Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 3  

சித்திரைச் செல்வனை மட்டுமே நேராய் பார்த்து உள்ளே வந்தவள், கிண்டலாய் தன் இரு புருவம் உயர்த்தி  “எந்தா சாரே…” என்று சொல்லிவிட்டு, மேஜையில் அவள் விட்டு சென்ற நோட்டினை எடுத்துக்கொண்டு, திரும்பவும் அதே பார்வை பார்த்து செல்ல,

சும்மாவே அவள் ‘எந்தா சாரே..’ என்றால் சித்திரைச் செல்வனுக்கு அப்படியொரு கடுப்பாகும், அதுவும் இப்போது கடுப்பேற்றவென்றே சொல்லி, கிண்டலாய் ஒரு பார்வை வேறு பார்த்துச் சென்றால் கேட்கவா வேண்டும்..

“பார்த்தியாடா.. பார்த்தியா… கொஞ்சமாவது மரியாதை இருக்கா பாரு.. என்னவோ சப்போர்ட் பண்ண.. இப்போ பாரு… பொண்ணு மாதிரியாடா நடந்துக்கிறா.. அவளும் அவ முடியும்….” என்று சித்து எகிற,

“டேய் டேய்… சத்தம் போடாதடா…” என்று பாஸ்கி அடக்கியவன்,

“அந்த பொண்ணு சும்மாதான் இருந்தது.. நீ கடுப்பு காட்ட காட்ட, அதுவும் இப்படி பண்ணுது..” என்று நியாயம் சொல்ல,

“அடேங்கப்பா.. படிக்க வந்தா அந்த வேலை மட்டும் செய்யணும்..?” என்று அதற்கும் கத்தினான்.

இதுவரை யாரும் இவனிடம் இப்படி நடந்ததில்லை, இவனும் யாரிடமும் நடந்துகொண்டதில்லை. பாஸ்கருக்கு இதுதான் ஆச்சர்யமாய் போனது. அதையே அவன், தன் நண்பனிடமும் சொல்ல,

“ம்ம்ச் போடா.. சும்மா.. எப்போ பாரு பேச்சு மட்டும் தான்.. வாய் மூடுதா…” என்றான் மானசாவின் கலகலப்பு பேச்சை மட்டுமே நினைத்து.

அவள் முன்னே படித்தது, பின் பொழுது போகாமல் சர்டிபிகேட் கோர்ஸ்காக என்று இங்கே வந்தது, ஒவ்வொரு செயலையும் அவள் வெகு எளிதாய், இயல்பாய் எடுத்துகொள்வது என்று எல்லாம் எண்ணி மனதினுள் ஒரு வியப்பு இருந்தது தான்.  அவனால் அப்படி இருக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

சித்திரைச் செல்வனுக்கு அவனின் பொறுப்பு, கையில் எடுத்திருக்கும் படிப்பே நிறைய அழுத்தங்கள் கொடுத்தது. அது நிஜம். ஆக அவனால் இயல்பில் இருக்க முடியாத போது, எப்போதுமே இலகுவாய் இருக்கும் ஒருத்தியை காண நேர்கையில் அவனின் செயல்கள் எல்லாம் எதிர்மறையாய் தான் நேர்கிறது.

‘அவளும் அவ முடியும்….’ சித்து இப்படி சொன்னது பாஸ்கிக்கு இன்னமும் வியப்பை கூட்டியது. அவனின் பார்வையும் அதையே பிரதிபலிக்க,

“டேய் என்ன??!!” என்றான் கடுப்பாய்..

“நீ எப்போடா அந்த பொண்ணு முடியை எல்லாம் கவனிச்ச..?”

“அதான் எப்போ பாரு ஸ்டைல் பண்றேன்னு கோதி விடுறாளே….” என்று கடுப்பாகவே சித்து பதில் சொல்ல, பாஸ்கரோ ‘இன்னிக்கு இந்த அதிர்ச்சி போதும்..’ என்று எண்ணினான் போலும்,

“ம்ம்ம்.. அவ முடி.. அவ கை.. கோதுறா… கொத்துறா… இதுல உனக்கு என்ன வந்தது..” என்று முனங்கியவன், “கேண்டீன் போலாம் வர்றியா??” என்றான்.

