இமை – 20

“பவி…” வெறித்த பார்வையுடன் எங்கோ பார்த்துக் கொண்டு கண்ணில் நீர் வழிய அதிர்ச்சியில் நின்றவளை வேகமாய் நெருங்கினான் மித்ரன்.

 

“என்ன நடந்துச்சுன்னு முழுமையா தெரிஞ்சுக்காம எந்த முடிவுக்கும் வந்திடாதே…” சொன்னவன் வேகமாய் அவள் கையைப் பிடிக்க உதறியவள் உறுத்து நோக்கினாள். அவளது பார்வையில், “உன்னால் எப்படி இப்படியொரு துரோகத்தை எனக்குப் பண்ண முடிந்தது…” என்ற கேள்வி தொங்கிக் கொண்டிருந்தது.

அதன் கூர்மை அவனது இதயத்தைத் துளைத்து குருதி பொடியச் செய்தது.

 

“அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து, ஐயர் மந்திரம் சொல்லி, எல்லாரும் அட்சதை தூவி வாழ்த்த, என் கழுத்தில் நீங்க தாலி கட்டியது போலிக் கல்யாணமா… உங்க நாடகத்துக்கு நான்தான் பலியாடா… எத்தனை ஆசையோட இந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வச்சேன்… அது எல்லாம் வெறும் பகல் கனவா…” அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் பாம்பின் சீறலாய் ஆழமாய் வெளிப்பட்டது.

 

“பவி… அவசரப் படாதே… நாங்க பண்ணினது தப்புதான்… அதைத் திருத்திக்க தான் முயற்சி பண்ணறோம்… அரைகுறையா கேட்டுட்டு எந்த முடிவுக்கும் வந்திடாதே… கொஞ்சம் பொறுமையா கேளு…” என்றான் மித்ரன்.

 

“எப்படிங்க உங்களுக்கு இப்படிப் பண்ண மனசு வந்துச்சு… இந்த வாழ்கையை எனக்கு பிச்சையா தரப் போறிங்களா…”

கேட்டவளின் கண்களும் உதடும் துடிக்க, கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

 

“பவி… அழாதம்மா… இந்த அம்மா சொல்றதை நீ நம்புவ தானே…” சுந்தரி கேட்கவும் நிமிர்ந்தாள்.

 

“எப்படி… எப்படி நம்புவேன்… என்னை சுற்றி உள்ள யாரை நான் நம்புவேன்… யாரோட நேசம் உண்மைன்னு இதுவரை என்னால புரிஞ்சுக்க முடியலையே… எல்லாரும் அவங்களோட லாபத்துக்காக தானே யோசிக்கறாங்க… நான் ரத்தமும் சதையும் உள்ள ஒரு பொண்ணுன்னு யாருக்கும் புரியலையே…” துக்கம் தொண்டையை அடைக்க வலியோடு சொன்னவளின் அருகில் வேகமாய் சென்றவர்,

 

“பவித்ரா… நான் சொல்லுறதைக் கேளும்மா… இந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சதும் நானும் ரொம்ப ஆத்திரப் பட்டேன்… ஆனா தனக்குத் தெரியாம நடந்திட்ட தப்பை சரி பண்ணிக்க உன் புருஷன் தயாரா இருக்கான்… உன்னை மனசார நேசிக்கிறான்… உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லி மன்னிப்புக் கேட்டு உன்னோட சந்தோஷமா குடும்பம் நடத்தணும்னு ஆசைப்படறான்…”

 

உறவென்று யாரும் இல்லாவிடினும்

உயிர்ப்போடே தானிருந்தேன் – உள்ளத்தில்

உன் முகம் தந்த வெளிச்சத்தில்

உன்மத்தம் கொண்டிருந்தேன்…

தூக்கி எறிய நேசமொன்றும் வேஷமல்ல…

முகத்திரைகள் கிழியும் வலியில்

முகமுமே மாறும் போது அகத்தினை

எரிக்கிறது துரோகம் என்னும் பெருந்தீ…

 

“ஓ… ரொம்ப சந்தோஷம் மா… ஊரறிய தாலி கட்டி கல்யாணம் பண்ணி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த பொண்டாட்டியோட போனாப் போகுதுன்னு சந்தோஷமா குடும்பம் நடத்த முடிவு பண்ணிட்டாரா… ரொம்பப் பெரிய விஷயம்…” அவள் வார்த்தைகளில் இருந்த கோபத்தின் நியாயம் புரிய மித்ரன் அமைதியாய் பேசினான்.

