Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 31

“ஓ!! காட்…. இப்போ என்ன செய்ய??” என்று தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள் மானசா.

அவளுண்டு அவள் படிப்புண்டு என்று இருந்தவளுக்கு இப்போது எங்கிருந்து தான் இத்தனை டென்சன்கள் வந்து சுத்திக்கொண்டனவோ. ஆனால் எல்லாமே சித்திரைச் செல்வன் இங்கு வந்தபிறகு தான் என்பதை நன்கு உணர்ந்துகொண்டாள்.

‘என் நிம்மதியே போச்சு…’ என்று புலம்பிட மட்டுமே அவளால் முடிந்தது.

அடுத்த வாரம் தனுஜா வருவது ஒருபுறம் இருக்க, இன்னும் இரண்டே நாட்களில் முடிக்கவேண்டிய ஒரு ப்ராஜக்ட் ஒன்று இன்னும் முடிக்கப்படாதும் இருந்தது. இதற்கு காரணம் நீல் மட்டுமே.

இருவரும் சேர்ந்து தான் செய்வதாய் ஏற்பாடாகியிருக்க, இவள் முடிக்கவேண்டிய பகுதிகள் எல்லாம் முடித்துவிட, அவன் இன்னும் முடிக்கவில்லை.. அவன் முடித்துக் கொடுத்தால் தான் முழுமை பெரும். இடையில் ஒரே நாள் தான் இருக்க இவன் எங்கே சென்றான் என்றே தெரியவில்லை.

அழைத்துப் பார்த்தால், பதில் இல்லை. வீட்டினில் சித்து மட்டுமே இருப்பது நன்கு தெரிந்தது. சென்று அவனிடம் கேட்கவும் சங்கடம். நேயாவை விட்டு கேட்டுப் பார்த்தாள், அதற்கோ ‘தெரியாதே..’ என்பதுதான் பதிலாய் வந்தது.

‘இடியட்.. நான் போய் பேசினாதான் சொல்வானா??’ அதுவேறு அவளுக்கு எரிச்சல் தர, மொத்தத்தில் மானசா அவளாக அவளில்லை.

நீலின் எண்ணிற்கு அழைத்து அழைத்துப் பார்த்தவள் அது எடுக்கப்படாது போகவே, வேறு வழியே இல்லாது தன் பிடிவாதம் விட்டு, அவனின் பிளாட் செல்ல, கதவு பூட்டப்பட்டு இருந்தது.

‘என்ன இவனையும் காணோம்…’ என்று பார்த்து நிற்க, கீழே வந்து பார்க்கில் பார்த்தாள் சித்திரைச் செல்வன் இருக்கிறானா என்று. அங்கேயும் இல்லை.

‘எங்கே போயிருப்பான்..’ என்று சுற்றிலும் தேட, எங்கேயுமே இல்லை. சித்துவின் அலைபேசி எண் இருக்கிறது. இருந்தும் அழைத்துக் கேட்க மனம் வரவில்லை.

பார்க்கில் சிறிது நேரம் உலாத்தியவள், வேறு ஏதாவது முயற்சிக்கலாம் என்று வீடு போக, அப்போதுதான் நீலை அழைத்துக்கொண்டு வந்துகொண்டு இருந்தான் சித்திரைச் செல்வன்.

நீல் சுய நினைவில் இல்லை என்பது அவன் நடந்து வருவதைப் பார்த்தாலே தெரிந்தது. நடந்து எங்கே வந்தான், சித்து தான் அவனை இழுத்துக்கொண்டு வந்தான். பார்த்ததுமே பதற்றம் தோற்ற “ஹேய்.. வாட் ஹேப்பன்…” என்று அவர்களிடம் ஓட,

“சீக்கிரம் போய் லிப்ட் ஒப்பன் பண்ணு மனு..” என்றான் சித்து.

“இதோ.. இதோ…” என்றவள், வேகமாய் லிப்டி திறப்பதற்கான பொத்தானை அழுத்தி நிற்க, கதவு திறக்கவும், சித்துவோடு சேர்ந்து நீலை அதனுள் அழைத்து வந்தவள் திரும்பவும் கேட்டாள் “என்னாச்சு??” என்று.

