Advertisement

அத்தியாயம் – 10
வெகு நேரம் டான்ஸ் ஆடிக் களைத்துப் போனவர்கள் போட்டின் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஒரு சிலர் மட்டும் ஆடிக் கொண்டிருந்தனர். அழகான மாலை மயங்கத் தொடங்கியிருக்க நீரைக் கிழித்துக் கொண்டு மென்மையான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது படகு.
சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த சஹானாவை நோக்கி ரூபன் ஜாடை காட்டி அழைக்க, என்னவென்று புருவத்தைத் தூக்கிக் கேட்டாள். “வா…” என்றவன் படகின் யாருமற்ற தனிமைப் பகுதியை நோக்கி நகர பயமும் ஆவலும் போட்டி போட தயக்கத்தை ஆசை வென்றதில் மெல்ல நழுவி அவன் இருந்த இடத்துக்கு வந்தாள் சஹானா.
காற்றில் முடிக் கற்றைகள் சிலுப்பிக் கொண்டு பறக்க ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே அவனை நோக்கிப் புன்னகைத்தவளை நோக்கி அவன் கையை நீட்ட அதைப் பற்றியவளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
ஏகாந்தமும், காற்றும், சூழ்நிலையும் அவர்களை வேறு ஏதோ உலகத்துக்கு அழைத்துச் செல்ல அவளைக் கீழே அமர்த்தியவன் அருகில் அமர்ந்து கொண்டே அவளையே விழுங்கி விடுவது போலப் பார்க்க, அதைத் தாங்க முடியாமல் நாணத்துடன் குனிந்து கொண்டாள் சஹானா.
அவள் தாடையை ஒரு விரலால் நிமிர்த்தியவன் அவளை நெருங்கி அமர, வெளியே வீசிய கடல் காற்றின் வேகத்தை விட மனதுக்குள் காதல் காற்று வீசத் தொடங்கியது. அவள் முகத்தில் விரலால் மெல்லக் கோலமிட்டவன், உதடுகளில் மெல்ல தடவிக் கொடுக்க மனதுக்குள் உணர்ந்த உஷ்ணத்தைக் கட்டுப் படுத்தும் வழியறியாமல் திகைத்தாள். அவள் தவிப்பை உணர்ந்தவன் கோலமிடுவதை நிறுத்திவிட்டு கையைப் பற்றிக் கொண்டான்.
“சஹிம்மா… இந்த நிமிஷம் என்னால எப்பவும் மறக்கவே முடியாது… மனசு ரொம்ப நிறைஞ்சிருக்கு… உன் அருகாமை இந்த உலகமே என் காலடியில் வந்தபோல சந்தோஷத்தைக் கொடுக்குது… ஐ லவ் யூ சஹி…”
சொல்லிக் கொண்டே அவளை மெல்ல அணைத்து கன்னத்தில் முத்தமிட அவள் கண் மூடி லயித்திருந்தாள். அவனது உதடுகளின் ஊர்வலத்தை மேலும் எதிர்பார்த்தவள் அது கன்னத்தோடு நின்றிடவே கண் திறந்து பார்க்க அவன் அவளையே புன்னகையுடன் நோக்கிக் கொண்டிருந்தான்.
அவள் என்னவென்பது போல் பார்க்க, புருவத்தைத் தூக்கி சிரித்தவன் உதட்டைச் சுழித்து பிளையிங் கிஸ் ஒன்றைக் கொடுக்க சிவந்தவள் குனிந்து கொண்டாள்.
“சஹிம்மா, இது தொட்டால் தொடரும் விளையாட்டு… இப்ப அதுக்கான நேரம் நமக்கு வரலை… அதனால இப்ப இதோட நிறுத்திக்குவோம்…” என்று கூறவும் மனதுக்குள் பரவிய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, “ம்ம்…” என்றாள்.
“இந்தத் தனிமை மனசுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு… ஆனாலும் கொஞ்சம் பயமாருக்கு… அதனால நாம இடத்தைக் காலி பண்ணுவோம்…” என்று அவன் எழவும் அவளும் எழுந்து கொள்ள சட்டென்று இறுக்கி அணைத்து விடுவித்தான்.
