Advertisement

எத்தனை தவித்தாளோ? எவ்வளவு வேதனை கொண்டாளோ? ஏனோ உடனடியாக அவளை பார்க்க அவனுள்ளம் தவித்தது. இப்பொழுதே ரத்தினசாமியை கேட்டிடலாம் தான். ஆனால் அது இன்னமும் ஆபத்து என நினைத்தவன் புழுங்கிய மனதை தனக்குள் புதைத்துக்கொண்டான். அவனின் ஒரே ஆறுதல் ராஜாங்கமும், அஷ்மிதாவும் மட்டுமே. அவனின் புலம்பல்கள் அனைத்தும் அஷ்மியிடம் மட்டுமே.

துவாரகாவை பார்க்க முயன்றாலும் வீட்டை விட்டு அவள் வெளியிலேயே வருவதை போல தெரிவில்லை. பெரிதும் தவித்துப்போனான்.

பதினோராம் வகுப்பில் அவள் அடியெடுத்து வைக்க பள்ளி துவங்கி சிறிது  நாட்களுக்கு பின்னால் அவளை பார்க்க வழக்கமான இடத்தில் அவன் காத்திருக்க அவனின் காரை பார்த்ததுமே கண்டுகொண்டவளின் மனக்கண்ணில் ரத்தினசாமி தெரிய அரண்டுபோய் வேகமாய் சைக்கிளை ஓட்டிக்கொண்டு ஓடியே போனாள்.

இரண்டு மூன்று நாட்கள் அவளின் தவிர்ப்பை தாங்கிக்கொண்டவன் அடுத்தநாள் அவளின் முன்னே சென்று நிற்க பயத்தில் அழுதேவிட்டாள்.

“துவா ப்ளீஸ், இப்படி பேசாம போகாத…” அவளின் கையை பிடிக்க உதறியவள்,

“ஏன் பேசனும்? திரும்பவும் எங்களை போலீஸ்ல புடிச்சு குடுக்கவா?…” உதடுதுடிக்க அழுதுகொண்டே அவள் கேட்க,

“துவா இல்லைடா…” என சமாதானம் சொல்ல அவளின் அழுகை இன்னும் அதிகமானது. அதை கண்டு அவனின் இதயத்தில் ரத்தக்கண்ணீர் தான்.

“நீங்க எங்க மாமா போனீங்க? நாங்க ஆஸ்திரேலியா போறதையும் உங்கட்ட சொல்ல முடியலை. உங்க வீட்டுக்கு வந்தேன். உங்கப்பா என்னை அடிச்சாரு. ரொம்ப மிரட்டினாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தப்ப நீங்களாவது வந்துடமாட்டீங்களான்னு நான் தேடினேன் தெரியுமா?…”

அவளின் அழுகையின் ஊடே எந்த நிமிடம் அவனிடம் ஆறுதல் தேடினாளோ அவனின் அணைப்பிற்குள் புகுந்திருந்தாள் துவாரகா.

அத்தனை நாள் வேதனையையும் அவனிடம் கொட்டி தீர்த்துவிட தவித்தாள். அகிலா அவளிடம் ஆறுதலாய் பேசியிருந்தாலோ இல்லை அதை மறக்க வேறு பேசியிருந்தாலோ கூட இத்தனை தவித்திருந்திருக்க மாட்டாள் துவாரகா.

அங்கிருந்து வந்த பின்னால் வைத்தியநாதனை தான் பார்க்க சென்றதாக சொல்லியதிலிருந்து இருந்த கொஞ்ச நஞ்ச பேச்சுவார்த்தையும் வற்றிப்போனது அகிலாவிற்குள்.

‘கடைசியில் அவர்களின் காலில் விழுந்து கதறியிருக்கிறாளே என் பெண். இப்படி அவர்களின் உதவி நாடி சென்றிருக்கலாமா? என்ன நடந்தாலும் அந்த வீட்டு படி ஏறியிருக்கலாமா? என்கிற ஆற்றாமை அவரை பாடாய் படுத்தியது. தன்மானம் பந்தாடியது.

அதில் மகள் அனுபவித்த துயரும் சேர்ந்துகொள்ள இன்னமும் உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தார். எந்த சூழ்நிலையிலும் இனி சென்னைக்கு செல்லவே கூடாதெனும் வைராக்கியம் கொண்டார்.

