இமை – 8

 

மீனா மயங்கி விழவும் பதறிப் போன பவித்ரா அவரை எழுப்ப முயன்றாள்.

 

“அத்தை… என்னாச்சு… போன்ல அவர் என்ன சொன்னார்…” கேட்டவள் அலைபேசி அழைப்பு துண்டிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு காதுக்குக் கொடுத்தாள்.

 

அதில் கேட்ட விஷயம் இடியாய் இதயத்தைத் தாக்க அனிச்சையாய் கண்ணில் வழிந்த நீருடன் உறைந்து போனவள் சிலையாய் மடங்கி அமர்ந்தாள்.

அதற்குள் அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த சாவித்திரி, மீனா மயங்கிக் கிடப்பதைக் கண்டு தண்ணீர் தெளித்திருக்க எழுந்து அமர்ந்தவர், “அய்யோ என் பிள்ளை… மித்ரா…” என்று கதறத் தொடங்க பவித்ராவின் நெஞ்சம் வேகமாய் அடித்துக் கொள்ள கண்கள் விடாமல் கண்ணீரை சிந்தியது.

 

“தம்பிக்கு என்னாச்சுமா… ஏன் ரெண்டு பேரும் அழறீங்க…” சாவித்திரி பதட்டத்துடன் கேட்க,

 

“மித்ரனோட கார் இன்னொரு கார்ல இடிச்சு ஆக்சிடண்ட் ஆகி சீரியஸா ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம்…” அழுகையுடன் சொல்லியவர் ஓரமாய் அமர்ந்து அமைதியாய் அழுது கொண்டிருந்த பவித்ராவைப் பார்த்துக் கொண்டே சோமுவை அழைத்தார்.

 

“அண்ணா…” அலைபேசியில் கதறிய தங்கைக்கு ஆறுதல் சொல்லி விவரமறிந்து உடனே கிளம்புவதாய்க் கூறியவர் அடுத்த பிளைட்டில் குடும்பத்துடன் வந்துவிட்டார்.

சோமசுந்தரம் மித்ரனைப் பற்றி ராகவை அழைத்து விசாரித்துக் கொண்டிருக்க, மித்ரனின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், இடுப்பெலும்பிலும் காலிலும் அடிபட்டதால் மூன்று மாதம் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டி வரும், இப்போதைக்கு நடக்கக் கூடாது என்றும் டாக்டர் கூறியதாகக் கூறினான்.

 

நல்ல ஹாஸ்பிடலில் சிகிச்சை நடப்பதாய் கூறியவனிடம், “தான் உடனே கிளம்பி வரட்டுமா…” என்று கேட்க, டாக்டரிடம் பேசிவிட்டு சொல்வதாகக் கூறினான்.

 

அன்றைய பொழுது தவிப்புடனே நகர்ந்து கொண்டிருந்தது.

 

மீனா கட்டிலில் அமர்ந்து, “இதுக்காடா கண்ணா உன்னைக் கண் காணாத தேசத்துக்கு படிக்க அனுப்பி வச்சேன்… இப்படில்லாம் உனக்கு ஆபத்து வரும்னு தெரிஞ்சிருந்தா  எங்கயும் அனுப்பாம என் பக்கத்துலயே வச்சுப் பார்த்திருப்பேனே…” என்று புலம்பிக் கொண்டிருக்க, சுந்தரி அவரை சமாதானப் படுத்த முடியாமல் திணறினார்.

பவித்ரா யாரோடும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மூலையில் அமர்ந்தவள் தான்… கண்ணில் வழிந்த கண்ணீர் மட்டுமே அவள் மயக்கத்தில் இல்லை என்று உணர்த்தின. அவளைக் கண்டு வருந்திய சுந்தரி சமாதானப்படுத்த முயல ரோஹிணியோ,

 

“எல்லாம் இவளால தான்… இவ ஜாதகத்துல தீர்க்க சுமங்கலி யோகம் இருக்கு… இவளைக் கட்டி வச்சா அத்தான் உயிருக்கு வந்த கண்டம் சரியாகிடும்னு சொன்னிங்க… இப்ப என்ன ஆச்சு…”

 

தேளாய் கொட்டிய அவளது வார்த்தைகளில் மனம் தளர்ந்து போக கண்ணீருடன் நிமிர்ந்தாள் பவித்ரா.

