Advertisement

அத்தியாயம் – 11
சாதனா போனில் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நிதின் அவள் வைத்ததும் பரபரத்தான்.
“சஹி கண் விழிச்சுட்டாளா… வாங்க, போயி பார்க்கலாம்…” என எழுந்தவனை வேதனையுடன் பார்த்த சாதனா, “சாரி நிதின்… இப்ப அவ என்னை மட்டும் தான் வர சொன்னா…” என்றதும் முகம் வாடினான்.
“ஏன்… என்னைப் பார்க்க என்ன தயக்கம்… அவளுக்கு என்ன பிரச்சனை…” முகம் சுருங்க வலியோடு கேட்டவனை என்ன சொல்லி சமாளிப்பதென்ற யோசனையுடன் பார்த்தாள்.
“அ..அது வந்து… இப்ப சூழ்நிலை சரியில்லை… நாம அப்புறம் விரிவா பேசுவோம்… நான் உடனே போகலைன்னா அதுக்கும் அவ கத்துவா… நீங்க கிளம்புங்க… உங்க கிட்ட நான் அப்புறம் பேசறேன்…” சொல்லிக் கொண்டே ஓட்டமும் நடையுமாய் சென்றவளை வியப்புடன் பார்த்து நின்றான்.
சரவணன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “ஏண்டா, நான் போகக் கூடாதா, என்னை சஹி வர வேண்டாம்னு சொல்லிட்டாளா…” கண்களில் நிறைந்த கவலையுடன் கலக்கம் நிறைந்த குரலில் நிதின் கேட்க அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் சரவணன்.
“இப்ப அவங்க உன்னைப் பார்த்தா மறுபடி உணர்ச்சி வசப் படலாம்… இப்போதைக்கு அவங்க சரியாகி வீட்டுக்குப் போகட்டும்… அப்புறம் என்னன்னு பேசிக்கலாம்… நீ வா, நாம கிளம்பலாம்…” என்று அவனை இழுக்க, “இல்ல சரவணா… நீ கிளம்பு… நான் இங்கிருக்கேன்…” என்றான்.
“மச்சான்… புரிஞ்சுக்க, போலாம் வா…”
“ப்ச்… இல்ல, நீ கிளம்பு… நான் அப்புறம் வரேன்…” என்றவன் அழுத்தமாய் மறுத்துவிட சரவணன் மட்டும் கிளம்பினான். வங்கியில் அவனது டேபிளில் கோப்புகளை எல்லாம் போட்டதை போட்டபடியே விட்டு வந்ததால் அவனுக்கு அந்தக் கவலையும் இருந்தது.
“சஹிம்மா, என்னடா ஆச்சு, ஏன் உனக்கு என்னைப் பார்க்க பிடிக்கலை… நான் என்ன தப்பு பண்ணேன்… எதுக்கு எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை…” மனதுக்குள் புலம்பிக் கொண்டே சோர்வுடன் அமர்ந்திருந்தான். இத்தனை நாள் அவளைக் காணாமல் தவித்தவன் இப்போது கண்ட பின்போ அவளது விலகலின் காரணம் புரியாமல் தவித்தான். 
சாதனா வேகமாய் சஹானாவின் அறைக்குள் நுழைய அவளது முகம் கோபத்தில் சிவந்து கிடந்தது. 
“சஹா, எழுந்துட்டியா… இப்ப எப்படி இருக்கு உடம்புக்கு…” கேட்டுக் கொண்டே அவள் கையை ஆதரவாய் பற்றியவளின் கையை உதறி விட்டவள், “பேசாத… நீ எங்க போன…” ஆத்திரத்துடன் வந்த அவள் வார்த்தைகளைக் கண்டு சசிகலாவும் மிரண்டு விழிக்க ஸ்ரீக்குட்டி பயத்துடன் அவர் தோளில் படுத்திருந்தது. 
“ஒரு காபி குடிக்கலாம்னு கான்டீன் போனேன், இப்ப எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்…” என்றாள் உற்று நோக்கி.
