Advertisement

கண்டுகொண்டேன் உனை என்னுள் 7
“வாங்க மாப்பிள்ளை.. வாம்மா..” வீட்டிற்கு வந்த சந்த்ரு, சுவாதி இருவருக்கும் தண்ணீர் கொடுத்து  வரவேற்று அமரவைத்த அபிராமி,  
“பூரணி மாப்பிள்ளை வந்திருக்கார் பாரு..” ரூமினுள் அம்முவுடன் படுத்து மொபைல் பார்த்து கொண்டிருந்த மகளிடம் சொன்னார். 
“என்னம்மா சொல்றீங்க..?” பூரணி அவசரமாக எழுந்து அமர்ந்தாள். அவளுக்கு தெரியாது அவன் வருகிறான் என்று. தம்பி ஊருக்கு வந்திருப்பதால் நேற்று தான் கூட்டி வந்து விட்டு சென்றிருந்தான். 
“ஆமா பூரணி கூட உன் நாத்தனாரும் வந்திருக்கா..” என, இப்போது  அம்மு வேகமாக எழுந்து அமர்ந்தவள்,   “அவ ஏன் வந்தா..?” முகத்தை சுருக்கினாள். 
“சரி நீ வெளியே போய் மாப்பிள்ளையோட இரு..” மகளிடம் சொன்னவர், “அம்மு வெற்றியை நான் வர சொன்னேன்னு சொல்லு ஓடு..” அவளுக்கும் சொல்லிவிட்டு மருமகனுக்கான விருந்தை தயாரிக்க கிட்சன்  சென்றார். 
பூரணி வேகமாக  பாத்ரூம் சென்று முகம் கழுவி, தலை முடி ஒதுக்கி,  பொட்டு வைத்து கண்ணாடியில் தன்னை சரி பார்த்து கொண்டிருக்க, அவளையே ஆச்சர்யமாக  பார்த்த அம்மு, “அண்ணி.. என்ன இது..? உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு தெரியும்ல..” என்றாள் சிரிப்புடன். 
“இன்னும் ஆகல.. அடுத்த வாரம் தான்..” என்றவள் அம்முவின் கேலி சிரிப்பில்,  “இதெல்லாம்  உனக்கு புரியாது, அம்மா வெற்றியை கூப்பிட சொன்னாங்க இல்லை.. போ..” என்றாள் மீண்டும் தன்னை சரி செய்து கொண்டே. 
“நான் போகல..  நீங்களே உங்க தம்பிகிட்ட சொல்லிட்டு போங்கண்ணி..” என்றாள். 
“என்ன வெற்றி எப்போவும்  போல உன்னை மிரட்டிட்டே இருக்கானா..?” பூரணி கேட்க, 
“இல்லைண்ணி.. கொஞ்சம் தலை வலிக்குது அதான்..” என்றாள். 
“என்னமோ சொல்ற, சரி நானே  அவன்கிட்ட சொல்லிட்டு போறேன்..”  பூரணி வெளியே சென்றுவிட, அம்மு திரும்பவும் படுத்து கொண்டாள். 
அவனிடம் மறைமுகமாக தன் மனதை வெளிப்படுத்த அவனோ, “என்னபேசுற நீ..?” என்று திணறினான். 

“ஏன் உங்களுக்கு புரியலையா..?” வாயால் கேட்காமல் பார்க்க மட்டுமே செய்ய, வெற்றி தலையை கோதி கொண்டான். கொஞ்சம் புரிந்தது ஆனால் அவனால் அதை ஏற்று கொள்ளவோ நம்பவோ முடியவில்லை. 
அவன் என்றாலே  முட்டி கொண்டு இருப்பவள் இப்போதெல்லாம் வித்தியசாமாக நடந்து கொள்வது இதனால் தானோ இப்போது புரிந்தது. ஆனால் எப்படி..? ஏன் திடீர் மாற்றம்..? அவளையே ஆராய்ச்சியாக பார்க்க, அந்த ஆராய்ச்சி பார்வை பிடிக்காமல் முகம் திருப்பினாள். 
“உனக்கு என்னமோ ஆச்சு, அதான் இப்படி லூசு தனமா உளறிட்டிருக்க..”  என்றுவிட்டான்.
இனி அவனிடம் பேசவோ.. அவனை பார்க்கவோ என்ன இருக்கு
ப்ரணீதாவிற்கு அப்படி ஒரு ஏமாற்றம், சட்டென விலகி வந்துவிட்டாள். “போ.. இனி உன் முன்னாடி வந்தேனே பாரு..”  வீம்பில், கோவத்தில்  அந்த நொடியே அவளின் வீட்டிற்கு  கிளம்பிவிட்டாள். காலையில் தான் பூரணி வந்தே ஆகவேண்டும் என்று நிற்க, வந்தவள் அவளின் ரூமிலே இருந்து கொண்டாள்.
