Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 15

“என்ன மனு இது..?” என்று சித்திரைச் செல்வன் கேட்கும் போதே, அவன் குரல் நடுங்கியது தெள்ளத் தெளிவாகவே இருந்தது..

மூன்று மணி நேரம் முன்னம் வரைக்கும் தன்னோடு வாயாடி நடந்து வந்தவள், இப்போது கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, வாடிப்போய் இருக்க, அவனால் அதனை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர உதவிக்கென்று அங்கே ஒரு ‘ஹெல்த் செண்டர்..’ உண்டு. ஒருநாள் விட்டு ஒருநாள் மருத்துவர் வருவார். மற்றைய நேரம் எல்லாம், இரண்டு செவிலியர்கள் எப்போதுமே இருப்பர்.. அவசரத் தேவை, முதலுதவிக்கு என்று அங்கேதான் முதலில் செல்வது வழக்கம்.

மானசாவிற்கு வாந்தி அடிக்கடி வர, சிறிது நேரத்திலேயே மிகவும் சோர்ந்து போய்விட்டாள். ஷில்பா பயந்தே போய்விட்டாள்.விடுதி பொறுப்பாளரிடம் சென்று கூற, அவர் உடனே இங்கழைத்து வந்துவிட்டார்.

நல்லவேளை அன்றென பார்த்து மருத்துவர் அங்கிருக்க உடனடியாக வைத்தியம் தொடங்கியது.

“அவங்க சாப்பிட்டது எதுவோ சேரல..” என்று டாக்டர் வந்து விடுதி பொறுப்பாளரிடம் சொல்ல,

“கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஊர்ல இருந்து வந்தாங்க.. ஹாஸ்டல்ல கூட எதுவும் சாப்பிடலையே..” என்று வேகமாய் பொறுப்பாளர் சொல்ல, அவரின் கவலை அவருக்கு என்று நன்கு புரிந்தது.

அந்த நேரத்தில் தான் ஷில்பா சித்துவின் அலைபேசிக்கு அழைத்து விஷயம் சொல்ல, சித்துவும் பாஸ்கியும் சிறிது நேரத்தில் வந்துவிட்டனர்.

“எங்களோட டியூடர்ஸ்…” என்று ஷில்பா சொல்ல, முறையாய் பாஸ்கரும், சித்திரைச் செல்வனும் தங்களை அறிமுகம் செய்துகொள்ள,

“என்னாச்சுன்னு தெரியலையே..” என்றார் பொறுப்பாளர்.

“நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க மேம்.. நாங்க பார்த்துக்கிறோம்..” என்று பாஸ்கர் சொல்ல,

“இல்லப்பா அவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிடமும்.. ஷீ நீட் எ ரெஸ்ட்.. அண்ட் சாப்பாடு எல்லாம் இப்போ மைல்டா தான் எடுக்கணும்..” என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,

“நான் போய் பார்க்கலாமா??” என்றான் சித்திரைச் செல்வன்.

அவனுக்கு அங்கே நின்று இவர்களோடு பேசிட எல்லாம் பொறுமையே இல்லை. அவனின் பதற்றம் கண்டு பொறுப்பாளர் கூட ஒருவித திகைப்புடன் பார்த்தவர் “அ.. போ.. போங்க.. போய் பாருங்க..” என,

பாஸ்கர் “மானசாக்கு பேமிலி பிரண்ட் இவங்க..” என்று அந்த நேரத்து சமாளிப்பாய் ஒரு பொய் சொல்வது சித்திரைச் செல்வனுக்கு மிக நன்றாக காதினில் விழுந்தது.  

மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு, வைத்தியமும் பார்த்துவிட்டு, மருந்துக்கள் எல்லாம் எழுதி கொடுத்துவிட, கையில் ட்ரிப்ஸ் போட்டு அங்கே இருக்கும் ஒரு அறையில் மானசா படுக்க வைக்கப் பட்டிருந்தாள்.

கண்கள் மூடியிருந்தாலும், அவள் விழித்துத் தான் இருக்கிறாள் என்பது நன்றாகவே விளங்கியது.