கோபமும் இயலாமையும் பதில் சொல்ல முடியாமல் தடுக்க விழித்த சஹானா, “ப்ச்… வீட்டுக்குப் போகலாம் மா…” என்று வேகமாய் எழுந்து கொள்ள, கையில் ஏறிக் கொண்டிருந்த ட்ரிப்ஸ் பாட்டில் ஆடியது.
“ஹேய்… எதுக்கு இப்ப எழுந்துக்கற… படு, டாக்டர் வந்து பார்த்த பிறகுதான் கிளம்ப முடியும்…” என்றாள் சாதனா.
“ச்சே…” என்று வெறுப்புடன் படுத்துக் கொண்டவள் ஏதோ யோசித்துக் கொண்ட போல் திரும்பினாள்.
“அம்மா, சது… உங்க ரெண்டு பேருக்கும் சொல்லிக்கறேன்… என்னைப் பத்தி யாருகிட்டயும் நீங்க எதுவும் பேசக் கூடாது… மீறிப் பேசினா அப்புறம் நான் நானா இருக்க மாட்டேன்…” என்று மிரட்டுவது போல் கூறியவள் கண்களை மூடிக் கொண்டு தன்னை சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் அவளையும் மீறிப் பொங்கிய கண்ணீர் மூடிய விழிகளில் வழிந்து செவியில் இறங்கியது. அதை வேதனையுடன் பார்த்து நின்றனர் அவள் அன்னையும் தங்கையும்.
மகளின் மனப் போராட்டத்தை உணர்ந்த சசிகலாவின் கண்களும் கலங்கியிருக்க சாதனாவின் மனதிலும் சஹா, நிதின் காதலைப் பற்றிய சிந்தனையே நிறைந்திருந்தது.  பெரியவர்களின் முகத்தை மாறி மாறிப் பார்த்த குழந்தை என்ன நினைத்ததோ, கண்ணில் நீர் நிறைந்து நிற்க உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சிணுங்கினாள்.
அதை கவனித்த சாதனா, “அம்மா… நீங்க கான்டீன் போயி ஸ்ரீகுட்டிக்கு ஏதாச்சும் சாப்பிட வாங்கிக் கொடுங்க… பாவம், அவளுக்குப் பசிக்கும் போலருக்கு… நீங்களும் காபி குடிச்சிட்டு வாங்க… நான் சஹா பக்கத்துல இருக்கேன்…” 
“ம்ம்…” குழந்தை அழுதால் அதற்கும் மகள் திட்டுவாளோ என யோசித்தவர் சாதனாவின் பேச்சை மறுக்காமல் கான்டீனுக்கு கிளம்பினார். உள்ளே நுழைந்தவர் கண்ணில் ஓரமாய் இருந்த மேசை ஒன்றில் சோகமாய் அமர்ந்திருந்த நிதின் பட, அதற்குள் அவனும் அவரைப் பார்த்துவிட்டு வேகமாய் எழுந்து அருகில் வந்தான்.
“அ…அம்மா, சஹிக்கு எப்படி இருக்கு… ஏதும் பேசினாளா… என்னைப் பத்தி கேட்டாளா…” அவனது பதட்டத்தைக் கண்டவருக்கு அவன் மனம் புரியவே செய்தது.
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல், “நீங்க இன்னும் வீட்டுக்கு கிளம்பலையா தம்பி… இவ்ளோ நேரமா இங்கதான் இருக்கீங்களா…” என்று கேட்க குழந்தை அந்தப் புதியவன் யாரென்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.
அதை கவனித்தவன் பார்வையும் குழந்தை மேல் விழ, சசிகலாவின் தோளில் சாய்ந்து கண்ணில் தளும்பி நின்ற கண்ணீருடன் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் அவளை நோக்கி சிரித்தான்.
