இமை – 15

மித்ரன் தோட்டத்தில் மெல்ல நடந்து கொண்டிருக்க, அவனது மனது சுகமான நினைவுகளாலும், நடக்கும் நிகழ்வுகளாலும் குழம்பியிருந்தது. ரோஹிணியும் அங்கே இருந்த கட்டிலில் அமர்ந்து அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

 

அருகில் இருந்தவளை விட்டு மித்ரனின் மனது மாடியில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்த பவித்ராவின் மீது ஆவலோடு படிந்தது. நெற்றியில் வைரப் பொடிகளாய் வியர்வை பூத்திருக்க, இடுப்பில் தூக்கிக் குத்திய சேலையுடன் கம்பியில் துணிகளைப் போட்டு கிளிப் குத்திக் கொண்டிருந்தாள். காற்றில் படபடத்த முடியை ஒரு கையால் ஒதுக்கியவளை விழிகளை விலக்க முடியாமல் ஆர்வத்துடன பார்த்துக் கொண்டிருந்தான்.

உன் முகத்தில் பூத்திருக்கும்

பொன் வைரத் துளிகளாய்

மாறிவிட மனம் துடிக்குதடி…

கார்கால மேகமென முகத்தை

மறைத்திடும் கருங்கூந்தலை

காற்றாக மாறி களைந்தாட ஆசையடி….

 

அவன் மனது சற்றுமுன் அடுக்களையில் கேட்ட பேச்சுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது. அதற்கு சொந்தக்காரர்கள் சாவித்திரியும், பவித்ராவும்.

 

பவித்ரா கீரையை ஆய்ந்து கொண்டிருக்க பாத்திரங்களை கழுவி வைத்துக் கொண்டே அவளுடன் பேசிக் கொண்டிருந்தார் சாவித்திரி.

“எனக்கு ஒண்ணுமே புரியல பவிம்மா… இந்த ரோஹிணிப் பொண்ணு பண்ணறதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு… நம்ம அம்மாவும், அந்தப் பொண்ணு சொல்லுற எல்லாத்துக்கும் அமைதியா தலையாட்டிட்டு போறாங்க… எனக்கு அந்தப் பொண்ணு பண்ணுற அதிகாரம் எல்லாம் பார்க்கும்போது, சமயத்துல இந்த வீட்டுக்கு நீங்க மருமகளா… அந்தப் பொண்ணு மருமகளான்னு கூட டவுட்டு வந்திடுது…” என்றார் சாவித்திரி.

 

அவர் பேச்சில் ஒரு நிமிடம் திகைத்த பவித்ரா, “அவளும் இந்த வீட்டுக்கு மருமக தானே அக்கா… அவ உறவால மருமக… நான் தாலிங்கற உரிமையால மருமக ஆனவ…” என்று சொல்லிக் கொண்டே கீரையைத் தொடர்ந்தாள்.

 

“ஆனா, உனக்கு இங்கே எந்த உரிமையும் காணோமே கண்ணு… நீயும் எல்லாத்துக்கும் விட்டுக் கொடுத்துப் போகறே… தம்பியும் உனக்காக எதுவுமே பேசறதில்லை… மீனாம்மாவும் அண்ணன் பொண்ணைத் தலையில் வைக்காத குறையாத் தாங்கறாங்க…”

“ம்ம்… அவர் தாலியை என் நெஞ்சுல சுமந்திட்டு இருக்கேனே… இந்த உரிமை ஒண்ணு போதுமேக்கா… அவர் சார்ந்த யார் எது சொன்னாலும் நான் பொறுத்துப் போறது தானே சரி…” சொன்னவள் அடுத்து வெங்காயத்தை அரியத் தொடங்கினாள்.

 

“ம்ம்… உலகத்தில எந்த மூலைல தேடினாலும் உன்னைப் போல ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்க முடியாது… மித்ரன் தம்பி போன ஜென்மத்துல பண்ணின புண்ணியம் தான் உன்னை பொண்டாட்டியா அடைஞ்சிருக்கு…” பெருமையோடு சொன்னார்.

