நினைவுகள் – 24
நாட்கள் சந்தோசத்துடன் சிறகில்லாமலே பறக்க மீரா நந்தனுடன் US வந்து ஒரு வருடமாகியிருந்தது. காதல், காதல், மீண்டும் காதல் என காதலில் திளைத்திருந்தனர். இருவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை என்பதால் ஒன்றாகவே ஆபீஸ் சென்று ஒன்றாகவே வீட்டுக்கு வந்து அழகாய் கழிந்த பொழுதுகள். விக்ரமின் தந்தை மற்றும் ஸ்வேதாவின் அப்பாவுக்கு அந்த கம்பெனியில் நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் மீராவுக்கும் அங்கு வேலை வாங்கிக் கொடுக்க முடிந்திருந்தது.
அன்று விடுமுறை நாளாதலால் நிதானமாய் எழுந்தவள் காலை டிபனுக்கு வேண்டியதைத் தயார் செய்துவிட்டு ஒரு காப்பிக் கோப்பையுடன் ஜன்னல் அருகில் அமர்ந்தாள். கர்ட்டனை விலக்க வெளியே பனி பெய்து கொண்டிருப்பதை ரசித்து நின்றவள் உடலோடு மனதிலும் சில்லிப்பை உணர்ந்தாள். கண்ணாடியில் படிந்திருந்த பனித் திவலைகளில் விரலால் கோலமிட்டுக் கொண்டே காப்பியை ருசித்தவளின் விரல்கள் வழக்கம் போல் அதில் இளம்பெரும் வழுதி என்று எழுதி வைக்க புன்னகைத்தாள்.
வலியோ சுகமோ
உணர்வுகள் உயிரானது…
அதில் காதல் கலந்திருந்தால்…
கூடலோ பிரிவோ
நினைவுகள் அழகானது…
என்னில் நீ இருந்தால்…
மனம் சுகமாய் ஒரு கவிதையை அசைபோட தன் பின்னில் அசைவை உணர்ந்தாலும் திரும்பாமல் அமர்ந்திருந்தவளின் கழுத்தில் இரு கைகளையும் மாலையாய் தொங்கவிட்டு தலைமீது தலை வைத்து பின்னிலிருந்து அணைத்துக் கொண்டவனைக் காதலுடன் நிமிர்ந்து பார்க்க அவளது நெற்றியில் அவனது இதழ்கள் மென்மையாய் முத்தமிட கண்களில் வழியும் காதலுடன் அவனையே பார்த்திருந்தாள்.
புருவம் தூக்கி என்னவென்று கேட்டவன், “எனக்கு காபி…” என்று கேட்டுக் கொண்டே அவளது கையிலிருந்த காபிக் கோப்பைக்கு கை நீட்ட, “பிளாஸ்கில் இருக்கு… எடுத்திட்டு வரேன்…” என்று எழப் போனவளைப் பிடித்து இருத்தியவன், “எனக்கு இது போதும்…” என்று அவள் கையிலிருந்த கோப்பையைப் பறித்துக் கொள்ள புன்னகைத்தாள்.
அவன் தோளில் சாய்ந்தவள், “நண்டு, நைட் நாம ஊருக்குக் கிளம்பப் போறோம்… எல்லாருக்கும் என்ன வாங்கிட்டுப் போகலாம்…” என்றவளை முறைத்தவன், “அப்ப இதுவரை வாங்கி வச்சதெல்லாம்… ஊருல உள்ளவங்களுக்கு இல்லையா…” என்று கேட்க சிரித்தாள்.
“அது சும்மா, கலாக்கா, நிர்மலா குழந்தைகளுக்கு தானே வாங்கினோம்… பெரியவங்களுக்கு என்ன வாங்கலாம்…” கலாவின் ஆண் குழந்தைக்கு இப்போது ஆறு மாதம் ஆகியிருக்க நிர்மலாவுக்கு போன வாரம் தான் பெண் குழந்தை பிறந்திருந்தது.
