Advertisement

அத்தியாயம் 1

மும்பாயிலுள்ள அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலில் பிரதீபன், திவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி aநடந்து கொண்டிருந்தது. பிரதீபன், மற்றும் ரிஷியின் தொழில்துறை சார்ந்தவர்களுக்காகவே இந்த விழா.

ரிஷியின் திருமணமோ! எதிர்பாராதவிதமாக நடந்து, கயல்விழியும் ஐந்து வருடங்களாக பிரிந்திருந்தமையால், ரிஷியின் மனைவி, மகனை அறிமுகப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, புதுமண ஜோடிகளுக்கு அருகே இருந்து ரிஷியும் மனைவிக்கு அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தான்.

பெரிய, பெரிய தொழில் ஜாம்பவான்களும், பணக்காரர்களும் மட்டுமே கலந்து கொள்ளும் வரவேற்பு நிகழ்ச்சி என்பதால் அவர்களை மகிழ்விக்க, மெல்லிசை மழையும் அவர்களை ஒரு பக்கம் குளிர்விக்க, புப்பே முறையில் வித விதமான உணவுகள், சைவம், அசைவம், சிற்றுண்டி வகைகள் கூடவே மதுபானமும் என்று கடை பரப்பி வந்தவர்களை கவனிக்க வென்றே ஒரே மாதிரியான உடையில் பணியாளர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர்.  

வந்திருந்த அனைவரது கண்களும் மணமக்களை தான் பார்த்திருந்தார்கள். “மேட் போ ஈச் அதர்” என்ற வாசகத்துக்கு ஏற்றது போல் இருவரின் ஜோடி பொருத்தமும் அவ்வளவு அம்சமாக இருந்தது.

ப்ரதீபனுக்கு முப்பது வயதென்று அவனே! சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள். முறையான  உடற்பயிர்ச்சியும், ஒழுங்கான சாப்பாட்டு முறையும் அவன் உடலை கர்ச்சிதமாக வைத்திருக்க, ராஜ தோரணையில் அமர்ந்திருந்தான்.

தியாவுக்கும் இருபத்தி ஆறு வயதாகிறது. வரும் வரன்களை தட்டிக்கழித்தே காலத்தை ஒட்டியவளுக்கு ப்ரதீபனை வேண்டாம் என்று காயலிடம் சொல்ல முடியாமல் அவனுக்கு கழுத்தை நீட்டி இருந்தாள். அவளின் குழந்தை முகமும், கள்ளமில்லா சிரிப்பும் இருபதை தாண்டாதவள் என்று எடுத்துக் காட்ட நீண்ட கவுன் அணிந்து தேவதை போல் வீற்றிருந்தாள்.

அவர்களின் ஜோடிப் பொருத்தம் ஒன்றே சிறப்பாக தெரிய, எல்லா பொருத்தமும் இருந்தாலும் மனப் பொருத்தம் என்ற ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டுமே! அது அவர்களிடம் இருக்கிறதா? இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துத்தான் கல்யாணம் செய்து கொண்டார்களா? அவர்கள் இருவருமே அறிவார்கள்.

தியாவுக்கு பாட்டியே எல்லாமாகிப் போக, பாட்டியின் முந்தானையில் ஒளிந்து கொண்டே வளர்ந்தவளுக்கு, அவரை விட்டு இருப்பது கடினமாகிப் போக, கல்யாணம் ஆகி சென்று விட்டால் அவர் தனியாக எவ்வாறு இருப்பார் என்ற கேள்வியோடு வரும் வரன்களை ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக் கழித்தாள்.

கயல்விழி “நான்  இருக்கிறேனே! பாட்டியை பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்னாலும், அவள் மறுக்க பார்வதி பாட்டி அழுது கரைந்ததில் ஊரிலையே மாப்பிளை பார்க்குமாறும், ஜாதி, மதம், எந்த தொழில் என்றாலும் பரவாயில்லை ஐந்தே நிமிசத்தில் வீட்டுக்கு வரும் படியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு கல்யாணத்துக்கு சம்மதித்திருந்தாள். ஆனால் அவள் கேட்டுக் கொண்டது போல் எந்த வரனும் அமையவில்லை.