அவனது அணைப்பில் இதயம் தாறுமாறாய் எகிறத் தொடங்க சில நிமிடத்தில் விடுவித்தவன், “வா… போகலாம்…” என்று அழைத்துக் கொண்டு நடந்தான். மனதில் மணாளனாய் அவனை எண்ணி ஒரு பெண்ணாய் தான் எந்தத் தடையும் சொல்லாதபோதும் கிடைத்த தனிமையை உபயோகித்துக் கொள்ளாமல் கண்ணியமாய் தன்னை விட்டு விலகியதை நினைத்து மனம் பெருமையில் விம்மியது. அவன் மேலிருந்த காதலும் விருப்பமும் மேலும் கூடியது.
உன்னோடு வாழ்வது ஆனந்தமே
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே…
அதற்குப் பிறகு அவர்கள் பார்வையில் காதலோடு ஆசையும் கலந்திருக்க கிடைத்த சந்தர்பத்தில் பறக்கும் முத்தங்களும், மென்மையான சின்னத் தீண்டல்களுமாய் நிறுத்திக் கொண்டனர். இனிமையான நினைவுகளை இதயத்தில் நிறைத்து சுற்றுலா முடிந்து கல்லூரிக்கு திரும்பினர்.
உலகத்தின் நேசம் மொத்தமும் உள்ளத்தில் நிறைத்துக் கொண்டு திகட்டாத காதலில் வளம் வந்த அழகான நாட்கள். நாளுக்கு நாள் அவர்களுக்குள் இருந்த பிணைப்பு இறுகிக் கொண்டே செல்ல ஒருவரை ஒருவர் காணாமல் இருந்தால் பைத்தியமே பிடித்துவிடும் போலத் தோன்றியது.
அவர்களுக்கான இறுதி செமஸ்டர் நெருங்க நெருங்க எல்லார் மனதிலும் பிரியப் போகும் எண்ணம் வேதனையைக் கொடுத்தது. ஒரு பெரிய நிதி நிறுவனத்தின் காம்பஸ் இண்டவியூவில் நிதின் தேர்வாகி ஆபர் லெட்டரை கையோடு வாங்கி இருந்தான். நண்பர்களுக்குள் அவர்களுக்கான எதிர்கால சிந்தனைகள் ஒரு புறம் இருந்தாலும் நட்பைப் பிரியப் போகும் சோகம் மறுபுறம் இருந்தது.
ஜூனியர் மாணவர்கள் சீனியர்களுக்காக நடத்தும் பேர்வெல் பார்ட்டியில் “பசுமை நிறைந்த நினைவுகளே…” என்று பாடி சோகத்தைப் பகிர்ந்து கொண்டனர். செமஸ்டருக்கு இன்னும் ஒரு வாரமே இருக்க நிதின் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“டேய் சதீஷ்… நீ எப்படா சிங்கப்பூர் கிளம்பப் போறே… விசா வந்திருச்சா…”
“இன்னும் இல்லடா மாப்பிள… அதுக்கு தான் வெயிட்டிங்…” என்றவன் சோகத்துடன் கூற, “அதுக்கு எதுக்குடா மூஞ்ச இப்படி வச்சிருக்கே… விசா சீக்கிரமே வந்திரும்… கவலைப்படாத…” என்றான் நிதின்.
“ப்ச்… நான் போயிட்டா நீங்கல்லாம் என்ன மறந்திருவீங்களா மச்சி…” அவன் சோகமாய் கேட்க மற்றவர்களும் முகத்தை கவலையுடன் வைத்துக் கொண்டனர்.
“அடச்சீ… இப்ப எதுக்குடா இப்படி உக்கார்ந்திருக்கீங்க… அவன் வேலைக்கு வேண்டி தான போறான்… நம்ம நண்பன் ஒரு நல்ல வேலைல வெளிநாட்டுல இருக்குறதை நினைச்சுப் பெருமைப்படாம மூஞ்சைத் தூக்கி வச்சிட்டு…” நண்பர்களைத் திட்டியவன், “டேய்… நீ சிங்கப்பூர் போனா என்ன… அதுவும் இந்த உலகத்துல தான இருக்கு… நாம நேர்ல பார்க்கலைன்னாலும் வீடியோ கால் பார்க்க பேசன்னு எத்தனையோ வசதி இருக்கு… எல்லா வருஷமும் நாம எங்கே இருந்தாலும் இங்கே ஒருநாள் ஒண்ணாக் கூடி என்ஜாய் பண்ணலாம்… வருத்தப்படாம போயிட்டு வா…”
“ஆமாண்டா மச்சான்… இது நமக்கான பாதையை நாம தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம்… இதுல வருத்தம் எதுக்கு… எங்கே இருந்தாலும் நாம நினைச்சா தொடர்புல இருக்க முடியும்…” என்றான் மற்றொருவன்.
