இமை – 22

டுக்களையில் மும்முரமாய் சமையல் செய்து கொண்டிருந்தாள் பவித்ரா. மித்ரனை நாளையிலிருந்து மில்லுக்குப் போனால் போதும் என்று மீனா சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். ஹாலில் அமர்ந்திருந்த மித்ரன் டீவியில் ஒரு கண்ணும், அடுக்களையில் ஒரு கண்ணுமாய் இருந்தான்.

“ச்ச்சே… இந்த சாவித்திரிக்காவுக்கு இப்பதான் ஊருக்குப் போகணுமா… இப்போ நான்தான் சமைச்சாகனும்னு ஆயிருச்சே…  ஒருவேளை, எல்லாரும் ஏதாவது பிளான் பண்ணறாங்களோ…” யோசித்தாள்.

“நான் கோபமா, பேசாம இருக்கேன்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம, இந்த மித்து வேற பவி… காரக் குழம்பு வச்சிடறியான்னு கேக்கறான்… என் கோபம் எல்லாம் உனக்கு அவ்ளோ லேசாப் போயிருச்சா… மவனே… இன்னைக்கு இந்த காரக் குழம்பை சாப்பிட்டு நீ உன் நாக்கைக் கழட்டி வைக்க வேண்டியது தான்…” மனதுக்குள் அவனை செல்லம் கொஞ்சிக் கொண்டே மிளகாய்ப் பொடியை வஞ்சமில்லாமல் கொட்டினாள்.

வெகுநாளாய் ஊரில் உடம்புக்கு முடியாமல் இருந்த சித்தியைப் பார்க்கப் போகவேண்டும் என்று சாவித்திரி சொல்லிக் கொண்டிருந்தார். இவர்களுக்குத் தனிமை கொடுக்க நினைத்த சுந்தரி ஊருக்கு சென்று ஒருவாரம் இருந்து சித்தியை கவனித்துவிட்டு வா… என்று அவரையும் அனுப்பிவிட்டார். அதனால் பவித்ராவே சமைக்க வேண்டியதாய் போயிற்று. மனதுக்குள் மித்ரனை கருவிக் கொண்டே சமையலை செய்து கொண்டிருந்தவள் அவன்மீது கோபத்தைக் காட்ட இதை ஒரு சந்தர்பமாய் நினைத்தாள்.

“பவி…” ஹாலில் இருந்து மித்ரனின் குரல் கேட்கவும், எரிச்சலுடன் அவன் முன்னில் சென்று நின்றவள், “எதுக்கு இப்ப பவி… பவின்னு என்னை ஏலம் போடறீங்க…” என்று சிடுசிடுத்தாள்.

“அதுவந்து…” தயங்கியவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “கொஞ்சம் தண்ணி குடு…” என்றான். அது தினமும் அவன் ஜூஸ் குடிக்கும் சமயம் என்று நினைவு வர ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தாள்.

அவளைப் புன்னகையுடன் நோக்கியவன், “பவி… என் மேல உள்ள கோபம் போயிடுச்சா… அத்தானுக்கு ஜூஸ் கொடுத்து உன் போராட்டத்தை முடிச்சுக்கப் போறியா…” என்று கேட்க முறைப்புடன் உதட்டைச் சுழித்துவிட்டுச் செல்ல அவனுக்கு சிரிப்பு வந்தது.

நீ சுளித்தது என்னவோ

உன் இதழைத் தானடி…

சுளுக்கிக் கொண்டது என்னவோ

என் இதயம் தானடி…

“செய்யறதை எல்லாம் செய்துட்டு அத்தானாம் அத்தான்… பிஞ்சு போன பொத்தான்… ஆல்ரெடி ஒருத்தி அத்தான்னு பின்னாடியே சுத்தி அரைக்கிறுக்கு ஆனது பத்தாம என்னையும் கிறுக்கா அலைய வைக்கறதுக்கா… இரு… காரக்குழம்பை ஊத்தி உன்னை இன்னிக்கு கதற விடலேன்னா நான் பவித்ரா இல்லை…” வேகமாய் சமையலை முடித்தவள், எல்லாவற்றையும் மேசையில் கொண்டு வைத்தாள். அதைக் கண்டவன் வேண்டுமென்றே மாடிக்கு சென்றுவிட்டான்.