கயல்விழிக்கும், திலகாவுக்கும் அடைக்கலம் கொடுத்த குடும்பம் என்பதால் சரவணனுக்கும், சிவரஞ்சனிக்கும் அவர்களின் மேல் தனி மரியாதையே! இருக்க பெண்ணை பார்க்க முன்பாகவே சம்மதம் தெரிவிரித்திருந்தனர்.

கயல்விழி பார்வதி பாட்டியை அழைத்து ப்ரதீபனை பற்றி சொல்லி தியாவை கேக்க அவரோ சந்தோசமாக சம்மதிக்க,  பெண் பார்க்க வருவதாக கயல்விழி சொன்ன உடன் தடல்புடலான விருந்தோடு கயல்விழியின் மொத்த குடும்பத்தையும் வரவேற்றார்.

“தியாவுக்கு சப்ரைஸ் என்று அவளிடம் சொல்ல வேண்டாம் நானே வந்து பேசுகிறேன்” கயல்விழியின் வேண்டுகோளுக்கு பார்வதி பாட்டியும் சொல்லாது விழியின் மொத்த குடும்பமும் வருவதாக மாத்திரம் சொல்லி இருக்க, ஸ்ரீராமை காணும் ஆவலில் தியாவும் துள்ளிக் குத்திக்கலானாள்.

பாட்டி அவளை புடவை கட்ட சொன்ன போது கூட பெரிதாக எடுக்காதவள், வந்தவர்களை வாயில் வரை சென்றே வரவேற்றாள். வண்டியில் இருந்து அனைவரும் இறங்கியதும் தியாவின் கண்கள் முதலில் தேடியது ஸ்ரீராமை. அவன் அகல்யாவுடன் இறங்க, யாரையும் கண்டு கொள்ளாது ஸ்ரீராமோடு ஐக்கியமானவளை அனைவரும் புன்னகை முகமாகவே பாத்திருக்க, அவளிடம் விஷயம் பகிரப்படவில்லை என்று கயல்விழி சொல்லி இருந்ததால்

 “அதுவும் நல்லது தான் சொல்லி இருந்தாள் அவளின் இயல்பு மாறி இருக்கும்” என்று சிவரஞ்சனி கணவனிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பார்வதி பாட்டியும் வெளியே வந்து  முறைப்படி அவர்களை வரவேற்றார்.

தியாவை பார்த்த ப்ரதீபனுக்கு தனக்கு கல்யாணம் எல்லாம் சரியா வருமா? இவள் குடும்பத்தோடு பொருந்திப் போவாளா? என்ற கேள்விகள் தோன்ற

“ஆரம்பிச்சிட்டாண்டா, இன்னும் கல்யாணம் பேசி முடிக்கல கொஞ்சம் அடக்கி வாசி” அமுதன் ப்ரதீபனை கிண்டல் செய்தவாறே

“பாட்டி உங்களுக்கு ஒரே பேத்தியா? இன்னும் ஒரு பேத்தியை ஏற்பாடு பண்ணி இருந்தா என் பிரச்சினையும் சரியாகி இருக்கும்” அமுதன் குறும்பாக சொல்ல அவன் சொல்வது புரியாது பாட்டி முழிக்க,

“அப்படியே இருந்தாலும், உனக்கு தங்கை முறை டா..” பிரதீபன் அமுதனின் தலையில் தட்ட

“அண்ணா நானும் நீயும் ஒரே குடும்பத்துல கல்யாணம் பண்ணலாம் யு டோன்ட் ஒர்ரி” அகல்யா அவனை சமாதானப் படுத்த

“முதலல்ல படிக்கிறத ஒழுங்கா செய் இப்போவே கல்யாண ஆசையா” ஒரு நொடி அண்ணனாக மாறி அவளை அதட்டினான் அமுதன்.

