Advertisement

என்ன இருந்தாலும் அம்மா இல்லாத பிள்ளைகள், வீட்டின் பொறுப்பு என்னது என்று அப்படி கவனமாய் இருவரையும் பார்த்துக் கொள்வான். அவர்களின் வழக்கங்கள் எல்லாம் அத்துபடி.
என்ன தான் அவர்கள் உறவாய் நினைக்காவிட்டாலும் ரவியும் காண்பித்து கொள்ளாவிட்டாலும் உறவுகளோடு வளர்ந்தவனுக்கு, உறவுகளுக்காய் உழைப்பவனுக்கு அவர்கள் அத்தை பிள்ளைகள் தானே. வெளியில் காண்பித்து கொள்ளாவிட்டாலும் அந்த அக்கறை அதீதமாய் இருக்கும்.   
“இன்று திமிர் பிடித்தவள் என்று நினைத்த இவளோடு வாழ்க்கை. அதுவும் நானாய் வலுக்கட்டாயமாய் வேண்டாம் என்றவளை வேண்டும் என்று நினைத்து” தானாய் மனதில் ஒரு இதம்.  
ஷர்மி வீட்டை விட்டு சென்ற இரண்டு நாட்கள் வீட்டிற்கு வரவில்லை, வீட்டிற்கு வரப் பிடிக்கவில்லை. அவளில்லாத வீட்டில் எதுவும் இருப்பது போல கூட தோன்றவில்லை. அவனுக்குமே ஊணில்லை உறக்கமில்லை. இப்படி பேசிவிட்டேனே சரியா என்பது போல. ஆனாலும் சாரி கேட்பது அவனியல்பு அல்லவே. அதற்குள் தான் அவளின் ஹாஸ்பிடல் வாசம்.   
அப்படி ஒரு குற்ற உணர்வு தான், அதுவும் ஹாஸ்பிடலில் இருந்த போது புதிய முடிவெடுத்தான் அவள் எவ்வளவு பேசினாலும் இனி பதில் பேசுவதில்லை என்று.
ஆனால் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை இன்றே திரும்ப கொடுத்துவிட்டான். மனதிற்கு கஷ்டமாக இருந்தது இப்படியான சூழல்கள். அந்தக்ஷண கோபம் அவனையும் மீறி செயல்பட வைக்கிறது.            
சந்தோஷ் உண்டு மீண்டும் உறங்க சென்று விட்டான், ஷர்மியின் அறைக்குள் தான், அதே போல கீழே தலையணை போட்டு.
சந்தோஷ் இருந்ததால் ஷர்மியின் மனநிலை அறியவில்லை, பேசும் சந்தர்ப்பமும் இல்லை. ரவி அலுவலகம் சென்று விட, மீண்டும் அவன் மதியம் இரண்டு மணி போல உணவிற்கு வந்தான்.  
வந்து பார்த்தால் அண்ணனும் தங்கையும் அப்படி ஒரு உறக்கத்தில்.
எதையும் உடனுக்குடன் செய்யும் வழக்கம் உள்ளவன் ரவி, அதனாலேயே அவன் வளர்ச்சி. எதையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் பழக்கமே கிடையாது.
காலையிலேயே சித்தப்பாவிற்கு வாட்ஸ் அப்பில் சந்தோஷின் ஜாதகம் அனுப்பி தாதாத்விடம் கொடுத்து பார்க்க சொல்லியிருந்தான்.
அப்பாவிடம் கூட சொல்லவில்லை. சந்தோஷ் என்ற பெயர் மட்டுமே இருந்தது. அதனால் அவர்கள் இப்படி என்று அனுமானிக்கவில்லை. யாரினதோ ஜாதகம் என்று நினைத்தனர்.
“நான் சொன்ன பிறகு வீட்டில் சொல்லிக் கொள்ளலாம்” என்று சொல்லியிருக்க, தாத்தாவிற்கும் சித்தப்பாவிற்கும் ஏதோ ஜாதகம் என்று தெரியும். ஷர்மிளாவின் அண்ணன் என்று அனுமானித்து இருக்கவில்லை
அவர்களும் பார்த்து பத்துக்கு ஒம்போது பொருத்தம் இருக்கு என்று சொல்லிவிட,
இதோ அண்ணனும் தங்கையும் உறங்குகிறார்கள் என்று கௌசியுடன் பேச அமர்ந்து விட்டான். வாசன் உணவுண்டு மதிய உறக்கத்திற்கு போய்விட இவர்கள் இருவரும் மட்டுமே டைனிங் ஹாலில்.
