாம் அப்பா செய்ய மாட்டார், நமக்கு தான் திட்டு விழும்”
“அண்ணா! நீ இப்படி இருக்காத, சீக்கிரம் பிசினெஸ் வா. நீ படிச்சு முடிச்சு வர்றதுக்குள்ள அவன் மொத்தமா நம்மை முழுங்கிடுவான்” என்று மேடை ரகசியம் பேசினாள்.
சரியாக அந்த நேரம் ரவீந்தரன் அலுவலக அறையில் இருந்து வெளியில் வர.. அவனின் காதுகளுக்குள் இந்த வார்த்தை ஸ்பஷ்டமாய் விழ.. அவனின் முகத்தில் ஒரு அலட்சிய சிரிப்பு.
“இந்த வீட்லையே இவ மட்டும் எப்படி புத்திசாலியா போனான்னு தெரியலை” என்ற எண்ணத்தோடே அவர்கள் பேசியது காதில் விழாதது போல கடந்தான்.
அவன் சென்றவுடனே “பாரு சந்தோஷ், நான் பேசினது அவன் காதுல விழாமையா இருக்கும். ஆனாலும் எப்படி போறான் பாரு. கொஞ்சம் கூட ரோஷமே வரலை. அவன் காரியவாதி சந்தோஷ். நான் சொன்னா யாரும் கேட்க மாட்டேங்கறீங்க” என்று பொறிந்தாள்.
“ப்ச், எனக்கு பணத்துக்கு என்ன வழி அதை சொல்லு. எல்லோர்கிட்டயும் சொல்லிட்டேன். இனி பணம் இல்லைன்னா அசிங்கமா போய்டும்” என்ற சந்தோஷை அப்படியே அடிக்கும் ஆவேசம் கிளம்பிய போதும்..
“இரு, என்கிட்டே எவ்வளவு இருக்குன்னு பார்க்கறேன்” என்று சொல்லியபடி மொபைலில் பேலன்ஸ் செக் செய்ய, அதில் ஒரு லட்சம் தான் இருந்தது.
அதை கொடுத்து விட்டால் பின்னே அவளுக்கு செலவிற்கு பணம்.. கையில் ஒன்றோ இரண்டோ லட்சம் இருக்கும் தான். ஆனால் அதை அவள் தொடுவதில்லை.
“அம்பதாயிரம் இருக்கு அனுப்பிவிடறேன்”  
“பத்தாதே” என்றவன், பிடிவாதமாய் “எனக்கு பணம் வேண்டும்” என்று நின்றான். அம்மா தவறியதில் இருந்து தங்கையானவள் அவனுக்கு அக்காவாகி போனாள். அவள் தான் பெரியவள் போல அவன் சின்னவன் போல அவளிடம் பிடிவாதம் பிடிப்பான்.  
ஷர்மிளா பொறியியல் மூன்றாமாண்டு மாணவி, சந்தோஷ் பொறியியல் முடித்து எம் பீ ஏ இறுதியாண்டில் இருந்தான். 
“உன்னோட பெரிய ரோதனை” என்று அவனை திட்டியபடி மீண்டும் ரவீந்திரன் இருக்கும் இடம் தேடி சென்றாள்.      
“சந்தோஷ்க்கு பர்த்டே செலப்ரேட் பண்ண பணம் வேணும்” என்று அவன் முன் நிற்க..
“அதுக்கு ரெண்டு லட்ச ரூபாயா? அவ்வளவு எல்லாம் முடியாது” என்றான் கறாராக ரவி.
“ஏன் முடியாது, வேணும்!” என்று ஷர்மிளா நிற்க..
