இமை – 5

 

“மருது… நேத்து போன போன அரிசி மூட்டை கணக்கு எடுத்திட்டு வா…” நாற்காலியில் கம்பீரமாய் அமர்ந்திருந்த மீனலோசனி முன்னில் நின்று கொண்டிருந்த சூபர்வைசர் மருதுவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

“ராசி ரைஸ் மில்” என்ற பெயரோடு இருந்த பில் புக்கை அவர் முன்னில் கொண்டு வைத்தான் அந்த மருது.

 

“இன்னைக்கு ஏதாச்சும் லோடு போகுதா… டவுன்ல அந்த புது டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல பேச சொன்னேனே…. என்னாச்சு…” கேட்டுக் கொண்டே கைப்பையில் இருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டார்.

“இன்னைக்கு லோடு இல்லைம்மா… அந்த ஸ்டோர்ல போயி பேசினேன்… ஆல்ரெடி வேற மில்லுல இருந்து வந்து பேசிட்டுப் போனாங்களாம்… அவங்களை விட ரேட் கம்மி பண்ணித் தந்தா எடுத்துக்கலாம்னு சொன்னாங்க…”

 

“ஓ… எந்த மில்லுல இருந்து பேசினாங்கன்னு கேட்டியா…”

 

“அது சொல்ல மறுத்துட்டாங்கம்மா…”

 

“சரி, நீ அப்படியே ஆயில் மில் கணக்கையும் எடுத்திட்டு வா… பணம் வசூல் பண்ண வேண்டிய லிஸ்ட் எடுத்து வச்சியே… ஏதும் வசூல் ஆச்சா…”

 

“ஆமாம்மா… ரெண்டு இடத்துல கொடுத்துட்டாங்க… இன்னும் வர வேண்டியது இருக்கு…”

 

“ம்ம்… அப்புறம் கேட்டுக்கலாம்னு சும்மா இருந்துடாதே… கேக்கலைன்னா மெதுவா கொடுத்துக்கலாம்னு விட்டுடுவாங்க… சரி, நான் கணக்கைப் பார்க்கறேன்… நீ ஸ்டாக் கணக்கு எடுத்திட்டு வா…” என்றவர் அந்த வரவு செலவு புத்தகத்தில் பில் புக்கை வைத்து சரி பார்க்கத் தொடங்க மருது அங்கிருந்து நகர்ந்தான்.

 

மீனா அந்தக் காலத்து பியூசி படித்திருந்தார். நல்ல தொழில் திறமையும் சாமர்த்தியமும் உள்ளவர். ஆளைக் கண்டே சுபாவத்தை எளிதில் கணிக்கும் திறமையுள்ளவர். கணக்கைப் பார்த்து முடித்துவிட்டு ஓய்வாய் அமர்ந்தவரின் மனது சுவரில் புகைப்படத்தில் தொங்கிக் கொண்டிருந்த கணவன் ராசிநாதனின் மீது படிய நினைவுகள் பின்னோக்கி சென்றன.

 

மீனா அன்போடும் ஆசையோடும் வளர்த்த மித்ரன் அவருக்குப் பிறந்த மகனே இல்லை.

 

அடுக்களையில் வீட்டிலுள்ளவர்களைப் பற்றி பேசிக்கொண்டே சாவித்திரிக்கு சமையலில் உதவிக் கொண்டிருந்த பவித்ரா அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுடன் நோக்கினாள்.

“என்னக்கா சொல்லறீங்க… நீங்க சொல்லறது உண்மையா… இவங்க அவர் அம்மா இல்லையா…”

 

“ஆமாம்மா… இந்த வீட்டுல முப்பது வருஷமா வேலை செய்யறேன்… அப்ப என் வூட்டுக்காரரு இங்கே தான் தோட்டவேலை செய்துட்டு இருந்தாரு… கல்யாணம் ஆகி இங்கே வந்ததுல இருந்து இந்தக் குடும்பத்துல எல்லாரையும் நல்லா தெரியும்… அவர் பாம்பு கடிச்சு இறந்தப்ப கூட இவங்க தான் எனக்கும் என் பொண்ணுக்கும் ஆதரவா இருந்து பொண்ணு கல்யாணத்தைக் கூட முடிச்சு வச்சாங்க…” என்றவர் அவர்களைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

 

