Advertisement

அத்தியாயம் – 31
“சஹா… எல்லாரும் வரத் தொடங்கியாச்சு… என் பேத்திய ரெடி பண்ணியாச்சா இல்லியா…” மீனாட்சி கீழிருந்து குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன் அத்தை…” மாடியிலிருந்து எதிர்குரல் கொடுத்த சஹானா அடுத்த நிமிடத்தில் மாடிப்படியில் பிரசன்னமானாள்.
உடலைச் சுற்றியிருந்த பர்ப்பிள் வண்ண பட்டுப் புடவையும் கூந்தலில் சூடியிருந்த பூவும் மெருகேறியிருந்தவளை மேலும் அழகாய் காட்ட முகத்தில் படர்ந்திருந்த அமைதியான புன்னகை அகல் விளக்காய் ஒளி வீசியது.
“என்னமா, நீ மட்டும் வர்ற, மாப்பிள்ளையும் ஸ்ரீக்குட்டியும் எங்கே… இங்க எல்லாரும் அவங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்கல்ல…” மகளிடம் கேட்ட சசிகலாவிடம் புன்னகைத்தவள், “இப்ப வந்திருவாங்கமா…” என்றுவிட்டு மேசை மீதிருந்த கேக்கின் மீது மெழுகுவர்த்தியை வைத்துக் கொண்டிருந்த பிரபாவிடம் சென்றாள்.
ஸ்ரீக்குட்டியின் மூன்றாவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காய் குடும்பத்தினரும் நட்புகளும் அவர்கள் வீட்டில் கூடியிருந்தனர்.
தாய்மையின் பூரிப்பில் லேசாய் மேடிற்றிருந்த வயிற்றுடன் நின்று கொண்டிருந்தவளைப் புன்னகையுடன் பார்த்தவள், “நீ எதுக்கு பிரபா… இதெல்லாம் பண்ணிட்டு இருக்கே… இதோ இந்த அம்மாக்காரி வெட்டியா தானே நிக்கறா… இவ செய்ய மாட்டாளா…” என்று சாதனாவை சீண்ட, “யாரு நான் வெட்டியா நிக்கறேனா… இப்பதான் எல்லாருக்கும் கூல் டிரிங்க்ஸ் கொடுத்துட்டு வர்றேன்…” முறைத்தாள் அவள்.
“கலக்கி வச்ச கூல் டிரிங்க்ஸ எடுத்துக் கொடுத்ததுக்கு பில்டப் பாரு… சரி, எங்க நரேன்… அவங்களைப் பிக்கப் பண்ணிட்டு வந்துட்டாரா…” ஊரிலிருந்து வந்த நிஷாந்தி, நிர்மலா, அவளது கணவனை அழைத்து வருவதற்காய் ரயில்வே ஸ்டேஷன் சென்றிருந்தான் நரேன். அவள் கேட்கும்போதே வாசல் முன் கார் வந்து நிற்க அவர்கள் எல்லாரும் இறங்கவும் வரவேற்க சென்றனர்.
அவர்களைத் தொடர்ந்து சரவணனின் காரில் அவனது பெற்றோரும் ஆனந்தியும் வர அவர்களையும் வரவேற்று அமர்த்தினர்.
“வாங்க அண்ணி, வாங்கண்ணா…” வாய் நிறைய புன்னகையோடு வரவேற்ற தங்கையை நோக்கி அன்பாய் புன்னகைத்தவர், “என்ன மீனும்மா, எப்படி இருக்க… அப்பப்ப மகளைப் பார்க்கவாச்சும் நம்ம வீட்டுக்கு வரலாமில்ல…” என்றார் ஆதங்கத்துடன்.
