Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 2

“என்ன மச்சி.. இப்படி சார் கோர்த்து விட்டாரு.. ஆனாலும் பாவம் சித்து நீ…” என்று பாஸ்கர் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட,

“பாஸ்கி இப்போ நீ வாய் மூடலை…” என்று கை முஷ்டி இறுக்கினான் சித்திரைச் செல்வன் என்கிற சித்து.

“ஹா ஹா டேய் மச்சி.. நான் வாய் மூடுறது எல்லாம் இருக்கட்டும்.. உன்னோட இஸ்டூடன்ட் வாய் மூடவே மூடாது போல..” என்று சற்று தள்ளி அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டு இருந்த மானசாவை பாஸ்கர் பார்த்துவிட்டு மீண்டும் சிரிக்க,

“டேய்…” என்று பல்லைக் கடித்தான் சித்து.

“ஆனாலும் பாவம்டா நீ…”

“ம்ம்ச் மூடு… எல்லாம் ஜார்ஜ் சார் வர்ற வரைக்கும் தான் …”

“ஓ.. ஜார்ஜ் சார் வர்ற வரைக்கும் நீதான் இன்சார்ஜா..?” என்று கேட்டு பாஸ்கர் அதற்கும் சிரிக்க,

“பாஸ்கி அண்ணா.. இங்க வாங்களேன்…” என்றழைத்தவள் வேறாரும் இல்லை மானசாவே தான்.

‘நீயும் வாடா…’ என்று பாஸ்கர், சித்திரைச் செல்வனைக் காண,  “பாஸ்கி அண்ணா போங்கண்ணா…” என்றான் கிண்டலாய் சித்து.

‘எருமைக….’ என்று முணுமுணுத்தபடி பாஸ்கர் செல்ல, சித்திரைச் செல்வன் அவனின் இடத்திலேயே நின்றுகொண்டான்.

நண்பர்களிடம் மட்டும் தான் இந்த கலகலப்பு எல்லாம். மாணவர்களிடமும் நெருக்கம் தான். ஆனால் மாணவிகளிடம் கண்டிப்பாய் தள்ளியே நிற்பான். பாஸ்கர் அப்படியில்லை அனைவரோடு நட்பு பாராட்டி சட்டென்று ஒட்டிவிடும் ரகம், ஆகவே அனைவர்க்கும் எளிதில் அண்ணாவாகிப் போனான்.

‘அதென்னடா என்னைய மட்டும் பிள்ளைங்க அண்ணான்னு சொல்லுதுங்க… உன்னை சார்ன்னு சொல்லுதுங்க…’ என்று கடுப்படிப்பான்.

‘அதுக்கெல்லாம் ஒரு முக ராசி வேணும்..’ என்று சித்து சொல்ல, இப்போது மானசா, ஷில்பா விசயத்தில் கூட அதுவே தான் நடந்தது. ஆனால் ஷில்பா இருவரையும் ‘சேட்டா…’ என்றிட,

மானசா பாஸ்கரை ‘பாஸ்கி அண்ணா..’ ஆக்கி, சித்துவை ‘எந்தா சாரே…’ என்றாக்கிவிட்டாள்.

ஷில்பாவை கிண்டல் அடிக்கவென்று ஆரம்பித்தது தான் இந்த ‘எந்தா சாரே..’ ஆனால் இறுதியில் அதுவும் அவனை அழைக்கும் விதமே இதுதான் என்றாகிப்போனது இந்த நான்கு நாட்களில்.

ஆம் நான்கே நாட்கள் தான்..

ஆனால் அதுவே இந்த சித்திரைச் செல்வனுக்கு அத்துனை சிரமமாய் இருந்தது. இது அவனின் வேலையும் அல்ல. ஆனால் துறை தலைவர், அதிலும் அவனின் குரு, அவர் சொல்கையில் மறுக்க முடியாது போனது தான் அந்தோ பரிதாபம்.