“டேய் மாப்ள… நீ அடுத்தது டிப்ளமோ கோர்ஸ் பண்ண முடிவு பண்ணிட்டியா…”
“ஆமாடா, எப்படி இருந்தாலும் எனக்கு அந்த பைனான்ஸ் கம்பெனில வேலைக்கு ஆர்டர் வர ஒரு வருஷத்துக்கு மேல ஆகுமாம்… அதுவரை ஏன் சும்மா இருக்கணும்… இங்க பாஷன் டிசைனிங் கோர்ஸ் டிப்ளோமா படிக்கலாம்னு இருக்கேன்…” அவன் சொல்லவும் சதீஷ் சிரித்தான்.
“டேய் மச்சி, பாருடா… மாப்பிள இங்க படிக்கறதுக்கு வேண்டி தான் டிப்ளமோல சேரப் போறானாம்…” என்று கூறவும் எல்லாரும் கிண்டலாய் சிரிக்க, “ஹஹா… ராஸ்கல்ஸ், தெரிஞ்சுகிட்டே வாயப் புடுங்க வேண்டியது…” என்று கூறி நிதினும் சிரித்துக் கொண்டான்.
அதைப் பார்த்துக் கொண்டே நிதாவும், கீதாவும் வந்தனர்.
“என்னடா பசங்களா, எல்லாரும் பிரியப் போற சோகத்துல மூக்கை சிந்திட்டு பீல் பண்ணிட்டு இருப்பீங்கன்னு நினைச்சா இங்கே ஒரே சிரிப்பா இருக்கு… என்ன விஷயம்னு சொன்னா நாங்களும் சிரிப்போம்ல…” கேட்டுக் கொண்டே அவர்கள் அருகில் வந்தனர். நிதின் டிப்ளமோ சேரப் போவதை சதீஷ் கூற அவர்களும் அதைக் கேட்டு சிரித்தனர்.
“ஹாஹா, சஹா இங்க இருக்குற வரை நிதின் டிப்ளமோ என்ன… Phd வேணும்னாலும் பண்ணுவான்…” என்று கூற அதைக் கேட்டு அனைவரும் சிரிக்க நிதின் வெட்கத்தை புன்னகைத்து மறைக்க முயன்றான்.
“பார்றா… நம்ம மாப்பிளைக்கு வெக்கமெல்லாம் வருது…”
“சரி, சரி… ரொம்ப தான் ஓட்டாதிங்க… நிதா, அடுத்து நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணப் போறீங்க…” என்றான் நிதின்.  
“பெருசா எதும் இல்ல, கீதா அவ அப்பா கம்பெனில பொறுப்பெடுத்துக்கப் போறா… நான் கல்யாணம் முடிச்சு வெளிநாடு பறக்கப் போறேன்…” சொன்னவளை திகைப்புடன் நோக்கினான் நிதின்.
“கல்யாணமா… நீ வேலைக்குப் போகப் போறதா சொன்னே…”
“ம்ம், சொன்னேன்… நாம நினைக்குற போல எங்க நடக்குது… எனக்குக் கல்யாணம் முடிச்சு வெளிநாட்டுக்கு துரத்தணும்னு வீட்ல முடிவு பண்ணிட்டாங்க… நீயும் என் லவ்வுக்கு நோ சொல்லிட்டயா… அப்புறம் எதுக்கு காத்திருக்கணும்னு வீட்ல ஓகே சொல்லிட்டேன்…” என்றவளின் குரலில் உதாசீனத்தின் வலி மெலிதாய் எட்டிப் பார்க்க அனைவரும் மௌனமாய் இருக்க நிதின் மனதில் லேசான குற்றவுணர்ச்சி தோன்றியது.