“மிரு, இங்க கிடைக்கற எல்லாமும் அங்கயும் கிடைக்கும்… சும்மா லக்கேஜை கூட்டாம என்ன வாங்கணுமோ அங்க போயி வாங்கிக் கொடு…” என்றான் நிதானமாய்.
“ம்ம்… அதும் சரிதான்… சரி, ராகு கல்யாணத்துக்கு என்ன கொடுக்கலாம்…” ஆவலுடன் கேட்டவளை நோக்கி சிரித்தவன், “நீ என்ன முடிவு பண்ணறியோ அதையே கொடுக்கலாம்… மஞ்சு கிட்ட டிஸ்கஸ் பண்ணிக்க…”
“ம்ம்… அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு காலைலயே இங்க வரோம், வெளிய கிளம்பலாம்னு சொல்லிருக்காங்க… நாம இன்னும் குளிக்காம உக்கார்ந்து அரட்டை அடிக்கறதைப் பார்த்தா காண்டாகிடுவாங்க…”
“சரி வா, ரெண்டு பேரும் ஒண்ணாவே குளிப்போம்… நான் நல்லா சோப்பு போடுவேன்…” என்று கண்ணடித்தவனின் முதுகில் செல்லமாய் ஒன்று வைத்தவள், “ஐயே… நாங்களாம் ஒண்ணாப்புல இருந்தே தனியா குளிச்சுப் பழகிட்டோம்… நீங்க ஒண்ணும் சோப்பு போட சொல்லித் தர வேண்டாம்…” என்று நாக்கைத் துருத்தி பழிப்புக் காட்டிவிட்டு சென்றவளை சிரிப்புடன் பார்த்திருந்தான்.
எட்டு மணிக்கும் பனி பொழிந்து கொண்டிருக்க, உலகமே அழகாய்த் தெரிந்தது அபிநந்தனுக்கு. அவனது உலகை அழகாக்க வந்த தேவதையாகவே தெரிந்தாள் மீரா. இருவரின் மனதும் எண்ணமும் எப்போதும் ஒத்திருக்க, புரிதலோடு எந்தப் பிரச்னையும் இல்லாமல் அழகாய் நகர்ந்து கொண்டிருந்தது இல்வாழ்க்கை.
இருவரின் வருமானத்தில் மஞ்சுவின் நகைகளை மீட்டு, விக்கியின் பணத்தையும் கொடுத்திருந்தனர். இனி மீராவின் தந்தைக்கு கொடுக்க வேண்டிய பணமும் மீராவின் நகைகளும் மட்டுமே பாக்கி இருந்தது.
குளித்து முடித்து வாசனையாய் அருகில் வந்து நின்றவளை ஆசையுடன் அவன் பார்க்க செல்லமாய் முறைத்தாள்.
“வேண்டாம் நண்டு, அப்படிப் பார்க்காத… உன் மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேக்குது… சீக்கிரம் போயி குளிச்சிட்டு வா…” அவள் சொன்னதும் சிரிப்புடன் நகர்ந்தவன், திரும்பி  ஒரே எட்டில் அவளைப் பின்புறமிருந்து அணைத்து ஈரக் கூந்தலை மணம் பிடிக்க, வழக்கம் போல் அவன் ஸ்பரிசத்தில் தாறு மாறாய் எகிறத் தொடங்கிய தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள் மீரா.
“நண்டு… ப்ளீஸ் விடுங்க, டைம் ஆகுது…” கெஞ்சலாய் கேட்டவளின் கழுத்தில் இதழ் பதித்தவன், “ரசகுல்லா, நானும் நீ போடுற சோப்பு போட்டு தான் குளிக்கறேன்… ஆனா உனக்கு மட்டும் இந்த ஸ்பெஷல் வாசனை எங்கிருந்து தான் வருதோ…” என்று கேட்டுக் கொண்டே மீண்டும் அவள் கூந்தலிலும், கழுத்திலும் மணம் பிடிக்க நெளிந்தவளின் பரிதாப முகத்தைக் கண்டு புன்னகையுடன் விடுவித்தான்.
