தூறல் 22:
அவள் வாழ்வே ஸ்தம்பித்து போன நிலை. விட்டத்தை வெறித்தபடியே தந்தை கடைசி நாட்களில் இருந்த அறையிலேயே சுருண்டு கிடந்தாள். மருத்துவ உபகரணங்களை தவிர்த்து வேறு எதையும் சுத்தம் செய்ய விட வில்லை. அதற்கே பெரும்பாடு படவேண்டியாதாய் இருந்தது. 
‘நேரம்’ அது யாருக்கும் காத்திருக்காது. ஜனனம், மரணம், தோன்றுதல், அழிவு, இப்படி எதற்கும் கட்டுபடாது. வலியை கொடுக்கும் நேரமே அதை போக்கும் மருந்துமாய் ஆகிறது. நேரத்தை வெல்ல தெரிந்தவன் வெற்றியை சுலபத்தில் ஈட்டிவிடுகிறான். கையாள தெரியாதவன், கால சுழலுக்குள் சிக்கி, கட்டுப்பாடில்லாமல் மாட்டி, அடுத்த கட்டத்திற்கு நகர மறந்துபோகிறான். கடந்த காலத்தில் உழலுபவன் எதிர்காலத்தை மறக்கிறான், எதிர்கால சிந்தனையில் துடிப்பவன் நிகழ்காலத்தை வாழ மறுக்கிறான். 
மாயாவின் நிகழ்காலம் கடந்தால் அவள் துயரமும் குணமாகும் தான், எதிர்காலத்தில். ஆனால் அதை சரியான வகையில் கையால்வாளா என்பது கேள்வி குறியாய்.  ஆயிற்று, ஜெயதேவின் இறுதி சடங்குகள் முடிந்து மூன்று நாட்கள் கடந்துவிட்டிருந்தது.
அன்று மூச்சுக்கு திணறும் தந்தையை கண்டு சிலையென நின்றவளுக்கு உயிர் வந்து அவரை நெருங்கிய நொடி, அவளை காணவே தவம் இருந்தவர்போல் அதுவரை தவித்துக்கொண்டு இருந்தவர் சுவாசம் மெல்ல சீர் நிலைப்பட, மெதுவாக தன்னை நிலைபடுத்தியபடி அவளை பார்த்தவர் ஸ்ரமபட்டு ஒரு கையை தூக்கி அவள் முகம் முழுமையும் தடவி உணர்ந்தவர் இதயம் மெல்ல தோய்ந்து நின்றும் போயிற்று.
சிறு பெண் அல்லவோ? துயரத்தை ஏற்க முடியாமல் துவண்டு போனாள். யாரையும் கிட்டே சேர்க்காது அமிழ்ந்து போனாள், தனியே. கத்தி கதறவில்லை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அவளின் அந்த அழுத்தம் கண்டு அனைவரும் திகைத்தனர். கண்களில் நிற்காமல் வடிந்துக்கொண்டு இருந்த கண்ணீர் மட்டுமே அவளின் துயரின் அளவை பறைசாற்றிக்கொண்டு இருந்தது. 
விஷயம் அறிந்து சுற்றி இருந்த சிற்றூர்களின் ஆட்கள் அனைவரும்  திறண்டு வந்தனர். ராஜவம்சத்தில் மீண்டும் ஒரு இழப்பு அல்லவா? இத்தனை இத்தனை ஆண்டுகள் கழித்தும் சாபம் கழியா நிலையா என்று எண்ணி வருத்தம் கொண்டவர்களே அதிகம். ஒரு பக்கம் ஜெயதேவின் இறப்பில் வருத்ததுடன் இருந்தாலும் மறுபக்கம், மாயாவின் அழுத்தமும், தோரணையும், செயல்பாடுகளும் ஆச்சர்யத்தை கொடுத்தது. விஷயம் செவி வழியாய் மட்டுமே அறிந்த பலரும், நேரடியாய் இருவரையும் சந்திக்கும் ஒரு சில மூதாட்டிகளையும், விழி விரிக்க வைத்தது அவளின் அழுத்தம். அது அஹிலாவதி அம்மாவின் அழுத்தம். இழப்பிலும், இரும்பாய் நிற்கும் அழுத்தம். அவளுக்கு அது இயல்பாய் வந்திருக்கலாம், அவள் தந்தையின் வளர்ப்பாய் இருந்திருக்கலாம், இதுவரை அவள் வாழ்ந்த சமூகத்தின் தாக்கமாய் கூட இருக்கலாம். ஆனால், அங்கு இருந்தவர்களுக்கு அது அஹிலாவதி அம்மாவையே நினைவூட்டியது.