“வாங்க மாமா.. வா சுவாதி..” வெளியே இருவரையும் வரவேற்ற வெற்றியின் கணீர் குரல் காதில் விழ, அப்படியே படுத்திருந்தாள்.  
“நீ ஊர்ல இருந்து வந்திருக்கேன்னு சொன்னாங்க வெற்றி..” என்ற சுவாதியின் குரலே அவள் அங்கு வந்தது ஏன் என்று புரிந்தது.
“வெற்றி..” அபிராமி குரல் கொடுக்க கிட்சன் சென்றான். 
“வெற்றி அப்பாக்கு போன் பண்ணி சொல்லிட்டு கொஞ்சம் கடை வரைக்கும் போய்ட்டு வந்துடு..”  என்னென்ன வாங்க வேண்டும் என்று லிஸ்ட் சொல்ல, கேட்டு கொண்டவன், கிளம்பிவிட்டான். 
“அம்மு.. அம்மு..” அபிராமி அவளை கூப்பிட, வேறு வழி இல்லாமல் கிட்சன் சென்றாள். 
“இந்தா காபி.. தலை வலிக்குதுன்னு சொன்னியாமே..” காபி டம்ளரை கொடுக்க, அங்கேயே நின்று குடித்தாள்.  “அம்மு பிரியாணி செய்யலாம், அண்ணியை வரச்சொல்லணும்.. அவங்க தான் நல்லா செய்வாங்க..” போன் எடுத்து பவானிக்கு சொன்னவர், எல்லாம் எடுத்து வைத்தார்.
“அத்தை..” சுவாதி கிட்சன் வர, அம்முவின் முகம் இருண்டது. 
“வாம்மா..” அபிராமி அவளை உள்ளே கூப்பிட, அம்மு அத்தையை முறைக்கவே செய்தாள். 
“வெற்றி எங்கத்தை..?” கேட்க, 
“கடைக்கு அனுப்பி இருக்கேன்ம்மா வந்துடுவான்..” என்றார். 
“சரிங்கத்தை..” என்றவள் வெங்காயம் எடுத்தாள் உரிக்க. 
“வேண்டாம்மா..” அபிராமி வெங்காயத்தை வாங்க, 
“இருக்கட்டும் அத்தை.. நம்ம வீட்ல நான் செய்ய என்ன இருக்கு..?” என்றவள் உரித்து கட் செய்ய, அம்முவின் தொண்டையில் காபி கசப்பாக இறங்கியது. 
“அம்மு.. காலேஜ் எப்படி போகுது..” அவளிடம் விசாரித்தாள், 
“ம்ம்..” என்றவள், எப்போதும் போல் அபிராமிக்கு உதவாமல் அமைதியாக நின்றாள். 
“ம்மா..” இந்தாங்க.. வெற்றி பையை கொடுத்தவன், “ஏய் சுவாதி நீ ஏன் இதெல்லாம் செய்ற..?” அவளிடம் கேட்டான். 
“ஏன் செஞ்சா என்ன..? நம்ம வீடு தானே..?” அவள் உரிமையுடன் கேட்க, நங்கென்று டம்ளரை கீழே வைத்த அம்மு அங்கிருக்க பிடிக்காமல் வெளியே சென்றாள். அப்போது தான்  கதவுக்கு பக்கத்தில் நின்றிருந்த அவளை வெற்றி திரும்பி பார்க்க, அவளோ ரூமுக்கு  சென்று கொண்டிருந்தாள். 
“வெற்றி அந்த எலுமிச்சைபழத்தை கொஞ்சம்  பிடிங்கிட்டு வாப்பா..”  அபிராமி சொல்ல, 
“சரிம்மா..” பின்னால் சென்றான்.
உடன் சுவாதியும் வந்தவள்,  “ஏய் சூப்பர் வெற்றி இங்கேயே கொய்யா, எலுமிச்சை, மல்லி பூ, ரோஜா பூ.. இன்னும் என்னென்னமோ இருக்கே..” ஆவலாக எல்லாம் பார்த்தவள், “முன்னாடி இதெல்லாம் இல்லையே..?” கேட்டாள். 
