Advertisement

அத்தியாயம் பதினான்கு :

ஜெயந்திக்கு திருமணமாகி மருதுவின் அறைக்கு முதல் முதல் செல்லும் போது கூட இவ்வளவு பதட்டமும் பயமும் இல்லை.. அவன் டிக்கெட் அனுப்பியும் வராதது தவறு தானே, அந்த குற்றவுணர்ச்சி இருக்க மெதுவாக அறைக்குள் சென்றாள்.

மருது படுத்திருந்தான், அவளுக்கு எதிர்புறம். அதனால் அவனின் முகம் தெரியவில்லை. நிச்சயம் உறங்கி இருக்க மாட்டான் என்று தெரிந்தது.

அவனின் அருகில் படுத்துக் கொண்டவள், அவனை நெருங்கி உடல் உரச, அவனின் உடல் இறுகியது.

அவன் திரும்புவதாக காணோம் என்றதும், அவன் புறம் திரும்பி படுத்து அவன் மேல் கை போட்டு அணைத்து கொள்ள, இறுகிய அவனின் உடலில் உடனே இளக்கம், ஆனால் திரும்பவில்லை எதுவும் பேசவில்லை..

அதற்கு மேல் எதுவும் எதிர்பார்க்கவில்லை ஜெயந்தி, சற்று கீழிறங்கி அவனின் முதுகில் முகம் பதித்து கண்மூடினாள், சில நிமிடங்களில் உறங்கியும் விட்டாள். அதனை மருது உணர்ந்தான்…

உறக்கமும் அவனுக்கு வரவில்லை.. இவ்வளவு கோபம் தனக்கு தேவையில்லை என்று அறிவு தெளிவாய் உரைத்த போதும் மனது முரண்டு பிடித்தது.. இன்னம் கூட அவள் டிக்கெட் அனுப்பியும் வரவில்லை தன்னையும் அங்கே அழைக்க வில்லை என்பது தாளவே முடியவில்லை.

ஜெயந்தியை பாராத போது கூட இவ்வளவு கோபம் இல்லை, பார்த்ததும் அப்படி ஒரு கோபம் வந்தது. எப்படி இவளால் முடிந்தது நான் இவளை தேடுவேன் என்று புரியாதா? தெரியாதா? ஒரு முறை வந்து பார்த்து விட்டு கூட செல்ல முடியாதா?   

அதுவும் தன்னை பார்த்து காலையில் “உங்களால வந்திருக்க முடியுமா?” என்று கேட்டது, இன்னும் இன்னும் கோபத்தை கிளறி இருந்தது. அப்போது என்னை பற்றி இவள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்ற ஆத்திரம் பெருகியது.

என்ன நினைத்து என்னை திருமணம் செய்தாள்? ஏன் இவளை எனக்கு பிடித்தது என்ற எண்ணம் போய், பிடித்திருந்தால் திருமணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் என்ன, தன் திருமணம் தவறோ என்று தோன்ற ஆரம்பிக்க..

அதன் கணம் தாங்க முடியவில்லை.. இதற்கு அவளின் அணைப்பில் இருந்தான்.. அந்த அணைப்பு கூட அவனை குளிர்விக்கவில்லை.. உடலும் தகிக்க… மனமும் தகிக்க..        

அவளை விட்டு நொடியில் விலகினான். 

மருது வேகமாய் அவளின் அணைப்பில் இருந்து விலகி அப்படி எழுந்தது, ஜெயந்தியின் உறக்கம் களைய அவளும் எழுந்தமர்ந்தாள்.

அவனின் கோபமான முகத்தை பார்த்து “என்ன?” என்று கலக்கமாய் கேட்க,

அத்துணை கோபம் இருந்த போதும் அந்த கலக்கமான முகத்தை வருத்தப்படுத்த பிடிக்காமல் “ஒன்னுமில்லை தூங்கு” என்று அவன் எழுந்து வெளியே சென்று ஹாலில் அமர்ந்து கொண்டான்.

அவளும் பின்னேயே எழுந்து செல்ல.. கண்டிப்பாக இருவரும் சேர்ந்து இருந்தால் கோபத்தில் அவளை நிச்சயம் காயப்படுத்தி விடுவோம் என்று புரிந்தவனாக..

“நான் உன்னை தூங்க தான் சொன்னேன், போ ஜெயந்தி” என்றான் சற்று கடினமான குரலில். அமைதியாக பேச முயன்றும் அந்த குரல் தான் வந்தது..

