Advertisement

  கொஞ்சும் ஏழிசை நீ – 24

“சோ இதுதான் உங்களோட முடிவா??” என்று மானசா கேட்கையில், அவளின் முகத்தினை நேருக்கு நேர் தான் பார்த்து நின்றிருந்தான் சித்திரைச் செல்வன்.

இருந்தும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது இருக்க, “சொல்லுங்க சித்து சர்.. இதான் உங்களோட முடிவா??” என்கையில் அவளின் குரலில் அப்படியொரு தொய்வு.

மனதில் இருக்கும் தொய்வு, குரலிலும் வெளிப்பட்டதோ என்னவோ, அவள் நின்றிருந்த விதமே விழுந்திடுவாளோ என்று தான் இருந்தது. மானசாவின் தோற்றமும், கலங்கிய  முகமும், ஏங்கி பரிதவிக்கும் விழிகளும், எங்கே தான் விழுந்துவிட கூடாது என்று அவள் அருகே இருந்த இருக்கையை இறுக பற்றி நின்றிருந்த விதமும் அவனுக்கே மனதை போட்டு அறுக்கத்தான் செய்தது.

ஆனால் அவனது முடிவினில் தெளிவாகவே இருந்தான்…!!

அவளுக்கு இப்போதைக்கு இவை எல்லாம் வலி கொடுக்கலாம், ஆனால் இன்னும் சிறிது நாளில் அவள் நிச்சயம் இதிலிருந்து மீண்டு விடுவாள் என்று திண்ணமாகவே அவனின் நெஞ்சம் நம்பியது. தங்கள் இருவரின் விருப்பத்தினை விட, மானசாவின் மகிழ்ச்சி முக்கியமெனில் அவன் இப்போது இந்தவொரு முடிவிற்கு வந்துதான் ஆகிட வேண்டும். இளகத் தொடங்கிய மனதினை இறுக்கி பிடித்து இறுகச் செய்தவன்,

“எஸ்…” என்றான் திடமாய்.

அவன் அப்படி சொல்லி முடிக்கையில், மானசாவின் முகத்தினில் மேலும் வலி அதிகரிக்க,

“ஏன்.. இப்படி சித்து சர்.. அப்படி.. என்ன நான்..” என்று எதுவோ கேட்க வந்தவள், பின் அவளே வார்த்தைகளை விழுங்கி, ஆழ மூச்செடுத்து விட்டு,   “ஓகே… நான் எதுவும் கேட்கல… பை…” என்று திரும்பப் போக,

“மனு நில்லு..” என்றான் வேகமாய் சித்திரைச் செல்வன்.

வேண்டாம் சொல்லிவிட்டான் தான். அதாவது நமக்குள் இந்த காதல் அது இதெல்லாம் எதுவுமே வேண்டாம். அதெல்லாம் சரிவராது என்று சொல்லிவிட்டான் தான். இருந்தும் அவள் இப்படி பட்டென்று போவது அவனுக்கு சங்கடம் கொடுத்தது.

“வேணாம் சொன்னதுக்கு அப்புறம் பின்ன என்ன மனுன்னு.. என் நேம் சொல்றதுக்குக் கூட ரைட்ஸ் இல்லை உங்களுக்கு..” என்று விரல் நீட்டி உருத்து விழித்து சொன்னவள், அப்படியே கிளம்பியும் விட்டாள்.

முழுதாய் அவள் பேசவும் விரும்பவில்லை, அவன் சொல்லும் காரணங்களை முழுதாய் கேட்கவும் விரும்பவில்லை. உன்னிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தோ, இல்லை உன் விளக்கத்தினை கேட்டோ நான் எதையும் முடிவு செய்யப்போவதில்லை. அதில் அவள் உறுதியாகவே இருந்தாள். வேண்டாம் என்றுவிட்டாய் அல்லவா அந்தளவில் நீ நின்றுகொள் என்ற முடிவு மட்டுமே அவளிடம்.

அவளை இதற்குமேல் நில் என்று சொல்வதற்குக் கூட அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அப்படியே சிலையென தான் நின்றிருந்தான். முடிவெடுத்ததை சொல்லிவிட்டான். ஆனால் அதன் தாக்கம் அவனுக்கும் இருக்கும்தானே..

அவனும் சகலவித உணர்வுகளும் இருக்கும் மனிதன் தானே..!!

ஆசைகொண்ட ஒருவன் தானே..!!