“சரி, இது மட்டும் சொல்லு… பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லியா…” என்றவனை முறைத்தவள், “இப்ப இந்த ஆராய்ச்சி நமக்கு தேவைதானா… விக்கிண்ணா வந்து அடிக்கப் போறார்… சீக்கிரம் போங்க…” என்று அனுப்பி சிரித்துக்கொண்டே புறப்படத் தொடங்கினாள்.
நந்துவிற்குப் பிடித்த கருநீல நிற ஜீன்ஸும் இளம் நீல நிற டாப்புமாய் புறப்பட்டு முடிக்கையில் அழைப்பு மணியின் ஒலி கேட்டு கதவைத் திறக்க செல்ல விக்கியும், மஞ்சுவும் நின்றிருந்தனர். மஞ்சு தஸ்சு புஸ்சென்று மூச்சிரைத்துக் கொண்டு சோர்வுடன் நின்றிருக்க, அவளது மேடிட்டிருந்த வயிற்றை ஆர்வமாய் நோக்கிய மீரா, “வாங்கண்ணா, வா பஞ்சு…” அன்போடு அழைத்துச் சென்றாள். மஞ்சு இப்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தாள்.
“எங்கம்மா உன் புருஷன்… இன்னும் தூங்கிட்டுதான் இருக்கானா…” விக்ரம் கேட்டு முடிக்கும்போதே தலை துவட்டிக் கொண்டே வெளிப்பட்டான் அபிநந்தன்.
“வாடா விக்கி, வாம்மா மஞ்சு… டிபன் முடிச்சிட்டே கிளம்பிடலாம்னு மீரா சொன்னா…”
“அப்படியா, இவளும் பசிக்குதுன்னு சொன்னா… சரி சாப்பிட்டே போவோம்…” என்றவன் விக்ரமுடன் பேசிக் கொண்டிருக்க மஞ்சு மீராவுடன் கிச்சனில் நுழைந்தாள்.
“பஞ்சு… குட்டிப்பாப்பா என்ன சொல்லுது… செக் அப் போனியா…” கேட்டவளுக்கு பதில் சொல்லிக் கொண்டே, “மிரு, என்ன டிபன் பண்ணறே… என் பிள்ளை என்னை விட சாப்பாட்டு ராமனா இருக்கும் போலருக்கு… பசி தாங்கல…” பரிதாபமாய் சொன்னவளை “நீ உக்காரு… இதோ உனக்குப் பிடிச்ச ஆப்பம் ஊத்தித் தரேன்…” என்றவள் மளமளவென்று வேலையை கவனிக்க ஒரு காரட்டைக் கொறித்துக் கொண்டே வயிற்றின் மீது கை வைத்து ஏதேதோ கதை பேசிக் கொண்டு அமர்ந்திருந்தாள் மஞ்சு.
ஆப்பம் தேங்காய் பாலுடன், ஆனியன் எக் ரோஸ்டும் செய்து கொடுக்க ஆவலுடன் விரும்பி சாப்பிட்டாள் பஞ்சு.
“உனக்கு நல்ல கைப்பக்குவம் மிரு… நீ என்ன சமைச்சாலும் எல்லாமே சூப்பர் தான்…” மனமார சொன்னவளை, “உனக்குப் பிடிக்குமேன்னு தான் காலைலயே ஆப்பத்துக்கு அரைச்சு வச்சேன்… சரி, ராகுக்கு என்ன கிப்ட் வாங்கலாம்…” என்று கேட்க, ஜோடியாய் இருவருக்கும் பிரேஸ்லெட் வாங்கிக் கொடுக்க முடிவு செய்தனர். மற்றவர்களும் சாப்பிட்டு முடிக்க வெளியே கிளம்பினர்.
அன்று வேண்டிய பொருட்களை வாங்கி முடித்து இரவு விமானத்தில் துபாய் கிளம்பி மறுநாள் இரவு இந்தியா வந்து சேர்ந்தனர். பயணக் களைப்பில் மஞ்சு மிகவும் சோர்வாகி இருந்தாள். டாக்ஸியில் வீட்டை அடைய மனதில் ஒரு வித சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருந்தது. கனடாவிலிருந்த ஸ்வேதாவுக்கும் இரண்டு மாத கர்ப்பம் என்பதால் அவளை டாக்டர் யாத்திரை செய்ய வேண்டாமென்று கூறிவிட, அவளும் அதர்வாவும் பிறகு வருவதாய் கூறி விட்டனர்.
