Advertisement

அத்தியாயம் – 30
“சக்தி, உனக்கு விசிட்டர் வந்திருக்காங்களாம்… வார்டன் அழைச்சிட்டு வர சொன்னார்…” அடுக்களையில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த சக்தி சிறைச்சாலை சிப்பந்தி சொன்ன தகவலால் முகம் மலர்ந்தான்.
அருகிலிருந்தவரிடம், “பார்த்திட்டு வந்திடறேன்…” என்றவன் எழுந்து கை கழுவிக் கொண்டு பார்வையாளர்கள் சந்திக்கும் இடத்துக்கு சென்றான். சிறை கண்காணிப்பாளருக்கு முன்னமே மனு கொடுத்து அனுமதி வாங்கியிருந்தான் வெற்றிவேல். சக்திவேல் தண்டனை பெற்ற கைதியாதலால் மாதத்திற்கு இருமுறை மட்டுமே உறவினர்களை சந்திக்க அனுமதிப்பார்கள். அதுவும் மூன்று பேர் மட்டுமே ஒரு நேரத்தில் முப்பது நிமிடம் சந்தித்துப் பேச முடியும்.
சிறை ஊழியர் வெற்றியைப் பரிசோதிக்க பெண் ஊழியர் ஒருவர் இந்துவைப் பரிசோதித்து உள்ளே அனுப்பினர்.
குழந்தையை வெறுமனே உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்து முதன்முறை இந்த மாதிரி இடத்துக்கு வருவதால் அங்கிருந்த சூழலும் அங்கங்கே நின்ற ஆட்களையும் கண்டு அவளுக்கு ஒரு மாதிரி பயமாய் தோன்றியது.
இவர்கள் சென்று சில நிமிடத்தில் சக்திவேலின் முகம் தடுப்புக் கம்பிக்குப் பின்னால் புன்னகையுடன் தெரிந்தது.
வெற்றியை விட சற்று மெலிந்து கலராய் இருந்தான் சக்தி. முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை உறைந்திருந்தது. சட்டென்று பார்க்க ஒரு போல இருந்தாலும் இருவருக்கும் தோற்றத்தில் நிறையவே வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாள் இந்து. சிறை சீருடையில் வந்தவனைக் காண வருத்தமாய் இருந்தது.
வெற்றி அவனைக் கண்டு நெகிழ்ந்து நிற்க, “புதுமாப்பிள, எப்படிடா இருக்க… வ…வணக்கம் அண்ணி… என்னைப் பார்க்க நீங்களும் வருவீங்கன்னு எதிர்பார்க்கல… நல்லாருக்கீங்களா…” என்றவனின் பார்வை ஆர்வத்துடன் மகளின் மீது படிய அந்த சூழ்நிலையை விரும்பாமல் சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தை வெற்றியின் தோளில் முகம் புதைத்து, “வீத்துக்குப் போலாம்பா…” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ம்ம் போகலாம்… இங்க பாரு, யாருன்னு…” என்று மகளின் முகத்தை சக்திக்கு காட்ட முயல, “எனக்கு இங்க பிதிக்கவே இல்ல, வா… வீத்துக்குப் போவோம்…” என்றவள் சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டு முகம் காட்ட மறுத்தாள்.
“ச..சரி, விடுங்க… குழந்தை தான… அவளுக்கு இங்க ஒரு மாதிரியா இருக்கலாம்…” என்றவன் இந்துவை ஏறிட்டான்.
