Advertisement

அத்தியாயம் – 9

நாட்கள் அழகாய் சிறகடிக்க நாளுக்கு நாள் அவர்களின் காதலும், கல்லூரியிலும் அலைபேசியிலுமாய் வளர்ந்தது. நிதின் நண்பர்களுடன் கல்லூரிக்கு அருகில் இருந்த ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்தான். இரவு உணவு முடிந்து வழக்கம் போல் அலைபேசியில் சஹானாவை அழைத்தான்.

“சஹிம்மா, சாப்டியா… என்ன பண்ணிட்டு இருக்கே…”

“சாப்பிட்டு பேங்க் எக்ஸாம்க்குப் படிச்சிட்டு இருக்கேன்…”

“ம்ம்… உனக்கு நாளான்னிக்கு BSRB எக்ஸாம் எழுத ஊருக்குப் போகணும்னு சொல்லிட்டு இருந்தியே…”

“ம்ம்… அதே தான், ஆல்ரெடி ரெண்டு எக்ஸாம் பாஸ் பண்ணிட்டேன்… இது மூணாவது எக்ஸாம்…”

“ஓ, பேங்க் ஜாப் வாங்காம ஓய மாட்டேன்னு சொல்லு…”

“ம்ம்… அது என் கனவு ரூபன்… சின்ன வயசுல யாராச்சும் பெருசாகி என்னவாகப் போறேன்னு கேட்டா, ஆளாளுக்கு போலீஸ் ஆபீசர், டாக்டர், எஞ்சினியர், பைலட், டீச்சர்னு சொன்னா நான் பாங்க் ஆபீசர் ஆகணும்னு சொல்லுவேன்…”

“ஹஹா… ஏன் உனக்கு அந்த ஜாப் மேல அவ்ளோ ஆசை…”

“அப்பா எப்பவும் அம்மாட்ட சொல்லுவார்… நான் என்ன பாங்கு உத்தியோகமா பார்க்கறேன்… பத்து மணிக்குப் போயிட்டு நாலு மணிக்கு வீட்டுக்கு வர்றதுக்குன்னு… அதைக் கேட்டப்ப இருந்து எனக்கு அந்த வேலை மேல ஒரு ஆசை வந்திருச்சுன்னு வச்சுக்கங்களேன்…”

“ம்ம்… எக்சாம் முடிஞ்சதும் உடனே கிளம்பி வந்திருவ தானே… நெக்ஸ்ட் டே நம்மளை IV க்கு (இண்டஸ்ட்ரியல் விசிட்) எர்ணாகுளம் கூட்டிப் போறாங்களே…” அவர்கள் கல்லூரியில் பிஜி மாணவர்களை மட்டும் இரண்டு நாள் டிரிப் ஆக எர்ணாகுளம் அழைத்துச் செல்வதாகப் பிளான் பண்ணி இருந்தனர்.

“நிச்சயம் வந்திருவேன் ரூபன்… உங்களோட இருக்கப் போற அருமையான சான்ஸை மிஸ் பண்ணுவேனா…” சிரித்தாள்.

“ம்ம்… நீ வரலேன்னா நானும் போக வேண்டாம்னு தான் நினைச்சேன்… உனக்காக தான் வர ஒத்துகிட்டேன்…”

“சரி சரி, என் பிரியதமனே… அலைபேசியை அணைத்துவிட்டு நித்திரா தேவியை அணைத்துக் கொள்ளுங்கள்… அவள் நம்மை கனவில் டூயட் பாட வைப்பாள்…” எனக் கூற,

“ஹஹா… அப்படியே ஆகட்டும் பிரியசஹியே… நான் கனவில் உன்னைக் கன்னா பின்னாவென்று கதறவிடுவேன்… பரவாயில்லையா…” என்று கேட்டான்.

“ச்சீய்… போடா…” அவள் சிணுங்க அவனுக்கு உற்சாகம் கூடியது.