“உனக்கு இந்த ஜென்மத்துல பொண்ணு கிடைக்க மாட்டா, அப்படியே கிடைச்சாலும் ரௌடி ரங்கம்மா, மார்டன் சொர்ணாக்கா மாதிரிதான் இருப்பா. உனக்கு பாவம் பாத்தேனே என்ன சொல்லணும்” அகல்யா அமுதனை முறைத்தவாறு கழுத்தை நொடுத்தி விட்டு உள்ளே சென்றாள். அவள் எந்த நேரத்தில் சொன்னாலோ அமுதனின் வாழ்க்கை துணைவியாக வரவேண்டிய  மலர்விழி  சென்னையில் அடங்காத பெண் சிங்கமாய் அவதாரம் எடுத்திருந்தாள்

ஒருவாறு நலம் விசாரித்து, உணவையும் முடித்துக் கொண்டவர்கள் கல்யாண விஷயம் பேச தியாவிடம் தான் பேசுவதாக கூறி கயல்விழி அவளை அழைத்துக் கொண்டு பின் பக்கமாக இருந்த தோட்டத்தை அடைய அங்கே ரிஷியும், ப்ரதீபனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

கயல்விழி ப்ரதீபனிடம் தான் பாத்திருக்கும் பெண் தியா என்றதும் ஒருகணம் திகைத்தவன் “உன் விருப்பம் குட்டிமா” என்று மட்டும் சொல்ல

“இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகா முடியாது. முதல்ல பொண்ண பாருங்க பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம். உங்களுக்கு பிடிக்கலையா வேற பொண்ணு பார்க்கலாம்” நீ பார்த்தால் போதும் என்றவனை வலுக்கட்டாயமாகத்தான் இழுத்து வந்திருந்தாள்.

தோட்டத்தில் அமர்ந்திருந்த ஆண்களை கண்டு விழியின் முகம் பார்த்து தியா நிற்க,

“தியா உனக்கு ஒரு மாப்புள பாத்திருக்கேன். மாப்புள என் அண்ணண்” என்று விழி சொல்லி முடிக்கும் முன்

“என்னது உங்கண்ணன நா கல்யாணம் பண்ணிக்கணுமா?” தியா அதிர்ச்சியாக கேக்க அங்கே இருந்த ரிஷி மற்றும் பிரதீபன் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.

ரிஷியிடம் வந்தவள் “இங்க பாருங்க நீங்க விழியோட அண்ணனா இருக்கலாம், அதுக்காக எல்லாம் உங்கள கல்யாணம் பண்ண முடியாது. பாட்டிய விட்டு வரமாட்டேன்”

குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்பவளை கடிய முடியாமல் பிரதீபன் பார்க்க அவளின் மறுப்புக்கான காரணம் புரிந்து ரிஷியும், கயலும் சிரித்தனர்.

அவர்கள் சிரிப்பதையும் பொருட்படுத்தாது தான் சொல்ல வந்ததை சொல்லி விட்ட நிம்மதியில் தியா நகர

“ஒரு நிமிஷம் எனக்கு கல்யாணம் ஆச்சு என் பொண்டாட்டி இங்க இருக்கா” என்ற ரிஷி கயல்விழியை அணைத்துக்  கொள்ள

வாயை பிளந்த தியா “அப்போ இவரு யாரு? அன்னைக்கு திலகாம்மா இவர்தான் விழி புருஷன் னு சொன்னாங்க” விழிவிரித்து யோசிக்க

“இவர் என் அண்ணன் திவ்யா” கயல் சொல்ல  

“அம்மா இருக்குற நிலைமைக்கு என்ன சொன்னாலும் நம்புறியா?” பிரதீபன் அவள் அகல விரித்த கண்களை பாத்திருக்க,

“அம்மாக்கு என்ன அவங்க நல்லா இருக்காங்க” கண்களை சுருக்கியவள் கோபமாக பேச

அவளின் ஒற்றை வார்த்தையில் திலகாவின் மேல் வைத்திருக்கும் அன்பை புரிந்துக் கொண்ட பிரதீபன்

“இன்னும் என்ன அம்மா னு சொல்லி கிட்டு அத்த னு சொல்லு” தியாவை அதட்டியவன் மறைமுகமாக அவன் சம்மதத்தை கோடிட்டு காட்ட அதை புரிந்துக் கொண்டு கயல் ரிஷியை அணைத்துக் கொள்ள

“வா நாம கிளம்பலாம் இல்லனா உன் அண்ணன் நம்மள கரடி னு சொல்லிட போறான்”  ரிஷி கயலை அணைத்தவாறே அவர்களின் இரண்டாவது தேனிலவை பற்றி பேசியவாறு அகன்றான்.

