Advertisement

அகிலாவின் மனம் அதன் பின் ஒரு நிலையில் இல்லை. துவாரகாவை முன்பை விட அதிகமாக கவனிக்க துவங்கினார்.

மேலும் இரண்டு மாதங்கள் கடந்தும் துவாரகா எப்பொழுதும் போலவே இருக்க நிம்மதியாக தன் வேலையை அகிலா பார்க்க துவங்கிய நேரம் அதிபனின் வரவு மீண்டும் ஆரம்பித்தது.

முதலில் அவனிடம் பேசவே பயந்த துவாரகா அதன் பின் அவனின் பேச்சிலும் அன்பிலும் அவன்பால் சாய ஆரம்பித்தாள்.

காதல் சார்ந்த வார்த்தைகள் இல்லையென்றாலும் அவனின் பார்வையில் ஒருவித நட்பையும் தாண்டிய அன்பையும், உரிமையையும் உணர ஆரம்பித்தாள். பற்றுகோலின்றி ஏதோவென நகர்ந்துகொண்டிருந்த வறட்சியான வாழ்க்கைக்கு நடுவே அவனின் வரவு அவளின் நாட்களை இனிமையாக்கியது.

அகிலா சரியாக இருந்திருந்தால் இந்த இடத்தில் அதிபனை துவாரகா தன்னுடைய வாழ்க்கைக்குள் அனுமதித்திருப்பாளா என்பது கேள்விக்குறிதான்.

துவாரகாவிற்கு நடந்தவைகள் தெரியும் என்றாலும் அதிபனின் அணுகுமுறையில் அவன் சரி. அவனின் குடும்பத்தினர் தான் தவறு என்கிற அளவில் தான் அவளின் வயதுக்குரிய எண்ணம் இருந்தது.

அதிபனுக்குமே எக்காரணத்தை கொண்டும் துவாரகாவை இழக்க அவன் மனம் விரும்பவில்லை. அடிக்கடி அவனுடைய உடுமலைபேட்டை பயணம் ரத்தினசாமியை யோசிக்க வைத்து மகனிடம் கேட்க வைக்கவுமே அதிபன் உஷாராகிவிட்டான்.

துவாரகாவை பார்க்காமலும் இருக்க முடியாது. அதே நேரம் அவளுக்கும் எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என்பதில் தெளிவாக இருந்தவன் அகிலாவின் படிப்பையும் அனுபவத்தையும் வைத்து ராஜாங்கத்தின் மூலம் வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்தான்.

இனியும் அவர்கள் இங்கேயே இருந்தாள் தன்னால் தன்னுடைய மனதை கட்டுக்குள் வைத்திருக்க முடியாதெனும் நம்பிக்கையின்மை.

ராஜாங்கம் முதலில் மறுத்தாலும் பின் அதிபனின் உறுதியில் அவனின் வேண்டுகோளுக்கு சம்மதம் தெரிவித்து ஏற்பாடும் செய்தாகிவிட இப்பொழுது சுரேந்தரிடம் சென்றே ஆகவேண்டிய சூழ்நிலை அதிபனுக்கு.

வேறு எந்த வகையிலும் இதை அகிலாவிடம் தெரிவிக்கவோ ஒத்துக்கொள்ள வைக்கவோ முடியாதென்பதால் சுரேந்திரனின் மூலம் இதை செய்ய முடிவு செய்து அவரை சந்திக்க சென்றவனை தாளித்துவிட்டார் சுரேந்திரன்.

“நீயெல்லாம் என்னடா மனுஷன்? அப்பன் அம்மாவோட வாழ்க்கையை கெடுத்தான். மகன் நீ அந்த பொண்ணு வாழ ஆரம்பிக்கிறதுக்கு முன்னவே மொத்தமா அழிச்சிட பார்க்கிற இல்ல…” என கொந்தளித்தவரை கண்டு ஒரு நிமிடம் திகைத்தவன் பின் பேசி பேசியே வழிக்கு கொண்டு வர ஆரம்பித்தான்.