 

“எதுக்குக்கா… பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறீங்க… அவர் என் கணவனா வந்ததை தான் நான் என் வாழ்க்கை வரமா நினைக்கிறேன்… என்னைப் போல யாருமில்லாத ஒருத்திக்கு இப்படி ஒரு கணவர் கிடைக்க நான்தான் புண்ணியம் பண்ணி இருக்கணும்…” என்றவள் களைப்புடன் முகத்தைத் துடைத்துக் கொள்ள பாவமாய்ப் பார்த்தார் சாவித்திரி.

“கொஞ்சம் பாலாவது குடியேன் மா… தம்பிக்கு சீக்கிரம் குணமாகனும்னு விரதம் இருக்கிறதா சொல்லி தினம் ஒரு வேளை மட்டும் தான் சாப்பிடறே… கல்யாணத்துக்குப் பார்த்ததுக்கு இப்ப ரொம்பவும் மெலிஞ்சு போயிட்டே… இதுல எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யறே… உனக்கு முடியலன்னா பார்த்துக்க இங்கே யாரிருக்கா…” மனதில் உள்ள ஆதங்கத்தைக் கூறியவரிடம்,

 

“அக்கா… இது என் கணவருக்காக நான் விரும்பி செய்யற விரதம்… இதில் எந்தக் குறையும் வந்திடக் கூடாது… ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் என்னக்கா… ஒருமாசம் சாப்பிடாம கூட நான் இருப்பேன்…” சோர்வுடன் சிரித்துக் கொண்டவளை அதிசயமாய் பார்த்தார் அவர்.

 

தண்ணி குடிப்பதற்காய் அடுக்களைக்கு வந்த மித்ரன் அவர்கள் பேச்சைக் கேட்டு அங்கேயே நின்றுவிட மனது சந்தோஷிப்பதா, துக்கப் படுவதா, வேதனைப் படுவதா என்று தெரியாமல் குழம்பி மூன்றையும் ஒரே நேரத்தில் செய்து அவனைத் துடிக்கச் செய்தது.

அமைதியாய் அங்கிருந்து தோட்டத்துக்கு சென்று விட்டவன் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் தோன்றி குடைந்து கொண்டிருக்க, சிறிது நேரம் கழித்து அவனைத் தேடிக் கொண்டு ரோஹிணியும் அங்கே வந்து ஒட்டிக் கொண்டாள்.

 

ஏதேதோ சொல்லி தொனத்திக் கொண்டு இருந்தவளிடம், தலை வலிப்பதாய் கூறவும், அவள் முனங்கிக் கொண்டே மொபைலை நோண்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். சோமுவும், மீனலோசனியும் யாரையோ பார்ப்பதற்காய் டவுனுக்கு சென்றிருந்தனர்.

 

மதிய நேரத்திலும் வெயிலே இல்லாமல் வானம் அவன் மனம் போலவே குழப்ப மேகத்துடன் இருந்தது. “எப்போது வேண்டுமானாலும் என் கனத்தை இறக்கி வைத்திட நான் தயாராய் இருக்கிறேன்… உன் மனதின் கனத்தை எப்படி இறக்கி வைக்கப் போகிறாய்…” என்று மிரட்டிக் கொண்டிருந்தது. இப்போது மனது பவித்ராவின் நேசத்தை சந்தேகிக்கவில்லை… சந்தோஷிக்க முடியாமல் தவித்தது.

இரவு நட்சத்திரங்கள் எல்லாம் விடுமுறை எடுத்துப் போயிருக்க, தற்காலிக வெளிச்சப் பணியில் வானம் மின்னலைப் பணிக்கு இருத்த, மழை வரப் போவதன் அறிகுறியாய் அது சிணுங்கிக் கொண்டு வானத்தில் பளிச்சிட்டு மறைந்தது.