“ஓஹோ… நான் இனி சாப்பிட அழைக்கணுமோ… பசிச்சா தானே வந்து சாப்பிடட்டும்…” யோசித்துக் கொண்டே அமர்ந்தவளை நோக்கி காரக் குழம்பு கேலியாய் சிரித்தது.

“ஆஹா… அவனுக்காக நாம ஸ்பெஷலா செய்த காரக் குழம்பை சாப்பிடாம எஸ்கேப் ஆக விடக் கூடாதே…” என நினைத்தவள், “சரி போயி அழைச்சிட வேண்டியதுதான்…” என நினைத்துக் கொண்டே மாடிக்கு வந்தாள். அறைக்கதவு திறந்திருக்க, லாப்டாப்பை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் மித்ரன். அறைவாசலில் நின்று தொண்டையைக் கனைக்கவும் நிமிர்ந்து பார்த்தான்.

“சாப்பிட வரலாம்…” எங்கோ பார்த்து சொல்லிவிட்டு கீழே சென்றவள் அவனுக்காய் தட்டை வைத்துக் காத்திருக்க, அவன் மெல்ல இறங்கி வந்தான்.

“நீயும் உக்காரு பவி…” அவன் சொல்லவும், “ஒண்ணும் வேண்டாம்… முதல்ல நீங்க சாப்பிட்டுப் போங்க…” அதிகாரமாய் சொன்னவளின் குரல் அவளுக்கே அதிசயமாய் இருந்தது.

“நானா இப்படியெல்லாம் அதட்டுகிறேன்…” யோசித்துக் கொண்டே சாதம் வைத்து குழம்பை ஊற்றியவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

அவள் கையைப் பற்றியவன், “பவி… என் பக்கம் உள்ள நியாயத்தைக் கேட்கவே மாட்டியா… ப்ளீஸ்… எப்பவும் போல சிரிச்ச முகமா இரு… இப்படி யாரோ போல இருக்காதே… பார்க்கவே கஷ்டமா இருக்கு…” என்றான்.

அவன் கையை விலக்கியவள், “ஓஹோ… இத்தனை நாளும் என்னை யாரோவா தானே தோணுச்சு… இப்ப மட்டும் என்ன, பேசாம சாப்பிடுங்க…” சிடுசிடுத்தவள், காரக் குழம்பை அவன் தட்டில் ஊற்றிவிட்டு, அடிக் கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டே எங்கோ பார்ப்பது போல நின்றாள்.

அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே குழம்பை சாதத்தில் பிசைந்து வாயில் வைத்தவனின் கண்கள் காரம் தாங்காமல் சிவந்து கண்ணில் நீர் நிறைய உணவை முழுங்க முடியாமல் தவித்தான்.

“அடிப்பாவி… அப்பாவி போல முகத்தை வச்சுட்டு இந்த வேலை பண்ணி வச்சிருக்கியே…” என நினைத்தாலும் அவள் ஆவலாய் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் கஷ்டப்பட்டு தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டான்.

“காரக்குழம்பு கேட்டிங்களே… நல்லாருக்கா… நல்லா சாப்பிடுங்க…” என்றவள் மேலும் குழம்பை ஊற்றினாள்.

வாயைத் திறக்க முடியாமல் நாக்கும், உதடும் உலைக்களத்தில் வைத்தது போல எரிய, தலைக்கேறிய காரம் தாங்காமல் கண்கள் மடை திறந்தது போல் கண்ணீரைப் பொழிய, நிறுத்திவிட்டு எழுந்து போய்விடலாமா என ஒரு நொடி நினைத்தவன் உடனே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

“இல்லை… நான் செய்த தவறுக்கு அவள் கொடுத்த தண்டனை இது போலும்… தப்பித்து ஓடாமல் அனுபவிக்கறேன்…” எனத் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு வேகமாய் சாப்பிடத் தொடங்கினான்.

முதலில் அவனது நிலை கண்டு சந்தோஷித்த பவித்ரா, அவன் சாப்பிடாமல் ஒதுக்கி விட்டு தன்னிடம் கோபப்படுவான்… என நினைத்தாள். ஆனால் அவனோ கண்ணும், முகமும் சிவந்து கண்ணிலும் மூக்கிலும் நீர் வடிய சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தில் வாரி வாரி வாய்க்குள் நிறைத்துக் கொண்டிருந்தான். அதைக் காணவும் அவளுக்கு மெல்ல பதறத் தொடங்கியது.