“என்ன ச்சீ… நேர்ல தான் எல்லாத்துக்கும் தடா சொல்லுற… கனவுல நாங்க பூந்து விளையாடுவோம்ல…”

“அய்யே… பூந்து விளையாடுற மூஞ்சப் பாரு… இவ்ளோ நாள் பழகியும் ஒரு உம்மாக்கு கூட வழியில்ல… இதுல பெருசா சண்டிவீரன் போல பேச்சைப் பாரு… இப்ப போயி தூங்குற வழியைப் பாருங்க… கல்யாணத்துக்கப்புறம் நான் எல்லாத்தையும் உங்களுக்கு விளக்கமா சொல்லித்தரேன்…”

“ஓ… தன்யனானோம் தேவி… தன்யனானோம்… சீக்கிரமே உங்களைப் படிக்க… ச்சே.. உங்கள் பாடத்தைப் படிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்…”

“ஹஹா… சரிசரி, மொக்கை போட்டது போதும்… நாளைக்கு நான் காலேஜ் முடிஞ்சதும் ஊருக்குக் கிளம்பிருவேன்…”

“ம்ம்… நான் வேணும்னா உனக்கு துணைக்கு வரட்டுமா… உன் அம்மாவையும், சர்ப்ரைஸ் தங்கையையும் பார்த்த போலவும் ஆச்சு…”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… அதுக்கான காலம் வரும்போது சொல்லறேன், அப்போ பார்க்கலாம்…”

“ஹூம்… சரி சஹிம்மா, பத்திரமாப் போயிட்டு சீக்கிரம் வந்திரு… நான் காத்திருப்பேன்…”

“ம்ம்… சரி, குட் நைட்…”

“என்னமா, மொட்டையா குட் நைட் சொல்லுற… இந்த முத்தம் கித்தம் எதுவும் இல்லையா…”

“ம்ஹூம், முத்தமும், மொத்தமும் அப்புறம் கொடுக்கறேன்… இப்பத் தூங்குங்க… குட் நைட்…” என்றவள் சிரிப்புடன் போனை வைக்க அவள் சொன்னதை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டான் நிதின் ரூபன்.

மனமெல்லாம் உற்சாக சாரல் வீச சஹானாவே கண்ணிலும் கருத்திலுமாய் நிறைந்திருந்தாள். எப்படி இருந்த தன்னை காதல் எவ்வளவு தூரம் மாற்றி விட்டிருக்கிறது… என்பதை நினைக்கையில் அதிசயமாய் இருந்தது. வீட்டுக்கு அழைத்து பேசிவிட்டு படுத்தவன் மனதில் மீண்டும் சஹானாவே சாரல் வீசிக் கொண்டிருக்க சுகமாய் கண் மூடிக் கிடந்தான்.

வளையோசை கல கலகலவென

கவிதைகள் படிக்குது – குளுகுளு

தென்றல் காற்றும் வீசுது…

சில நேரம் சிலுசிலு சிலுவென

சிறுவிரல் படப்பட – துடிக்குது

எங்கும் தேகம் கூசுது…

சின்னப் பெண் பெண்ணல்ல, வண்ணப் பூந்தோட்டம்…

கொட்டட்டும் மேளம்தான், அன்று காதல் தேரோட்டம்…

இளையராஜாவின் இசையில் SPB லயித்துப் பாடிக் கொண்டிருக்க பேருந்தில் இளவட்டங்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்க பாடலின் வரிகளில் லயித்து கடைக்கண்ணால் இடது பக்க இருக்கையில் நண்பனோடு அமர்ந்திருந்த ரூபனை ரசித்துக் கொண்டிருந்தாள் சஹானா. அவனது பார்வையும் அவளையே ரசித்திருக்க கண்கள் வேறு எங்கும் நகர்வேனா என்று சண்டித்தனம் செய்து கொண்டிருந்தன. இருவர் இதழ்களும் காதல்கீதம் மனதுக்குள் பாடிக் கொண்டிருந்தது.

இரவு நேரத்தில் மென்மையான குளிர் உடலை நனைக்க போக்குவரத்து குறைந்த சாலையில் எர்ணாகுளம் நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த பேருந்தில் இளமைக் கூட்டம் உற்சாகமாய் ஆடிப்பாடிக் கொண்டிருந்தது.

“டிரைவர் அண்ணே… தாத்தா பாட்டு போதும்… எங்களுக்குத் தகுந்த பாட்டு போடுங்க…” ஒருவன் குரல் கொடுக்க  டிரைவர் அதை மாற்றி புதிய பாடல்களை ஒலிக்க விட்டார்.