ஷில்பா, மானசாவின் அருகினில் அமர்ந்திருக்க, இவனைப் பார்த்தவள் “சித்து சேட்டா..” என,

“உக்கார்..” என்பது போல் சைகை செய்தவன், மானசாவை தான் விழிகளால் ஆராய்ந்தான்.

அவளின் முகத்தினில் அப்படியொரு அயர்ச்சி.. எத்தனை தெளிவோடு பதிலுக்கு பதில் பேசிக்கொண்டு வந்தாள், அப்படி வந்தவளுக்கு திடீரென்று இப்படி ஆகிப்போனது. ஒன்றும் விளங்கவில்லை அவனுக்கு.

“எப்படியாச்சு ஷில்பா..??” என, அவனின் குரலில் பட்டென்று விழிகள் திறந்தவள், அவனை மட்டுமே பார்த்து படுத்திருக்க,

“தெரியல்லே சித்து சேட்டா.. ரூம் வந்ததுல இருந்து ஒரே வாமிட்டிங்..” என,

“வந்ததுல இருந்தா??!!” என்றான் நெற்றியை சுருக்கி.

“ம்ம்.. உள்ள வந்ததுமே வேகமா வாமிட் பண்ணத்தான் போனா..” என,  மானசா அத்தனை வேகமாய் சென்றது எதற்கு என்று இப்போதுதான் விளங்கியது அவனுக்கு.

ஷில்பா பேசிக்கொண்டு இருக்கும்போதே  பொறுப்பாளர் “ஷில்பா..” என்று அழைக்க, அவள் வெளியேறவும், அங்கே மானசாவின் அருகே சென்று அமர்ந்தவன் தான் “என்ன மனு இது..?” என்று விசாரித்தான்.

பதில் சொல்லாமல், அப்போதும் மானசா ஒரு சிறு புன்னகை பூக்க, அதுவே அவனை பெரிம்சை செய்தது.

“சொல்லு மனு.. என்னாச்சு?!! நல்லாதானே வந்த நீ..” என,

“ம்ம்..” என்றாள்.

“நேத்து பார்ட்டில எதுவும் சாப்பிட்டது சேரலையா??” என,

“ம்ம்ஹும்..” என்றாள் மறுப்பாய்.

“பின்ன??!!” என்றவனுக்கு அப்போதும் மனது ஆறவில்லை.

மானசா எதுவோ பதில் சொல்லவர “அவளுக்கு சுக்கு மல்லி காப்பி சேராதாம் சித்து சேட்டா..” என்றபடி ஷில்பா திரும்ப வர, அவளோடு பாஸ்கரும் வர, திகைப்பாய் பார்த்தான் சித்திரைச் செல்வன் மானசாவை.

‘சொல்லிருக்கலாமே..’ என்று அவன் கண்கள் சொல்லாமல் சொல்ல, அப்போதும் கூட சோபையாய் ஒரு முறுவல் மட்டுமே அவள் முகத்தில்.

“சித்து.. வார்டன், மானசாவ அவங்க வீட்டுக்கு அனுப்பனும் சொல்றாங்கடா.. ஹெல்த் சரியான பிறகு வரட்டும்னு.. ஹாஸ்டல் வச்சு கேர் பண்ண முடியாது..” என,

சித்து “அவங்கப்பாக்கிட்ட பேசுறேன்…” என்று அவனின் அலைபேசி எடுக்க,

“அப்பா அக்கா எல்லாம் இந்நேரம் டெல்லி பிளைட் ஏறி இருப்பாங்க..” என்றாள் மானசா மெல்லிய குரலில்.

‘என்னது??’ என்று இப்போது மூவருமே அதிர்ந்து பார்க்க,

“ம்ம்.. யாருமில்ல வீட்ல..” என்று மானசா சொல்ல, “இப்போ என்ன பண்றது??” என்றான் பாஸ்கி.

சித்திரைச் செல்வனோ நொடியும் யோசிக்கவில்லை “நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்..” என்றிட, இது மற்றதெல்லாம் விட பெரிய அதிர்ச்சி அனைவர்க்கும்.