 

இரவு உணவு முடிந்து அறைக்கு வந்த மித்ரன் ஜன்னல் அருகே நின்று மழைக்காற்றை சுவாசித்தான். உலர்ந்த மனதுக்கு சற்று ஈரப்பதத்தை அள்ளித் தெளிப்பது போலத் தோன்றியது. வானத்தையும், நடுவில் குமரிப் பெண்ணின் வெட்கமாய் ஒளிர்ந்து மறைந்த மின்னலையும் எப்போதும் ரசிப்பது போல் ரசிக்க முடியாமல் மனதுக்குள் எதோ அலட்டிக் கொண்டிருந்தது.

 

சற்று நேரத்தில் அறைக்கு வந்த பவித்ரா அவன் நிற்பதைக் கண்டு, “என்னங்க, சேர் எடுத்துப் போடட்டுமா… கால் வலிக்கப் போகுது…” என்று சொல்லிக் கொண்டே அவன் பதிலை எதிர்பார்க்காமல் ஜன்னல் அருகில் சேரைப் போட்டிருந்தாள்.

“ஒரே நிமிஷங்க, பெட் ஷீட்டை மாத்திடறேன்…” என்றவள் வேகமாய் விரிப்பு, தலையணையை மாற்றினாள்.

 

“பவி… இங்க வா…” மித்ரன் அழைக்கவும் அடுத்த நொடி வேகமாய் அவனிடம் வந்தாள்.

 

“நீ சாப்டியா…” கேட்கவும் சந்தோஷித்தவள், உண்மையை சொல்வதா, பொய் சொல்வதா என்று முழித்தாள்.

 

“அது…வந்து… நான் இன்னைக்கு விரதம்… அதனால மதியம் மட்டும் தான் சாப்பிடுவேன்…” என்றாள்.

 

“ஓ… இன்னைக்கு நல்ல மழை வரும் போலருக்கு…” அவன் சொல்லவும், அவளும் வானத்தைப் பார்த்தாள்.

 

“ஆமாங்க… ரொம்ப நேரம் இங்கே நிக்காதிங்க… மழைக்காத்து உடம்புக்கு ஒத்துக்காது…”

 

“ம்ம்… இயற்கையான எல்லாமே உடம்புக்கு ஒத்துக்கதான் செய்யும்… மனுஷன்தான் ஒவ்வொண்ணையும் புதுசா அதுக்கு பழக்கி விடறான்…” என்றவனை, “என்னாச்சு இன்னைக்கு… என் மித்து தத்துவம் எல்லாம் பேசறார்…” அவள் புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க,

 

வானத்தில் பயங்கர ஒளிப் பிழம்பு ஒன்று தோன்றி அடுத்த நிமிடம் பூமி உருண்டையே வெடித்துச் சிதறியது போல இடியின் முழக்கம் கேட்க, “ஆ…” என்ற அலறலைத் தொடர்ந்து கண்ணை இறுக மூடிக்கொண்டு அவன் முதுகில் பல்லியாய் ஒட்டிக் கொண்டிருந்தாள் பவித்ரா.

 

அடுத்த நிமிடம் அறையின் மின்சாரமும் காணாமல் போய் இருட்டு சூழ, சடசட வென்று மழைத் துளிகள் வேகமாய் மண்ணைத் தழுவத் தொடங்கின. அவள் அணைத்ததும் சட்டென்று கால் பாலன்ஸ் இல்லாமல் தடுமாறி விழப் போனவனும் அவளைப் பிடித்துக் கொள்ள அவனது கை அணைப்புக்குள் நின்று கொண்டிருந்தாள் பவித்ரா.

 

ஒரு நிமிடம் என்ன நடந்ததென்றே தெரியாமல் இருவரும் சுகமாய் அந்த மோன நிலையிலேயே நின்றிருந்தனர்.

