Advertisement

Mekam Karukkuthu…! இதழ் 01 கரும்போர்வை ஒன்றை எடுத்து நீல வானை மறைத்து கட்டியது போல… கருமேகங்கள் எல்லாம் ஒன்று திரண்டு மழை வருவதற்கு அறிகுறியை காட்டி நின்றது இயற்கை. இப்படி கருமேகங்கள் ஒன்று சேர்ந்து மழையை கொட்டாமல் இருக்கும் போது ஜில்லென்று வீசும் காற்றையும்,மண்வாசணையையும் அவளது உடம்பில் உள்ள அங்கங்கள் ஒவ்வொன்றும் உணர்ந்தாலும் அவற்றால் அவளது உணர்வுகளை தட்டியெழுப்ப முடியவில்லை. பல்கனியில் நின்று தன் கணவனின் காய்ந்த துணிகளை தன்பாட்டிலே அவளது கைகள் எடுத்து ‘மடித்து மடித்து’ அவள் தோளில்போட்டுக்கொண்டிருந்தன. விழிகள் மட்டும் கறுத்தடர்ந்த மேகங்களுக்கு முன்பு மிகவும் எடுப்பாய் தெரிந்த… புதிதாய் துளிர்விட்ட வேப்பமரத்து கிளைகள் அடித்த காற்றுக்கு அசைவது அட்டகாசமாக இருப்பதை படம் பிடித்து கொண்டன. ஏனெனில் இவ்வாறு காட்சிகள் அடிக்கடி கண்டு கொள்ளமுடியாதவை. எனினும் இந்த வேப்பமரம் அத்தனை அழகாய் தெரிய பிண்ணணியாக கருமேகங்கள் தேவைப்படுவது போல அவளும்உயிர்த்தெழ கணவணின் காதல் இல்லை, அவனின் கடைக்கண்பார்வை போதும். அது அவளுக்கு எட்டாக்கனியாயிற்றே… ! கருமேகங்களை வெறித்தவள் மீது மேகம் பூ மழை தூவ அவளுக்கு தோன்றியது எல்லாம் ஒன்று தான் தன் சோகங்களை பார்த்து, அவள் அழ வேண்டிய கண்ணீரை எல்லாம் அவளுக்காக பரிந்து மேகம் அழுவதை போல உணர்ந்து கொள்வாள் அந்த மழைக்காதலி. மழை கொஞ்சம் அதிகமாவதை உணர்ந்தவள் உள்ளே வந்தவள் அவனது துணிகளை அழகாக அடுக்கி அவனது கபேட்டினுள் வைத்து விட்டு சமையலறை நோக்கிச்சென்றவள் இரவு உணவு சப்பாத்தியும், கோழிக்குருமாவும்,முட்டை பொடிமாசும் செய்ய வேண்டும் என்று அவளது அத்தை ஏற்கனவே சொல்லியிருந்தார். அவர் வருவதற்குள் செய்யலாம் என அவற்றிற்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு பூரிமாவை பிசைந்து ‘சிறுசிறு’ உருண்டைகளாக ஐம்பது அல்லது அறுபது உருண்டைகளை பிடித்து உருட்டி வைத்தாள். ஏனெனில் அந்த வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை அப்படி, அதுமட்டுமல்லாது அந்த குடும்பத்து ஆண்கள் பெரும்பாலும் பகல்வேளைகளில் உணவு உண்பதற்காய் வீட்டுக்கு வருவதில்லை.அந்த காரணத்துக்காக இரவு உணவை கொஞ்சம் விசேடமாக செய்வார்கள் அதுமட்டுமல்லாது வீட்டு ஆம்பிளைகள் நன்றாகவும் சாப்பிடுவார்கள். வீட்டில் சமையல் வேலை செய்யும் காந்தாவிடம் கோழியை வெட்ட கொடுத்திருந்தவள், “காந்தா கோழியை வெட்டி சுத்தம் செய்து விட்டீர்களா…?” என்றாள். கடுப்புடன் அவளை திரும்பி பார்த்த காந்தா “என்னம்மா நீ… ? இவ்வளவு கோழிக்கறியையும் வெட்ட வேண்டாமா… ? சுத்தம்பண்ண வேண்டாமா… ? அதற்குள் எப்படிம்மா… ? சீக்கிரம் வேலை முடியும்.” “நானும் கேட்கின்றேன் கூடமாட ஒத்தாசைக்கு இன்னொரு ஆளை வைக்க சொல்லி கேளு என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். ஆனால் நீயும் அதை கேட்கமாட்டேன் என்கின்றாய்.