Advertisement

அத்தியாயம் – 30

பிரபா, ஆனந்தியின் குரல் வீடெங்கும் சந்தோஷமாய் ஒலித்துக் கொண்டிருக்க, அவர்களுடன் பேசிக் கொண்டே விருந்துக்கான ஏற்பாடுகளை தடபுடலாய் கவனித்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. சரவணன் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான். புகுந்த வீட்டு விசேஷங்களை மகள் வாய் கொள்ளாமல் சொல்லுவதைக் கேட்டு அவருக்கு நிறைவாய் இருந்தது. அண்ணி காரியத்தில் கறாராய் பேசினாலும் மருமகளை மகளைப் போலவே பார்த்துக் கொள்வதில் மிகுந்த சந்தோஷப்பட்டார்.

“அண்ணன் எங்கேமா இன்னும் காணோம்…” கேட்ட மகளிடம்,

“அதுவந்து, உனக்குக் கூடத் தெரியுமாமே, நம்ம மாப்பிள்ள பாங்குல அசிஸ்டன்ட் மானேஜரா வேலை செய்யற அந்தப் பொண்ணை…” என்றவர் நிதின் கூறிய விஷயங்களைக் கூறி “அந்தப் பொண்ணை அழைச்சிட்டு வரேன்னு போயிருக்கான்… நான்தான் பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணுமாம்…” என்றதும் பிரபா ஆனந்தியை வியப்புடன் நோக்க அவளும் திகைத்து நின்றாள்.

“என்ன அத்தே, சொல்லறீங்க… அத்தான் உங்களைப் பேச சொன்னாரா…” என்று மீண்டும் கேட்க, “ஆமாம் மா… பாவம், அந்தப் பொண்ணுக்கு நடந்த கொடுமையை நினைச்சா மனசு தாங்கல… அது ஒரு விபத்துன்னு புரியாம கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்குதாம்… அந்தப் பையன் அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நிக்குறான்… நாம பேசி சம்மதிக்க வச்சா ஒரு நல்ல காரியம் பண்ணின போல ஆச்சு…” சந்தோஷமாய் மீனாட்சி சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ம்ம்… ரொம்ப நல்ல காரியம் அத்தை… பாவம், ரொம்ப நல்ல பொண்ணு… அவங்க வாழ்க்கை வீணாகாம நீங்கதான் சொல்லிப் புரிய வச்சு சம்மதம் சொல்ல வைக்க சரியான ஆளு… மச்சான் சரியாதான் சொல்லிருக்கான்…” சொல்லிக் கொண்டே சரவணனும் அங்கே வர மீனாட்சிக்கு மிகவும் பெருமையாய் இருந்தது.

“என்ன பாடுபட்டாவது அந்தப் பெண்ணை சம்மதிக்க வைத்தே தீர்வது…” என்று தீர்மானித்துக் கொண்டார். வீட்டு வாசலில் பைக் தடதடக்கும் சத்தம் கேட்கவும் இளையவர் மூவரும் அங்கே சென்றனர்.

“அண்ணா…” என்று நிதினைக் கட்டிக் கொண்ட பிரபா, “வாங்கண்ணி…” என்று சஹாவை அழைக்க, கூச்சத்துடன் வந்தவளிடம், “அசுரவதம் எல்லாம் முடிஞ்சுதுன்னு மச்சான் சொன்னான்… இப்ப உங்களுக்கு ஹாப்பி தானே சிஸ்…” என்ற சரவணனை அவள் திகைப்புடன் நோக்க, “அவர்களுக்கு எல்லாம் தெரியும்…” என்று கண்ஜாடை காட்டினான் நிதின். அவர்கள் நலம் விசாரித்து முடிக்கவும் நனைந்த கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு வந்தார் மீனாட்சி.

“வாம்மா, நல்லாருக்கியா… கல்யாண மண்டபத்துல சரியாப் பேச முடியல… அம்மா நல்லாருக்காங்களா…” நெடுநாள் பழகியவர் போல அவர் பேசவும் நிதினே அசந்து போனான். சஹா பயபக்தியுடன் அவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல, மற்றவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

சமைத்துக் கொண்டே அவள் குடும்பத்தைப் பற்றிய பொதுவான விவரங்களை மீனாட்சி கேட்டுக் கொள்ள அவளும் ஏனோ தானோவென்று அல்லாமல் பவ்யமாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். நிதின் சரவணனிடம் பேசிக் கொண்டிருந்தாலும் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று செவியை இங்கே வைத்திருந்தான்.