சித்திரைச் செல்வன்.. இருபத்தியேழு வயதை கடந்தவன். நடுத்தர குடும்பம் தான். ஆனாலும் நிறைவான வாழ்வு. அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா வீட்டரசி. இவனோ ஒரே பிள்ளை.. அப்பாவை பார்த்தே வளர்ந்ததினாளோ என்னவோ அவனுக்கும் வகுப்பெடுக்கும் ஆசை வந்துவிட்டது. முனைவர் பட்டம் என்பது ஒன்றே அவனின் அனைத்தும். விளையாட்டில் நாட்டம் உண்டு.. அதெல்லாம் உடலை நன்முறையில் பேணிக்கொள்ள மட்டுமே..

‘உன் கூட படிச்சவனுக்கு எல்லாம் ஒவ்வொருத்தனுக்கா கல்யாணம் ஆகிட்டு இருக்கு…’ என்று அம்மா மீனா சொல்ல,

‘ம்மா டாக்டரேட் வாங்கின அப்புறம் தான் கல்யாணம் எல்லாம்..’ என்பான் முடிவாய். இதே கதை தான் இந்த ஓராண்டாக. வீட்டிற்கு போனாலே அம்மாவிற்கு இதான் பேச்சு. மீனாவிற்கு தெரிந்தது எல்லாம் வீடு, வீடு சுற்றியிருக்கும் தோட்டம், வெள்ளாமை, மாடு, கன்று பின் மகன் சித்திரைச் செல்வன் மற்றும் அவனின் அப்பா பூபதி அவ்வளவே.

‘அப்பா என்னப்பா…’ என்று அவரின் முகம் பார்த்தாலோ

‘விட்றா… உங்கம்மா பள்ளிக்கூடம் பக்கமே போனது இல்ல.. இதுல இவ்வளோ தெரிஞ்சு வச்சிருக்கிறதே பெருசு…’ என்று மனைவியை கிண்டல் அடித்தே சமாளிப்பார் பூபதி.

“ஆமாமா.. நான் பள்ளிக்கூடமே போனதில்ல.. ஆனா உங்கப்பா பள்ளிக்கூடம் மட்டும் தான் தினம் போயிட்டு வந்தாரு…” என்ற பதில் வரும் மீனாவிடம் இருந்து.

“அதனால தான் ம்மா நான் ப்ரொபசர் ஆகணும்னு சொல்றேன்…” என்று இருந்த இடத்தில் இருந்தே சத்தமாய் குரல் கொடுப்பான் இவனும்.

“நீ என்ன ஆகுவியோ.. அதை இந்த வருசத்துக்குள்ள ஆகிடு.. அடுத்த வருஷம் நான் மாமியாரகனும்.. எனக்கும் ஆசை இருக்கும்ல…” என்று மீனா சொல்கையில், அப்பாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள மட்டும் தான் முடியும்.

எதார்த்தவாதி என்றும் சொல்லிட முடியாது, அதேபோல் மூர்கன் என்றும் சொல்லிட முடியாது. யார் எப்படி அவனிடம் நடக்கிறார்களோ அப்படியே தான் அவனும். ஆனால் வகுப்புகள் எடுக்க ஆரம்பித்து, மாணவர்களுக்கு ஒரு குரு ஸ்தானத்தில் வந்து நிற்கவும், தன்னை தானே நிறைய மாற்றிக்கொண்டான், மெருகேற்றியும் கொண்டான்.

பாஸ்கர் அவனும் இவனைப் போலதான். ஆனால் அவனின் வீட்டில் எல்லாம் எவ்வித நச்சரிப்பும் இல்லை..  ‘இப்போ என்னடா இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம் ஹாயா கூட தீசிஸ் முடிப்போம் டா..’ என்று சுற்றி வருவான்.

“நீ செஞ்சாலும் செய்வடா….” என்று இவனும் சொன்னாலும், இருவருமே காரியத்தில் கெட்டி.