 

மகளை முறைத்த சுந்தரி, “ரோஹி… எந்த நேரத்துல என்ன பேசற… இதை ஏன் பவியால மித்ரனுக்கு வந்த ஆபத்தா நினைக்கணும்… அவளால தான் மித்ரன் உயிருக்கு ஆபத்து வராம இந்த அளவுல போயிருக்குன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்…” என்று கூற,

“நீங்க இப்படியே அவளைத் தாங்கிட்டு இருங்க… ச்ச்சே… இதெல்லாம் எங்க போயி முடியப் போகுதோ…” என்று வார்த்தையைக் கடித்துத் துப்பிக் கொண்டே அங்கிருந்து எழுந்து சென்றாள் ரோஹிணி.

 

அவளுக்கும் மித்ரனுக்கு இப்படி ஆனதை நினைத்து வருத்தமும் கவலையும் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் அவனுக்காய் இவள் என்ன அழுது கரைவது என்ற எண்ணம் பவித்ராவின் மீது ஆத்திரத்தை உண்டு பண்ணியது.

 

சற்று நேரத்தில் ராகவ் மீண்டும் அழைத்தான். மித்ரனை அங்கே உள்ள ஹாஸ்பிடலிலேயே ஒருவாரம் சிகிச்சை கொடுத்தபின்பு விருப்பப்பட்டால் இந்தியா அழைத்துச் செல்ல டாக்டர் கூறியதாகக் கூறினான்.

 

மித்ரன் அப்போதுதான் கண் விழித்திருக்க அவனிடம் பேசும்படி கூறினான். அதைக் கேட்டதும் பவித்ரா எழுந்து அவரிடம் வந்து நிற்க ரோஹிணி முறைத்தாள்.

அன்னையிடம் சோர்வும், வலியும் கலந்து கஷ்டப்பட்டு பேசியவன், “தான் உயிர் பிழைத்ததே கடவுளின் பாக்கியம் என்று கூறி கவலை கொள்ள வேண்டாம்…” என்றான்.

 

மீனாவிடம் அலைபேசியை வாங்கி அவனுக்கு அங்கே சிகிச்சை திருப்தியாய் இருக்கிறதா… கேட்டுவிட்டு இரண்டு நாளில் தானே அங்கே வந்து அவனை இங்கே அழைத்து வருவதாகக் கூறினார் சோமசுந்தரம். அவரிடம் போனுக்காய் காத்திருந்த மகளிடம் கொடுத்துவிட்டு தன் அலைபேசியில் டிராவல்சுக்கு அழைத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்ய சொல்லி பேசத் தொடங்கினார்.

 

மித்ரனிடம் ரோஹிணி, “அத்தான்…. உங்களுக்கு இப்படி ஆனதைக் கேட்டதும் அதிர்ச்சியில எனக்கு இதயமே நின்னுடும் போல ஆயிடுச்சு… நீங்க சீக்கிரம் இங்க வந்திடுங்க… அப்பத்தான் எனக்கு நிம்மதி…” என்று பேசிக் கொண்டிருக்க அவளையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவைக் கண்டு சுந்தரிக்கு பாவமாய் இருந்தது.

“ரோஹிணி… போனை பவித்ராவுக்கு கொடு… அவளும் பேசட்டும்…” என்ற அன்னையை முறைத்துக் கொண்டே அவளிடம் நீட்டிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டாள்.