அதில் மகளை அரவணைக்க வேண்டும் என்பதை மறந்தார். இனி எந்த சந்தர்பத்திலும் அவர்கள் புறம் செல்ல போவதில்லை. எதற்கு அவர்கள் பற்றிய பேச்சு என்று அதையும் தவிர்த்தார். இப்படி அகிலாவின் தவறுகள் மகள் விஷயத்தில் ஏறுமுகமாய் சென்றுகொண்டிருக்க துவாரகா தேற்றுவார் இன்றி தவித்துப்போனாள்.

அதிரூபனை பார்த்த நிமிடம் அவனிடம் தஞ்சம்புக ஐம்புலன்களும் ஆர்ப்பாட்டம் செய்தாலும் ரத்தினசாமியை கொண்டு அவனிடமிருந்து தள்ளியிருக்க முயன்றவள் அவனின் அன்பின் முன் தோற்றுத்தான் போனாள்.

“ஏன் மாமா இப்படி பண்ணினாங்க உங்க வீட்ல? நாங்க என்ன பண்ணினோம்னு இப்படி எங்களை கஷ்டபடுத்தறாங்க? அம்மா பேசவே இல்ல. யார்க்கிட்டயும் நான் பேசலை. சுரேந்தர் மாமா கூட அம்மாட்ட மட்டும் பேசிட்டு வைச்சுட்டாங்க. யார்க்கிட்டயும் சொல்ல முடியலை. எங்களுக்கு யாருமில்லையா மாமா?…”

“ஹேய் துவா, மாமா இருக்கேன்டா. உன்னை விட்டுட்டு எங்கயும் போகமாட்டேன்…” என ஆயிரம் வாக்குறுதிகள் தந்து அவளை ஆறுதல்படுத்தியவன் அடிக்கடி அங்கு வர துவங்கினான்.

அதுவும் அகிலாவிற்கு தெரியாமல் பார்த்துக்கொண்டவனின் கவனம் காதலிப்பதிலும் இருந்தது. எந்த விதத்திலும் துவாரகாவின் மனம் சஞ்சலப்படும் விதமாய் அவனின் நடவடிக்கைகள் இருந்ததில்லை.

சிறு குழந்தையை போல அவளை அணுகியவனின் மனம் முழுவதும் காதல் தளும்பி நிறைந்திருந்தது. மாதம் ஒரு முறை என இரண்டு வருடங்கள் இப்டியே கழிய அவர்களின் சந்திப்பும் முற்றுபெறும் நாளும் வந்தது.

எப்போதும் வரும் வழியை விட்டு தன் அலுவலக தோழியுடன் எதேர்ச்சையாக துவாரகா வழக்கமாய் வரும் வழியில் வர அவளின் சைக்கிளை இனம் கண்டுகொண்டவர் புருவம் முடிச்சிட்டது. தோழியை அனுப்பிவிட்டு சென்றார்.

அதன் பக்கத்தில் இருந்த கார் வேறு அவரை திகிலடிக்க செய்ய தடதடக்கும் மனதுடன் அங்கே அருகில் சென்று பார்த்தார் அகிலா.

அங்கே ஒரு கல் பெஞ்சில் துவாரகாவிற்கு பாடம் சொல்லிக்கொண்டிருந்த அதிபன் அவளின் தலையில் ஒரு குட்டு குட்டி,

“உனக்கு எத்தனை தடவை இந்த சம் சொல்லிகுடுத்திருக்கேன். இப்பவும் தெரியலைனா உன் கவனம் எங்க இருக்கு முயல்குட்டி?…” என காதை பிடித்து திருக,

“விடுங்க மாமா, வலிக்குது. அன்னைக்கு கவனிக்கலை. இப்ப இன்னொருக்க சொல்லுங்க. கண்டிப்பா கரெக்ட் பண்ணிடுவேன்…” என புன்னகைக்க மகளின் மலர்ந்த முகமும், அதிபனிடம் அவளின் இயல்பான பேச்சும் அகிலாவை புரட்டிபோட்டது.

“துவாரகா…” அகிலா அழைத்ததும் அதிர்ந்து திரும்பியவள் முகம் சடுதியில் வெளிறி அரக்கபரக்க எழுந்து நிற்க அதிபனிடம் அந்த அச்சம் சிறிதும் இல்லை.