“தம்பியோட அப்பா பேரு ராசிநாதன், அம்மா பாக்யலட்சுமி… அவங்களுக்குப் பிறந்த ஒத்தை வாரிசு தான் மித்ரன் தம்பி… பிரசவமான சில மாசத்துல பாக்யாம்மா மூளைக்காய்ச்சல் வந்து படுக்கையில் விழுந்தவங்க தான்… அய்யா எத்தனையோ டாக்டரைக் கூட்டி வந்து காட்டியும் பிரயோசனமில்ல… தம்பிக்கு ஆறுமாசம் உள்ளப்ப கண்ணை மூடிட்டாங்க…”

 

அவர் சோகத்துடன் நிறுத்தவும், பவித்ராவின் மனதும் கனத்துக் கிடந்தது. பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற தாயின் மனமும், தாயில்லாத குழந்தையின் வளர்ப்பும் அவள் கண்ணில் நிழலாடியது.

 

“அம்மா இறந்தது தெரியாம விளையாடிட்டு இருந்த அக்கா குழந்தையை தன் நெஞ்சோட அணைச்சுகிட்டு மீனாம்மா கதறினது இப்பவும் என் காதுக்குள்ளயே இருக்கு…”

 

“ஓ… அவரோட சித்தியா இவங்க…”

 

“ம்ம்… மீனாம்மாவுக்கு அக்கா, அண்ணன் மேல அளவு கடந்த பாசம்… அவங்க பெத்தவங்களுக்கு ரொம்ப வருஷம் கழிச்சுதான் மீனாம்மா பிறந்தாங்க… அக்காவும், அண்ணனும்தான் தங்கச்சியை மகளைப் போல பார்த்துக்குவாங்க… அப்படிப்பட்ட அக்கா இறந்து குழந்தை, அம்மா இல்லாம நிக்கவும் இவங்களால தாங்கிக்க முடியல… தாய்க்கு தாயா என் பையனா நான் வளர்த்துக்கறேன்னு கதறினாங்க…”

 

அவர் சொல்ல சொல்ல மீனலோசனியின் மீது அபிப்ராயம்  கூடிக் கொண்டே சென்றது பவித்ராவுக்கு.

 

“ஐயா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னாங்க… நான் குழந்தையே பெத்துக்க மாட்டேன்… என் அக்கா பையன் அம்மா இல்லாம வளரக் கூடாதுன்னு ஒரே பிடியா நின்னு அவங்களை சம்மதிக்க வச்சு தம்பிக்கு அம்மாவா இந்த வீட்டுக்கு வந்தாங்க…”

 

“ஓ… அத்தையை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு…” மனம் நிறைந்து பாராட்டினாள்.

 

“ஆமாம்மா… இந்தக் காலத்துல இப்படி ஒருத்தரைப் பார்க்க முடியுமா…. அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவங்க மித்திரன் தம்பி மேல வச்ச அன்பு மாறவே இல்ல… அதே போல அண்ணன் பொண்ணு ரோஹினி மேலயும் ரொம்பப் பிரியம்… அவங்க என்ன சொன்னாலும் மறுத்துப் பேச மாட்டாங்க… அண்ணன் பொண்ணு மேலயும் அக்கா பையன் மேலயும் உசுரையே வச்சிருக்காங்க… மித்ரன் தம்பிக்கும் அப்படிதான்… இந்த உலகத்துல அம்மா சொல்லுறதுக்கு மாறுதலா எதுவுமே கிடையாது… அவ்ளோ மரியாதை, அன்பு…”

 

கணவனைப் பற்றி சொல்லவும் அவள் முகத்தில் புன்முறுவல் வந்து ஒட்டிக் கொண்டது. “அவங்களோட மிகப்பெரிய ஆசை மித்ரன் தம்பிக்கு…” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் வாசலில், “சாவித்திரி…” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்கவும், சொல்ல வந்ததை நிறுத்தி “வந்திடறேன் மா…” என்று எழுந்து ஓடினாள்.

 

கணவனின் நினைவில் ஆழ்ந்திருந்தார் மீனலோசனி.

 

ராசினாதனிடம் சொன்னது போலவே மித்ரனைத் தன் மகனாய்த் தான் வளர்த்தினார். ஒருபோதும் சித்தியாய் அவனிடம் நடந்து கொண்டதில்லை. மித்ரனும் அவரை அன்னையாய் அன்றி வேறு உணர்ந்ததில்லை.