“ஹாய் பேபி, உங்க பேரென்ன… பசிக்குதா…” என்று அவளை நோக்கி புன்னகைக்கவும் சட்டென்று சசிகலாவின் தோளில் முகத்தை மறைத்துக் கொண்டு அடிக்கண்ணால் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்க்க அந்த கள்ளமில்லா பாவையில் மனம் கொள்ளை போனவன் புன்னகைத்தான்.
“இவ பேரு ஸ்ரீலயா தம்பி… ஸ்ரீகுட்டின்னு கூப்பிடுவோம்… தூங்கிட்டு இருந்தவளை ஏதும் சாப்பிடக் கொடுக்காம அப்படியே எடுத்திட்டு வந்திட்டோம்… அதான், பால் வாங்கிக் கொடுக்கலாம்னு எடுத்திட்டு வந்தேன்…” அவர் சொன்னதும், “அச்சோ… குட்டிச் செல்லத்துக்கு பசிக்குதா…” என்றவன், “நீங்க உக்காருங்கம்மா… நான் வாங்கிட்டு வரேன்… நீங்க என்ன சாப்பிடறீங்க…” என்றான்.
“உங்களுக்கு எதுக்கு சிரமம் தம்பி… நான் பார்த்துக்கறேனே…” என்றவரை வலியோடு ஒரு பார்வை பார்த்தவன், “எனக்கு எந்த சிரமமும் இல்லைம்மா… நீங்க இப்படி என்னைத் தள்ளி நிறுத்துறது தான் வலிக்குது…” என்று கூறவும் அவன் வாடிய முகத்தைக் கண்டு வருந்தியவர், “எனக்கு ஒரு காபி மட்டும் போதும் தம்பி…” என்றார்.
சிறிது சந்தோஷத்துடன் வேகமாய் டோக்கன் வாங்கும் இடத்துக்கு சென்றவன் குழந்தைக்குப் பாலும் பிஸ்கட்டும், சசிகலாவுக்கு காப்பியும் வடையுமாய் திரும்பி வந்தான்.
குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பாலை ஆற்றுவதற்கு சசிகலா கஷ்டப் பட, “குழந்தையைக் கொடுங்கம்மா…” என்றவன் கையை நீட்ட, அது தலையாட்டி மறுத்து பாட்டியை இறுகப் பிடித்துக் கொண்டது.
அவன் முகத்தில் மெல்லிய ஏமாற்றத்தைக் கண்ட சசிகலா, “புதுசில்லையா… அதான், உங்ககிட்ட வர மாட்டேங்கிறா…” என்று சொல்லிக் கொண்டே பாலை ஆற வைத்துவிட்டு பிஸ்கட்டைப் பிரித்து அவள் கையில் கொடுத்தார்.
அது குட்டி இதழ்கள் விரித்து நிதினை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கியது.
“உங்களுக்கு காபி வாங்கலையா தம்பி…” காபி டம்ளரை எடுத்துக் கொண்டவர் கப்பில் பாதியை ஊற்றி, “நீங்களும் கொஞ்சம் குடிங்க…” என்று கொடுக்க, அதுவரை அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தவன் மறுக்காமல் வாங்கிக் கொண்டான். காபி குடிக்கும் வரை நேரமும்  மௌனமாய் கரைய நிமிர்ந்தான்.
“இங்க நீங்க எந்த ஏரியால இருக்கீங்கம்மா…”
“மங்கலம் ரோடுப்பா, கோகுலம் அபார்ட்மென்ட்…” அவன் கேட்கவும் குழந்தைக்கு பாலைப் புகட்டிக் கொண்டே சட்டென்று சொல்லி விட்டவர் பிறகுதான் யோசித்தார்.
“அச்சோ… நான் பாட்டுக்கு வீட்டை சொல்லி இந்தப் பிள்ளை அங்க வந்து நின்னா சஹா சாமியாடுவாளே…” அவர் யோசித்துக் கொண்டிருக்க அவனோ, “சாதனாவுக்கு எப்ப மேரேஜ் ஆச்சு… அவங்க ஹஸ்பன்ட் எங்கே இருக்கார்… எல்லாரும் ஒண்ணா தான் இருக்கீங்களா… சஹி ஏன் ஒரு மாதிரி இருக்கா… அவளுக்கு ஏதும் பிரச்சனையா…” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டு போக, பதில் சொல்ல முடியாமல் திகைத்துக் கொண்டிருந்த சசிகலாவைக் காப்பாற்ற ஆபத்வாந்தனாய் குழந்தை வந்தாள். 