அதிலும் மானசாவிற்கு பேரதிர்ச்சி…!!

“எஸ்… நான் பேசுறேன் வார்டன் கிட்ட.. டிபார்ட்மென்ட்ல லீவ் சொல்லிக்கலாம்..” என்றவன், கிளம்ப,

“வேண்டாம் சாரே.. ஐ வில் மேனேஜ்…” என்று மானசா சொல்ல, “வாய மூடிட்டு படு..” என்றான் விரல் நீட்டி.

உள்ளுக்குள்ளே அப்படியொரு கோபம்.. ஒருவார்த்தை சொல்லியிருந்தால் என்ன??!! நான் என்ன சொல்லியிருக்கப் போகிறேன். அப்படியா இவளை புரிந்துகொள்ளாது ஏதேனும் சொல்லிவிட போகிறேன் என்று அவனின் மனது காந்தியது என்றுதான் சொல்லிடவேண்டும்.

இத்தனை நாள் கோபத்தில் திட்டியிருக்கிறான் தான். ஆனால் இப்போது அவன் முகம் காட்டிய ரௌத்திரம் போல் இதுவரை அவள் கண்டதில்லை.

அவனின் திரண்ட விழிகள் கண்டு, மானசாவிற்கு உள்ளே ஒரு நடுக்கம் ஏற்பட்டாலும், அவன் தன்னிடம் காட்டும் உரிமையும் கோபமும் ஏனோ அந்நேரத்தில் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

உடல் நோவையும் தாண்டி, இது ஒரு சுகம் தர, மௌனமாய் அவன் முகம் பார்க்க,   “உன் டாடிக்கிட்ட எப்போ பேச முடியும்??” என்றான்.

“ஆப்ட்நூன் மேல..”

“ம்ம்…” என்றவன், “ஷில்பா பேக் ஹெர் திங்க்ஸ்..” என்று சொல்ல, ஷில்பாவோ தயக்கமாய் மானசாவின் முகம் பார்த்தாள்.

பாஸ்கியோ “சித்து.. யோசிக்கலாம் டா.. நீயா எதுவும் டிசைட் பண்ணாத..” என,

“என்னடா.. அப்போ இவள அப்படியே திரும்ப ஹாஸ்டல் அனுப்ப சொல்றியா?? அவங்க அப்பா இருந்தாலும் பரவாயில்லை. அப்படி இல்லைங்கறப்போ நான்…” என்று சொல்ல வந்தவன், வேகமாய் வார்தைகளை விழுங்கி

“நம்மதான் பார்த்துக்கணும்..” என, அவனின் அந்த க்ஷண நேர தடுமாற்றம் மானசாவிற்கு வோறொரு ஆர்வம் கொடுத்துவிட்டது.

‘என்ன சொல்ல வந்தான்..??!!’ என்ற ஆவல்..

அது அவளின் முகத்தினிலும் தெரிய, அதனைக் கவனித்தவன் “பாஸ்கி என்னோட வா..” என்று கிளம்பிப் போகப் பார்க்க,

“உங்க வீட்டுக்கு வர்றதுக்கு நான் சரின்னு சொல்லவே இல்லை..” என்றாள் மானசா அந்த நிலையிலும் பிடிவாதமாய்.

வேண்டுமென்றே ஓர் பிடிவாதம் தோன்றியது அவளுக்கு அந்த பொழுது. தான் மறுத்தால் இவன் என்ன செய்வான் என்று பார்க்கும் பிடிவாதம்.

உடல் சரியில்லை என்றாலும், அவளோடு இருக்கும் அந்த துடுக்கு போவதாய் இல்லை. அதிலும் எதிரே இருப்பவன் சித்திரைச் செல்வன் என்கையில் இன்னுமே கூட ஒரு துள்ளல் வரத்தான் செய்தது.

