Advertisement

அத்தியாயம் -05

தன் செங்கரம் வீசி நீலக்கடலிருந்து கிழக்கே நீந்தி எழுந்து பொன்மீனாய் ஒளிக்கீற்று வீசி மின்னிக்கொண்டிருந்தான் கதிரவன். ஆயிரம் கவி பாடினாலும் அதன் அழகில் பாதி கூட பாடி முடித்திட முடியாதென்ற எண்ணம் எப்போதும் மகிழ்நிரதியை நிறைக்கும்.

 

அதிகாலையில் எழுந்து விட்ட நாட்களில் எல்லாம் சுபிக்ஷாவை எழுப்பி விட்டாவது அந்த அலைகடலின் அழகை காண வந்துவிடுவாள் மகிழ். மெல்லிய கீற்றாகி மெல்ல மெல்ல மேலேந்து வானிலேரும் கதிரவனை பார்க்கையிலே போராடியும் வென்றிடுவாய் என நாளின் தொடக்கத்திலே நன்நம்பிக்கை எப்போதும் மனதில் எழும்.

 

ரிஷிநந்தன் நினைவில் தானில்லை என்ற ஏமாற்றத்தின் வலி இன்னும் நெஞ்சினோரம் இருந்தது. தன்னையே மறந்தவனிடம் தன்னை நினைவுபடுத்தி தான், தன் செயலுக்கு மன்னிப்பு வேண்ட வேண்டுமா என்றெண்ணத்தில் அதை விட்டுவிட்டாள்.

 

அலைகடலை பார்த்தவாறு மகிழ் நிற்க, கையில் டீ, மாசாலா வடையுடன் மணலில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் சுபி.

 

“நீ எழும்பி விட்டதும் கொலகாண்டுல தான் எழுந்தேன் இருந்தாலும் அதைவிட கொலப்பசி என்னை உன்னோட வரசொல்லிடுச்சி, இந்தாமா போதும் சூரியன் உச்சிக்கி ஏறிற போறான். பெருசுக கூட வாக்கிங் முடிச்சு கிளம்பியாச்சு. பாத்ரூம்ல தண்ணீரை நிப்பாட்டிட போறான், குளிக்கணும், சாப்பிடனும், கிளம்பனும். மோர்னிங் லேப் ஹௌர்ஸ் லேட்டா போனா இன்சார்ஜ் கத்துவான்டி. மகி காது கேட்குதாயில்லையா? ஐயோ கடலோர கண்ணகி சிலை மாதிரியே போஸ் கொடுத்துக்கிட்டு நிக்கிறாளே!” புலம்பியவாறே மண்ணை தட்டிக்கொண்டு எழுந்தாள் சுபி.

 

முன்னே சென்று மகிழின் தோளில் தட்டி அழைத்துக்கொண்டு கிளம்பினாள், இருவரும் சாலையை நோக்கிச் சென்றனர். ஜாக்கிங் உடையில் நெற்றி வியர்க்க ஓடியவாறு வந்துக்கொண்டிருந்தான் ரிஷி. முதலில் பார்த்தது சுபி தான்.

 

“மகி அங்க பாருடி அந்த ஹீரோவை எங்கையோ பார்த்த மாதிரி இருக்குல?” என்க, நிமிர்ந்து பார்த்தவள் சூரியனை கண்ட தாமரையா உள்ளம் மலர்ந்தாள். மீண்டும் ரிஷியை எதிர்பாரா சந்தர்பத்தில் சந்திப்போமென அவள் எதிர்பார்த்ததில்லை.

 

சுபிக்ஷாவின் தலையில் குட்டியவள், “ஹே அது வருணாவோட ப்ரதர், ரெண்டு நாள் முன்ன பார்த்தோமே அது கூடவா மறந்து போச்சு” என்க, “ரெண்டு நாள் முன்ன பார்த்தது கூடவா உனக்கு இன்னும் நியாபகமிருக்கு?” என ஆச்சர்யமாக கேட்டாள் சுபி.

 

அதற்குள் அவன் அருகே வந்திருக்க, “ஹெலோ ப்ரோ” என சுபி அழைக்க திரும்பி பார்த்தவன் மகிழை பார்க்கவும் வருணாவின் தோழிகள் என்ற நியாபகம் வந்தது. அவன் அருகே சென்றவர்கள் இரண்டு நாட்களாக வருணா கல்லூரி வராத காரணத்தால் அவள் நலம் விசாரித்தனர். ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.