கலங்கிய விழிகளோடு மருதுவையே பார்த்தபடி ஜெயந்தி நிற்க.. அதற்கு மேல் தாள முடியாதவனாக.. வேஷ்டி பனியனில் இருந்தவன் எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு கதவை திறந்து வெளியில் வந்தவன், அவனின் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

ஜெயந்தி அப்படியே கலங்கி நின்று விட்டாள். என்ன செய்வது? என்ன அவனிடம் பேசுவது? எப்படி அவனை சமாளிப்பது என்று ஒன்றும் புரியவில்லை. என்னவோ ஒரு பயப்பந்து நெஞ்சை அடைத்தது.

அவன் டிக்கெட் அனுப்பியும் வராத தவறு பூதாகரமாய் தெரிய அமர்ந்து விட்டாள். இன்னம் அவனின் தனிமையின் அளவு புரியவில்லை. அதற்கான பிரதிபலிப்புகள் இவை என்றும் தெரியவில்லை. இங்கே வந்தால் அவளால் திரும்பி போக முடியாது என்று வரவில்லை என்பது தான் நிஜம்.

அவனின் கோபத்தை யோசித்து அமர்ந்திருந்தாள்.. முதல் முறை பிணக்கு வந்த போது கிட்ட தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் பேசவில்லை.. அதன் பின் கிட்ட தட்ட ஒரு வருடம்..

படிப்பை புரிந்த அளவிற்கு வாழ்க்கையை புரியவில்லையோ .. சிக்கலாக்கி கொண்டேனோ என்று ஜெயந்திக்கு தோன்றியது..

எப்படியாவது அவனை சமாதானப் படுத்தி விடவேண்டும் என்று உறங்கமால் அமர்ந்திருந்தாள்.. ஆனால் மருது காலை வரையுமே வரவில்லை.. அவனின் கைபேசியும் அங்கே தான் இருந்தது..

இலக்கில்லாமல் ஈசீஆர் ரோட்டில் பயணப்பட்டான்… அவன் கழட்டி போட்ட சட்டை என்பதால் அதில் ஒரு இரண்டாயிரம் பணம் இருக்க.. நடுவில் பெட்ரோல் மட்டும் போட்டுக் கொண்டவன்.. சென்று கொண்டே இருந்தான்.

இருட்டு முடிந்து விடியல் ஆரம்பித்து சூரிய உதயமும் நன்கு வந்து விட அவன் நிறுத்திய இடம்.. நாகப்பட்டினம் கடற்கரை சாலை.. கிட்ட தட்ட முன்னூற்றி இருபது கிலோமீட்டர்.. ஆறு மணி நேரத்தில் கடந்திருந்தான்..

அப்போது தான் சுற்றம் பார்த்தான். எந்த ஊர் என்று பார்க்க அது நாகப் பட்டினம் என்று இருக்க.. அவன் எங்கே அங்கே வந்திருக்கிறான்.. ஆனால் சென்னையில் இருந்து மிகவும் தூரம் என்று மட்டும் தெரிய.. பேக்கட்டில் பணம் இருக்கிறதா என்று பார்த்தான் திரும்ப போவதற்கு.. ம்கூம்! இருக்கும் பணம் திரும்ப போக பத்தாது என்று புரிய..

அமைதியாய் அந்த கடற் கரையில் அமர்ந்து விட்டான்… மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தனர்..

அதனை பார்த்து அமர்ந்திருந்தவனுக்கு ஜெயந்தி தன்னை தேடுவாள் என்று புரிய தேடட்டும், நன்றாய் தேடட்டும் நான் எங்கே இருக்கிறேன் என்று சொல்லப் போவதில்லை என்ன்று அமர்ந்து கொண்டான்.

எதிரில் இருந்த கடலை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.. இந்த கடலைன்னையோடு அவனின் தொடர்ப்பு அதிகம் தானே.. அதனை பார்க்க பார்க்க மனம் சற்று அமைதியாகியது..

வாழ்க்கையை பற்றிய தன்னுடைய எதிர்பார்ப்புகள் அதிகம் இன்னும் ஜெயந்தி அதற்கு ஈடு செய்யவில்லை என்று புரிந்தது .. விருப்புக்கும் வெறுப்புக்கும் ஒரு நூழிலை தானே வித்தியாசம்.. பயமாய் கூட இருந்தது எங்கே ஜெயந்தியை தனக்கு பிடிக்காமல் போய் விடுமோ என்று?