“ஆமாம், தெரியாம தான் கேட்கறேன். ரெண்டு லட்ச ரூபாய் செலவு செஞ்சு செலப்ரேட் பண்ற அளவுக்கு அவன் என்ன சாதிச்சிட்டான், ஒத்தை பைசா சம்பாரிச்சா அதோட அருமை தெரியும்”  
“நீ ரொம்ப பேசாதே, இது எங்க பணம், இதை எப்படி செலவு செய்யறதுன்னு நாங்க முடிவு பண்ணிக்குவோம்”
“இது உங்க பணமா இருக்கலாம், ஆனா இதை சம்பாதிக்கறது நான், இப்படி செலவு பண்ண எல்லாம் குடுக்க முடியாது”
“நீ உன்னோட லிமிட்ஸ் க்ராஸ் பண்ற”
“எனக்கு என்னோட லிமிட்ஸ் தெரியும், நான் இவ்வளவு குடுக்க மாட்டேன், வேணும்னா உங்கப்பா கிட்ட வாங்கிக்கோ”  
“அவர் தான் ஊர்ல இல்லையே”
“வரும் போது வாங்கிக்கோ”
“அவர் ஃபோன் போகலை, நீ எப்படி அவரை ரீச் பண்ற”
“அதை உன்கிட்ட சொல்ல முடியாது”
“அப்போ எங்களுக்கு தெரியாம, அவருக்கு வேற நம்பர் இருக்கா?”
“அதை நீ அவர் கிட்ட தான் கேட்கணும்”  
ஷர்மிளாவிர்க்கு ஆத்திரம் தலைகேற முயன்று கட்டுப் படுத்தியவள், “சரி எவ்வளவு கொடுப்ப” என பேரத்தில் இறங்கினாள்.
“இருபதாயிரம்”
“எனக்கு எப்படி பணம் வாங்கணும்னு தெரியும்.. அப்பா பேர் சொல்லி யார் கிட்டயாவது வாங்கறேன், இல்லை என் நகை வித்து சந்தோஷ்க்கு பணம் குடுப்பேன்” என்றாள் தீவிரமான குரலில்.
இனி அவளை கட்டுப் படுத்துவது சிரமம் என்று உணர்ந்தவனாக, “ஒரு லட்சம் தர்றேன்” என்றான்.
“நீ என்ன எங்களுக்கு பிச்சை போடறியா”  
“வீணா பேச்சு வேண்டாம், குடுக்கறதை வாங்கிட்டு இடத்தை காலி பண்ணு” என்றான் அதிகாரமாக ரவி.
அவனை முறைத்து கொண்டு சென்றாள்..
“சும்மாவே இவ முகம் சகிக்காது, இதுல முறைச்சு பார்த்துட்டாலும்..” என்று மனதிற்குள் நினைத்தவன் அவனின் வேலையை கவனிக்க ஆரம்பித்தான். தடை பட்டிருந்த கந்த சஷ்டி கவசத்தை மீண்டும் ஒலிக்க விட..
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க..
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பதுன் கடன்..
பெற்றவள் குற மகள் பெற்றவளாமே..
பிள்ளையென்றன்பாய் பிரியமளித்து..
மைந்தநென்மீதுன் மனமகிழ்ந்தருளி
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள் செய்!
ஒலித்த வரிகளை மனதிலும் ஒலிக்க விட்டு கடவுளிடம் சரண் புகுந்தான்.   
சந்தோஷ் முகத்தில் எதிர்பார்ப்போடு வெளியில் நிற்க, “இவ்வளவு தான் தேறிச்சு” என்று அண்ணனிடம் கொடுத்தாள்.
“இப்போ நிஷா கிட்ட கேட்கணும்” என்று அவன் சலிப்பாய் சொல்ல..
நிஷா சந்தோஷின் சமீபத்திய கேர்ள் பிரெண்ட்.. எல்லாம் பணக்கார வர்க்கம் என்பதால் லட்சம் தண்ணீர் பட்ட பாடு தான். அதில் எண்ணி எண்ணி செலவு செய்பவன் சந்தோஷ் மட்டுமே.   
ஷர்மிளா, “வேண்டாம் அண்ணா, கேட்காதே” என்று வேகமாக அவளின் ரூம் சென்றவள் “இந்தா வெச்சிக்கோ” என்று இன்னும் ஒரு லட்சத்தை கொடுத்தாள்.