ஆகையாலே என்னவோ, அவர்கள் துறையில் இருவருக்குமே நல்ல பெயருண்டு. அதிலும் துறை தலைவரே இவர்களிடம் “யூஜி கிளாஸ் வீக்லி ட்வைஸ் நீங்க ஹேண்டில் பண்ணுங்க..” என்று பொறுப்பை ஒப்படைக்கையில்

“யேய்… வாவ்…..” என்று குதிக்கத் தான் தோன்றியது.

இது நடப்பில் இருக்கும் ஒன்றுதான். இவர்கள் ஒன்றும் புதியவர்களும் இல்லை.. இளங்கலை முதுகலை எல்லாம் இங்கேதான் முடித்தார்கள் அப்படியிருக்கையில் அங்கே தாவரவியல் துறையில் புல் பூண்டிற்குக் கூட இவர்கள் இருவரையும் தெரியும்.

ஆகையால் தான், எப்போதுமே சர்டிபிகேட் கோர்ஸ் வகுப்புகள் எடுக்கும் ஜார்ஜ், உடல்நிலை சரியில்லாது விடுமுறையில் இருக்க, அந்த பொறுப்பு இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்பட, பாஸ்கர் உடனே சரியென்று விட்டான்.

ஆனால் சித்திரைச் செல்வனோ, துறை தலைவர், திரு. சிவக்குமாரை பார்த்து   “சார்…” என்றான் மறுப்பை சொல்லும் விதமாய்.

சித்திரைச் செல்வனிடம் இக்குணம் எப்போதுமே உண்டு. முடியும் என்றால் முடியும். முடியாது என்றால், மறுப்பினை தயங்காது சொல்லிடுவான். ‘எப்படிச் சொல்வது…’ என்ற தயக்கமே இருக்காது..

இப்போதும் அப்படித்தான், அவனின் மறுப்பை அவனின் அழைப்பே சொல்ல, “என்ன சித்து…” என்றார் மெதுவாய் சிரித்து,

“நார்மல் க்ளாசஸ் ஓகே.. பட்.. இது.. அதுவும் டூ கேர்ள்ஸ் மட்டும்தான்…” என்று இழுக்க,

“சோ வாட்… அவங்க டாப்பிக் உன்னோட தீசிஸ்ல ஒரு சேப்ட்டர் தானே…” என்று அவரும் விடாது கேட்க, “எஸ் சார்..” என்றான் இப்போதும் அதே மறுக்கும் பாவனை காட்டி.

“இப்போ கிளாஸ் ஹேண்டில் பண்ணா, உனக்கு அது ஈசி தானே சித்து. ஒரு சேப்டர் நீ பினிஷ் பண்ணது போல ஆகிடுமே..” என்று சொல்ல,

“இல்ல சார்.. அது.. எனக்கு இது கம்பர்டபிலா தோணலை.. பாஸ்கர் ஓகேனா அவன் ஹேண்டில் பண்ணட்டும்… ” என்று சொல்லி பாஸ்கர் தலையில் இடியை இறக்க,

இருவரையும் பார்த்த சிவக்குமாரோ “ஹ்ம்ம் நான் சொல்லிட்டேன்.. இதுக்கு மேல நீங்க பேசிக்கோங்க…” என்று முடித்துவிட்டார்.

பாஸ்கர் ஒருப்பக்கம் முறைக்க, சித்து அதைவிட அவனை முறைக்க, பின்னே என்ன, இப்படி முறைப்பில் ஆரம்பித்த வகுப்புகள் தான் இது. அதுவும் ஷில்பா கூட அமைதியாய் சொல்வதை கேட்டு நடக்க, மானசாவோ ஒவ்வொன்றிற்கும் பதில் கேள்வி கேட்க,

“டேய் நீ அந்த பொண்ணுக்கு சொல்லி கொடு…” என்றுவிட்டான் தனிமையில் சித்து, பாஸ்கரிடம்.