“என்னைக்கு இருந்தாலும் துவாரகா தான் என்னோட மனைவின்னு நான் முடிவு செஞ்சு பல நாள் ஆச்சுங்க சுரேந்திரன் ஸார். இதை யார் நினைச்சாலும் மாத்த முடியாது…” என சூளுரைக்க,

“உன் அப்பன் நினைச்சா மாத்துவான். ஏன் அந்த குடும்பம் இருக்கிற இடம் கூட தெரியாம் அழிச்சுடுவான். ஏனோ அகிலா விலகி போனதால உயிரோட போனா போகுதுன்னு விட்டு வச்சிருக்கான். நீ திரும்பவும் ஆரம்பிச்சு வச்சு மொத்தமா அவங்க நிம்மதியான வாழ்க்கைக்கு தீ வைச்சிடாதப்பா. உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன்…”

கோபத்தில் திட்டியவர் கெஞ்சலில் இறங்கிவிட ரத்தினசாமி மேல் அத்தனை ஆத்திரம் எழுந்தது அதிபனுக்கு. ஆனால் இப்பொழுது எதையும் காட்ட முடியாதே?

“நீங்களே சொல்றீங்க எங்கப்பா ஏதாவது செஞ்சிடுவாருன்னு. எத்தனை நாள் தான் இப்படி அவருக்கு பயந்து அவங்க வாழ முடியும்?…”

“பயந்தா? அதுவும் அகிலாவா? போடா. அகிலா விலகி தான் போய்ருக்கா. அவ பொண்ணுக்காக. பயந்துன்னு உன் அப்பன் தான் நினைச்சுட்டு இருக்கான்…”

“ஓகே விலகி போய்ட்டாங்க. எத்தனை நாள்? இதுவும் துவாவை தொடறாதுன்னு நீங்க நினைக்கறீங்களா? என்னைக்கா இருந்தாலும் அகிலா அத்தையையும், துவாவையும் என்னோட அப்பா ஒரு பிரச்சனையா தான் பார்ப்பார்…”

அதிரூபன் சொல்லியது ஒரு விதத்தில் சரியென தோன்றினாலும் முரண்டியது.

“அதுக்கு உன்னை கட்டிக்கிட்டு நித்தம் அந்த பொண்ணு நரகத்தை அனுபவிக்கனுமா?…” விடாமல் சுரேந்திரன் பேச,

“அட ஏன் ஸார் புரிஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதம் பன்றீங்க? அதுக்காகவா நான் இவ்வளவு கஷ்டப்படறேன்? அவளோட சந்தோஷத்திற்கு நான் பொறுப்பு. நீங்க தான் கொஞ்சம் மனசு வைக்கனும்…”

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதை போல அதிபன் பேச பேச சுரேந்திரன் கரைய தொடங்கினார்.

அதிபன் சொல்வதை போல துவாரகாவிற்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைத்துவிட்டால் போதும். அது அதிபனின் மூலமாக இருந்தாலும் சரி என ஒரு மனம் கூறினாலும் இப்போதைக்கு வெளிநாட்டிற்கு சென்றுவிடட்டும்.

அதன் பின்னால் அங்கேயே ஒரு நல்ல வரனாக பார்த்து அவளுக்கு திருமணத்தை முடித்து அங்கேயே செட்டில் செய்துவிடவேண்டும் என்று இன்னொரு மனம் கூற தான் நினைத்ததை காட்டிக்கொள்ளாமல் போனால்போகுதென்பதை போல ஒப்புக்கொண்டார்.

அவரின் எண்ணவோட்டத்தை புரிந்துகொண்டதை போல அதிபன் மனதிற்கு சிரித்தவன் எப்போது எப்படி அகிலாவிடம் பேசவேண்டும் என பாடம் எடுக்க அதில் எரிச்சலுற்று,

“இங்க பாருப்பா, நான் சொன்னதும் அவ்வளவு சீக்கிரம் அகிலா சம்மதிச்சிட மாட்டா. அவளுக்கா போகனும்னு தோணினா மட்டும் தான் போவா…” என சொல்ல,

“அவங்களை கிளப்ப வேண்டியது என்னோட கடமை. நான் பார்த்துப்பேன்…” என்றவன் சுரேந்திரனிடம் பேசிவிட்டு அடுத்து செய்யவேண்டியதை யோசிக்க ஆரம்பித்தான்.