அதிபனை அத்தனை கோபமாய் பார்த்த அகிலா துவாரகாவை பார்வையால் எரிக்க அதில் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிய ஆரம்பித்தது.

அவளின் கண்ணீரை துடைக்க கைகள் பரபரத்தாலும் அகிலாவை கண்டு அமைதியாக நின்றான்.

“கிளம்பு வீட்டுக்கு போகலாம்…” என அழைத்ததும் வேகமாய் தன்னுடைய புத்தகப்பையை எடுத்துக்கொண்டு அதிபனை திரும்பி பார்த்துக்கொண்டே அகிலாவின் அருகில் செல்ல,

“இதுதான் நானும் என் பொண்ணும் உன்னை பார்க்கிற கடைசி நாள். உனக்கும் தான்…” என சொல்லி அங்கிருந்து கிளம்ப அவரின் முன்னால வந்து நின்றவன்,

“இதுவரை துவாக்கிட்டையே சொல்லாத ஒண்ணை உங்களை வச்சுட்டு சொல்றேன். ஐ லவ் துவாரகா. என்னைக்கா இருந்தாலும் என் மனைவின்னா அது துவாரகா மட்டும் தான் அத்தை. நீங்களே நினைச்சாலும் இது மாறாது…”

அதிபனிடம் இப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்காத அகிலா அதிர்ச்சியில் உறைந்தே விட துவாரகாவிற்கு சொல்லவே வேண்டாம். அப்படியே சிலையாய் நின்றாள்.

அவளுக்கு அவனின் காதல் புரிந்தாலும் வார்த்தையாய் என்றுமே சொன்னதில்லை. அவளும் அதை கண்டுகொண்டதில்லை. தன்னிடம் அன்புபாராட்டும் ஒருவன். அந்தளவில் அவன் மீது அவளுக்கும் அத்தனை அன்புதான். மறுப்பதற்கில்லை.

ஆனால் இப்படி அகிலாவின் முன்பே அவன் சொல்வான் என எதிர்பார்க்காததால் பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள்.

அகிலாவிடம் அந்த அதிர்வும் சில நொடிகள் தான். அதன் பின் துவாரகாவை இழுத்துக்கொண்டு தன்னுடைய ஸ்கூட்டி நின்ற இடத்திற்கு இழுத்து செல்ல சலனமின்றி அதை பார்த்தபடி நின்றான் அதிரூபன்.

“அம்மா, சைக்கிள்…” என துவாரகா சொல்ல வேகமாய் அதை கீழே தள்ளியவர்,

“ஏறு…” என அழுத்தமாய் சொல்லவும் மறுவார்த்தையின்றி வண்டியில் ஏறிக்கொண்டவள் கண்களை மறைத்த கண்ணீருக்கிடையே அதிபனின் கலங்கலான முகம் தெரிய விம்மிய நெஞ்சத்தை அடக்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டாள்.

“என்னைக்கா இருந்தாலும் நான் இருப்பேன் துவா. வருவேன்…” என சொல்லிக்கொண்டவனுக்கு தெரியவில்லை துவாரகாவை அடுத்து தன் தம்பிகளின் மூலமாக தான் சந்திக்க போகிறோம் என்று.

வீட்டிற்குள் நுழைந்த அகிலாவிற்கு மகளை தண்டிக்க கூட தோன்றவில்லை. வேகமாய் அடுக்களைக்குள் சென்றவர் இரும்பி கம்பியை அடுப்பில் வைத்து பற்றவைத்தார். பார்த்ததும் அவர் செய்ய போகும் விபரீதம் உணர்ந்த துவாரகா,

“அம்மா ஸாரிம்மா. ப்ளீஸ்ம்மா. வேண்டாம்…” என பதறிக்கொண்டு ஓட,

“அங்கயே நில்லு துவா…” என கை நீட்டி எச்சரிக்க தாயின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டே பழக்கப்பட்ட துவாரகா தேம்பலுடன்,

“அம்மா ப்ளீஸ்ம்மா, அம்மா. இனிமே மாமாவை பார்க்க மாட்டேன்மா. நம்புங்கம்மா. ப்ளீஸ்…” என கதற,

“அவன் எத்தனை நாளா உன்கூட பேசறான்?…” வெறுமை நிறைந்த குரலில் கேட்க,

“ரெண்டு வருஷமா, நாம சென்னை போய்ட்டு வந்த பின்னால இருந்தே…”

“என்கிட்டே ஏன் சொல்லலை?…”

“நீங்களா கேட்காம பேசாம நான் பேசினதில்லையேம்மா. நானா எப்படி சொல்ல?…” வழியும் கண்ணீருடன் மகள் கேட்க ஒரு நொடி அப்படியே சமைந்துவிட்டார்.