“அதுக்கு எங்க உங்க தங்கச்சிக்கு நேரமிருக்கப் போகுது… அவ பேத்தியைப் பார்த்துக்கவும், மருமகளுக்கு உதவி செய்யவுமே நேரம் சரியாருக்கும்…” குத்தலாய் அண்ணி சொன்னதைக் கண்டு கொள்ளாமல் சிரித்தவர், “அப்படி எல்லாம் இல்ல அண்ணி… பிரபாவுக்கு குழந்தை பிறந்தா வந்து பார்க்காம இருந்திருவேனா… உக்காருங்க…” என்று உபசரித்தவர், “சஹா, அண்ணன் அண்ணிக்கு ஜூஸ் கொடு மா…” என்று சொல்லி முடிக்கும் முன் ஜூஸ் டம்ளர்கள் ஏந்திய டிரேயுடன் அங்கே நின்றிருந்தாள் சஹானா.
“ஆனந்திக்கு ஒரு வரன் சரியாகிருக்கு மீனு… அடுத்த வாரத்துல ஒரு நாள் பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லி இருக்காங்க… நாள் முடிவானதும் சொல்லறேன்… கண்டிப்பா நீ வரணும்…” வாத்சல்யத்தோடு கூறிய அண்ணனின் வார்த்தையில் நெகிழ்ந்தவர், “என்னண்ணா, நம்ம வீட்டு விசேஷத்துக்கு நான் வராமயா…” என்றுவிட்டு, “என்ன மருமகளே, டும்டும்க்கு தயாராகிட்டியா…” என்று கேட்க, “போங்க அத்தை…” என்று சிணுங்கலான வெட்கத்தோடு ஆனந்தி பிரபாவின் அருகில் போய் நின்று கொண்டாள்.
“அட, புள்ளைக்கு வெக்கத்தப் பாரு…” மீனாட்சி சொல்லவும், “ஓ, இதுக்குப் பேர் தான் வெட்கமா… இப்பதான் முதல் முறையா பாக்குறேன்…” என்று சரவணன் அவன் பங்குக்கு தங்கையைக் கிண்டல் செய்ய, “அடியே அண்ணி, உன் புருஷனை அடக்கி வளர்த்த மாட்டியா… இப்படி எல்லார் முன்னாடியும் கிண்டல் பண்ணி மானத்தை வாங்குறார்…” என்று பிரபாவின் காதைக் கடிக்க பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கணவனைப் பாவமாய் பார்த்தாள்.
அனைவரும் கலகலவென்று பேசிக் கொண்டிருக்க, “சரி, எல்லாரும் வந்தாச்சு… எங்கே இன்னும் நம்ம முக்கியமான ஆளைக் காணோம்…” நரேன் கேட்க, “அதோ, அப்பாவும் பொண்ணும் தரிசனம் கொடுத்துட்டாங்க பாருங்க…” என்று சிரிப்புடன் மேலே கை கட்டினாள் சஹா.
கருநீல நிற லஹங்கா டைப் பாவாடை பிளவுசில் அங்கங்கே தங்கம் மற்றும் பிங்க் நிறத்தில் எம்பிராய்டரி வேலை பளிச்சிட, அதற்கு மேல் தாவணியை அணிந்து அதற்கு பொருத்தமாய் கம்மல் வளையல் நெக்லஸ் அணிந்து  பிங்க் நிறத்தில் முத்துப் பூக்கள் கொண்ட ஹேர் பாண்ட் வைத்து இளவரசி போல் மிளிர்ந்த ஸ்ரீக்குட்டி எல்லாரும் கூடியிருப்பதைக் கண்டு வெக்கத்தில் நெளிந்து கொண்டே நிதினின் பின்னில் மறைந்தபடி வந்தாள். நிதின் சந்தன நிற பைஜாமாவும் வேட்டியுமாய் பளிச்சென்று இருந்தான்.
“அதோ நம்ம நிகழ்ச்சியின் நாயகி வந்தாச்சு… இனி கேக் கட் பண்ணிடலாம்…” சாதனா உற்சாகத்துடன் சொல்லவும் அனைவரும் மேசையை சூழ்ந்து நிற்க, மனைவியை அருகில் நிறுத்திக் கொண்டு ஸ்ரீக்குட்டியை தூக்கிக் கொண்டு நடுவில் நின்றான் நிதின்.
