கல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்கு பின் – 46_1

படுக்கையிலையே சாய்ந்து அமர்ந்து கொண்ட சுவாதி சனத்தைப் பார்வையால் தொடர்ந்தாள்.  அவளைப் பார்த்தபடி படுக்கைக்குத் தயாரான சனத்தும் அவளிடமிருந்து பார்வையை அகற்றவில்லை. லைட்டை அணைத்துவிட்டு படுக்கைக்கு வந்து சனத் படுத்து கொண்டததுதான் தாமதம் அவன் மேல் படுத்துகிடந்தாள் சுவாதி.

அந்த இரவில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களின் பிரிவின் பாதிப்பை ஒருவரையொருவர் பிரியாமல், வார்த்தைகளால் விளக்காமல் விளக்கி கொண்டிருந்தனர். அன்றைய இரவில் சுவாதி சுவாசிக்கும் சாளரமாக மாறி போனான் சனத், சனத் சுவைக்கும் ஸுவீட்டாக மாறி போனாள் சுவாதி.

மறு நாள் காலை அலார்ம் அடித்தவுடன் எழுந்து கொண்ட சுவாதி அவளருகில் உறங்கி கொண்டிருந்த சனத்தை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள்.  நேற்று ஒரே நாளில் அவன் அருகிலில்லாததால் ஏற்பட்ட தனிமையையும், அவன் அருகாமையால் ஏற்பட்ட முழுமையையும் பூரணமாக உணர்ந்திருந்தாள். இனி அவன் சென்னையில் இருக்கும் நாட்களை வீணாக்கக்கூடாது என்று அவளுள் உறுதி பூண்டாள். 

படுக்கையறையிலிருந்து சுவாதி வந்த போது சரண்யா எப்போதும் போல் வரவேற்பறையில் உட்கார்ந்து படித்து கொண்டிருந்தாள்.  சரண்யாவே அவளுக்கு காபி கலந்து கொண்டதால் இருவரும் ஒருவருகொருவர் பேசிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

சுவாதி கிட்சனில் டிபன் செய்து கொண்டிருந்த போது விஸ்வம் புது பாலைக் கொண்டு வந்து வைத்தார்.  புது பாலைக் காய்ச்சி அவருக்காக காபி கலந்து கொண்டு அவள் வரவேற்பறைக்கு சென்றபோது லலிதா அவர் அறையிலிருந்து வெளியே வந்தார். அப்போது லலிதாவைப் பார்த்து,

“இராத்திரி சனத் வந்திட்டான்.” என்றார் விஸ்வம்.

“எப்ப?” என்று கேட்டார் லலிதா.

“பதினொரு மணி போல வந்தான்..ஃபிளைட் டிலேயாயிடுச்சுன்னா எல்லார் தூக்கமும் கெட்டுப் போயிடுமுனு யார்கிட்டையும் சொல்ல வேணாமுனான்.” என்றார் விஸ்வம்.

அப்போது அங்கே காபியுடன் வந்த சுவாதியைப் பார்த்து ,”உனக்கு சனத் வரப் போறன்னு தெரியுமா?” என்று கேட்டார் லலிதா.

சுவாதி பதில் சொல்லுமுன், சரண்யா அவளைப் பார்த்து,”அண்ணன் வந்துட்டான்னு ஏன் அண்ணி நீங்க எனக்கு சொல்லல?” என்று கேட்டாள்.

இருவருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் தடுமாற, விஸ்வமே இருவருக்கும் பதில் சொன்னார்.

“அவளுக்கும் தெரியாது..எனக்கு மட்டும்தான் தெரியும்..சனத் எழுந்து வந்தா எல்லாருக்கும் தெரியப் போகுது.” என்றார்.

மருமகளை எதிரி போல் பார்த்தார் மாமியார்.  ஒவ்வொரு முறையும் சனத் வெளியூரிலிருந்து திரும்பி வரும்போது அவனை வரவேற்க அவர் விழித்திருப்பது வாடிக்கையான செயல் என்று தெரிந்திருந்தும் அவருக்கு தகவல் கொடுக்காமல் சனத் வீட்டிற்கு வந்தது சுவாதியின் சதிச் செயலாக நினைத்தார்.

