Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 5 (2)

 

“சித்து இந்த பசங்களுக்கு குடிக்க ஜூஸ் போட்டு கொடு..” என்று மீனா சொல்லவும்,

‘இவனுக்கு ஜூஸ் எல்லாம் போட தெரியுமா??’ என்கிற ரீதியில் மானசா பார்க்க, பூபதியோ “மதியம் லஞ்ச் சப்பிட்டுத்தான் போகணும்..” என்று சொல்ல,

‘லஞ்சா…’  என்று சித்து இப்போது பார்க்க, பாஸ்கருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை.

“வா வா போய் ஜூஸ் போடுவோம்.. சின்ன பையன்ல இருந்து எத்தன தடவ இங்க வந்திருக்கேன்.. ஒரு தடவா உங்கம்மா ஜூஸ் போட்டுக் கொடுத்திருப்பாங்களா…” என்று முனங்கியபடி பாஸ்கர், சித்திரைச் செல்வனை அழைத்துக்கொண்டு செல்ல,

“இங்க உங்க ஹெல்புக்கு யாரும் இல்லையா ஆன்ட்டி…” என்றாள் மானசா.

“என் தங்கச்சி இருந்தாம்மா.. நேத்து சாயங்காலம் தான் கிளம்பிப் போனா.. அதான் அப்பா புள்ளை ரெண்டு பேரும் இருக்காங்களே.. எல்லாம் பார்த்துப்பாங்க.” என்று மீனா சொல்ல, மானசாவும், ஷில்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள,

“சர்டிபிகேட் கோர்ஸ் படிக்க இவ்வளோ இன்ரெஸ்ட்டா…” என்றார் பூபதி.

“அதெல்லாம் இல்லை அங்கிள்.. வீட்ல போர் அடிச்சது.. மாஸ்டர் டிகிரி பண்ணலாம்னு வீட்ல சொன்னாங்க.. எனக்குதான் இது தோணிச்சு சோ அட்மிசன் வாங்கி கிளம்பி வந்துட்டேன்..” என்று மானசா சொல்லவும்,

“ம்ம்.. இங்க எப்படிம்மா புடிச்சிருக்கா.. ஹாஸ்டல் எல்லாம்..” என்று பூபதி அடுத்த கேள்விக்குப் போக,  

“ம்ம் அப்பாவுக்கும் புள்ளைக்கும் படிப்பு, வேலை இதைப்பத்தி பேசலன்னா பொழுதே போகாது..” என்ற மீனா, “இந்த பசங்க என்னை பார்க்க வந்திருக்காங்க..” என, பூபதி கப்சிப் ஆகினார்.

இப்போது பெண்கள் இருவருக்கும் இன்னமும் புன்னகை விரிய, அடுத்து இருவரின் குடும்பம் பற்றிய விசாரிப்பு வர, ஷில்பா அவளதை பற்றி சொல்ல,  “என்னவோ பொண்ணுங்க இப்போல்லாம் படிப்புக்கும் வேலைக்கும் வீட்டை விட்டு எவ்வளோ தூரம் போகுதுங்க வருதுங்க..” என்றவர்,

“நீ சொல்லும்மா…” என்று மானசாவிடம் கேட்க, அவளும் அவளின் குடும்பம் பற்றி சொல்ல,

சரியாய் அவள் “எங்க அம்மா இல்லை…” என்று சொல்லும்போது சித்து இவர்களுக்கு ஜூஸ் கொண்டு வந்துக் கொடுத்தான்.

அதனைச் சொல்கையில் மானசா முகத்தினில் வருத்தமோ, இல்லை ஏக்கமோ எதுவும் இருந்ததாய் தெரியவில்லை. ஆனால் அவளின் அந்தத் தொனி அதனை வெளிப்படுத்தியது. இதுநாள் வரைக்கும் அம்மா இல்லை என்ற நிலை எண்ணி அவள் வருந்துமளவு அவளின் வாழ்வில் எதுவுமே நடந்ததில்லை. ஆனாலும் அம்மா இல்லை என்றால் அது இல்லை என்றுதானே அர்த்தம்.

அம்மா இருந்திருந்தால்???!!

இன்னும் பல பல மாற்றங்கள் வந்திருக்கலாமோ அவளின் வாழ்வில்.

என்னவோ சித்துவின் அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லை என்று கேட்டதும், மானசாவிற்கு காரணமே இல்லாத ஒரு பிடிவாதம் சென்று பார்க்கவேண்டும் என்று.

காரணமே இல்லாது கோபங்கள் வருவது போல், இப்பிடிவாதத்திற்கும் காரணம் இல்லை அவளுக்கு. இன்று சித்துவின் அம்மாவோடும் அப்பாவோடும் பேசுகையில் என்னவோ ஒரு புது உற்சாகம். அவளுக்கு விபரம் தெரிந்து அவளின் அப்பாவோடு அம்மா அமர்ந்து இப்படி பேசியதில்லை.