எல்லாரும் ஹாப்பி பர்த்டே பாடி வாழ்த்துக் கூற நிதின் ஸ்ரீக்குட்டியின் கை பிடித்து கேக்கை வெட்டி அவள் வாயில் ஊட்டி விட, குட்டிக் கையில் கேக்கை எடுத்து அவள் நிதினின் வாயில் கொடுக்க, “மம்மிக்குக் கொடு…” என்றவன் அருகில் நின்ற சஹாவின் வாயில் ஊட்டினான்.
அவளும் புன்னகையுடன், குழந்தையின் வாயில் ஊட்டிவிட, ஸ்ரீக்குட்டி இருவரின் கன்னத்திலும் முத்தமிட்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள். அதை அழகாய் மொபைலில் கிளிக்கிக் கொண்டான் நரேன்.
“அம்மாக்கு இல்லியா ஸ்ரீக்குட்டி…” சாதனா சிணுங்கலாய் கேட்க, அவள் வாயிலும் ஊட்டி விட்டவள், “பாட்டிக்கு… மீனுப்பாட்டிக்கு… அத்தைக்கு…” என்று வரிசையாய் ஊட்டி விட எல்லாரும் சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டு அவள் கையில் பரிசுப் பொருளைக் கொடுக்கவும் குழந்தை குஷியானாள். சாதனா கேக்கை வெட்டி கொடுக்க, சஹாவும், ஆனந்தியும் எல்லாருக்கும் கொடுத்தனர். அனைவரும் அங்கங்கு நின்று குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க வீடே கலகலவென்று இருந்தது.
இளையவர்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்க மீனாட்சி, சசிகலா, சரவணன் பெற்றோருடன் தானும் சேர்ந்து கொண்டாள் நிஷாந்தி. கொஞ்சிக் கொஞ்சி தமிழில் அங்கங்கே மலையாளம் கலந்து பேசிய அயல் மாநிலத்துக்காரியுடன் முதலில் ஒட்டாமல் பேசினாலும் அவளது தம்பி, தங்கைக்காய் அவள் செய்த தியாகத்தை மீனாட்சி பெருமையாய் அண்ணனிடம் கூறியதைக் கேட்ட உமாவின் மனதிலும் அவள் மேல் மதிப்பு வர மனம் உருகியவர் சாதாரணமாய் பேசத் தொடங்கினார்.
நிர்மலாவின் கல்யாணம் முடிந்த அடுத்த மாதமே நிதின், சஹானா, நரேன் சாதனாவின் கல்யாணமும் நடந்தது. முக்கியமான சொந்த பந்தங்களையும் நட்புகளையும் மட்டும் அழைத்து கோவை மருதமலையில் எளிமையாய் கல்யாணம் முடித்து திருப்பூரில் ரிசப்ஷன் வைத்து விட்டனர். சஹாவைப் பற்றி யாரும் தவறாகப் பேசி விடக் கூடாதென்று ஸ்ரீக்குட்டியை தன் குழந்தையாகவே உலகத்துக்கு சொல்லி விட்டான் நிதின்.
கல்லூரியில் படிக்கும்போதே இருவருக்கும் பதிவுத் திருமணம் முடிந்துவிட, நடுவில் சின்ன விபத்தால் இருவரும் பிரிய வேண்டி வந்ததாகவும் குடும்பப் பெரியவர்களுக்கு விளக்கம் கொடுத்து வாயடைத்து விட்டான். தன்னை யாரும் வார்த்தையால் கூட நோகடித்து விடக் கூடாதென்று பார்த்துப் பார்த்து நடந்து கொள்ளும் அவனது நேசத்தில் நெகிழ்ந்து போன சஹானா, அவனது இத்தனை அக்கறைக்கும் அன்புக்கும் தனது காதலை மட்டுமே பரிசளிக்க முடியுமென்று காதலித்து, மீண்டும் காதலித்து, மேலும் காதலித்துக் கொண்டே இருந்தாள்.