மன்னவா நீ வா… வா… வா…

முத்தங்களை நீ தா… தா… தா…

பொழிந்தது நிலவோ…

மலர்ந்தது கனவோ…

A.R.ரஹ்மான் இசையில் சிம்டான்காரன் செல்லமாய் சிணுங்க மாணவர்களுக்குள் உற்சாகம் தொற்றிக் கொண்டது. ஆளாளுக்கு எழுந்து ஆடத் தொடங்க ரூபனையே கண்களில் நிறைத்துக் கொண்டிருந்த சஹானாவும் பாடலுக்கு ஏற்ப கை தட்டிக் கொண்டிருந்தாள்.

பேருந்து ஒரு டீக்கடையில் நிற்க நிதின் நண்பர்களுடன் இறங்கினான். அவர்களை கவனித்துக் கொண்டிருந்த நிதாவும், கீதாவும் அங்கு வந்தனர்.

“ஏய், நீ அங்க உக்காரு…” என்று சஹானாவின் அருகிலிருந்த தோழியை விரட்டிவிட்டு, “எந்து ஓமணக்குட்டி… சுகம் தன்னையோ… கண்ணுலயே ரொமான்ஸ் தூள் பறக்குது…” கேட்டுக் கொண்டே அருகில் அமரவும் சஹா திணறினாள்.

“அ…அதுவந்து, அப்படியொன்னும் இல்ல… சும்மாதான்…” என்ன பேசுவதென்று தெரியாமல் அவள் திணறுவதை ரசித்துக் கொண்டே, “இங்க உக்கார்ந்து உன் சேட்டனை சைட் அடிச்சது போதும்… கொஞ்ச நேரம் பின்னாடி சீட்ல போயி உக்கார்… நான் சொல்லுற வரைக்கும் இங்க தல காட்டக் கூடாது… ஓடு…” என்று விரட்ட,

“எதுக்குப் பின்னாடி போகணும், இங்கயே இருக்கேனே…” கெஞ்சலாய் கேட்கவும், “ஹலோ… நாங்க என்ன உன் லவ்வை விட்டுட்டு ஓடவா சொன்னோம்… கொஞ்ச நேரம் பின்னாடி சீட்ல போயி உக்காருன்னு தான சொன்னோம்… ம்ம், போ…” என்றாள் கீதா. நிதின் வருகிறானா என ஜன்னலில் பார்த்துக் கொண்டே எழுந்து பின்னாடி சீட்டில் போய் அமர்ந்தவளின் மனம் வாடித் தவித்தது.

சிறிதுநேரத்தில் அவளுக்குப் பிடித்த டைரிமில்க்குடன் சீட்டுக்குத் திரும்பிய நிதின் அங்கே கீதாவும், நிதாவும் அமர்ந்திருப்பதைப் பார்த்துத் திகைத்தான்.

அதற்குள் வண்டியும் கிளம்பிவிட “நிதா, சஹி எங்கே… நீங்க இங்க உக்கார்ந்திருக்கீங்க…” பதட்டத்துடன் கேட்டான்.

“ஏன்… நாங்க இங்க உக்காரக் கூடாதா… சாக்கலேட் யாருக்கு… எங்களுக்கா… குடு, குடு…” கேட்டுக் கொண்டே கையிலிருந்ததை பறித்துக் கொண்டு பிரித்து சாப்பிடத் தொடங்க,

“நிதா, விளையாடாத… அவ எங்கே… கீழயும் இறங்கலையே…” என்றான் தவிப்புடன்.

“ஹப்பா, ஹனுமான் மாதிரி இருந்தவன் மனசுல காதல் வந்ததும் காதல் மன்னன் ஆகிட்டான் பார்த்தியா… ரொம்பப் பதறாத… அவ எங்கயும் போயிடல…” சொல்லிக் கொண்டே சாக்கலேட்டை சுவைக்க அவன் பேருந்து முழுதும் கண்ணை ஓட்டினான். பின் சீட்டில் விளக்கு அணைக்கப் பட்டிருந்ததால் சஹானாவை சட்டென்று அவனால் காண முடியவில்லை.

மனம் சட்டென்று சோர்ந்து போக கோபமாய் நிதாவை நோக்கியவன், “இப்ப நீ சொல்லப் போறியா இல்லியா…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாய் கோபத்துடன் கேட்க,

“பார்றா… காதல் புறாவுக்கு எப்படிக் கோபம் வருதுன்னு… கொஞ்ச நேரம் உன் ஆளைப் பார்க்காம இருக்க முடியலையா… நான் உன்னை லவ் பண்ணறேன்னு சொன்னப்ப என்னெல்லாம் பிலாசபி பேசினே… இப்ப நீ லவ் பண்ணும்போது எல்லாம் மாறிடுச்சா… எனக்கு வந்தா தக்காளிச் சட்னி, உனக்கு வந்தா ரத்தமா… என்னப்பா இது…” என்றவளை முறைத்தான்.