“அம்மு வச்சிருப்பா, அவளுக்கு இதெல்லாம் பிடிக்கும்..” என்றவன் எலுமிச்சை பறிக்க, 
“ம்ம்..” என்றாள். பிடிக்கவில்லை. “அவ ஏன் இங்க வைக்கணும்..?” நினைத்தவள், “இதை எல்லாம் அவங்க வீட்ல வச்சிக்கலாம் இல்லை..”  வெற்றியிடம் கேட்டும் விட்டாள். 
“இதுவும் அவ வீடு தானே..”  என்றவன் எலுமிச்சை பழத்துடன் உள்ளே சென்றுவிட, சுவாதியின் முகம் சுருங்கியது. 
“ரூமுக்கு போலாமா..?” சந்த்ரு மனைவியிடம் ரகசியமாக கேட்க, முறைத்தவள், 
“ஒன்னும் வேண்டாம்.. இங்கேயே இருக்கலாம்..” என்றாள். 
“கொஞ்ச நேரம் தான்டி, நேத்தெல்லாம் தூக்கமே இல்லை, உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்..” கெஞ்சலாக பார்த்தான். 
“முடியாது..” பூரணி உறுதியாக அமர்ந்திருந்தாள். 
“குல்பி என்னை பழி வாங்கற தானே..?” சந்தேகமாக கேட்டான். 
“ஆமா..”  பூரணியும் ஒத்து கொண்டாள். அவர்களின் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆக போகிறது என்பதால் எப்போதும் போல எல்லோரும் குழந்தை பற்றி கேட்க, கணவன் மேல் கோவம். 
அவன்தான் ரெண்டு வருஷம் போகட்டும் என்று தள்ளி வைத்திருப்பவன். இவளும் சில மாதங்களாக கேட்டு கொண்டிருக்க முடியவே முடியாது என்று நிற்கிறான். அழுது, சண்டை போட்டு.. எதற்கும் அசையவில்லை. இப்போது ஒரு முடிவோடு தான் இங்கு வந்திருக்கிறாள்.
“வாங்க தம்பி..” பவானி, சேனாதிபதி,  தேவா வர, மாமாவை பார்த்தும் பூரணி எழுந்து நின்று கொண்டாள்.  
“ண்ணா..” அபிராமி தண்ணீர் கொடுக்க, எடுத்து கொண்டவர்,  “மச்சான் எங்கம்மா..” வைத்தியை கேட்டு அமர்ந்தார். 
“வெற்றி சொல்லியிருக்கான் வந்துடுவார்ண்ணா..”  சொன்ன அபிராமி பாவனியுடன் கிச்சன் செல்ல, 
“அப்பறம் தம்பி..” சந்த்ருவிடம் பேச ஆரம்பித்தார். “வாங்க மாமா..” வெற்றி வந்தான்.  அடுத்து வைத்தியம் வர, ஆண்கள் எல்லோரும் பேச ஆரம்பிக்க, பூரணி தானும் கிட்சன் சென்றாள். 
அங்கு அம்முவை தவிர எல்லாம் இருக்க,  “அம்மு.. வா கிட்சன் போலாம்..”  ரூமில் படுத்து கொண்டிருந்தவளை சென்று  கூப்பிட்டாள். 
“இல்லைண்ணி.. நீங்க பாருங்க..” அம்மு சொல்லி கொண்டிருக்க, “க்கா..” தேவா குரல் கொடுத்தான். 
“மாமாதான் கூப்பிடுவார்ன்னு நினைக்கிறேன்..”  பூரணி சொல்ல, தெரிந்திருந்த அம்மு எழுந்து ஹாலுக்கு சென்றாள். 
“வாங்கண்ணா..” அப்போது தான் சந்த்ருவையே வரவேற்க, வெற்றி அவளை கோவமாக பார்த்தான். ஹாலை கடந்து தான் அவள் கிட்சன் சென்று திரும்பியிருப்பாள், வீட்டு மாப்பிளையை கூப்பிட வேண்டாமா என்ற கோவம். 
“என்னம்மா..” சேனாதிபதி மகளின் வாடிய முகத்தை பார்த்து கேட்டார். 
“கொஞ்சம் தலைவலிப்பா..” சொல்ல, 
“அபிராமி அம்முக்கு காபி கொடு..” வைத்தி மனைவிக்கு குரல் கொடுத்தார். 
“அத்தை கொடுத்துட்டாங்க மாமா.. குடிச்சிட்டேன்.. சரியாகிரும்..”  அம்மு சொல்ல, 
“சரி தைலம் தேய்ச்சுக்கோ..” தானே எழுந்து சென்று எடுத்து வந்து கொடுத்தார். வாங்கி கொண்டவள் பூரணியுடன் கிட்சன் சென்றாள்.

Advertisement