அடிக்கடி அவனுக்கு தாகம் வந்ததால் தண்ணீர் குடிக்க அடுக்களைக்கு வந்து கொண்டே இருந்தவனை நோக்கி பிரபாவும், ஆனந்தியும் நமுட்டு சிரிப்பு சிரிக்க, “ஹிஹி…” என்று வழிந்தவன், “ப்ளீஸ், பார்த்துக்கோங்க…” என்று கண்ணால் சைகை காட்ட வேகமாய் தலையாட்டினர்.

சமையல் முடிந்ததும் அதை உணவு மேசையில் எடுத்து வைத்தனர். மேசையை சுற்றி அனைவரும் அமர தயங்கி நின்ற சஹாவிடம், “நீயும் உக்காரு மா…” என்றார் மீனாட்சி.

“இல்லம்மா, அவங்க சாப்பிடட்டும்… நான் உங்களோட உக்கார்ந்துக்கறேன்…” என்றவளை, “அட, பரவால்ல, உக்காரும்மா…” என்று அமர வைத்து பரிமாறினார் மீனாட்சி. நிதின் அவளைக் கண்டு கொள்ளாமல் இருக்க அடிக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கினாள் சஹானா. விருந்து முடிந்து அனைவரும் மாடியில் ஓய்வாய் அமர, மீனாட்சி பேச்சைத் தொடங்கினார்.

“அப்புறம் மா, அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கே…”

நெற்றியைச் சுருக்கியவள் “எதைப் பத்தி கேக்கறிங்கன்னு புரியலைமா…” என்றாள் குழப்பத்துடன்.

“அதான்மா, அந்த விபத்து பத்தி…” என்றதும் அவள் தலை குனிந்து மௌனமாய் இருக்க, “என்னமோ, இப்படில்லாம் நடக்கணும்னு விதி இருக்கு… நம்ம ரோட்டுல போயிட்டு இருக்கும்போது நம்ம மேல ஒரு வண்டி வந்து மோதினா கை, காலை இழந்தாலும் நாம வாழறதில்லையா… அது போல இதும் எதிர்பாராம நடந்த ஒரு விபத்துதான்… இதுல உன் தப்பு என்ன இருக்கு… தப்பு செய்தவங்களுக்கு தான் தண்டனை கொடுக்கணும்… காதலிச்சவனே உன்னைக் கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கும்போது நீ இனி கல்யாணம் வேண்டாம்னு சொன்னா அவன் மனசு எத்தனை பாடுபடும்… உன் வீட்டுல எத்தனை வருத்தப்படுவாங்க…”

“சரிதான் மா… காதல் வேணும்னா ரெண்டு பேர் மனசு சம்மந்தப்பட்டதா இருக்கலாம்… ஆனா கல்யாணம், ரெண்டு குடும்பம் சம்மந்தப்பட்டது இல்லையா… இன்னைக்கு ஒரு வேகத்துல கல்யாணம் பண்ணிட்டு நாளைக்கு ஏதாச்சும் ஒரு வார்த்தை தப்பா வந்துட்டாலும் அதை என்னால தாங்கிக்க முடியாது மா…” சொல்லும்போதே கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“ம்ம்… நீ சொல்லறது சரிதான்… நான் நேரடியாவே கேக்கறேன்… உன்னை இந்த வீட்டுப் பொண்ணா மனசார ஏத்துக்க நாங்க எல்லாருமே தயாரா இருக்கோமே… அப்புறமும் என் புள்ளையைக் கட்டிக்க உனக்கு என்ன தயக்கம்…” அவர் சொன்னதும் கரண்ட் ஷாக் அடித்தது போல நிதின், பிரபா, சரவணன், ஆனந்தி நால்வரும் அதிர்ந்து நோக்க அவர்களை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு புன்னகையுடன் தொடர்ந்தார் மீனாட்சி.