பிஸ்கட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் அவர் வாயில் ஒன்றை வைத்து, “நீயும் சாப்பிது பாத்தி…” என்றது.
அதைக் கண்டு நிதினின் கலங்கிய உள்ளம் சற்று தெளிய, “எனக்கு பிஸ்கட் தரமாட்டியா செல்லம்…” என்றான். 
பசிமாறி சற்று நேரம் அவனைக் கண்டு பரிச்சயம் ஆகிவிட்டதால் மெல்ல சிரித்த ஸ்ரீகுட்டி இடவலமாய் தலையாட்டி, 
“ஹூம்… உனக்கு பிஸ்கத் தத மாத்தேன்…” என்று மறுக்க, அவனுக்கு சஹானாவின் நினைவு வந்தது.
“என் சொத்தைக் கேட்டாலும் தருவேன்… சோத்தைக் கேட்டா தர மாட்டேன்…” அவளது குரல் காதுக்குள் ஒலிக்க மௌனமாய் இருந்தவனிடம் ஸ்ரீக்குட்டியின் பிஞ்சுக் கைகள் பிஸ்கட்டை நீட்டி, “இந்தா பிஸ்கத்… சாப்பிது…” என்றது. 
மீண்டும் குழந்தை சஹானாவை உணர்த்த அவளை நோக்கிப் புன்னகைத்தவன், “எனக்கு பிஸ்கட் வேண்டாம்… நீயே சாப்பிடு செல்லம்…” என்று கூற, குழந்தை பிஸ்கட்டை  நீட்டி வாங்க சொல்லி அடம் பிடித்தாள்.
“வாங்கிக்கோங்க தம்பி… இவளுக்கு அப்படியே சஹாவோட சுபாவம்…” என்று வார்த்தையை விட்டவர், சட்டென்று நாக்கைக் கடித்துக் கொள்ள அவன் ஆவலுடன் திரும்பினான்.
“அம்மா, சஹாவுக்கு என்னாச்சு… அவகிட்ட நிறைய மாற்றம் தெரியுது… எதுக்கு இப்படி இருக்கா…” அவன் கேட்கவும் சுதாரித்துக் கொண்டவர், “தம்பி, கொஞ்ச நேரம் குழந்தையைப் பிடிக்கறீங்களா… சேலைல பால் சிந்திருச்சு… கழுவிட்டு வந்திடறேன்…” சொன்னவர் அவன் பதிலை எதிர் பார்க்காமல், “ஸ்ரீக்குட்டி, பாட்டி இப்ப வந்திடறேன்… சமத்தா இருக்கணும்…” என்று சொல்லிவிட்டு குழந்தையை அவன் கையில் கொடுத்துவிட்டு வேகமாய் சென்றார்.
“நான் இப்ப என்ன கேட்டுட்டேன், இவங்க ஏன் பதில் சொல்லாம நழுவறாங்க…” யோசித்தபடி நின்றவன் கையிலுள்ள குழந்தை பாட்டியைக் கை காட்டி சிணுங்க, “அழக் கூடாது செல்லம்… பாட்டி வந்திருவாங்க… சொல்லிக் கொண்டே குழந்தையை எடுத்துக் கொண்டு வேடிக்கை காட்டுவதற்காய் வெளியே வந்தான். 