‘பேசுவதற்கு கூட என் மகளுக்கு நான் இடம் கொடுக்கவில்லையா? ஒருவகையில் அவனிடம் அவள் மனம் போனதற்கு நானுமே காரணம் தானே? ஒரு தாயாய் நான் என்னிடத்தில் நின்று தானே யோசித்தேன். என் மகளின் மனதை பார்க்க தவறிவிட்டேனே?’ என  தனக்குள் தவித்தவர் வேகமாய் அந்த கம்பியை எடுத்து தன் காலுக்கு சூடிட்டுக்கொள்ள,

“அம்மா…” என அலறிய துவா,

“இனிமே சத்தியமா அவரை பார்க்கவோ பேசவோ மாட்டேன். இனிமே நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன். சத்தியம்மா. சத்தியம்மா. நீங்க இப்படி பண்ணினதுக்கு எனக்கு சூடு வைங்கம்மா…” என அழுது கரைந்தவளை வேகமாய் வந்து அணைத்துக்கொண்டவரின் கண்களிலும் கண்ணீர் மழை.

“இல்லைடாம்மா. இல்லை…” என அணைத்தவரின் கைகளுக்குள் இதமாய் அடங்கிக்கொண்டவள் அப்படியே உறங்கியும் போனாள். தரையில் அமர்ந்தவாக்கில் இருந்த அகிலாவின் கண்களில் அப்படி ஒரு கண்ணீர்.

அத்தனை வருடங்கள் இரும்பென இருந்தவரை மகளின் வார்த்தை பொடிப்பொடியாய் சிதறசெய்தது.

‘என்னிடம் மனம் விட்டுகூட பேச விடாத அளவிற்கு என் மகளுக்கு தடை விதித்துவிட்டேனே?’ என பொங்கி பொங்கி அழுதார்.

“இனி இங்க வேண்டாம்மா. அம்மா நீ நினைச்ச மாதிரி இருப்பேன். கண்டிப்பா உன்னை இனியாவது நல்லா பார்த்துப்ப்பேன்டா. என் செல்லமே…” என உறங்கிக்கொண்டிருந்தவளின் நெற்றியில் முத்தம் பதிக்க அன்றுதான் மகளை பெற்றெடுத்ததை போல அவரினுள் அப்படி ஒரு உணர்ச்சி பிராவகம் பெருக்கெடுத்து.

சுரேந்திரனிடம் கூட சொல்லாமல் துவாரகாவை அழைத்துக்கொண்டு சேலத்திற்கு வந்துவிட்ட அகிலா அதன் பின் துவாரகாவிடம் அத்தனை இறுக்கம் காண்பிக்கவில்லை.

ஆனாலும் துவாரகாவிடம் அதிக நெருக்கமும் காண்பிக்கவில்லை. அவளுடன் பேசினார் தான். ஏனோ ஒருவித தயக்கம் அவரை ஆட்கொள்ளதான் செய்தது.

அதன் பின்னான நாட்களில் துவாரகாவிற்கு அதிபனின் நினைவு வரத்தான் செய்யும் அவனுடைய போன் நம்பர் எழுதியிருந்த பேப்பரை தன் கைகளுக்குள் பொத்திவைத்து அதன் மூலம் அவனின் முகம் காண்பாள். எக்காரணத்தை கொண்டும் அவன் மேல் தான் கொண்ட நேசத்தை அவள் அகிலாவிடம் காண்பித்துக்கொள்ளவில்லை.

மூன்று வருடங்கள் தங்களுக்கென ஒரு உலகத்தினுள் வாழ்ந்துகொண்டிருக்க சுரேந்திரனின் மகளின் திருமணம் பற்றி அறிந்துகொண்டவர் அந்த பெண்ணிற்கு திருமணபரிசு அனுப்ப நினைத்து அதன் பின்னே தான் அவரிடம் தொடர்புகொண்டார்.

