Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 22

ஷில்பாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை, மானசாவிற்கும் சித்திரைச் செல்வனுக்கும் இடையில் காதல் என்பதை. கன்னத்தில் கை வைத்து, இன்னும் அதிர்ச்சி பாவனை குறையாது இருவரையும் மாறி மாறி பார்க்க, மானசா அவளை கேலியாய் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்க,

சித்திரைச் செல்வனோ “இதெல்லாம் என்ன??” என்பதுபோல் தான் மானசாவை முறைத்தான்.

அவர்களின் தாவரவியல் துறையில், முதுகலை, இளங்கலை இரு பிரிவிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் இருந்தது. மற்ற வகுப்பு மாணவர்கள் எல்லாம் கேம்ப் சென்றிருக்க, இரண்டொரு ஆசிரியர்கள் மட்டுமே இருக்க, ஒருவித அமைதி தான் இருந்தது அங்கே. 

அதிலும் இவர்களின் சர்டிபிகேட் வகுப்புகள் பக்கம் சும்மாவே யாரும் வரமாட்டார்கள். இப்போது கேட்கவே வேண்டாம். அந்த காரிடர் முழுவதும் பேரமைதி. இவர்களின் அறையில் ஏசி ஓடும் சப்தம் மட்டுமே கேட்க உடன் , மானசாவின் சிரிப்புச் சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

“பாஸ்கி சேட்டா நிஜமாவா??” என்று நம்ப முடியாது திரும்ப கேட்க,

“அதையேன் ம்மா என்கிட்டே கேக்குற.. நானும் உன்னைப்போலத்தான்..” என்று அவன் கிண்டலாய் சொல்லவும், சித்து இப்போது அவனையும் முறைக்க,

“டேய் நல்லவனே.. நீலாம் லவ் பண்றதே அதிசயம்.. அதுலயும் வாய் விட்டு சொல்லிருக்க பாரு அதெல்லாம் பேரதிசயம்.. இதுல என்னை முறைக்கவெல்லாம் செய்யாத..” என்றான் பாஸ்கர்.

மானசா இப்போது அதற்கும் சிரிக்க “ஸ்டாப் இட் மனு..” என்று சித்திரைச் செல்வன் முகம் சுருக்கி சொல்ல,

“டி சிப்ஸ்… ரொம்ப ஷாக் ஆகாத.. டாப்பிக் பேச ஸ்டார்ட் பண்ணது நான் தான்.. அப்படியே ஒரு ப்ளோல சொன்னது மட்டும் தான் இவரு..” என,

“இல்லன்ன அவன் ஜென்மத்துக்கும் சொல்லிருக்க மாட்டான்..” என்று பாஸ்கரும் எடுத்துக் கொடுக்க,

“மானசா…” என்று இப்போது சித்திரைச் செல்வன் அவளின் பெயரை உச்சரித்த விதத்தினில் ‘நீ வாயை மூடு..’ என்ற தொனியே இருந்தது.

அவளோ உற்சாகத்தில் சொல்லிக்கொண்டு இருக்க, அவனோ இப்படி அனைத்தையும் சொல்ல வேண்டுமா என்று நினைக்க, பாஸ்கருக்குத்தான் பயமாகிப் போனது எங்கே இவர்களுள் சண்டை வந்துவிடுமோ என்று.

மானசா உதட்டை பிதுக்கி அமைதியாகவும், அதே நேரம் சற்று சலுகையாகவும் அவனைக் காண, சித்துவிற்கு என்ன தோன்றியதோ “டிபார்ட்மெண்ட்ல மோஸ்ட்லி யாருமில்ல.. சோ எல்லாம் கேம்ப் முடிஞ்சு வர வரைக்கும் கீழ யூஜி பர்ஸ்ட் இயர் கிளாஸ் ரூம்ல உங்களுக்கு கிளாஸ்.. மாடிக்கு வர வேணாம்.. நான் ஆபிஸ் ரூம்ல சொல்லி கீ வாங்கிட்டு வர்றேன்.. நீங்க போங்க..” என,

இப்போது மற்ற மூவருக்குமே ஒரு அதிர்ச்சி பாவனை.!!