“ஏன்டா.. இருக்கிறதே ரெண்டு பேரு…”

“ம்ம்ச்.. எரிச்சல் ஆகுது… பத்து ஸ்டூடன்ஸ்னா கூட பரவாயில்லை.. ரெண்டு பேரு அதான் பிரச்னையே. நம்ம யாரை பார்த்து நடத்த முடியும் சொல்லு.. நான் லேப் பார்த்துக்கிறேன்.. நீ தியரி பாரு..” என்று இப்போது இன்னொன்றை சொன்னான்.

நண்பனைப் பற்றி அறியாதவனா பாஸ்கர், இடுப்பில் கை வைத்து சித்திரைச் செல்வனை ஒரு பார்வை பார்க்க, “என்னடா??!” என்றான் இப்போதும் வள்ளென்று..

“அதை நான் கேட்கணும்.. என்னாச்சுடா உனக்கு?? யாரா இருந்தா எனக்கென்னன்னு அசால்ட்டா எடுப்ப.. இப்போ என்ன..” என,

“எனக்கு பிடிக்கலை அவ்வளோ தான்..” என்றான் பிடிவாதமாய்..

என்னவோ அவனுக்குப் பிடிக்கவில்லை.. தன்னை வற்புறுத்தி இதனை செய்ய வைத்தது போலிருந்தது. ஒரு அறையில், இவன், பாஸ்கி, மானசா மற்றும் ஷில்பா.. அதுவும் அவ்வறை, பாஸ்கருக்கும் இவனுக்கும் என்று ஒதுக்கப்பட்டது. இப்போது இவர்களும் வந்திட, எப்போது பார் சலசலக்கும் பேச்சு சத்தமே சித்திரைச் செல்வனை பொறுமை இழக்க வைத்தது.

அதிலும் மானசா.. முதல்நாள் பியூன் கணேஷிடம் எப்படி பேசினாள் என்பது அவன் கண்டது தானே.. என்னவோ அப்போதே ‘இதென்ன இவ்வளோ துடுக்குத் தனம்..’ என்றுதான் பட்டது அவனுக்கு.

ஆகையால் இப்போதும் அது ஒட்டவில்லை. அதிலும் ஷில்பா சொன்னதுபோல அவள் கிண்டலாய் ‘எந்தா சாரே..’ என்று சொல்லிட அப்பட்டமாய் முறைத்தான்.

மானசாவிற்கோ, அன்றைய முதல் நாளே, பியூனை இவன் கண்டித்தது கண்டு அவன் மேல் பெரும் மதிப்பு ஆகிப்போனது. அதிலும் அவனின் பார்வை. முதல் பார்வையே லேசர் பார்வை என்று எண்ண வைத்தது. இப்போதோ லேசரில் நெருப்பு கக்கியது.

“ச்சே.. சரியான சிடுசிடுப்பு…” என்று சிலுப்பிக்கொண்டாள்.

சித்திரைச் செல்வன் சொன்னதுபோல், முதல் நாள் இருந்து பாஸ்கர் இவர்கள் இருவருக்கும் தியரி எடுக்க, அவனோ லேப் என்று சொல்லிவிட்டான். வகுப்பு என்றால் முழு நேர வகுப்பெல்லாம் இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம். அதுவும் பாஸ்கர் அல்லது சித்து எப்போது வர சொல்கிறார்களோ அப்போது தான். அவர்களின் நேரம் ஒதுக்கி, இவர்களுக்கு எடுப்பதால் பெண்களும் ஒன்றும் சொல்லவில்லை.

ஷில்பா இன்று வரும்போதே கேட்டாள் “சித்து சேட்டாக்கு நம்மை பிடிக்கலையோ??” என்று.

