Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 32

“சாரி..” என்று நீல் இருவருக்கும் பொதுவாய் சொல்ல, இருவருமே அதனை காதில் வாங்கவில்லை.

“ஐம் ரியல்லி சாரி…” என்று நீல் இருவரின் முன்னமும் வந்து நின்று சற்றே அழுத்தி சொல்ல, சித்து அவனைப் பார்த்த பார்வையில்,

“சாரி..” என்றான் இறங்கிய குரலில்.

மானசாவோ, அவனை ஏறெடுத்தும் காணவில்லை. அவளின் முன்னிருந்த மடிக்கணினியில் பார்வையை பதித்து இருந்தாள். நாளை ப்ராஜக்ட் வைக்கவேண்டும். சித்து தான் அவளுக்கு உதவிகள் செய்துகொண்டு இருந்தான்.

நீல் அன்றைய மாலை படுத்தவன் மறுநாள் காலை வெகு நேரம் கழித்தே எழ, மானசா கிளம்பி சென்றே இருந்தாள். சித்திரைச் செல்வன் தான் இவனுக்காக காத்திருக்க, மெல்ல எழுந்து வந்தவன் அப்போதும் மன்னிப்பு வேண்டும் பாவனைப் பார்க்க

“கிளம்பி வா.. எனக்கு லேட்டாச்சு..” என்றான் சித்து எதுவும் கேட்காது.

“சித்து.. அது..” என்று எதுவோ சொல்ல வர, “லேட்டாச்சு..” என்றான் சித்து அவனையே உறுத்து பார்த்து.

அதன் பின் நேரம் தாமதிக்காது, நீல் கிளம்பி வந்திட, கல்லூரி செல்லும் வரைக்கும் சரி, அங்கே சென்ற பின்னும் சரி சித்திரைச் செல்வன் அவனிடம் எதுவும் கேட்கவும் இல்லை.

அங்கே மானசாவும் எதுவும் சொல்லாமல் இருக்க, நீலுக்கு மிகுந்த குற்றவுணர்வாய் போனது. மாலை வீட்டிற்கு வந்த பின்னும் கூட இருவரும் அப்படியே இருக்க, அதுவும் மானசா ப்ராஜக்ட் பற்றி சித்துவிடம் பேசிக்கொண்டு இருக்க, நீலுக்கு பொறுக்கவில்லை.

அவனே வந்து மன்னிப்பு கோர, சித்து “வந்து நாளைக்கு ப்ராஜக்ட் முடிக்க பாரு..” என,

“நானே பார்த்துப்பேன்..” என்றாள் மானசா.

நீல் பாவமாய் இப்போது சித்துவை பார்க்க “மனு.. அவனுக்கு என்ன பிராப்ளம்னு நமக்கு தெரியாது.. சோ இப்படி பேசக் கூடாது.. பர்ஸ்ட் முடிக்கவேண்டியத்தை முடிங்க.. தென் பேசிக்கலாம்..” என்றான் சித்திரைச் செல்வன்.

இதுதான் வாய்ப்பென்று நீல் வந்து அமர்ந்துகொள்ள, மானசா ஏகத்துக்கும் அவனை முறைத்தவள் “உன்னோட பார்ட் எங்க?” என்றாள் எரிச்சலாய்.

“என்னோட டேப்ல இருக்கு..” என்றவன் அதனை எடுக்கச் செல்ல, “அதை அங்க வச்சிட்டு நீயேன் இங்க வந்த..” என்றாள் மானசா.

இன்று அவள் என்ன திட்டினாலும் வாங்கிக்கொள்ள வேண்டும் தான் என்றே எண்ணத்தில் நீல் இருக்க, சித்து தான் “மனு…” என்று கண்டிக்க,

அவனின் கண்டிப்பிலும், மனு என்ற அழைப்பில் தெரிந்த உரிமையிலும், நெருக்கத்திலும் நீலே கூட ஆச்சர்யமாய் திரும்பிப் பார்க்க, மனுவோ சித்துவை நேருக்கு நேரே பார்த்து முறைத்துக்கொண்டு இருக்க, இக்காட்சி நீலுக்கு சற்றே வித்தியாசமாய் இருந்தது.