“என்னடா??!! ஏன் டா??!!” என்று பாஸ்கி கேட்க,

“எல்லாரும் இருக்கப்போ நம்ம எப்படி இருக்கோம்ங்கிறது வேற.. யாருமே இல்லைன்னாலும் நம்ம எப்படி இருக்கோம்ங்கிறது தான் விசயமே.. யாருமே கவனிக்க மாட்டாங்கன்னு சொல்ல முடியாது..” என்றுவிட்டு அவன் கீழே செல்ல,

“ம்ம்ம்ம்… ரொம்ப கஷ்டம்…” என்று ஷில்பா, மானசாவைப் பார்த்து சொல்ல,

“அதே.. அதே..” என்று அவளும் தலையை ஆட்டினாள்.

இவர்களும் வேறு வழியில்லாது கீழிருக்கும் வகுப்பு செல்ல, சித்திரைச் செல்வனோ பாஸ்கரிடம் “நீ கிளாஸ் எடு.. எனக்கு தேர்ட் இயர் லேப் பார்க்க சொன்னாங்க..” என்றுவிட்டு போக, மானசாவிற்கு கோபம் வந்துவிட்டது.

இதற்கு எதுக்கு கீழே வரவேண்டும். எனக்கு வேறு வகுப்பு இருக்கிறது என்றுவிட்டு போனால் அவள் என்ன சொல்லிட போகிறாள்??!!

பொறுக்க முடியாது “இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி ஓடுறாங்க..” என்று பாஸ்கரிடம் கேட்க,

“எனக்கு என்னம்மா தெரியும்..” என்றான் பாவமாய்.

பாஸ்கர் தான் இவர்களுக்கு அன்றைய வகுப்புகள் எடுக்க, மானசாவிற்கு அதில் மனம் ஒன்றவே இல்லை. மண்டைக்குள் வண்டு குடைவது போலிருந்தது. தான் அவன் வீட்டினில் இருக்கையிலும் அவன் இருந்திடவில்லை. இங்கேயும் இதோ இப்படி போகிறான்.

என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறான்?? யாரும் இல்லை என்றால் மட்டும் தான் இவனுக்கு காதல் வருமா என்ன??!!

இப்படித்தான் அவளுக்கு நினைக்கத் தோன்றியது. எப்போது எது சொன்னாலும் ‘நான் இப்படித்தான்…’ என்பது போலான பேச்சு.

எரிச்சல் எரிச்சலாய் வர, வகுப்புகள் எல்லாம் முடிந்து அன்றைய தினம் மதியம் ஷில்பா “பாஸ்கி சேட்டா கேண்டீன் பூவாம்…” என்று சொல்ல,

“நீங்க போங்க.. நான் வரல…” என்று சொல்லி அறைக்கு வந்துவிட்டாள் மானசா.

ஒரு சிறு மகிழ்ச்சியை கூட அவளால் முழுதாய் அனுபவிக்க முடியவில்லை. காதலிக்கும் அனைவரும் இப்படியா இருக்கிறார்கள்? எத்தனை சண்டைகள் வந்தாலும் பின் சந்தோசமாய் இருப்பதில்லையா?? இங்கேயோ சாதாரணமாய் ஒரு பேச்சு பேச கூட அத்தனை வரைமுறைகள் எனில் அவளுக்கு இப்போதே மூச்சு முட்டுவது போலவும் இருந்தது.

‘சரிதான் போடா..’ என்று சொல்லி ஒரேதாய் பேசாதும் அவளால் இருந்திட முடியவில்லை..

சண்டை போட்டாலும் கூட அவனோடு பேசிக்கொண்டே சண்டையிட வேண்டும் என்று இருப்பவளை, அவனோ ஒதுக்கி வைப்பதாய் தான் தோன்றியது மானசாவிற்கு.