பேசி விடு, எதுவானாலும் பேசி தீர்த்துக் கொள்.. மணவாழ்க்கையில், தோற்றுவிட்டால் பின்னே இவ்வளவு நீ உயர்த்தி என்ன பிரயஜோனம்?

சொல்லிவிடு, இந்த கடலன்னையின் மடியில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய் என்றும் சொல்லிவிடு.. ஜெயந்தி எதுவும் கேட்க போவதில்லை, ஆனால் நீ சொல்லிவிடு என்று மனது சொல்ல..

அப்படியே அமர்ந்திருந்தான்..

மனிதர்களை படிப்பதில் வல்லவன் மருதாச்சலமூர்த்தி!  

அவனின் அனுமானம் ஜெயந்தி தன்னுடைய கடந்த காலத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை.. எங்கே தெரிந்தால் மருதவை தனக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்று கேட்காமல் இருக்கிறாள் என்ற அனுமானம்!

இதெல்லாம் யோசிக்க யோசிக்க அவனின் தன்மானம் பெரிதாய் அடிவாங்கியது.. கோபம், கோபம், கோபம் மட்டுமே!

பைக்கை எடுத்தவன் மீண்டும் பயணம் ஆரம்பிக்க கண்ணில் பட்டது வேளாங்கண்ணி வழி.. 

வேம்புலியம்மன் அங்கு இல்லாததால் வேளாங்கண்ணி மாதாவை தஞ்சம் புகுந்தான், வேஷ்டி சட்டை என்பதால் ஒன்றும் தெரிவிக்கவில்லை.. முகம் கழுவி உள்ளே சென்றவன் அங்கிருந்த உட்காரும் இடத்தினில் அமர்ந்து மாதாவை பார்த்தது பார்த்தபடி இருந்தான்..

மனது சற்று சமன்பட ஆரோக்ய மாதாவை விழிஎடுக்காமல் பார்த்திருந்தான்.. எதாவது வேண்டியிருந்தால் அன்னை கொடுத்திருப்பாரோ என்னவோ? அவன் தான் வேண்டவேயில்லையே.. மனது சமன்பட்டதும் எதுவும் வேண்டாமல் அன்னையை வணங்கி வெளியே வந்தான்.

எதுவும் வேண்டாமல் வணங்குவது என்பது வெகு சிலரால் மட்டுமே முடியும்.. அப்படிப்பட்ட ஒருவன் மருதாச்சலமூர்த்தி.. அனுதினமும் கடவுளை வணங்கும் மனிதன் அவன், ஆனாலும் வெகு அபூர்வமாய் தான் கடவுளிடம் வேண்டுவான். அப்படி வேண்டிக் கேட்டவள் தான் ஜெயந்தி..

இந்த க்ஷணம் அவனிடம் எந்த வேண்டுதலும் இல்லை..    

வேண்டியிருந்தால் ஜெயந்தியோடான அவனின் மன பிணக்குகள் முடிவுக்கு வந்திருக்குமோ என்னவோ? அவன் வேண்டவில்லை.

வெளியே வந்தவன் புத்துணர்வாய் உணர்ந்தான்.. மருது ஸ்டோர்ஸ் அழைத்து விஷாலிடம் பேசியவன்.. “டேய், நான் வெளியூர் வந்திருக்கேன்.. அண்ணி கிட்ட சொல்லிடு.. ஸ்டோர்ஸ் பார்த்துக்கோ!” என்று கட்டளைகள் பிறப்பிக்க..  

“எப்போ வருவீங்க?”

“நைட் வந்துடுவேன்!” என்றவன்.. பைக்கை சென்று பைக் ஸ்டேண்டில் போட்டவன்.. அங்கிருந்த பணியாளனிடம் “நாளைக்கு வந்து எடுத்துக்குவாங்க, நான் வரமாட்டேன் ஆள் வருவாங்க” என்று சொல்லி, “பைக் பத்திரம்” என்று அவன் வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு பேசிய விதத்தில் “அண்ணா அதெல்லாம் பத்திரமா இருக்கும்” என அவன் சொல்ல..

“பைக் பத்திரமா இருந்தா தான் தம்பி நீ பத்திரமா இருப்ப” என்று சொல்ல,  

அந்த பையன் சிரித்து “அண்ணா, செம டைலாக்”  

“சரி, இந்த டைலாக் வேண்டாம். வேற டைலாக் பேசுவோம்.. நான் சென்னை போகணும், எனக்கு போட் அர்ரேஞ் பண்ண முடியுமா?” என்றான் மருது அதற்கு சினேகமாய் புன்னகைத்து..  