அவனுக்குப் பிடித்த எல்லாமும் அவளுக்கும் பிடித்தமாகிப் போனது. அவனது குடும்பம் முதல் ஸ்ரீக்குட்டி வரை. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் நேசத்தைக் கண்டு மீனாட்சியே பல நேரம் இப்படி ஒரு மருமகள் தானே தேடினாலும் கிடைத்திருக்க மாட்டாள் என நெகிழ்ந்தார். அவனது தொழிலுக்கும் தன்னிடமிருந்த சேமிப்பையே முதலீடாகக் கொடுத்து வளர்ச்சிக்கு உதவினாள். அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றால் பேத்தியை மீனாட்சி கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார். அவளது குறும்பும் மழலைப் பேச்சும் மனதைக் கவர அவளும் எதற்கெடுத்தாலும் மீனுப் பாட்டி என்று ஒட்டிக் கொண்டாள்.
இரு மகள்களும் கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு சென்று விட்டதால் சசிகலா அபார்ட்மெண்டை காலி செய்துவிட்டு பாலக்காட்டில் தங்கள் சொந்த வீட்டுக்கே சென்று விட்டார். நரேனுக்கும் வெளிநாட்டு வேலைக்கான அக்ரிமென்ட் முடிந்துவிட பாலக்காட்டு கல்லூரியிலேயே வேலைக்கு சேர்ந்தான். சாதனாவுக்கும் ரயில்வேயில் வேலைக்கு சேர்வதற்கான நியமன ஆர்டர் வந்துவிட்டது. போஸ்டிங் சொர்னூரில் என்றாலும் போய்வரும் வசதி இருந்ததால் பிரச்சனை இல்லை.
மதியம் விருந்து முடிந்து சரவணன் குடும்பம் முதலில் கிளம்ப, “அடுத்து ஆனந்தி கல்யாணத்துல ஒண்ணு சேருவோம்… கண்டிப்பா எல்லாரும் வந்திருங்க…” என்றார் உமா. அவர் வாயில் அப்படி ஒரு வார்த்தை வந்ததில் மீனாட்சிக்கும் அவர் அண்ணனுக்கும் கூட ஆச்சர்யமே. உண்மையில் இவர்களின் அன்பான பழகுமுறை பிடித்துப் போனதாலேயே அவர் அப்படிக் கூறியிருந்தார்.
“பை ஸ்ரீக்குட்டி…” கன்னத்தில் முத்தமிட்டு டாட்டா சொன்ன அத்தையின் வயிற்றைப் பார்த்தவள், “குட்டிப் பாப்பா எப்ப வரும் அத்தை… எனக்கு பாப்பா கூட விளையாடணும்…” என்றாள் மழலையில்.
“இன்னும் கொஞ்ச நாள்ல வந்திடும்டா செல்லம்… எங்கே அத்தைக்கு ஒரு முத்தா கொடு…” என்றவளின் கன்னத்தில் பச்சக்… என்று முத்தமிட்டாள். “சரி நாங்க கிளம்பறோம்…” என்ற உமா, “நீங்க மூணு பேரும் சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுங்க…” சாதனா, சஹா, நிர்மலாவைப் பார்த்துக் கூற நாணத்துடன் கணவனைப் பார்த்துக் கொண்டனர்.
நிர்மலாவின் கணவனுக்கு தமிழ் அவ்வளவு புரியாவிட்டாலும் பொதுவாய் எல்லாவற்றுக்கும் ஒரு புன்னகையை சிந்திக் கொண்டிருந்தான். சாதனாவின் அருகில் நின்ற நரேன், “பார்த்தியா, பெரியவங்களே நல்ல செய்தி சொல்ல சொல்லுறாங்க… நீதான் இப்போ வேண்டாம்னு தள்ளிப் போட்டுட்டே இருக்கே..” என்று முணுமுணுக்க, “அச்சோ, யாராச்சும் கேக்கப் போறாங்க… அது எனக்கு எங்க போஸ்டிங் போடுவாங்களோன்னு நினைச்சு சொன்னேன்… இப்ப தான் சொர்ணூர்னு தெரிஞ்சிடுச்சே…” என்றாள் சிணுங்கலுடன்.