பசி எடுத்தாலும் உண்ணாது அப்படியே படுத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் ஷில்பா வந்தவள் அவள் உண்டிருக்கமாட்டாள் என்று தெரிந்தே கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி வந்திருக்க அப்போதும் “எனக்கும் வேணாம்..”  என்று சொல்ல,

“குடி டி.. சித்து சேட்டா வாங்கிக் கொடுத்தது..” என,

படக்கென்று எழுந்து அமர்ந்தவள், “நிஜமா..” என,

“ம்ம் எஸ்.. நீ வந்திட்ட.. சேட்டா உன்ன தேடுது.. பின்ன கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி..” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, மானசா அவளின் அலைபேசி எடுத்து அவனுக்கு அழைக்க,

“கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு பேசு..” என்றான் அவனும்.

கண்களில் கோபம் இருந்தாலும், இதழ்கள் ஒருவித சிரிப்பினில் லேசாய் நடுங்குவது போலிருக்க “ஏன் குடிச்சிக்கிட்டே பேசக்கூடாதா ??” என்று இவள் கேட்க,

“என்னவோ பண்ணு..” என்றான் அவனும்.

மானசா அதனை எடுத்துக் குடிக்கத் தொடங்கவும் தான் ஷில்பா “நீ பேசு நான் வார்டன் பார்த்துட்டு வர்றேன்..” என்று சொல்லிவிட்டு செல்ல,

“குடிச்சிட்டு இருக்கேன்..” என்றாள் அவனிடம் அலைபேசியில்.

“ம்ம்ம் அதுக்குன்னு இவ்வளோ சத்தமா குடிக்கவேண்டாம்..” என்று சித்து நக்கலடிக்க,

“அப்படித்தான் குடிப்பேன்.. உங்களுக்கு என்ன??” என்றாள் விட்டேத்தியாய்.

“ஓகே அப்போ நான் வைக்கிறேன்..” என்று அவன் சொல்லவும்,

“இருங்க இருங்க..” என்றவள் முழுதாய் குடித்து முடித்துவிட்டு, “மத்தவங்க முன்னாடி என்னோட பேச கூட அப்படியென்ன உங்களுக்கு தயக்கம்??” என்றாள் மானசா.

“நான் அப்படி சொல்லலையே…”

“சொல்லலை.. பட் அப்படித்தான் நினைக்கிறீங்க சாரே.. எனக்கு அதுகூட புரியாதா என்ன??” என்றவள் “நான் ஒன்னும் எல்லார் முன்னாடியும் உங்க கை பிடிச்சு இழுக்கவெல்லாம் மாட்டேன்..” என,

“இப்படித்தான் பேசாதன்னு சொல்றேன் மனு..” என்றான் ஒருவித இறுகிய குரலில்.

“ஏன்.. இப்போ நான் என்ன தப்பா பேசிட்டேன்??” என்று அவள் எகிரவுமே,

“ம்ம்ச் லுக் மனு.. நீ இங்க ஸ்டூடன்ட்.. பட் நான் அப்படி இல்லை.. ஸ்டூடன்ட்னாலும் ஐம் ஹான்ட்லிங் தி க்ளாசஸ். புரியுதா.. என்னோட ஸ்டூடன்ஸ் முன்னாடி நான் பேட் எக்சாம்பிளா இருக்கக் கூடாது புரியுதா..” என்று அவன் அமைதியாகவே எடுத்து சொல்ல வர,

“வாட்??!!! கம் அகைன்…” என்றாள் மானசா ஒருவித அதிர்வில்.

“ஏன் உனக்கு புரியலையா?” என்றவனுக்கு தான் எதையும் தவறாய் சொன்னோமோ இல்லை அவள் எதுவும் தவறாய் புரிந்துகொண்டாளோ என்று இருக்க,

“அப்.. அப்போ.. என்னோட பேசுறது பேட் எக்சாம்பிளா…” என்றாள் கோபத்தை அடக்கிய குரலில்.

அவள் அப்படி சொன்னதுமே பட்டென்று தன் நெற்றியில் அடித்துக்கொண்டவன் “நான் அப்படி மீன் பண்ணல மனு..” என்றான் பொறுமையாகவே.