ஒவ்வொரு பேச்சிற்கும், மீனா பூபதியை பார்த்து சிரிப்பதோ, இல்லை, பூபதி அவ்வப்போது “ரொம்ப அலட்டிக்காத..” என்று சொல்வதெல்லாம், ஒருவித சுவாரஸ்யமும், ரசனையும் கொடுத்தது மானசாவிற்கு.

ஷில்பாவிற்கு அப்படியில்லை, மானசாவின் பிடிவாதத்தால் காண வந்திருக்கிறோம். இங்கே இவர்கள் நன்றாய் பேச, அவளும் பேசினாள் அவ்வளவு தான்.

ஆனால் மானசாவிற்கு இவை எல்லாம் வேறு மாதிரி ஒரு உணர்வு கொடுத்தது நிஜம்.

“என்ன மானசா அப்படி பாக்குற..” என்று மீனா கேட்க,

“ஒண்ணுமில்ல ஆன்ட்டி.. அம்மா இருந்திருந்தா, அங்க எங்க வீட்லயும் என் பிரண்ட்ஸ் கூட அப்பா அம்மா இப்படிதான் உட்கார்ந்து பேசிருப்பாங்களோன்னு தோணிச்சு அதான்..” என்றவள்,  “ம்ம் ஜூஸ் நல்லாருக்கு…” என்று சொல்லிக் குடிக்க, மற்றவர்களுக்கு தான் நொடியில் மனம் கனத்துப் போனது.

அனைவருமே அமைதியாகவே இருக்க “என்ன எல்லாம் இப்படி சைலண்டா இருக்கீங்க.. சைலென்ட்னாலே எனக்கு அலர்ஜி..” என்று சொல்லி மெதுவாய் புன்னகை பூக்க, சித்திரைச் செல்வனுக்கு என்னவோ இன்றைய மானசா புதிதாய் தெரிந்தாள்.

மீனாதான் “இப்போ என்ன.. என்னோட போன் நம்பர் தர்றேன்.. உனக்கு எப்போல்லாம் பேசணுமோ எனக்கு பேசு..” என்று சொல்ல,

“தேங்க்ஸ் ஆன்ட்டி..” என்றவள், சித்திரைச் செல்வனைப் பார்த்தாள்.

“என்னை இதுல இழுக்கக் கூடாது…” என்றவன்,  “ம்மா நீ ரெஸ்ட் எடுக்கிறதுன்னா எடு.. நாங்க ஹால்ல கூட இருக்கோம்..” என,

“போடா.. என்னைப் பார்க்கன்னு வந்திருக்காங்க.. சும்மா என்னை படு படுன்னு சொல்லிட்டு.. எப்போ பார் இதேதான் ம்மா சொல்றான்.. ஹாஸ்பிட்டல்ல படுத்தே தான் இருந்தேன்..” என்றவர், “நானும் மெதுவா நடந்து ஹாலுக்கு வரேன்..” என,

“ப்பா…” என்றான் பூபதியிடம்.

“அவளை கொஞ்சம் ப்ரீயா விடு செல்வா..” என்று அவரும் சொல்ல, பின் என்ன மீனாவை மானசாவும், ஷில்பாவும் அழைத்து வர “ஆன்ட்டி இதெல்லாம் இப்போ நார்மல் ஆப்ரேசன் தான்.. நீங்க நல்லாத்தான் இருக்கீங்க.. சோ கேசுவலா இருங்க.. கீழ மட்டும் உட்கார்ந்து எந்திரிக்க வேண்டாம்…”  என, சித்திரைச் செல்வனுக்கு உள்ளே எரிந்துகொண்டு இருந்தது.

பாஸ்கரோ அடுத்த ஒரு ஐந்து நிமிடத்தில் “கிளம்பலாமா..” என,

ஷில்பாவும் “ம்ம் பூவாம்…” என, மானசா சரி என்று தலையை ஆட்டினாள். ஆனால் கிளம்பிட மனமில்லை.

ஏனோ இந்த வீட்டுச் சூழலில் இருக்க மனம் ஆசைப்பட்டது அவளுக்கு.  

“அட இரு டா.. மதியம் சாப்பிட்டு போலாம்..” என்ற மீனா, மகனைப் பார்த்து “நீயும் இவனும் போயி டவுன்ல வாங்கிட்டு வாங்க..” என,

பாஸ்கரோ கேட்டேவிட்டான் “ஏம்மா.. சின்னதுல இருந்து எத்தன தடவ நான் வந்திருப்பேன்… ஒருநாளாவது இப்படி கடைல வாங்கி வச்சிருக்கீங்களா..??” என்று.

அவன் கேட்ட விதத்தில் சித்துவிற்கே சிரிப்பு வந்துவிட, “டேய் வா போவோம்…” என்றான்.

“என்னது வா போவோமா?? எதுக்கு.. நாங்க கிளம்புறோம்..” என்று பாஸ்கர் திரும்ப சொல்ல,

“ஆன்ட்டி.. அதெல்லாம் வேணாம்.. நாங்க கிளம்புறோம்..” என்றாள் மானசாவும்.

