Advertisement

அத்தியாயம் – 8
“டேய் மாப்ள… யாருடா அந்தப் பொண்ணு… கழுத்துல மாலை போட்டு லவ் யூன்னு சொல்லிட்டுப் போகுது… முன்னமே செட் பண்ணிட்டியா… எங்ககிட்ட சொல்லவே இல்ல…” என்ற நண்பனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் திகைப்புடனே அமர்ந்திருந்தான் நிதின்.
“ஓஹோ… பேய் அடிச்சா மட்டுமில்ல… தேவதை மாலை போட்டாலும் மந்திரிச்சு விட்ட போல ஆயிடுவாங்க போலருக்கு…” என்று ஒருத்தன் கூற மற்றவர் சிரித்தனர்.
“டேய் மச்சான்… எல்லாம் சரி, அந்தப் பொண்ணு இவனை சேட்டான்னு சொல்லிடுச்சே… அதை நினைச்சா தான் கொஞ்சம் பரிதாபமா இருக்கு டா…” சிரித்தான் ஒருவன்.
“ஆமால்ல, அது இவனை சேட்டான்னு தான் சொல்லுச்சு… அப்படின்னா இவன் அந்தப் பொண்ணுக்கு அண்ணனா… ஹே… இது சூப்பர்…” என ஆரவாரம் செய்தான்.
“டேய், இன்னைல இருந்து நீ எங்களுக்கு மாப்பிள்ள இல்லடா… உனக்கு மச்சானா பிரமோஷன் கொடுக்க நினைக்கறோம்…” நண்பர்கள் கலாய்த்துக் கொண்டிருக்க ஸ்தம்பித்து மௌனித்திருந்தான் நிதின்.
“என்னடா எதுமே பேச மாட்டேங்கற… எது எப்படியோ, அந்தப் பொண்ணு உன் கழுத்துல மாலை போட்டுட்டதால நாங்க அதை சிஸ்டரா நினைச்சுக்கறோம்… ஆனா சேட்டன்னு உன்னை சொல்லுச்சே… நீ எப்படி எடுத்துக்கப் போற…”
அவர்கள் தீவிரமாய் யோசிக்கத் தொடங்க, “டேய் போதும் டா… ஓவரா ஓட்டாதிங்க… அந்தப் பொண்ணு ஏதோ, பாவம் சீனியர்ஸ் சொன்னாங்களேன்னு பண்ணிருச்சு… அதுக்குப் போயி…” என்று கையை விரித்தவன், “சரி, அந்தப் பொண்ணு யாருன்னு தெரியலையே…” என்றான்.
“பார்ரா… சீனியர்ஸ் சொன்னதுக்கு தானே அப்படிப் பண்ணுச்சு… அப்புறம் எதுக்கு அந்தப் பொண்ணைப் பத்தித் தெரியணும்…” என்றான் ஒருத்தன்.
“கோச்சுக்காதடா மாமு, முதன் முதலா என் கழுத்துல ஒருத்தி மாலை போட்டிருக்கா… அவளப் பத்தி தெரிஞ்சுக்க நினைக்குறது தப்பா…” என்று அவனது கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச, “அப்படி வா வழிக்கு… டேய், எங்கடா நம்ம ஆல் இந்தியா ரேடியோ… அவனக் கூப்பிடுங்கடா…” என்று குரல் கொடுக்க சிறிது நேரத்தில் ஒரு பையனுடன் வந்தான்.
“உன் கழுத்துல மாலை போட்ட பொண்ணு பேரு சஹானா… MCom பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்… பேசிக் தமிழ்நாடு… கமிங் பிரம் பாலக்காடு… இப்போதைக்கு இவ்ளோதான் டீடைல்ஸ் கிடைச்சுது… போதுமா…” என்றான்.
“போது…மே… சஹானா… ம்ம்… நைஸ் நேம்… சரி வாங்கடா, கிளாசுக்குப் போவோம்…” என்று எழுந்து கொள்ள மற்றவர்களும் சிரிப்புடனே கிளம்பினர்..
சஹானா சாரல் தூவுதோ…
சஹாரா பூக்கள் தூவுதோ…
உதட்டைச் சுளித்து உற்சாகமாய் விசிலடித்துக் கொண்டே நடந்தவனைக் கண்டு மற்ற நண்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி “ஹூம்ம்…” என்று தலையாட்டிக் கொண்டனர்.