 

யார் எது சொன்னாலும் யோசித்து செய்பவனுக்கு மீனா சொன்னால் மறுபேச்சே கிடையாது. அவனது நன்மைக்கு மட்டுமே அவர் எதையும் செய்வார் என்ற நம்பிக்கை சிறுவயதில் இருந்தே அவனுள் ஆழப் பதிந்திருந்தது.

 

அழகாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கை சட்டென்று ஒருநாள் நிலைமாறிப் போனது. மித்ரன் கல்லூரி முதல்வருடம் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ராசிநாதன், சம்சார வாழ்க்கை பிடிக்காததால் சன்யாசியாய் போகப் போவதாகக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு காணாமல் போய்விட்டார்.

 

அவர் முன்னமே வீட்டை மீனலோசனியின் பேரிலும் சொத்து முழுவதையும் மகன் பேரிலும் எழுதி வைத்திருந்தார். செல்வதற்கு முன்பு சில நாட்களாய் அவர் ஏதோ குழப்பத்தில் இருப்பதை மீனா உணர்ந்திருந்தார். என்னவென்று கேட்டவரிடம் அறியாமல் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகக் கூறி அழுதவர், ஒரு உயிர் போக தான் காரணமாகி விட்டதாகக் கூறி குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தார்.

 

அவர் கவனம் தொழிலிலும் குறையத் தொடங்கவே அவரை ஓய்வெடுக்க விட்டு மீனாவே அனைத்தையும் கவனிக்கத் தொடங்கினார். சில நாட்களிலேயே அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு செல்லவும் ஒற்றை ஆளாக தவித்துப் போன மீனாவுக்கு தோள் கொடுத்து தாங்கிக் கொண்டவர் அண்ணன் சோமசுந்தரம்.

 

அண்ணனின் வழிகாட்டலுடன் தொழிலில் உள்ள நெளிவு சுளிவுகளை நன்றாகவே கவனிக்கப் பழகியிருந்தார். அவருக்கு சென்னையில் கார்மெண்ட்ஸ் இருந்ததால் அவரது குடும்பம் அங்கே இருக்க இங்கே அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தார். யோசனையில் அமர்ந்திருந்த மீனலோசனியை, “அம்மா…” என்ற மருதுவின் பதட்டமான குரல் கலைத்தது.

“என்ன மருது…”

 

“நம்ம சுகந்தி மெசின்ல கை வச்சிருச்சுமா… சதை பிஞ்சு ரத்தம் ஒழுகுது…”

 

அவன் சொல்லவும், “பார்த்து செய்ய வேண்டியது தானே… வீட்டுல பையன் என்ன பண்ணுறான்னு நினைச்சுட்டே வேலை செய்தா இப்படி தான் இருக்கும்…” வேகமாய் பணத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தவர், “சீக்கிரம் ஆசுபத்திரிக்கு கூட்டிட்டுப் போ…” சொல்லிக் கொண்டே அந்தப் பெண்ணைக் காண வந்தார்.

 

“என்ன சுகந்தி… இப்படியா மெசின்ல கைய விட்டுக்குவ… சீக்கிரம் போயி டாக்டரைப் பாரு… பாண்டி… நீ பார்த்துக்க…” சொல்லிவிட்டு அவளை மருதுவுடன் அனுப்பிவிட்டு சுவர்கடிகாரத்தைப் பார்க்க அது ஒரு மணி என்றது. அடுத்த பத்து நிமிடத்திலேயே டிரைவர் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்துவிட தனது அறைக்கு சென்று அமர்ந்தார்.

அலைபேசியில் மித்ரனுக்கு அழைக்க, அவன் ஏர்போர்ட்டில் இருப்பதாய் கூறினான்.

 

“மித்ரா… எந்த குழப்பமும் இல்லாம நல்லபடியா போயிட்டு வாப்பா… அம்மா, எது செய்தாலும் உன் நல்லதுக்கு தான் செய்வேன்… சரியா…”

 

“என்னம்மா நீங்க… இதெல்லாம் நீங்க சொல்லணுமா… எனக்குத் தெரியாதா…” என்றான் அவன்.