அடுத்தடுத்து இரண்டுமுறை அகிலாவின் பார்வையில் படும் படி துவாரகாவை பார்க்க முயல அவருக்குள் பெரும் பிரளயமே உருவானது.

முதலில் சுரேந்திரன் ஆஸ்திரேலியா வேலையை பற்றி சொல்லும் பொழுது பெரிதாக எடுத்துக்கொள்ளாதவர் இப்பொழுது யோசிக்க ஆரம்பித்தார். துவாரகாவின் எதிர்காலத்தை முன்னிட்டு கிளம்பவும் முடிவு செய்துவிட்டார்.

அதிபனை கூப்பிட்டு கண்டித்துவிட தோன்றினாலும் அதற்காகவேணும் அவனிடம் பேச்சை ஆரம்பிக்க அகிலாவிற்கு விருப்பமில்லை. இவர்களின் மூச்சுக்காற்று தொடாத தூரத்திற்கு சென்றுவிடத்தான் தோன்றியது.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததும் கிளம்புவதற்கு அத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சுரேந்திரனிடம் தகவல் தர அவரோ முக்கிய வேலையாக சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக கூற பல வருடங்களுக்கு பின்னால் சென்னைக்கு  தன் மகளுடன் பயணத்தை மேற்கொண்டார் அகிலா.

அது எத்தகைய தாக்கத்தை தங்கள் வாழ்வில் ஏற்படுத்த போவதென்று அறியாமல் சென்னை வந்தவர்கள் ஒரு ஹோட்டலில் அறையெடுத்து தங்கி இருக்க அதே ஹோட்டலுக்கு வைத்தியநாதன் ஏதோ வேலையாக வந்திருக்க அத்தனை வருடமாக வைத்தியநாதனை கண்காணிக்கும் ஆள் அகிலவேணியை பற்றி சொல்லிவிட ஆரம்பித்தது பெரும் பிரச்சனை.

அகிலா தான் வைத்தியநாதனை வர சொல்லியிருப்பதாக நினைத்த ரத்தினசாமி பொய் புகாரில் அகிலாவை கைது செய்ய ஏற்பாடு செய்ய அனைத்தும் கண் மூடி திறக்கும் முன்பு நடந்தேறியது.

இரவு விமான பயணம் இருக்க ஹோட்டலில் காலை அகிலவேணி அனைவரின் முன்னாலும் கைது செய்யப்பட்டார். என்ன நடக்கிறது என உணரும் முன்பே அனைத்தும் நடந்துவிட்டிருக்க அறியாத ஊரில் துவாரகா தனித்து விடப்பட்ட குழந்தையென தவித்து போனாள்.

“பாப்பா…” என ஆட்டோ ட்ரைவர் வந்து நிற்க,

“அங்கிள் அம்மாவை ஏன் கூட்டிட்டு போறாங்க? அம்மா எந்த தப்புமே செய்யலை அங்கிள்…” என அழ அவருக்கு பாவமாக போனது.

அகிலாவும், துவாரகாவும் வந்த முதல் நாள் அவர் தான் வெளியில் அழைத்து செல்வதும் போவதுமாய் இருந்தார். அதனால் அவராகவே உதவ வந்து,

“அழக்கூடாது பாப்பா. உனக்கு இங்க வேற யாரையாவது தெரியுமா?…” என கேட்டதும் முதலில் திகைத்தவள் பின்பு சுரேந்திரனின் மொபைல் எண்ணுக்கு தன் தாயின் எண்ணிலிருந்து அழைத்து பார்த்தாள். அழைப்பு செல்லவே இல்லை.

உதடு பிதுக்கிக்கொண்டு செய்வதறியாமல் அலைப்புறுதலுடன் நின்றாள்.