சாலையில் வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு போய்க் கொண்டிருக்க அதைக் காட்டி ஏதேதோ சொல்லவும் குழந்தை அவனிடம் சிரித்து விளையாடத் தொடங்கினாள். குழந்தையின் முகத்தில் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு சஹானாவை நினைவுபடுத்த அவளிடம் ஒரு நெருக்கத்தை உணர்ந்தான். முன்னில் இருந்த பலூன் வியாபாரியிடம் பெரிய பலூன் ஒன்றை வாங்கி நீட்ட குழந்தையின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
குழந்தைகளின் 
சந்தோஷம் – ஒரு 
சின்ன பலூனிலும் 
பொம்மையிலுமே 
அடங்கி விடுகிறது… 
வளர்ந்து விட்டால் தான் 
ஆசையும் வானளவு 
பெருகி விடுகிறது…
சசிகலா திரும்பி வருகையில் குழந்தை நிதினுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருக்க ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டே வந்தவர், “சரி தம்பி… நான் வந்து ரொம்ப நேரமாச்சு… பொண்ணுங்க என்னைத் தேடுவாங்க… நான் போறேன்… நீங்களும் காலைல இருந்து இங்கயே இருக்கீங்க… வீட்டுல காணோம்னு நினைக்கப் போறாங்க… கிளம்புங்களேன்…” என்றார்.
“இல்லம்மா, சஹாவை டிஸ்சார்ஜ் பண்ணதும் நான் போய்க்கறேன்…” என்றவனைப் பரிதாபமாய் பார்த்தவர், “ப்ளீஸ்… சில விஷயங்களை எல்லாம் என்னால இப்ப சொல்ல முடியலை… ஆனா உங்களை இப்ப பார்த்தா சஹா நிச்சயம் உணர்ச்சி வசப்படுவா… அவ நல்லார்க்கணும்னு நினைச்சா இப்ப கிளம்புங்க… நீங்க எத்தனை கேள்வி கேட்டாலும் என்னால இப்ப பதில் சொல்ல முடியாது…”
நிதானமாய் தெளிவாய் அவர் கூறிய வார்த்தைகள் அவனுக்கு குழப்பத்தையும் வேதனையையும் ஒருங்கே கொடுத்தாலும் அவனைக் கண்டதும் மயங்கி விழுந்த அவன் சஹியிடம் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டான். 
அவனது தங்கை பிரபா வேறு இரண்டு முறை அலைபேசியில் அழைத்து, “எப்போது வீட்டுக்கு வருவாய் அண்ணா…” என்று கேட்டிருந்தாள். மீண்டும் சஹாவைக் காணும் ஆர்வம் இருந்தாலும் அவளது மனநிலையை மனதில் வைத்து வீட்டுக்குக் கிளம்ப முடிவு செய்தான்.
“சரிம்மா… உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நான் இப்ப கிளம்பறேன்… ஆனா என் கேள்விகள் எல்லாம் அப்படியே தான் இருக்கு… அதுக்கு கூடிய சீக்கிரமே உங்ககிட்ட இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்…” என்றவன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு, “பைடா செல்லம்…” என்று அவரிடம் கொடுத்து நடக்க அவர் நெகிழ்ச்சியுடன் பார்த்து நின்றார்.
“தம்பி, உங்க மனசையும் என் பொண்ணு மேல நீங்க வச்சிருக்கிற அன்பையும் என்னால புரிஞ்சுக்க முடியுது… உங்களைப் போல ஒருத்தர் மாப்பிள்ளையா வர எனக்குக் கொடுத்து வைக்கலையே… சஹா ஏன் இப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்க நீங்க காட்டுற ஆர்வம் புரிஞ்சாலும் அதைத் தெரிஞ்சுகிட்டா நீங்க எப்படித் தாங்கிக்கப் போறீங்களோன்னு தான் இப்ப என் கவலையா இருக்கு…” மனதுக்குள் எண்ணியவாறே குழந்தையுடன் வார்டுக்கு நடந்தார்.
அங்கு டாக்டர் சஹானாவைப் பரிசோதித்துக் கொண்டிருக்க சாதனாவின் அருகில் சென்று நின்றார். 