நிர்மலாவை கவனித்துக் கொள்ள கமலாவுக்குத் துணையாய் கலாவும் அங்கிருந்தாள். காரிலிருந்து இறங்கி வீட்டுப் படியேறியவர்கள் முன்னில் தங்க நிறத்தில் பதித்திருந்த பெயர்ப்பலகையை ஆர்வத்துடன் பார்த்தனர்.
“மீராநந்தன் பவனம்”
கறுப்பு பிளேட்டில் தங்க எழுத்துக்கள் அழகாய் பளிச்சிட்டன. நந்தன் மீராவிடம் இப்படி ஒரு பெயர்ப்பலகை முன்னில் வைக்க வேண்டுமென்று ஆசையாய் சொல்லியிருந்தான். ஆனால் அவர்கள் உடனே கிளம்ப வேண்டிய அவசரத்தில் அதைச் செய்ய முடியாமல் போயிற்று.
மகனும், மருமகளும் ஆவலாய் அதைப் பார்த்து நிற்பதைக் கண்டு புன்னகைத்த கமலா, “நல்லாருக்காப்பா… நீ நினைச்ச போல இருக்கா…” என்று கேட்க, அன்னையை நெகிழ்வுடன் கை பற்றியவன், “அருமையாய் இருக்கு மா…” என்று கூற,
“எல்லாம் என் மருமக சொன்னபோல செய்தேன்… அவ்ளோ தான்…” என்று மருமகளை மெச்சிக்கொண்டவர், மஞ்சுவிடம் விசேஷத்தை விசாரித்து அவர்களையும் வரவேற்றார்.
“சரி, வாங்க… மாமா, அத்தையைப் பார்க்க என் பேத்தி வெயிட்டிங்…” என்று அழைத்துச் சென்றார். குழந்தையை உறக்கிக் கொண்டிருந்த கலா இவர்கள் வந்ததை அறிந்து அழுத குழந்தையுடன் வெளியே வந்து நலம் விசாரிக்க, அவளுக்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டு நிர்மலாவிடம்  சென்றனர்.
“அண்ணா, அண்ணி… எப்படி இருக்கீங்க…” குழந்தையை மடியில் வைத்திருந்த நிர்மலா, கேட்க பதிலுக்கு நலம் விசாரித்து ஆவலுடன் குழந்தையை வாங்கிக் கொண்டாள் மீரா.  ரோஜாக் குவியலாய் மீராவின் மடியில் கண் மூடிக் கிடந்த குழந்தையை ஆவலுடன் நோக்கிய மஞ்சுவுக்கு இன்னும் சில காலத்தில் தன் மடியிலும் இப்படி ஒரு குழந்தை கிடக்கப்போகிறது என்பதை நினைக்கும்போதே பெருமிதமாய் இருந்தது.
ரோஜாப்பூவின் மென்மையோடு மெத்து மெத்தென்று இருந்த விரல்களை ஆசையுடன் பிடித்துப் பார்த்தாள். பிரசவத்தைப் பற்றி பயத்துடன் இருந்தவளுக்கு குழந்தையைக் கண்டதும் உடனே தன் குழந்தையைக் கொஞ்சும் ஆவல் வந்துவிட்டது.
“டேய் விக்ரம், அண்ணா, அண்ணி எப்படி இருக்காங்க…” என்று விசாரித்த கமலா, “சீக்கிரம் பிரஷாகிட்டு வாங்க… சாப்பிட எடுக்கறேன்…” என்று நகர்ந்தார்.
சாப்பிட்டு நீண்ட நேரம் பேசி தாமதமாய் உறங்கி விடிந்து வெகுநேரம் வரையிலும் உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்ப வந்து சேர்ந்தனர் மீராவின் பெற்றோரும், மஞ்சுவின் பெற்றோரும். எல்லோரும் ஒன்று கூட வெகு நாட்களுக்குப் பிறகு வீடே கலகலப்பாய் இருந்தது.