சரண்யா கல்லூரி புறப்படும்வரை காத்திருந்த லலிதா, அவள் புறப்பட்டு சென்றபின் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்த சுவாதி மீது பாய்ந்தார்.

“வீட்ல நடக்கற எந்த விஷயத்திலையும் சம்மந்தம் இல்லாத மாதிரி நடக்கறது..வெறும் வேலைக்கு மட்டும் போயிட்டு வருது..சங்கீதா விஷயத்தில உனக்கு ஈடுபாடு இல்ல சரி..சனத் வீட்டுக்கு வர போறாங்கறத ஏன் எனக்கு சொல்ல?” என்று சுவாதியைப் பார்த்து கேட்டார்.

“அத்தை, அவங்க வர போறாங்கன்னு எனக்கு தெரியாது..நேத்து காலைலக்கூட அவங்க போன்ல பேசினாங்க அப்பக்கூட இராத்திரி வர போறாங்கன்னு என்கிட்ட சொல்லல.” என்றாள் சுவாதி.

“உன்கிட்ட மட்டும் போன்ல பேச டயம் கிடைக்குது போல அவனுக்கு..நான் அவன்கிட்ட பேசியே மூணு நாள் ஆகப்போகுது..உங்க மாமாகிட்ட அவன் பேசறதோட சரி..முதலேர்ந்து இதுதான நடக்குது எல்லாம் போன் மூலம்தான நடந்திச்சு.” என்று லலிதா வரம்பு மீற ஆரம்பித்தார்.

“லலிதா, அவளுக்குத் தெரியாது..சனத் எனக்கு மட்டும்தான் சொன்னான்.” என்று மறுபடியும் அறிவுறுத்தினார் விஸ்வம்.

கணவன் வீடு வந்ததில் பொங்கிய சந்தோஷ ஊற்று மாமியாரின் வார்த்தைகளில் வற்றிப்போனது மருமகளுக்கு.  கல்யாணத்திற்கு முன் போன் மூலம் சனத்துடன் சேர்ந்து கல்யாண ஏற்பாட்டைத் திட்டமிட்டு செய்ததை இன்று லலிதா வேறு விதமாக உருவகப்படுத்தி பேசியதை சுவாதியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

அவளின் ஆபிஸிற்கு வந்து அவளை பலமுறை சந்தித்தது சனத்தான், அவர்கள் கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டதும் சனத்தான். அவனின் திட்டத்திற்கு உறுதுணையாக மட்டும் அவள் செயல்பட்டாள் ஆனால் இன்று லலிதா பேசிய பேச்சு சுவாதிதான் சனத்தின் மீது ஆசைப்பட்டு, சனத்தை தூண்டி சகலத்தையும் செய்தது போல் இருந்தது. 

அன்று வரை லலிதாவின் வன்சொற்களைப் பொறுத்து போய் கொண்டிருந்த சுவாதி அந்த சொற்களின் காரணத்தை கண்டு கொண்டவுடன் அந்த காரணம் அவளால் களையமுடியாத ஒன்று என்றும் உணர்ந்தாள். 

லலிதாவுடன் இனி இதை பற்றி பேசி பயனில்லை என்று முடிவுக்கு வந்து அவருடன் சர்ச்சையைத் தொடராமல் அங்கிருந்து அகன்றது எப்போதும் போல் அவள் வேலைகளை முடித்து கொண்டு ஆபிஸ் புறப்பட்டு சென்றாள். 

அவனறையிலிருந்து சனத் வெளியே வந்தபோது மணி பத்தாகியிருந்தது.  லலிதா கிட்சனில் இருக்க, விஸ்வம் வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்.

“அம்மா, காபி கொண்டு வாங்க.” என்று குரல் கொடுத்தான் சனத்.

கிட்சனிலிருந்த லலிதாவிடமிருந்த பதிலே இல்லை.  சனத் கேள்வியாய் விஸ்வத்தைப் பார்க்க,

“உங்க அம்மா உன் மேல கோவமா இருக்கா..நீ அவகிட்ட வீட்டுக்கு வர போறேங்கறத சொல்லைன்னு.” என்றார் விஸ்வம்.