இருவரும் சகஜமாய் பேசி அவன் கண்டது இல்லை. இன்றோ எதுவோ வித்தியாசமாய் பட, அவனுக்கு எதுவும் புரிவதாகவும் இல்லை.

அவனின் டேப் எடுத்து வந்தவன், பின் மானசாவோடு அமர்ந்துவிட அடுத்த இரண்டு மணி நேரம் அவர்களுக்கு வேறு எதுவும் நினைவில் இல்லை. இடையில் சித்து இருவருக்கும் ஜூஸ் கலக்கிக்கொண்டு வந்து கொடுக்க, அதனைப் பருகிய பின்னும் வேலை முடிவதாய் இல்லை.

“என்ன நீல் மேட்ச் ஆகலை..” என்று மானசா சொல்ல,

“லேப்ல டெஸ்ட் பண்ணப்போ எல்லாம் சரியா தானே இருந்தது..” என்று நீலும் சொல்ல, இருவருக்கும் என்ன செய்வது என்று விளங்கவில்லை.    

மானசாவிற்கு நீல் மீதுதான் கோபம் கோபமாய் வந்தது. முழுதாய் ஒரு நாளை வீணடித்துவிட்டான் என்று. கடைசி நேரத்தில் இப்படியெனில் யாருக்குத்தான் கோபம் வராது. கடந்த ஆறு மாத கால படிப்பின் மொத்த வெளிப்பாடு தான் இந்த ப்ராஜக்ட் என்ற நிலையில் இவன் இப்படி குடித்துவிட்டு கவுந்து கிடப்பான் என்று அவள் கண்டாளா என்ன??

நிதானமாய் யோசிக்க வேண்டும் என்று முயன்றாலும் அவளால் அது முடியாது போக “இப்போ யோசிச்சு என்ன செய்ய?? அறிவில்லை உனக்கு.. ரிசர்ச் ஸ்டூடன்ட்னு வெளிய சொல்லாத நீ… ச்சே..” என்று மானசா திட்ட, நீல் ஒன்றும் சொல்லாது தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

இவர்களை தொல்லை செய்யக் கூடாது என்று சித்து அவனின் அறையில் இருந்தவன், பார்க் செல்ல கிளம்பி வெளிவர, அப்போதுதான் மானசா நீலை திட்ட, அவனோ தலை குனிந்து அமர்ந்திருக்க, இவனுக்குமே பார்ப்பதற்கு சங்கடமாய் தான் இருந்தது.

இருந்தும் அவனின் சூழல் என்னவோ என்று தெரியாது ஒருவரை பேசிடக் கூடாது என்று எண்ணியவன் அப்போதும் “மனு…” என்று அதட்ட,

“யூ ஜஸ்ட் ஸ்டாப் இட் சித்து சர்..” என்று அவனையும் பிடித்து கத்தியவள் “கொஞ்சமாவது பொறுப்பா இருக்கியா நீ..” என்று நீலை திட்ட,

“ம்ம்ச் இப்போ உனக்கு என்ன பிராப்ளம் மனு..” என்றான் சித்து.

“லேப் டெஸ்ட் அவன் பண்ணது நான் பண்ணது லாஸ்ட் போர்சன்ல மேட்ச் ஆகலை.. இப்போ என்ன பண்றது..” என்று அவள் கடிய,

“கிவ் டூ மீ..” என்றவன் அவர்களின் அருகே செல்ல, தன்னைப்போல் மானசா அவனுக்கு இடம் விட்டாள்.

இருவரும் இடையில் சித்திரைச் செல்வன் அமர்ந்தவன் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருவரின் ரெக்கார்டையும் சரி பார்க்க, இருவரின் ஆராய்ச்சி முடிவுகளிலும் ஒரு சிறு வேறுபாடு தான் இருந்தது. வேறுபாடு என்று சொல்வதை விட, இது யாருக்கும் நடக்கும் ஒன்று என்று சொல்லலாம்.