“பின்ன?? பின்ன வேற எப்படி?? இப்போ நீங்க அப்படிதானே சொன்னீங்க.. என்னோட பேசுறது.. என்னை லவ் பண்றது பேட் எக்சாம்பிள்னு…” என்று படபடக்க, சித்திரைச் செல்வனுக்கும் பொறுமை இழந்தது.

“ஹேய்… நான் என்ன சொல்லறேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க.. லுக் என்னால எப்போ பாரு உன்னோட பேசிட்டு, சுத்திட்டு எல்லாம் இருக்க முடியாது புரிஞ்சதா.. யாரும் கேள்வி கேட்கிற நிலைமை நமக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்.. புரிஞ்சு நடந்துக்கோ.. இல்லை என்னவோ பண்ணு..” என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காது வைத்தும் விட்டான்.

அவன் அழைப்பை துண்டித்தது கூட உணராது, மானசா அப்படியே செவியில் வைத்தபடி அமர்ந்திருக்க, ‘பேட் எக்சாம்பிளா..??!!’ இதுவே அவளுள் ஒலித்துக்கொண்டு இருக்க, சிலையென அமர்ந்திருந்தாள்.

“ஹேய்.. மனு…” என்று ஷில்பா அவள் தோள் தட்ட, அவளின் தொடுகையில் திடுக்கிட்டவள், மெதுவாய் அலைபேசியை பார்க்க மானசா வெகுவாய் அடிபட்டு போனாள்.

“எந்தானு மனு…” என்று ஷில்பா விசாரிக்க,

“ம்ம்..” என்று அவள் முகம் பார்த்தவள் “நத்திங்..” என்று தலையசைக்க,

“சித்து சேட்டாவோட ஏதும் சண்டையா??” என்று அவள் விசாரிக்க, உறுப்படியாய் பேசினால் தானே சண்டை எல்லாம் வரும்.

இங்கே சாதாரணமாய் பேசிடவே ஒரு பஞ்சமாய் இருக்க, இதில் சண்டை எல்லாம் எங்கிருந்து போடுவது??!!

மானசா அப்படியே தான் இருந்தாள். ஒரு வார்த்தை கூட பேசிடவில்லை. தான் நினைப்பது தவறா?? இல்லை தன் எதிர்பார்ப்புகள் சரியா தவறா?? இதெல்லாம் அவளுக்கு எதுவும் விளங்காது போக, அங்கே சித்திரைச் செல்வன், ‘உஷ்… உஷ்…’ என்று வாய் வழியே மூச்சினை வெளியிட்டு, தன் உள்ள குமுறலை அடக்கிக்கொண்டு இருந்தான்.

ஒவ்வொரு முறையும் அவளிடம் நன்றாகவே பேச நினைக்கிறான். அவளை நோகடித்துவிடக் கூடாது என்றே எண்ணுகிறான், ஆனால் அது மட்டும் தான் நடந்தேறுகிறது.

இப்படி எல்லாம் நடந்திடும் என்று தெரிந்துதானே அவன், எதையும் வெளிப்படுத்தக் கூடாது என்று இருந்தான்.

இப்போதோ தன் கை மீறி எல்லாம் நடப்பதாய் இருக்க, அவனுக்கு மானசாவை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாது தன் முன்னிருந்த மேஜையை ஓங்கிக் குத்த,

“டேய் டேய்.. பார்த்து டா…” என்றான் பாஸ்கர்.

“ம்ம்ச் போ டா..”

“அதுசரி டேபிள் மேல இருக்கிறது டிபார்ட்மெண்ட் கம்ப்யூட்டர்.. உடைஞ்சா நம்மதான் பதில் சொல்லணும்..” என,

“முதல்ல இப்படி பேசுறதை நிறுத்து..” என்றான் சித்து.

‘ம்ம் என்னையுமா??’ என்று பாஸ்கி பார்க்க,

“இப்போ எதுக்கு நீ இப்படி பார்த்துத் தொலைக்கிற..” என்று அதற்கும் ஒரு கடி கடிய,

“யப்பா சாமி.. ஆள விடு.. நீயும் நார்மலா இருக்க மாட்ட.. இருக்கவனையும் ஏன் எதுக்குன்னு படுத்துவ.. ஆனா ஒன்னு நீ இப்படி இருக்கிறது செய்றது எல்லாம் உனக்கே நல்லது இல்லை. அத முதல்ல புரிஞ்சுக்கோ..” என்றுவிட்டு பாஸ்கர் கிளம்பிப் போக,

அவன் சொன்னது அனைத்தும் நிஜம் என்று சித்துவிற்கு தெரியாதா என்ன??!!