சேனாம்மா கூட இடிந்து போய் அமர்ந்துவிட்டார். ஆனால் ஒரு ராஜ்யத்தின் தலைமையை இருக்கும் அனுபவம் அவருக்கு கைக்கொடுத்தது. பாதி உயிர் பிரிந்த நிலையில் சம்யுக்த்தா ராணி ஜெயதேவின் சிரசின் பக்கத்தில் அமர்ந்தவர் தான். அங்குமிங்கும் பார்வையை சற்றும் திருப்பாமல் சலமே இல்லாது போன அவர் முகத்தையே வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
வாழ்க்கை அவருக்கு என்ன தந்தது? நிகழ்ந்த அனைத்திற்கும் யார் காரணம்? விதி தனக்காக என்ன தான் செய்தது? எதுவும் புரியாத முற்றும் துறந்த நிலைக்கு செல்லாமல் இருக்க பற்றுக்கோளாய் பிடித்துக்கொண்டார் மாதவனின் நிஜத்தையும், மாயாவின் நிழலையும். ஆம், இந்த வாழ்க்கை அவருக்கென்று தான் ஒன்றுமே தரவில்லையே?
அவரை முழுதாக தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார் சௌந்தர்யா, தமயனின் இறப்பு அவருக்கும் பெரும் துக்கமாய் இருந்தாலும், இப்போது துணைகோளாய் இருப்பதின் அவசியத்தை உணர்ந்தார். அதேபோல் தன் மக்களையும் மாயா கூடவே இருக்க செய்தார்.
அதித்யா மற்றும் மாதவன் மற்ற அனைத்து பொறுப்புகளையும் தங்கள் மேல் ஏற்றிக்கொண்டனர். என்னதான் ஜெயதேவ் மேல் தீராத வெறுப்பை சுமந்திருந்தாலும், மாதவனுக்கும் இது பெரும் அதிர்ச்சியே. போஸ்ட் மார்டம் ரிபோர்டை மாயாவிடம் இருந்து மறைந்துவிட்டிருந்தான். ஏனினும், அதுவும் அவள் மனதை வேறு விதமாய் உறுத்த போகிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
ஒரு வாரம் கடந்துவிட்டிருக்க, தந்தையின் அறையை விட்டு விலக மறுத்தவளை ஒருவாறாக சிறியவர்களை கூடவே வைத்திருந்து வெளிக்கொண்டு வர முயற்ச்சித்தார்கள். சயுக்த்தாவும் ஒரு அளவிற்கு தேறியிருக்க, மகளின் நிலை குறித்து பயம்க்கொண்டார் அவர்.  
இப்பொழுதெல்லாம் அவள் அறையில் மீண்டும் வந்துவிட்டிருந்தாலும், அப்பாவின் அறைக்கு அடிகடி சென்று சிறிது நேரம் இருந்துவிட்டுவர ஆரமித்திருந்தாள். தன் அறையில் இருக்கும்போது கூட யாரவது இருக்க அனுமதிக்கும் அவள், தந்தை அறையில் தஞ்சம் புகும்போது மட்டும் அனைவரையும் தவிர்த்துவிடுவாள். மாதவனை காண்பதையோ அவன் அறை செல்வதையோ சற்றும் விருப்பமில்லாமல் இருந்தாள்.
இன்றைய நிலைமையில் இறப்பை ஒருவாறாக ஏற்றுக்கொண்டாலும், சம்யுக்த்தா, சௌந்தர்யா, கிருஷ்ணா, மயூரிக்கா, பிருந்தனை தவிர யாரிடமும் பேசுவதில்லை. அவர்களிடமும் ஓரிரு சொற்களே என்றாலும் அதைகூட மற்றவரிடம் பேசவில்லை. சாதாரணமாக அவளை சந்தித்து பார்த்துவிட்டு செல்ல அவள் அறை வந்த ஆதித்யனை கூட பதில் சொல்லாமல் அலட்சியபடுத்த அவர் முகம் இறுக அமைதியாய் வெளியேறிவிட்டார்.
கண்டிக்க வாய் எடுத்த சம்யுக்த்தாவையும் கூட வேண்டாம் என தலையசைத்து மறுப்பு தெரிவித்துவிட்டார் சேனாம்மா. அவள் விலகி விலகி சென்றாலும், அவள்மேல் ஒரு கண் வைத்தபடியே தான் இருந்தனர் அனைவரும், முயன்ற அளவு அவளுடன் பேசவும் முயற்சித்தனர். பலன் என்னவோ மைனசில் போகாத குறை தான். அதுவும் மாதவன் வந்துவிட்டாள் சிலைபோல் ஆனாள். ஏனோ அவனை சந்திக்கவே ஒவ்வாமல் இருந்தது அவளுக்கு.