விஸ்வம் பேசியதை கேட்டபடி கையில் காபியுடன் வந்த லலிதா, “என்கிட்டதான சொல்லல..அவன் பொண்டாட்டிகிட்ட சொல்லியிருக்கானே..இனிமே என் பையனப் பத்தி அவகிட்ட கேட்டுதான் தெரிஞ்சுக்கணும்.” என்றார் லலிதா.

லலிதாவின் பேச்சில் கடுப்பானான் சனத்.

“அம்மா, உளறாதீங்க..நான் அப்பாகிட்ட மட்டும்தான் சொன்னேன்..நீங்கெல்லாம் எதுக்கு தூக்கத்தை கெடுத்துகணுமுனுதான் யார்கிட்டையும் சொல்லல..சுவாதிக்கும் தெரியாது.” என்றான்.

“சனத், என் மனசுல பட்டிச்சு அதான் சொல்றேன்..சங்கீதா மாமியாருக்கு உடம்பு முடியாம இருக்கு…உன் பொண்டாட்டி என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை என்கிட்ட இன்னிவரைக்கும் கேட்கல….சங்கீதா நம்ம வீட்டுப் பொண்ணு ..இப்ப உங்களுக்கு அவக்கூட உறவு ஒட்டலைனா எப்பவும் ஒட்டாது..இரண்டு பொண்ணுங்க எனக்கு.. நான் உயிரோட இருக்கறவரைக்கும் அவங்கள விட்டு கொடுக்க மாட்டேன்..நீயும், உன் பொண்டாட்டியும் புரிஞ்சுகிட்டா சரி இல்லைன்னா உன் இஷ்டப்படி கல்யாணத்தை நடத்திகிட்ட அதேபோல வாழ்க்கையையும் நடத்திக்க.” என்றார் லலிதா.

“அம்மா, எதுக்கு இப்படியெல்லாம் பேசறீங்க..நான் தகவல் சொல்ல வேணாமுனு தான் நினைச்சேன்..அதுவும் உங்க மூணு பேருக்கு..சரண்யா முழிச்சுகிட்டிருந்தாக் காலேஜூக்கு லீவு போட ஒரு சான்ஸ் கிடைச்சிடும், சுவாதிக்கு வேலைக்குப் போகணும், நீங்க வருணுக்கும் சேர்த்து சமைச்சுகிட்டு இருக்கீங்க.  எல்லாத்தையும் யோசனைப் பண்ணித்தான் அப்பாக்கு மட்டும் சொன்னேன்.  நீங்க நினைக்கற மாதிரி சுவாதி இல்ல..அவ சங்கீதாவோட போன்ல பேசியிருக்கா..எனக்கு தகவல் சொன்னதும் அவதான்..அவகிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டு அதை உங்களுக்கு சொல்லாம இருப்பேன்னு நினைக்காதீங்க.”

“சுவாதியை நான் அவ ஆபிஸ்ல பார்த்திட்டு வந்து உங்கிட்ட என் விருப்பதை சொல்லி நீங்க அதுக்கு ஒத்துகிட்ட அப்பறம்தான் எங்க கல்யாணம் நடந்திச்சு..இப்ப நீங்க வேற மாதிரி பேசறீங்க..உங்ககிட்டையும், அப்பாகிட்டையும் சொல்லாம நான் எதுவும் செய்ததில்ல..கல்யாணம் ஆயிருச்சுங்கறதுனால நான் மாறாப் போகறதில்ல..நம்ம குடும்பம் எனக்கு முக்கியம்…இந்த மாதிரி தப்பா நினைக்கறது, பேசறது எல்லாத்தையும் விடுங்க.” என்றான் சனத்.

“நான் தப்பா நினைக்கல..உன் பொண்டாட்டி நம்ம வீட்டைப் பத்தி சரியா நினைக்கணும்..நாங்க உனக்கு முக்கியாம இருக்கறது முக்கியமில்ல அவளுக்கும் நம்ம குடும்பம் முக்கியமாப் படணும்..சங்கீதாகிட்ட பேசியிருக்கா ஆனா இப்பவரைக்கும் என்கிட்ட அதை பத்தி ஒரு வார்த்தை சொல்லல..ஏன்..நான் அவளுக்கு முக்கியமாப் படலயா?” என்று கேள்வி கேட்டு சனத்தை குழப்பிவிட்டார் லலிதா.

லலிதாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சனத் மௌனமாக இருக்க விஸ்வமே பதில் சொன்னார்.

“அவ சங்கீதா பத்தி பேசல, விசாரிக்கல அப்படின்னு குறைபட்டுகிட்டு இருந்த.. இப்ப சங்கீதாகிட்டையே அவ பேசியிருக்கான்னு தெரிஞ்ச பிறகு உன்கிட்ட அதை பத்தி சொல்லலைன்னு  குறை பட்டுக்கற..எல்லாத்துலையும் குறையேத் தேடிகிட்டு இருந்தேன்னா அதுதான் கண்ணுக்குப்படும்..அவளுக்கு தெரிஞ்சத அவ செய்யறா..தெரியாதத நீதான் சொல்லிக் கொடுக்கணும்.” என்றார்.

“எல்லாத்தையும் நான் தான் சொல்லி கொடுத்துகிட்டு இருக்கேன்..பொறுத்துகிட்டும் இருக்கேன்..என் பையனுக்காக.” என்று அவர் நிலையை, நடவடிக்கைகளைத் தெளிவாக்கினார் லலிதா.

“சரி..அப்ப உன் பையனுக்காகவே செய்..வேற யாருக்காகவும் வேணாம்..இப்ப எங்களுக்கு டிபன எடுத்து வை..நேத்து சாயந்திரம் போல சாப்பிட்டிருப்பான் சனத்.” என்று அவர்கள் விவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் விஸ்வம்.

டிபன் சாப்பிட அமர்ந்த சனத்திடம் அவன் மும்பை பயணத்தைப் பற்றி விசாரித்து கொண்டிருந்தார் விஸ்வம்.

“அடுத்து வெளி நாடு போகணும்..அதுக்கு ஏற்பாடு பண்ண வேண்டியிருக்கும் இப்ப போயி இரண்டு வாரம் அங்க இருந்திருக்க..அப்படி என்னடா முக்கியமான வேலை?” என்று கேட்டார்.

“இது வேற விஷயம்பா..நானே எதிர்பார்காதது..இன்னும் ஒண்ணும் முடிவாகல.” என்றான் சனத்.

“எதுவும் சரியா அமையாத போது எதுக்கு அங்க இருந்த..பேசாம இங்க வரவேண்டியதுதான.” என்றார் விஸ்வம்.

“இங்க வந்த அப்பறம் திரும்ப கூப்பிடுவாங்க..வீண் அலைச்சல்..செலவு..அதனாலதான் அங்கையே தங்கிட்டேன்..நேத்திக்கு காலைலதான் பேச்சு வார்த்தை நடந்திச்சு..இனிமேதான் முடிவாகும் பிராஜக்ட்ட செய்யறதா வேணாமானு.” என்றான் சனத்.

“இப்ப இத்தாலி போகணும்..அதுக்கு அப்பறம் ரிசைக்கில் பிராஜக்ட்..இரண்டு தான் இருக்கு..இதுல என்ன குழப்பம்?” என்று விசாரித்தார் விஸ்வம்.

“இத்தாலில கிளையண்ட்  கேட்ட மெஷினை செக் செய்திட்டு அதை இங்க வரவழைக்கணும் ..மெஷின் இந்தியா வந்த அப்பறம்தான் எனக்கு வேலை..ரிசைக்கிள் இன்னும் இனிஷியல் ஸ்டேஜ்லதான் இருக்கு..அதுக்கு நானே எல்லா தயார் செய்து வைச்சுட்டேன்..இரண்டு மூணு கிளையண்டுக்கு டீடெயிஸ்யெல்லாம் அனுப்பிட்டேன்..இனிமே அவங்கதான் முடிவு செய்யணும்.” என்றான்.

“அப்ப நீ ஃப்ரீயா கொஞ்ச நாளைக்கு?” என்று கேட்டார் விஸ்வம்.

“இல்லபா..விவேக் இரண்டு, மூணு சின்ன வேலை சொல்லியிருக்கான் ஹைதராபாத்ல..அவனுக்கு தெரிஞ்சவங்க..அதை ஒத்துகிட்டிருக்கேன்…மும்பை பிராஜக்ட் வேற மாதிரி..நான் இதுவரைக்கும் செய்யாதது…அதுக்காகதான் மும்பைல இவ்வளவு நாள் இருந்தேன்.” என்றான் சனத்.