மானசாவிற்கும்  மனதில் அப்படித்தான் தோன்றியது.                      அதன் பொருட்டே அவளுக்கும் ஒரு காரணமின்றி கோபமும் மனதில் எழும்பியது. ‘கிளாஸ் எடுக்கிறதுக்கு இவ்வளோ அலம்பலா… ஓவர் சீன் போடுறான்..’ என்று தான் நினைத்தாள்.

 “ஆமா அவன் பெரிய இவன்… ஆளும் மூஞ்சியும்.. என்னவோ கொஞ்சம் ஸ்மார்டா இருக்கான்.. சைட் அடிக்கலாம்.. அவ்வளோதான்.. ஆனாலும்… ஓவர் சீன்…” என்று சொல்லும்போதே, சித்திரைச் செல்வன் வேகமாய் இவர்களை கடந்து சைக்கிளில் செல்ல,

“போறான் பார்…” என்றுதான் பார்த்தாள்.

இவர்களின் வகுப்பின் போது, துறைத்தலைவர் வந்துவிட, அடுத்து நேரம் போனதே தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கடந்திருக்க, “ஓகே கைஸ்…” என்று சிவக்குமார் எழுந்தவர், “எப்படி சித்து எல்லாம் ஓகே வா இப்போ..??” என,

பாஸ்கர் சும்மா இல்லாமல் “சார் நான் தியரி, இவன் லேப் எடுக்கிறான்..” என்றுவிட,

“இஸ் இட்…” என்றவர், “நாளைக்கு இருந்து மாத்திக்கோங்க…” என்றுவிட்டு போய்விட்டார்.

இதைக்கேட்டு தான் பாஸ்கருக்கு அப்படியொரு சிரிப்பு. சரியாய் அதே நேரம் மானசா அழைத்திட “போ..” என்று சித்துவும் விரட்ட, பாஸ்கர் போனாலும் சித்திரைச் செல்வன், அவனின் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

மானசாவோ “நாளைக்கு நீங்க லேப் எடுக்க போறீங்களா??” என, “ஆமா..” என்றான் பாஸ்கியும்.

ஷில்பாவோ ‘இவள் என்னவோ வம்பிழுக்கப் போகிறாள்…’ என்று பயந்தே பார்க்க,

“சரி எனக்கு இந்த செல் ஸ்ட்ரக்சர் கொஞ்சம் சொல்லுங்க பாஸ்கிண்ணா.. டபுட் எல்லாம் இப்போவே கேட்டிடறேன்.. நாளைக்கு இருந்து தியரில வாய் திறக்கக் கூட முடியாது…” என்றாள் கொஞ்சம் சத்தமாகவே.

பார்த்து, விரல் விட்டு எண்ண கூடிய நாட்கள் தான் ஆகியிருக்கிறது, அதற்குள் ஒருவனிடம் இப்படி முகம் காட்டுகிறோமே என்ற நினைப்பெல்லாம் இல்லை அவளுக்கு நீ என்னை தேவையில்லாது முறைத்தால் நானும் அப்படியே. காரணமின்றி நீ வெறுப்பினை உமிழ்ந்தால், நானும் அப்படியே என்றுதான் பார்த்தாள். பேச்சு மட்டும் பாஸ்கரிடம் இருக்க, பார்வை நொடிக்கொரு முறை சித்திரைச் செல்வனைத் தான் தொட்டு வந்தது.

பாஸ்கருக்கு புரிந்துபோனது ‘இந்த பொண்ணு திட்டு வாங்குதோ இல்லையோ, கண்டிப்பா நமக்கு நிறைய வாங்கிக் கொடுத்திட்டு தான் போகும்…’ என்று.

“அண்ணா இன்னொரு விஷயம்…” என்று மானஸா திரும்ப ஆரம்பிக்க, “என்னம்மா??!!!” என்றான் நொந்து போய்.