“யாருக்குத் தெரியும்…. பர்ஸ்ட் யாரும் பாக்கிறதுக்கு முன்ன இவன கூட்டிட்டு போகணும்…” என, அவன் எதற்கு சொல்கிறான் என்பது புரிந்து அதற்கேற்ப அவளும் உதவ, ஒருவழியாய் அவனை வீட்டிற்குள் அழைத்து வந்துவிட்டனர்.

சித்திரைச் செல்வனின் முகம் பார்த்தாலே தெரிந்தது. அவன் கோபத்தை அடக்கிக்கொண்டு இருக்கிறான் என்பது. அங்கிருந்த பீன் பேக்கில் நீலை கிடத்த, அவனோ கண்கள் திறக்கும்படி கூட இல்லை.. அவன் மீது மது வாடை தான்.

‘குடிப்பானா??!!’ என்று அதிர்ந்து போய் தான் பார்த்தாள் மானசா.

இங்கே வந்ததில் இருந்து நீலை தெரியும். ஏதாவது பார்டி என்றால் கூட பெயருக்கு கையினில் கோப்பையை வைத்திருப்பானே தவற, அவன் குடித்து ஒருநாள் பார்த்ததில்லை மானசா.

இன்றோ அவள் நம்ப முடியாது பார்க்க, சித்திரைச் செல்வனோ “அடிக்கடி இப்படி செய்வானா??” என்றான்.

“ம்ம்ஹும்..” என்று மறுத்தவளுக்கு நேரில் பார்த்தும் நம்பிட முடியவில்லை.

“பின்ன இப்படி இருக்கான்… உனக்குத் தெரியாதா??”

“அவன் ட்ரின்க் பண்ணவே மாட்டான்..” என்றாள் குழப்பமாய்.

“பின்ன இதெப்படி..” என்றவன், அவனின் கன்னம் தட்ட, அரைகுறையாய் கண்கள் திறந்தவன், பின் மூடிக்கொள்ள,

“இந்த லட்சணத்துல இவன் கார் ஓட்டி வேற வந்தான்.. இடியட்.. ஏதாவது ஆகியிருந்தா என்ன செய்ய?” என்றவன், மெதுவாய் நீலை தூக்க முயற்சிக்க, மானசாவும் ஒருபுறம் கை கொடுக்க, நீல் எழுந்தவன், தள்ளாடி பின் மொத்தமாய் மானசா மீது சாய,

“மனு நீ விடு ..” என்றான் சித்து.

“இல்ல இருக்கட்டும்..” என்று அவள் நீலை தாங்கி நிற்க,

“ஏய் தள்ளி போ டி.. நான் பார்த்துக்கிறேன்..” என்று சித்து கோபத்தில் கத்த, மானசா அரண்டு தான் விழித்தாள்.

“போ ன்னு சொல்றேன்ல..” என்று மேலும் அதட்டியவன், நீலை தன் மீது சாய்த்து, குளியலறை இழுத்து செல்ல, இவளும் பின்னோடு தான் வந்தாள்.

“என்ன பண்ற நீ… உன்ன போ சொன்னேன்ல..”

“இல்ல இவன் விழுந்துட்டா??!!” என்றாள் யோசனையாய்.

“விழுந்தா விழட்டும்.. குடிச்சிட்டு வந்து தானே விழறான்.. அடிபட்டதான் புத்தி வரும்..” என்றவன், “போ ஷவர் கீழ ஒரு ஸ்டூல் போடு..” என்று அவளை விரட்ட, மானசாவும் சொன்னதை செய்தாள்.

தன்னை அவன் திட்டுவது, அதட்டுவது எல்லாம் ஒருபுறம் வேகம் கொடுத்தாலும், இப்போது எதுவும் பேசிட முடியாது என்று அமைதியாக அவன் சொன்னதை செய்ய, நீலை ஸ்டூலில் அமர வைத்தவன், ஷவரினை திருப்ப, தன் மீது நீர் விழவும்

“ஹோ.. நோ நோ…” என்று உளற ஆரம்பித்தான் நீல்.

சித்து எதுவும் பேசினான் இல்லை. அவன் தெளியும் வரைக்கும் இப்படியே இருக்கட்டும் என்று அவனின் அருகேயே நிற்க,

“ப்ளீஸ் லீவ் மீ..” என்று நீல் கத்துவது கேட்டது வெளியே மானசாவிற்கு.