காரம் தலைக்கேற புரை ஏறியவன் இருமத் தொடங்க, அவன் தலையில் தட்டி, வேகமாய் தண்ணீரை எடுத்து நீட்ட, அவன் வாங்காமல் மறுத்துவிட்டான்.

“வே… வேண்டாம் பவி… நான் பண்ணின தப்புக்கு இ..ந்த தண்டனை தேவைதான்…” பேசவே திணறியவன், மீண்டும் சாப்பிடப் போக அவன் கையைப் பிடித்து தடுத்தாள்.

அவனது கலங்கிய முகம் கண்டு அவளது இதயமே கலங்கி விட்டது.

“ப்ளீஸ்… தண்ணி குடிங்க…” என்று கூற தலையாட்டி மறுத்தவனை கண்ணில் நீருடன் நோக்கியவள், அடுத்த நொடி அவனை நெருங்கி அவன் இதழில் தன் இதழை அழுத்தமாய் பதித்திருந்தாள்.

ஆனந்த அதிர்ச்சியில் சுகமாய் நனையத் தொடங்கியவன் காரத்தில் புண்ணாகிய தன் நாவுக்கு பூவுக்குள் தேனை மருந்தாகத் தேடினான். சிறிதுநேரம் தன்னையே தொலைத்து நின்றவள் மெல்ல அவனை விலகினாள்.

அவனது முகத்தை ஏறிட்டவளின் கண்களில் வருத்தமும், வேதனையும் கண்ணீர் குளமாய் நிறைந்திருக்க, மௌனமாய் அங்கிருந்து தனது அறைக்கு ஓடிவிட்டாள். அவள் செயலில் ஸ்தம்பித்து நின்றவனுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. அவள் தந்த முத்தத்தில் சுகத்தை விட தன் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாத அவள் வலியையே அதிகமாய் உணர்ந்தான்.

மருத்துவமுத்த மொன்றை

மங்கையவள் தந்தாளோ…

மயங்கியே நிற்கின்றான்

மகுடிக்கு பாம்பாக….

 

அப்படியே சிறிதுநேரம் அமர்ந்திருந்தவன் கை அலம்பி வந்து பவித்ராவின் அறைக்கதவைத் தட்டினான். உள்ளே அவள் விசும்பும் ஒலி கேட்டது.

“பவி… கதவைத் திறடா… இப்ப எதுக்கு அழுகறே… ப்ளீஸ்… எதுவா இருந்தாலும் பேசிடலாம்… உனக்கு என் மேல் உள்ள கோபம் போக என்ன தண்டனை கொடுக்கணும்னு தோணுதோ கொடுத்துக்க… நான் ஏத்துக்கறேன்… அழுகையை நிறுத்திட்டு கதவைத் திற…” என்றான் வேண்டுதலாக. உள்ளே அவளது அழுகை இன்னும் அதிகமாகவே செய்தது.

அவனை தண்டிப்பதாய் நினைத்து தான் செய்த செய்கைகளும் தன்னையே இம்சிப்பதை உணர்ந்து கேவினாள். அவன் அன்பால் ஏமாற்றியதைக் கூடத் தாங்கி இருப்பாள்… ஆனால் அவனிடம் தான் அன்பு வைத்து சுற்றி நடக்கும் எதுவுமே தனக்கு தெரியாமல் ஏமாந்து போனோமே… என்பதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளது அழுகையை உணர்ந்த மித்ரனுக்கு சமாதானப் படுத்தும் வழியும் புரியவில்லை.

“பவி… நான் இவ்ளோ சொல்லியும் உன் கோபம் போகலேன்னா, உனக்கு என்னை மன்னிக்க விருப்பம் இல்லேன்னா, இனி தொந்தரவு பண்ணலை…  உன் கண் முன்னாடியே வராம தொலைஞ்சு போயிடறேன்…”

அவன் இறுதியில் சொன்ன வார்த்தை இதயத்தைத் துளைக்க வேகமாய் கதவைத் திறந்தவள் காளியாய் அவனை முறைத்தாள்.