“ம்ம்ச்.. கேண்டீன் போற மூடே போச்சு… யூஜி பைனல் இயற் ஸ்டூடன்ஸ்க்கு லேப் வொர்க் பார்க்க சொல்லிருக்காங்க… நான் போறேன்..” என்று முகத்தை உர்ரென்று வைத்தே சென்றான் சித்து..

பாஸ்கரோ இன்னமும் அப்படியே தான் இருந்தான். நண்பனின் மாற்றங்கள் ஏன் என்றெல்லாம் புரியவில்லை.. வேறு யாராவது என்றால் கூட “என்ன மச்சி கோவிக்கிற சாக்குல சைட் அடிக்கிறியா??” என்று கேட்டிருப்பான்.

ஆனால் இவனிடம் அதுவும் கேட்க முடியாதே. அதற்கும் அமர வைத்து ஒரு சொற்பொழிவு ஆற்றிவிட்டு தான் மறுவேலைப் பார்ப்பான்.

துறை தலைவர் சிவக்குமார் சொன்னதுபோல, மறுநாளில் இருந்து சித்திரைச் செல்வன், இவர்களுக்கு தியரி எடுக்க, பாஸ்கி லேப் பார்த்துக்கொள்ள, மானசா அடுத்து வந்த வகுப்புகளில் வாயே திறக்கவில்லை. தேவைக்குக் கூட எதுவும் பேசவில்லை. எல்லாம் ஷில்பாவின் செயல்..

அவள் தான் கொஞ்சம் உருட்டி மிரட்டியிருந்தாள். அதாவாது தான் உருட்டியதில் மானசா மிரண்டுவிட்டாள் என்று நினைத்துகொண்டு இருந்தாள். இனி ஒருமுறை வகுப்பில் எதுவும் சண்டை அது இது என்றால் என்னோடு பேசவே பேசாதே, நீயும் வாயை குறை என்று சொல்லி வைத்திருந்தாள்.

மானசாவோ ‘இதென்னடா… இப்படி சொல்றா..’ என்று எண்ணியவள், “ம்ம்ம்ம்…” என்று உதடு பிதுக்கி அமைதி காத்தாள்.

சித்து கூட ‘திருந்திட்டாளோ…’ என்று பார்க்க, பாஸ்கியோ ‘என்னாச்சு இந்த பொண்ணுக்கு..’ என்றுதான் பார்த்தான். 

ஆனால் இதெல்லாம் அடுத்து வந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் தான். மூன்றாவது நாள் காலையில் இவர்களின் வகுப்புகள் எடுக்க முடியாத நிலை என்று வர,

பாஸ்கரோ “டேய் போன் பண்ணி சொல்லிடுடா.. இல்லைன்னா ஆபிஸ்ல சொல்லி இன்பார்ம் பண்ண சொல்லிடு, என்னை கோமதி மேம் அவங்க கிளாஸ் ஹேண்டில் பண்ண சொல்லிருக்காங்க..” என்றுவிட்டு போய்விட்டான்.

சித்திரைச் செல்வனுக்கோ, அவர்கள் தீசிஸ் வேலை இருக்க ‘சரி மதியம் போல் வர சொல்லிடுவோம்..’ என்று எண்ணியவன், அவர்களின் துறை அலுவலகம் சென்று,

“கணேஷ் அண்ணா.. அந்த சர்டிபிகேட் கோர்ஸ் பொண்ணுங்கக் கிட்ட சொல்லிடுங்க, மதியம் கிளாஸ் வர சொல்லி..”

“நான் மாட்டேன் ப்பா.. வேணும்னா நம்பர் போட்டு தர்றேன்.. நீயே சொல்லிடு சித்து. அந்த பொண்ணுட்ட எவன் பேசுவான்.. முடியவே முடியாது..”

“இன்னொரு பொண்ணுக்கிட்ட சொல்லுங்க..”

“நான் நம்பர் போட்டு தர்றேன் சித்து.. நீயே சொல்லிடு..” என்றவன், ஷில்பாவின் எண்ணிற்குத் தான் அழைப்பு செய்து சித்துவிடமே பேசு என்று கொடுத்துவிட, இவர்கள் அழைத்த நேரம் ஷில்பா குளித்துக்கொண்டு இருக்க,

‘டிபார்ட்மெண்ட் ஆபிஸ்..’ என்ற அழைப்பை கண்டு, தயங்காது மானசா தான் அழைப்பை ஏற்றாள்.