சந்தோஷ் கேட்டான் என்று சொல்லாமல், “கௌசி, சந்தோஷ்க்கு பொண்ணு பார்க்கறாங்க, உன்னோட ஜாதகம் பார்க்கலாமா?” என்று கேட்டான்.
கேட்ட கௌசியின் முகத்தில் குழப்பம், “பார்க்கலாமான்னு ஏன் அண்ணா என்னை கேட்கறீங்க? அக்காங்களுக்கு இப்படி எல்லாம் கேட்கலையே. எல்லாம் பார்த்துட்டு சரி வந்த பிறகு பிடிச்சிருக்கா கேட்பாங்க? அவ்வளவு தானே! ஜாதகம் பார்க்கும்முன்ன ஏன் என்கிட்டே கேட்கணும்?” என்று கேட்டாள்.
“ஷப்பா என் தங்கைன்னு ப்ரூவ் பண்றாடா?” என்று மனதிற்குள் கௌண்டர் கொடுத்தவன், “அது மத்த மாப்பிள்ளைங்க எல்லாம் தெரியாது, சந்தோஷை உனக்கு தெரியும் தானே, அதனால?”
“தெரியும்னா அண்ணியோட அண்ணா வா தெரியும், அவ்வளவு தானே. அப்போ என்னை விட உங்களுக்கு தான் நல்லா தெரியும். நீங்க சொல்லுங்க எதுன்னாலும் எனக்கு. இது சரின்னு நீங்க ஃபீல் பண்ணினா நீங்க ப்ரொசீட் பண்ணுங்க. யாரை வீட்ல சொல்றீங்களோ அவங்களை தானே செஞ்சுக்குவேன். அதனால நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க” என்று விட்டாள்.
“ஷப்பா, அவன் ஓகே ஒகேயில்லைன்னு நானே கன்ஃபியுஸ் ஆகறேன், இதுல என்னை முடிவெடுக்க சொன்னா? அவன் கல்யாணம் என் பொறுப்புன்னு வாக்கு வேற குடுத்திருக்கேன். ஆனா நான் பண்றது சரியா தப்பா தெரியலை?” என்று மனதிற்குள் நொந்து கொண்டான்.    
“அதுல ஒரு விஷயம் இருக்கு”  
“என்ன?” என்றவளிடம்,
“அவன் முன்னமே ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்கான். அந்த பொண்ணுக்கு வேற இடத்துல கல்யாணம் ஆகிடுச்சு, இப்போ திரும்ப வந்து உன்னை தான் பிடிக்குதுன்னு நிக்குது போல, அதனால தான் அவசரமா கல்யாணம் பண்ணி வெக்கச் சொல்றான்”
“இந்த மாதிரி ஏற்கனவே லவ் செஞ்சிருக்கான், இப்போ ஒரு பிரச்சனையில இருக்கான்” என்றான் ரவி.
கௌசியின் முகத்தில் யோசனை, பின்னே ரவியிடம் “அண்ணா எனக்கு தெரியலை, நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே” என்று விட்டாள்.
“அவன் லவ் பண்ணினது உனக்கு பிரச்சனை இல்லையா?”
“இல்லைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா இதுக்காக யோசிச்சு வேண்டாம்னு சொல்லிட்டு, நாளைக்கு பார்க்க போற வேற மாப்பிள்ளைக்கும் இந்த மாதிரி ஏற்கனவே லவ் இருந்தா நமக்கு தெரியவே தெரியாது இல்லையா? அது தான் யோசனை” என்றவள்,
“ண்ணா, என்னை கன்ஃபியுஸ் பண்ணாதீங்க. உங்களுக்கு ஓகே ன்னு தோணினா பண்ணுங்க வேண்டாம்னா விட்டுடுங்க” என்று விட்டாள்.
இதற்கு என்ன சொல்லுவான்? அவனுக்குமே குழப்பம் தான். ஒத்து வந்து விட்டால் பரவாயில்லை, ஒத்து வராவிட்டால், நீ சொல்லி தானே திருமணம் செய்தேன் என்று சொன்னால் என்ன செய்வான்?
வேறு இடம் என்றால் வீட்டினர் சொல்வது தான், எல்லோருமே ஆலோசிப்பர்.
ஆனால் இங்கே இவன் சொல்வது தான் பிரதானமாய் இருக்கும். அதையும் விட அம்மா நிச்சயம் முட்டுக்கட்டை போடுவார் என்று மனசுக்கு நிச்சயமாய் தோன்றியது.
குழப்பமானான்…
“சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்று கௌசி கேட்க,
“ம்ம்” என்றான் அவனுக்கு திரும்ப ஃபாக்டரிக்கு உடனே போக வேண்டி இருந்தது.