 

“சரி, உடம்பைப் பார்த்துக்க… நீ சீக்கிரமே படிப்பை முடிச்சு வந்து நம்ம தொழில்ல பொறுப்பெடுத்துகிட்டா தான் அம்மாவுக்கு நிம்மதியா இருக்க முடியும்… என்னோட ஆசையெல்லாம் நீதான் நிறைவேத்தி வைக்கணும்…”

 

“சரிம்மா… நீங்களும் உடம்பைப் பார்த்துக்கங்க… நீங்க என்ன நினைக்கறீங்களோ அது மட்டும் தான் நான் பண்ணுவேன்னு தெரியாதா… நிறைவேத்தனும்னு பெரிய வார்த்தைலாம் எதுக்கு… சரிம்மா, வச்சிடறேன்…”

அவன் போனை வைக்கவும், மனதில் இருந்த அலைப்புறுதல் நீங்கி சாப்பிடத் தொடங்கினார்.

 

சாவித்திரியின் பேரக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் வீட்டுக்கு சென்றிருக்க பவித்ராதான் மீதி சமையலை முடித்து மீனாவுக்கு கொடுத்து விட்டிருந்தாள்.

 

மனதில் மீனாவைப் பற்றியும் கணவனைப் பற்றியும் கேட்ட விஷயங்கள் நெகிழ்வைக் கொடுக்க வேலை முடிந்து அறைக்கு சென்றாள்.

 

மனம் முழுதும் கணவனே நிறைந்திருக்க, ஜன்னலில் தெரிந்த வானத்தை சிறிது நேரம் வெறித்து நின்றாள்.

 

“இப்போது பிளைட் கிளம்பி இருக்குமோ… அவர் ஆகாசத்தில் பறந்து கொண்டிருப்பாரோ… என்னைப் போல அவரும் என்னை நினைத்துக் கொள்வாரா…” யோசித்தவளுக்கு ஒரு நாணப் புன்னகை மலர்ந்தது.

கட்டிலைக் கண்டதும் மித்ரன் படுத்திருந்ததும், தான் அவனது தலையைப் பிடித்து விட்டதும் நினைவில் வர அவன் படுத்த இடத்தில் படுத்துக் கொண்டாள். அவனது வாசனையும், முழுமையாய் மலராத இதழ் புன்னகையும் அந்த அறை முழுதும் நிறைந்திருப்பதை உணர்ந்தாள்.

 

அவனது அருகாமைக்காய் ஏங்கும் மனதை அடக்கும் வழி அறியாமல் தவித்தாள். அவனை உடனே காணவேண்டும், நெஞ்சோடு ஆரத் தழுவிக் கொள்ளவேண்டுமென்று தோன்றிய ஆசை அவளுக்கே விசித்திரமாய் தோன்றியது.

 

அவனைப் பற்றியே நினைத்து அப்படியே உறங்கிப் போனவளின் கனவிலும் அவன் முகமே தெரிய அவளுக்கு மிக நெருக்கமாய் நின்று கொண்டிருந்த அவனது மூச்சுக்காற்று பட்டு அனலாய் தேகமெங்கும் பரவும் உணர்வுகளின் தாக்கத்தில் திடுக்கிட்டுக் கண் விழித்தவள் நடந்தது அனைத்தும் கனவென்று தெரியவும் வெகுவாய் வெட்கப்பட்டு தன்னைத் தானே நாணத்துடன் குட்டிக் கொண்டாள்.

எழுந்து அமர்ந்தவள் தன் பாகிலுள்ள டைரியை எடுத்து மனதிலுள்ள வார்த்தைகளை கோர்வையாக்கி அழகிய கவிதை சரமாய் கோர்க்கத் தொடங்கினாள்.

 

அல்லும் பகலும் அலையென

ஆர்ப்பரிக்கும் உன் நினைவுகளை

இமைச்சிப்பிக்குள் அடைத்தாலும்

மீண்டும் வந்து பிறக்கிறது…

கனவென்னும் முத்தாக…

எங்கோ இருக்கும் உனை நினைத்தே

வட்டமிடும் எண்ணங்கள்

சத்தமிட்டே கொல்லும் வல்லூறாய்…

இமையில்லா விழியும்

நீயில்லா நானும் – கலங்கித்

தான் போவோம் கண்ணா…

சித்தம் தெளிய நீ வேண்டும் மன்னா…

இமை தொடரும்…