“ம்ம்… தூவும் தூவும்… முரட்டு சிங்கிளா சுத்திட்டு இருந்தவன் ஒரு மாலைக்குள்ள சுருண்டுட்டானே…” சொன்ன நண்பனை நோக்கி சிரித்தவன், “ஹாஹா… அப்படித்தான் ஆகிட்டேன்ல… என்னமோ மச்சி… மனசுல இவ்ளோ நாளா இல்லாம இன்னைக்கு ஒரு இனம் புரியாத பீலிங்… இவ தான் உனக்குன்னு மனசுக்குல்ல எங்கயோ மணி அடிக்குற சத்தம் கேக்குது…” என்றான் மென்மையாக.
“லவ் அட் பர்ஸ்ட் சைட்ல எல்லாம் உனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்லையே மாப்ள… சீரியஸா சொல்லறியா…”
“ம்ம்… என்னமோ அந்தப் பொண்ணு முகம் மனசுல ஆழமாப் பதிஞ்சிருச்சு… எனக்கானவ என்னைத் தேடி வந்துட்டான்னு மனசு படபடக்குது… இதான் அதுக்கு அர்த்தமான்னு தெரியல… ஆனா, ஒரு புது மாதிரி பீலிங்…”
கண்களில் கனவு மிதக்க சொன்னவனைக் கண்டு அவர்கள் அவன் மனதை உறுதி செய்து விட்டனர்.
MCom வகுப்பைக் கடந்து தான் அவர்களது வகுப்புக்குச் செல்ல வேண்டும்… அங்கு நின்று ஆவலுடன் அவன் கண்கள் உள்ளே தேட முன் வரிசையில் அமர்ந்து ஏதோ ஒரு மலையாளிப் பெண்ணுடன் மலையாளத்தில் சம்சாரித்துக் கொண்டிருந்த சஹானா நிதின் தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் பீதியானவள் சட்டென்று திரும்பி அமர்ந்து கொள்ள மனதுள் கலக்கம் நிறைந்தது.
அடுத்த நாள் லைப்ரரியில் இருந்து வெளியே வந்தவள் முன்னில் வழியை மறித்து நின்றான் நிதின் ரூபன்.
கண்கள் படபடக்க கலக்கத்துடன் அவனை ஏறிட்டவள், “ச..சாரி சேட்டா… அது வந்து அவங்க, சொல்லித்தான் நான் அப்படி…” என்று அவள் திணறலாய் பேசத் தொடங்க எதுவும் பேசாமல் அவளையே பார்த்து நின்றவன் மெல்ல புன்னகைத்தான்.
“சஹானா… பேரும் உன்னைப் போலவே அழகாருக்கு…” அவள் கண்கள் மிரண்டு விழிப்பதைக் கண்டவன், “பயப்படாத…. நேத்து நீ ஏன் அப்படி செய்தேன்னு கேக்க வரலை… எனக்கு அதுல ஒரு விஷயம்தான் பிடிக்கலை…” நிறுத்தியவனை என்னவென்பது போல் அவள் ஏறிட்டு நோக்க தலையாட்டி சிரித்தான்.
“அதென்ன சேட்டன்… ஒரு பொண்ணுக்கு நான் அண்ணனா இருக்கணுமா வேண்டாமான்னு தீர்மானிக்குற உரிமை இந்த உலகத்துல ரெண்டே பேருக்கு தான் இருக்கு… ஒண்ணு என்னைப் படைச்ச கடவுள்… இன்னொன்னு நான்… உனக்கு என்னை சேட்டன்னு சொல்லுற உரிமைய நான் கொடுக்க விரும்பல… அதை வாபஸ் வாங்கிடு…” சொல்லிவிட்டு நகர்ந்தவனை அதிசயமாய் பார்த்துக் கொண்டே நின்றவளின் உதடுகள் தானாய் புன்னகைக்க சற்றுதூரம் சென்று நிதின் திரும்பிப் பார்க்கவும் பட்டென்று சிரிப்பை மறைத்துக் கொண்டு ஓட்டமாய் வகுப்புக்கு செல்ல அவன் வார்த்தைகள் மனதில் மாறாமல் ஒலித்து புன்னகைக்க வைத்தன.