“ரொம்ப பலகீனமா இருக்காங்க… நல்ல ஹெல்த்தி புட்  சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க… வேற எந்த பிரச்னையும் இல்லை…” என்றவர் டிஸ்சார்ஜ்க்கு எழுதிக் கொடுக்க பணத்தைக் கட்டிவிட்டு அனைவரும் டாக்ஸியில் வீட்டுக்கு கிளம்பினர். மூவரும் வேறு வேறு சிந்தனையில் உழன்று கொண்டிருக்க அமைதியாக தொடர்ந்தது பயணம். குழந்தை உறங்கத் தொடங்கி இருந்தாள். 
“சஹா, நீ ரெஸ்ட் எடு… நான் சீக்கிரம் இட்லி ஊத்தி எடுத்திட்டு வரேன்…” சொன்ன சசிகலா அடுக்களைக்குள் நுழைய குழந்தையை தன் அறையில் கிடத்திவிட்டு சாதனாவும் அவருக்கு உதவ சென்றாள். ஒரு கனத்த மௌனம் வீடு முழுதும் நிறைந்திருக்க யாருக்கும் எதுவும் பேசிக் கொள்ளவே தோன்றவில்லை. சஹானா அன்னையின் வற்புறுத்தலில் இரண்டு இட்லியை விழுங்கிவிட்டு படுத்துக் கொள்ள மற்றவர்களும் சாப்பிட்டு முடித்தனர்.
பல்வேறு சிந்தனைகள் மனதை ஆட்கொள்ள உறக்கம் மட்டும் மூன்று பேருக்கும் வரவே இல்லை.
சஹாவின் உள்ளத்தில் நிதினைக் கண்டது முதல் உள்ள நினைவுகள் பசுமையாய் குடை விரிக்க அவனோடு கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட கனவுகள் பாரமாய் மனதை அழுத்த கண்கள் வழியே கண்ணீராய் வெளியேற்றினாள்.
சசிகலாவின் மனதும் மகளைப் பற்றிய கவலையில் கனத்துக் கிடந்தது. “பட்டாம்பூச்சியாய் எத்தனை எத்தனை கனவுகளுடன் வலம் வந்தவள் இன்று சிறகுகள் முறிந்து வண்ணம் தொலைத்து வாடிக் கிடக்கிறாளே… கடவுளே… அவளுக்கு விடியலே இல்லையா என்று எத்தனை நாட்கள் அழுது புலம்பி இருக்கிறேன்… இப்போது அந்தப் பையனைக் கண்ட பிறகு மனதுக்குள் ஒரு விடிவெள்ளி முளைத்தது போல் வெளிச்சம் தோணுதே… அவளுக்கும் ஒரு விடியலை நீ தான் கொடுக்க வேண்டும்…” என்று வேண்டிக் கொண்டார். 
சாதனாவின் மனமோ குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருந்தது. “கடவுளே… நான் செய்த ஒரு செயல் என் சஹாவின் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிவிட்டதே… எத்தனை ஆசையாய் நிதினைக் காதலித்திருப்பாள்… அந்த கனவுகளும் ஆசையும் கலைந்து போக நானே காரணமாகி விட்டேனே… இத்தனை நாட்களாய் என் நெஞ்சில் சுமக்கும் சிலுவையை எப்போது இறக்கி வைக்கப் போகிறேன்… எல்லாத்துக்கும் நீதான் ஒரு வழியைக் காட்ட வேண்டும்…” மனதில் வேண்டிக் கொண்டவள் அவர்கள் வாழ்க்கையை மாற்றிப் போட்ட பழைய நாள் சம்பவங்களை அசைபோடத் தொடங்கினாள்.
ஆறாத ரணமொன்று
அடி நெஞ்சில் வீற்றிருக்க
நீர் பூத்த நெருப்பாக
உள்நெஞ்சம் கனன்றிருக்க
மாறாத வடுவாக 
மனதில் பதிந்து போன 
வலியொன்று…
நித்தமும் தந்திடும் 
மரணவலியை
நீ வந்து மாற்றிடுவாயா…

Advertisement