‘ஹலோ..’ என்று மானசா சொல்லும் முன்னமே,

“ஹலோ ஷில்பா.. திஸ் இஸ் சித்திரைச் செல்வன்.. மார்னிங் கிளாஸ் இல்லை.. ஆப்டர்நூன் டூ ஓ கிளாக் வந்திடுங்க.. அண்ட் கன்வே திஸ் டு ஹெர் ஆல்சோ…” என்றவன், பதிலும் எதிர்பாராது வைத்தும் விட்டான்.

ஆனால் மானசாவோ  ‘சார் என் பேரு கூட சொல்லமாட்டாராமா??’ என்று எண்ணியவள், ஷில்பா குளித்துவிட்டு வரவும் விசயத்தை சொன்னவள், வழக்கம் போலவே இருந்தாள்.

எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சித்திரைச் செல்வன், ஷில்பாவிடம் இருப்பது போல் கூட தன்னிடம் இருப்பதில்லை என்று தோன்றியது. அப்படியென்ன அவளிடம் மட்டும் ஒரு கடுப்பு, இரண்டு பெண்களுக்கு மட்டும் தனியே வகுப்பெடுக்க பிடிக்கவில்லை எனில் இருவரையும் தானே பிடிக்காது போகவேண்டும் ஆனால் தன்னை மட்டும் இப்படி செய்தால் அதற்கு என்ன அர்த்தம்?? என்று அவளின் சிந்தனைகள் எல்லாம் அவனை சுற்றிக்கொண்டு இருக்க,

ஷில்பா ‘கேண்டீன் போலாமா??’ என, “ம்ம் ஓகே..” என்று சொல்லி இருவரும் கிளம்பினார்கள்.

வீட்டிற்கு அழைத்து அப்பாவோடும், அக்காவோடும் பேசிடவேண்டும் என்று எண்ணியது கூட மறந்துபோனது மானசாவிற்கு. இத்தனை நாள் அமைதியாய் இருந்தவள் இன்று பேரமைதியாய் இருக்க, ஷில்பா கூட இரண்டொரு முறை என்னவென்று கேட்டுவிட்டாள்.

“நத்திங்…” என்றவள், மதியம் வகுப்பிலும் கூட அப்படியே இருக்க, பாடம் எடுத்துக்கொண்டு இருக்கையில் சித்து கூட திரும்பித் திரும்பிப் பார்த்தான்.

நோட்ஸ் எடுப்பது மட்டுமே என் வேலை என்று மானசா எழுதிக்கொண்டு இருக்க, வழக்கமாய் செய்யும் செயலாய் அவளின் இடக்கரம், அவளின் கேசம் கோத, சித்திரைச் செல்வனின் பார்வை நின்று நிதானித்து பின் தன் வேலையைச் செய்தது..

ஆனால் இதெல்லாம் கவனிக்காது மானசா எழுதிக்கொண்டு இருக்க ‘இப்படி விழுந்து விழுந்து எழுதுற அளவு என்ன நடத்திட்டோம்…’ என்று யோசித்தவன்,

“மானசா…” என்று அழைக்க, இத்தனை நாட்களில் அவன் இப்போது தான் முதல்முறையாய் பெயர் சொல்லியிருக்கிறான் என்பது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் அவளுக்குத் தெரியுமே…

நிமிர்ந்து மட்டும் பார்த்தவள் “எந்தா சாரே….” என்றாள் பட்டென்று பூத்த ஒரு புன்னகையோடு.

அவ்வளோதான்.. லேசாய் கொஞ்சமே கொஞ்சம் இறங்கிய அவனது உள்ளம், இவளின் இந்த புன்னகையில் முருங்கை மரம் ஏறிவிட,

“என்ன பண்ற நீ கிளாஸ் கவனிக்காம???” என்று எகிற, ஷில்பாவோ இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

மானசா கூட, அவனையும், அவள் எழுதியதையும் மாறி மாறித்தான் பார்க்க, “என்ன?? இங்க நான் கத்திட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு கிறுக்கிட்டு இருக்க??” என்று அவன் மேலும் பேச,

“என்னது??!!!!!” என்ற பாவனையில் மானசாவின் கண்கள் விரிந்தது.