அடுத்து வந்த நாட்கள் அழகாய் கழிய அங்கங்கே நிதினைக் காண நேர்கையில் அவனது கண்களில் தெரிந்த ஆவல் மனதுக்குள் ஏதோ சேதி சொன்னாலும் சட்டென்று திரும்பிக் கொள்ள மூளை ஆணையிட்டாலும் கண்கள் சண்டித்தனம் செய்வதை அவளும் உணர்ந்து கொண்டாள். ஒரு மாதம் அவர்களுள் கண்டும் காணாமலும் கழிந்திருக்க நிதினைப் பற்றி கேட்ட பொதுவான நல்ல அபிப்ராயங்கள் அவள் மனதிலும் அவனை அழுத்தமாய் உணர வைத்தது.
காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருந்தவள் மாலை நேரங்களில் ஹாஸ்டலுக்கு முன்னில் நிதினின் நடமாட்டத்தையும் உணர்ந்தே இருந்தாள். இப்போதெல்லாம் இவளைக் கண்டால் சின்னதாய் புன்னகைக்கத் தொடங்கியிருந்தான். நிதாவும், கீதாவும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு மனதுக்குள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள்.
“மவனே, மாட்டினியா… காதல்னா என்னன்னு எனக்குக் கிளாஸ் எடுத்தியே… இப்ப நீ நல்லா அந்த அவஸ்தையை அனுபவி…” என்று சிரித்துக் கொண்டனர்.
சஹானாவுக்கு அவனை நினைக்கும்போதே மனதில் சாரல் அடிக்க, முதலில் அவனைக் கண்டால் வேகமாய் கடந்து விடுபவள் இப்போதெல்லாம் தினம் ஒரு முறையாவது அவனைக் காணாவிட்டால் கண்கள் அலைபாய்வதை உணர்ந்து கொண்டாள். அவனது நண்பர்கள் அவளை சிஸ்டர் என்று உரிமையோடு பேசத் தொடங்கியிருந்தாலும் நிதின் வெறும் பார்வையோடு நிறுத்திக் கொண்டான்.
அவன் எப்போது தன் காதலை சொல்லப் போகிறான் என்று மனம் எதிர்பார்ப்புடன் காத்திருக்க அவனோ அவளைக் காண்கையில் விழுங்கி விடுவது போல் கண்களில் காதல் தேக்கி நோக்குவதுடன் நிறுத்திக் கொண்டான்.
அவனைக் கண்டாலே பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும் அவள் விழிகளையும் செம்பூவென மலரும் முகத்தையும் காண்பதே அவனுக்குப் போதுமானதாய் இருக்க அவளுக்கோ அவனிடம் பழகவேண்டும், பேச வேண்டும் என்று காதலின் அவஸ்தையில் மனம் துடிக்க அவனிடமிருந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் தவித்தாள்.
மனம் நிறைந்த காதலுடன் அவனைக் காணும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தவள் எப்போதும் காணும் இடங்களில் அவனைத் தேட அன்று கண்ணிலேயே படவில்லை அவன். அடுத்த நாளும் அப்படியே கழிய, காணாமல் தவித்தவள் வகுப்புக்கு தேடிச் சென்றாள். சம்பந்தமே இல்லாமல் தங்கள் வகுப்புக்கு முன்னில் நின்று கொண்டிருந்தவளைக் கண்டு நிதினின் நண்பன் சதீஷ் வெளியே வந்தான்.
“என்ன சிஸ்டர், இங்க நிக்கறிங்க…”
“அ…அது வந்து… சும்மா தான்…” என்று சொல்லிக் கொண்டே கிளாஸில் கண்களை ஓடவிட்டவளைப் புரிந்து கொண்டான்.
“நிதினைத் தேடறிங்களா சிஸ்டர்…” அவன் கேட்கவும் சடாரென்று திரும்பியவள், “ம்ம்… அண்ணா, ரூபனுக்கு என்னாச்சு… ரெண்டு நாளா ஆளையே காணோம்… அவர் உடம்புக்கு எதுவும் முடியலையா…” தன் பதட்டத்தை மறைத்துக் கொண்டு கேட்க முயன்றாலும் வார்த்தையில் அது வெளிப்படவே செய்தது.