“என்னது… தொலைஞ்சு போறீங்களா… நீங்க செய்த பாவம் பத்தாதுன்னு என்னையும் பாவம் செய்ய வைக்கறீங்களா… இத்தனை வருஷம் அத்தான், அத்தான்னு உங்க பின்னாடியே சுத்திட்டு, உலகத்தில் யாரும் செய்யாத விஷயத்தை எல்லாம் அவ செய்தது எதுக்காக… உங்க மேல உள்ள பிரியத்துனால தானே… என் புருஷனை இன்னொருத்தி மனசுல தாங்கிட்டு இருக்கான்னு தெரிஞ்சும் நான் எங்கேயும் தொலைஞ்சு போகாம இங்கே தானே இருக்கேன்… தொலையறாங்களாம்…” என்றாள் கோபத்தில் கண்கள் மின்ன.

அவள் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யத்தில் நிமிர்ந்தவன், “பவி… நீ என்ன சொல்லறே… அப்படினா உனக்கு என் மேல கோபம் இல்லையா… ரோஹிணிக்காக தான் வருத்தப் படறியா…” என்றான் அதிசயத்துடன்.

“உங்கமேல கோபம் இல்லேன்னு யார் சொன்னா… இந்த உலகத்துல யார் இந்த தப்பை பண்ணிணாலும் என்னால மன்னிக்க முடியும்… ஆனா, என் மித்து எப்படி இதை செய்யத் துணியலாம்… ஒரு பொண்ணுக்காக இன்னொரு பொண்ணு வாழ்க்கையை அழிக்கறது தப்புன்னு அவங்களுக்கு புரிய வச்சிருக்கணும் இல்லியா…” கேட்கும்போதே அவளது கண்கள் கலங்கத் தொடங்கின.

“பவி… நான் பண்ணினது தப்புதான்… அதுக்கு நான் எந்த பிராயச்சித்தம் பண்ணவும் தயாரா இருக்கேன்… என்னை வெறுக்க மட்டும் செய்திடாதே…”

ஒருநிமிடம் அவனையே ஆழ்ந்து பார்த்தாள்.

“என்னது, உங்களை வெறுக்கறதா… அதுக்கு பதிலா நான் செத்தே போயிடுவேனே…” அவள் குரல் கரகரத்தது.

கதவில் சாய்ந்து கொண்டு கலங்கிய ஓவியமாய் நின்றவளைக் குழப்பமாய் பார்த்தவன், “பவி… அப்படின்னா என் நேசத்தை சந்தேகப் படறியா…” என்றான் தவிப்புடன்.

அவனது கேள்வியில் நிமிர்ந்தவள் அவனையே பார்த்தாள். அவன் விழிகளில் வழிந்த வேதனையும், பரிவும் தாண்டி அதில் நிறைந்திருந்த காதலின் ஒளியோடு அவள் கண்களும் கலக்க, கண்ணை மூடி அந்த உணர்வை இதயத்தில் நிரப்பிக் கொண்டாள்.

“உங்க நேசத்தை சந்தேகிச்சா அது என் நேசத்தையே சந்தேகப் படுறது போல…” சொன்னவள் கட்டிலில் அமர்ந்து குலுங்கி அழத் தொடங்கினாள்.

பரிதவித்துப் போனான் மித்ரன். அவனுக்கு அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னை வெறுக்கவும் முடியாமல், கோபப்படவும் முடியாமல் தன்னைத் தானே வதைத்துக் கொண்டு கதறும் அவளைத் தேற்றும் வழியறியாமல் திகைத்து நின்றான்.

வாயிலிருந்து வெளிப்படுவது

என்னவோ வார்த்தைகள் தான்

ஆனாலும் சிக்கிக் கொள்கிறது

சொல் அம்பு துளைத்த இதயம்…

அவள் அருகில் சென்றவன், மெதுவாய் தலையைக் கோதிக் கொடுத்தான். அவனது கைகளை அவள் விலக்கவில்லை. அந்தத் தொடுகையில் ஒருவித ஆறுதலை உணர்ந்தாள்.

“பவி… எதுக்குடி… இப்படி அழுகையால என்னைக் கொல்லறே… உன் அழுகைக்கு நான்தான் காரணம்னு தோணும்போது என்னை அப்படியே வெட்டிப் போட்டுடலாம் போல ஆத்திரமா வருது… நான் என்ன பண்ணனும்னு சொல்லு… பண்ணறேன்…”

