Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 5 (1)

பாஸ்கர் சித்திரைச்செல்வனோடு பேசிடவேண்டும் என்று நேரம் பார்க்க, அந்த நேரம் மட்டும் அமைவதாய் இல்லை. காரணம் சித்திரைச்செல்வன் ஒரு வாரம் அங்கே இல்லவே இல்லை. சித்திரைச்செல்வனின் அம்மாவிற்கு உடல் நலமில்லை என்று அவனின் அப்பா அழைத்துவிட, அப்படியே கிளம்பிவிட்டான்..

அங்கே சென்ற பிறகு  “பாஸ்கி அம்மாக்கு யூட்ரஸ் ப்ராப்ளம்டா.. ஆப்ரேசன் பண்ணனும் சொல்லிட்டாங்க. லீவ் சொல்லிட்டேன்… வேற இம்பார்டன்ட் அப்படின்னா கால் பண்ணு..” என்றுவிட்டான் சித்து.

“ஓகே டா.. டேக் கேர்.. வீட்டுக்கு வரவும் சொல்லு.. ஏதாவது ஹெல்ப் வேணுமா??” என,

“இல்லடா.. சித்தி வர்றாங்க ஊர்ல இருந்து.. சோ ஒன்னும் பிராப்ளம் இல்ல..” என்று சித்துவும் சொல்லிட, இதோ அப்படியே நான்கு நாட்களும் ஓடிவிட்டது.

முதல் இரண்டு நாள் வகுப்புகள் பாஸ்கரே எடுத்துவிட, மூன்றாவது நாள் மானசா கேட்டாள் “பாஸ்கிண்ணா எங்க உங்க பிரண்டு…” என்று.

“அவன் லீவ்…”

“அது தெரியுது.. ஏன் லீவ்ன்னு கேட்டேன்..” என்றவள், பாஸ்கரை ஒரு முறை முறைக்க,

“அவன் அம்மாக்கு உடம்பு சரியில்ல.. அதான்…” எனும் முன்னமே,

“அப்படியா?? என்னாச்சு?? இப்போ எப்படி இருக்காங்க..?? பேசினீங்களா அடுத்து??” என்று அடுக்கடுக்காய் மானசா கேள்விகளை தொடுக்க, அவளின் அருகில் இருந்த ஷில்பா கூட,

“ஷ்… மனு… கூல் டவுன்…” என, பாஸ்கரோ ‘ஏன் இப்படி?’ என்று பார்த்து வைத்தான்.

“என்ன பாஸ்கிண்ணா…” என்று மானசா கேட்க,

“முழுசா சொல்லி முடிக்கிறதுக்குள்ள எவ்வளோ கேள்வி..” என்றவன், முழு விபரமும் சொல்ல,

“ஓ…!!” என்றாள் அடுத்து மெதுவாய்.

என்னவோ திடீரென்று மானசாவின் முகம் வாடியது போல் இருந்தது. சொல்லாதுகொள்ளாது அவளின் முகத்தினில் ஒரு யோசனையும் வந்து அமர்ந்துகொள்ள, அதன்பின் அவள் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஷில்பாவிடம் கூட எதுவும் இதைப்பற்றி பேசவில்லை. அதை மற்றவர்களும் பெரிதாய் எடுக்கவில்லை. ஆனால் என்னவோ ஒன்று அவளின் மனதை போட்டு அழுத்திக்கொண்டு இருந்தது.

இரண்டு நாட்கள் அமைதியாய் இருந்தவள், பின் அன்றைய தினம் இவர்களுக்கு லேப் என்று சொல்லவும், வந்ததுமே 

“பாஸ்கிண்ணா, சித்து சார்க்கிட்ட பேசினீங்களா..??” என்றாள்

“இல்ல மானசா…” என,

“என்ன பிரண்ட் நீங்க..??” என்றாள் பட்டென்று.

“ஏய் மனு…” என்று ஷில்பா அதட்ட,

 “பின்னே என்ன சிப்ஸ்.. நம்ம எல்லாம் பிரண்ட்ஸ் தானே.. பிரண்ட்ஸ் வீட்ல ஒருத்தருக்கு முடியலன்னா கேட்கணுமா இல்லையா??” என,

“ஏதாவது இம்பார்ட்டன்ட் அப்படின்னா அவனே கால் பண்றேன் சொல்லிருக்கான். மோஸ்ட்லி இன்னிக்குதான் வீட்டுக்கு வந்திருப்பாங்க.. அதான் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு..” என்றான் பாஸ்கர்.

“ம்ம்ம்..” என்றவள் மனது சமாதானம் ஆகிடவில்லை.

வகுப்பிலும் அவளின் கவனும் இல்லை. பாஸ்கர் சொல்லிக் கொடுத்ததை தப்புத் தவறாகத்தான் செய்துகொண்டு இருந்தாள்.