‘இவனுக்கு என்னாச்சு??’ என்று பதறியபடி இருக்க, சிறிது சிறிதாய் நீலின் பேச்சினில் குளறல் நிற்க, அவன் நிதானத்திற்கு வருவது தெரிந்தது.

“மனு.. டவல் எடுத்துக் கொடு..” என்று சித்து கேட்கவும், எடுத்துக் கொடுத்தவள், அறையில் இருந்து வெளியே வந்து நின்றுகொண்டாள்.

சித்து அவனை அழைத்து வந்து உடை மாற்ற வைத்து, கட்டிலில் அமர வைத்துவிட்டு வெளி வர, அவள் இன்னும் அங்கே தான் நிற்பது கண்டு “போ.. போய் ஏதாவது சாப்பிட்டு வா.. அவன் இப்போதைக்கு தெளிய மாட்டான்..” என,

“அச்சோ.. ப்ராஜக்ட்..??!!” என்றாள் அதிர்ந்து.

“முடிக்கலாம்.. நீ சாப்பிட்டு வா..” என்றவன் நீலுக்கு ஏதேனும் கொடுக்கவேண்டும் என்று கிச்சன் போக,

“நீங்க??” என்றாள் அவளையும் மீறி.

கிச்சனுள் நுழையப் போனவன், அப்படியே நின்று இவளைப் பார்க்க “இ.. இல்ல… நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு கேட்டேன்..” என்றாள் திக்கி திணறி.

“ஏதாவது செய்யணும்.. அவனுக்கும் கொடுக்கணும்..”

“ம்ம்ம் நா.. நான் செய்யட்டுமா??!!” என்றாள் மானசா.

அன்று அவளுக்கு என்னதான் ஆனதோ… இங்கிருந்து கிளம்ப கால்கள் நகரவேயில்லை. மானசா அப்படி கேட்டதும், சித்திரைச் செல்வனுக்கு கண்கள் பளிச்சிட,

“உனக்கென்ன தெரியும்??” என்றான் வேண்டுமென்றே.

“ஹலோ.. ஐ க்னோ குக்கிங்..” என்றாள் சிலுப்பிக்கொண்டு.

அப்படியே பழைய மானசாவைப் பார்ப்பது போலிருக்க “அப்படியா சரி பாப்போம்..” என்றவன், அவளுக்கு வழி விட,

“ஹலோ.. உங்களுக்கு நான் என்ன குக்கா.. வந்து ஹெல்ப் பண்ணுங்க..” என்று கோபமாய் சொல்வது போல் சொல்லிச் செல்ல, சித்துவோ வந்த சிரிப்பினை வாயினில் அடக்கியபடி

“சொல்லுங்க குக் மேடம் என்ன செய்யணும்..” என்று அவளோடு உள்ளே போனான்.

மானசாவிற்கோ, நீல் இப்படியிருப்பது, பின் ப்ராஜக்ட் முடிக்கவேண்டி இருந்தது, பின் சித்துவோடு ஒரு விசயம் தனியே பேசிடவேண்டும். அதற்காகத்தான் இப்போது இங்கே.

“மோமோஸ் பண்ணிடலாம்.. சாஸ் இருக்கு..” என,

“ஹலோ.. என்ன?? இதெல்லாம் எனக்கு வேணாம்.. நல்லா வேற ஏதாவது பண்ணு..” என்று சித்து சொல்ல,

“வேறயா??!!!!!!” என்றாள் முழித்து.

“பின்ன ஐ க்னோ குக்கிங்னு வந்த… எனக்கு சாப்பாடு சாப்பிட்டு நாள் ஆச்சு.. சோ சாதம் வச்சு.. குழம்பு வச்சு..” என்று அவன் அடுக்க,

“ஸ்டாப் ஸ்டாப்….” என்று அவன் முன்னே கை நீட்டியவள் “இப்படி எல்லாம் பண்ண முடியாது வேணும்னா ஒரேதா பிசிபேளாபாத் பண்றேன்.. ஓகே வா..” என,

“சரி சரி பண்ணு..” என்று அவனும் சொல்ல,

“ஹலோ… எங்க பண்ணுன்னு சொல்லிட்டு போறீங்க.. வாங்க வந்து ஹெல்ப் பண்ணுங்க..” என, அடுத்து நேரம் போனதே தெரியவில்லை.