“இதுல இருக்க சேஞ்சஸ் பாரு..” என்று சுட்டிக்காட்டியவன், “இதே போல  மிஸ் மேட்ச் ரிப்போர்ட் வந்தா அது ஏன் அப்படி அதை ஜஸ்டிபை பண்ணா போதும்.. ப்ராஜக்ட் அக்சப்ட் பண்ணிப்பாங்க..”

“அது எப்படி அக்சப்ட் பண்ணிப்பாங்க..” என்றாள் மானசா.

“கண்டிப்பா பண்ணிப்பாங்க.. ஒவ்வொரு தியரில ஒவ்வொரு ரிசல்ட்ஸ் சொல்றாங்க.. சோ உன்னோட ரிசல்ட் என்ன தியரி பேசிஸ், இவனோடாது என்ன பேசிஸ்நு வித்தியாசம் காட்டினா போதும்..”

“அப்போ ஸ்டார்டிங்ல இருந்து சேஞ் பண்ணனுமே..” என்றான் நீல்.

எங்கே மானசா திட்டப் போகிறாளோ என்று அவளை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கேட்க “நோ நோ.. எங்க சேஞ்சஸ் ஆகுதுன்னு பாரு. அது என்ன தியரி பேசிஸ்ல வருதுன்னு பாரு.. சோ அதுதான் இதுன்னு சொல்லிடு அவ்வளோதான்..” என்று சித்து சொல்லிக் கொடுக்க,

“பிராடுத்தனம் பண்ணோம்னு ஈசியா பைண்ட் அவுட் பண்ணிடுவாங்க..” என்றாள் மானசா.

“திஸ் இஸ் எ ஸ்மார்ட் மூவ் மனு.. தப்பை மறைக்கல நீங்க.. தப்பை சரி பண்ண தானே வழி தேடுறோம்..” என்று அவன் பொதுவாய் சொல்ல,

மானசாவிற்கு அது அவன் அவனையும் சேர்த்தே சொல்கிறானோ என்று பட “இப்போ என்ன இந்த பேச்சு..” என்றாள் நீல் இருப்பதை மறந்து.

“மானசா..” என்று சித்து எதுவோ சொல்ல வர, “ம்ம்ச் பேசாதீங்க…” என்று கைகளை உயர்த்தியவள்

“ப்ராஜக்ட் மட்டும் அக்சப்ட் பண்ணலை அப்புறம் இருக்கு..” என்று நீலை பார்த்து வார்த்தைகளை துப்பிவிட்டு, “டூ வாட் எவர்..” என்று சொல்லி எழுந்து போய்விட்டாள்.

இனியும் அங்கே இருந்தால், ஒன்று சித்துவை ஒருவழி செய்திருப்பாள், இல்லை நீலை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பாள். தன் நிலை இழந்து பேசிவிடக் கூடாது என்று மானசா எழுந்து சென்றுவிட, சித்து தான் “ப்ரீயா விடு.. நான் சொல்றது போல பண்ணு..” என்று நீலை ஊக்கினான்.

மறுநாள் கல்லூரியில் மானசாவிற்கு நம்பிக்கையே இல்லை. எப்படியும் இதனை தேர்வு செய்ய மாட்டார்கள், ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றே தான் நினைத்தாள். ஆனால் இவர்களின் முறை வந்தபோதும், இருவருமே தங்களின் அராய்ச்சி முடிவினை சொல்லும் போதும், பல பல கேள்விகள் வந்ததுவே தவிர, இறுதியில் முடிவுகள் சொல்கையில்

“வெல் டன்..” என்று அவர்களின் மென்டர் பாராட்ட, நிஜமாய் மானசாவிற்கு நம்பிட முடியவில்லை.

அதிலும் இவர்களின் சமர்ப்பித்த முடிவுகளுக்கு சிறப்பு கிரேடுகள் வேறு கொடுக்க, நீலோ மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனான்.  மானசாவிற்கும் அப்படியே. இருந்தும் நீலை அப்போதும் ஒரு பார்வை பார்த்தவள், மாலை கிளம்பி வருகையில் சித்துவிற்கு “தேங்க்ஸ்..” என,

நீலோ “தேங்க்ஸ் எ லாட் சித்து..” என்று அவனை கட்டிக்கொண்டான்..