எப்பொழுதுமே சுரேந்திரன் மட்டுமே தங்களை வந்து பார்ப்பார். அதிலும் சுரேந்திரனின் குடும்பத்தினருக்கு அவ்வளவாய் தங்கள் மீது பிடித்தம் இல்லை என்பது ஓரளவிற்கு துவாரகாவிற்கும் தெரியும்.

மேலும் யோசிக்கவும் வழியின்றி ரத்தினசாமி பற்றி சொல்ல,

“அவரு உங்களுக்கு சொந்தமுங்களாம்மா?…” ஆட்டோ ட்ரைவரிடம்  தானாய் ஒரு மரியாதை வந்தது. தயக்கமாய் தலையாட்டினாள் துவாரகா.

ஒன்று அதிபனை பார்த்துவிடவேண்டும். இல்லையென்றால் தன் தந்தையையாவது பார்த்துவிடவேண்டும் என நினைத்தாள் அச்சிறு பெண்.

சென்ற நேரம் ரத்தினசாமி மட்டுமே வீட்டில் இருக்க அதிபனோ, வைத்தியநாதனோ, பூரணியோ இல்லாதது துவாரகாவின் துரதிர்ஷ்டமே.

கேட்டில் நின்றவளை வாட்ச்மேன் விரட்ட வைத்தியநாதனை பார்க்காமல் போகமாட்டேன் என துவாரகா கெஞ்சிக்கொண்டு நிற்க ரத்தினசாமியின் கவனத்திற்கு சென்றது துவாரகாவின் வருகை.

செக்யூரிட்டி தகவல் சொல்லவும் வேகமாய் வெளியே வந்தவர் துவாரகாவை பார்த்ததும் வந்ததுமே அறைந்துவிட்டார்.

“எந்த காட்டில பிறந்த நாய் நீ, என் மாப்பிள்ளையை அப்பான்னு கூப்பிடுவியா? கொலை பண்ணிடுவேன் பார்த்துக்க…” என மிரட்ட மிரண்டுபோன துவாரகா,

“இனி கூப்பிடலை அங்கிள். ப்ளீஸ் அம்மாவை அரஸ்ட் பண்ணியிருக்காங்க. நீங்க ஹெல்ப் பண்ணுங்க. இங்க எனக்கு வேற யாரையும் தெரியாது அங்கிள். ப்ளீஸ்…” என காலை பிடித்து துவாரகா கெஞ்ச,  

“ச்சீ, தொடாத. நான் தான் அரஸ்ட் பண்ண சொன்னேன். அதுக்கு மேலையும் செய்ய சொல்லுவேன். இங்க யாரையும் தெரியாத உனக்கு உங்கம்மா எங்களை மட்டும் சொல்லி வளர்த்திருக்காளோ? இப்ப புரியுது உங்க திட்டம். இனியும் சும்மா விடமாட்டேன். உங்கள கண்காணாத இடத்துக்கு நான் அனுப்பலை….”

“வேண்டாம், வேண்டாம் அங்கிள். நாங்க போய்டறோம். அம்மாவை மட்டும் விட சொல்லுங்க. இனி இங்க நாங்க வரவே மாட்டோம். நாங்க என்ன பண்ணினோம்? விட்டுடுங்க அங்கிள்….” என கதற,

“கேள்வியா கேட்க? போலீஸ் ஸ்டேஷன்லயே விஷம் வச்சு உன் அம்மா சோலியை முடிக்கிறேன் பாரு. என் முன்னாலையே நின்னு கேள்வி கேட்கிற?. உன்னையும் சேர்த்து உங்கம்மாவோட அனுப்பிடறேன். என்ன துணிச்சல்?…” என தன் மொபைலை எடுக்க பயந்துபோனாள் துவாரகா.

“வேண்டாம், வேண்டாம். நாங்க போய்டறோம். நான் போய்டறேன். அம்மாக்கு எதுவும் குடுக்க வேண்டாம். விட்டுடுங்க…” என மன்றாட,

“இன்னொரு முறை என் கண்ணுல பட்டீங்க அன்னைக்கு தான் உங்களுக்கு கடைசி நாள்…” என எச்சரிக்க அழுதுகொண்டே வெளியே நடந்தாள் துவாரகா.

