Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 4

நாட்கள் இப்படி நகர, மானசாவிற்கும் சரி ஷில்பாவிற்கும் சரி வகுப்புகள் செல்வது அப்படியொன்றும் இம்சையாய் எல்லாம் இருக்கவில்லை. என்ன சித்திரைச் செல்வன் ஏதாவது சொல்லாமல் இருக்கும் வரைக்கும்.. மானசா அதற்கு சண்டைக்குச் செல்லாமல் இருப்பது வரைக்கும் அனைத்தும் சுமுகமாய் சென்றது.

அவ்வப்போது சண்டைகள் வரத்தான் செய்தது. ஆனால் பாஸ்கிதான் ரெப்ரீ வேலை பார்த்துக்கொண்டு இருந்தான்.

‘வர வர என் வேலையே மாத்திட்டீங்கடா..’ என்று நொந்துகொண்டான்.

‘இது நீயா தேடிக்கிட்டது..’ என்று சித்துவும் சொல்ல, ‘எல்லாம் என் நேரம்டா சாமி..’ என்பான் பாஸ்கி.

 இப்போதெல்லாம் மாலை வேளைகளில், மானசாவிற்கு மாடியில் இருந்து சற்று தள்ளி தெரியும் மைதானத்தில் மற்றவர்கள் விளையாட்டினை பார்ப்பது என்பது ஒரு பொழுது போக்காகவே ஆனது. அதிலும் சித்து விளையாடுகிறான் என்றால் சொல்லவே வேணாம். முடியும் வரைக்கும் நின்று பார்த்துவிட்டுத்தான் போவாள்.

அது அவனுக்கும் தெரியும். இருந்து அதைப்பற்றி பாஸ்கரிடம் கூட மூச்சு விட்டானில்லை. மானசாவிடமும் கேட்டானில்லை. அவளும் அவன் கேட்கவேண்டும் என்றெல்லாம் பார்க்கவில்லை.

பிடித்திருக்கிறது பார்க்கிறாள் அவ்வளவே.. அன்றும் அப்படித்தான் பார்த்துவிட்டு வந்தவள் கீழே வந்தவள் “ஹே சிப்ஸ்.. செம மேட்ச் தெரியுமா?? நீயும் வந்திருக்கலாம்.. உன்னோட சித்து சேட்டா தான் செமையா ஆடினார்…” என்று காலை ஆட்டியபடி கட்டிலில் அமர்ந்துகொண்டு பேச, படுத்திருந்த ஷில்பாவிடம் இருந்து

‘ம்ம்..’ என்ற முனகல் மட்டுமே வந்தது.

“என்ன சிப்ஸ்… நான் பேசிட்டே இருக்கேன் நீ ம்ம் சொல்ற…” என்றவளுக்கு என்ன தோன்றியதோ,

“என்னாச்சு???” என்றபடி எழுந்து வந்து பார்க்க, “தல வேதனை..” என்றாள் ஷில்பா.

“ஓ.. திடீர்னு என்ன??” என்றவள், “டேப்லெட் எதுவும் போட்டியா?” என்று விசாரிக்க, இல்லை என்று ஷில்பா சொல்ல,

“என்கிட்டே சொல்றதுக்கு என்ன??” என்றபடி அவளிடம் இருக்கும் மாத்திரைக்களை பார்க்க, தலைவலிக்கு எடுக்கும் மாத்திரை மட்டும் இல்லை.

‘அய்யோடா…’ என்று தனக்கு தானே சொல்லியபடி “ஓகே.. நீ தூங்கு.. நான் மேம்கிட்ட இருக்கா பாக்குறேன் இல்லன்னா மெடிக்கல்ஸ்ல வாங்கிட்டு வர்றேன்..” என்றவள், நேராய் விடுதி பொறுப்பாளரை காணச் செல்ல, அவரோ மீட்டிங் சென்றிருப்பதாய் சொன்னார்கள்.

“ஹ்ம்ம் வெய்ட் பண்றதுக்கு நம்மலே மெடிக்கல் ஷாப் போயிடலாம்..” என்றெண்ணியப்டி, லெட்ஜரில் கையெழுத்து போட்டுவிட்டு, பக்கத்து அறை பெண்ணிடம் அவளின் சைக்கில் வாங்கிக்கொண்டு போனாள் மானசா.