“ஹோ… அப்ப நோ தடாவா…” கண்கள் விரிய ஆவலுடன் கேட்டவனை செல்லமாய் முறைத்தவள், “ம்ம்…” என்று தலையாட்ட, “ஆஹா, இன்னைக்கே அதுக்கான முயற்சியில் வெற்றிகரமா இறங்கிட வேண்டியது தான்…” அவன் மனைவியை விழுங்குவது போல பார்த்துக் கொண்டே சொல்ல செந்தூரமாய் சிவந்த முகத்தை யாரும் காணும் முன் நாணத்துடன் குனிந்து கொண்டாள்.
அடுத்து சாதனா குடும்பத்தினர் கிளம்ப, மீனாட்சியின் கையைக் கண்ணீருடன் பற்றிக் கொண்ட சசிகலா, “எந்த ஒரு தாய்க்கும் தன் பொண்ணுங்களை இப்படி நிறைவா  பார்க்கணும்னு தானே இருக்கும்… இந்த வாழ்க்கையும் சந்தோஷமும் நீங்களும் மாப்பிள்ளையும் எங்களுக்குக் கொடுத்த பாக்கியம்… அதை எப்பவும் மறக்க மாட்டோம்…” ரொம்ப நன்றி மா…” மனமுருகக் கூறினார்.
“அட, என்ன சம்மந்தி நீங்க… இப்படி ஒரு மருமகளை… இல்ல மகளை இந்த வீட்டுக்குக் கொடுத்ததுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்… கண்ணைத் துடைச்சிட்டு சந்தோஷமா கிளம்புங்க…” என்றார் புன்னகையுடன்.
அவர்கள் பேசுவதை சுவரின் இந்தப் பக்கமிருந்து கேட்டுக் கொண்டிருந்த சஹாவின் கண்கள் பனிக்க, சற்றுத் தள்ளி நரேனுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்த கணவனை நெஞ்சில் வழியும் நேசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். எதற்கோ திரும்பிய நிதின் அவள் பார்வை கண்டு கேள்வியாய் புருவம் தூக்க தலையாட்டிவிட்டு நகர்ந்தாள்.
அனைவரிடமும் விடைபெற்று அவர்கள் கிளம்ப வீடே வெறிச்சென்று ஆனது. குழந்தை தூக்கக் கலக்கத்தில் நிற்பதைக் கண்ட மீனாட்சி, “நான் ஸ்ரீக்குட்டியைத் தூங்க வைக்குறேன்… நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சஹா…” என்று அவரது அறைக்கு குழந்தையை எடுத்துக் கொண்டு சென்றார். இதமாய் மழையும் சாரலிடத் தொடங்க வெளியே கிடந்த நாற்காலிகளை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த நிதினை ஜன்னல் வழியாய் நோக்கி நின்றாள் சஹானா.
உள்ளே வந்தவன், “ஏய் பொண்டாட்டி… எதுக்கு இப்படி திருட்டுத்தனமா புருஷனை சைட் அடிச்சிட்டு இருக்க…” கேட்டுக் கொண்டே அவள் பின்னில் நின்றவனைக் கண்டு வழிந்தவள் முகத்தைக் காட்டாமல் திரும்பி சமாளித்தாள்.
“ஹூக்கும், என் புருஷனை நான் சைட் அடிக்காம வேற யாரு சைட் அடிப்பா… இல்ல, அடிக்கதான் விட்டிருவேனா…”
“ம்ம்… அப்படி சொல்லுடி என் செல்லாக்குட்டி…” கூறியபடி அவள் பின்னில் வந்து தோளில் கையிட்டுக் கொண்டான்.
“ப்ச்… என்ன இது ஹால்ல… அத்தை வந்துடப் போறாங்க…” சிணுங்கினாலும் அவள் குரலில் ஒரு தேவையை உணர்ந்த நிதின் உற்சாகமாய் புன்னகைத்தான். “அம்மாதான் தூங்கப் போயிட்டாங்களே… நம்ம ஸ்ரீக்குட்டிக்கு எவ்ளோ நாள் தான் பொம்மையையே விளையாடக் கொடுக்கிறது…” என்றவன் அவள் கழுத்தில் தாடையை உரச “அதுக்கு என்னவாம்…” கூச்சத்தில் நெளிந்தாள்.