“என்ன ஆச்சு??!!” என்று சித்து சிரித்தே கேட்க, “எக்ஸ்ட்ரா கிரேடு பாயிண்ட்ஸ் கொடுத்து இருக்காங்க.. ரியல்லி நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை..” என்று நீல் பேச,

“இப்போ ஓகே வா..” என்றான் மானசாவிடம்.

“ம்ம் ம்ம்..” என்றவள் “பட் ஒவ்வொரு டைமும் நீங்க இப்படி ஹெல்ப் பண்ண முடியாது இல்லையா..” என,

“கண் முன்னாடி இருக்கிற பிரச்னைக்கு தான் முதல்ல சொலுசன் தேடனும்..” என்றான் சித்துவும்.

அவன் சாதாரணமாய் ஏதாவது சொன்னால் கூட அது மானாசவிற்கு நறுக்கென்று பட, “வாட் யூ மீன்..” என்றாள் மானசா கண்களை சுருக்கி.

“நத்திங்.. டுடே உங்களுக்கு என்னோட ட்ரீட் சோ வெளிய போலாம்..” என்று சித்திரைச் செல்வன் சொல்ல, நீல் வேகமாய் சரியென,

“நான்…” என்று மானசா சொல்ல வருகையிலேயே, “நீ வரணும்..” என்று முடித்துவிட்டான் சித்து.

“ப்ளீஸ் மனு..” என்று நீல் சொல்ல, வேறு வழியே இல்லாது வீடு சென்று தயாராகி இவர்களோடு கிளம்ப, நேயாவும் தானும் வருவேன் என்று அடம் பிடிக்க, பின் அவளையும் அழைத்துக்கொண்டு தான் சென்றனர்.

நீலுக்கு, என்னவோ சித்திரைச் செல்வனும், மானசாவும் பேசிக்கொள்வது என்னவோ ஒரு மாறுபாடாய் இருக்க, ஹோட்டல் சென்றதுமே அவன் கேட்டுவிட நினைத்தான்.

இந்தியன் உணவகம் தான் அவர்கள் சென்றது. இருக்கைகள் பார்த்து அமர்ந்ததும் “வந்திடுறேன்..” என்று சித்து எழுந்து செல்ல, நீல் அப்போது கேட்டேவிட்டான் “மனு நீயும் சித்துவும் எப்போ க்ளோஸ் ஆனீங்க??” என, மானசாவிற்கு திக்கென்று ஆனது.

பார்த்து பார்த்து கவனமாய் இருந்தது, இப்போது அர்த்தமில்லாது போனதா??!!

அவளின் அதிர்ந்த முகம் பார்த்து “மனு..” என்று நீல் சொல்ல, “அப்படி எல்லாம் இல்லையே…” என்றாள் வேகமாய்.

“இல்ல.. தோணிச்சு..” என்றவன், அடுத்து சித்து வரவும் பேச்சினை முடித்துக்கொண்டான்.

“ஆர்டர் பண்ணலையா??” என்று சித்து இருவரையும் பார்த்து கேட்க, நீல் “நீயே பண்ணு சித்து.. உன்னோட ட்ரீட் தானே…” என, சித்து மானசாவைப் பார்த்தான்.

“எனக்கொண்ணும் இல்லை….” என்று அவள் சொல்ல,

“நேயா என்ன சாப்பிடுவா??” என்றான் சித்து.

“அவளுக்கு நான் சொல்லிக்கிறேன்..” என்று மானசா சொன்னவள், நேயாவிற்கு அவளுக்கு ஏற்ற உணவினை ஆர்டர் கொடுக்க, சித்து “நீல் நீ பார்த்து சொல்லு..” என்று மெனு கார்டை அவன் பக்கம் தள்ளினான்.