தந்தையின் இறப்பிற்கு பிறகு அறைக்கே உணவை வர செய்து உட்க்கொள்ள ஆரமித்தாள் மாயா. முதலில் அவளின் சோகதிற்க்காய் சாப்பிட்டால் போதும் என்று விட்டவர்கள், அதையே அவள் பழக்கம் ஆக்கிக்கொள்வாள் என எண்ணவில்லை. எனினும் அவளின் போக்கை கண்டு அமைதி காத்தனர். இதை பொறுமையாக தான் கையாள வேண்டும் என்று அனைவருக்கும் புரிந்தது. 
அது போல் அன்றும் தன் அறையிலேயே இரவுணவை முடித்துக்கொண்டவள் தந்தையின் அறைக்கு சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு வரலாம் என்று எண்ணி வெளியே வந்து வராந்தாவின் இந்த கோடியில் இருந்து அந்த கோடிக்கு நடக்க, நடுவில் கேட்ட பேச்சு குரலில் அவள் அங்கேயே ப்ரேக் போட்டது போல் நின்றாள்.
அவர்கள் அரண்மனையில்  சுற்றுவட்டார மக்கள் அல்லாது அவர்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் கூட மக்கள் மூலமாகவே இவர்களிடம் வேலையில் இருந்தனர். அவர்கள் என்றால், அரண்மனை மட்டுமல்லவே? இருக்கும் தொழில் சாம்ராஜ்யத்தை வைத்து நாட்டின் மபொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆயிற்றே? அதனால் அவர்கள் மக்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு தெரிந்த திறமைசாலிகள் என்றே அந்த சாம்ராஜ்யம் நிலைக்கொண்டு இருந்தது. அது ஒருவகையில் அவர்கள் வெற்றியும் கூட.
அப்படியான அரண்மனை நடுநிலை நிர்வாகிகள் இருவரே மின்தூக்கி அருகே இருந்த தூணின் மறைவில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். ஒரு ஆண் மற்றும் பெண்ணின் குரல் தெளிவாக கேட்டது.
“எல்லாம் இந்த வம்சத்தின் விதி. இப்படி ஒரு சாப குடும்பமா? இவ்வளவு பணம், செல்வாக்கு, சாம்ராஜ்யம் இருந்து என்ன பிரியோஜனம் சொல்லு”
“அப்படி சொல்லு…எல்லாம் நானும் கேள்வி பட்டேன். இந்த ஊருக்கே சாபம் தானாம். எந்தவொரு சுப காரியம் நடக்கணும் என்றாலும் ஒரு உயிரை பலியா எடுத்துட்டு தான் நடக்க விடுமாமே”
“இவங்க ரெண்டு பேருக்கும் திருமண பேச்சு எடுக்கும்போதே இதை எதிர்பார்த்தாங்களாம், ஆனா திருமணம் முடிந்த பின்னே அந்த அட்டேன்டேன்ட் இறந்தப்போ அது தான் பலியோனு நினைத்து சமந்தமில்லாத ஆள தூக்கிருச்சேனு நினைத்தோமே இப்போ தான் தெரியுது அது சாம்பிள் இதுதான் மெயின் பிக்சர் என்று”
“அப்பா இறந்தபோ கூட அந்த பொண்ணு மசியலையே இதெல்லாம் தெரிஞ்சி தானே கல்யாணம் பண்ணிருக்கும். சொந்தத்தோட இழப்பை விட அந்த கல்யாணமும் அந்த சுரங்கமும் பெரிசா போய்டுச்சு”
“ஆமாமா ஆனா எனக்கு என டவுட்னா, இதெல்லாம் வேணாம்னு குழந்தையாய் இருக்கும்போதே மாயா மேடத்தை தூக்கிட்டு ஓடிப்போன ஜெயதேவ் சாரும் இதுக்கு எப்படி ஒத்துக்குட்டாங்கனு தான் தெரியலை”
“அவரு வரும்போதே பார்த்த தானே? கை கால் உடைந்த நிலைல தான் கொண்டே வந்தாங்க, அதுக்கு அப்புறமும் கூட அறைக்குள்ளேயே தானே அடைத்து வைத்த மாதிரி வைத்திருந்தாங்க? சொந்த பெண்ணை கூட பார்க்க விடலையே?”
“ஆதானே…எல்லாம் அந்த சுரங்கமும் அதில் இருக்கும் புதையலும் படுத்தும் பாடு.”
“ஆமாமா நமக்கு எதுக்கு பெரிய எடத்து பொல்லாப்பு…” என்று பேசியபடி அவர்கள் மின்தூக்குள் சென்றுவிட்டு இருந்தனர்.
காதில் கேட்ட நான்கு வார்த்தையை எட்டாய் மாற்றி புரளி பேசி சென்றவர்களின் பேச்சு அவள் கேட்க வேண்டும் என்பது தான் விதியோ? ஒரு துளி விஷத்தை கூட அறிந்திடாதவளுக்கு அரளி செடியையே விழுங்க கொடுத்தாள்? தூறிய தூறலும் உறைந்து போனதோ அந்த கணம்?