என்னையும் பெரியம்மாவிடம் கேட்க விட மாட்டேன் என்கிறாய். ” என சலித்த வண்ணம் தன் வேலையை தொடர்ந்தாள். “சரி… சரி… அலுத்துக்காதீங்க காந்தா… உங்களுக்கு கஸ்ரமாக இருந்தால் விடுங்கள்,நானே எல்லா வேலையையும் செய்து முடிக்கின்றேன்.” “அட போ… பாப்பா… எப்ப பாரு நீயே… எல்லாவற்றையும் செய்கின்றேன் என்று வழமையான பல்லவியை பாடாதே…! பத்து நிமிடத்தில் டான் என்று வேலை முடிந்து விடும்.பொறுத்துக்கொள்.” “ஆ… சரி.” என்றவள் உருட்டி வைத்த பூரி மா உருண்டைகளை எடுத்து வட்டவட்டமாக தட்டி கொதிக்க வைத்த எண்ணெய் சட்டியில் பூரியை போட்டு அது பொன்னிறமாக வர அதனை பதமாக எடுத்து , அதனை வேறு பாத்திரம் ஒன்றிற்குள் போட முன்னர் அதற்குள் பெரிய பேப்பர்களை பூரியிலுள்ள எண்ணெயை இழுப்பதற்ககாக விரித்து விட்டு அவற்றை அப் பாத்திரத்தினுள் இட்டாள். அவ்வளவு பூரிகளையும் ‘தட்டி தட்டி’ அவளது தோள்மூட்டு இரண்டும் கழன்று விடும் அளவிற்கு வலித்தது. அவள் வாங்கி வந்த வரம் அப்படி இருக்கையில் மற்றவரை குற்றம் சொல்லி என்ன? பிரயோசனம். இப்படி ‘மாங்கு மாங்கு’ என்று வேலை செய்தால் தானே இரவு நேரத்தில் அசந்து தூங்க முடிகின்றது.இல்லையெனில் இரவு முழுவதும் ஒரு சோக சுமையை ரீவைண்ட் பண்ணிப்பார்த்தே… கண்ணீர் கடலில் தத்தளிக்க வேண்டும். எத்தனையோ வருடங்களாக அழுதாயிற்று… அவள் நிலை மாறவில்லை. இனிமேல் மாறும் என்கின்ற நம்பிக்கையுமில்லை. கோடைகாலத்தில் ஒரு துளி மழைக்காய் காத்திருக்கும் அறுகம்புல்லாய் அவள் காத்துக்கொண்டிருக்கின்றாள் கணவனது கடைக்கண் பார்வை படுவதற்கு…! தன் எண்ணங்களில் இருந்து விடுபட்டவளாக, மிகுதி வேலைகளையும் செய்து இரவுச்சமையலை முடித்து விட்டு, உணவுகளை பாத்திரங்களில் போட்டு, சாப்பாட்டு மேசை மீது வைத்து விட்டு அவள் தனது அறைக்குள் நுழையும் வரைக்கும் மேல் மாடியில் இருந்த வீட்டுப்பெண்கள் அறையை விட்டு வெளியே… வரவில்லை. அவள் சென்று விட்டதை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அவனது தங்கை ஆத்மிகா, தனது தாயிடம் சென்று ” அம்மா அவ டின்னர் செய்து வைத்து விட்டு போய்விட்டா… நீங்க ஏன் இன்னும் படுத்திருக்கிறீர்கள். உடம்புக்கு முடியவில்லையா… ..” என்றவாறு தாயின் நெற்றியில் கை வைத்து பார்த்தாள். ஆத்மிகாவின் கையை தட்டி விட்டவர், “ஏன்டி… என்னை எழுப்பி விட்டிருக்கலாமமே…!” “இல்லை… அம்மா… அது இந்த வீட்டுக்கு விளக்கேத்த வந்த மகராசிக்கு என்ன? உடம்பில முறிவா….? அவ தான் வேலைக்காரிக்கு வேலைக்காரியாய் எல்லா