“சித்து…” என்று அவன் பார்க்க “அட சொல்லு டா..” என்றவன், தனக்கும் மானசாவிற்கும் அவனே சொல்ல, இப்போது மீண்டும் நீல் மானசாவை கேள்வியாய் பார்க்க,

“அது.. அன்னிக்கு நான் சொல்லிட்டு இருந்தேன் இதெல்லாம் பிடிக்கும்னு..” என்றாள் சமாளிப்பாய்.

“ஓ..!!” என்று நீல் சொல்ல, மானசா கண்டிக்கும் விதமாய் சித்திரைச் செல்வனைப் பார்க்க, அவனோ அவளை கண்டுகொள்ளவே இல்லை.

நீலுக்கு சந்தேகம் வந்ததுபோல் மற்றவர்களுக்கும் வந்துவிட்டால்??!! பயமாகிப் போனது. அதிலேயே மனது உழன்றுகொண்டு இருக்க, சரியாய் அவளால் உண்ணவும் முடியவில்லை.

எதுவும் யாருக்கும் தெரிந்துவிட்டால் ??!!!

கலவரமாகிப் போனது அவள் முகம்…!!

“மனு…” என்று நேயா எதற்கோ அழைக்க, “எஸ் பேபி….” என்று திரும்பியவள், அவளுக்கு தேவையானதைப் பார்க்க,

“நீ இன்னும் சாப்பிடவே இல்லை மனு..” என்றான் சித்து.

“ம்ம்..” என்றவள், அடுத்து உண்ணத் தொடங்க, நேயா தான் பேசிக்கொண்டே உண்டாள்.

மானசா மறந்தும் கூட யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. சித்து ஆர்டர் செய்தது எல்லாமே அவள் விரும்பி உண்ணும் உணவுகளாய் இருக்க, ஒவ்வொரு வாய் வைக்கும்போதும் அவளுக்கு தொண்டையில் இறங்க அப்படியொரு சிரமம் கொடுத்தது. உண்ணாது எழுந்து செல்லவும் முடியாதல்லவா. நேயாவை கவனிப்பது போல் அவ்வப்போது கவனத்தை திருப்பினாள். நீலும் சித்துவும் தான் பேசியபடி உண்ண, அனைவரும் உண்டு முடித்து, வெளிவர, நேயா அங்கிருந்த விளையாட்டு கூடம் செல்லவேண்டும் என்று சொல்ல,

“நோ நேயா..” என்றாள் மானசா.

“ப்ளீஸ் மனு…” என்று நேயா நகர மறுக்க, “நோ..” என்று மானசாவும் மறுக்க, இப்போது நேயா நீலையும் சித்துவையும் பார்த்தாள்.

“அங்க என்ன பார்வை..” என்று மானசா சொல்லும்போதே, “கம் பேபி.. நம்ம போலாம்..” என்று சித்து அவளைத் தூக்கிக்கொள்ள,

“நோ… டைம் ஆச்சு.. கிளம்பலாம்..” என்று அவனிடமும் மானசா மறுக்க,

“ஜஸ்ட் டென் மினிட்ஸ் தானே விளையாடட்டும்..” என்றான் சித்து.

“அவ டென் மினிட்ஸ்ல எல்லாம் வரமாட்டா..”

“கொஞ்ச நேரம் லேட்டான தப்பில்ல மனு..”

“எனக்கென்ன.. யுவர் விஷ்..” என்றவள் முகத்தை திருப்ப, “மனு ப்ளீஸ் மனு…” என்று நேயா சொல்ல, அதன் பின்னே ஒரு மணி நேரம் விளையாட்டு மட்டும்தான்.

நேயாவை கிளப்பி வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட, “மனு அவளை விட்டுட்டு வா…” என்று நீல் சொல்லவும், மானசாவும் நேயாவை வீட்டில் விட்டு வர

“எதுக்கு கூப்பிட்ட நீல்…” என்றபடி வந்தாள் மானசா.