“என்னது போட்லயா?” என்றான் அவன் ஆச்சர்யமாக,

“ம்ம் போட்ல தான்”

“எனக்கு எவ்வளவு கமிஷன் தருவீங்க ஆள் பிடிச்சு குடுத்தா?”  

“நீ எவ்வளவு எதிர் பார்க்கற?”

“ஐநூறு” என்றவனிடம்,

“நான் பத்தாயிரம் தர்றேன்” என்று சொல்லி நிறுத்த,

அந்த பையனின் கண்கள் சாசர் போல விரிந்தது..

“ஆனா இப்போ முடியாது…. சென்னை போய் தான் தர முடியும்.. கூட வந்து வாங்கிக்கோ.. போட் ரெடி பண்றியா.. நான் சாப்பிட்டுட்டு வர்றேன்” என்று யோசிக்க நேரம் கொடுத்து சென்றான்..

கையில் இருந்த பணத்திற்கு எல்லாம் உணவை ஒரு கட்டு கட்டியவன்.. பின்பு அந்த பையனை காண வர,

அவன் விசைப் படகிற்கு பேசிய ஆள் தயங்கிய போதும்… அந்த பையன் “அவரோட பைக் நம்ம கிட்ட இருக்கு அண்ணா, ஏமாத்த முடியாது. அதுவுமில்லாம பெரிய மனுஷன் கணக்கா இருக்கார்ண்ணா, நம்பலாம்!” என்று ஸ்திரமாய் பேசினான்.

அதனால் அவனும் கிளம்ப, இதோ கடலன்னையின் மடியில் ஒரு பயணம்,

“பெர்மிட் இருக்கா” என்று கேட்டு அவன் விசைப் படகில் ஏறும் விதத்திலேயே, இவன் இந்த பயணத்திற்கு மிகவும் பழக்கமானவன் என்று புரிந்தது.

பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்த பயணம்..

“வழி மாறினா சொல்லுங்க” என்றவன் விசை படகை அவன் இயக்க ஆரம்பிக்க, அது சீறிப் பாய்ந்தது.. உப்புக் காற்றை ஆழமாக சுவாசித்தான்.. எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றங்களும் காயங்களும் கொடுக்கும் என்று புரிந்தவன், எதிர்பார்க்காதே “உன்னுடைய விதி, நீ எப்போதும் தனியன் தான் என்றால், அதன் போக்கில் போ!” என்று சொல்லிக் கொண்டான்.

“எதிலிருந்து தப்பிக்க இப்படி கண்மண் தெரியாமல் ஓடி வந்தாய், யாரும் உன்னை கொண்டு போகக் கூடாது. அது உன் எதிரியாய் இருந்தாலும் சரி, துரோகியாய் இருந்தாலும் சரி, மனைவியாய் இருந்தாலும் சரி என்று சொல்லிக் கொண்டான்.

உண்மையில் அவனுக்கு எதிரியும் கிடையாது, துரோகியும் கிடையாது, மனைவி மட்டுமே! அவர்களிடம் பாய்வது எல்லாம் இவளிடம் பாயுமோ?        

நூற்றி நாற்பது கிலோமீட்டர் சென்னை துறை முகத்தை, இருட்ட ஆரம்பித்த சற்று நேரத்தில் அடைந்தார்கள்.. துறை முகம் உள்ளே போகமால் எங்கோ தள்ளி சென்று படகை நிறுத்தியவன்.. அங்கிருந்த கடற்கரை மணலில் அமர்ந்து அந்த பையனின் ஃபோன் வாங்கி விஷாலுக்கு அழைத்தவன்.. “பணம் எடுத்துட்டு வா” என்று சொல்லி அமர்ந்து கொண்டான்.

அவன் வர ஒரு மணிநேரம் ஆன போதும், அவர்களிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். அவனின் பார்வைகளும் தோரணையும் அவர்களை தள்ளியே நிறுத்தின..

விஷால் வந்த பிறகு அவர்களுக்கு கொடுக்க, அவர்கள் எதிர்பார்த்தைவிட பல மடங்கு அதிகம்.