வேலையையும் செய்யட்டும் என்று விட்டு விட்டேன்… .” என்றாள். “அவ உனக்கு வேலைக்காரியா… ? நீயும் ஒரு குடும்பத்தில போய் வாழப்போற பொண்ணுதான். உன்னை எல்லோரும் தலையில வைச்சு கொண்டாடுவாங்க… என்று கனவு கோட்டை கட்டி வைச்சிருந்தால் அதை மற. மேகா போல வீட்டில இருக்கின்ற எல்லா வேலையும் செய்து, வீட்டுகாகார்களின் வேலை எல்லாம் செய்து, பொறுமையின் சிகரமாய் இருப்பவளையே… இங்கே பாதிப்பேருக்கு பிடிக்கவில்லை. அதுவும் உன் நானெண்ட குணத்திற்கு என்ன? பாடுபட போகிறாய் என்று தெரியவில்லை… ! நான் கும்பிடும் கடவுள் தான் உன்னை காப்பாற்ற வேண்டும்.” “நான் ஏன்? என்னை பிடிக்காத புருசனை கல்யாணம் செய்ய போகின்றேன்… இல்லாத அன்பை ஏன்? எதிர்பார்க்க போகின்றேன்… உங்கள் மருமகள் மாதிரி நானெல்லாம் அடிமையாக இருக்க மாட்டேன்.” என்ற ஆத்மிகாவின் வார்த்தையில் தாயார் சரிதாவின் மனம் சுருண்டதை காட்டிக்கொள்ளாது எழுந்து முகம் கழுவிக்கொண்டு சாமி அறையை நோக்கி சென்றார். சாமிக்கு விளக்கேற்றியவர் கண்கள் தாமாக மூடியது, கைகள் தானாக கூப்பியவர் மனதில் ஒரே வேண்டுதல் தான் ‘மேகாவின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடு.’ என்பது மட்டும் தான். சாமி கும்பிட்டு விட்டு நேரடியாக சமையலறைக்கு வந்தவர் அங்கே வேலை எல்லாம் முடித்து சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தது. ‘மேகாவே… எல்லா வேலையையும் தனியாளா முடிச்சிட்டா… போல… நான் வேற உதவிக்கு வருகின்றேன் என்று சொல்லி விட்டு வரவில்லை… பாவம்… புள்ள… தனியா நின்று இவ்வளவு பூரிகளையும் தட்டி, சுடுவதென்றால் தோள்மூட்டெல்லாம் வலிக்குமே…!’ என நினைத்துக்கொண்டு அவளை பார்க்க அவளிடத்திற்கு சென்றார். அவர்களது கார் இருக்கும் செட்டின் பின்புறமாக இருந்த பழைய சாமான்கள் போடும் இடத்தில் பாதி தான் இவளது அரண்மனை, உடைந்த கதிரை, மேசை, பழைய அண்டா, குண்டா என வேண்டப்படாத பொருட்களோடு பொருளாக இவளையும் அங்கே தூக்கி கடாசி இருக்கின்றான் அவனது கணவன். அதற்கு வீட்டில் இருப்பவர்களும் மறுப்புச்சொல்ல வாய்பளிக்கப்படவில்லை. பல்லி, பூச்சி, வண்டு, எலி, பூரான் என சில பிராணிகளும் இவளது இடத்தில் றூம்மேட்டாக இருப்பதோடு அடிக்கடி இவளிக்கும், அதுகளிற்கும் இரவில் பனிப்போர் நிகழும். ஆரம்பத்தில் அவளுக்கு இது கஸ்ரமாக இருந்தாலும் இப்போது அது பழகிப்போய் விட்டது. இவள் அடிக்கடி இரவில் திருநீலகண்டணிடம் கடி வாங்குவதும் கடிவாயில் புளியை பூசி விட்டு விடிய விடிய வேதனைப்படுவதும் பழகி விட்டது. அதே போல இன்றும் தன், கை விளக்குமாற்றால் ஒரு கரப்பான் பூச்சியை வெளுத்துக்கொண்டிருக்கவும் அவளது மாமியார் அவளருகில் வந்தது கூட தெரியாமல் கரப்பான் பூச்சிகளோடு பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருந்தாள். ‘இனிமேல் என் இடத்திற்கு வருவியா…வருவியா வந்து பார்… விளக்குமாத்தால சாத்துறேன்.’ என்றவாறு ஏற்கனவே அடித்து கொலை செய்து விட்ட அந்த மீசை வைத்த கரப்பான் பூச்சியை அடித்துக்கொண்டிருந்தவளை “ஏன் மேகா… செத்துப்போன கரப்பான் பூச்சியை போட்டு இந்த வெளு வெளுக்கிறாய். யார் மீதாவது இருக்கின்ற கோபத்தை அது மேலே காட்டுகின்றாயா… ” “இல்லை அத்தை இரவில் இதுங்க என்னை தூங்க விடாது காதுக்குள் புக பார்க்குதுங்க, ஆளுக்கு மேலால ஒடுதுகள், எவ்வளவு சேட்டை தெரியுமா… ? அது இப்போது வைச்சு செய்ஞ்சாச்சு… அது சரி இப்ப என்ன? விசயமாக இங்கே வந்தீங்க. ” “நீயே… தனியா எல்லா வேலையையும் செய்தியா… கண்ணம்மா. ” “இல்லை… காந்தாவும் ஹெல்ப் செஞ்சாங்க…” “ஓ… நான் அசதியா இருக்கு என்று தூங்கி விட்டேன்.நீயாவது வந்து என்னை எழுப்பி இருக்கலாமே… !” “அது எனக்கு தெரியும். அதனால் தான் எழுப்ப வரவில்லை. அதை விட இது வரை நான் உங்களது அறைக்கு வந்ததே இல்லையே… !” “அது எனக்கு தெரியும் வா போகலாம்.நைட் சாப்பாட்டுக்கு எல்லோரும் வந்து விடுவார்கள்.” “அத்தை… நான் எல்லாவற்றையும் மேசை மீது வைத்து விட்டு தானே வந்தேன். ஆ… ஓ நான் பரிமாற வேண்டும் இல்லையா… ? பொறுங்கள் அத்தை கொசுவர்த்தியை கொழுத்தி வைத்து விட்டு வருகின்றேன்.” என கூறிக்கொண்டே… கொசுவர்த்தியை கொழுத்தி வைத்து விட்டு வெளியே வந்தாள். இரவு எட்டு மணியளவில் எல்லோரும் சாப்பாட்டுக்கு தயாராகி வந்து, சாப்பாட்டு மேசையில் உட்கார தொடங்கவும், அவள் ஒற்றை ஆளாய் எல்லோருக்கும் பரிமாறத்தொடங்கினாள். உள்ளே போய் தீர்ந்து போன பதார்த்தங்களை எடுத்து வருவதும், சாப்பிடுபவர்களின் தட்டை ‘பார்த்து பார்த்து’ பூரிகளை எடுத்து வைப்பதுமாய் சுமார் ஒன்றரை மணித்தியாலமாக பம்பரமாக சுழன்றாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்து தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு தங்கள் அறைக்குள் அடைந்து கொள்ளவும், எல்லாவற்றையும் எடுத்து சுத்தம் செய்து விட்டு தட்டுகளை கழுவி அடுக்கியவள், வாசல் கதவை எட்டி பார்த்த வண்ணமே தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள். வேலைகளை முடித்து விட்டு சமையல் கட்டிலேயே காத்திருந்தவளுக்கு பசி வயிற்றை கிள்ளவும் பூரிகளை வைத்திருந்த செல்லோவை திறந்து பாராத்தவள் அதிர்ந்தாள். அங்கே மிச்சமாக ஆறு பூரிகள் தான் இருக்கவும், அதிர்ந்தாள். ஏனெனில் அவள் மட்டுமல்ல அவள் கணவனும் இன்னும் சாப்பிடவில்லை. அவன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அவன் வருவதற்குள் புதிதாக வேறு பூரிகளை செய்யலாம் என நினைத்து, மாவை எடுத்தவளிற்கு