“அண்ணி… என் அண்ணன் பார்க்க தான் கொஞ்சம் முரட்டு பீசு… ஆனா மனசுல ரொம்ப பாசக்காரன்…  நீங்கதான் இவங்களைப் பார்த்துக்கணும்…” நெகிழ்ச்சியுடன் சொன்னவனை வெற்றி அமைதியாய் நோக்கினான். இந்துவுக்கு சக்தியைக் காணப் பாவமாய் இருக்க தலையை மட்டும் ஆட்டியவள், “நீங்க எப்படி இருக்கீங்க…” என்றாள். அதைக் கேட்டு சிரித்த சக்தி, “எனக்கென்ன, இங்க சொல்லுற வேலையை செய்துட்டு சந்தோஷமாதான் இருக்கேன்… எந்த பிக்கல், பிடுங்கலும் இல்லை… எந்த கமிட்மெண்டும் இல்லை… நேரத்துக்கு சாப்பாடு, தூக்கம்னு அது பாட்டுக்கு நடக்கும்போது என்ன கவலை…” என்றவனின் வார்த்தைகள் கிண்டலாய் வந்தாலும் அதில் வேதனையும் இருந்தது.
“என்ன விடுங்க, உங்க கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது… வெற்றி, அண்ணி உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்காங்க… உங்களை இப்படி ஜோடியா பார்க்கவே சந்தோஷமா இருக்கு… சரி, எங்கயும் ஹனிமூன் பிளான் பண்ணலையா…” என்றவன், “ஹூக்கும், இவன் ஒரு கஞ்சப்பய… யோசிச்சு யோசிச்சு தான் செலவு பண்ணுவான்… நீங்கதான் அண்ணி உங்களுக்குத் தேவையானது எல்லாம் செய்துக்கணும்…” இந்துவிடம் சொல்ல அவனது அண்ணி என்ற அழைப்பு அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.
“டேய் சக்தி, ரொம்பதான் என்னை ஓட்டாத… நான் ஹனிமூன் பிளான் பண்ணாலும் உன் அண்ணி ஒத்துக்க மாட்டா…” என்றான் வெற்றி. அவர்கள் இயல்பாய் பேசத் தொடங்கவும் பவித்ரா மெல்ல தலையைத் தூக்கி யாருடன் பேசுகிறார்கள் என்று பார்த்தாள்.
சக்தியைக் கண்டதும் போட்டோவில் அவனைக் கண்டது நினைவு வர, “அப்பா… இது யாரு… உன்னைப் போலவே இருக்காங்க…” குழந்தை தன்னைப் பார்த்து கேட்கவும் சக்திக்கு சந்தோஷமாய் இருந்தது.
“பவிக்குட்டி, எப்படிடா செல்லம் இருக்க… என்னைத் தெரியலியா…” என்று சக்தி கேட்க, “ம்ஹூம்… அப்பா, இவர் அந்த போத்தோல பாத்தி பக்கத்துல நின்ன அங்கிள் தானே… உன் தம்பியாப்பா…” என்று வெற்றியிடம் கேட்க, “போட்டோல இருந்தவர் தான்டா, ஆனா…” என்று வெற்றி ஏதோ சொல்ல வர சக்தி இடைபுகுந்து, “ஆமாம், தம்பிதான்…” என்றான்.
“ஓ…” என்றவள் யோசித்துவிட்டு, “அப்ப இவர் என் சித்தப்பாவா…” என்று கேட்க வெற்றி முழிக்க இந்து சக்தியின் முகத்தையே பார்த்தாள்.
அதில் சட்டென்று ஒரு ஏமாற்றம் வந்து நிமிட நேரத்தில் சரியாக இயல்பாய் சிரித்தவன், “அடடா, பவிக்குட்டி கண்டு பிடிச்சுட்டாளே…” என்று புன்னகைத்த சக்தியை வெற்றி வேதனையுடன் பார்த்தான்.
“சக்தி, ஏண்டா…” என்று கேட்க, “வேண்டாம்டா… அவ சொன்ன போலவே இருக்கட்டும்… அவளுக்கு எப்பவும் நீங்கதான் அப்பா, அம்மா…” என்றவன் இந்துவை நோக்கி, “நான் சொன்னது சரியா அண்ணி…” என்று கேட்க, “ம்ம்… கண்டிப்பா அவ எங்க குழந்தை தான்…” என்றாள் இந்து.
“பவிக்குட்டி ரொம்ப அழகாப் பேசறா…” என்றவன், மகளைக் கண்ணில் நிறைத்துக் கொண்டான்.,
“உங்க பேரென்ன சித்தப்பா…” என்றாள் குழந்தை.