“எதுக்கு யோசிக்கற..எடுத்து செய்.” என்றார் விஸ்வம்.

“அப்படி முடிவு எடுக்க முடியாது..அதை யோசிச்சுதான் செய்யணும்..டயம் கேட்டு இருக்கேன்..அவங்களுக்கும் ஏதோ பிராப்ளமிருக்கு…இரண்டு மாசமாகும் அவங்களுக்கும் அதை சரி செய்ய அதுக்குள்ள நான் என்கிட்ட இருக்கற எல்லா வேலையையும் ஒரளவு முடிச்சிடணுமுனு நினைக்கறேன்.” என்றான் சனத்.

“இன்னிக்கு என்ன செய்ய போற? வெளி வேலை ஏதாவது இருக்கா?” என்று விஸ்வம் கேட்க,

“இன்னிக்கு வீடுதான்….விவேக்கோட சேர்ந்து வர்க் செய்யணும்..அவன் கூப்பிடும்போது ஆபிஸ் போனாப் போதும்.. அதுக்கு அப்பறம் இத்தாலி..திரும்பி வந்த அப்பறம் ஹைதராபாத்.” என்றான் சனத்.

“ஏண்டா பக்கத்திலையே ஏதாவது பிராஜ்கட் செய்யேன்.” என்றார் விஸ்வம்.

“ஹைதராபாத் பக்கதிலதான் இருக்கு..இத்தாலி மெஷின் பெங்களூர்லதான் இன்ஸ்டலெஷன்.” என்றான் சனத்.

“நான் சொன்னது காலைல போயிட்டு சாயந்திரம் திரும்பி வர மாதிரி.” என்றார் விஸ்வம்.

“அப்பா, நீங்க சொல்ற மாதிரி காலைலப் போயிட்டு சாயந்திரம் வீட்டுக்கு வரணுமுனா ஒரு இடத்தில வேலைக்குதான் போகணும்…சென்னைல இருந்தா நான் நம்ம வீட்லதான் முக்காவாசி நாள் இருக்கேன்..கிளையண்ட் மீட்டிங் இருந்தாதான் வீட்டை விட்டு வெளியே போறேன்..நான் இப்படி வீட்ல இருக்கறத பார்த்து அம்மாக்கே சந்தேகம் வருது நான் வேலை செய்யறேனா இல்ல வெட்டியா இருக்கேனான்னு.” என்று லலிதாவை அவர்கள் பேச்சில் இழுத்தான் சனத்.

“ஆமாம்டா..எனக்கு சந்தேகமாதான் இருக்கு..உன் பொண்டாட்டியும் ஒரு நாள் அப்படிதான் சொல்லப் போறா..அவ மட்டும் கஷ்டப்பட்டு வேலைக்கு போறா..நீ வீட்லையே இருக்கேன்னு..அன்னிக்கு உனக்கு புரியம் நான் சொல்றது.” என்றார் லலிதா.

“அம்மா, அவ இப்படி நினைப்பா, அப்படி செய்யவான்னு நினைக்கறத நீங்க விடுங்க..நான் என்ன வேலை செய்யறேன்னு தெரிஞ்சுதான் என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டா..அப்படி அவ ஏதாவது பேசினா நான் பார்த்துக்கறேன்.” என்று சுவாதியை விட்டு கொடுக்காமல் பேசினாலும் லலிதா விட்டெறிந்த விதை ஏற்கனவே லதாவினால் பதப்படுத்தப்பட்டிருந்த மனதில் புதைந்து போனது.

அவன் அறைக்கு திரும்பி வந்த சனத் அவன் போனை செக் செய்ய, சுவாதியிடமிருந்து மிஸ்ட் கால், மெஸெஜ் எதுவுமில்லை.  உடனே அவளுக்கு அவன் போன் செய்தான்.

ஆபிஸில் மும்முரமாக வேலைப் பார்த்து கொண்டிருந்த சுவாதி போன் அழைப்பை ஏற்றவுடன்,

“ஆபிஸ் போயி சேர்ந்திட்டேன்னு போன் செய்ய மாட்டியா, மெஸெஜ் அனுப்ப மாட்டியா?” என்று கடிந்து கொண்டான் சனத்.