முதல் முறை காதல் கொண்டு. அதனை சொல்லியும்விட்டு.. அவளோடு சில பொழுதுகள் என்று நகர்த்தியும் விட்டு, இப்போது “இது நமக்கு செட்டாகாது.. வேண்டாம்.. நமக்குன்னு சொல்றத விட, உனக்கு இது செட் ஆகாது மனு.. மானசா..” என்று அவனே சொல்கையில், அவனுக்கும் வலிக்கத்தானே செய்திருக்கும்.

இருந்தும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை..

மானசாவின் வாழ்வு முறைகளையும், பொருளாதார பழக்க வழக்கங்களையும் பார்த்தவன் சிறிது அசந்து தான் போனான். ஆகா என்ற அசரல் இல்லை. ஐயோ என்ற அயர்வோடு கூடிய அசரல். இங்கே அவள் இவர்களோடு பழகுவதற்கும், அங்கே ஊட்டியில் அவர்களின் பழக்க வழக்கங்களுக்கும் மலைக்கும் மடுவிற்கும் நிறைய வித்தியாசம்.

அவளின் தோற்றமும், பாவனையும், பேச்சுக்களும், ஒரு பணக்கார வர்கப் பெண்ணின் எடுத்துக்காட்டாய் இருக்க, இவர்களோடு அவள் எப்போதும் போலவே பேசினாலும், சிரித்தாலும், இவர்களிடமே வந்து நின்றுகொண்டாலும், சித்திரைச் செல்வனை சுற்றி சுற்றி வந்தாலும் கூட அவனால் எப்போதும் போல் இருந்திட முடியவில்லை.

அதிலும் மானசா ராபர்ட்டிடம் சித்திரைச் செல்வனை அறிமுகம் செய்து வைக்க, அவனோ “ஹாய்…” என்று சொன்னானே தவிர, பெயருக்குக் கூட ஒரு புன்னகை இல்லை முகத்தினில்.

இதுவே சித்திரைச் செல்வனுக்கு பெரும் அவமானமாய் தான் தோன்றியது. முகம் கன்றிவிட, சட்டென்று திரும்பி மானசா முகம் பார்க்க, அவளோ ராபர்ட் அருகில் இருந்த தனுஜாவிடம் எதையோ பேசி சிரித்துக்கொண்டு இருந்தாள்.

பாஸ்கி இதனை கவனித்தவன் “டேய்.. இதெல்லாம் பெருசா நினைப்பியா நீ??” என்றவன், “வா போவோம்..” என்று இழுத்துக்கொண்டு சென்று ஓரிடத்தில் அமர்ந்துவிட, பாஸ்கி, சித்து, ஷில்பா மூவரும் ஒன்றாகவே அமர்ந்திருக்க, சிறிது நேரத்தில் மானசா சிரித்த முகமாய் தான் அவர்களிடம் வந்தாள்.

அவள் கட்டியிருந்த சேலை என்ன வகையோ. அது தெரியாது இவர்களுக்கு. ஆனால் அதனைப் பார்க்கையிலேயே நிச்சயம் அதன் விலை புரிந்தது. கையில், கழுத்தில், காதில் என்று ஜொலிப்பவை எல்லாம் வைரங்களா வைடூரியங்களா எதுவும் விளங்கவில்லை. கண்ணை பறித்தது. மதுரையில் அவள் எடுத்த உடைகள் எல்லாம் எங்கே போனதோ தெரியவில்லை.

காதலியின் இத்தோற்றம் நிச்சயம் காதலனாகப் பட்டவனுக்கு, மனதினைக் கவர்ந்திட வேண்டும் தான். ஆனால் அப்படியான உணர்வு சித்திரைச் செல்வனுக்கு வரவில்லை. மாறாக, அவளின் இந்தத் தோற்றம் ஒரு இறுக்கத்தை தான் கொடுத்தது.

மானசாவின் பார்வையோ அவன் பக்கம் சற்று ஆர்வமாகவே படிந்து வர, அவனின் முகமோ துடைத்து வைத்தது போலிருந்தது.

எதுவுமே சொல்வானோ என்று “என்ன சித்து சர்…” என்று அவளே பேச்சினைத் தொடங்க,

“அங்க இருக்காம இங்க ஏன் வந்த நீ..” என்றான்.

எப்போதடா நேரம் கிடைக்கும் இவர்களிடம் வந்தமர்ந்து பேசலாம் என்று காதிருந்தவளுக்கு, சித்திரைச் செல்வனின் இவ்வார்த்தைகள் கொஞ்சம் எரிச்சலைத் தான் கொடுத்தது.