ஷில்பா பார்த்தவள் “நீ செய்யவே வேண்டா…” என்று சொல்ல,

“ம்ம்ச் சிப்ஸ்…” என்றவள், அப்படியே அங்கேயே அமர்ந்துகொள்ள “எந்தாணு…” என்று வந்து அக்கறையாய் ஷில்பா கேட்க,

“நாளைக்கு வீக்கென்ட் தானே.. நம்ம போய் சித்து சார் அம்மாவ பார்த்துட்டு வரலாமா..” என,

“எந்தா…??!!!!” என்று கேட்ட ஷில்பாவின் கண்கள் முட்டையாய் விரிந்துவிட்டது..

“என்ன டி…” என்று கேட்கும்போதே, பாஸ்கர் அங்கே வந்துவிட “என்ன நான் சொன்னது முடிஞ்சதா..” என்று இவர்களிடம் வர,

“ம்ம்ஹும்…” என்றாள் ஷில்பா..

“அப்போ?? இவ்வளோ நேரம் என்ன பண்ணீங்க..” என்றவனிடமும், மானசா அதையே சொல்ல,

அவனும் “என்னது??!!” என்று அதிர்ந்து கேட்க,

“இப்போ நான் என்ன கேட்கக் கூடாததை கேட்டுட்டேன்.. ரெண்டு பெரும் இப்படி ஷாக் ஆகுறீங்க…” என்றாள் மானசா இலகுவாய்.

“பின்ன…” என்றவன் “அதெல்லாம் அப்படி போகக் கூடாது..” என்றும் சொல்ல,

“ஏன்.. ஏன் போகக் கூடாது..” என்றாள் மானசா.

“அடடா.. ம்மா.. தாயே.. நம்ம போறது அவங்களுக்கு புடிக்குமோ என்னவோ.. இப்படி கேர்ல்ஸ் எல்லாம் அங்க போனதில்ல.. நான் போறதுங்குறது வேற.. புரிஞ்சதா…” என்று பாஸ்கர் சொல்ல,

“நம்ம ஜஸ்ட் பார்க்கத் தானே போறோம்…” என்றாள் இறங்கிய குரலில்.

“அதுதான்.. உனக்கு இது ஜஸ்ட் பாக்குறது. பட் அங்க எல்லாம் எப்படி எடுத்துப்பாங்க சொல்ல முடியாது. வில்லேஜ் வேற.. அவங்க வீட்ல கெஸ்ட் வேற இருக்காங்க…” என, மானசா சமாதான் ஆகிடவே இல்லை.

“என்ன மனு நீ…” என்று ஷில்பா கடிய,

“நம்ம போய் பார்த்துட்டு வரலாம்..” என்றாள் பிடிவாதமாய்.

‘இதென்னடா இது…’ என்று பாஸ்கர் முழிக்க, ஷில்பா “வேணாம் மானசா.. சித்து சேட்டா வரட்டும்..” என,

“உன் சித்து சேட்டாக்கா ஆப்ரேசன்.. இல்லைதானே.. அவங்கம்மாக்கு தானே..” என்றவள்,

“பாஸ்கிண்ணா.. நாளைக்கு மார்னிங் டென்னோ கிளாக் நானும் இவளும் ரெடியா இருப்போம்.. என்ட்ரன்ஸ்ல வெய்ட் பண்ணுவோம்.. வந்து பிக்கப் பண்ணிட்டு போறீங்க..” என்றாள் முடிவாய்.

‘இந்த பொண்ணு இவ்வளோ பிடிவாதம் பிடிக்குது.. அவனுக்கு சொன்னா, அவன் ஒருபக்கம் கத்துவானே..’ என்று பாஸ்கர் யோசிக்க,

“அதெல்லாம் உங்க பிரண்ட்கிட்ட சொல்லவேண்டாம். நம்ம சர்ப்ரைஸா போய் நிப்போம்…” என்று இரு புருவத்தையும் மாற்றி மாற்றி தூக்கி அபிநயம் காட்டினாள் மானசா.

‘இதுவேறையா??’ என்று பாஸ்கியும், ஷில்பாவும் பார்க்க, அவர்களின் மௌனத்தை தானே சம்மதமாகவும் ஏற்றுக்கொண்டாள் மானசா.

இந்த பாஸ்கராவது சித்திரைச்செல்வனிடம் ஒருவார்த்தை சொல்லி இருக்கலாம். அவனது நேரமோ என்னவோ, மானசா சொல்லுக்கு அவன் மனம் கட்டுப்பட்டுவிட, மறுநாள் காலை பாஸ்கர் அவன் வீட்டின் கார் கொண்டு வர, மூவரும் கிளம்பிப் போய் நிற்க, சித்திரைச் செல்வன் திகைத்துப் போய் தான் பார்த்தான்.