கோபமூச்சுக்களை விட்டவாறே ப்ரதீபனை முறைத்துக் கொண்டிருந்த தியா “இங்க பாருங்க என்னால பாட்டிய விட்டுட்டு வர முடியாது. கல்யாணம் பண்ணா இங்க தான் இருக்கணும், அது உங்களால முடியாது. அதனால இந்த கல்யாணம் வேண்டாம். என்ன புரிஞ்சுதா?” குரலில் அதட்டல் தொனி தான் இருந்ததே ஒழிய கொஞ்சமாலும் காரமில்லை. முகத்தை விறைப்பாய் வைத்துக் கொள்ள முயற்றி செய்கிறாளே தவிர குழந்தையின் சாயல் மாறவில்லை.

“இப்போ உனக்கு என்ன பிரச்சினை? பாட்டியை விட்டுட்டு வர முடியாது. அதானே! அவங்களையும் எங்க கூட கூட்டி போனா? என்ன கல்யாணம் பண்ண சம்மதிக்கிறியா?”

அவன் கேட்டதில் சந்தேகமாக பார்த்திருந்தவள் “தனக்கு இப்படியொரு எண்ணம் வரவில்லையே” என்று மனதில் உதித்ததை அடக்கி “அவங்க வர மாட்டேன்னு சொல்லிட்டா”

“அவங்கள வர வைக்கிறது என் பொறுப்பு” என்றவனின் எண்ணம் எல்லாம்  “என் குட்டிமா ஆசைப்பட்டது நடந்தே ஆகணும்” என்றே இருந்தது. 

யோசனையாக அவனை பாத்திருந்தவள் “இங்க பாருங்க பாட்டி வரேன் னு சொன்னா மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்கும். இல்லனா நடக்காது. என்ன புரிஞ்சுதா?” அவனை மிரட்டி விட்டே நடையை கட்டினாள்.

தனது வாழ்வில் திருமணம் என்ற ஒன்றை நினைத்தும் பாத்திராத ப்ரதீபனுக்கு கயல்விழி முதல் முதலாக கேட்டதை மறுக்க முடியாமல் சரி என்று விட மணப்பெண் தியா என்றதும் அவளை ஊட்டியில் முதல் முதலாக சந்தித்ததும் ஸ்ரீராமோடு அவளை பார்த்ததில் ரிஷியோடு சம்பந்த படுத்தி தப்பாக எண்ணியதும் நியாபகத்தில் வரவே! ரிஷியின் முன் நின்றவன் உண்மையை கூறி மன்னிப்பு வேண்டி நிற்க, 

சத்தமாக சிரித்த ரிஷி “டேய் மச்சான் உன்ன சொல்லி குத்தமில்ல, எல்லாம் என் நடத்தை அப்படி இருந்திருக்கு, நீ நினைச்சதை வெளிய சொல்லாம விட்டுட்டியே னு சந்தோசப் படு. ஏடா கூடமா சொல்லப் போய் மன்னிச்சு ஏத்துக்க அந்த பொண்ணு ஒன்னும் என் வார் பேபி இல்ல. உன்ன வச்சி செய்றவளா இருந்தா? கல்யாணத்துக்கு பிறகு உன் மூஞ்சி வீங்கிடும்” ரிஷி வேறு அவனை கலவர படுத்தினான்.

ஸ்ரீராமை தூக்க கையை நீட்டியவளை என்னை தொடாதே! என்று மட்டுமல்லாது கடுமையான வார்த்தைகளை பிரயோகித்ததில் தியா தன்னை பார்த்தால் கண்டிப்பாக கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாள் என்று தோன்ற அவளை சம்மதிக்க வைப்பது எப்படி என்ற எண்ணமே ப்ரதீபனுக்கு மேலோங்கியது.