“அக்கா, எனக்கு சாக்கலேட் வேணும்னு கேட்டேனே… வாங்கிட்டு வந்தியா…” ஆவலுடன் கேட்ட தங்கைக்கு அதை ஒரு பாக்ஸில் நீட்டியவள், “எல்லாருக்கும் கொடு…” என்று விட்டு ஒவ்வொருவருக்கும் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொடுத்தாள். கலா, நிர்மலாவின் குழந்தைகளுக்கு வாங்கி வந்திருந்த செயினைப் போட்டுவிட்டு அத்தைக்கு ஒரு மொபைலைக் கொடுக்க பல்லெல்லாம் தெரிய சிரித்தார்.
“எனக்கெதுக்கும்மா போன் எல்லாம்… இந்த பட்டன் போன் தான் வசதி…” என்றவரிடம், “இதுல நீங்க வீடியோ கால் பண்ணலாம் அத்தை… எங்களை பார்த்துட்டே பேசலாம்…” எனவும் ஆவலுடன் வாங்கிக் கொண்டார். அதே போன்ற மொபைல் ஒன்றை அன்னைக்கும் கொடுக்க, “மா, நான் வச்சுக்கறேன்…” வேகமாய் பறித்துக் கொண்டாள் மேகலா.
“மேகி, அது அம்மாவுக்குக் கொடு… உனக்கு வேற வாங்கிட்டு வந்திருக்கேன்…” என்றவள் மற்றொரு புதுமாடல் போனை எடுத்துக் கொடுக்க கண்கள் விரிய, “வாவ்…” என்றவள், “என் செல்ல அக்கா…” என்று கட்டிக் கொண்டாள்.
எல்லாவற்றையும் பெருமிதமாய் பார்த்து நின்ற தந்தை நடராஜ், “என்னம்மா, அப்பாக்கு ஏதும் வாங்கிட்டு வரலியா…” என்று கேட்க, “உங்களுக்கு ஒரு சூப்பர் பர்ப்யூம் வாங்கிட்டு வந்திருக்கேன்…” என்று எடுத்துக் கொடுக்க, “சந்தோசம் டா மீரும்மா, என் பொண்ணு பெரிய மனுஷியா எனக்கே வாங்கிக் கொடுக்கிறா…” என்றார் சந்தோஷத்துடன். அதற்குப் பிறகு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். மாலையில் ராகவி கல்யாணத்திற்கு கிளம்பி மண்டபத்துக்கு சென்றனர்.
“ஒருவழியா ராகுவையும், கேதுவையும் சேர்த்து வைக்க நேரம் வந்திருச்சு…” என்ற மஞ்சுவை நாணத்துடன் நோக்கி சிரித்தாள் ராகவி. தோழிகளுடன் அடிக்கடி போனில் பேசினாலும் அவர்களை மிகவும் மிஸ் பண்ணியவள் கமலேஷுடன் நன்றாகப் பழகியிருந்தாள். அவர்களின் கலாட்டாவும் குறும்பும் இல்லாமல் இருந்தாலும் மகளைப் போலவே கமலாவும் பார்த்துக் கொண்டார். கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்னமே வேலை விட்டு நின்று விட்டதால் அவளது வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.
நிச்சயம் நல்லபடியாய் முடிய எல்லாரிடமும் ஓடியாடி நலம் விசாரித்து சந்தோஷமாய் பேசிக் கொண்டிருந்த மனைவியை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அபிநந்தன். மீராவையும் மஞ்சுவையும் ஒன்றாகக் கண்ட பர்வதம் மாமி, “என்னடிம்மா, உங்களோட இன்னொரு பொண்ணும் இருப்பாளே… அவ வரலியா…” ஸ்வேதாவை விசாரித்தார்.
“இல்ல மாமி, அவளுக்கு இப்ப ரெண்டு மாசம்னு டாக்டர் போக வேண்டாம்னு சொல்லிட்டார்…” என்றாள் சிரிப்புடன்.