“இங்க கேம்பஸ் குள்ள எல்லாம் சைக்கில் யூஸ் பண்றாங்க.. எனக்கும் வேணுமே எங்க சொல்லி எடுக்கணும்.. ஆர் நம்ம வாங்கிட்டு வந்துக்கலாமா??” என்றாள் ஓரக்கண்ணில் சித்திரைச் செல்வனைக் கண்டு.

“அதுவா.. உங்க ஹாஸ்டல் இன்சார்ஜ் கிட்ட சொன்னாலே ரெடி பண்ணிடுவாங்க.. மன்த்லி பே மட்டும் பண்ணிடனும்..” என, “அவ்வளோதானா?? ஆமா நீங்க எங்க இருக்கீங்க??” என்றாள் அடுத்து.

“நாங்க இங்க தான் லிவிங்ஸ்டன்… இதே காரிடார்ல லாஸ்ட்ல ஒரு ரூம் இருக்கும் அதான்..”

“ஓ!!! அந்த ரெஸ்ட் ரூம் கிட்ட…” என்று ஷில்பா கேட்க,

பல்லைக் கடித்து “அதுக்கும் அந்த பக்கம்… ஜூவாலஜி டிப்பார்ட்மெண்ட் காரிடர் ஸ்டார்ட் ஆகுற இடத்துல…” என்றான் பாஸ்கி.

“பின்ன நீங்களும் சைக்கிள் யூஸ் பண்றீங்க??”

“ஏன் நாங்க எல்லாம் சைக்கில் யூஸ் பண்ண கூடாதா.. இங்க இருந்து வெளியே என்ட்ரன்ஸ் போகணும்னா தேவைப்படும் அதான்..” என்று இவர்கள் பேசும்போதே,

“பாஸ்கி…” என்று அதே கண்டிப்புக் குரலில் சித்து அழைக்க, ‘அதே பார்வை.. அதே குரல்…’ என்றுதான் பார்த்தாள் மானசா.

“சித்து… லைப்ரரில புக்ஸ் கொடுக்கணும் சொன்னியே…” என்றான் அவனை ‘கிளம்பேன்டா  இங்க உக்காந்து ஏன் உர்ருன்னு பார்த்துட்டு இருக்க…’ என்பதுபோல்.

இது சித்துவிற்கு புரியாது போகுமா என்ன??

‘போறேன் போறேன்…’ என்றவன் ‘வந்து வச்சிக்கிறேன்…’ என்று மானசா மீதும் ஒரு பார்வையை பதித்துவிட்டு செல்ல,  ‘ஹ்ம்ம்..’ என்று வழக்கம் போல சிலுப்பிக்கொண்டாள் மானசா.

“ஏன் மானசா இப்படி??” என்று பாஸ்கர் உடனே கேட்க,  “அதானே…” என்று ஷில்பாவும் சொல்ல,

“இதை உங்க சித்துக்கிட்டயே கேட்க வேண்டியது தானே பாஸ்கிண்ணா…” என்றாள் வெடுக்கென்று..

நியாயம் தான்.. இவள் எதுவுமே ஆரம்பிக்கவில்லை.. ஆரம்பத்தில் அவன்தான் முகத்தை சிடுசிடுத்தான். அதையே மானசாவும் பிடித்துக்கொள்ள, இப்போது அந்த ஏசி அறையே அனலாய் தான் இருந்தது.

“ஹ்ம்ம் கோர்ஸ் டைம் த்ரீ மன்த்ஸ். அதுலயும் ஒரு நாளைக்கு நம்ம பாக்குறதே ஜஸ்ட் டூ ஹவர்ஸ் தான்.. இதுல என்ன சண்டை வேண்டி கிடக்கு…”

“இதை உங்க சித்துக்கிட்டயே சொல்ல வேண்டியது தானே பாஸ்கி அண்ணா…” என்றாள் முன்னப் போலவே,

பாஸ்கரோ இப்போது ‘உன்கிட்ட சொன்னேன் பாரு…’ என்று பார்த்துவிட்டு, அவள் கேட்டதை விளக்க, அப்படியே மேலும் ஒரு அரை மணி நேரம் போனதும் மீண்டும் வந்தான் சித்திரைச் செல்வன்..