அதுவரை தலை குனிந்து அமர்ந்திருந்த சஹானா, மீனாட்சி சொன்னதைக் கேட்டதும் கண்ணீருடன் நிமிர்ந்து நோக்க, “இங்க பாருமா, நடந்தது நடந்திருச்சு… நீ சின்னப் பொண்ணு… இன்னும் வாழவே தொடங்கல… இப்படியே தனியா வாழ்ந்திட முடியாது… தனிமை ரொம்பக் கொடுமையானது… முகத்துல சிரிப்பையும் மனசுல வக்கிரத்தையும் வச்சிட்டு சுத்துற மனுஷங்க இங்க அதிகம்… எவனோ செய்த தப்புக்காக உன்னைத் தண்டிச்சுக்காதே… நிதின் உன் மேல உசுரையே வச்சிருக்கான்… உன்னைத் தவிர வேற யாரைக் கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவன் மனசாட்சி அவனை மன்னிக்காது… என் பிள்ளையைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்… அவன் விருப்பத்தை விட இந்த உலகத்தில் எனக்கு எதுவும் பெரிசில்ல… என்னை உன் அம்மாவா நினைச்சு நான் சொல்லறதை யோசிச்சுப் பாரு… நிதினைக் கல்யாணம் பண்ணிகிட்டா உன் எதிர்காலம் பாதுகாப்பா இருக்கும்… இதை மனப்பூர்வமா சொல்லறேன்… தயவுசெய்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு மா…” என்றார் அவள் முகத்தை நோக்கி.

இத்தனை தெளிவோடும் அன்போடும் மீனாட்சி சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் ஸ்தம்பித்து அமர்ந்திருந்தவளை நிதின் ஆர்வமாய் நோக்க, “ப்ளீஸ், ஓகேன்னு சொல்லுங்கண்ணி… அண்ணன் உங்க மேல உசுரையே வச்சிருக்கு… உங்களைப் பிரிஞ்ச இந்த மூணு வருஷமும் அவர் எத்தனை தவிச்சுப் போயிட்டார் தெரியுமா… நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவோம்… ஓகே சொல்லுங்கண்ணி…” பிரபா அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சலாய் கேட்க நிமிர்ந்து நிதினைப் பார்த்தவள் அவன் முகத்தில் தெரிந்த வலியிலும், கண்ணில் தெரிந்த காதலிலும் மனதில் தேக்கி வைத்த வைராக்கியம் எல்லாம் உடைந்து போக விசும்பி அழத் தொடங்கினாள் சஹானா.

அதைப் புரிந்து கொண்ட மீனாட்சி, “இனி அவங்க பேசி முடிவெடுக்கட்டும்…” என்று எழுந்து செல்ல மற்றவர்களும் அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்து சந்தோஷத்துடன் அங்கிருந்து நகர்ந்தனர்.

“சஹி…” முகத்தை இரு கைகளாலும் பொத்திக் கொண்டு மனதில் இதுவரை சுமந்திருந்த சோகங்களை எல்லாம் அப்போதே கண்ணீரில் கரைத்து விடுவது போல கதறி அழுது கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்தவன் எதுவும் பேசாமல் அவள் தோளில் கைவைக்க அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு கதறத் தொடங்கினாள் சஹா.

எனக்கே எனக்கான

என் துன்பங்களின்

ஆயுள் என்பது இன்னும்

சில கணங்கள் மட்டுமே…

இப்போதே இதை

அழுது தீர்த்துவிடுகிறேன்…

இனி நமக்கான வாழ்வை

உன் கை கோர்த்து

கடக்கும் நாளுக்காய்

மிச்சமிருக்கும் புன்னகையை

சேகரித்துக் கொள்கிறேன்…

சிறிது நேரம் அவளை அழ விட்டவன் மெல்ல தலையைக் கோதி முதுகை நீவிவிட்டான்.

“சஹி… ப்ளீஸ் அழாதம்மா… அம்மா பேசினதைக் கேட்டியா… எந்த ஒரு நல்ல அம்மாவும் பிள்ளைகளோட நியாயமான ஆசைகளைப் புரிஞ்சுப்பாங்க… இப்ப கல்யாணத்துக்கு ஓகே தானே…” என்று கேட்கவும் மேலும் அவன் நெஞ்சில் ஒண்டிக் கொண்டாள். அப்படியே அவன் இதயத்துக்குள் போய் ஒட்டிக் கொள்ளும் அவசரம் அந்த அணைப்பில் கலந்திருக்க அதைப் புரிந்து கொண்ட அவளது ரூபனும் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு மெல்ல விடுவித்தான்.