“ஓ அவளும் உண்டாயிருக்காளா…” கேட்டுக் கொண்டே மஞ்சுவின் வயிற்றைப் பார்த்தவர், “ம்ம்… மூணு ஜோடிக்கும் ஒண்ணா கல்யாணம் ஆச்சு… இப்ப ரெண்டு பேரு மட்டும் உண்டாகி இருக்காங்க… உனக்கு மட்டும் எதுவும் ஆகலியா…” என்று அவர் கேட்கவும் அத்தனை நேரம் மலர்ந்த பூவாய் நின்ற மீராவின் முகம் சட்டென்று வாடிப்போக, அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தனின் கண்கள் அதை கவனிக்கத் தவறவில்லை.
சட்டென்று முகத்தை சரியாக்கிக் கொண்ட மீரா, “அதுவந்து மாமி…” என்று ஏதோ சொல்லத் தொடங்கு முன் அவர் கேட்டதில் முகம் சிவக்க கோபமாய் நின்றிருந்த மஞ்சு பேசத் தொடங்கியிருந்தாள்.
“மாமி, இத்தனை வயசாகியும் எங்க, எப்படிப் பேசணும்னு தெரியாம இருக்கீங்க… மூணு பேருக்கும் ஒண்ணாக் கல்யாணமானா ஒண்ணாவே புள்ள பெத்துக்கணுமா… அதெல்லாம் அவங்களுக்கு வேணும்னு தோணும்போது பெத்துக்குவாங்க… இந்த மாதிரி யாரையும் கேட்டு சங்கடப் படுத்தாதீங்க…” பொரிந்து தள்ள வாயடைத்து நின்றார்.
“பஞ்சு… நீ எதுக்கு இப்படி டென்ஷன் ஆகற… அவங்க எதார்த்தமா தான் கேட்டாங்க… பெரியவங்ககிட்ட இப்படிலாம் பேசக் கூடாது…” அதட்டினாள் மீரா.
“ஹூக்கும், பெரியவங்களா இருந்தா அதுபோலப் பேசணும்…” என்றவளின் கையைப் பிடித்த மீரா, “ப்ச் பஞ்சு… பேசாம இரு…” என்றுவிட்டு, திகைத்து நின்ற பர்வதம் மாமியிடம், “சாரி மாமி… அவ தெரியாமப் பேசிட்டா… எதையும் மனசுல வச்சுக்காதிங்க…” எனவும், “இல்லடிம்மா… அவ சரியா தான் சொன்னா… நான்தான் லூசுத்தனமா கேட்டுட்டன்… பிரண்டுன்னா இப்படிதான் இருக்கணும்… நல்லாருங்க…” என்று விட்டுச் சென்றார்.
“என்ன பஞ்சு இது, மாசமா இருக்கும்போது பெரியவங்க வருத்தப்படற போல பேசலாமா…”
“பெரியவங்கன்னா யோசிக்காம எதுவும் பேசலாமா… உனக்கு குழந்தைன்னா எவ்ளோ பிடிக்கும்னு எனக்குத் தெரியும்… குடும்ப சூழ்நிலைக்கு வேண்டி இப்ப குழந்தை வேண்டாம்னு நினைச்சிருக்கீங்க… இதை என்னமோ ஒரு குறை போலக் கேக்கறாங்க… அதான் எனக்கு கோபம் வந்திருச்சு…”
“சரி விடு… கூலா இருந்தாதான் எங்க பஞ்சுக்கு செட்டாகும்…” என்று சிரிக்க அவர்களை நோக்கி வந்தான் விக்ரம்.
“என்ன இங்க பஞ்சாயத்து… முடிஞ்சிருச்சா, இல்ல நான் தீர்த்து வைக்கணுமா… சொம்பக் கொண்டாங்க… தீர்ப்ப சொல்லிடுவோம்…” எனவும் அவனை முறைத்த மஞ்சு, “அய்யே காமெடியாக்கும்… நீங்களே சிரிச்சுக்குங்க…” எனவும், “என் பஞ்சு ஏன் பொங்குது… எனி பிராப்ளம் சிஸ்டர்…” என்று மீராவைக் கேட்க, “ஒரு பிராப்ளமும் இல்ல… நீங்க உங்க தியானத்தைக் கண்டின்யூ பண்ணுங்க…” என்றாள் மஞ்சு.