பல்கலைகழகத்தின் நுழைவாயில் அருகே தான் மருந்தகமும் இருந்தது. ஆனால் அது இவர்களின் விடுதியில் இருந்து கிட்டத்தட்ட அரைமணி நேர நடை. மாலை நேரம் இப்போது வெளிச்சம் குறைத்து இருட்டவும் தொடங்கிவிட்டது. மானசாவிற்கு அதெல்லாம் மனதிலே இல்லை..

ஷில்பாவிற்கு முடியவில்லை அவளுக்கு மருந்து வாங்கிச் செல்லவேண்டும் அவ்வளவே.. அது மட்டுமே எண்ணமாய் இருக்க, ஒருவழியாய் போய் மாத்திரைகளைச் செல்லி வாங்கியும் திரும்ப கிளம்பிவிட்டாள்.

ஆனால் வந்தபோது இருந்ததை விட, இப்போது இன்னமும் இருட்டிவிட, ஆள் நடமாட்டம் என்பது சுத்தமாய் இல்லை.. மரம் செடி கொடிகள் நிறைந்த பகுதி வேறு.. விளக்கின் வெளிச்சம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தாலும், செக்கியூரிட்டிகள் எப்போதுமே இருப்பதனால் பயமில்லை என்றாலும் கூட, மானசாவிற்கு கொஞ்சம் பயமாய் தான் இருந்தது.

கடைக்காரர் சொன்னார்தான் “ஹாஸ்டல்ல இருந்து ஒரு போன் போட்டிருந்தா அங்கேயே கொண்டு வந்து கொடுப்போமே ம்மா..” என்று.

அதெல்லாம் அவளுக்கு அப்போது எங்கே நியாபகம் இருந்தது. இப்போது எண்ணி நொந்துகொண்டாள், முதல் நாளே இதெல்லாம் விடுதி பொறுப்பாளர் சொன்னார் தான். இப்போதோ சைக்கிளை வேகமாய் மிதித்து சீக்கிரம் சென்றுவிட வேண்டும் என்று நினைத்தாலும், கொஞ்சம் பயமாகவே இருக்க, தெரிந்தவர்கள் யாரும் வரமாட்டார்களா என்று எண்ணியபடி சைக்கிளை செலுத்தினாள்.

அவளின் நல்ல நேரம், ஆனால் சித்து தான் வந்தான். சித்திரைச் செல்வன் இவளை கவனிக்கவில்லை. சுற்றிலும் இருக்கும் எதையுமே கவனிக்கவில்லை போல, எதிரே இருக்கும் பாதையை மட்டுமே கருத்தில் கொண்டு அவன் இவளைக் கடந்து செல்ல,

‘யார்டா…’ என்று பார்த்தவள் “அட எந்தா சாரே…” என்று சந்தோசமாய் சொல்லியபடி, அவளின் பயம் எல்லாம் பறந்துவிட, வேகமாய் மிதித்து, சித்துவை முந்திக்கொண்டு சென்றாள்.

தன்னை தாண்டி வேகமாய் ஒரு சைக்கிள் செல்லவும் அப்போது தான் கவனித்தான் சித்திரைச் செல்வன் யார் என்று. இவளோ ‘எப்படி???’ என்று பின்னே திரும்பி பார்த்துவிட்டு சைக்கிள் மிதிக்க,

“இவளா?? இந்த நேரத்துல என்ன சுத்திட்டு இருக்கா..” என்று பார்த்தவன், “என்னை வேகமா ஓவர் டேக் பண்ணி போறதா ??” என்று எண்ணிவிட்டு அவளை முந்தினான்..

இப்படியே அவள் முந்த, பின் அவன் முந்தவென இருக்க “ஆண்டவா இப்படியே ஹாஸ்டல் போய் சேர்ந்திடனும்..” என்று மானசா எண்ணியபடி இருக்க, அவளின் சைக்கிள் காலை வாரி விட்டது..