அவளைத் தன்னிலிருந்து பிரித்து நிறுத்தியவன், அழுததில் மேலும் சிவந்திருந்த முகத்தை புன்னகையுடன் நோக்கிக் கொண்டே, “வா… அம்மாகிட்ட சொல்வோம்…” என்று கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

ஆவலாய் காத்திருந்த அனைவர் மனதும் மகிழ்ச்சியில் நிறைய புன்னகையுடன் நோக்கிக் கொண்டிருந்தார் மீனாட்சி.

“அம்மா… எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க…” சட்டென்று இருவரும் அவர் காலில் விழ அன்போடு அவர்களைத் தூக்கி விட்டவர், “ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருங்க…” மனதார வாழ்த்தி இருவரையும் அணைத்துக் கொண்டார்.

“சரி, அடுத்த நல்ல நாள்லயே முறைப்படி உங்க வீட்டுல வந்து பேசறோம்… இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே…” என்றதும் சஹாவின் முகத்தில் வெட்கப் பூக்கள் மின்னின.

“ஹே சூப்பர்… வாழ்த்துகள் அண்ணா, அண்ணி…” என்று பிரபா குதிக்க, அவள் தலையில் செல்லமாய் கொட்டிய சரவணன், “நம்ம கல்யாணத்துக்கு கூட நீ இப்படிக் குதிக்கலையே… அண்ணனுக்கு கல்யாணம்னதும் சந்தோஷத்தைப் பாரு…” என்று கிண்டலடித்து, “வாழ்த்துகள், சிஸ்… என் மச்சானை உங்ககிட்ட ஒப்படைக்கறோம்… அவன் கண்ணு கலங்காம நீங்க தான் பத்திரமாப் பார்த்துக்கணும்…” என்று சிரித்தான்.

“அத்தான்… எப்படியோ உங்க மனம் போல மாங்கல்யம் அமைஞ்சிருச்சு… என் வாழ்த்துகள்…” என்றாள் ஆனந்தி.

“அடியே… அது பொண்ணுக்கு தான சொல்லுவாங்க… நீ என் பையனுக்கு சொல்லி வாழ்த்தற…” என்று சிரித்தார் மீனாட்சி.

“அப்படியா, சும்மா இருக்கட்டும் அத்தை… அத்தான் கொஞ்ச நஞ்சமாவா அக்காவுக்காக துடிச்சார்…” என்று கிண்டல் செய்ய, “சரி சரி, பாவம்… என் ரூபனை ரொம்பவும் ஓட்டாதிங்க…” என்று சஹா சொல்லவும் அனைவரும் வியந்து “பார்றா… இப்பவே புருஷனுக்கு சப்போர்ட்டை…” என்று சிரிக்க அவளைக் காதலுடன் நோக்கினான் நிதின்.

பிறகு சிறிது நேரம் சந்தோசமும் கலாட்டாவுமாய் கழிய அவளுக்கு குங்குமம் பூ வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்த மீனாட்சி, “சீக்கிரமே என் பேத்தியைப் பார்க்க வரேன்னு சம்மந்திம்மாகிட்ட சொல்லிடுமா…” என்றார் அவளிடம்.

“ம்ம்… சரிங்கத்தை…” என்றவளை, “என் மருமகளை பத்திரமா வீட்டுல விட்டுட்டு சீக்கிரம் வந்திடுப்பா…” என்று மகனுடன் பைக்கில் வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தவரை பிரபாவும், ஆனந்தியும், சரவணனும் பிடித்துக் கொண்டனர்.

“அம்மா, எப்படிம்மா இது… அண்ணன் பிரண்டுக்காகப் பேசப் போறேன்னு சொல்லிட்டு டபால்னு என் பையனைக் கட்டிக்க சம்மதமான்னு கேட்டுட்டிங்க…” என்றாள் பிரபா திகைப்புடன்.