“ஹேய் நிதா, பீல் பண்ணறியா… ஐ ஆம் சாரி யா… நீ உன் லவ்வை சொன்னப்போ நான் ரொம்ப ஓவரா டயலாக் பேசியிருக்கேன்… அது தப்புன்னு இப்ப நான் ஒருத்திய லவ் பண்ணப்போ தான் புரியுது… எதையும் மனசுல வச்சுக்காத…”
நிதின் சொல்லவும் அவனை நோக்கிப் புன்னகைத்தவள், “காதல் ஒரு சுகமான வலி.. அதை அனுபவிக்கும் போது தான் உணர முடியும்… நீ என்னை வேண்டாம்னு ரிஜக்ட் பண்ணப்ப ரொம்ப வலிச்சது… அப்புறம் யோசிச்சேன்… எல்லாருக்கும் எல்லாரயும் பிடிக்கறதில்லையே… உனக்கு என் மேல காதல் தோணாம இருக்கலாம்… அதுக்காக காதலே இல்லைன்னு நீ சொன்ன டயலாகை என்னால மறக்க முடியல… அதுக்கு உன்னை பனிஷ் பண்ணறதா நினைச்சு கிப்ட் பண்ணிட்டேன்… சஹானாவை…” சிரிப்புடன் அவள் கூற நிதினும் புன்னகைத்தான்.
“ஹஹா, நான் சொன்ன எதையும் மனசுல வச்சுக்காம எனக்கும் லவ்னா என்னன்னு புரிய வச்சு என்னை இன்னொருத்தி பின்னாடி ஓட வச்சிட்டே… இது நீ எனக்குக் கொடுத்த இன்பமான தண்டனை… அதுக்கு உனக்கு தேங்க்ஸ் சொல்லிக்கறேன்…” என்றான் நெகிழ்ச்சியுடன்.
“ஹாஹா… என்ஜாய்…” என்றவளிடம், “மேரேஜ்க்கு எங்க எல்லாரையும் கூப்பிடுவ தான…” என்றான் சதீஷ்.
“நிச்சயமா… பிக்ஸ் பண்ணதும் இன்விடேஷன் கொண்டு வரேன்… டேய் பசங்களா… எல்லாரும் எங்க இருந்தாலும் தொடர்புலயே இருங்க… சரி, நாங்க கிளம்பறோம்… நீங்க கண்டின்யூ பண்ணுங்க…” என்றவள் தோழியுடன் நகர்ந்தாள்.
“ம்ம்… எங்கே நிதா உனக்கு வில்லியா வந்திருவாளோன்னு நினைச்சேன்… ஷீ இஸ் கிரேட்… இல்லயா…”
“ம்ம்… ஆமாடா மச்சி… நிதா எல்லாப் பொண்ணுங்களையும் போல இல்லாம வித்தியாசமா தான் இருக்கா… சரி, வாங்க கான்டீன் போகலாம்…” எனவும் அனைவரும் கிளம்பினர். நாட்கள் நகர நிதின் MBA முடிந்து சஹானா சொன்னது போல் ஒரு டிப்ளமோ கோர்ஸில் அங்கேயே படிப்பை நீட்டிக்க அவள் MCom இறுதி வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.
அவர்களின் காதல் சிணுங்கலும், சீண்டலும், ஊடலும், கூடலுமாய் வளர அந்த வருடத்தின் இறுதியில் நிதினுக்கு சென்னையில் உள்ள நிறுவனத்தில் வேலையில் சேரும்படி அழைப்பு வந்தது. கண்கள் கலங்கி உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த சஹானாவின் அருகில் அவள் கையைப் பிடித்து சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான் நிதின் ரூபன்.
“சஹிம்மா, எனக்கு மட்டும் சென்னைக்குப் போகணும்னு ஆசையா என்ன… முதன் முறையா கிடைச்ச வேலை… எப்படி வேண்டாம்னு சொல்லுறது… நான் போயி ஜாயின் பண்ணிட்டு இங்க உள்ள பிராஞ்சுக்கு மாற்றல் கிடைக்குமான்னு பார்க்கறேன்… கிடைக்கலேன்னா நீ அங்கே வந்திடு… உனக்கும் இந்த வருஷம் முடிஞ்சுதே… சிம்பிள்…” சொன்னவனை முறைத்தாள் சஹானா.
“எவ்வளவு ஈஸியா சொல்லறீங்க… நானே Mcom முடிஞ்சதும் ஊருக்குப் போகணுமேன்னு பீல் பண்ணிட்டு இருக்கேன்… இப்ப நீங்களும் சென்னை போயிட்டா நான் எப்படி… உங்களைப் பார்க்காம…” கேட்கும்போதே கண்ணீர் கன்னத்தில் வழிய தவிப்புடன் பார்த்தான் நிதின்.