“பவி… உன் வலி எனக்குப் புரியுது… தெரியாம ஒரு தப்பு நடந்திருச்சு… சரி பண்ணிக்க ஒரு சந்தர்ப்பம் கொடு… கொஞ்சம் அமைதியா என்ன நடந்துச்சுன்னு கேளு…” மித்ரன் சொல்ல, அதுவரை அமைதியாய் தலை குனிந்து நின்றிருந்த மீனா நிமிர்ந்தார். “பவி… இந்தப் பாவம் எல்லாத்துக்கும் நாந்தான் காரணம்… தயவுசெய்து மன்னிச்சிடு… மித்ரனை தண்டிச்சிடாதே…” என்றார்.

 

“இப்பவும் உங்க மகனுக்காக தானே யோசிக்கறிங்க அத்தை… என்னைப் பத்தி யாருமே யோசிக்கலை… என்னை சுத்தி எனக்கே தெரியாம ஏதேதோ நடந்திருக்கு… என் வாழ்க்கையை எப்பவும் மத்தவங்க தான் தீர்மானிக்கறாங்க… நான் லூசு மாதிரி, உலகத்துலயே என்னைப் போல யாரும் பாக்கியவதி இல்லைன்னு பெருமைப் பட்டுகிட்டு இருக்கேன்… நான்லாம் உசுரோட இருக்கறதே இந்த பூமிக்கு பாரம் தானே…” வேதனையுடன் கன்னம் நனைத்த கண்ணீருடன் வந்த அவளது வார்த்தைகள் மித்ரனின் இதயத்தை அம்பாய் துளைத்தன.

“பவி… உன்னை எப்பவுமே என் பொண்ணாதான் நான் பார்த்திருக்கேன்… என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்லிடறேன்… அப்புறமா நீ யோசி…” சொன்ன சுந்தரி கெஞ்சலாய் கையைப் பிடிக்கவும், கண்ணை அழுத்தமாய் மூடி நிதானித்தவள்,  “சொல்லுங்கம்மா…” என்றாள்.

 

மித்ரனை ஏறிட்டும் பார்க்காமல் நின்றவளைக் கண்டு அவன் மனம் துடித்தது. தானே தன் பக்க நியாயத்தை சொல்வதைவிட அத்தை சொன்னால் புரிந்து கொள்வாள் என்று அமைதியாய் காத்திருந்தான் மித்ரன்.

 

அக்காவின் மகனுக்காய் தன் வாழ்க்கையையே வேண்டாமென்று நினைத்த தானே இப்போது அவனது வாழ்க்கையின் குழப்பத்திற்குக் காரணமாகி விட்டோமே என்று மீனலோசனி குற்றவுணர்வில் வருந்திக் கொண்டு தன்னைத் தானே நொந்து கொண்டிருந்தார்.

 

சோமுவுக்கு மகளுக்குப் போட்டியாய் வந்தவள் மீது வெறுப்பும், மருமகனின் மனமாற்றத்தில் கோபமும், மகளது வாழ்வை நினைத்து வருத்தமும் இருந்ததால் பவித்ராவின் கோபம் சற்று சந்தோஷத்தைக் கொடுத்தது  என்றே சொல்ல வேண்டும். மகள் அவனை வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாய் மறுத்ததால் இனி என்ன செய்தும் காரியமில்லை என்று புரிந்தவர் நடப்பது நடக்கட்டும் என்று நினைத்தே அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

சுந்தரிக்குத் தெரியாமல் எல்லாவற்றையும் செய்ய நினைத்த சோமு விஷயம் கை மீறிப் போனதால், இனி ஏடாகூடமாக எதையும் செய்து மனைவியின் கோபத்தை அதிகமாக்கவோ, மனைவியின் பிறந்த வீட்டில் இருந்த சப்போர்ட்டை இழக்கவோ விருப்பமில்லை.

 

நடந்தை விளக்கமாக சுந்தரி சொல்லி முடிக்க, இறுகிப் போய் தலை குனிந்து அமர்ந்திருந்த பவித்ராவிடம் எந்த அசைவும், பிரதிபலிப்பும் காணவில்லை. அவளது பதிலுக்காய் எல்லாரும் காத்துக் கொண்டிருக்க மித்ரனின் மனமோ துடித்துக் கொண்டிருந்தது.