“நிதா, விளையாடாம இப்ப சொல்லப் போறியா இல்லியா…”

“ஹலோ, ஓவரா முறைக்காத மேன்… நான் ஒண்ணும் உன் லவ்வுக்கு வில்லி எல்லாம் இல்ல… உனக்கு என்னைப் பிடிக்கலன்னு சொன்னதுமே நான் மறந்துட்டேன்…. ஆனாலும் லவ்வுக்கு நீ சொன்ன பிலாசபி இருக்கே… அந்தக் கொடுமைய தான் மறக்க முடியல… அதான், கொஞ்சூண்டு உன்னை வெறுப்பேத்திப் பார்த்தேன்… அவளைப் பின்னாடி சீட்ல உக்கார சொன்னேன்… போயிப் பாரு…” என்றதும்,

“ஹோ, தேங்க்ஸ் நிதா, பயந்தே போயிட்டேன்…” என்றவனை புன்னகையுடன் நோக்கியவள், “ஓமனக்குட்டி வெயிட்டிங்… நீ போ சேட்டாயி…” என்று கூற அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.

பின் சீட்டில் சஹானா மட்டுமே சோகமாய் தனித்திருக்க அவள் அருகில் வந்தவனைக் கண்டதும் மலர்ந்தாள். பாட்டின் சத்தத்திலும், நின்று நடனமாடிக் கொண்டிருந்த நண்பர்களின் மறைவிலும் முன்னில் நடந்ததை அவள் அறிந்திருக்கவில்லை.

“சஹிம்மா…” அழைத்துக் கொண்டே அருகில் அமர்ந்தவனைக் கண்டதும் அன்னையைக் கண்ட குழந்தை போல கண்ணில் நீருடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ஹேய் என்ன இது… அங்கே உன்னைக் காணாம பதறிப் போயிட்டேன்… அந்த நிதா லூசு சும்மா விளையாடிருக்கா…” என்று சொல்லிக் கொண்டே, “அதும் நல்லதுக்குதான்… வேற வேற சீட்ல உக்கார்ந்திட்டு இருந்த நாம இப்போ பக்கத்துல உக்கார முடிஞ்சுதே…” சொல்லிக் கொண்டே அவள் கையை தன் கைகளுக்குள் எடுத்துக் கொள்ள சிரிப்புடன் தோள் சாய்ந்தாள்.

“சரி, ஊருக்குப் போனியே, எனக்கு என்ன கொண்டு வந்த…” அவள் காதில் கிசுகிசுக்க, “ஹூக்கும், நானே அவசரமா கிளம்பி பஸ்ஸை மிஸ் பண்ணிருவனோன்னு பயந்துட்டே வந்தேன்… இதுல என்ன கொண்டு வர்றது…” என்றாள் அவள்.

“சரி, அம்மாவும், தங்கையும் நல்லாருக்காங்களா… மாப்பிள்ள நான் விசாரிச்சேன்னு சொன்னியா…”

அவன் சொல்ல புன்னகைத்தவள், “அதெல்லாம் எல்லாரும் நல்லாருக்காங்க… ஆனா, இப்போதைக்கு நீங்க விசாரிச்சதை சொல்ல முடியாது… என் வீட்டுல கண்டிப்பா நம்ம லவ்வுக்கு எந்த எதிர்ப்பும் இருக்கப் போறதில்லை… ஆனா, படிப்பு முடிஞ்ச பிறகு சொல்லறது தான் சரின்னு இருக்கேன்…”

“ஹூம், எனக்கு இந்த வருஷம் முடிஞ்சதே சஹிம்மா…”

“ஏன் முடியணும்… பிரிண்டிங் லைன்ல ஏதாச்சும் பாஷன் டிசைன்ஸ் கோர்ஸ் டிப்ளமோ பண்ணுங்க…”

“சரி, உன் தங்கை என்ன பண்ணறா… அம்மா, தங்கை போட்டோ இருந்தா காட்டேன்…”

“சது, இப்ப எஞ்சினியரிங் பண்ணிட்டு இருக்கா… போட்டோ…” யோசித்தவள், “இப்ப அவங்க யாரையும் பார்க்க வேண்டாம்… அவளைப் பார்க்கும்போது உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு… அதனால நேர்லதான் முதல்ல பார்க்கணும்…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தான் நிதின்.