“சஹி… சரி அழாதம்மா… நான் இங்க கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்கறேன்… முடியாதுன்னு சொன்னா வேற ஜாப் டிரை பண்ணிக்கலாம்… நான் சென்னை போகல… போதுமா…” அவன் சொல்லவும் சட்டென்று புன்னகைத்தவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
அவன் அமைதியாய் ஏதோ யோசித்துக் கொண்டிருக்க, “சாரி ரூபன்… என் மேல கோபமா… உங்களைப் பார்க்காம இருக்கணும்னு நினைச்சாலே என்னால முடியல… பேசாம வீட்ல சொல்லி என்னைக் கல்யாணம் பண்ணி நீங்க போற இடத்துக்கு என்னையும் கூடவே கூட்டிட்டுப் போயிடுங்க…” சொல்லும்போது மீண்டும் கண்கள் கலங்கத் தொடங்கியது.
“அட, என்ன சஹிம்மா இது… தொட்டதுக்கெல்லாம் இப்படி கண்ணீர் சிந்திட்டு… நானும் அதான் யோசிக்கறேன்… நம்ம கல்யாணம் பத்தி இப்ப வீட்ல பேச முடியாது… தங்கைக்கு முடிச்சதும் தான் சொல்லணும்… அப்பா என்னைக் கம்பெனிப் பொறுப்பை ஏத்துக்க சொல்லுறார்… நான் இந்த வேலை கிடைச்சதை வச்சு தான் டிப்ளமோ படிக்கறேன்னு இவ்ளோ நாள் ஓட்டிட்டு இருந்தேன்… இப்ப என்ன பண்ணறது…”
“நீங்க ஏன் இங்கயே ஒரு ஜாப் டிரை பண்ணக் கூடாது…”
“பண்ணலாம்… சரி, நீ அடுத்து என்ன பண்ணப் போற…”
“நான் படிப்பு முடிச்சு வீட்டுக்குப் போனா அம்மா உடனே என் கல்யாணப் பேச்சைத் தொடங்கிருவாங்க… அதனால ஒன் இயர் பைனான்ஸ் கோர்ஸ் ஒண்ணு பண்ணலாமான்னு யோசிக்கறேன்… பாங்க் அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்ட்க்கு எக்ஸாம் வருது… அதுக்கு இந்த கோர்ஸ் யூஸ்புலா இருக்கும்…” என்றாள் அவள்.
“அப்ப அப்படியே பண்ணிடேன்…” என்றவன், “சஹி… எப்ப என்னை உங்க அம்மா, தங்கைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப் போற… நம்ம லவ்வை சொல்லிட்டா அவங்க உனக்கு வெளியே மாப்பிள்ளை பார்க்காம இருப்பாங்கல்ல…” என்றான் நிதின்.
“ம்ம்… பைனான்ஸ் கோர்ஸ் முடிச்சிட்டு உங்களைக் கையோட அழைச்சிட்டுப் போயி நேர்லயே சொல்லறேன்…”
“ஒருவேளை அவங்க என்னை ரிஜக்ட் பண்ணிட்டா…”
“அதெல்லாம் பண்ண மாட்டாங்க… அம்மா, அப்பாவும் லவ் மேரேஜ் தான்… அவங்களுக்கு காதலோட அவஸ்தை நல்லாவே புரியும்… உங்க வீட்டுல எப்படி…” என்றதும்,
“ம்ம்… எங்க வீட்டுல அப்பா ஏதும் சொல்ல மாட்டார்… அம்மாவை தான் கொஞ்சம் தாஜா பண்ணனும்… அவங்களுக்கு இந்த லவ்வுல எல்லாம் நம்பிக்கை இல்லை…” என்றான் நிதின்.
“அப்படியா, அதெல்லாம் நான் சம்மதம் வாங்கிக்கறேன்… நீங்க கவலைப்படாதீங்க…” என்றாள் சிரிப்புடன்.
“ஓ… எப்படி சம்மதம் வாங்குவ…” என்றவனின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவள், “அவங்க வேண்டாம்னு சொன்னா, நான் அப்படியே போயிடுவேனா… உங்க வீட்டு முன்னாடி சாகும் வரை உண்ணாவிரதம்னு போர்டு போட்டு உட்கார்ந்திட மாட்டேன்… அப்ப, அவங்க நிச்சயம் சம்மதிச்சிடுவாங்க…” என்றாள் கண்ணை சிமிட்டி.
“அடிக்கள்ளி… நீ இப்படிலாம் யோசிச்சு வச்சிருக்கியா…” என்று சிரித்தவன், “சரி கிளம்புவோம்…” என்று கைநீட்ட அவன் கை பற்றி எழுந்தவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு கிளம்பினான்.