ஏனோ இங்கே ஓர் ஒட்டாத தன்மை அவனுக்கு….!!

மானசா உட்பட எதுவுமே அவனின் மனதினில் ஒட்டவில்லை..!!

நிச்சயத்திற்கு முதல் நாள் இரவு தான் இவனும் பாஸ்கரும் வந்தார்கள். கோவைக்கே மானசா கார் அனுப்பியிருந்தாள். அங்கிருந்து கார் பயணம் ஊட்டிக்கு. இங்கே இவர்களை விருந்தினர் மாளிகையில் தங்க வைக்க, சித்திரைச் செல்வனுக்கு அதனைக் கண்டதுமே மூச்சடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாஸ்கருக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை பாவனை தான். சித்துவிற்கு அப்படியில்லையே. அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இன்னும் பிரம்மாண்டமாய் தோன்றியது.

“செமையா இருக்குல்லடா.. எங்கேஜ்மென்ட்க்கே எப்படி பண்றாங்க பாரேன்…” என்று பாஸ்கர் சொல்லும் அனைத்தையும், சித்துவிற்கு அவனின் வீட்டினோடு ஒவ்வொன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தது மனம். அவர்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல, ஆனால் இந்த அளவிற்கு இல்லையே.

இவர்கள் விருந்தினர் மாளிகைக்கு வந்துவிட்டனர் என்று தெரிந்ததுமே “சர் மேம் உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி அனுப்பினாங்க..” என்று ஒருவன் வந்து நிற்க, இதெல்லாம் சினிமாவில் மட்டுமே காண்பதாய் இருந்தது அவர்களுக்கு.

அதிலும் மானசா அழைத்து “உங்களுக்கு ஹெல்ப்க்கு ஒருத்தர் அனுப்பிருக்கேன்.. எதுன்னாலும் கேளுங்க.. செஞ்சு கொடுப்பார்..” என,

“இங்க என்ன ஹெல்ப்??” என்றான் சித்து.

“அட… இருக்கட்டும்… நாளைக்கு மார்னிங் நான் அங்க வந்திடுவேன்… முடிஞ்சா வெளிய போலாம். ஓகே வா…” என்று கேட்டவளின் குரலில் அப்படியொரு ஆவல்.

“அதெல்லாம் வேணாம் மனு.. உனக்கு வொர்க் இருக்கும்தானே பாரு..” என்று வைத்துவிட்டான்.

இவர்களின் உதவிக்கு என்று இருந்தவன், இவர்களை ஓர் அறைக்கு அழைத்துச் செல்ல, அந்த அறையிலோ கிட்டத்தட்ட குறைந்தபட்சம் பத்து பேர் தங்கலாம். சகல வசதிகளும் நிறைந்து இருக்க, பாஸ்கரோ வெளிப்படையாகவே “டேய் சித்து.. செம்ம டா..” என்று சிலாகிக்க,

“சர் உங்களுக்கு எதுவும் வேணுமா??” என்று பணிவாகவே அந்த அவன் கேட்டு நிற்க,  ‘எவன்டா இவன் வேற..’ என்று எரிச்சல் தான் வந்தது.  

“வேணும்னா கூப்பிடுறோம்..” என்று சித்து சொல்லவும், தான் அவன் அந்த அறை விட்டு செல்ல, அதே எரிச்சலுடனே சித்திரைச் செல்வன் அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர,

“ஏன் டா கடுப்படிக்கிற..” என்று பாஸ்கி கேட்க,

“என்னவோ தெரியலைடா..” என்று சித்துவும் சொல்லிக்கொண்டான்.

சிறிது நேரத்தில் இரவு உணவு வைத்து, மற்றொருவன் வர, அவன் கொணர்ந்ததோ குறைந்தது ஐவராவது உண்ணும் அளவில் இருக்க, பாஸ்கர் கூட சொல்லிவிட்டான் “இவ்வளோ எதுக்கு?” என்று.

“பரவாயில்ல சர்.. எது வேணுமோ சாப்பிடுங்க..” என்று நான்கு வகை உணவுகளை காட்ட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

சித்திரைச் செல்வனோ தங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை எடுத்துச் செல்ல சொல்ல, அந்த பணியாளோ இவர்களை வித்தியாசமாய் பார்த்துவிட்டு செல்ல, அதனை கண்டாலும், கண்டுகொள்ளாது தான் இருந்தனர் இருவரும்.