 

“ம்ம், அழகான பொண்ணு அண்ணன்னு கூப்பிடவும் தாங்க முடியாம ஓடிட்டார் போல!” என சுபி கேலியுரைக்க, அவளை கிள்ளியவாறு தள்ளிக்கொண்டு சென்றாள் மகிழ்.

 

அதன்பின் அந்த கடற்கரையில் சில முறை மகிழை கண்டிருக்கிறான் ரிஷி. அதே போல் வருணாவின் நண்பர்கள் கூட்டம் வீட்டிற்கு வந்து செல்வதையும் அதில் மகிழ் மட்டும் வருணாவிடம் அதிக நெருக்கமோடு இருப்பதையும் கவனித்திருக்கிறான்.

 

குடும்பத்தாரோடு கோவிலுக்கு சென்ற போதும், ஹோட்டலில் டின்னரின் போதும் மகிழை ஒன்றிரண்டு முறை பார்க்க, வருணாவின் வழி அறிந்து கொண்டு தன்னை பின்தொடர்கிறாளோ என்றே சந்தேகம் கொண்டான். ஏனெனில் ரிஷிக்கு மகிழ்நிரதியுடனான முதல் சந்திப்பு நன்றாகவே நினைவிலிருந்தது அதை வெளிப்படுத்திக் கொண்டால் அதை வாய்ப்பாக்கிக்கொண்டு தன்னிடம் பேசுவாள், நெருங்க முயல்வாள் என்று என்றெண்ணியே தவிர்த்திருந்தான்.

 

ஆனால் மகிழோ கோவிலில் காண்கையில் தெய்வமே சந்திக்க வைத்ததாக எண்ணி உள்ளம் பூரித்தாள். அவனை பார்க்கையில் எல்லாம் ஒரு பரவச அலை தன்னை சுற்றி சுழற்றுவது போலே இருந்தது. மேலும் மேலும் அவன் பிம்பம் சிதையாச் சித்திரமாக நெஞ்சில் படித்தது.

 

சோதித்துப்பார்க்காது எதையும் ஏற்றுக்கொள்ளாத அவனின் குணத்தால் அவள் தூய அன்பு எத்தனை முறை சோதனதைக்குள்ளாக்க படயிருக்கிறது என்பதை அப்போது அந்த பேதை உள்ளம் அறிந்திருக்கவில்லை.

 

அன்று கோகுலாஷ்டமி ஆகையால் அன்றைய ஒருநாள் கல்லூரி விடுமுறை. சுபிக்ஷா அங்கிருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட, மகிழ்நிரதி மட்டும் ஹாஸ்டலில் இருந்தாள். வருணா சுபிக்ஷாவிற்கு அழைக்க, அவள் உறவினர் வீட்டில் இருப்பதாக உரைத்ததும் மகிழை அழைக்க ஹாஸ்டல் சென்றாள்.

 

பெரும்பாலான தோழிகள் வெளியே சென்றுவிட மகிழ் மட்டுமே தனியே இருந்தால் ஆகையால் வருணா தங்கள் வீட்டிற்கு வரும் படி மகிழை அழைக்க, அவளும் குளித்து முடித்து ஒரு மயில் வண்ண டிசைனர் புடைவையில் லேசானா அலங்காரத்துடன் சென்றாள். அவளை கண்டதும் தேவகி அன்போடு வரவேற்க, புன்னகையோடு உள்ளே சென்றாள்.

 

“நல்லவேளை நீ வந்த இல்லை இன்னைக்கு மொத்த வேலையும் என் தலையில தான் எங்கம்மா கட்டிவிட்டுருக்கும்” என வருணா உரைக்க, “கழுதை சீக்கிரம் குளிச்சிட்டு ஒரு புடவையை கட்டிட்டு வந்து பூஜை ரூமை ரெடி பண்ணு” என வருணாவை அதட்டிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டார் தேவகி.

 

“இதோ டென் மினிட்ஸ்ல வந்திடுவேன், அதுக்குள்ளே நீ பூஜை ரூமை ரெடி பண்ணு மகி. இன்னைக்கு மட்டும் அம்மா சொல்லுக்கு நல்ல பிள்ளையா நடந்துகிட்டா இரெண்டு இல்லை நாலு அவுலட்டு தருவாங்க” என படிகளில் ஏறி விரைந்தோடினாள்.