“இல்ல, அவன் அப்பாவுக்கு உடம்புக்கு முடியலன்னு ஊருக்குப் போயிருக்கான்… ஏதாச்சும் சொல்லனுமா…”
“இ..இல்ல, எப்ப வருவார்னு தெரியுமா அண்ணா…”
“தெரியலைமா, அவருக்கு பீவர்னு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்க… அனேகமா ரெண்டுநாள்ல வந்திடுவான்னு நினைக்கறேன்… அவன் மொபைல் நம்பர் வேணுமா…”
“இல்ல, வேண்டாம்… தேங்க்ஸ்ணா…” சொல்லிவிட்டு நகர்ந்தவளின் தளர்ச்சியான குரல் அவள் நிதினை மிகவும் மிஸ் செய்கிறாள் என்பதை உணர்த்த சதீஷ் அன்று மாலை நிதினுக்கு அழைத்துப் பேசியவன் சஹானா அவனைத் தேடி வந்ததை சொல்லவும் செய்தான்.
“பாவம்டா, உன்னைக் காணோம்னு சிஸ்டர் ரொம்ப தவிச்சுப் போயிட்டாங்க போலருக்கு… அப்பாவுக்கு எப்ப டிஸ்சார்ஜ் சொல்லியிருக்காங்க…” என்றவனுக்கு “அப்பாக்கு இப்ப பரவால்ல, டாக்டர் நாளைக்கு செக் பண்ணிட்டு தான் சொல்லுவாங்கடா… அனேகமா நாளை மறுநாள் தான் வருவேன்னு நினைக்கறேன்…” என்றான் நிதின்.
“ம்ம்… சரிடா, பார்த்துக்க…” என்றவன் போனை வைக்க அதுவரை தந்தையின் உடல்நிலை குறித்த கவலையில் உழன்று கொண்டிருந்த மனம் சஹானா தன்னைத் தேடுகிறாள் என்று தெரிந்ததும் அவளைக் காணத் துடித்தது. அன்றைய இரவை நெட்டித் தள்ளியவன் காலையில் டாக்டர் வந்து அப்போதே டிஸ்சார்ஜ் செய்து கொள்ள சொல்லவும் தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு உடனே கல்லூரிக்குக் கிளம்பினான்.
“டேய் நிதின்… இப்பதான வந்தே… நைட்டும் ஹாஸ்பிடல்ல தூங்கிருக்க மாட்டே… இன்னைக்கு ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்குப் போயேன்டா…” மீனாட்சி சொல்லவும்,
“ஆமாண்ணா, இப்பப் போனா நீ காலேஜ் போறதுக்குள்ள கிளாஸ் தொடங்கிருக்கும்… சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு ஈவினிங் போக வேண்டியது தானே…” என்றாள் பிரபா.
“இல்லமா, நான் கிளம்பறேன்… இன்னைக்கு மதியம் முக்கியமான கிளாஸ் இருக்கு… அப்பாவைப் பார்த்துக்கங்க… வரேன்ப்பா… ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்திட்டு கம்பெனிக்குப் போங்க… நாளைக்கே போயி நிக்காதிங்க…” என்றுவிட்டு சாப்பிடாமலே கோவை கிளம்பினான்.
அவன் கல்லூரியை சென்றடையும் போது வகுப்பு தொடங்கியிருந்தது. அவனுக்கு வகுப்பு தொடங்கியிருக்க, வேண்டுமென்றே சஹானாவின் கிளாஸ் வழியே இரண்டு முறை நடந்து வந்தான். ஆனால் அவளைக் காணவில்லை.
“என்னாச்சு சஹியை காணோம்… ஒருவேளை லீவா…” யோசனையுடன் நின்றவன் பசிக்கவே கான்டீனை நோக்கி நடந்தான். உள்ளே நுழைந்தவன் முகம் சந்தோஷத்தில் மலர ஓரமாய் ஒரு மேசையில் நெற்றியைப் பிடித்துக் கொண்டு சோர்வுடன் கண் மூடி அமர்ந்திருந்தாள் சஹானா. அவளுக்கு எதிரில் சத்தமில்லாமல் அமர்ந்தவன், வார்த்தைக்கும் வலிக்கும்படி “சஹி…” என்றழைக்க திடுக்கிட்டு விழித்தவள் எதிரில் இருந்தவனைக் கண்டு திகைத்தாள்.