“பவி… என்னை மன்னிச்சிரு… அன்னைக்கு நான் எந்த மனநிலைல இருந்தாலும், இன்னைக்கு என் மனசுல நீதான் இருக்கே… எனக்கே தெரியாம இந்தத் தப்புக்கு நானும் உடன்பட்டிருக்கேன்… அதைத் திருத்திகிட்டு நடந்ததை நிஜமாக்கவே ஆசைப்படறேன்……” சொல்லி நிறுத்தியவன் அவள் எதுவும் பேசாமல் அதே போல அமர்ந்திருக்கவும், “பவி… ஏதாச்சும் சொல்லு… உன் அமைதி என்னை சித்திரவதை பண்ணுது…” என்றான்.

 

ஒரு நிமிடம் அவனையே உறுத்துப் பார்த்தவள் வேகமாய் எழுந்து மாடியில் அவர்களின் அறைக்கு சென்றாள். அதை எதிர்பார்க்காததால் திகைத்துப் போன மித்ரனும், சுந்தரியும் அவளைத் தொடர்ந்து அறைக்கு செல்வதற்குள் அறைக்கதவை தாளிட்டிருந்தாள்.

 

“இவள் என்ன செய்யப் போகிறாள்” என அதிர்ச்சியுடன் நின்ற மித்ரன் காலைத் தாங்கிக் கொண்டே அவள் பின்னில் செல்ல, அவனுக்கு முன்னில் வேகமாய் சென்ற சுந்தரி அறைக் கதவைத் தட்டினார்.

“பவி… கதவைத் திறம்மா… உன்னோட வேதனையும், வலியும் எனக்குப் புரியுது… எல்லாம் சரி பண்ணிக்கலாம்… அபத்தமா எந்த முடிவுக்கும் வந்திடாதே… இப்ப மித்ரன் மனசுலயும் நீதான் இருக்கே… கதவைத் திறம்மா…”

 

“பவி… ப்ளீஸ் என்னை மன்னிச்சிரு… கதவைத் திற… எனக்கு நீ வேணும்மா…” கலங்கிய குரலில் அழைத்த மித்ரனின் முகம் பயத்தில் வெளிறிப் போயிருக்க, அங்கு வந்த மீனாவிடம் கத்தினான்.

 

“பார்த்தீங்களாம்மா… நீங்க செய்து வச்ச காரியத்தோட பலனை… என் பவிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு… என்னையும் மறந்திடுங்க… இந்தப் பாவத்தை சுமந்திட்டு என்னால உங்களோட இருக்க முடியாது… நானும் என் அப்பாவைப் போல எங்காவது கண் காணாத இடத்துக்குப் போயிடறேன்…” கோபத்தில் வார்த்தையைத் துப்பினான்.

 

அதைக் கேட்டதும் மீனாவின் மனம் பதறிவிட்டது. “பவித்ரா… அய்யோ, இந்தப் பாவி கணக்குல தீர்க்க முடியாத பாவத்தை சேர்த்திடாதம்மா… அவசரப்பட்டு ஏதாவது பண்ணி வச்சு என் மகனை என்கிட்டே இருந்து பிரிச்சிடாதே… தயவுசெய்து கதவைத் திற…” அழுகையோடு மீனா சொன்னதைக் கேட்டு சோமுவின் மனம் கூடக் கலங்கிவிட்டது. நேரம் ஆக ஆக அனைவரும் பதறத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் இங்கே பயத்துடன் நின்று கொண்டிருக்க, அறைக்குள் பவித்ரா என்ன செய்து கொண்டிருக்கிறாள்… பார்ப்போம்.

 

மீனா சொன்னவற்றைக் கேட்டதும் பவித்ராவின் மண்டைக்குள் மின்னல் வெட்டு போல அவள் மயங்கிக் கிடக்கும்போது மித்ரன், ரோஹிணி மீனாவிடம் பேசியது, கல்யாணம் முடிந்த அன்று மீனா சொன்ன ஒருவருடக் கணக்கு எல்லாம் நினைவு வர, எல்லாமே தெளிவாய் புரிந்ததும் அவள் மனம் இறுகிப் போனது. 

 

“என் வாழ்க்கையை ஆளாளுக்கு பந்து போல அடித்துத் தள்ளி இருக்கிறார்கள்… என் சம்மந்தமான முடிவுகளை என்னைத் தவிர மற்ற எல்லாரும் எடுத்திருக்கிறார்கள்… என்னை வளர்த்த அத்தையே பணத்துக்காக அடகு வைத்திருக்கிறார்…” சொந்த மகளுக்கு மணமுடிக்காமல் தனக்கு கல்யாணம் முடிவானபோது மாமாவிடம் கேட்ட சந்தேகத்தை யோசிக்கவும் கண்ணீர் நிறைந்தது.