“தேங்க்ஸ் ண்ணா” என்று அவர்கள் சொல்ல,

“இருந்துட்டு விடியக் காலையில கிளம்புங்க, இப்போ வேண்டாம்” என்றவன்.. விஷாலின் கைபேசியில் ஆட்களை அழைத்து “இவங்களை தங்க வைங்கடா” என்று சொல்லி, “பைக் நாளனைக்கு ஆள் அனுப்பி எடுத்துக்கறேன்” என்றும் சொல்லி,

வீட்டிற்கு விஷாலுடன் கிளம்பிய போது, அவனின் கோபம் முழுவதும் கட்டுக்குள் வந்திருந்தது..

ஆம்! களையவில்லை, கட்டுக்குள் வந்திருந்தது..

விஷால் காலையில் வந்து ஜெயந்தியிடம் சொல்ல.. அதுவரை உறங்காமல் என்னவோ ஏதோவென்று பதறி அமர்ந்திருந்தாள். அதுவும் அவளின் கைகளில் இருந்து விலகி சென்றது மனதை வெகுவாக காயப்படுத்தி இருந்தது..

“தெரிந்து தானே திருமணம் செய்தான், இப்போது என்ன?” என்று ஆத்திரம் கோபம் இயலாமை எல்லாம் பெருக இருந்தவளுக்கு, நேரம் ஆக ஆக என்னவானது, டென்ஷனாக போனானே, ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டதா? ஏதேனும் விபத்தா இல்லையென்றால் இவ்வளவு நேரம் வராமல் என்ன செய்கிறான்” என்ற பதட்டம் இருக்க..

அப்போது தான் விமலனுக்கு அழைத்து சொல்லலாமா என்று யோசிக்க விஷாலின் வரவு…

“ஊருக்கு போயிருக்காங்கலாம், போன்ல சொன்னாங்க” என்று சொல்ல அப்படியே பொங்கியது ஒரு ஆத்திரம், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன் என்பது போல.

“ம்ம் சரி” என்று விட்டவள்.. “எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வேணும் விஷால்.. நம்ம கடைல என்ன என்ன இருக்குன்னு எனக்கு தெரியலை.. லிஸ்ட் தர்றேன் கொண்டு வாங்க.. பில்லிங் எப்படின்னு இவர் கிட்ட பேசிக்கங்க”  

“நம்ம கடையில இல்லாதது கிடையாது, க்ரோசரில இருந்து, அப்லயன்செஸ்ல இருந்து டிரஸ், எலெக்ட்ரிகல் கூட்ஸ் வரை, எல்லாம் எல்லாம் இருக்கும். யு கேன் மேக் எ கம்ப்ளீட் ஹோம்” என்று விஷால் பெருமையாய் சொல்ல,

வாய் மொழியாய் மருது சொன்னது தான்.. ஆனால் இன்னும் கண்ணில் காணவில்லையே!     

“நான் ஃபோன் பண்றேன் வந்து லிஸ்ட் வாங்கிக்கங்க” என்றவள், அவன் சென்றதும் செக்யுரிட்டி விட்டு டிஃபன் வாங்கி வர செய்து, உண்டு உறங்கி விட்டாள்.. இரவு முழுவதும் விழித்தது என்னவோ ஏதோ வென்ற பதட்டம், தலை பாரமாய் கனத்தது..

மாலை எழுந்தவள் லிஸ்ட் எடுத்து விட்டு விஷாலை அழைத்தாள், விமலனோ கமலனோ அழைத்தால் உடனே வருவர். ஆனால் அவளுக்கு தங்கள் பிரச்சனைகள் யாருக்கும் தெரிவதில் விருப்பமில்லை, விமலன் அவளின் முகம் பார்த்தே அவளின் மனநிலையை கணித்து விடுவான்.

விஷால் வந்தவன் லிஸ்ட் வாங்கி சென்று விட்டவன் வரவேயில்லை..

காலை சாப்பிட்டது பசித்தது.. எரிச்சல் ஆனது, “என்னடா இது?’ என்பது போல, சாப்பிட ஒன்றுமில்லாமல்.

விஷாலுக்கு அழைக்க அவன் எடுக்கவில்லை.. ஊரிலிருந்து வந்தது அவளிடமும் பணமும் இல்லை.. காலையில் அவளிடம் சேஞ் இல்லை என்று சொல்லி விஷாலிடம் தான் நூறு ரூபாய் வாங்கியிருந்தாள்..

இதற்கு மருதுவின் பர்ஸ் ஒரு மேஜை டிராயரின் உள் தான் இருந்தது. ஆனால் அதனை அவள் கவனிக்கவில்லை. 