“சித்து கம் ஹியர்..” என்று அவனையும் அழைத்தவன் “சாரி அண்ட் தேங்க்ஸ்..” என்று இருவருக்கும் பொதுவாய் சொல்ல,

“அடடா..!!” என்ற பார்வை மட்டுமே இருவரிடமும்.

“மறுபடியும் என்னை திட்ட வைக்காத..” என்று மானசா இலகுவாய் சொல்ல,

“என்ன ப்ராப்ளம் நீல்..” என்றான் சித்து.

“ம்ம் ப்ரேக் அப்..” என்று நீல் பார்வையை எங்கோ வைத்துக்கொண்டு சொல்ல, அதன் தாக்கம் உணர்ந்திருந்த இருவருக்குள்ளும் ஒரு மெல்லிய அதிர்வு.

“நீல்…!!” என்று மானசா அதிர்ந்து விழிக்க, சித்திரைச் செல்வனோ எதுவும் பேசினான் இல்லை. இங்கே தான் ஏதாவது சொல்லப் போக, அது அருகில் இருக்கும் இன்னொருத்தியின் மனதினையும் கிழிக்கும் என்பது தெரியாதா என்ன??!!

“எஸ்… என்னால அவளை நல்லா பார்த்துக்க முடியாதாம்.. அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா..” என்று நீல் எங்கோ பார்வை வைத்து சொல்ல,

“அதுக்கு.. அப்படி பண்ணுவியா நீ..” என்றாள் மானசா.

அவளுக்கும் தெரியும். நீலுக்கு ஒரு காதல் உள்ளது என்று. ஆனால் இப்படியாகியது என்று இப்போது தானே தெரிந்தது. அவனை சமாதானம் செய்கிறேன் என்று மானசா எதையோ பேசிக்கொண்டு இருக்க,

“நீல்.. கொஞ்சம் யோசி.. ஐ டோனோ ஹூ இஸ் ஷி.. பட் இதுவே உங்களோட மேரேஜ்க்கு பின்ன அவ சொல்லிருந்தா இட் வில் ஹர்ட் யு மோர்…” என்று சித்து நிதானமாய் சொல்ல,

‘என்ன சொல்கிறான் இவன்..’ என்றுதான் இருவரும் பார்த்தனர்.

மானசா முகத்தினில் ஒரு பாவனை என்றால், நீல் முகத்தினால் குழப்பங்களோட கூடிய கேள்விகள்.

“எஸ் நீல்.. செட்டாகலன்னு அவளுக்கு தோணிருக்கு.. ஐ மீன் உன்னால அவளை சரியா பார்த்துக்க முடியாதுன்னு அவளுக்கு தோணிருக்கு.. பிராங்க்லி சேயிங் போர் இயர்ஸ் முன்னாடி எனக்கும் இப்படி தோணிச்சு.. என்னால அவளை சரியா பார்த்துக்க முடியாதோன்னு..” என்று சித்து சொல்லி நிறுத்த,

நீலின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, மனுவோ அப்படியே அதிர்ச்சியில் உறையத் தொடங்கினாள்.

‘என்ன இது.. இவன் என்ன பேசுகிறான்..’ என்று..!!

“எஸ் நீல்… எனக்கும் ஒரு லவ் இருந்தது.. இப்பவும் இருக்கு.. எனக்குள்ள..” என்றவன் பார்வை மானசாவை தொட, அவளோ இமைக்க மறந்து இருக்க,

“அப்.. அப்புறம்..” என்றான் நீல்.

“அப்போ எனக்குன்னு எதுவுமே இல்லை.. அப்பாவோட பணம்.. அதுல சாப்பாடு.. யுனிவர்சிட்டி ஸ்காலர்ஷிப்… அதுல படிப்பு.. இதுல எனக்கு லவ் வேற..!!” என்றவன் முகத்தினில் ஒரு விரக்தி சிரிப்பு.

“லவ் வெளிய சொல்லவே கூடாது.. முக்கியமா அவக்கிட்ட சொல்லவே கூடாதுன்னு இருந்தேன்.. பட் ஷி மேட் மீ டூ ப்ரொபோஸ்.. சரியான சிலுப்பி அவ.. பேசி பேசியே என்னை பேச வச்சிட்டா..” என்கையில் அவனுக்கு அப்படியொரு ரசனை அவன் விழிகளில்..