“ரூ…ரூபன்… எப்ப வந்திங்க… அப்பாவுக்கு பரவால்லியா…” படபடப்புடன் கேட்டவளை நோக்கி முறுவலித்தான்.
“ம்ம்… பரவால்ல, இப்ப வீட்டுக்கு வந்துட்டார்…”
“ம்ம்…” என்றவள் தலை குனிந்து அமர்ந்திருக்க, “என்னாச்சு சஹிமா… கிளாஸ்க்கு போகாம இங்க இருக்கே…” அவனது அன்பான வார்த்தைகள் அவளுக்குள் ஏதோ செய்ய கண்ணில் முணுக்கென்று கண்ணீர் துளிர்த்தது. அதுவரை இருந்த அலைப்புறுதல் மாறி அவனைக் கண்டதும் மனம் அமைதி கொள்வதை உணர்ந்தாள்.
“ப்ச், ஒண்ணுமில்ல…” சொல்லும்போதே கண்ணீர் கன்னத்தில் வழிய துடித்துப் போனான் நிதின்.
“ஹேய்… என்னாச்சுமா, எதுக்கு இந்த கண்ணீர்… ப்ளீஸ் அழாத… உடம்புக்கு ஏதும் முடியலையா… வா, டாக்டர் கிட்ட போகலாம்…” எழுந்தவன் அவள் அருகில் வந்து நிற்க, “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றாள்.
“எனக்கு ரொம்ப பசிக்குது… எதாச்சும் சாப்பிட்டே பேசலாமா…”
“ம்ம்… எனக்கும் பசிக்குது…”
“ஏன் சாப்பிடலையா… இந்நேரத்துல இங்கே சாப்பிட வெறும் காஞ்சு போன வடை தானே இருக்கும்… வெளியே போயி சாப்பிடலாமா…” அவன் கேட்க தலையாட்டினாள். இருவரும் கல்லூரிக்கு அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றுக்கு சென்று சாப்பிட ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தனர்.
“ஏதோ பேசணும்னு சொன்னியே…”
“சாப்பிட்ட பிறகு பேசறேன்…” என்றவளை புன்னகையுடன் நோக்கிக் கொண்டிருந்தான் நிதின். அவர்கள் பொறுமையை சோதிக்காமல் உடனே பூரியும் ரோஸ்ட்டும் டேபிளுக்கு வர சாப்பிடத் தொடங்கினர். அவள் வேகமாய் பசியோடு சாப்பிடுவதைக் கண்டவன், “ஏன், உங்க ஹாஸ்டல்ல சாப்பாடு போடறதில்லையா… ரொம்பப் பசியா இருப்ப  போலருக்கு…” என்றான்.
“அதெல்லாம் போட்டாங்க… எனக்கு தான் இறங்கலை…” சொல்லிக் கொண்டே சாப்பிட்டவள் ரோஸ்ட் முடித்து முன்னில் இருந்த பூரி செட்டில் ஒன்றை எடுக்க அவனும் ரோஸ்ட் முடிந்து பூரியை எடுக்கப் போக, “அது எனக்கு வேணும்… நீங்க வேற வாங்கிக்குங்க…” என்றாள் சஹானா.
“சரி, வேற சொல்லிக்கலாம்… இது நான் எடுத்துக்கறேன்…”
“நோ, சொத்துல பங்கு கொடுத்தாலும் சோத்துல பங்கு கொடுக்க மாட்டேன்… வேற சொல்லுங்க…” என்றதும் அவள் சொன்ன விதத்தைப் பார்த்து வாய் விட்டு சிரித்தான் நிதின்.
அவன் சிரிப்பை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டே பூரியை அவன் பக்கம் நீக்கியவள், “ஆனா, உங்களுக்கு கொடுப்பேன்…” என்றுவிட்டு தண்ணியைக் குடிக்க அவன் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டே, “வேற ஏதும் வேணுமா…” என்றான்.