மின்னலுக்கு அஞ்சாதடி…

உன் மான்விழிகள்

மின்னலையே மிஞ்சுகிறது…

என்னுயிரில் உன் பெயரை

உயில் எழுத சொல்கிறது…

 

அப்போது மீண்டும் ஒரு மின்னல் பிழம்பைத் தொடர்ந்து இடியும் கர்ஜிக்க, அவளது அணைப்பு இறுகுவதை சுகமாய் உணர்ந்தான் மித்ரன். பயத்தில் கண்ணை இறுக மூடிக் கொண்டிருந்தவளை மின்னல் வெளிச்சத்தில் கண்டவன் மனது தடுமாற, மனதுக்குள் அவள்மீது முன்னமே துளிர் விடத் தொடங்கிய காதலுடன், இந்த நெருக்கத்தின் வேதியல் மாற்றமும் சேர்ந்து கொள்ள அவனது இதழ்களுக்கு மிக அருகாமையில் அவன் மார்பில் கண்ணை மூடி சாய்ந்திருந்தவளின் நெற்றியில் தன் இதழைப் பதித்தான் மித்ரன். சதியோ, மதியோ எதுவோ அவர்கள் வாழ்க்கையில் விபரீதமாய் விளையாடிக் கொண்டிருந்தாலும் இயற்கையின் விருப்பம் வேறாய் இருந்தால் யாரால் மாற்ற முடியும்.

அவனது இதழ் பதிப்பில் உடலுக்குள் பாய்ந்த மின்சாரத்தில் சட்டென்று கண்ணைத் திறந்த பவித்ராவின் இதழ்களை நெருங்கி இருந்த அவனது இதழ்களை தனது கையை வைத்து மறைத்துக் கொண்டு விலகினாள்.

 

அவனது விழிகளில் ஏமாற்றம் பரவ உதடுகள், “பவி…” என முனங்கியதைக் கேட்ட அவளது செவிகள் சிலிர்த்தன.

 

அவளது கையைப் பற்றி தன்னிடம் இழுத்தவனை தவிர்க்க முடியாமல் திணறியவள், “மித்து… என்ன இது… ப்ளீஸ், விடுங்க…” என்றாள். அவளது வார்த்தையில் நிதானத்திற்கு வந்தவன் தான் செய்ததை நினைத்து வெட்கினான்.

 

போன மின்சாரம் மீண்டும் சிணுங்கிக் கொண்டு வெளிச்சத்தைப் பரப்பவும், அவளது முகத்தைக் காண முடியாமல் கூசியவன், சட்டென்று தலையைக் குனிந்து கொண்டு, “சாரி பவி…” எனவும் அவளுக்கு வருத்தமாய் இருந்தது.

“அதில்லங்க… ஒரு வருஷத்துக்கு நாம சேரக் கூடாதுன்னு, அத்தை…” என்று அவள் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டவனுக்கு அன்னை இவளிடம் சொன்ன ஒரு வருடக் கணக்கு இதுதானா எனத் தோன்றவும் கூனிக் குறுகி தன் செயலில் அருவருத்து நின்றான்.

 

“ச்ச்சே… என்ன காரியம் செய்து விட்டேன்… நானா இப்படி… அம்மா இவளிடம் சொன்ன ஒருவருடக் கணக்கு இதுதானா… என்னிடம் பொய் சொல்லி விட்டார்களா… பணத்துக்காக நடிக்க வந்தவள் என்று எகத்தாளமாய் எண்ணியிருக்க, பாசக் கயிற்றால் என் மனத்தைக் கட்டி இழுத்தவளை சந்தேகித்தேனே… என்னைக் கணவனாக நேசித்ததைக் கூட ஓவர் நடிப்பு என்று நினைத்தேனே… கடவுளே… என்ன கொடுமை செய்துவிட்டேன்… அந்த இடி என் தலையில் விழுந்திடாதா… இந்த ஒளிக்கீற்று என் கண்ணைப் பறித்திடாதா… இந்த அறியாப் பெண்ணுக்கு என்னையும் துரோகம் செய்யும்படி செய்து விட்டனரே…” அவன் மனது கலங்கிப் புலம்பியது.