அவன் உண்டு முடிக்கவும் “ஒருவேளை உனக்கு ஓகேன்னு தோணினா வீட்ல பேசும் போது அவர் லவ் மேட்டர் எல்லாம் சொல்லாதே” என்றாள் கௌசல்யா.
ரவியின் முகம் புன்னகை பூத்தது, “இது அவனோட பெர்சனல், இது நடந்தாலும் நடக்கலைன்னாலும் நீயும் யார் கிட்டயும் எப்போவும் சொல்லக் கூடாது” என்றான்.
சிரித்தவள் “சொல்ல மாட்டேன்” என்றாள், உடனேயே “அண்ணா, அண்ணி எதுவும் பேசுவாங்களா? பேசினா என்ன சொல்ல…”
“நாம சரின்னு சொன்னா தான் பேசுவா? இல்லைன்னா உன் கிட்ட பேசுவான்னு தோணலை? பார்ப்போம் அப்படியே பேசினா என்ன சொல்வ?”
“வீட்ல சொல்றது தான்னு சொல்வேன்”
“அதையே சொல்லு”
“என்கிட்டே கோவப்படுவாங்களா?”
“மாட்டா” என்றான் உறுதியாக… பின்பு உண்டு அவன் சென்று விட்டான்.
மூன்று மணி அளவில் தான் ஷர்மிளாவும் சந்தோஷும் உணவு உண்ண வந்தனர். அதுவும் கௌசி “அண்ணி, ரொம்ப நேரம் ஆகிடுச்சு எழுந்து சாப்பிடுங்க” என்று சொன்ன பிறகு அந்த சத்தத்தில் தான் எழுந்தனர்.
சந்தோஷ் உண்டதும் கிளம்பிவிட்டான். “டேக் கேர் பேபி, எதுன்னாலும் கூப்பிடு” என்று சொல்லி. அவன் தான் பேப்பர் ஃபாக்டரி காலையில் இருந்து செல்லவில்லையே அந்த அவசரம்.
இதில் தன்னை கவனித்து பார்க்கும் கௌசல்யா கருத்தில் படவில்லை, “வர்றேங்க” என்ற வார்த்தையோடு சென்று விட்டான்.
“ஒஹ், இவனுக்கு தெரியாது போல” என்று தான் கௌசல்யா நினைத்தாள். அவன் தான் கேட்டிருப்பான் என்று தெரியவில்லை.
அவர்கள் அமரவும் வீட்டை பார்த்துக்கொள்ளும் சசிம்மாவும் ரமேஷும் வந்து விட்டனர், “எப்படி இருக்க ஷர்மிம்மா?” என்றபடி.
“நல்லா இருக்கேன்க்கா, மூணு நாள் ஹாஸ்பிடல்ல இருந்தேன்” என்று அவருடன் சிறிது நேரம் கதை பேசினாள் ஷர்மி.
பொதுவாக இப்படி வேலை செய்பவர்களிடம் கதை பேசுவது அபூர்வம்.
மனதை ரவி என்ற ஒருவனிடம் இருந்து திசை திருப்ப முயன்றாள். “கணவன் முக்கியமானவன் தான். ஆனால் அவன் மட்டுமே வாழ்க்கை கிடையாது. அவன் போ என்று சொன்னால் போடா என்று சொல்லி செல்ல வேண்டும். அதை விட்டு இப்படி உண்ணாமல் உறங்காமல் ஹாஸ்பிடலில் போய் படுத்துக் கொள்ள கூடாது”
“முதலில் அவனை எல்லா விஷயத்திற்கும் எதிர்பார்க்காதே. நீயே செய்து பழகு. அவனை பிடித்தம் என்பதனை விட பழக்கம் என்று ஆக்கி கொண்டாய். சிகரெட் போல, குடி போல, போதை வஸ்து போல அவனுக்கு நீ அடிமையாகிவிட்டாய். அவனில் இருந்து வெளியில் வா. நீ தனி மனுஷி. தைரியமாய் இருக்க வேண்டும்” கதை பேசிக் கொண்டு இருந்தாலும் இப்படி பல எண்ணங்கள் அவளுள் ஓடிக் கொண்டிருந்தன.
ஷர்மிளாவின் மனதின் எண்ணங்கள் எதையும் அறியாத ரவி, கேசவனிடம் அவருக்கு “கௌசல்யாவை சந்தோஷிற்கு பெண் எடுக்க சம்மதமா? அப்படி இருந்தால் வீட்டில் பேசுகிறேன்” என்று பேசிக் கொண்டிருந்தான்.

Advertisement