“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க… உங்களை என்னால வெறுக்க முடியாது… உங்கமேல என்னால கோபப்படவும் முடியலை… ஆனா நீங்க இப்படி செய்துட்டிங்கன்னு யோசிக்கும்போது என்னால தாங்கிக்க முடியலை… மனசு முழுசும் காதலை வச்சுக்கிட்டு, உங்க அன்பான ஒரு பார்வைக்காக தவமா காத்திருந்தேன்… முதல்ல விலகிப் போனாலும் மெதுவா என்னை நெருங்கி வந்தீங்க… உங்களோட நேசம் எனக்குக் கிடைச்சதும் இந்த உலகத்துல மிகப் பெரிய வரமே எனக்குக் கிடைச்சிட்டதா சந்தோஷப் பட்டேன்… ஆனா, முதல்ல நீங்க என்னை யாரோ ஒருத்தியா நினைச்சு, இவ ஏன் இப்படிப் பார்க்கறான்னு கேவலமா தானே பார்த்திருப்பீங்க… அதை யோசிச்சா என் உடம்பெல்லாம் கம்பளிப் பூச்சி அரிச்ச போல கஷ்டமா இருக்கு…” அவளது உணர்வுகள் புரிய மனம் கனத்துப் போனது.

“பவி… அதுவந்து, அப்போ இருந்த சூழ்நிலைல…” அவன் தடுமாறவும்,

“வேண்டாங்க… எதுவும் சொல்ல வேண்டாம்… இப்போ உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கு… சேர்ந்து வாழ ஆசைப்படறீங்க… ஒருவேளை, பிடிக்காமப் போயிருந்தா என்னாயிருக்கும்… இப்போ ரோஹிணியோட நிலமை எனக்கு வந்திருக்கும்… அவ மனசுல எத்தனை ஏமாற்றம், வலி இருக்கும்… அவளோட வாழ்க்கையை நான் வாழற போல மனசு உறுத்துது… அதை முதல்ல சரி பண்ணனும்… அப்பதான் நான் உங்களோட நிம்மதியா இருக்க முடியும்…”

“பவி… உன் மனசு எனக்குப் புரியுது… கண்டிப்பா ரோஹிணிக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க வேண்டியது நம்ம பொறுப்பு…”

“ம்ம்… என் மனசுல இந்த வலி ரணமா படிஞ்சிருக்கு… அது ஆறணும்னா கொஞ்சம் டைம் எடுக்கும்… அதனால…” அவள் இழுக்கவும், “அதனால என்ன பவி… எதுவா இருந்தாலும் என்னை விட்டுப் போயிடுவேன்னு மட்டும் சொல்லிடாதே…” என்றான் கெஞ்சலாக.

“உங்களை விட்டு நான் எப்படிப் போவேன்… போனா அது என் ஆவியாதான் இருக்கும்… போகவெல்லாம் மாட்டேன்… போறதுக்கு எனக்கு வேற போக்கிடமும் இல்லை… என் மனசுல இந்த ரணம் காயுற வரைக்கும் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க…” என்றவளின் மனம் மழையை இறக்கி வைத்த வானமாய் தெளிந்திருந்தது.

“பவி… உன் மனசு முழுமையா தெளிஞ்சு என்னை ஏத்துக்க எவ்ளோ நாள் ஆனாலும் காத்திருக்க நான் தயாரா இருக்கேன்… ஆனா நீ என் பக்கத்தில, எப்பவும் போல நம்ம ரூம்லயே இருக்கலாமே… நான் உன்னை எந்தத் தொந்தரவும் பண்ண மாட்டேன்…” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவனை கட்டிக் கொள்ள ஆசை வந்தாலும் அங்கங்கே இன்னும் மிச்சமிருந்த  ரணத்தின் சுவடுகள் அதற்குத் தடையிட்டது. மெல்லப் புன்னகைத்தவளின் கன்னத்தில் விழுந்த சிறு குழியில் சந்தோஷமாய் விழுந்தவன் முதன்முதலாய் நிம்மதியாய் தன் மனைவியின் நாணத்தை ரசித்தான்.

நான் உன்னைக் காதலித்த

கணங்களை விட உன்னால்

காதலிக்கப் பட்ட கணங்களிலேயே

அதிகம் என்னைத் தொலைத்தேனடி…

உள்ளத்தில் உரிமையாய் வந்தவளே…

நீ கொள்ளும் ஊடல் கூட எனக்கு

பெரும் உவகை தானடி…

உன்னிடம் தோற்றுப் போவதும்

சுகமே எனக்கு – என் தோல்வி

உன்னைப் பாதிக்காதெனில்…

உனக்காகவே வருகிறேன்…

எனக்காகக் காத்திரு கண்மணி….

இமைப்பீலி வரும்…