தான் இப்படியே நடந்துகொண்டால் அது நிச்சயம் அவனையும், மானசாவையும் ஒன்றுமில்லாது ஆக்கிடும் என்பது நன்கு தெரிந்தே இருக்க, எப்படி மாற்றிக்கொள்வது, எப்படி மாறிக்கொள்வது என்ற வழி தான் அவனின் கண்களுக்கு புலப்படவில்லை.

சரி அவளுக்கு அழைத்து கொஞ்சம் தன்மையாய் பேசலாம் என்று அழைக்க எண்ணி அவனின் அலைபேசி எடுக்க, “சித்து தம்பி..” என்று வந்தான் பியூன் கணேஷ்.

“என்ன கணேஷ்ணா…” என,

“பிஜி பைனல் இயர்க்கு லேப் பாக்கணுமாம்..” என்று சொல்ல,

“எனக்கு அங்க அலாட்மென்ட் இல்லையே..” என்றான் சித்து.

“வேற யாரும் இல்ல.. நீங்க போங்க.. மேடம் இருந்தவங்க கேண்டீன் போயிட்டாங்க..” என, அப்போதைக்கு அவன் கிளம்பி செல்ல வேண்டிய நிலை.

சரி வந்து பேசுவோம் என்று அவனும் கிளம்பிட, “என்னாச்சு தம்பி எதுவும் டென்சனா??” என்றபடி பியூனும் வர,

“அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணா..” என்றபடி அவனும் வந்தான்.

மனம் முழுக்க மானசாவிடம் தான் இருந்தது..!!

நிச்சயம் தன் வார்த்தைகளை அவள் தவறாய் புரிந்து வேண்டாததை எல்லாம் எண்ணியிருப்பாள் என்று உறுதியாய் தெரிந்தது. வந்து பேசவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு தான் சென்றான்.

அவளும் அப்படி எண்ணியிருக்க வேண்டுமே..

இனி தானாக எதுவும் பேசக்கூடாது என்று நூறாவது முறையாய் முடிவு எடுத்துக்கொள்ள, “சிப்ஸ் நம்ம அவுட்டிங் போலாமா..??” என,

“ம்ம் போலாமே..” என்றாள் ஷில்பாவும்.

“நம்ம மட்டும் போலாம்..” என்று மானசா சொல்ல,

“ஓகே..” என்று அவளும் சொல்ல, இருவரும் கிளம்பி வெளியே சென்று சிறிது ஊர் சுற்றிவிட்டு, பின் ஒரு ஹோட்டலில் உண்டுவிட்டு மாலை எழு மணி போல் தான் வந்தனர்.

வெளியே சென்று வரவும் தான் அவளுக்கு கொஞ்சம் இயல்பில் இருக்க முடிவதாய் இருக்க, காதலிப்பதால் மட்டும் தான் தன்னுடைய சுயம் இழந்து இருக்கக் கூடாது என்பது நன்கு புரிந்தது.

‘அவங்க மைன்ட் செட் அவங்களுக்கு.. என்னோடது எனக்கு… எல்லாமே ஒருநாள் சரியாகும் தானே… எதையும் எதிர்பார்த்தா தானே பிரச்சனை..’ என்று தனக்கு தானே முடிவிற்கு வந்துவிட்டாள்.

அதன்பின்னே ஷில்பாவோடு கலகலப்பாய் பேசி சிரித்தபடி வர, அவர்களின் விடுதிக்கு அருகே சற்று தள்ளி சித்திரைச் செல்வன் அவனின் சைக்கிள் வைத்து நிற்பது தெரிந்தது.