 

சுத்தம் செய்துவைத்திருந்த வெண்கல விளக்குகள் மற்ற பூஜையறை சாமான்களை எடுத்து அடிக்கி வைத்துவிட்டு, பூமாலை தோரணங்களை பூஜை அறைவாசலில் கட்டிவிட்டு, நடுவில் கோலம் வரைந்து பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தாள் மகிழ்நிரதி.

 

மயில் தோகை போலே விரிந்த முந்தானை தரையில் படர்ந்திருக்க, கிளிப் மட்டும் போட்டு விரித்து விட்டிருந்த கார்குழல் அதன் மேலே படர்ந்திருக்க முன்புறமாக திரும்பி கோலமிட்டுக் கொண்டிருந்த மகிழின் முகம் காணாது வருணா என எண்ணி அருகில் வந்தான் ரிஷி.

 

இவ்வளவு அமைதியா வேலை செய்யுற ஆளே இல்லையே இவ அப்படி என்ன தான் வேலை செய்கிறாள் வருணா என்ற ஆர்வத்தில் அமைதியாக அருகில் வந்தவன் அவள் பின் நின்றவாறு குனிந்து பார்த்தான். அதற்குள் தன் பின் யாரோ நிற்பதை உணர்ந்து மகிழ் திரும்ப, தன்னை நோக்கி குனிந்திருந்த ரிஷியை கண்டு பதறி எழ முயன்றாள். அவனோ அறியாது அவள் முந்தானையை மிதித்துக் கொண்டு நிற்க, மண்டியிட்டு அமர்ந்திருந்தவள் எழ முயன்று முடியாது போக வாரி தரையில் விழுந்தாள்.

 

விழுந்ததில் புடவை நழுவிக்கொண்டு இடுப்புமடிப்புகளும் சற்று மேலாக அவள் அழகுகளும் அவனுக்கு ஒரு நொடி காட்சியாக, மறுநொடி பின் நகர்ந்திருந்தான் ரிஷி. அடுக்கி வைத்த பட்டு நூல் திரள்கள் போலே இடுப்புமடிப்பும் மலரிதழ் போன்ற மிருதுவான வெளிர் சருமமும் காற்றுகூட தீண்டியறியா அவளின் ரகசிய அழகுகள். அழகை ரசிக்கவில்லை எனினும் அழகுதான் என கண்டுகொண்ட நொடி ரிஷிக்கு மூச்சடைத்தது. அதே நேரம் மகிழும் புடவையின் முந்தானையை உதறிக்கொண்டு பூஜையறை கதவை பற்றியவாறு எழுந்து நின்றாள்.

 

ரிஷியின் முன் இப்படி விழுந்தெழுந்தது மகிழுக்கு பெரும் அவமானமாக இருந்தது. அவன் முகம் பார்க்கும் தைரியமில்லாது படபடக்கும் பட்டாம்பூச்சி இதயத்தோடு தலை குனிந்திருந்தாள். ரிஷியோ நொடி கூட நிற்காது அப்போதே தன்னறைக்கு சென்றிருந்தான்.

 

“ஏய் என்னடி இது? கோலம் போட சொன்னா குழந்தை மாதிரி பூவெல்லாம் சிதறிவிட்டு விளையாண்டுகிட்டு இருக்கியா?” என்றவாறு வருணா அருகில் வந்தாள்.

 

“இல்லை வரு கை தவறி கொட்டிடுச்சு” என்று குனிய, “சரி விடு இதை நான் பார்த்துகிறேன், அம்மா உனக்கு வேற வேலை தருவாங்க போ” என அனுப்பினாள் வருணா.

 

கரைத்த பச்சரிசிமாவு பாத்திரத்தை அவள் கையில் கொடுத்தவர், கிருஷ்ணபாதம் இடும்படி கூறினார். அவள் தெரியாமல் முழிக்க அவரே அழைத்துச்சென்று மாவிற்குள் உள்ளக்கையை முக்கி தரையில் ஊன்றி இட்டும் காட்டினார். புரிந்து கொண்டு தலையாட்டிவள் வெளிவாசலிருந்து பூஜையறை கிருஷ்ணர் விக்ரகம் வரை இடத் தொடங்கினாள்.

 

தெரியாம தான் விழ வைச்சான் சரி, கொஞ்சம் கை பிடிச்சி தூக்கிவிட்டா தான் என்னவாம்? என காதல் மனம் சிணுங்க, இருந்தாலும் உனக்கு இம்புட்டு ஆசை ஆகாது! என்றது அறிவு. நடுவரில்லாது மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நிகழ, அத்தோடு கொடுத்த வேலையும் முடித்திருந்தாள்.