வீட்டையே பிரட்டி போட்டாலும் சாப்பிட ஒன்றுமில்லை.. என்ன சாப்பிடுவானா மாட்டானா இவன் என்று தான் தோன்றியது.. உணவு, டீ இதை தவிர அவளின் கணவன் ஒன்றும் உண்ண மாட்டான்.. அதனால் வீட்டில் தீனி என்பது போல ஒன்றுமில்லை, சமைக்கவும் ஒன்றுமில்லை, அம்மா வீட்டிற்கு செல்ல வீட்டை பூட்ட வேண்டும், அதுவும் எப்படி என்று தெரியாது.

அம்மாவை அல்லது வீட்டினரை அழைக்கலாம் என்றால், அந்த நேரம் இவன் வந்து விட்டால், சண்டை போட்டால், இப்படியாக எண்ணம் ஓட,

கோபம் அதிகமானது!

“டிக்கெட் அனுப்பி வரவில்லை, தப்பு தான்! என்ன செய்ய அதற்கு? நான் அப்படி தான்! திருமணம் இரண்டு வருடம் கழித்து நடந்தால் என்ன செய்திருப்பான். வேறு யாரையாவது திருமணம் செய்திருப்பானா? செய்திருக்கட்டுமே.. இவனுக்கு தானே என்னை பிடித்திருந்தது, அப்போது இது கூட பொறுத்து கொள்ள மாட்டனா? பசி கோபத்தில் எதை எதையோ நினைக்க வைத்தான்.    

கலைசெல்வியே அவளை பார்க்க மாலை வந்தார் கையில் கேசரியும் முறுக்கோடும்.. வந்தவரை “வா” என்று சொன்னவள் எடுத்து சாப்பிட ஆரம்பிக்க

என்னவோ மகளிடம் வித்தியாசம் உணர்ந்தவர், “என்ன?” என,

“பசிக்குதும்மா, இந்த விஷால் கிட்ட லிஸ்ட் குடுத்தேன். இன்னும் வரலை” என்று சொல்லும் போது ஸ்டோர்சில் பணி புரிபவன் பொருட்களோடு வர.. அம்மாவும் பெண்ணுமாய் எல்லாம் சரி செய்தனர்..

ஆனால் அவள் மனம் மட்டும் கனன்று கொண்டிருந்தது.. ஏற்கனவே தப்பு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி, கூட மருதுவின் இந்த செய்கைகள் எல்லாம் சேர்த்து அவளை எகிற வைத்தது.. அதுவும் அவளின் அணைப்பில் இருந்து அவன் விலகி எழுந்து சென்றது தாளவே முடியவில்லை..

“முழுசா சந்திரமுகியா மாறிட்டா” என்பது போல அந்த நிமிடம் முழுதாய் அவன் மனைவியாய் மாறிவிட்டாள், நன்றி எல்லாம் எங்கோ ஓடிவிட்டது.

“எதுக்காகவோ கல்யாணம் நடந்திடிச்சு, அதுக்காக இவன் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? முடியாது!” என்ற இறுமாப்பு எழுந்தது..

எதுவாகினும் பொறுத்து கொண்டிருப்பாள், அணைப்பில் இருந்து விலகியது…. நான் என்ன இவனுக்கு அவ்வளவு இளக்காரமா?..   

எல்லாம் ஒழுங்கு படுத்தி.. அவசரத்திற்கு கிச்சிடி செய்து அவளின் அம்மா சென்று விட..

மருது வீடு வந்த போது இருவரிடமும் ஒரு பேச்சுமில்லை..

எப்போதும் முட்டிக் கொள்பவர்கள், முட்டி கொள்ளக் கூட பேசவில்லை.. 

புரிதல்! அது அறிவிற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது, பல சமயங்களில்.. மனமே அங்கே முதன்மை பெறுகிறது..

புரிதல்! அது எல்லா நேரமும் எல்லா விஷயத்திலும் சாத்தியமல்ல!

நாம் கோப தாபங்களுக்கு உட்பட்ட சாமான்ய மனிதர்கள்.. இதில் காதல் என்ற ஒன்று எங்கேயும் வராது..

கடவுளின் பிணைப்பில் என்ன பிணக்கிருந்தாலும் வாழ்க்கை பிணங்கி விடாது! 

இங்கே மருதுவும் ஜெயந்தியும் அப்படி பிணைக்கப் பட்டவர்கள்!

   

    

              

         

                        

      

        

   

  

  

       

                 

    

          

               

Advertisement