 

“மனதுக்குள் பதிந்த முகத்தை, தாலி கட்டிய கணவனாகக் கண்டபின்பு இந்த உலகத்தையே வென்று விட்ட ஆனந்தத்தில் மிதந்தேனே… எல்லாம் பொய்யா… என்னைச் சுற்றி உள்ள எல்லாரும் ஏமாற்றுக் காரர்களா… பெற்றோர் இல்லாத இந்த அனாதைப் பெண்ணை வஞ்சித்தால் கேட்பதற்குகூட யாரும் இல்லை என்ற தைரியம் தான் இவர்களை இப்படி செய்ய வைத்ததா…” சுயகழிவிரக்கதில் கதறினாள்.

 

“இது எதுவும் தெரியாமல் முட்டாளாய் இவர்களை நேசித்துக் கொண்டிருந்தேனே… ச்ச்சே…” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவளுக்கு சட்டென்று மித்ரன் தன்னிடம் வாக்கு கேட்டது நினைவு வந்தது.

 

“இப்படி ஒரு சூழ்நிலை வருமென்று நினைத்துதான் முன்னமே என்னிடம் வாக்கு கேட்டானா…” அவள் கண்ணில் நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. கதவைத் தட்டிக் கொண்டு அவர்கள் கூறியதெல்லாம் காதில் விழுந்தாலும் கவனத்தில் பதியவில்லை. அழுது கொண்டிருந்தவள் மனம் சட்டென்று ஒரு நிதானத்துக்கு வந்தது.

 

“இத்தனை காலம் என் வாழ்க்கையை மற்றவர்கள் தீர்மானித்தார்கள்… இனி என் வாழ்கையை நான் தீர்மானிப்பேன்…” கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள் அவளது அலமாரியில் இருந்த துணிகளை ஒரு பாகில் திணித்துக் கொண்டாள். துணிகளுக்கு நடுவில் இருந்த டைரியை எடுக்க உள்ளிருந்து ஒரு புகைப்படம் கீழே விழுந்தது.

 

திகைப்புடன் அதை எடுத்தவள் கண்கள் கலங்கின. மித்ரனின் போட்டோவுக்கு அருகில் புதிதாய் அவளது புகைப்படமும் ஒட்டப் பட்டிருக்க, அருகில் “லவ் யூ டி பவிக்குட்டி…” என்று எழுதி வைத்திருந்தான் மித்ரன். அதை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டவள் கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்தது. சிறிது நேரத்தில் கண்ணை மூடி நிதானித்துக் கொண்டவள் அதையும் பாகில் வைத்து ஜிப்பை மூடிவிட்டு கதவைத் திறந்தாள்.

 

அதுவரை கதவைத் தட்டித் தட்டி ஓய்ந்து, பயந்து போயிருந்த மித்ரனின் கண்கள் அவளைக் கண்டதும் நிம்மதியைக் காட்டின. கையில் பாகுடன் நடந்தவளைக் கண்டு பின்னிலேயே வந்தனர் சுந்தரியும் மித்ரனும்.

 

“பவித்ரா… இப்போ எங்க கிளம்பிட்ட… எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்…” சுந்தரி சொல்ல, அவளது கையைப் பிடித்த மித்ரன், “பவி, ப்ளீஸ்… எதுக்காகவும் என்னை விட்டுப் போக மாட்டேன்னு வாக்குக் கொடுத்திருக்கே… மறந்துட்டியா…” என்றான்.

 

அவன் கையை விலக்கி விட்டவள் ஒரு கோபமான பார்வையை அவன் மீது வீசிவிட்டு கீழே இறங்கினாள்.

“பவித்ரா, நாங்க செய்த தப்புக்கு மித்ரனை தண்டிச்சிடாதே… அவன் உன்னை மனசார விரும்பறான்…” என்றார் மீனா. சோமு நடப்பதை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதும் ரோஹிணி வந்தால் தங்கும் அறையில் பாகைக் கொண்டு போய் வைத்தவளை அவர்கள் திகைத்து நோக்கி நிற்க வெளியே வந்தாள்.