முதலில் மானசா கவனிக்கவில்லை, இவர்கள் நடந்து வரும்போதே தனுஜா அழைத்துவிட, அவளோடு பேசிக்கொண்டு வந்தவள், அங்கே நின்றிருந்தவனை கவனிக்கத் தவற, ஷில்பா கவனித்தவள் தான் “மனு..” என்று அவளின் கை சுரண்ட,

“என்ன சிப்ஸ்..” என்று பார்த்தவளை, ‘அங்கே பார்..’ என்று ஜாடை காட்ட, சற்று தள்ளி இருந்த ஒரு பெரிய மரத்தின் அருகே சைக்கிள் வைத்து, மரத்தின் மீது ஒரு கால் வைத்து சித்து சாய்ந்து நின்றுகொண்டு இருக்க, திடுக்கென்று இருந்தது அவளுக்கு.

சந்தோசம் வருவதற்கு பதிலாய் ஒருவித பயம் தான் வந்தது.

‘இப்போதென்ன சொல்லப் போகிறானோ..’ என்று..

அதே எண்ணத்தில் தான் அவனைக் காண, இங்கே வா என்பது போல் கண்களை மூடித் திறந்தான். அங்கே அலைபேசியில் தனுஜா பேசிக்கொண்டே இருக்க “தனு கால் யூ லேட்டர்…” என்றவள், ஷில்பாவை பார்க்க,

“போ..” என்றாள் அவள்.

“ம்ம்ஹும் நான் போகல..” என்றவள் மறுப்பாய் சித்துவை நோக்கியும் தலையை ஆட்ட,

அவனோ ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து, இது வேலைக்காகாது என்று எண்ணினானோ என்னவோ, சைக்கிள் ஸ்டாண்ட் எடுத்துவிட்டு, அதனை உருட்டிக்கொண்டு வர, அருகில் வர வர “என்ன சொல்லப் போகிறானோ..” என்று படபடத்தது மானசாவிற்கு.

சைக்கிளை அசால்ட்டாய் திருப்பி மானசா பக்கம் வந்தவன் அவளின் கை பிடித்தும் தன் பக்கம் திருப்பி “வா என்னோட.. பேசணும்..” என்றபடி நடக்க, அவளையும் மீறி அவளின் கால்கள் எட்டு வைத்தது.

ஷில்பா சிரிப்பது மானசாவின் முதுகிற்கு நன்கு தெரிய திரும்பிப் பார்த்தவள் “போ டி..” என்று உள்ளே சைகை செய்ய,

“நீ போ டி..” என்றாள் அவள் கிண்டலாய்.

அவளின் கிண்டல் பொறுக்காது “இப்போ என்னவாம் உங்களுக்கு?” என்று அவனிடம் கேட்க,

“போன் பண்ணேன் எடுக்கல.. ஹாஸ்டல்ல பார்த்தேன் நீ இல்ல..” என,

“எ.. என்னது.. ஹாஸ்ட்டல்ல பார்த்தீங்களா???!!” என்றாள் வியப்பாய்.

“ம்ம்..”

“ஏ.. ஏன்?? மேம் ஒன்னும் சொல்லலையா??” என்றவளுக்கு நம்பிடவே முடியவில்லை.

“என்ன சொல்ல போறாங்க.. மானசா இன்னும் வரலைன்னு தான் சொன்னாங்க.. சோ வெய்ட் பண்ணேன்..” என்றான் இலகுவாய்.

“எதுக்கு வெய்ட் பண்ணனும்.. அதுவும் உங்க கோல்டன் டைம் வேஸ்ட் பண்ணி..” என்று முணுமுணுக்க,

“இதுவும் கோல்டன் டைம் தான்..” என்றான் அவளுக்கு கேட்கும்படி.

“என்ன சொன்னீங்க??!!” என்று கேட்டவளுக்கு இதயம் படபடத்ததா? இல்லை இமைகள் படபடத்ததா?? இல்லை இதழ்கள் படபடத்ததா?? என்று பிரித்தறிய முடியவில்லை.

காதல் செய்யும் மாயையில் இவை எல்லாமே ஒரு பகுதி தான் போல..

Advertisement