 

உரிமையாக இந்த வீட்டில் வேலை செய்யும் அளவிற்கு அடிக்கடி வந்து செல்பவள். யாருமறியாமல் அவளே தடுத்தும் கேளாது அவள் விழிப்பார்வை நேசமொடு ரிஷியை வருடிச் செல்வதை அவள் தவிர அறிந்தது அவன் மட்டுமே! என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

 

பூஜை ஆரம்பிக்க, தேவகி அழைத்த பின்னே கீழே வந்தான் ரிஷி. தற்போது தலை பின்னி மல்லிகைச்சரத்தோடு முகம் மலர, மஞ்சள், நீல புடவையில் நின்றிருந்தனர் வருணாவும், மகிழும். பூஜை முடித்து ஆரத்தியை ஒன்றிக்கொண்டு ரிஷி அமைதியோடு நிற்க, வருணாவை பாடுமாறு தேவகி சொல்ல, அவளோ மகிழை கோர்த்துவிட்டாள். மகிழின் பாடலை கேட்பது வருணாவிற்கு மிகவும் பிரியமானது.

 

கிருஷ்ணகானம் என்றால் ராதை இல்லாமலா அவன் மேல் கொண்ட காதலை சொல்லாமலா பாடுவது? நெஞ்சம் நிறைய பக்தியோடு, கண் நிறைய காதலோடு மகிழ் பாட, கேட்போர்கள் உருகி கரைந்தனர். பாடியவளின் பார்வையும் நிலைக்காது ரிஷிநந்தனை சுற்றியே வந்தது. சில நொடிகள் ரிஷி கூட தன்னை மறந்து பக்தியில் அமிழ்ந்தே மீண்டான்.

 

மகிழ்நிரதி பாடி முடிக்க, கலைமகளின் அவதாரம் நீ என வாழ்த்தி ஆசிர்வதித்து பிரசாதம் ஊட்டினார் தேவகி. வருணா போட்டியோடு தனக்கு என கேட்க, சிறு சிரிப்போடு அவளுக்கும் ஊட்டிவிட்ட, சுமைலி முகத்தோடு பல செல்ஃபிகளை கிளிக் செய்துக்கொண்டாள் வருணா. பிரசாதம் வாங்கிக் கொண்டு அறைக்குள் வந்த ரிஷி லேப்டாப்போடு அமர்ந்து விட்டான். முதல் முறையாக அதில் கவனம் பதியாது போக, நிலையில்லாது தடுமாறியது அவன் மனது.

 

ஒருநொடி என்றாலும் தன் பார்வை தவறு என்று ஒருமனம் சொல்ல மறுமனமோ தன் முன் விழுந்து அவளாக இருக்கும் போது தன்பார்வையில் தவறென்ன? என்றது. எப்போதும் தோழிகளோடு வருபவள் இன்றேன் தனியாக வர வேண்டும்? தன்னை ஏன் அவ்வாறு பார்க்க வேண்டும்? உள்நோக்கமில்லாமலா இவ்வாறெல்லாம் செய்கிறாள்?

 

ஏற்கனவே தன்னை ஆர்வமாக பார்ப்பவள், தனக்காகவே தன் தங்கையிடம் நட்பு பாராட்டிக்கொண்டு தன்னை பின் தொடர்பவள், தன் மனம் கவர முயல்பவள் இந்நிலையில் தான் சென்று மன்னிப்பு வேண்டிவது மேலும் தன்னிடம் பேசுவதற்கு தானே வாய்ப்பு வழங்குவது போன்று தானே? என்ற எண்ணத்தில் அமைதியாகி விட்டான்.

 

இந்த சில மணிநேரங்களில் அவள் நினைவு அவனை செயல் படவிடாது முடக்க, அதில் கோபமும் கொண்டான். எரிச்சலுடனே கீழே வர ஹாலில் தேவகியிடம் கைபேசியில் எதையோ காட்டியவாறே வருணா பேசிக்கொண்டிருந்தாள். சுற்றிலும் பார்வையை சுழற்ற மகிழ் இல்லை, கிளம்பிவிட்டாள் போலே என எண்ணியவன் அவர்களின் அருகே வந்தான்.