“அதானே… எப்படியாச்சும் அந்தப் பொண்ணை சம்மதிக்க வைச்சா புண்ணியமாப் போகும்னு டயலாக் பேசிட்டு எப்படி அத்தை இப்படி பேசினீங்க…” என்றாள் ஆனந்தி ஆச்சர்யமாய்.

“ஆமா அத்தை, எனக்கும் அது விளங்காத புதிராவே இருக்கு… கொஞ்சம் சொல்லுங்களேன்…” என்றான் சரவணன்.

“ம்ம்… எல்லாருமா சேர்ந்து எனக்கு ரீலா ஓட்டுறிங்க… இப்ப நான் எப்படி உங்களுக்கு கலர் கலரா பிலிம் காட்டினேன்னு பார்த்திங்களா… அந்த பிராடு ரீல் மன்னனும் வரட்டும்… அப்புறம் எல்லாத்தையும் விம் போட்டு விளக்கறேன்…” என்றவர் நக்கலாய் சிரித்துக் கொண்டே அடுக்களைக்கு எழுந்து செல்ல மூவரும், “எப்படி இது…” என்று தலையைப் பிய்த்துக் கொண்டு நிதினுக்காய் காத்திருக்க ஒரு மணி நேர இடைவேளைக்குப் பிறகு பைக் சத்தம் வாசலில் கேட்டது.

“அம்மா…” உள்ளே நுழையும்போதே ஹை டெசிபலில் கத்திக் கொண்டு கையில் ஸ்வீட் பாக்சுடன் நுழைந்த நிதினைக் கண்டதும், “அம்மா, அண்ணா வந்தாச்சு…” என்று மறுஒளிபரப்பு செய்தாள் தங்கை.

“சீக்கிரம் வாண்ணா, உனக்கு தான் வெயிட்டிங்…” பிரபா பரபரக்க, “அம்மா எங்கே…” என்றான் நிதின் ஜாடையில். கிச்சனைக் கை காட்டி, “உள்ளே இருக்காங்க… சம்திங் ராங்…” என்று ரகசியம் சொன்னான் சரவணன். அடுக்களையிலிருந்து நெய்யில் முந்திரி வறுபடும் மணம் அவர் ஏதோ செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்த தயக்கத்துடனே நால்வரும் அங்கே சென்று எட்டிப் பார்க்க பாயாசத்தை நாலு கோப்பையில் ஊத்திக் கொண்டிருந்தார் மீனாட்சி.

“அம்மா… அண்ணன் வந்தாச்சு, வாங்க…” பிரபா மீண்டும் குரல் கொடுக்க, “இருங்க வரேன்…” என்றவர் அதை ஒரு டிரேயில் வைத்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவர், “என் மகனுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு… பாயாசம் எடுத்துக்கோங்க…” என்றதும் திகைத்தனர்.

மனதில் ஒரு கலக்கம் இருந்தாலும், “அம்மாதான் சஹியிடம் சம்மதம் சொல்லி விட்டாரே…” என்று அமைதியாய் பாயாசத்தை எடுத்துக் கொண்டான் நிதின்.

அதைக் குடித்து முடித்ததும், “அம்மா, இன்னும் சஸ்பென்ஸ் வைக்காம விஷயத்தை சொல்லுங்கம்மா…” பிரபா சிணுங்கவும் மகனை முறைத்தார் மீனாட்சி. நிதின் பம்மிக் கொண்டு அமர்ந்திருக்க, காதைப் பிடித்து செல்லமாய் திருகவும், “ஆ… அம்மா வலிக்குது விடுங்க…” என்று போலியாய் அலறியவனின் முதுகில் ஒன்று வைத்தவர், “ஏண்டா பெரிய மனுஷா, நீயே உன் கதைக்கு கதைவசனம் எழுதி என்னை நடிக்க வைக்கப் பார்க்கறியா… உன்னோட ரீல் எல்லாம் எப்பவோ அந்திருச்சு…” என்றார் சிரிப்புடன்.

“என்னம்மா சொல்லறிங்க… உங்களுக்கு எப்படி விஷயம் தெரிஞ்சுச்சு…” என்றான் அவனும் ஆவலுடன்.