சுரேந்திரனோ கட்டாயம் துவாரகாவையும் அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு வந்தே ஆகவேண்டும் என வற்புறுத்த அவரின் மனைவியும் வேறு அதிசயமாய் அழைத்துவிட மறுக்கமுடியாமல் சுரேந்தர் இத்தனை வருடம் தங்களுக்கு உறுதுணையாய் இருந்த நன்றிகடனிற்காய் செல்ல ஒப்புக்கொண்டார்.

இதுதான் விதியோ? சென்னை பக்கமே செல்லகூடாது என வைராக்கியமாய் இருந்தவரை இப்படி ஒரு ரூபத்தில் விதி அங்கேயே அழைத்து சென்றது.

செல்வதும் செல்கிறோம் சொல்லாமல் சென்று இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என துவாரகா ஆசைப்பட மகளின் இந்த ஆசையையாவது நிறைவேற்றுவோம் என நினைத்தவர் சுரேந்தரிடம் தகவல் சொல்லாமல் கிளம்பிவிட ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தவர் பாதையை கடக்க முயல விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாயை ரத்தவெள்ளத்தில் கண்ட துவாரகாவிற்கு என்ன செய்வதென புரியாமல் உடமைகளை மறந்து ஹாஸ்பிட்டலுக்கு சென்றுவிட இப்படி விதி இழுத்த இழுப்பிற்கெல்லாம் அவர்கள் வாழ்க்கை இங்கும் அங்குமென இழுபறியானது.

சுரேந்திரனின் முகவரி, அதிபனின் போன் நம்பர் என அனைத்தும் உடமைகளுடன் பறிபோனது. துவாரகா திக்குதிசை தெரியாமல் பரிதவித்து கடைசியில் ரத்தினசாமியின் வாசலில் தான் சென்று நின்றாள்.

அது தன் மகளின் எதிர்காலத்தில் இப்படி ஒரு மாற்றம் கொண்டுவரும் என்பதையும் அவர் எதிர்பார்க்கவே இல்லை.

ஒரு பெருமூச்சுடன் அனைத்தையும் நினைத்து பார்க்கவே மூச்சு முட்டும் இந்த நினைவுகளை என்றுமே நினைக்க விரும்பாத அகிலாவினுள் இன்று அதன் பாதிப்பும் அதிகமானது. இன்னும் தன்னை இந்த விதி எங்கெல்லாம் கொண்டு சென்று நிறுத்த போகிறதோ என்கிற நினைவுகளுடன் கண்ணயர்ந்தார் அகிலா.

“அகிலாம்மா…” என கதவை தட்டும் ஓசையில் கண் விழித்தவர் எழுந்து சென்று கதவை திறக்க சிவகாமி தான் நின்றுகொண்டிருந்தார்.

“சொல்லுங்க சிவகாமி…” என,

“உங்களை அழைச்சிட்டு போக அதிரூபன் ஸார் கார் அனுப்பியிருக்கார்…” என்றதும் ஒரு நிமிடம் மூளையே மரத்துவிட்டதை போல தோன்றி மீண்டும் தெளிவு பெற அவரின் முகத்தையே சிவகாமி பார்த்திருக்க அகிலா முடிவெடுத்தவராக,

“ஓகே, ஒரு அரைமணி நேரம் வெய்ட் பண்ண சொல்லுங்க. நான் கிளம்பி வரேன்னு…” என்று சொல்லி அனுப்பவும் அது சிவகாமியின் முகத்தில் ஒருவித ஆச்சர்யத்தையும், மகிழ்வையும் வெளிப்படுத்தியது.

“ஓகே அகிலாம்மா…” என சொல்லி அவர் சென்றுவிட மீண்டும் கதவை அடைத்த அகிலா மூச்சை ஒரு நொடி உள்ளிழுத்து பின் ஆசுவாசப்பட்டவர்,

“கஷ்டங்கள் என்னைக்குமே என்னை பலவீனப்படுத்த கூடாது. அதை என்னோட பலமா தான் நான் பார்க்கனும். இதையும் பார்த்திடறேன்…” என சொல்லிக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தார்.

அடுத்த இரண்டுமணி நேரத்தில் அந்த கார் அதிரூபனின் வீட்டு வாசலுக்கு வந்து நின்றது.

Advertisement