பொறுத்தது எல்லாம் போதும் மானசா என்று எழும் வேளையில், அவளின் கையை ஷில்பா இறுகப் பற்றிக்கொள்ள ‘என்னை விடு சிப்ஸ்…’ என்று பார்த்தாள்.

அவளோ ‘முடியாது…’ என்று தலையினை ஆட்ட,

“நான் நோட்ஸ் தான் எடுத்தேன்..” என்றாள் சித்துவைப் பார்த்து மானசா..

“ஹ்ம்ம் என்னவோ…” என்று தோளைக் குலுக்கியவன், “கொஞ்சம் சீரியஸா கவனிச்சா நல்லது…” என்றுசொல்லி மீண்டும் வகுப்பெடுக்க ஆரம்பிக்க, மானசாவிற்குத் தான் கோபம் அடங்கவில்லை.

‘இவன் இஷ்டத்துக்கு கத்திட்டு, ஒண்ணுமே தெரியாதது போல கிளாஸ் எடுப்பான்.. நான் கவனிக்கணுமா??’ என்று..

‘போ.. நீ கழுதையா கத்தினாலும் நான் கவனிக்க மாட்டேன்..’ என்று அவளின் மனம் சண்டித்தனம் செய்து, வெளியே வேடிக்கைப் பார்க்க, இப்போதும் சித்திரைச் செல்வன் திரும்பிப் பார்த்தான். கன்னத்தில் கை வைத்து, கையில் இருந்த பேனாவால், தன் முடியை சுருட்டியபடி வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள் மானசா.

இது ஒன்று போதாதா சித்துவிற்கு.. தான் இத்தனை நடத்திக்கொண்டு இருக்கிறேன். யாருக்கு வந்த விருந்தோ என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறாள் என்றதும் மிக மிக கடுப்பாய் போனது. போதாத குறைக்கு ஷில்பாவிற்கும் ஒரு முறைப்பை கொடுத்தவன்,

“வில் மீட் டுமாரோ…” என்றுவிட்டு, கையில் இருந்த சாக் பீசை ஒரு மூலையில் விட்டெறிந்துவிட்டு, வெளியே சென்றுவிட்டான்..

“ஷப்பாடி.. போயாச்சா…” என்று ஒரு பெருமூச்சு விட்டவள், ஷில்பாவை பார்க்க, அவளோ தலையில் அடித்துக்கொண்டாள்.

“விட்றி விட்றி…” என்று அவள் முதுகை தட்டியவள்,  “பூவாம் பூவாம்…” என்று அவளைப் போலவே சொல்லி அழைத்துச் செல்ல, அங்கே சித்துவோ பாஸ்கரிடம் பொரிந்துத் தள்ளிக்கொண்டு இருந்தான்..

“கழுதையா கத்துறேன்.. நோட்ல கிறுக்கிட்டு இருக்கா மச்சி… கவனின்னு சொன்னதுக்கு வெளிய வேடிக்கை பாக்குறா மச்சி.. செம கடுப்பாகிருச்சு…” என,

‘இல்லாட்டினாலும் நீ ஐஸ் மழையா பொழிஞ்சிடுவ…’ என்று பாஸ்கி பார்க்க,

“என்னடா பாக்குற..” என்றான் சித்திரைச் செல்வன்.

“ஒண்ணுமில்ல மச்சி… எப்படியோ கிளாஸ் முடிச்சிட்டல்ல விடு…” என்றவன் இழுக்காத குறையாய் இழுத்துக்கொண்டு சென்றான்.

ஷில்பாவும், மானசாவும் ஹாஸ்டல் அறைக்கு வந்தவர்கள், அவரவர் வீட்டிற்கு பேசிவிட்டு, பின் என்ன செய்வது என்று தெரியாமல் உறங்கி எழ, மாலை ஆகியிருந்தது.

“ஹே சிப்ஸ்.. க்ளைமேட் செமையா இருக்கு.. வெளிய போயிட்டு வரலாமா..” என்று கேட்க,

“ம்ம்ச் ம்ம்ஹும்…” என்று தலையை ஆட்டினாள் மறுப்பாய் ஷில்பா..

“ஏன்..??”