அடுத்தநாள் கிண்டலும் கேலியும், கொண்டாட்டமுமாய் ராகவி, கமலேஷ் கல்யாணம் நல்லபடியாய் முடிந்து அவர்களை மணமகனின் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர்கள் கிளம்ப மஞ்சுவும் விக்ரமும் அவள் பெற்றோருடன் சென்று விட்டனர். மகள், மருமகனை வசந்தி கோவைக்கு அழைக்க பிறகு வருவதாகக் கூற அவர்களும் கிளம்பிவிட்டனர்.
நிர்மலா தனியே இருந்ததால் கமலா கல்யாணத்திற்கு மட்டும் வந்துவிட்டு சீக்கிரமே வீடு திரும்பியிருந்தார். கலாவும் கல்யாணம் முடிந்து அவள் கணவனுடன் சென்று விட இவர்கள் மீராநந்தன் பவனத்துக்கு கிளம்பினர்.
வானம் இருட்டிக் கொண்டு வர மழை வரும்போல் தோன்றியது.
“வாவ்… சூப்பர் கிளைமேட் நண்டு… மழை வந்தா செமையா இருக்கும்ல…” சின்னக் குழந்தையாய் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டு புன்னகைத்தவன் கை பிடித்து டாக்ஸிக்கு அழைத்து வந்தான்.
சற்று நேரத்திலேயே மழை சாரலிடத் தொடங்க ஒரு ஐஸ்க்ரீம் பார்லர் முன்பு வண்டியை நிறுத்தச் சொன்னவன், “வா…” என்று அவளை அழைக்க, “ஹேய், ஐஸ்க்ரீம் சாப்பிடப் போறோமா…” என்று குஷியுடன் இறங்கிச் சென்றாள்.
அவளுக்கு மழை வரும்போது ஐஸ்க்ரீம் சாப்பிட மிகவும் பிடிக்கும். எதிரெதிரே அமர்ந்தவர்கள் கடை சிப்பந்தியிடம் இரண்டு இட்டாலியன் டிலைட் சொல்லி காத்திருந்தனர்.  
அவள் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவன் அவளையே பார்த்திருந்தான். அதை உணர்ந்தவள், “ஏய் நண்டு… என்னை எப்ப வேணும்னாலும் பார்த்துக்கலாம்… இங்க மழையைத் தான் காணாம தேட வேண்டி இருக்கும்… வரும்போதே நல்லா பார்த்து வச்சுக்க…” என்று சிரித்தாள்.
ஐஸ்க்ரீம் வரவும் ரசித்து சாப்பிடத் தொடங்கியவள், அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து, நண்டு… கல்யாணத்துக்கு முன்னாடி தான் இப்படிப் பார்ப்பீங்க… இப்பவுமா… சாப்பிடு…” என்று சிணுங்க பார்வையை விலக்கிக் கொண்டான்.
ஆனாலும் அவனது யோசனையான முகம் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்தியது.
“மிரு… உனக்கு குழந்தைன்னா ரொம்ப இஷ்டமா…” அவன் கேட்கவும் திகைத்தவள் புன்னகைத்தாள்.
“குழந்தையை யாருக்கு தான் பிடிக்காது… ரோஜாப்பூ போல மெத்துன்னு உடம்பு, குட்டி குட்டியா அழகான விரல், வெல்வெட் மாதிரி உதடு, எதுவுமே தெரியாத தெய்வீக சிரிப்பு, பால் வாசம்… குழந்தை ஒரு குட்டி சொர்கம்…” கண்கள் விரிய ஆவலுடன் கூறியவளை பார்த்திருந்தவன்,
“அப்படின்னா நாமளும் குழந்தை பெத்துப்போம்…”
அவன் சொல்லவும் சட்டென்று முகம் மாறியவள், “நண்டு, எனக்கு குழந்தை பிடிக்கும் தான்… ஆனா நமக்குன்னு முடிக்க வேண்டிய சில கடமைகள் இருக்கு… அதுக்கப்புறம் குழந்தை போதும்னு தானே முடிவு பண்ணி வச்சிருக்கோம்… இப்ப திடீர்னு என்னாச்சு…” என்றாள் குழப்பத்துடன்.