டயர் பஞ்சர்…

“போச்சுடா…” என்று இறங்கியவள் இறங்கிப்பார்க்க, தன்னை முந்தி வருவாள் என்று எண்ணியவன், அடுத்து அரவமே இல்லையென்றதும் சைக்கிளை நிறுத்தியவன் பின்னே பார்க்க, மானசா உதட்டை பிதுக்கிக்கொண்டு நிற்பது தெரிந்தது..

‘என்னடா இது விதவிதமா போஸ் கொடுக்குறா…’ என்று நினைத்தவன் என்னவென்பது போல் பார்க்க “எந்தா சாரே..” என்று சத்தமாய் அழைத்தாள்.

அமைதியான இடம்.. இப்படி சத்தமாய் அழைத்தால் அது இன்னமும் சத்தமாய் கேட்காதா என்ன??

“இவ சர்டிபிகேட் வாங்குறாளோ இல்லையோ என் மானத்தை வாங்கிடுவா…” என்று சிடு சிடுத்தபடி தான் போனான் சித்து. என்னவோ அவளை அப்படியே விட்டுச் செல்லவும் மனமில்லை..

“என்ன???” என்று போனதும் வள்ளென்று விழ, “சைக்கிள் பஞ்சர்…” என்றாள் பாவமாய்..

பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது சித்துவிற்கு. “நல்லா வேணும்…” என்று சிரித்தபடி பார்க்க, “ம்ம்ச்.. என்கூட நீங்களும் சைக்கிள் உருட்டிட்டு வாங்க..” என்று இவள் நடக்கத் தொடங்க,

“ஹேய்.. நில்லு.. என்ன??? பர்ஸ்ட் இப்படி தனியா வந்ததே தப்பு.. பாரு ஏதாவது பொண்ணுங்க இப்படி வர்றாங்களா.. அப்படியே வெளியே வந்தாலும் க்ருப்பா வரணும் தெரியாது… ஏதாவது ஆச்சுன்னா என்ன செய்றது…” என்று இத்தனை நேரம் மனதில் இருந்ததை சொல்ல,

“ஷில்பாக்கு தலைவலி.. அதான் டேப்லெட் வாங்க வந்தேன்…” என்றவள், என்னவோ அவன் திட்டியதற்கு எதுவும் பதில் சொல்லவில்லை.

ஒருவேளை அவன் திட்டியது சரி என்ற எண்ணமோ, இல்லை இவனிடம் இப்போது சண்டையிழுத்து பின் சித்து விட்டுச் சென்றுவிட்டால் எல்லாம் சேர்த்து மானசாவை சமத்து பெண்ணாய் நடந்து வரச் செய்ய,

“ம்ம் மெடிக்கல்க்கு போன் பண்ணாலே கொண்டு வருவாங்களே…” என்றான் சித்து யோசனையாய்..

“அப்போ தோணலை சாரே…”

“ம்ம்ம் மூளைன்னு ஒண்ணு இருந்தாதானே தோணும்..” என்று சித்து முணுமுணுக்க, “எந்தா சாரே..??” என்றாள் எதுவும் அவள் காதில் விழாததால்.

“ஒண்ணுமில்ல.. இனிமே ஏதாவது எமர்ஜென்சின்னா எனக்கோ இல்லை பாஸ்கிக்கோ சொல்லு.. இப்படி தனியா வரவேணாம்.. சேப்டி இல்லை..” என்றவன் பிஜி ஹாஸ்டல் முன்னே இவளை விட்டு, மானசா உள்ளே போன பிறகு தான் சென்றான்..

திட்டினானே தவிர மனதினில் கோபமில்லை. மாறாக ஒரு உற்சாகம் இருந்தது.

‘எவ்வளோ திட்டுறோம்.. கொஞ்சமாது உறைக்குதா பாரேன்.. என்னதான் பொண்ணோ…’ என்றெண்ணி சிரிக்கவும் செய்தான்.