 

“அத்தை… உங்களுக்கு நான் என்ன துரோகம் பண்ணேன்… எங்கயோ என் பாட்டுக்கு இருந்தவளை கல்யாணம்னு ஆசை காட்டி, பல கனவுகளோட வீட்டுக்கு வந்தவகிட்டே ஒருவருஷ ஒப்பந்தம் பேசி இருக்கீங்க…” பவித்ரா கேட்கவும் மீனா தலை குனிந்தார்.

 

“மன்னிச்சிடு பவித்ரா… எதோ புத்தி கெட்டுப் போயி இப்படிப் பண்ணிட்டோம்… மத்தபடி உன்மேல எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லைம்மா… உன்னோட தங்கமான குணத்தைப் பார்த்து குற்றவுணர்வில் நான் எத்தனயோ தவிச்சிருக்கேன்… எல்லாம் மறந்து இந்த வீட்டு மருமகளா எப்பவும் போல சந்தோஷமா இரும்மா…” என்றார்.

அடுத்து சோமுவை ஒரு பார்வை பார்த்தவள், “உங்களுக்குப் பிறந்த பொண்ணு மட்டும் தான் நல்லா வாழணுமாப்பா… அதுக்காக மத்த பொண்ணுங்க வாழ்க்கையை அழிக்கறது தப்பில்லையா…” அவள் அமைதியாய் கேட்டாலும் அது பிடிக்காமல், “ஹூம்…” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு ஹாலுக்கு சென்றுவிட்டார் சோமு.

 

அடுத்து சுந்தரியிடம் வந்தவள், “அம்மா, அப்பா இல்லாத எனக்கு உங்க அன்பு மட்டும் தான் ஆதரவா இருந்துச்சு… உங்க பொண்ணு வாழ்க்கையோட மத்த பொண்ணு வாழ்க்கையும் நல்லாருக்கணும்னு நினைக்குற உங்களை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்குமா…” சொன்னவளை அணைத்துக் கொண்டு தோளில் தட்டிக் கொடுத்தவர், “நீ சந்தோஷமா இருக்கணும்மா…” என்றார்.

  

அடுத்து மித்ரனை நேருக்கு நேராய் பார்த்தவள், “நீங்க பொய்யா கல்யாணம் பண்ணி, மெய்யா என்னை வீட்டை விட்டு அனுப்பனும்னு நினைச்சா நான் போயிருவேன்னு நினைச்சிங்களா… எது பொய்னாலும் என் கழுத்துல உங்க தாலி ஏறினது நிஜம்… நான் இங்கேதான் இருப்பேன்… என்னமோ நான் வீட்டை விட்டுப் போறேன்னு நினைச்சு பதறுறீங்க… போகணும்னு நினைச்சு தானே எல்லாம் பண்ணீங்க… இப்போ மட்டும் என்ன… ஆனா உங்க எண்ணம் பலிக்காது… இது என் புகுந்தவீடு… இனி என் வாழ்க்கையில் எல்லாமே என் முடிவுப்படி தான் நடக்கும்…” சொல்லிவிட்டு அறைக்குள் சென்று தாளிட்டுக் கொள்ள எல்லாரும் ஸ்தம்பித்து நின்றனர்.  

 

அவள் சொன்னதைக் கேட்டு மித்ரனின் முகம் மலர்ந்தது.

 

“ஆஹா, என் செல்லப் பொண்டாட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தத்தான் பாகோட கீழ் அறைக்கு வந்து தங்கிருக்கியா… உன்னை எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு உன் புருஷனுக்குத் தெரியும்டி…” மனதுக்குள் நினைத்துக் கொண்டதும் மித்ரனின் முகத்தில் கலக்கம் மறைந்து ஒரு நிம்மதிப் புன்னகை பூத்தது. பவித்ராவோ வேதனையில் அறைக்குள்  பொருமிக் கொண்டிருந்தாள்.

ஒருமுறை வாழ்க்கையில்

பலமுறை மரணம்…

நேசித்தலில் மட்டுமே

சாத்தியமென்கிறது…

இதயத்தின் வலிகண்டு என்

இமையூறும் – வற்றாத

ஊற்றாக என் விழி மாறும்…

துடைத்தெறிய நீ கண்ணீருமல்ல…

பிரித்தறிய நீயும் நானும் வேறல்ல…

என் வாழ்க்கை ஏட்டில் – என்னை

மீறி எழுதப்பட்ட பக்கங்களை

அழித்து எழுத முடியாவிட்டாலும்

இனி வரும் பக்கங்கள் யாவும்

என்னால் மட்டுமே நிரப்பப்படும்…

 

இமைப்பீலி தொடரும்…