“வேற… நிறைய வேணும்… ஆனா, அதெல்லாம் இங்க கிடைக்காதே…” என்றாள் கண் சிமிட்டலுடன்.
அவளது செய்கை ஒவ்வொன்றும் அவன் திகைப்பைக் கூட்டிக் கொண்டே செல்ல, சாப்பிட்டு கை கழுவி வந்தவன், “சரி… ஏதோ சொல்லனும்னு சொன்னியே… இப்ப சொல்லு…” எனவும் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தவள் அவன் விழிகளுக்குள் ஆழ்ந்து இறங்கிக் கொண்டிருக்க தனக்குள் நடக்கும் ரசாயன மாற்றத்தின் தவிப்பை உணர்ந்தான் நிதின்.
“ஹேய்… என்ன இது… எதுக்கு இப்படிப் பார்க்கற…”
“அன்னைக்கு ஒரு விஷயம் சொன்னிங்க, நினைவிருக்கா…”
“என்ன சொன்னேன்…” அவனுக்குப் புரியவில்லை.
“ஒரு பொண்ணுக்கு சேட்டனா இருக்க ரெண்டு பேர் தான் தீர்மானிக்கனும்னு…”
“ஆமா, சொன்னேன்…”
“அது தப்பு… மூணு பேரு தீர்மானிக்கலாம்…” என்றாள் புன்னகையுடன்.
புரியாமல் பார்த்தவன், “ஹோ… எப்படி…” எனக் கேட்க, “கூடப் பிறக்கும் அண்ணனை கடவுள் முடிவு பண்ணலாம்… ஒரு பொண்ணைத் தங்கையா ஏத்துக்க வேணுமா வேண்டாமான்னு அந்தப் பையன் முடிவு பண்ணலாம்…”
“ஆமா, அதான் நான் சொன்னேனே…”
“இன்னொருத்தரும் முடிவு பண்ணலாம்…”
“அது யாரு…”
“அந்தப் பொண்ணு… ஒருத்தனை அண்ணனா ஏத்துக்கலாமா, வேண்டாமான்னு முடிவு பண்ணுற உரிமை பொண்ணுக்கும் இருக்கு தானே…” அவள் கேட்கவும் யோசித்தவன், “ஆமா… இருக்கு… அதுக்கு இப்ப என்ன…” என்றான் புரியாமல்.
“நான் உங்களை என் அண்ணனா ஏத்துக்க முடியாது… ஆனா நீங்க எனக்கு சேட்டன் தான்…” அவள் கூறியதைக் கேட்டு அவன் முழிக்க, “மலையாளத்தில் சேட்டன்னு சொன்னா அண்ணன் மட்டும் கிடையாது… வயசுல மூத்த ஆண்களை அப்படி மரியாதையா கூப்பிடுவாங்க… புருஷனைக் கூட சேட்டன்னு தான் கூப்பிடுவாங்க…” என்றாள் சிரிப்புடன்.
தலையை குலுக்கிக் கொண்டவன், “அச்சோ, நீ இப்ப என்ன சொல்ல வர்ற… எனக்கு ஒண்ணும் புரியலயே…” என்றான்.
“அதான், நான் உங்களை என் அண்ணனா ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டேனே… அப்புறம் என்ன…”
“அப்படின்னா…”
“அப்படித்தான்…” என்று கண்ணடித்தவள், “இந்த மூணு நாள் உங்களைப் பார்க்காம நான் தவிச்ச தவிப்பு எனக்குள் நீங்க எவ்ளோ ஆழமா இருக்கீங்கன்னு உணர வச்சிருச்சு… ரூபன்… அன்னைக்கு நான் உணராம சொன்ன அதே வார்த்தையை இப்போ உணர்ந்து சொல்லறேன்… ஐ லவ் யூ ரூபன்…” எனவும் அதிசயித்துப் போனவன் பிரமிப்புடன் அவளையே பார்த்திருக்க மனதில் சஹானா சாரல் வீசியது.
கண்களைக்
களவாடுகிறேன் நான்…
கவிதைகள் பிறக்கிறது…
எனையே களவாடுகிறாய் நீ
எண்ணத்தில் நீ மட்டுமாய்
எனை மறந்து நீயாகிறேன்…

Advertisement