“சிலுப்பி… ஹா ஹா.. வாவ் சூப்பர்..” என்று நீல் சிரிக்க, மானசாவோ ‘சிலுப்பியா??’ என்று கண்களை இடுக்கிப் பார்த்தவள், வெடுக்கென்று முகத்தை சிலுப்பிக்கொண்டாள்.

“வெறும் லவ் மட்டும் வச்சு அவளை நல்லா பார்த்துக்க முடியுமா? நானே ஸ்டெடியா இல்லாதப்போ.. அதுவும் அவ அழகா பறந்துட்டு இருந்த பறவை.. அவளை லவ்.. மேரேஜ் இப்படின்னு சொல்லி என்னோட சின்ன கூட்டுல அடைக்கணுமான்னு ஒரு பெரிய கேள்வி..

கேள்வின்னு சொல்றதை விட, எங்க நான் அவளை கஷ்டப் படுத்திடுவேனோன்னு பயம்..” என்றவனுக்கு குரல் கமறியது..

“ம்ம் எஸ் பயம் தான்… எனக்காக அவ எதுவும் செய்வா தான்.. அது அவளோட காதல்.. அப்படின்னா.. என்னால.. எனக்காகன்னு அவள் எதுவும் சிரமப்பட்டுடக் கூடாதுங்கிறது என்னோட காதல்.. அப்போ நானும் சொன்னேன் அவக்கிட்ட நமக்கு செட்டாகாதுன்னு..” என்றவன் பேச்சினை நிறுத்த,

“அப்புறம்.. அப்புறம் என்னாச்சு…” என்றான் நீல்.

“அப்புறம் என்ன??? அவளுக்கு கோபம்.. போயிட்டா.. என்னோட ரீசன்ஸ் கூட கேட்கலை…” என்றான் சித்து, அமர்த்திய குரலில்.

இத்தனை கேட்டும் மானசா தான் என்ன உணர்கிறோம் என்று தெரியாதவளாய் இருந்தாள். இதையா அவன் நினைத்திருந்தான்??!! அப்.. அப்போது தன் மீது அவன் எதையும் தவறாய் நினைக்கவில்லையா??!!

இப்படித்தானே மானசா இத்தனை ஆண்டுகளாய் நினைத்திருந்தாள்.. தன்னை ஏதோ தவறாய் எண்ணிவிட்டான் என்று..!!

‘அப்.. அப்போ.. அதெல்லாம் இல்லையா??!!’ என்று அவளின் மனம் படபடக்க,

“ஓ காட்..!!! நீ ஏன் சித்து அவளை போக விட்ட..?” என்று நீல் கேட்க,

அதற்கு புன்னகைத்தவன் “லவ் பண்றது பெருசில்ல.. அதோட முழு பொறுப்பும் நமக்கு புரியணும்.. செலவு பண்ணலன்னு கழட்டிவிட்டுட்டு போயிட்டான்னு சொல்றதுக்கு பதிலா, என் லவ்வருக்கு செலவு பண்ற அளவு நான் வளர்ந்துக்கிறேன் முதல்லன்னு நம்ம சொல்லணும்.. பழி அடுத்தவங்க மேல போடுறது ஈசி.. அதை நம்ம ஹானஸ்டா அக்சப்ட் பண்ணி நம்மளோட நிலை எதுன்னு புரிஞ்சு நடக்கணும்..” என, நீலுக்கு இப்போது அவனின் நிலையும் புரிந்தது.   

“தேங்க்ஸ் சித்து…” என்று அவனை கட்டியணைத்து சொன்னவன்

“இப்போ உனக்கு என்ன மேன் குறைச்சல்.. நீ ஏன் அவளைத் தேடிப் போகலை..” என,

“அவளைப் பார்த்தேன்…” என்ற சித்துவின் சொல்லில் மானசாவிற்கு தூக்கி வாரிப்போட்டது.

Advertisement