இவைகளை எல்லாம் பார்க்கையில் சித்திரைச் செல்வன் மனதினில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான் “எப்படி மானசா தன் வீட்டினில் வந்து இருந்தாள்…” என்பதே.

‘ஒருவேளை நான் கூட்டிட்டு வந்ததுனால அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்தாளோ..’ இதுவே அவனின் மனதில் ஓடத் தொடங்கியது.

‘எத்தனை நாளுக்கு அவளால இப்படி அட்ஜஸ்ட் பண்ண முடியும்??!!’ என்ற கேள்வி பிறக்க,

“முடியுமா??!!!” என்ற சந்தேகமும் சேர்த்தே பிறக்க, பொதுவாய் காதலிப்பவர்கள் யாரும் இப்படி நினைப்பார்களா தெரியவில்லை. ஆனால் சித்திரைச் செல்வனைப் போன்ற ஒருவன் நினைப்பான்.

அவனின் வளர்ப்பு அப்படி. நாளொன்றையும், எதிர்காலத்திற்கும்  சேர்த்தே சிந்திக்கவேண்டும், பிறரின் மனநிலையும் யோசித்துத் தான் எந்தவொரு முடிவினையும் எடுத்திட வேண்டும் என்று சொல்லி சொல்லிய வளர்க்கப்பட்டவன், அதனையே சற்று மாற்றி விசாலமாய் எண்ணாது, இப்படி நினைக்க, என்னவோ மானசா என்றொரு அழகிய பறவையை தான் ஒரு கூண்டுக்குள் அடைப்பது போன்ற உணர்வு தான் அவனுக்கு ஏற்பட்டது.

கண்களை இறுக மூடித் திறந்தவனின் பார்வை அந்த அறை முழுவதும் சுற்றி வர, ஒவ்வொரு இங்கு இடுக்கிலும் கூட செல்வ செழிப்பு அங்கே கொட்டிக் கிடக்க, அங்கே அவனுக்கு எதுவுமே மனதினில் ஒட்டவில்லை.

இதேது வேறோருவனாய் இருந்தால், ‘ஆ..!!’ என்று வாய் பிளந்திருப்பான். இல்லையோ ‘அடித்தது லாட்டரி..’ என்று மகிழ்ந்திருப்பான்.

அப்படியான எண்ணங்கள் எல்லாம் எதுவுமே சித்திரைச் செல்வனுக்கு இல்லை. இயற்கை சூழ்ந்த ஓர் இடத்திற்கு வந்திருக்கும் இதமே அவனிடம் காணாது போய்விட்டது. மாறாக, தேவையில்லாத ஓர் இடத்திற்கு வந்த பாவனையே. பாஸ்கரும் அவனை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். தானாக கேட்டு எதையும் தூண்டி விட கூடாது என்று அமைதியாகவே இருக்க, “என்னடா அமைதியாவே இருக்க..” என்றான் ஒருவித கசந்த குரலில்.

“நீ அமைதியா இருக்க.. சோ நானும்..” என்ற பாஸ்கர், அவர்களின் பேக்கினை எடுத்து ஒரு பக்கம் வைக்க, மறுபடியும் கதவு தட்டும் சத்தம் கேட்க, “நான் பாக்குறேன்..” என்று சித்திரைச் செல்வன் எழுந்து சென்று கதவு திறக்க, வெளிய மற்றொரு சிப்பந்தி நிற்க,

“என்ன??” என்று கேட்காது, பார்த்து மட்டும் வைத்தான்..

“ஸார், வெளிய கர்டன்ல கெஸ்ட்ஸ்காக பார்ட்டி நடக்குது..” என,

“அதுக்கு..??” என்றான் சித்து. 

“அ.. அது.. ரூம்க்கே கொண்டுவ வரவா??” என்று பணியாள் கேட்க,  இவன் எதனைக் கேட்கிறான் என்பது சுத்தமாய் சித்திரைச் செல்வனுக்கு விளங்கவில்லை.

மற்றைய நேரமாக இருந்திருந்தாலாவது புரிந்திருக்குமோ என்னவோ, அப்போதைய மனநிலையில் அது புரியாது போக “என்னது??” என்றான் கண்களை சுறுக்கி.

“ட்ரிங்க்ஸ் சார்.. என்ன பிராண்ட்னு சொன்னீங்கன்னா எடுத்துட்டு வர்றேன்..” என்று அவன் பணிவாகவே கேட்டபோதும், என்னவோ இவனுக்கே சுர்ரென்று கோபம் தான் எரியது.