“என்னம்மா? உன் அப்பாவை பார்த்தியா?…” என கேட்கவும் வெடித்து அழுதவளின் அழுகை ஆட்டோ ட்ரைவரின் மனதை பிசைந்தது.

“இப்ப என்ன பாப்பா செய்ய?…”

“அம்மாட்ட போகனும் அங்கிள். கூட்டிட்டு போறீங்களா?…” என இறைஞ்சலாய் கேட்கவும் அவரும் கொண்டுபோய் விட்டுவிட்டு,

“நான் இங்க ரூம் எடுத்து தங்கி இருக்கேன்மா. குடும்பத்தோட இருந்தா கூட உன்னை பாதுகாப்பா தங்க வச்சிருப்பேன். அதுவும் இல்லாம போலீஸ் கேஸ். என்னால முடிஞ்ச அளவுக்கு தான் உதவ முடியும்…” என பேச அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை துவாரகா.

உள்ளே சென்று தன் தாயை பார்க்க முயல அவளை உள்ளே யாரும் அனுமதிக்கவே இல்லை. நாள் முழுவதும் பயந்து அங்கேயே ஒரு ஓரமாய் அமர்ந்துகொண்டவளின் உடல் உபாதையின் மாற்றங்கள் வேறு படுத்திவைக்க அழ கூட முடியாமல் அமர்ந்த இடம் விட்டு அசையவே இல்லை.

குறுகிக்கொண்டு அவள் அமர்ந்திருக்க உள்ளே அகிலவேணியின் நிலை சொல்லவே வேண்டாம். துவாரகா இங்கே தான் இருக்கிறாள் என தெரிந்தும் மகளை பார்க்க தாயுள்ளம் தவித்தது.

“இன்ஸ்பெக்டர், யாரும் அவளுக்கு ஏந்துக்கிட்டு வந்திருக்காங்களா?…” ரத்தினசாமி மாலை நேரம் சாவகாசமாய் போன் செய்து கேட்க,

“ஸார், நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. இவங்க ஆஸ்திரேலியா போறதுக்காக தான் சென்னைக்கே வந்திருக்காங்க…” என சொல்ல,

“என்னய்யா சொல்ற? அப்ப என் மாப்பிள்ளையை பார்க்க வரலையா?…”

“இல்லைங்க ஸார். இன்னைக்கு உங்க மாப்பிள்ளையும் வேற ஒரு ஆளை பார்க்க தான் அங்க வந்திருக்காரு. வந்ததும் அவரு கிளம்பிட்டாரு. இவங்க அவரை பார்க்க கூட இல்லை…”

“அடடா?…” என சொல்ல,

“என்ன ஸார் யோசிக்கறீங்க? விட்டிருந்தா இவங்க கிளம்பியிருப்பாங்க. உங்களுக்கும் பிரச்சனையே இருந்திருக்காது. இப்ப என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்க…” என இன்ஸ்பெக்டர் பேச,

“ஹ்ம்ம், இருக்கட்டும் இதுவும் நல்லதுக்கு தான். இனி சென்னை பக்கம் வரனும்னு அவளுங்க மனசுல ஒரு நினைப்பும் வரக்கூடாது. இன்னைக்கு இந்த பயம் காலம் முழுசும் அவளுங்களுக்கு இருந்துட்டே இருக்கனும். இன்னைக்கு ஒரு ராத்திரி வச்சிருந்து நாளைக்கு அனுப்பிடு…” என்றவர்,

“பொம்பளப்புள்ளைய்யா, கைய்யகிய்ய வச்சுடாத. புரியுதா? வந்த மாதிரியே போகனும் ரெண்டும்…”

“கண்டிப்பா ஸார். நீங்க சொல்லி நான் மறுப்பேனா? என்ன ஒன்னு ரூல்ஸ மீறி ஸ்டேஷன்ல ரெண்டு லேடீஸை வச்சிருக்கேன். வெளில தெரிஞ்சா எனக்குத்தான் பிரச்சனை…” இன்ஸ்பெக்டர் வழிந்துகொண்டு பேச அது புரிந்ததை போல,  

“யோவ் காசு வேணும்னா கேட்டு வாங்கிக்கனும். அத விட்டுட்டு ரூல்ஸ் அது இதுன்னு சாக்கு சொல்லிட்டு இருக்காத. நீயும் நானும் பார்க்காத ரூல்ஸா?…” என கேட்டு சிரிக்க அங்கே பணம் என்னும் பேய் தலைவிரித்தாடியது.