“சக்திவேல் டா செல்லம்…”
“ஓ… அப்பா பேரு வெட்டி வேல்… சித்தப்பா பேரு சக்திவேல்…” என்று சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.
“நீங்க ஏன் நம்ம வீத்துக்கு வதாம இங்க இருக்கிங்க…” அவள் கேட்கவும் என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தான்.
“எங்க வீத்துல நிறைய ரோஸ் செதி இதுக்கு… நிறைய டாய்ஸ் இருக்கு… நீங்க நாளைக்கு வாங்க, காத்தறேன்…”
“ம்ம்… சரி டா செல்லம்…” என்றவன், “குழந்தையை அடுத்த வருஷம் ஸ்கூல் சேர்த்தறதுக்கு ஆயிடுச்சுல்ல…” என்றான். “ம்ம்… சரி, நீ போன முறை வந்தப்ப ஏதோ தண்டனை காலத்தைக் குறைக்கப் போறதா சொன்னியே… என்னாச்சு உன் பேரும் லிஸ்ட்ல இருக்குதானே…” என்றான் வெற்றி.
“ம்ம்… சுதந்திர தினம் அன்னைக்கு சொல்லுவாங்கன்னு வார்டன் சொன்னார்… பத்து பேரு உள்ள லிஸ்ட்ல என் பேரும் இருக்கு…” அவன் சொல்லும்போதே சிறை சிப்பந்தி ஒருவர் கதவில் கம்பியால் அடித்து, “ம்ம்… போதும் போதும்… டைம் ஆச்சு…” என்று அவசரப்படுத்தினார்.
அவர்களிடம் திரும்பிய சக்தி, “உன்னை இப்படி பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு வெற்றி… என் பேச்சையும் மதிச்சு கல்யாணத்தைப் பத்தி யோசிச்சியே… நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கறேன்… அண்ணி, எங்க குடும்பத்துக்கு எல்லாமா இருந்து நீங்கதான் பார்த்துக்கணும்…” அதுவரை சந்தோஷமாய் பேசிக் கொண்டிருந்தவனின் கண்கள் கலங்கியிருக்க குரல் உடைந்திருந்தது.
“இவங்களை எல்லாம் இந்த மாதிரி இடத்துக்கு இனி அழைச்சிட்டு வர வேண்டாம் வெற்றி… அடுத்த தடவை நீ மட்டும் வந்தாப் போதும்…” என்றான். “ம்ம்… கிளம்புங்க டைம் ஆச்சு…” என்று மீண்டும் குரல் வர, “சரிடா சக்தி, பார்த்துக்க…” வெற்றி சொல்ல, “பை சித்தப்பா…” என்றது பவித்ரா.
“கவலைப்படாதீங்க… நீங்க பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்… மனசைத் தளரவிடாம நம்பிக்கையா இருங்க… நாங்க வர்றோம்…” இந்து பொறுப்பாய் சொன்ன வார்த்தைகள் உண்மையில் அவன் அன்னையே சொல்வது போலத் தோன்றியது சக்திக்கு.
அவர்கள் வெளியே செல்லும்வரை பார்த்து நின்றவன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு சென்றான்.
அடுக்களையில் சமையல் ஜரூராய் நடந்து கொண்டிருக்க கைதிகள் பேசிக் கொண்டே காய்கறி வெட்டுவது, சோறு வடிப்பது, பாத்திரம் கழுவுவது என்று அங்கங்கே செய்து கொண்டிருக்க மாலை சமையலுக்கான வேலையும் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருந்தது. சிறைக் காவலர் ஒருவர் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்ன சக்தி, பேசிட்டு வந்தாச்சா…” என்றவர், “சமையல் முடிஞ்சிட்டா மகளிர் சிறைக்கு கொடுத்தனுப்ப சொல்லி வார்டன் சொன்னார்… நீயும் அந்த சிவாவும் போயி கொடுத்திட்டு வந்திருங்க…” என்றார்.

Advertisement