ஆனால் அவளோ சிறு பிள்ளையாய் கல்யாணம் செய்து கொண்டால் பாட்டியை பிரிய நேரிடும், அதனால் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாள். திலகாவின் மீது அவளுக்கு இருக்கும் அன்பே ப்ரதீபனுக்கு போதுமாக இருக்க, இவளால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படாது என்ற நம்பிக்கை வர தன் சம்மதத்தை கயல், ரிஷியிடம் தெரியப்படுத்தினான்.

கல்யாண பேச்சு வார்த்தையின் போது பிரதீபன் பார்வதி பாட்டியிடம் “உங்க பேத்தியை நா கல்யாணம் பண்ணிக்கணும் னா? நீங்களும் எங்க கூடவே இருக்கணும். இல்லனா பண்ண மாட்டேன்” என்றவன் தியாவின் கண்பார்த்து “ஓகே வா” என்று கேக்க அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டு கயல்விழி நிம்மதியடைந்தாள்.  

“பொண்ணு கொடுத்த வீட்டுல எப்படி தம்பி…” என்று இழுத்தவரை

“பக்கத்து பங்களாவை பிரதீபன் வாங்கி இருக்கான். உங்க பேத்தி வீட்டுல இருக்கிறதாக நினைக்காதீங்க, உங்க வீடாகவே நினைங்க, அப்படியே சங்கடமாக இருந்தா வீட்டை உங்க பேர்ல மாத்திடுறோம்.  யாரென்றே தெரியாத என் மனைவியையும், மகனையும், அத்தையையும் நல்லா பாத்து கிட்டத்துக்கே நீங்க என்ன கேட்டாலும் செய்யலாம்” ரிஷி உணர்ச்சி வசப்பட்டு பேச 

தன் ஒரே பேத்தி நல்ல குடும்பத்தில் வாக்கப்படுவதே சந்தோசமாக நினைத்தவர் “கண்டிப்பா என் பேத்திங்க கூட இருப்பேன். இங்க இருக்குற வீட்டை விப்பீங்களோ! வாடகைக்கு விடுவீங்களோ உங்க இஷ்டம் பா” ஒரேயடியாக தன் சம்மதத்தை சொல்லிவிட அடுத்த முகூர்த்தத்திலையே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அனைவரும் கூடி பேசி முடிவு செய்தனர்.

குடும்பத்தில் உள்ள அனைவரின் முகமும் சந்தோசமாக இருக்க, மணமக்களின் முகத்தில் சந்தோஷத்துக்கு பதிலாய் பதட்டமும், சிந்தனையும் தேங்கி இருந்தது.

ரிஷி, கயல்  அவர்களின் இரண்டாம் தேனிலவை கொண்டாட ஊட்டியிலையே தங்கி விட ஸ்ரீராமை தியாவைத்துக் கொள்வதாக சொல்ல

“அதுவும் சரிதான் அம்மாவை தேடினா சீக்கிரம் வந்து விடும் தூரத்தில் இருப்பது நல்லது தான்” சிவரஞ்சனி சொல்ல அகல்யாவின் முகம் தான் வெளுத்தது.

“இல்ல ஸ்ரீராம் என் கூட தான் இருப்பான்” அவள் சண்டைக்கு தயாராக

“அப்போ நீயும் இங்கயே தங்கிடு” புன்னகை முகமாக தியா

“அத்த அகல் இங்க இருக்கட்டும், நாங்க வரும் போது கூட்டிட்டு வரோம்”  கயல் சொன்னதும் மறுபேச்சின்றி மற்றவர்கள் ஊர் திரும்பினர்.

பார்வதி பாட்டி எவ்வளவு சொல்லியும் கேக்காமல் ரிஷி மனைவியை அழைத்துக் கொண்டு ஹோட்டலில் தங்கி விட ஸ்ரீராம், அகல்யா தியா  வீட்டில்.