 

இங்க பாரு, மகி இந்த போட்டோல அழகா இருக்கால்ல? ரொம்ப அழகா பாடுறால, கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு வருணா. திறமை மட்டுமில்லை உன்மேல அன்பும் அதிகம் தான் உனக்கு அடிபட்டதும் ஹாஸ்பிட்டல் கூட்டிவாரது சரி, இருந்தாலும் உனக்காக கண்ணீர் விட்டு துடிக்கிறானா உன் மேல அவளுக்கு பாசம் அதிகம் தான்டி வருணா. இந்தமாதிரி ஒரு பொண்ணை உனக்கு அண்ணியா கூட்டிட்டு வந்தா என் காலத்துக்கு பின்னும் உங்க அண்ணன் தங்கச்சி பந்தம் பிரியாம இருக்கும்என அவர்களின் நட்பை புகழ்ந்து கூறினார்.

 

வருணா அமைதியுடன் தலையாட்ட, ரிஷிக்கு சினத்துக்கு மேல் சினம் பெருகியது. அவள் யாரென்றே அறியாத போதும் அன்னை தரும் புகழுரையை தாங்க முடியவில்லை ஏனெனில் பாசம் காட்டி துரோகம் தந்த உறவுகளால் அவன் கொண்ட காயங்கள் அதிகம். மகிழை பற்றிய சரியான புரிதலின்மை அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாகவே அன்னையும் தன் திருமணத்தை பற்றியே கேட்டுக் கொண்டிருக்க எரிச்சலனான்.

 

அம்மா போதும் இவ்வளவு பட்ட பின்னும் கண்ணீரை நம்பி ஏமாறாதீங்க. பாசமெல்லாம் வெறும் வேஷம், நம்மை சுற்றி இருக்குறவுங்க அவங்களுக்கு நம்மகிட்ட இருந்து என்ன தேவைன்னு பார்பாங்களே தவிர உண்மையில நம்ம நலனை யாரும் பார்க்க மாட்டாங்க. பணத்துக்காக சிரிக்கும் போலி முகங்கள் தான் இன்றைய உலகில் அதிகம், அதுவும் யாருன்னே தெரியாதவுங்களை எல்லாம் இப்படி கண்மூடி தனமா நம்ப வேண்டாம்மா” என்றான்.

 

ரிஷி என்னவோ அன்னையின் வெள்ளை மனதை குறை கூற வாசலில் அதை கேட்டவாறு நின்று கொண்டிருந்த மகிழுக்கு அனைத்தும் தன்னை குறிப்பிட்டு உரைப்பதாகவே தோன்றியது. மணல்துகள் போன்று அவன் பிம்பம் சுமந்து நின்ற அவள் கண்ணாடி இதயம் நொறுக்க, தீரா வலியோடு திரும்பினாள். 

 

டேய் நான் என்ன அந்த பொண்ணை தான் உனக்கு கல்யாணம் செய்து வைக்கப் போறேன்னு சொன்னேனா? அவளை மாதிரியொரு பொண்ணு தானே சொன்னேன். ஏன் நீ என்ன பொண்ணை கல்யாணம் செய்துக்காம ரோபோர்ட் எதுவும் கட்டிக்கப்போறீயா என்ன? ஒரு வார்த்தைக்கு சொன்னதுக்கெல்லாம் எதுக்கு இப்படி குதிக்கிற? ஒருத்தவங்களை பத்தி சரியா தெரிச்சிக்காம இப்படி தான் அவங்கன்னு நாமலே முடிவு பண்ணிக்கிட்டு தப்பா பேசுறதும் தப்பு தான் ரிஷிஎன்றார் தேவகி கண்டிப்புடன்.

 

என்ன பேசினாலும் இறுதியில் தன் திருமணத்துடனே மூடிச்சிடும் அன்னையின் பேச்சுகளை கேட்டு இழுத்து மூச்சை விட்டவாறு முகத்தை சுருக்கினான்.

 

“வாய்ப்பிருக்கு தேவகியம்மா, வாய்ப்பிருக்கு. அண்ணன் அப்படியொரு புரட்சி திருமணத்தை செய்யவும் வாய்ப்பிருக்கு” என வருணா சிரிப்புடனே உரைத்தாள்.

 

தேவகியும் சிரித்தவாறே, “கத்துன கத்துக்கு வயிறு காலியாகிருக்கும் சாப்பிடவாடா கண்ணா” என எழுந்து சென்றார். எவ்வளவு கோபமாக கத்திய போதும் நொடியில் இலகுவாக கடந்து செல்லும் அன்னை, தங்கையின் அன்பில் நெகிழ்ந்தான்.

 

Advertisement