அது அவனுக்கு மேலும் ஆர்வத்தைக் கொடுக்க அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து மென்மையாய் முத்தமிட்டவன், “அதனால அவளுக்கு கூட விளையாட ஒரு தம்பியோ, தங்கையோ அடுத்த பிறந்தாளுக்கு பரிசா கொடுக்கலாமேன்னு தான்…” சொல்லிக் கொண்டே அவன் கைகள் மெல்ல தோளிலிருந்து இறங்கி இடுப்பைப் பிடிக்க அவள் இதயம் தாறுமாறாகக் குதித்து ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த சட்டென்று திரும்பியவள் அவன் நெஞ்சில் தலை வைத்து இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவன் மேலிருந்த அளவில்லாக் காதலை அந்த அணைப்பு உணர்த்த, இடுப்பில் மெல்லக் கோலமிட்டவன், அவள் காதில் முத்தமிட்டு பாடினான்.
இஞ்சி இடுப்பழகி… மஞ்சச் சிவப்பழகி…
கள்ளச் சிரிப்பழகி… மறக்க மனம் கூடுதில்லையே…
அந்தப் பாடல் கல்லூரி நாட்களை நினைவுபடுத்த கூச்சத்தில் நாணியவள் சட்டென்று விலகி நின்றாள். அவன் குறுகுறுவென்று அவளையே பார்க்க கண்களில் வழியும் காதலுடன் அவளும் புன்னகையுடன் நோக்கி நின்றாள். ஆசையோடு அவளை நோக்கியவன், புருவத்தைத் தூக்கி “நீ பாடு…” என்பது போல சைகை செய்ய அவள் தொடர்ந்தாள்.
“உன் கழுத்தில் மாலையிட
உன்னிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா…”
மனதில் உள்ள வார்த்தைகளை குரலில் தேக்கி கண்கலங்கப் பாடியவளை புரியாமல் அவன் பார்க்க, 
“இஞ்சி இடுப்பழகா… மஞ்ச சிவப்பழகா…
கள்ளச் சிரிப்பழகா…
மறக்க மனம் கூடுதில்லையே…”
என்று முடித்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். ஆச்சர்யத்தில் விரிந்த கண்களுடன் அவள் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தி, “சம்மதமா…” எனக் கேட்க, நாணத்துடன் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டாள்.
சந்தோஷத்துடன் அவளை இரு கைகளாலும் அள்ளிக் கொண்டவன் மாடிப்படியேற தேகமெல்லாம் சிலிர்க்க காத்திருந்தாள் சஹானா. இத்தனை நாட்கள் அவளது மனம் முழுமையாய் அவனை ஏற்றுக் கொள்வதற்காய் காத்திருந்தவன் உள்ளமும் இருவரும் சங்கமிக்கப் போகும் நேரத்திற்காய் காத்திருந்தது. இருவரின் உதடுகளும் மௌனமாயிருக்க இதயங்கள் என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தது. அவனை அவள் மறத்தலும் அவளை அவன் மறத்தலும் அவர்கள் மரணத்தில் மட்டுமே சாத்தியம்…
வலிகளை மறக்க
வடுக்கள் விடுவதில்லை…
நினைவுகளை மறக்க
நிகழ்வுகள் விடுவதில்லை…
நம்மை மறக்க நம்
காதலும் விடுவதில்லை…
நேசத்தின் பெருவெளியில்
ஒரு கூட்டுக்குள்
இரு பறவையாய்…
இரு உடலில்
ஒரு உயிராய்…
உயிர்க் காதலில் சிறகடிப்போம்…
உலகம் உள்ள காலம் வரை
மறக்க மனம் கூடுதில்லையே…
………….சுபம்………….

Advertisement