 

நடுங்கும் கைகளால் அலைபேசியைப் பிடித்த பவித்ரா, “எ…ன்னங்க…” என்ற வார்த்தையை முடிப்பதற்கு முன் பெரிய கேவல் ஒன்று வெடிக்க பேச முடியாமல் அழத் தொடங்கினாள். தாங்கிக் கொள்ள முடியாத துயரம்  அவள் அழுகையில் வெளிப்பட பார்த்துக் கொண்டிருந்த மனங்கள் கலங்கியது. அவளது வேதனையான அழுகைக் குரல் மித்ரனின் மனதைப் பிசைந்தது.

 

“பவித்ரா, ப்ளீஸ் அழாதே…” என்றவனின் குரல் அவளது காதில் எட்டினாலும் எதுவும் சொல்ல முடியாமல் தேம்பிக் கொண்டிருந்தவளின் வேதனை அவனது புண்பட்ட மனதை நெகிழ்த்த, “இவள் எதற்கு இப்படி அழுகிறாள்…” என நினைத்துக் கொண்டே “பவி… ப்ளீஸ் அழுகையை நிறுத்து… எனக்கு ஒண்ணுமில்ல…” என்றான்  அவளது பேரை சுருக்கி அழைத்ததை உணராமலே.

அப்போதும் தேம்பிக் கொண்டிருந்தவளின் வேதனை தொலைபேசி வழியாய் அவன் நெஞ்சைத் தொல்லை செய்யத் தொடங்கியது.

 

“உடம்பைப் பார்த்துக்கோங்க…” கேவலுடன் சொல்லியவள் வேகமாய் போனை மீனாவின் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட சுந்தரி அவளைப் பாவமாய்ப் பார்க்க மீனாவின் கண்களில் திகைப்பு மாறவே இல்லை.

 

அழுவதைக் கூட மறந்து பவித்ராவையே பார்த்துக் கொண்டிருந்தார் மீனா. அவர் மனதில் சொல்ல முடியாத ஒரு குற்றவுணர்ச்சி எழுந்தது.

 

“கடவுளே… இந்தப் பெண் என்ன, மித்ரனுக்காக இப்படி அழுகிறாள்… ஒருவேளை நான் செய்தது தப்பாகி விடுமோ… முட்டாள்தனமாக ஒரு பக்கம் மட்டுமே யோசித்தது மிகப் பெரிய பாவமாய் மாறி விடுமோ…” அவர் சிந்தனை பவித்ராவைப் பற்றி சுழல சுந்தரியும், அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.

“பாவம் பவித்ரா… மித்ரனை நினைச்சு ரொம்ப பயந்து போயிட்டா… கல்யாணமாகி கொஞ்ச நாள்ல புருஷனுக்கு இப்படி ஆனா, இந்த வீணாப் போன உலகம் புதுசா தாலி கட்டி வந்த பொண்ணைக் குத்தம் சொல்லறது தானே காலகாலமா நடக்கற வழக்கம்…” என்று தனக்குள்ளே சொல்வது போல வாய்விட்டுப் புலம்பியவர் மீனாவிடம் திரும்பினார்.

 

“அண்ணி… நீங்களே இப்படி அழுதிட்டு இருந்தா எப்படி… மித்ரனோட தலைக்கு வந்த கண்டம் தலைப்பாகையோட போச்சுன்னு நினைச்சு சமாதானப் பட வேண்டியதுதான்… பவித்ரா யாரும் இல்லாத சின்னப் பொண்ணு… சந்தோஷமோ, துக்கமோ அவ யாருகிட்ட சொல்லுவா… நீங்க தான் அவளுக்கு ஆதரவா இருக்கணும்…”

 

சொன்ன சுந்தரி, “சரி… யாருமே சாப்பிடலை… நான் போயி பார்க்கறேன்…” என்றவர் அடுக்களைக்கு சென்று சாவித்திரியிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருக்க மீனாவின் மனது சொல்லமுடியா வேதனையில் நிறைந்திருந்தது.