செமஸ்டரும் நல்லபடியாய் முடிய ஊருக்கு சென்று வந்தவள் சொன்னபடியே பைனான்ஸ் கோர்ஸில் சேர்ந்து விட்டாள். நிதினும் கோவையிலேயே ஒரு பிரைவேட் கம்பெனியில் அசிஸ்டன்ட் மேனேஜராய் வேலைக்கு சேர்ந்திருக்க எப்போதும் பார்த்துக் கொள்ள முடியாவிட்டாலும் அவ்வப்போது பார்த்துக் கொண்டு அலைபேசியில் காதலை வளர்த்துக் கொண்டனர். மூன்று வருடக் காதலில் எத்தனையோ வருடம் ஒன்றாய் வாழ்ந்த தம்பதிகளைப் போல அவர்களுக்குள் அன்னியோன்யம் வளர்ந்திருந்தது. அப்போது தான் அவள் பாங்கு மானேஜர் போஸ்ட்க்கு எக்ஸாம் எழுதுவதற்காய் ஊருக்குக் கிளம்பியவள் பிறகு திரும்ப வரவே இல்லை.
கண்களில் நீர் கோர்க்க பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தவனை வேதனையும் வியப்புமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் சாதனா. அவன் பேச்சில் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்த சரவணன் மனதில், “இவனுக்குள் இப்படி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கா…” என்று அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அங்கே மௌனம் நிறைந்திருக்க சாதனாவின் அலைபேசி சத்தமில்லாமல் வைப்ரேஷனில் அதிர்ந்தது. அன்னையின் அழைப்பைக் கண்டாலும் நிதின் மீண்டும் சொல்லத் தொடங்க எடுக்காமல் கவனிக்கத் தொடங்கினாள்.
“எக்ஸாம் முடிஞ்ச உடனே கிளம்பி வந்திடறேன்னு சொல்லிட்டுக் கிளம்பினவ எக்ஸாம் சூப்பரா எழுதி இருக்கேன்… நாளைக்கு வந்திருவேன்னு எனக்கு கால் பண்ணினா… அதுதான் கடைசியா அவ சொன்னது… அவ வருவான்னு காத்திருந்து காணாம தவிச்சுப் போயிட்டேன்… அவ மொபைல் நம்பரும் அதுக்குப் பிறகு எப்பவும் சுவிட்ச் ஆப்… சரி, அம்மாவுக்கு ஏதும் பிரச்சனையோ… அதான் போன் பண்ணல போலன்னு நானே ஏதேதோ யோசிச்சுகிட்டு கொஞ்ச நாள் காத்திருந்தேன்… அவகிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்ல… எப்படி கான்டாக்ட் பண்ணறதுன்னு புரியாம காலேஜ்ல உங்க வீட்டு அட்ரஸை வாங்கிட்டு பாலக்காடு கிளம்பி வந்தேன்… அங்கே உங்க வீடு பூட்டி இருந்துச்சு… பக்கத்துல விசாரிச்சா நீங்க எல்லாரும் ஊருக்குப் போயிருக்கீங்க, எங்கன்னு தெரியலன்னு சொன்னாங்க… பைத்தியக்காரன் மாதிரி எங்கேன்னு தெரியாம ஏதேதோ இடத்துல தேடி அலைஞ்சேன்… எங்கயும் பார்க்க முடியல… இப்ப இங்க வச்சுதான்…” என்றவனின் கண்கள் கலங்கியிருக்க மேலே பேச முடியாமல் தவித்தான்.
சாதனாவின் அலைபேசி மீண்டும் சிணுங்க, “ஒரு நிமிஷம்… அம்மா அழைச்சிட்டே இருக்காங்க…” என்றவள் அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.
“சொல்லுங்கம்மா, சஹா எழுந்துட்டாளா…” கேட்டவளுக்கு ஆக்ரோஷமாய் ஒலித்தது சஹானாவின் குரல்.
“சது, நீ உடனே கிளம்பு, ரூபன் கிட்ட எதையும் சொல்லாத… மீறி சொன்னா…” என்றவளின் வெறி மிகுந்த கோபத்தை அடக்கிய குரல் சாதனாவின் காதில் மின்னலாய் பாய்ந்தது. 
எண்ணிப் பார்க்க
ஏராளமான நினைவையும்
ஏங்கித் தவிக்க
தாராளமாகப் பிரிவையும்
சேர்த்தே தந்தாய்…
மறக்க மனம் கூடுதில்லையே…

Advertisement