இரக்கமும் பரிதாபமும் கூட இருக்க அஞ்சும் அந்த நயவஞ்சக கூட்டத்தின் நடுவில் இரு உயிர்கள் பரிதவித்து இருக்க பாவ புண்ணியங்கள் கூட தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது.

மறுநாள் காலையில் அகிலா வெளியில் அனுப்பப்பட வேகமாய் ஒடிவந்தவரின் கண்களில் அரைமயக்க நிலையில் கிடந்த தன் மகளின் நிலை பெற்ற வயிற்றில் தீயை பற்றவைத்தது.

கலங்கிய கண்களில் இருந்து கடுகளவும் கண்ணீர் வழிந்துவிடாமல் உள்ளிளுத்தவர் அங்கிருந்த ஒரு ஆட்டோவை அழைத்து துவாரகாவை அதில் ஏற்றினார்.

ஸ்டேஷனில் இருந்த ஒரு பெண் காவலர் வந்து அகிலாவின் கைபை முதலான உடமைகளை திருப்பி கொடுக்க வந்தபொழுது துவாரகா அமர்ந்திருந்த இடத்தை பார்த்து அதிர்ந்துபோனார்.

“மேடம் எங்களுக்கு இது தெரியாது…” என வருத்தத்துடன் சொல்ல பதிலின்றி அவரை பார்த்த அகிலாவினுள் இருந்த கொஞ்ச நஞ்ச மென்மையும் கடுமை பூசியது.

மெல்லிய பூக்களை கொண்டு பெண்மையை ஒப்பிடும் உலகத்தில் ஒரு பெண் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மென்மையை உளிகொண்டு செதுக்கிய கல்லாய்  மாற்றிக்கொண்டிருந்தார்.

பதிலே பேசாமல் இகழ்ச்சியாய் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆட்டோவில் அகிலா ஏறிவிட அப்பெண் காவலருக்கு அத்தனை குற்றவுணர்ச்சியாய் போனது.

மீண்டும் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வர அங்கு அவர்கள் வேறு ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்க மீண்டும் ஒரு போராட்டம். பின் தன்னுடைய உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்ப அனுமதி கேட்க பின் துவாரகாவின் நிலையை வைத்து அரை நாள் மட்டும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இறுக்கத்துடன் உள்ளே வந்தவர் தானும் குளித்து மகளை குளிக்கவைத்து அவளுக்கு வேறு உடை அணிவிக்கும் வரை துவாரகாவிற்கு உணர்வே இல்லை. ஒரு வழியாய் அங்கிருந்து கிளம்பியவர்கள் மீண்டும் உடுமலைபேட்டைக்கே வந்துவிட அடுத்த ஒரு மாதமும் தாங்கள் அனுபவித்த வேதனையின் தாக்கம் குறையவே இல்லை.

முதலில் வேலை பார்த்த இடத்திலேயே மீண்டும் வேலைக்கு சேர்ந்துவிட அவரின் வேலை மீதான அபிப்ராயத்தில் மிக சுலபமாகவே வேலை கிடைத்தது.

மீண்டும் துவாரகா அதே பள்ளியில் படிப்பை துவங்க சுரேந்தரின் மூலம் அனைத்தையும் கேள்விப்பட்ட  அதிபனின் ரத்தம் மொத்தமும் கொதித்தது.

அப்பொழுதும் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருந்தவன் நெஞ்சம் முழுவதும் துவாரகாவின் மீதான தேடல் தான்.

Advertisement