பதட்டத்தில் கை, கால்கள் எல்லாம் பதறின. தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, மாவிற்குள் தண்ணீரை விட்டு பிசைய எத்தனிக்கவும் அவர்கள் வீட்டுக்குள் கார்நுழையும் சத்தம் கேட்டது. ‘கடவுளே…! வந்திட்டார் போல இருக்கிறதே…’ அவர் வந்து குளித்து முடித்து தானே… ! சாப்பிடுவதற்கு வருவார் என மாவினுள் தண்ணீரை ஊற்றினாள். அவளின் போதாத நேரம் அன்றைக்கென்று அவன் வந்தவுடன் கையை கழுவி விட்டு, “அம்மா சாப்பாடு எடுத்து வையுங்கள்.” என்றவாறே வந்து உட்கார்ந்தவன் தனது ஃபோன் எடுத்து நோண்ட ஆரம்பித்தான். இவனது குரல் கேட்டு வெளியே வந்த தாய் “வந்துட்டியா…தம்பி ஏன் லேட் ரெம்ப வேலையோ…. தனியா கிடந்து எல்லாவேலையையும் நீ தான் இழுத்துப்போட்டு செம்யணுமா? வீட்ல படிச்சு முடிச்சிட்டு சும்மா பொழுதை போக்கிக்கொண்டு திரியும் உன் சித்தப்பா பையன் அர்ஜுன், உன் அத்தை பொண்ணு அபிநயா,உன் தங்கை ஆத்மிகா, எல்லோரும் இங்கே சும்மா தானே இருக்கின்றார்கள் தானே… அவர்களும் இந்தவீட்டு பிள்ளைகள் தான். அவர்களுக்கும் முக்கியமான பொறுப்பை கொடுத்துவிட்டு, உன் வேலைப்பழுவை கொஞ்சம் குறைக்கலாம். ஆனால் இதைச்சொன்னால் நான் குற்றவாளி…” என புலம்பியபடி அவனருகில் அமர்ந்து மனது தலையை கோதிவிட்டார். “அம்மா அவர்கள் கொஞ்சநாளைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும் அப்புறம் எல்லோரிடமும் ஒவ்வொரு பொறுப்பை ஓப்படைக்கதான் போகின்றேன். அப்புறம் சொல்லக்கூடாது இந்த வீடே வெறிச்சோடி போய்விட்டது என்று.” அவன் சிரிக்கவும் தாய் முகத்திலும் புன்னகை தோன்றியது. அவர்கள் பேசிக்கொட்டிருக்கும் போதே அவள் உணவை கொண்டு வந்து வைத்து விட்டு பரிமாற ஆரம்பித்தாள். ஆனாலும் அவளுக்கு உள்ளே பதட்டம் இருந்து கொண்டே இருக்கவும் கடவுளிடம் வேண்டுதலை வைத்தாள். ‘கடவுளே… இவர் ஆறு பூரிக்கு மேலே சாப்பிடக்கூடாது. அப்புறம் நான் செத்தேன்.’ என நினைத்தவள் நடுக்கத்துடனே நின்றாள். அவன் உண்ண பதார்த்தங்கள் குறைவது ‘பார்த்து பார்த்து’ வைத்தவள் ஐந்தாவது பூரி முடியவும் ஆறாவது பூரியை எடுத்து வைத்தவள் பதட்டத்துடன் வியர்வை வழிய நிற்பதை கண்டு கொண்ட மாமியார் ‘என்ன?’என்று பார்வையால் கேட்கவும். அவளும் பூரி இல்லை என கண்ணால் பதில் சொன்னாள். ‘ஐயோ…! இந்தப்பொண்ணு வாங்கிக்கட்ட போகுதே… ! கடவுளே காப்பாத்து.’ என அவரும் மனதினுள் வேண்டுதல் வைத்தார். இருவரது நிலையையும் புரிந்து கொண்ட கடவுள் அவர்களை காபந்து பண்ண நினைத்தது போல அவனுக்கு ஃபோன் வரவும் எடுத்து ஆன்சர் பண்ணியவன் காதினுள் வைத்தவன் பூரியை அப்படியே வைத்து விட்டு எழுந்து கைகழுவியவன் தாயை பார்த்து ஒற்றை தலையசைப்புடன் தன் றூமான மூன்றாவது மாடியை நோக்கிச்சென்றான். அவன் சென்று மறையவும், மருமகளை தேடியவர் அவளை காணாது கிச்சினுக்குள் சென்று பார்க்கவும், அவள் தண்ணீர் போத்தலை காலி செய்து விட்டு திரும்பினாள். எதிரே அவளது மாமியார் சரிதா முறைத்துக்கொண்டு நின்று. ” என்ன? மேகனா இது வா நான் பூரி போட்டு தருகின்றேன் சாப்பிடு. பட்டினியாக போக வேண்டாம்.” என்றார். “இல்லை… வேண்டாம்… அத்தை. இத்தனை மணிக்கு மேலே சாப்பிட்டால் செமிக்காது. நான் இந்த இரண்டு மூன்று பாத்திரங்களையும் கழுவி வைத்து விட்டு போகின்றேன். அப்போது தான் நாளைக்கு காலையில் ஈசியாக வேலை செய்ய முடியும்.” “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். ப்ரிஜில் கேக் இருக்கின்றது, எடுத்து வருகின்றேன். இரண்டு துண்டு சாப்பிட்டு விட்டு போ.வெறும் வயித்தோடு போகாதே… என கூறிக்கொண்டு திரும்பியவரை அவரது செல்ல மகள் ஆத்மிகா வந்து “அம்மா… அப்பா உங்களை வரட்டாம் என அழைத்தாள். ” “உன் அப்பாவுக்கு என்ன? வேண்டும் என்று கேட்டு கொடுக்க முடியாதா? உன்னால் என கூறியவர். சரி நான் அப்பாவிடம் போகின்றேன். நீ உன் அண்ணிக்கு ஃப்ரிஜில் இருக்கும் கேக்கை எடுத்து வந்து கொடு.” “அம்மா… எத்தனை தரம் செல்வது இவளெல்லாம் என் அண்ணி கிடையாது. என் ஆதி அண்ணனுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத இவளை அவர் தலையில் கட்டி வைத்து விட்டு, என்னையும் அண்ணி என்று கூப்பிடச்சொல்கின்றீர்களா…? இனிமேல் மறந்தும் அவளை அண்ணி என்று கூப்பிடச்சொல்லாதீர்கள்.” என அவள் கத்தினாள். மகளுக்கு சளைத்தவர் தான் இல்லை என்பதை காட்டு முகமாக, “சரி உன் பஞ்சாயத்தை அப்புறம் பார்க்கலாம்.இப்போது மேலே உள்ள ஃப்ரிஜில் இருக்கும் கேக்கை கொண்டு வந்து அவளிடம் கொடு, நான் உன் அப்பாவை பார்த்து விட்டு வருகின்றேன்.” என கட்டளையை பிறப்பித்து விட்டு சென்றார்.அவர் பின்னாடியே மகளும் சென்றாள். மேகா எல்லாவற்றையும் கழுவி வைத்துவிட்டு, எதையும் எதிர் பாராமல் தன் இருப்பிடத்தை நோக்கிச்சென்று விட்டாள். இவ மூஞ்சைக்கு கேக் இல்லாதது தான் ஒரு கேடு என நினைத்துக்கொண்டே… மேலே இருந்த ப்ரிஜ்ஜை திறந்தவள்,அங்கே சாக்லேட் கேக் இருக்கவும் ‘ இது எனக்கு பிடித்த ப்ளேவர் ஆச்சே… இதை அவளிற்கு கொடுப்பதா… ? நோ சான்ஸ், அதுவும் இரண்டு பீஸ் தான் இருக்கு. இதில என்னுடைய பெயர் தான் எழுதியிருக்கும் அதனால் இது எனக்கு தான் என்றவள் அருகே இருந்த ஷோபாவில் உட்கார்ந்து உண்டுவிட்டு. அங்கிருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தாள். அவளை காணாது சுற்றுமுற்றும் பார்த்தவள், அவள் போய் விட்டாள் என்பதற்கான அடையாளங்கள் தென்படவும், கிச்சினுக்குள் இருந்து வெளியே வந்தவள் திகைத்து நின்றாள்.

Advertisement