“போரிங் யா..” என்றவள் வரவில்லை என்றுவிட, “அட போயா…” என்று இவளும் சலிப்பாய் கூறியவள், “ஓகே நான் மாடி போறேன்…” என்றுவிட்டு மாடிக்கு செல்ல, சிலு சிலுவென்று காற்று வீசிக்கொண்டு இருந்தது.

இரு கைகள் கொண்டு தன்னை தானே கட்டிக்கொண்டவள், மாடியில் எதிர்பட்டவர்களிடம் எல்லாம் ஒரு புன்னகை சிந்திவிட்டு, நடந்துகொண்டு இருக்க, இவர்கள் விடுதியின் பின் பக்கம் சற்றே தள்ளி இருந்த கூடைப் பந்து மைதானத்தை கண்டாள்.

எப்போதுமே, காலை, மாலை அங்கே யாராவது விளையாடிக்கொண்டு தான் இருப்பர். குறைந்தது பத்து பேராவது எப்போதும் அங்கே இருப்பது தெரியும். ஆனாலும் ஒருநாள் கூட ஊன்றி கவனித்தது இல்லை. தான் விளையாடுவது விட, பிறர் விளையாடுவதை ரசிக்கப் பிடிக்கும் மானசாவிற்கு.

இப்போது அதுபோலவே பார்க்க, பின்னே தான் தெரிந்தது, சித்து, பாஸ்கி இன்னும் சிலர் விளையாடிக்கொண்டு இருந்தனர்..

‘அட…’ என்று இன்னும் இவளுக்கு சுவாரஸ்யமாகி விட, மாடி சுவரில் இரண்டு கைகளையும் வைத்து சாய்ந்து நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

“பாஸ்கி.. டேய்.. பால் இப்படி போடுடா…” என்று சித்து கத்திக்கொண்டு இருந்தான்..

“டேய் இருடா… இவனுங்க வேற நடுவில நடுவில வர்றானுங்க..” என்று பந்தை தட்டிக்கொண்டே பாஸ்கர், எதிர்பக்கம் இருந்த சித்துவை நோக்கி வர, மானசாவின் கண்கள் எல்லாம் சித்து அந்த பந்தினை வாங்கி, கூடையில் போட்டுவிடுவானா என்று ஆவலாய் காண,

எதேர்ச்சையாய் இந்தப் பக்கம் திரும்பிய சித்துவின் கண்களில், மாடியில் இருந்து மானசா காண்பது தெரிய ‘இவளா??!!!’ என்றுதான் திடுக்கிட்டான்.

எப்போதும் இப்படி சிலர் காண்பது உண்டு தான். விளையாட்டு என்று இருந்தால் அதனை வேடிக்கைப் பார்ப்பவர்களும் இருப்பர் தானே. அப்போதெல்லாம் அப்படி எடுத்துக்கொள்பவன், இன்று மானசா கண்டதை அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை.

‘இவ எதுக்கு இங்க பார்க்குறா.. ச்சே என்னை நிம்மதியா விளையாட கூட விடமாட்டாளா??’ என்று உஷ்ண மூச்சுக்கள் விட்டவன்,

“டேய் பாஸ்கி…” என்று அவனைப் பார்த்து கத்த, சரியாய் பாஸ்கர் பந்தினை எரிய, வாகாய் கேட்ச் பிடித்தவன், பந்தினை உயர தூக்கிப் பிடித்து, மானசாவை ஒரு பார்வை பார்த்து, பின் எம்பிக் குதித்து அதை கூடையில் போட, சுற்றி இருந்தவர்களின் சத்தம் காதை கிழித்தாலும்,

“ஹே!!!!! சூப்பர்…” என்று மானசா குதித்தபடி கைகள் தட்டுவது தெரிந்து லேசாய், இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது ஒரு புன்னகை அவன் முகத்தினில்.

“டேய் செமடா….” என்று பாஸ்கர் வந்து அவன் தோளில் தட்ட, சிரித்தபடி தான் இருந்தான் சித்து..

மீண்டும் திரும்பிப் பார்க்க, அங்கே மானசா இல்லை.  சென்றுவிட்டாள் போல.. என்று எண்ணியவன் ‘போனா போகட்டும்..’ என்று எண்ணியபடி, அடுத்து விளையாட, நேரம் போனது தெரியவில்லை.

Advertisement