இது எதையும் அறிந்திடாத பவித்ரா அமைதியாய் அவளது படுக்கையை தரையில் விரித்துப் படுத்துக் கொண்டாள். மழையை வெறித்துக் கொண்டு நின்ற மித்ரனின் மனதுக்குள்ளும் பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. மீண்டும் ஒரு பளிச் மின்னல் கருமேகத்தில் மின்னி மறைய வானமே அற்று விழுந்து விட்டது போல் பெரிய இடிமுழக்கம் கேட்டது.

 

“ஆ…” என்ற அலறலுடன் இரு கையிலும் காதைப் பொத்திக் கொண்டு கண்ணை இறுக மூடிக் கொண்டு  படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தாள் பவித்ரா.

 

அவளது குரலில் திரும்பியவன் பயத்துடன் சுவரில் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவளைக் காணவும் மனம் பரிதவித்தது. சட்டென்று மின்சாரம் நின்று அறை   இருட்டைப் பூசிக்கொள்ள, அலைபேசியில் டார்ச்சை உயிர்ப்பித்து மேசையில் இருந்த மெழுகுவர்த்தியின் தலையில் தீ கொடுக்க சோகமாய் உருகி காற்றில் தள்ளாடியபடி வெளிச்சத்தைப் பரப்பத் தொடங்கியது.

வெளிச்சத்தை உணரும்

கண்கள் – என்றுமே

மெழுகுவர்த்தியின்

உருகலை உணர்வதில்லை…

 

“என்னாச்சு பவித்ரா… இடிக்கு பயப்படுவியா…” உதடுகள் கேட்டாலும் உள்ளமோ, “இதைவிட பெரிய இடி இவள் தலையில் விழுவதற்கு காத்திருப்பதை எப்படித் தாங்கிக் கொள்வாளோ…” என அவன் மனது குறுகுறுத்தது.

 

“ம்ம்… எனக்கு எப்பவுமே இடின்னா ரொம்ப பயம்…” சொன்னவளின் கண்களில் இன்னும் அந்த அதிர்ச்சியின் மிச்சம் ஒட்டிக் கொண்டிருந்தது.

 

“இந்தப் பஞ்சைக் காதில் வச்சிட்டு போர்வையைப் போத்திட்டு படுத்துக்க… கேக்காது…” என்றவன் மேசை வலிப்பில் இருந்து பஞ்சை எடுத்துக் கொடுக்க நிம்மதியுடன் வாங்கிக் கொண்டவள் அவன் சொன்னது போலவே செய்து படுத்துக் கொண்டு உறங்கிப் போனாள்.

ஆனால் மித்ரனின் மனதில் குடிகொண்ட இடியும், மின்னலும் அவனை உறங்கவிடாமல் செய்ய அதை அடைக்கும் பஞ்சுக்கு எங்கே போவதென்று தெரியாமல் விழித்தான். தான் பவித்ராவுக்கு செய்த துரோகமே பாறாங்கல்லாய் மாறி இமைப்பீலியில் அமர்ந்து கனத்துக் கொண்டிருக்க உறக்கம் விலகிப் போனது.

 

இமையாய் எனைக் காத்த உன் விழியில்

என் இதயம் இனி எப்படி விழித்திடுமோ…

அலையடிக்கும் நெஞ்சின் ஓசை அடங்கிடுமா

எனையறியாமல் உனக்குள் நான் வளர்த்த

ஆசையின் பாவம் தீர்ந்திடுமா… குற்றத்தால்

குறுகுறுக்கும் நெஞ்சை என் செய்வேன்…

தெரிந்து செய்தால் தான் பிழையா…

தெரியாமல் செய்த பிழையும்

வண்டாய் நெஞ்சைக் குடையுதடி…

இமைப்பீலி தொடரும்…