தனது அறைக்கு வந்த பவித்ரா, மித்ரனின் சட்டையைக் கையிலெடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீருடன் அமர்ந்திருந்தாள்.

 

அவளது மனது நிலையில்லாமல் பொங்கும் கடலாய் வேதனையில் தவித்துக் கிடந்தது. உடனே மித்ரனைக் காணத் துடித்த கண்களை, அவனது உடலில் வேறு எந்தப் பிரச்சனையும் இல்லையே என்று மனதை அலட்டிய ஐயத்தைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தது.

 

“மித்து… உங்களுக்கு ஏதோ கண்டம் இருக்கிறதா அத்தை சொன்னப்ப கூட நான் பெருசா நினைக்கலயே… இப்படி எல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா உங்களை எங்கயும் போக விடாம என் கண் இமையை வேலியாக்கி கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்திட்டிருப்பேனே…. ஏதோ தெரியாத தேசத்துல, அறியாத மனுஷங்க உங்களை எப்படிப் பார்த்துக்குவாங்களோ…  அடிபட்டதும் வலியில எப்படில்லாம் துடிச்சிங்களோ… கடவுளே அவருக்கு வந்த ஆபத்தை எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா…”

தனக்குள்ளேயே அரற்றிக் கொண்டு வெகுநேரம் அமர்ந்திருந்தாள் அந்த பேதைப் பெண்.

 

என் இமைப்பீலி கொண்டு

உன் இதயம் வருடுகிறேன்…

உன் நெஞ்சின் காயமெல்லாம்

ஆறிப்போகும் மாயமாய்….

இமை தாண்டும் கண்ணீரெல்லாம்

இதயம் தொடும்… நீயில்லா நினைவே

என்றும் என் நெஞ்சை சுடும்…

நீரில்லா விதையாய் நான்

காய்ந்தே தான் போகின்றேன்…

மழை தொடாத மண்ணும்

உன் பார்வை படாத நானும்

என்றும் உயிர்ப்பதேயில்லை…

 

மனதைப் பிசைந்த நினைவுகளை வார்த்தைகளாக்கி வரிகளாய் எழுத்தில் வடித்தவளின் கண்ணில் கண்ணீர் கோடுகளாய் இறங்கி கன்னம் நனைத்தது.

அடுத்த இரண்டு நாட்களும் இரண்டு யுகமாய் கழிய பவித்ராவின் மனது வேதனையில் சிக்கித் தவித்தாலும் தனிமை பெரும் கொடுமையாய் துரத்த தாங்க முடியாமல் மனதை நிலைப்படுத்திக் கொண்டு வீட்டு வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.

 

மூன்றாவது நாள் சோமசுந்தரம் மித்ரனைக் காண வெளிநாடு கிளம்பினார். ரோஹிணியும் உடன் வருவதாக அடம் பிடிக்க அவளும் வருவதற்கு சேர்த்தே ஏற்பாடுகளை கவனித்தார். அவளை அழைத்துக் கொண்டு பறந்தார். சுந்தரியும் அப்படி அப்படியே வேலைகளை விட்டுவிட்டு வந்திருந்ததால் அவரும் சென்னை கிளம்புவதாக சொல்லி கிளம்பினார்.

 

கால் முழுவதும் கட்டுடன் கட்டிலில் கிடந்த மித்ரனைக் கண்டு பதைபதைத்த சோமசுந்தரம், “என்ன மித்ரா… நீ எப்பவும் கவனமா தானே வண்டி ஓட்டுவே… அப்புறம் எப்படி இப்படி ஆச்சு…” என்றார்.

 

பின்னால் வந்த ஸ்கூல் பஸ் ஒன்றில் பிரேக் பிடிக்காமல் அது சிக்னலில் நின்ற தன் காரில் வந்து மோதியதால் எதிரில் வந்த காருடன் மோதி விபத்து ஏற்பட்டதாய் கூறினான் அவன். மோதிய காரில் இருந்தவன் மிகவும் சீரியஸாய் கோமாவில் இருப்பதாகக் கூறினான்.