“அதெல்லாம் எதுவும் வேணாம்..” என,

“இல்ல சார் மேம் கேட்பாங்க கவனிச்சீங்களான்னு..” என,   மானசா மீது ‘என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாள் இவள்..’ என்ற கோபமும் கூட,

“அதெல்லாம் பழக்கமில்லை..” என்றவன், கதவினை பட்டென்று அடைத்துவிட்டான்.

“டேய் ஏன்டா…” என்று பாஸ்கர் கேட்க,

“ட்ரிங்க்ஸ் வேணுமா.. என்ன பிராண்ட்னு கேக்குறான்..” என்று சித்து கடுப்படிக்க,

“அதுக்கேன்டா கதவை இப்படி போட்டு அடைக்கிற.. வேணாம்னா வேணாம் சொல்லு.. எதையும் கேசுவலா எடுக்க பாரேன் சித்து…” என்றான் பாஸ்கரும் சற்று எச்சரிக்கும் விதமாகவே.

ஏனெனில் அவனுக்கு நன்கு தெரியும், சித்துவின் மனது இப்போது எதை எப்படி சிந்திக்கும் என்று. அதனாலேயே சற்று குரலில் கடினம் காட்டி கூற, அதெல்லாம் சித்திரைச் செல்வன் கவனித்ததாகவே தெரியவில்லை.

“எல்லாத்தையும் கேசுவலா எடுக்க முடியாது…” என்றவன் “குளிச்சிட்டு வர்றேன்…” என்றுவிட்டு போனான்.

பாஸ்கருக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல் தான் வந்தது. ஏன் இவன் இப்படி இருக்கிறான் என்று. சொல்லாதானே முடியும். ஒருவரின் மனதிற்குள்ளே நுழைந்து அவர்களின் எண்ணத்தினை மாற்ற முடியாது அல்லவா..

சித்திரைச் செல்வன் குளிப்பதற்கு என்று சென்ற அடுத்த இரண்டு நொடிகளில், மானசா அவனுக்கு அழைப்பு விடுக்க, பாஸ்கர் முதலில் எடுக்க வேண்டாம் என்று விட, பின் அவனுக்கு அழைத்தாள் மானசா.

எடுத்துத்தானே ஆகவேண்டும் “ஹெலோ..” என்று சொல்லும் முன்னமே,

“பாஸ்கிண்ணா… எந்த பிராப்ளமும் இல்லைதானே…” என்று கேட்ட அவளின் குரலில் அப்பட்டமாய் பதற்றமே.

“இல்ல மனு.. எதுக்கு??” என்று விசாரிக்க,

“இல்ல, ரூம் சர்வீஸ் பண்றது எல்லாம் வேண்டாம் வேண்டாம் சொல்றாங்கன்னு எம்ப்ளாயிஸ் சொன்னாங்க அதான்..” என்று கேட்டவளுக்கு என்னவோ ஏதோவென்று தான் ஆனது.

“அ.. அது.. மானசா..” என்று பாஸ்கி இழுத்தவன் என்ன சொல்வதென்று யோசிக்க,

“சொல்லுங்க பாஸ்கிண்ணா.. என்னாச்சு?? இவங்க போனும் எடுக்கல..??” என,

“அவன் குளிக்க போயிருக்கான்… அது.. இங்க எல்லாமே புதுசு இல்லையா அதான் கொஞ்சம்…” என்று பாஸ்கர் வார்த்தைகளை தேட,

“நான் வேணா வரட்டுமா??” என்றாள் மானசா.

“அடடா அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நீ ரிலாக்ஸா இரு.. சாப்பிட்டாச்சு.. தூங்க போறோம் அவ்வளோதான்..” என்றான் பாஸ்கர் சமாதானம் செய்யும் விதமாய்.

“ம்ம் சரிண்ணா..” என்றவளுக்கு என்னவோ மனதில் ஒரு உறுத்தல் பிறந்தது.

இங்கே வரும் வரைக்கும் கூட சித்திரைச் செல்வனின் குரலில் ஒரு இலகு இருக்க, வந்த பின் பேசியதில் அப்படியொரு மாற்றம் இருந்தது. அவன் சும்மாவே ஏதாவது நினைப்பான் என்று இத்தனை நாளில் புரிந்து வைத்திருந்தாள், அப்படியிருக்க, இன்று இங்கே வந்ததும் இந்த மாற்றம் எனில் யோசனையாகவே இருந்தது..

Advertisement