மானசா அறைக்கு வந்தவளோ, முதலில் ஷில்பாவை உன்ன வைத்து பின் மாத்திரை விழுங்க வைத்து, அவள் உறங்கிய பின்னும் கூட இவளுக்கு உறக்கம் வரவில்லை.. ஜன்னல் பக்கத்தில் அவளின் கட்டிலை இழுத்துப் போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டாள்.

பார்வை வெளியே தெரியும் வானத்தையும், நட்சத்திரங்களையும் பார்க்க, மனதோ சிறிது நேரத்திற்கு முன் நடந்தவைகளை நினைத்துப் பார்த்தது. சித்திரைச் செல்வன்.. விடுதியினுள் இவள் செல்வதை நின்று பார்த்துவிட்டு போனதை இவளும் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள் தான்.

சொல்ல முடியாத ஓர் உணர்வு அந்த நொடி தோன்றியதும் நிஜமே..

‘சித்து…. ஹா ஹா எந்தா சாரே சித்து…’ என்று அவளுக்கு அவளே சொல்லியும் பார்த்துக்கொண்டாள்.

என்னவோ அவன் இன்று நடந்துகொண்ட விதம் அப்படி பிடித்தது அவளுக்கு. நிச்சயம் திட்டுவான் என்று எதிர்பார்க்க, அவனோ ஒன்றுமே சொல்லாது சென்றது ஆச்சர்யமாய் இருந்தது. அதாவது அவன் திட்டிய எதுவுமே அவளுக்கு உரைக்கவில்லை அவ்வளவே..                   

‘எமர்ஜென்சின்னா இவனுக்கு கால் பண்ணணுமாமே.. அப்போ எப்போ கால் பண்ணாலும் வருவானா??!!!’ என்று எண்ணியவள், “ஹ்ம்ம் என்னவோ போடா கோவிந்தா..!!!” என்று அவளுக்கே அவளே சொல்லிக்கொள்ள, எப்போது உறங்கினாள் என்பது அவளுக்கே வெளிச்சம்.

அங்கே சித்திரைச் செல்வனும் அப்படித்தான் சொல்ல முடியாத ஒரு உணர்வில் கட்டுண்டு கிடந்தான்.. பாஸ்கரோ என்னாச்சு என்னாச்சு என்று கேட்டது மட்டுமே மிச்சம். பதில் வாங்கிடவே முடியவில்லை..

“டேய் என்னதான்டா ஆச்சு…” என்று கேட்க,

“ம்ம்ச் ஒண்ணுமில்லடா.. ஆமா சாப்பிடலையா நீ..” என்று வாங்கி வந்த பார்சலை காட்ட,

“அப்போ இருந்து சாப்பிடத்தான் உக்காந்து இருக்கேன்.. நீ என்ன கனவுல இருக்க??!!” என்றவன் “என்னடா வர்றபோ எதுவும் காத்து கருப்பு அடிச்சிடுச்சா..” என்று மெதுவாய் விசாரிக்க,

“ஹா ஹா ஹா..!!!” என்று சத்தமாய் சிரித்துவிட்டான் சித்திரைச் செல்வன்.

அவன் சிரிப்பதையே பார்த்த பாஸ்கிக்கு கேட்க நிறைய தோன்றினாலும் வாயை மூடிக்கொள்ள “என்னடா என்ன கேட்கணுமோ கேளு..” என,

“இல்லை வேணாம்.. நான் எதையாவது கேட்டு.. அதுக்கும் வாங்கி கட்டிக்க பிடிக்கலை..” என்றவன் பார்சலை பிரித்து உண்ணத் துவங்க

“அந்த பயம் இருக்கணும் தம்பி..” என்ற சித்திரைச் செல்வனும் உண்ணத் துவங்க, மானசாவும் சரி, சித்திரைச் செல்வனும் சரி அன்றைய மாலைப் பொழுதில் நடந்ததை இருவருமே தங்களின் நட்புக்களிடம் சொல்லிக்கொள்ளவில்லை.

ஆனால் அதற்கு அடுத்த நாளில் இருந்து இவர்களின் வகுப்புகள் எவ்வித பிரச்சனையும் இன்றி செல்ல, பாஸ்கி ஷில்பா இருவருக்கும் ஆச்சர்யமாய் போனது.    

Advertisement