அவள் வைத்திருக்கும் பணம் எதற்கும் எடுக்க மாட்டாள், என்னவோ பர்த்டே அன்று அண்ணன் பணத்திற்கு அலைவது பிடிக்காமல் கொடுத்தவள்..
“அண்ணா, சீக்கிரம் படிச்சு முடிச்சிட்டு பிசினெஸ் வா”
“ம்ம் சரி” என்று சொல்லியவனின் அவசரம்.. அவனின் பர்த்டே பார்ட்டி அரேஞ்ச்மென்ட்டிற்கு திட்டமிட கூடவே தங்கையிடம்.. “நான் ஈவ்னிங் என்ன ப்ளேஸ்ன்னு கால் பண்றேன் வந்துடு.. ஆனா பார்ட்டி முடியறவரை இருக்காதே, சீக்கிரம் கிளம்பிடு.. முதல்ல காமன் பார்ட்டி, பின்ன பாய்ஸ் பார்ட்டி” என்றான்.
“சந்தோஷ்…” என்று ஷர்மி ஆரம்பிக்கும் போதே,
“ப்ளீஸ் பாட்டி, இன்னைக்கு அட்வைஸ் வேண்டாம். நாளைக்கு இருந்து கண்டிப்பா உன் பேச்சு கேட்பேன்”  
அப்போதும் ஷர்மி கவலையாக அவனை பார்க்க, “சீர்ஸ் பேபி, சந்தோஷ் சொன்னா செய்வான்” என்று கிளம்பினான்.
வீட்டின் அலுவலக அறையில் இருந்து இதனை ரவீந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஒரு லட்ச ரூபா தெண்டம், இதுல இவ வேற கைல இருந்து குடுத்திருப்பா போல. நான் சம்பாரிச்சா இவனுங்க நோகாம நுங்கேடுப்பானுங்க” என்று மனதினில் பேசிக் கொண்ட ரவீந்திரன்.. அந்த வீட்டில் வேலை செய்பவன்.. ஆம் வேலை செய்பவனே! ஏழுவருடங்கள் ஆகின்றது அவன் இங்கே வந்து.
சொந்தம் என்று வந்தவன் வேலைக்காரானாகி போனான்.
அவனுடைய இருபத்தியோராவது வயதில் இங்கே வேலைக்கு வந்தான்.. வீட்டில் மிகுந்த கஷ்டம்.. பொறியியல் படிக்க ஆசை, ஆனால் படிக்க முடிந்தது என்னவோ பி பி ஏ, அரசு கலை கல்லூரியில்.  
படிப்பை முடித்ததும் “என் தங்கச்சி வீட்டுக்கு போ ரவி, மாமா ஏதாவது நல்ல வேலையா பார்த்துக் கொடுப்பாரு” என்று சொன்னது அவனின் அப்பா.
அவரின் தங்கை என்றால் உடன் பிறந்த தங்கை அல்ல பெரியப்பா சித்தப்பா மக்கள்.. கூட்டு குடும்பம் என்பதால் சேர்ந்து வளர்ந்ததால் சொந்த அண்ணன் தங்கை போன்ற பாவனை தான்.
ஆனால் அவனுக்கு அப்படி ஒன்றும் அத்தையை ஞாபகமில்லை .. திருமணமாகி சென்ற பிறகு லக்ஷ்மி அதிகம் வந்து சென்றது இல்லை கும்பகோணத்திற்கு.. அவர் மனம் புரிந்து சென்ற இடம் சென்னை.. இவர்களை காட்டிலும் பலமடங்கு வசதியான ஆட்கள்.. அதனால் அவரின் போக்குவரத்து மிகவும் குறைவே..