“ஏன், உன் தங்கைக்கு நம்மைப் போல இல்லாம நாலு காலு ஒரு வாலு ரெண்டு கொம்பு இருக்குமா…” என்று கேட்டவனின் கையில் நறுக்கென்று கிள்ளியவள், “லொள்ளா.. என் சது எவ்ளோ அழகாருப்பா… அவளைப் போயி கிண்டல் பண்ணிட்டு…” என்றாள் முறைப்புடன்.

“ஓஹோ… அவ உன்னை விட அழகா இருப்பா போலருக்கு… அதான் உன்னை விட்டு அவளை லவ் பண்ணிடுவேன்னு பயந்து போட்டோ காட்ட மாட்டேங்கறியா…”

“அய்யடா… ரொம்பத்தான் நெனப்பு… உங்களுக்கு நானே அதிகம்… இதுல ஓவர் பில்டப் வேற…” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்தவளை நோக்கிப் புன்னகைத்தான்.

“சரிசரி, என் செல்லக்குட்டி இல்ல… என் புஜ்ஜுக்குட்டி இல்ல… என் தங்கக்குட்டி இல்ல, கோச்சுக்காதடா செல்லம்…”

“அதான் எந்தக் குட்டியும் இல்லேன்னு சொல்லியாச்சே… அப்புறம் கோச்சுக்காம கொஞ்சவா செய்வாங்க..”

“அடப்பாவி, நீ அப்படி எடுத்துகிட்டியா… இப்படி கோபமா முகத்தை வச்சுகிட்டிருந்தா நீ எப்படி இருக்க தெரியுமா…”

“என்ன, கோபத்துலயும் அழகா இருக்கேன்னு ஐஸ் வைக்கப் போறீங்க… அதானே…” என்றவளிடம் சிரித்தான்.

“ச்ச்சே ச்சே…. நாங்க நக்கீரர் பரம்பரைமா… அப்படில்லாம் பொய் சொல்ல மாட்டோம்…”

“ஓ… அப்ப ஐயா என்ன சொல்ல வந்திங்க…”

“சொல்லிருவேன்… ஆனா மறுபடி கோச்சுக்க கூடாது…”

“கோச்சுக்க மாட்டேன்… சொல்லுங்க…”

“இப்படி கோபமா மூஞ்சிய வச்சிருந்தா பேய்க்கு மேக்கப் போட்ட மாதிரி ரொம்ப டெரரா இருக்குன்னு சொல்ல வந்தேன் சஹிம்மா…” என்றதும் அவனை முறைத்தவள் சட்டென்று சிரித்து விட்டாள். 

“ஹாஹா… இப்ப எவ்ளோ நல்லாருக்கு…” என்றவனின் இடுப்பில் கிள்ளி வைத்தவள், “ஹூம், இருக்கும்… இருக்கும்…” என்று சிரித்துக் கொண்டாள்.

அப்போது அங்கு வந்த சதீஷ், “டேய் மாப்ள… நீ இங்க வந்து ஜோடியா உக்கார்ந்து ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கே… முன்னாடி தூங்கிட்டிருந்த நம்ம சார் முழிச்சிட்டார்… உங்களை இப்படிப் பார்த்தா கத்தப் போறார்… எழுந்துக்க…” என்று அலர்ட் செய்யவும் எழுந்து முன்னில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அந்த சுற்றுலா இனிமையான முறையில் நீங்க காலையில் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றுவிட்டு ஏதோ ஒரு லுலு மாலுக்கு அழைத்துச் சென்றனர். விருப்பமுள்ளவர்கள் வேண்டியதை வாங்க நிதின் சஹானாவுக்காய் அழகான ஒரு வெள்ளையில் குட்டிப் பூக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட சுரிதாரை அவள் வேண்டாமென்று மறுத்தும் கேட்காமல் வாங்கிப் பரிசளித்தான். அடுத்து கொச்சியில் DJ போட்டிங் பிரசித்தி என்பதால் அதில் அழைத்துச் சென்றனர்.