 

“அடக் கடவுளே… இப்படியுமா நடக்கும்… நீ தப்பிச்சதே புண்ணியம்னு சொல்லு… நம்ம ஜோசியர் சொன்னது போலவே நடந்திருச்சே…” என்று அங்கலாய்த்தவரிடம், “எது நடக்கணும்னு இருக்கோ அது கண்டிப்பா நடந்தே தீரும் மாமா… அதைத் தடுக்க யாராலும் முடியாது…” என்றான் அவரது தமக்கையின் செல்ல மகன்.

 

“ம்ம்… நம்ம ஜோசியர் சொன்னது அப்படியே பலிக்கும்னு எனக்கும் உன் அம்மாவுக்கும் எப்பவும் நம்பிக்கை இருக்கு… இப்ப நீயும் நம்பறியா…” கேட்டவருக்கு “எல்லாம் ஒரு நிமித்தம் தானே மாமா…” என்றவன் அதற்கு மேல் பேச விரும்பாமல் கண்ணை மூடி கொண்டான்.

 

இடுப்புக்குக் கீழே அசைக்க முடியாமல் கிடந்தவனால் மற்றவரின் உதவியுடன் எழுந்து சிறிதுநேரம் அமர மட்டுமே முடிந்தது. ஒருமாதம் காலை அசைக்கக் கூடாதென்ற  டாக்டர், இந்தியா சென்றதுமே அங்குள்ள சிறந்த டாக்டரைக் காணுமாறு கூறினார்.

நல்லவேளையாய் தலையிலோ வேறு எங்குமோ அடிபடவில்லை. ஒருவாரம் கழித்து மித்ரனை டிஸ்சார்ஜ் செய்யவும் அங்கேயுள்ள மருத்துவர்கள் சம்மதித்தனர். மித்ரனின் நிலையைக் கண்டு தன் வருத்தத்தைக் கண்ணீருடன் கொட்டித் தீர்த்த ரோஹிணி, அடுத்தநாள் ஊரைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று கூற ராகவிடம் அழைத்துச் செல்லுமாறு கூறினான் மித்ரன்.

 

தினமும் அத்தைக்கு அலைபேசிய ரோஹிணி, அவள் அத்தானின் உடல்நிலை பற்றி சொல்லிக் கொண்டே இருந்தாள். மித்ரனைப் பற்றி தான் பேசும்போது அருகில் வந்து கவலையுடன் கேட்டு நிற்கும் பவித்ராவிடம், “மித்ரனை அழைச்சிட்டுப் போகலாம்னு டாக்டர் சொன்னாங்களாம்… நாளைக்கு கிளம்பறாங்களாம்…” என்றார் தகவலாய். அதைக் கேட்டதும் நடுக்கடலில் சுழலியில் சிக்கிக் தவித்தவளுக்கு சிறு துடுப்பு கிடைத்தது போல் மனதில் ஒரு சமாதானம் தோன்றியது.

 

“கடவுளே… என் மித்து நல்லபடியா இங்கே வந்து சேர்ந்தா போதும்… கண்ணுக்குள்ள வச்சு நான் பார்த்துக்குவேன்…” என்று வேண்டிக் கொண்டாள் பவித்ரா.

 

கருவறைக் குழந்தையாய் இதயத்தில்

அசைந்து கொண்டேயிருக்கிறாய்…

உன் துடிப்பறிந்தே உவகை கொள்கிறேன்…

பிரசவிப்பதைவிடக் கொடியதாய்

இருக்கிறது – கண்ணா…

உன்னை எனக்குள் சுமப்பதை

உன்னிடம் சொல்லாமல் தவிப்பது…

 

இமைப்பீலி தொடரும்…