“அன்னைக்கு விருந்துக்கு நீ சஹாவை அழைச்சு என்னைப் பேசி சம்மதம் வாங்க சொன்னியே… அப்ப இருந்தே மனசுல ஒரு உறுத்தல் இருந்துட்டு இருந்துச்சு… எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் எதோ ஒரு நண்பனுக்காக நீ இவ்வளவு யோசிக்கறதும், அந்தப் பொண்ணோட சம்மதத்துக்கு என்னை பேசச் சொன்னதும் முரண்பாடாவே இருந்துச்சு… அப்ப தான் நீயும் மாப்பிள்ளையும் போன்ல பேசிட்டு இருந்ததைக் கேட்டேன்… நீ அடிக்கடி வெளியூர் போனதுக்கான காரணமும் புரிஞ்சது… சஹாவை நினைச்சு ரொம்ப கவலையாப் பேசிட்டு இருந்த… நான் எவ்ளோ கெஞ்சியும் சஹா கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்கிறா… என் குடும்பத்துல அவளை ஏத்துப்பாங்களோன்னு பயப்படறா போலருக்கு… அதான் ஒரு பிளான் பண்ணிருக்கேன்… அம்மாட்ட என் பிரண்டு காதலிச்ச பொண்ணுக்கு இப்படி நடந்திருக்குன்னு ஆல்ரெடி சொல்லி வச்சிருக்கேன்… அதனால நீங்க விருந்துக்கு வர்ற அன்னைக்கு அவளையும் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து அம்மாவையே பேச வைக்கப் போறேன்… இதை பிரபா, ஆனந்திகிட்டயும் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டு இருந்த… முதல்ல அதைக் கேட்டதும் எனக்கும் ஷாக்கா தான் இருந்துச்சு… ஆனா யசோம்மா பத்தி நீ ரொம்ப வருத்தப் பட்டு சொன்னது மனசை உறுத்துச்சு… தன் மகனால ஒரு பொண்ணு பாதிக்கப்பட்டதுக்காக பெத்த மகனையே கொன்னு தானும் உயிரை விடறதுக்கு எவ்ளோ பெரிய மனசு இருக்கணும்… தப்பு செய்த மகனுக்காக அவங்க யோசிக்கும்போது தான் காதலிச்ச பொண்ணுக்கு நடந்த கொடுமையை மறந்து அவளுக்கு வாழ்க்கை கொடுக்க நினைக்கிற என் மகனோட நல்ல மனசுக்கு நான் எதிரா இருக்கக் கூடாதுன்னு தோணுச்சு…” மனம் உருக அவர் சொல்லிக் கொண்டிருக்க ஒரு வார்த்தை கூட நடுவே பேசாமல் அனைவரும் அமைதியாய் கேட்டிருந்தனர்.

“அம்மா….” குரல் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள தழுதழுத்த மகனின் தோளில் தட்டிக் கொடுத்த மீனாட்சி, “உன் சந்தோஷம் அந்தப் பொண்ணுதான்னு தெரிஞ்ச பிறகு அதைத் தட்டி விடறதுல எனக்கு விருப்பம் இல்ல… என் மகனை நான் ரொம்ப நல்லா வளர்த்திருக்கேன்னு என் மனசு நிறைஞ்சிருக்கு… இதை விட பெத்த தாய்க்கு ஒரு பிள்ளை என்ன பெருமையைக் கொடுத்திட முடியும்…”

நெகிழ்ச்சியுடன் கண்ணைத் துடைத்துக் கொண்ட அன்னையை கண்ணீருடன் அணைத்துக் கொண்டான் நிதின். மற்ற மூவரும் பிரம்மித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். யசோம்மா இறந்த பின்னும் ஒரு தாயின் மனதில் நிறைந்து சஹாவின் வாழ்வில் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறார்.

மகனை சான்றோன்

எனக் கேட்ட வேளையில்

ஒரு தாய் புளகாங்கிதம்

அடைகிறாள்…

அவனை  நல்ல

மனிதனாய் உணர்கையில்

தன் கருவறையில்

சுமந்ததிற்காய்

கர்வம் கொள்கிறாள்…

அன்னையின் மனம் குளிர்ந்தால்

அகிலமே நிறைந்திடாதோ….

Advertisement