“டேய் பாஸ்கி.. பிரெஷர்ஸ் பார்ட்டி டேட் நோடீஸ் போர்ட்ல போட்டாங்க…” என்று சொல்லிக்கொண்டு.

அங்கே, அந்த பல்கலைகழகத்தில், எந்தத் துறையாய் இருந்தாலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா என்பது ஒரு நாள் முழுவதும் நடைபெறும். காலையில் இருந்து மதியம் வரை விளையாட்டு போட்டிகள் செல்ல, மாலை நேரத்தில் கலை நிகழ்சிகள் வைத்து கலை கட்டும். ஆகமொத்தம் அன்றைய தினத்தில் மகிழ்ச்சிக்கும் கொண்டாத்திற்கும் பஞ்சமேயில்லை. இதனை வந்த இத்தனை நாட்களில் மானசாவும், ஷில்பாவும் தெரிந்தும் வைத்திருக்க,

சித்து வந்து இப்படி சொல்லவும் “ஐ ஜோலி..” என்று ஷில்பா சொல்லும்போதே,   

“நீங்களும் பெர்பார்ம் பண்ணனும்.. இல்லன்ன சீனியர் பசங்க விடமாட்டாங்க.. ஆன் தி ஸ்பாட் ரகளை தான்..” என்றான் சித்திரைச் செல்வன்.

மானசாவின் பார்வையில் இவன் சொல்வதை நம்பும் எண்ணம் வரவில்லை.. ‘என்ன பூச்சாண்டி காட்டுறியா???’ என்றுதான் பார்த்தாள்.

சித்துவோ ‘சொல்லு டா…’ என்று பாஸ்கர் பின்னே கட்டியிருந்த கையை ஒரு முறுக்கு முறுக்க “அ.. ஆமா…” என்றான் வலி தாங்காது..

“நிஜமா சேட்டா?!” என்று ஷில்பா இப்போதும் நம்ப முடியாது கேட்க,

“அப்படி யாரும் சொல்லலையே.. பங்க்சன் நடக்கும்.. நீங்களும் வரலாம்னு தானே சொன்னாங்க…” என்று மானசா சொல்ல,

“சொல்றதை சொல்லிட்டேன்.. எனக்கென்ன.. உங்க இஷ்டம்..” என்று தோளை குலுக்கியவன் அத்தோடு விட “ஓகே நீங்க கிளம்புங்க…” என்று பாஸ்கரும் சொல்லிவிட்டான்.

இதற்குமேல் இருந்தால், கண்டிப்பாய் ஒரு சண்டை வரும் என்று. அவனுக்குப் புரியவில்லை சித்திரைச் செல்வன் ஏன் இப்படி சொன்னான் என்று? எதிலும் விளையாடும் சிறுவன் அல்ல. அதிலும் புதிதாய் வந்திருக்கும் பெண்களிடம் இல்லாத ஒன்றை சொல்லி. நண்பனை வித்தியாசமாய் பார்த்து வைத்தான்.

“என்னடா?!”

“நீயேன்டா இப்படி ஆகிட்ட..”

“ம்ம்ச்.. சும்மா ஜாலிக்கு.. விடு…” என்றவன்,  

“என்னவோ அவளைப் பார்த்தாலே எரிச்சல் ஆகுதுடா.. வாய் ஓயாம பேசிக்கிட்டே.. இவல்லாம் படிக்க வரலைன்னு யார் கேட்டா…” எனும்போதே,

“எக்ஸ்கியூஸ் மீ…” என்ற மானசாவின் குரல் இருவரையுமே கொஞ்சம் திடுக்கிட தான் வைத்தது.     

Advertisement