சனத்தின் கோபத்தின் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை சுவாதிக்கு.  அன்றாடம் ஆபிஸ் வந்து சேர்ந்தபின் யாருக்கும் போன் செய்யும் பழக்கம் வைத்து கொள்ளாததால் அன்றும் அவள் ஆபிஸ் வந்தவுடன் அவள் வேலைகளில் ஆழ்ந்து போக, லன்ச் டயத்தில் சனத்திற்கு போன் செய்யலாம் என்று நினைத்து கொண்டிருந்தாள்.

“லன்ச் டயத்தில போன் பேசலாமுனு நினைச்சேன்.” என்றாள்.

“ஏன் இப்ப நீ பேச முடியாதா? நேத்திக்கு காலைல நான் மும்பைல இருக்கறச்சே போன் பேசின.” என்று அவளை குற்றவாளியாக்கினான் சனத்.

“இன்னிக்கு காலைல எனக்கு நிறைய வேலை இருந்திச்சு அதுவுமில்லாம நீங்க தூங்கிட்டு இருப்பீங்க உங்கள தொந்திரவு செய்ய வேணாமுனுதான் போன் பண்ணல.” என்று சுவாதி பதில் சொன்னவுடன்,

“ஆமாம்..நான் தான் வேலையில்லாம வீட்ல தூங்கிட்டு இருக்கேன்..அம்மா சரியாதான் சொல்றாங்க.” என்றான் சனத்.

சனத்தின் கடைசி வார்தைகளில் சுவாதிக்கு அவன் கோபத்தின் காரணம் புரிந்தது.  அவளுடன் பேசிக் கொண்டிருப்பது சனதில்லை, சனத்தின் மூலம் லலிதா பேசிக் கொண்டருக்கிறார் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டாள்.

“நான் அப்படியெல்லாம் நினைக்கல…இனி நான் ஆபிஸ் வந்து சேர்ந்தவுடனையே உங்களுக்கோ இல்ல மாமாகோ மெஸெஜ் அனுப்பறேன்.” என்று அமைதியாகப் பதில் சொன்னாள். பின் அவளே பேச்சை மாற்ற முயற்சி மேற்கொண்டாள்.

“டிபன் சாப்பிட்டாச்சா?” என்று கேட்டாள்.

“இப்பதான் அப்பாவோட சேர்ந்து சாப்பிட்டேன்.” என்றான்.

“சரி..நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க..சாயந்திரம் பார்க்கலாம்.” என்று சொல்லி போனை கட் செய்த சுவாதி  வாஷ் ரூம் சென்று அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.  நேற்று இரவுதான் கணவன் அவளுக்கு எத்தனை முக்கியாமாகிப் போயிருக்கிறான் என்று அவனுக்கு புரிய வைத்தாக அவள் நினைத்திருக்க, இன்று காலையில் அவன் அதையெல்லாம் மறந்து லலிதாவின் பேச்சைக் கேட்டு அவள் மனதை ஒரே நொடியில் மிதித்து போட்டதில் அதிர்ச்சியடைந்திருந்தாள் . 

அவளால் முடிந்த அளவு லலிதாவிற்கு எல்லா விதத்திலும் அவள் உதவியாக இருக்க முயற்சி செய்து oகொண்டிருக்க, அவரோ அவளின் ஒவ்வொரு முயற்சியையும் சந்தோஷத்தோடு ஏற்று கொள்ளாமல் சந்தேகத்தோடு பார்த்து இப்போது சனத்தையும் அதே பார்வையோடு பார்க்க வைத்திருக்கிறார். 

பெற்ற தாயைப் போல் சில நேரங்களில் நடந்து கொண்டாலும் அதில்  பெரும்பாலும் மாமியார் மறைந்து இருப்பதை அன்று காலையில்தான் உணர்ந்திருந்தாள்.  இதுபோல் ஒவ்வொரு முறையும் சனத்தின் மனதை லலிதா கலைத்து கொண்டிருந்தால் அதற்குபின் அவனுடன் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் விளக்கி ஆரம்பிப்பது அவளால் முடியாத காரியம் என்பதால் ஊலாடும் கணவனின் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தாள் மனைவி.