இங்கே இவர்களின் வீட்டில் ஆட்கள் அதிகம்.. தாத்தா பாட்டி  அப்பா அம்மா சித்தப்பா சித்தி.. சித்தப்பாவிற்கு இரண்டு பெண்கள்.. இவனுடன் பிறந்தவர்கள் இரண்டு பெண்கள்.. ஆக மொத்தம் நான்கு பெண்களை கரைசேர்க்கும் பொறுப்பான அண்ணன் பதவியில் இருப்பவன்..
பிறந்ததில் இருந்தே வயிற்றிற்கும் வாயிற்கும் போராட்டமான ஜீவனம் தான். அப்பா, சித்தப்பா இருவருமே அங்கே இருந்த ஒரு ஜவுளி கடையில் வேலை.. முன்னேற ஆர்வமே இல்லாத மக்கள் அப்படியும் சொல்லாம், இல்லை முன்னேற தெரியவில்லையா அப்படியும் சொல்லலாம்.. இருவருக்குமே சொற்ப வருமானம்..
அதனால் வெளிஉலகம் புரிய ஆரம்பித்த நிலையில் ரவீந்திரனுக்கு தெரிந்தது எல்லாம் தாங்கள் ஒன்றுமே இல்லாதவர்கள் என்று.. அவனுக்கு வசதியான வாழ்க்கை மீது அவன் வளர வளர அவனோடு சேர்ந்து அதன் மீதான ஆசை, மோகம், வெறி, எப்படியும் சொல்லலாம், அதுவும் வளர்ந்தது.
வாழ்க்கை என்னை நிந்தித்து விட்டது, வஞ்சித்து விட்டது, என்றெல்லாம் அவனின் நினைப்பு போகவில்லை. அவனின் நினைப்பு எல்லாம் எப்படி எப்படி முன்னேறுவது என்று தான் துடிக்கும்.
அவனுக்கு யாரென்றே தெரியாத மாமா வீட்டிற்கு வந்து வேலை செய்வதில் எல்லாம் இஷ்டமில்லை, ஆனால் சென்னை மாநகரம் அவனை ஈர்த்தது..
அவனின் எண்ணங்களை கும்பகோணம் வண்ணமயமாக்கும் என்று தோன்றவில்லை. வருவோம் பின் என்ன வென்று பார்த்துக் கொள்ளலாம் என்று தான் வந்தான்.    
அப்படி ஒன்றும் அத்தை வீடு பாசமாய் அவனை வரவேற்கவில்லை. அவ்வளவு ஏன் சொந்தமாய் ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.
“ரகு அண்ணா பையனா நீ? என்ன படிச்சிருக்க என்ன வேலை பார்ப்ப?” இந்த பேச்சு வார்த்தை எல்லாம் நடந்தது லக்ஷ்மியின் வீட்டு போர்டிகோவில். அவர் அங்கிருந்த சேரில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டே பேச, இவன் நின்று கொண்டிருந்தான். ஆம்! உள்ளே கூட அழைக்கவில்லை..
அவனுடைய வரட்சியான தோற்றம், கசங்கிய உடைகள்.. ரப்பர் செருப்பு.. காலையில் பேருந்தை விட்டு இறங்கி அப்படியே வந்திருந்தான்.
என்னவோ லக்ஷ்மியின் அந்த பேச்சினால் அவனுடைய வாயில் இருந்து “அத்தை” என்ற வார்த்தை வரவில்லை.
“என்ன வேலை குடுத்தாலும் செய்வேன்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க.. அப்போது தான் ஷர்மிளா எழுந்து வந்தாள். பதினைந்து வயது பெண் அப்போது. பத்தாம் வகுப்பில் இருந்தாள்.
“மம்மி, யார் இது? ஏன் இங்க நிக்கறான்?” என்று முகத்தை அசூசையாய் சுளித்து மரியாதையில்லாமல் பேசி, ஷர்மிளா அவனை பார்த்த பார்வையில்,
ஷர்மிளாவிற்கு ரவீந்திரனை பிடிக்காமல் இருந்ததை விட…
ரவீந்தரனிற்கு ஷர்மிளாவை பிடிக்காமல் போயிற்று!       
              
                       
         

Advertisement