மறந்தும் கூட பழைய விஷயங்களை இருவரும் பேசிடவில்லை. புதிதாகவும் எதுவும் பேசவில்லை. பொதுவான பேச்சுக்கள். இங்க இருப்பவைகள் பற்றி. ஆனால் ஒன்று சித்து, மானசாவை அதிகம் பேச வைத்தான். அவளும் சமையல் கவனத்தில் அவனோடு பேசியபடி இருக்க, இடையிடையே சித்து சென்று நீலை பார்த்துவிட்டும் வந்தான்.

“நல்லா தூங்குறான்..” என,

“முழிக்கவும் இருக்கு அவனுக்கு..” என்று அவள் கடிந்தபடி தான் உண்ண எடுத்து வைத்தாள்.

இருவரும் பேசிக்கொண்டே தான் உண்ண மானசா திடீரென அமைதியாகிப்போனாள். முதலில் சித்து கவனிக்கவில்லை பின் “என்னாச்சு.. நீல் பத்தி திங் பண்றியா??” என,

“இல்ல.. உங்களோட கொஞ்சம் பேசணும்..” என, ‘பேசு..’ என்பதுபோல் அவளைப் பார்த்தான்.

“அ.. அது.. நெக்ஸ்ட் வீக் தனு ராபி எல்லாம் வர்றாங்க இங்க..” என,

“ஓ..!!” என்று மட்டும் சொன்னவன், அடுத்து உணவில் கவனம் செலுத்த, “உங்ககிட்ட தான் சொல்றேன்..” என்றாள் மானசா.

“அதான் சொல்லிட்ட தானே வர்றாங்கன்னு..”

“ம்ம்ச்.. அவங்க வர்றப்போ நீங்க எப்படி இங்க இருக்க முடியும்??”

“ஏன் இருந்தா என்ன??” என்றான் அவள் எப்படி கேட்டாளோ அப்படியே.

“நோ… அவங்க வர்றப்போ நீங்க இங்க இருக்கவேண்டாம்..” என்று மானசா அழுத்தம் திருத்தமாய் சொல்ல,

“ஏன்??” என்றான் ஒரு வலி நிறைந்த குரலில்.

“அக்காக்கு உங்களை நல்லா தெரியும்..” எனும்போதே  “நம்மை பத்தி தெரியுமா??” என்று கேட்டு அவளை திகைக்க வைக்க,

“இல்லை..” என்றாள் இறங்கிய குரலில்.

“ம்ம் சோ.. தனுஜா இங்க வந்தா எல்லாருக்கும் தெரிய வரும்னு நினைக்கிற அப்படித்தானே.. ஐ மீன் உனக்கு என்னை தெரியுங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சிடும்னு நினைக்கிற..” என்றவன், பாதி சப்பாட்டினில் இருந்து எழுந்துவிட,

“அச்சோ.. ப்ளீஸ்.. சப்பிடுறப்போ எழக் கூடாது..” என்றாள் மானசா.

“போதும்..” என்று அவன் முறுக்கிக்கொண்டு போக, “நில்லுங்க சித்து சர்..” என்றாள் அவன் வழியை மறைத்து.

“சாப்பிடுங்க..” என்று சொல்ல,

“வேணாம் மனு.. போதும்..” என்றவன் நகரப் போக, “நீங்க முதல்ல சாப்பிடுங்க..” என்று அவனின் கை பிடித்து அமர வைத்தாள் மானசா.

எது எப்படியோ தன்னால் ஒருவனின் உணவு இல்லாது போகக் கூடாது என்பது அவளின் எண்ணம். அவனோ இதை வைத்தே அவள் மனதை சற்று இளகச் செய்ய நினைத்தான்.

வேறு வழியும் அவனுக்கு அப்போது இல்லையே..

“விடு மனு..” என்று பிகு செய்ய,

“சொன்னா கேளுங்க.. நான் இப்போ எதுவும் சொல்லலை.. சாப்பிட்டு முடிக்கவும் பேசலாம்..” என,

“சாப்பிட்டு முடிச்ச அப்புறமும் இதை தானே நீ பேச போற..” என்றான் வேண்டா வெறுப்பாய்.

“ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ..” என்றாள் சற்றே கெஞ்சல் குரலில்.

“இதை நான் சொன்னா நீ செய்வியா?? கொஞ்சம் நான் பேசுறதை கேளுன்னு சொன்ன செய்வியா மனு?? இல்லை நான் சொல்ல வர்றதை புரிஞ்சுக்கோன்னு சொன்னா நீ கேட்பியா மனு??” என, அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

எதுவும் பேசாமல் தட்டில் வெறுமெனே ஸ்பூனால் கிண்டிக்கொண்டு இருக்க, “பதில் சொல்லு நீ..” என்றான் சற்றே குரலை உயர்த்தி.

“சாப்பிட்டு பேசலாம்…” என்றவள் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

அவன் உண்கிறானா என்று அவ்வப்போது அவனின் தட்டையும் பார்த்துக்கொள்ள, ஒருவழியாய் இருவரும் உண்டுவிட்டு, இருப்பதை எல்லாம் சுத்தம் செய்து ஹாலுக்கு வர, சித்து சென்று நீலைப் பார்த்தான்.

அவனோ நன்கு உறக்கத்தில் இருக்க, மானசாவோ “இவன் எப்போது விழித்து எப்போது ப்ராஜக்ட் முடிக்க..” என்று பார்க்க,

“ம்ம் சொல்லு மனு.. என்ன ப்ராப்ளம் உனக்கு..” என்றான் சித்து நடந்துகொண்டே.

இப்போது அவனின் பின் செல்வது அவளின் முறையாய் இருக்க, “எந்த பிராப்ளமும் வரக் கூடாது. அதான்..”  என்றாள்.

“என்னால உனக்கென்ன பிராப்ளம் வரப்போகுது??”

“ம்ம்ச்.. எல்லாமே தெரிஞ்சும் தெரியாதது போல கேட்காதீங்க.. தனு வந்தா, உங்களை பார்த்தா.. பின்ன ஏன் உங்களை எனக்கு தெரியும்னு இங்க யாருக்கும் சொல்லலைன்னு எல்லாருமே என்னை கேள்வி கேட்பாங்க.. சோ.. எல்லாருக்கும் நான் பதில் சொல்ற நிலைக்கு வரணும்னு தான் உங்களுக்கு ஆசையா??!!” என்றாள் படபடவென்று.

அவளை தன்னோடு சகஜமாகவாது பேச வைத்திடவேண்டும் என்று எண்ணியிருந்தவனிடம் ‘இங்கிருந்து செல்..’ என்று அவள் சொன்னால், அவன் என்ன செய்வான்??!!

“இங்க பாருங்க.. நான்.. நான்.. ஜஸ்ட் இப்படியே இருந்திடனும்னு நினைக்கிறேன்.. தேவையில்லாத குழப்பங்கள் பேச்சுக்கள் எல்லாம் எனக்கு வேண்டாம்.. சோ தனுஜா வந்துட்டு போறது வரைக்கும் நீங்க இங்க ஸ்டே பண்ண வேண்டாம்.. ஜஸ்ட் பியூ டேஸ்…” என,

“நான் எங்கே போவேன்??” என்றான்.

இந்த கேள்வி நிச்சயமாய் மானசாவை என்னவோ செய்தது.. அவன் எங்கே செல்வான். இங்கே அவனுக்கு என்ன தெரியும்.. யாரை தெரியும். போ என்றால் எங்கே போவான்..

“சொல்லு மனு நான் எங்க போக??!!” என்றான் திரும்பவும்.

“ம்ம்ச்… நான்… நான் அரேஞ் பண்றேன்..” என்றவளுக்கு அப்போதும் என்ன செய்யப் போகிறாள் என்பது முடிவாகவில்லை.

“ம்ம்ம் உன்னோட இஷ்டம்.. ஆனா தனுஜா போன பிறகும் கூட நான் இங்க வரமாட்டேன்” என்றான் உறுதியாய்.

இதை மானசா எதிர்பார்க்கவில்லை..!!

ஒருவித தவிப்பில் அவள் பார்க்க..!!

“எஸ்..  அடுத்து இங்க வரமாட்டேன்.. உனக்கு ஓகேன்னா டிசைட் பண்ணிக்கோ..” என்றுவிட்டான்.

Advertisement