இரண்டு நிலை கொண்ட அந்த பெரிய சைஸ் போட்டில் 150 மாணவர்கள் அமரும் வகையில் இருந்தது. பார்ட்டி புளோரில் அனைவரும் கூடியிருக்க லேசர் லைட்டுகள் கலர் கலராய் தளம் முழுதும் வெளிச்சத்தை சிதற விட ஹை டெசிபல் மியூசிக் சிஸ்டத்தில் பாட்டை அதிர வைத்துக் கொண்டு இளமையின் வேகத்தில் துள்ளத் தொடங்கினர்.

மாணவர்கள் ஒருபுறமும், மாணவியர் ஒரு புறமுமாய் தனித் தனியே பிரித்து விடப்பட்டிருக்க சோலோவாகவும், குரூப்பாகவும் தங்கள் திறமைகளை பாட்டுக்கேற்ப நளினத்துடன் வெளிப்படுத்திக் குதூகலித்தனர்.

நண்பர்களுடன் ஆடிக் கொண்டே சற்றுத் தள்ளி குரூப்பாய் ஆடிக் கொண்டிருந்த சஹானாவை நோக்கி கண்ணைச் சிமிட்டினான் நிதின். அவளும் அவனைப் பார்த்துக் கொண்டே ஓரமாய் ஆடிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் அனைவரும் சோர்ந்து அமரவும் சோலோவாய் ஒவ்வொருத்தரையும் ஆட விட்டுக் கொண்டிருந்தனர். நிதாவும் கீதாவும் கலக்கிக் கொண்டிருந்தனர்.

அதற்குப் பிறகு ஒவ்வொரு ஜோடியாய் செலக்ட் செய்து அவர்கள் போடும் பாட்டுக்கு ஆடச் சொல்லிக் கொண்டிருக்க, நிதினையும், சஹானாவையும் அழைத்த நிதா, “நீங்க ரெண்டு பேரும் ஜோடியா ஒரு பர்மாமான்ஸ் கொடுங்க…” என்றாள்.

“அச்சோ… ஜோடியா எப்படி, அதெல்லாம் வேண்டாம்… நான் தனியா வேணும்னா பண்ணறேன்…” என்று சஹானா கூற, “சஹா, நீ இப்ப நிதினோட டான்ஸ் பண்ணலேன்னா நான் போயி பண்ணுவேன்… பரவால்லியா…” என்று நிதா கேட்க, “இ..இல்ல நா..நானே பண்ணறேன்…” என்று எழுந்து கொண்ட சஹானா நிதின் அருகில் போய் நாணத்துடன் நின்றாள்.

அவர்கள் ஒலிக்க விட்ட பாட்டைக் கேட்ட நிதின், “இதுக்கு எப்படி டான்ஸ் பண்ணறது…” என்று கேட்க, “சரி அந்தப் பாட்டு சீன்ல வர போல ரெண்டு பேரும் ஆக்ட் பண்ணுங்க…” என்று நிதா கூற, “ஹே…. இது சூப்பர்… பண்ணுங்க…” என்று மற்றவர்கள் ஆரவாரிக்க பாட்டை மீண்டும் ஒலிக்க விட்டனர். சஹானாவின் முகம் வெட்கத்தை அணிந்து கொள்ள ஆவலுடன் அருகில் அமர்ந்தான் நிதின்.

“இஞ்சி இடுப்பழகி…

மஞ்ச சிவப்பழகி…

கள்ளச் சிரிப்பழகி…

மறக்க மனம் கூடுதில்லையே…”

அவள் கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் நிதின் கமலஹாசனாய் மாறிக் கொண்டிருக்க சுற்றிலும் நின்று மாணவர்கள் சிரித்து ரசித்துக் கொண்டிருக்க சஹானாவுக்கு வெட்கமாய் வந்தது. நிதின், “மறக்க மனம் கூடுதில்லையே….” என்று நீட்டிக் கொண்டிருக்கும்போது பாதிப்பாட்டிலேயே எழுந்து விட்டவள் வேகமாய் ஓடிச் சென்று தன் தோழியின் பின் ஒளிந்து கொள்ள அனைவரும் கை தட்டி சிரித்தனர்.

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்…

முப்பொழுதும் உன் கற்பனைகள்…

சிந்தனையில் நம் சங்கமங்கள்…

ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்…

Advertisement