“என்னங்க இது பாட்டி அவ்வளவு சொல்லியும் இப்படி வந்தது சரியில்ல” விழி முகத்தை திருப்ப,

“இங்க பாரு ஹனிமூன்க்கு வந்து இப்படி குடும்பத்தோடவா இருக்க முடியும். புரியாம பேசுறியே பொண்டாட்டி” என்றவன் வந்த வேலையை ஆரம்பித்தான்.

விட்டுட்டு போகணும் என்றே கட்டிக்கிட்டு அன்று ஊட்டி வந்தவன் இன்றோ மனம் நிறைந்தே மனைவியோடு கலந்தான். அன்றும் போல் ஊட்டி ரோஜா தோட்டத்தையும், மான் தோட்டத்தையும் பார்வையிட அழைத்து சென்றவன் அன்று அவள் சிறு பிள்ளைத்தனமாக கேட்டவைகளை சொல்லிக்காட்டி சில அடிகளையும் பெற்றுக் கொண்டான். 

அகல்யாவையும், ஸ்ரீராமையும் அழைத்து வந்திருக்கலாம் என்று விழி குறைபட  “இன்னொருத்தரம் வரும் போது அழைத்து வரலாம். அவங்க வந்திருந்தா நீ இப்படி என்ன ஒட்டி கிட்டு நிப்பியா? ஸ்ரீராம் என் மேல இல்ல உன் மேல தொங்கிக்குவான். அகல்யா இருக்குறானு நீ என் பக்கத்துலயே வர மாட்ட, அப்பொறம் ஹனிமூனுக்கு வந்ததுல அர்த்தமே இல்லாம போய்டும்” மனைவியின் முறைப்பை கண்டுக்காது கிண்டலாக மொழிந்தவன் அவளை தன கைவளைவினிலையே வைத்துக் கொண்டான்.

மூன்று நாட்கள் தேனிலவை கொண்டாடியவர்கள் கல்யாணவேலைகள் இருப்பதால் பார்வதி பாட்டி, தியாவிடம் விடைபெற்று மும்பையை அடைந்தார்கள்.

பார்வதி பாட்டியின் ஆசைப் படி அவர்களின் குலதெய்வ கோவிலில் திருமணம் நேற்று காலை தான் நடந்தேறியது. ப்ரதீபனின் மொத்த குடும்பமாக ரிஷியின் குடும்பம் இருக்க, பார்வதி பாட்டியின் சொந்தங்களாக சிலபேர் வருகை தந்திருந்தனர்.

பட்டு வேட்டி சட்டையில் பிரதீபன் தயாராகி வர, பட்டுப்புடவையை மணமகளாக தியா. அவளின் முகமோ இறுகி இருக்க, ப்ரதீபனின் முகத்திலும் சிந்தனை ரேகைகள். சாவி கொடுத்த பொம்மைகள் போல் தான் இருவரும் அனைத்தையும் செய்தார்கள். நாத்தனார் முடிச்சை கயல்விழி போட மணமக்களை தவிர மற்ற அனைவரின் முகத்திலும் புன்னகை.

கல்யாணம் முடிந்த கையேடு மும்பாய் வந்தவர்களுக்கு சாந்திமுகூர்த்தத்துக்கான நல்ல நேரம் இரண்டு நாள் கழித்து என்று இருக்க, பிரதீபன், தியாவின் முகத்தில் நிம்மதி பரவியது.

அமுதன் ப்ரதீபனை ஓட்டி எடுத்தாலும், எதிர்பார்ப்பே அற்றவன் ஒரு சிறு புன்னகையில் அதை கடக்க, வரவேற்று நிகழ்ச்சிக்கு தயாரானார்கள்.

திருமணத்தை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டவளுக்கு, குழப்பமான மனநிலையோடு திருமண வரவேற்பு  நிகழ்ச்சியும் நடந்து முடிய அடுத்து வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவர்களுக்கான முதலிரவு ஏற்பாடு பற்றி காதில் விழவும், ப்ரதீபனை தனிமையில் சந்திக்கும் அந்த இரவு  அவளுக்கு பதட்டத்தோடு சேர்த்து பயத்தையும் வாரி வழங்க அவளை விட பதட்டத்தோடு மனைவியை எதிர்பார்த்து காத்திருந்தான் பிரதீபன்.

Advertisement