“எந்தா சாரே.. எக்ஸ்பெக்ட் பண்ணலையா??” என்று மானசா புன்னகை முகமாய் கேட்க,

அவளை ஒரு பார்வை பார்த்தவன் “என்னடா இது..” என்று பாஸ்கரைப் பார்த்து பல்லைக் கடிக்க,

ஷில்பா தான் “அம்மே எப்ப்டியுண்டு சேட்டா..” என்று கேட்டு சூழலை மாற்றினாள்.

அதற்கு சித்து பதில் சொல்லும் முன்னமே “இவ்வளோ தூரம் வந்திருக்கோம்.. உள்ள வாங்கன்னு சொல்ல மாட்டீங்களா.. பாஸ்கிண்ணா வாங்க நம்ம கிளம்புவோம்..” என்று மானசா சொல்ல,

அதற்குள் பூபதி வந்துவிட்டார் “செல்வா.. யார் வந்திருக்கா…” என்று கேட்டபடி.

பாஸ்கரைத்தான் முதலில் பார்த்தவர் “டேய் வா டா.. என்ன அதிசயமா இந்த பக்கம்…” என்றவர், அவனின் அருகே இரு பெண்பிள்ளைகள் நிற்பது கண்டு கேள்வியாய் மகனைப் பார்க்க,

“அ.. அதுப்பா.. இவங்க.. சர்டிபிகேட் கோர்ஸ் பண்றாங்க… என் ஸ்டூடண்ட்ஸ்.. மானசா அண்ட் ஷில்பா…” என்று அவர்களை அறிமுகம் செய்து வைக்க,

“வாங்கம்மா…” என்றார் அவர்களிடமும்.

ஆனாலும் அவரின் முகத்தினில் ஒரு ஆச்சர்ய பாவனை. மகனின் முகத்தினை வேறு அவ்வப்போது அவர் பார்க்க,

“ஹாய் அங்கிள்…” என்று மானசா சொல்ல, ஷில்பா ஒரு புன்னகை மட்டுமே.

“இவங்களுக்கு எதோ சர்வே வொர்க்..” என்று சித்து சொல்லும்போதே, “ஆன்ட்டிக்கு ஆப்ரேசன் சொன்னாங்க அங்கிள்.. இப்போ எப்படி இருக்காங்க..” என்று மானசா கேட்க,

இப்போதும் பூபதி மகனின் முகம் பார்த்தவர் “முதல்ல உள்ள கூப்பிடு செல்வா.. இதென்ன பழக்கம் வாசல்ல நிக்க வச்சு பேசுறது..” என்றவர்,

“நல்லாருக்காம்மா.. உள்ள வாங்க…” என்றார்.

பாஸ்கர் தப்பித் தவறி கூட நண்பனின் முகத்தினை பார்க்கவில்லை.. மானசா ஷில்பாவினோடு சேர்ந்தே உள்ளேச் செல்லப் பார்க்க,

“டேய்…” என்று அவன் தோளை இறுகப் பற்றி நிறுத்தினான் சித்திரைச் செல்வன்.

“மச்சான்.. நானே ஏக கடுப்புல வந்திருக்கேன்.. நீயும் ஆரம்பிக்காத…” என்று பாஸ்கர் முந்திக்கொள்ள,

“சரியா இருபது நிமிஷம் தான் டைம்.. இவங்கள கூட்டிட்டு நீ கிளம்புற..” என்று சொல்லியபடிதான் சித்து அவனை உள்ளே அழைத்துச் செல்ல, அங்கே மானசாவும், ஷில்பாவும், மீனாவின் அறையினில் இருப்பது தெரிந்தது.

பாஸ்கர் வெளியே நின்றே உள்ளே பார்க்க, அவனைப் பார்த்த மீனா “என்னடா இப்போதான் வர வழி தெரிஞ்சதா..” என்றவர்,

“இப்படி நல்ல பிரண்ட்ஸ் இருக்காங்கன்னு எல்லாம் நீ சொல்லலை சித்து..” என்றார் பெண்களைக் காட்டி.

சித்திரைச் செல்வன் அமைதியாய் நிற்க “ம்மா இதெல்லாம் டூ மச்…” என்றான் பாஸ்கி.

சித்திரைச் செல்வனின் வீடு சற்றே பழங்கால ஓட்டு வீடு. ஆனால் சகல வசதிகளும் படைத்த முற்றம் வைத்த வீடு. வீட்டிற்குள் நுழையும் போதே, மானசாவிற்கு அதன் கட்டமைப்பு பார்த்து அத்துனை பிடித்து போனது.

Advertisement