“ப்ச்… என் மிருவை யாரும் எதுவும் கேக்கறது எனக்குப் பிடிக்கலை… உனக்கு குழந்தைன்னா இவ்ளோ பிடிக்கும்னு தெரிஞ்சிருந்தா ஆறு மாசத்துக்கு ஒரு தடவை அந்த ஊசியை எடுத்துக்கவே விட்டிருக்க மாட்டேன்… சரி, போகட்டும் இனி எந்தத் தடாவும் இல்லை… சீக்கிரமே ஒரு குட்டி மீராவைப் பெத்துக் குடுத்துடணும்…”
அவன் சொல்வதை ஆச்சர்யமாய் பார்த்திருந்தவள், “அப்ப நாம அப்பாக்கு கொடுக்க வேண்டிய கடன்…” இழுத்தாள்.
“குழந்தை ஆகற வரைக்கும் நீயும் வேலைக்குப் போ… அதுக்குள்ள அந்தக் கடனை முடிச்சிடலாம்… அப்புறம் நம்ம நகை தானே… அதை நான் பார்த்துக்கறேன்…” அவன் தீர்மானமாய் சொல்லவும் அவள் முகத்தில் புன்னகை ஒன்று பெரிதாய் மலர்ந்தது.
“நண்டு, நிஜமாவே நாம குழந்தை பெத்துக்கப் போறோமா… அப்பா எனக்கு குட்டி நண்டு தான் வேணும்…” என்றாள் ஆவலுடன்.
“குட்டி நண்டா… அடிப்பாவி, நண்டு தேள் எல்லாம் இல்லாம அழகா ஒரு மிருக்குட்டியை எனக்கு பெத்துக் குடு…”
“அப்படியா, அப்படின்னா எனக்கு ஒரு கலாட்டா வேணும்…” அவள் கசாட்டாவை சொல்கிறாள் எனப் புரிய சிரித்தவன், கசாட்டா ஐஸ்க்ரீமை கொண்டு வர சொல்லிவிட்டு, “இப்ப உனக்கு சந்தோஷமா…” என்றான்.
“ம்ம்… டபுள் சந்தோஷம்…” என்றவள் அதை சாப்பிட்டு முடிக்க கைகோர்த்து வீட்டுக்குக் கிளம்பினர். மழை அழகாய் பெய்து கொண்டிருக்க கையில் பிடித்து விளையாடிக் கொண்டே நடந்தவளை முதன் முறையாய் ஒரு மழை நாளில் வண்டியில் கூட்டிச் சென்றது நினைவு வர அபிநந்தன் சிரித்துக் கொண்டான். அவளும் அதை நினைத்திருக்க வேண்டும்… சந்தோஷம் வழியும் விழிகளோடு அவனை நோக்கி காதலாய் சிரித்தவளை கை வளைவில் அணைத்துப் பிடித்தபடி சாலையைக் கடந்து டாக்ஸிக்கு அழைத்துச் சென்றான். இருவரின் மனதிலும் எல்லையிலா நிம்மதி நிறைந்திருந்தது.
விரைவிலேயே மீராநந்தனோடு நாமும் குட்டி மீரா, நந்தனுக்கான நல்ல செய்திக்காய் காத்திருப்போம்…
நினைவுகள் சுகமானது…
நிதர்சனத்தின் கொடூர
நிஜங்கள் சுடும்போது
நினைவுகளே நிழலாகிறது…
தொலைவில் தான் இருந்தாலும்
தொலைந்தே தான் போவதில்லை…
துயரே தான் வந்தாலும்
தூரத்தில் மறைவதில்லை…
நினைவுகளிலே என்றும்
சுவாசமாய்… நேசமாய்…
நானாய்… நீயாய்..
நாமாய் கலந்திருப்போம்…
நீயெங்கோ… என் நினைவுகளங்கே…
…சுபம்…