எதற்கு வீண் வேலை வைப்பானே என்று. அவளுக்குத் தெரிந்தது சித்திரைச் செல்வனிற்கு தாங்கள் வந்தது பிடிக்கவில்லை என்று. இதில் விருந்து வேறு அதுவும் கடையினில் வாங்கி வைத்து உண்டுவிட்டு போனால் அவ்வளோதான் என்றே நினைக்க,

பூபதி “அதெல்லாம் இல்ல.. இப்படி இவன் பிரண்ட்ஸ் வர்றது எல்லாம்  அபூர்வம்.. வந்தா இதோ இவன் மட்டும் தான் வருவான்.. இருந்து சாப்பிட்டு.. சாயங்காலம் போலாம்..” என,

அதற்குமேலே சித்திரைச்செல்வனால் எதையும் சொல்லவும் முடியவில்லை, இவர்களாலும் எதையும் மறுக்கவும் முடியவில்லை.

சித்திரைச்செல்வனும், பாஸ்கரும் ஹோட்டல் சென்று வாங்கிவரச் செல்ல “உங்களுக்கு என்ன சாப்பாடு ஆன்ட்டி…” என்றாள் மானசா.

“மைல்ட் புட் தான் மா.. தனியா சமைச்சிருக்கு…” என்று பூபதி சொல்ல, இப்படியே அவர்களின் பேச்சு நீண்டது..

சித்திரைச் செல்வனும், பாஸ்கரும் திரும்பி வரும் முன்னம், இவர்கள் நால்வருக்கும் நல்லொதொரு நட்பு ஏற்பட்டது தான் நிஜம். வயது பிள்ளைகள் வந்திருக்கிறார்கள் என்று அங்கே யாருமே தவறாய் நினைக்கவில்லை.

பாஸ்கரை எப்படி பார்த்தனரோ அப்படியே தான் பெண்களையும் பார்க்க, இவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் தெரியவில்லை. வீட்டிற்கு பின்னே இருக்கும் அவர்களின் வயல், சிறிய தோட்டம் எல்லாம் பூபதி அழைத்துச் சென்று காட்ட, மானசாவிற்கு அத்துனை பிடித்தது.

ஒரு பக்கம் கோழிகள் தானியங்கள் மேய்ந்துகொண்டு இருக்க, இன்னொரு புறம் மாட்டுத் தொழுவம் வேறு.. ஆடுகள் கூட இருந்தது.

“இதெல்லாம் உங்க ஆன்ட்டி வேலைதான்.. இவங்க எல்லாம் தான் அவளுக்கு பிரண்ட்ஸ்.. எதாவது பேசிட்டு தான் இருப்பா இவங்களோட..” என்று பூபதி சொல்கையில் அவர் முகம் காட்டிய புன்னகை கண்டு,

“அங்கிள் உங்க பையன் சிரிக்கும் போது அப்படியே உங்களை மாதிரி…” என்றாள் மானசா.

மனதில் எதையும் வைத்துக்கொள்ளாது, வெளிப்படையாய் அவள் சொல்லிட, பூபதிக்குத்தான் பதிலுக்கு மேலும் ஒரு சிரிப்பினை சிந்திட வேண்டிய நிலை.

சுற்றிக்காட்டுகையில் அவரின் பேச்சினில் பெரும்பகுதியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது மீனா தான்.

உள்ளே சென்றதுமே மீனாவிடம் மானசா முதலில் சொன்னது “ஆன்ட்டி அங்கிள் உங்களை ரொம்ப லவ் பண்றார்…” என்றதுதான்.

ஷில்பா கூட “மனு…!!!” என்று அவளின் தொடையில் கிள்ள, அதனைப் பார்த்து மீனாவிற்கு அப்படியொரு சிரிப்பு. 

“என்ன ஆன்ட்டி..??”

“இதுக்கு பேரு லவ்வுன்னு நீங்க சொல்றீங்க.. இதுதான் வாழ்க்கை.. புரிதல்னு நாங்க சொல்றோம்..” என்றார் மீனா.

“ம்ம்…” என்று பெண்கள் இருவரும், தலையினை அசைக்க, “எப்படி இருக்கு எங்க வீடு… இனி நான் எந்திரிச்சு பார்த்தா தான் தெரியும்.. அப்பாவும் புள்ளையும் என்ன உருட்டி வச்சிருக்காங்களோ..” என்று சொல்ல,

ஷில்பா அமைதியா சிரிக்க, “சூப்பரா இருக்கு ஆன்ட்டி.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஊட்டிலயும் வீடு சுத்தி சீனரிஸ் தான். அது ஒரு விதம் இது ஒரு விதம்… அது ஒரு ஆசை கொடுக்கும்.. இது ஒரு அமைதி கொடுக்குது…” என்று மானசா சொல்ல,

ஷில்பா கூட அவள் சொன்னதைக் கேட்டு சிறிது வியப்பாய் அவளைக் காண “என்ன சிப்ஸ்..” என்றாள் மெதுவாய்.

“ஒன்றுமில்லை…” என்று ஷில்பா தலையை ஆட்ட, மானசா கவனிக்கவில்லை பூபதியும் மீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதை.

 

Advertisement