கிளம்பியவன், மானசாவின் வார்த்தைகளைக் கேட்டு “உன்னை எங்க வீட்டுக்கு வர்றியான்னு கேட்கலை.. வான்னும் கூப்பிடலை.. நான் உன்னை அங்க கூட்டிட்டு போறது உறுதி.. உன் அப்பாவும் அக்காவும் வந்ததுக்கு அப்புறம் நீ என்னவோ பண்ணு.. பட் அதுவரைக்கும் நான் சொல்றது தான்..” என்று அழுத்தம் திருத்தமாய் மொழிந்தவன்,

“வா டா..” என்று அவனையும் ஒரு அதட்டல் போட்டே அழைத்துக்கொண்டே சென்றான்.

‘என்ன செய்யப் போகிறான்..’ என்றுதான் பார்த்தாள் மானசா.

அவளுக்குச் சுக்குமல்லி காப்பி சிறு வயதில் இருந்தே சேராது தான். சித்து அந்நேரம் அதனைத் தான் வாங்கிக்கொடுப்பான் என்றும் அவளுக்குத் தெரியாது. தான் பசி என்று சொல்லும் முன்னமே அவன் வழக்கமாய் வரும் பாதை வராது வேறு பாதையில் அழைத்து வந்தது முன்னமே அவளுக்கு ஏதேனும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தானே.

அதுவே கூட மானசாவிற்கு அப்போது சிறிது நேரம் கழித்துத் தான் புரிந்தது. அதிலும் இங்கே அது நன்றாக இருக்கும் என்று சொல்லி சித்து வாங்கிக் கொடுக்கையில், அதுவும் அவளுக்காக என்று முதன் முதலில் ஒரு விசயம் அவன் செய்கையில், அவள் எப்படி அதனை மறுப்பாள்.

தனக்கு சேராது என்று தெரிந்தே தான் மானசா சுக்கு மல்லி காப்பி குடித்தாள்.

நடந்து வருகையிலேயே வயிற்றில் என்னவோ ஓர் உணர்வு.. அவளுக்குத் தெரியும் இன்னும் சிறிது நேரத்தில் வாந்தி வரும் என்று. ஷில்பாவிடம் சொல்லவும் செய்தால் பாஸ்கருக்கோ, சித்திரைச் செல்வனுக்கோ அழைத்துச் சொல்லாதே என்று.

ஆனால் அவள் அஞ்சிப்போய் சொல்லிட, இதோ இப்போது இவன் இத்தனை தூரம் செய்வான் என்று யாருமே நினைக்கவில்லை.

ஹெல்த் சென்டர் விட்டு வெளியே வந்த பாஸ்கரும் கூட “சித்து என்னடா இது..” என,

“நான்தான் டா வாங்கிக் கொடுத்தேன்.. ஒருவார்த்தை என்கிட்டே சொல்லிருந்தா என்னவாம் டா.. இப்போ பாரு எப்படி படுத்து இருக்கான்னு..” என்று அவனும் சொல்ல,

“ம்ம்ச் நான் அதை சொல்லல..” என்றான் பாஸ்கர்.

“நீ எதுவும் சொல்லாத.. இப்போதைக்கு நான் வேற எதுவும் திங் பண்ணல.. அவ நார்மல் ஆகி வந்தா போதும்…” என்று முடித்துவிட்டான்.

இதற்குமேல் பாஸ்கரால் என்ன சொல்லிட முடியும்??!!

சித்திரைச் செல்வன் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் செல்லத்தான் முடிந்தது..!!

மானசாவின் அப்பாவினோடு பேசுவதற்கு முன்னமே அவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டான். நடந்தவைகளையும், நீங்கள் வரும்வரைக்கும் மானசாவை எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்பதனையும். அவரிடமும் அவன் கேட்டிடவில்லை அழைத்துச் செல்லட்டுமா என்று??!!

அழைத்துச் செல்கிறேன் என்ற தகவல் தான் அவரிடமும்.

பின் விடுதி பொறுப்பாளரை சந்தித்து பேச, அவரோ “தப்பா எடுத்துக்காதீங்க.. நீங்க பேமிலி பிரண்டாவே இருந்தாலும், மானசாவோட அப்பா பெர்மிசன் இல்லாம என்னால அனுப்ப முடியாது..” என,

“அவங்க டாடிக்கு இன்பார்ம் பண்ணியாச்சு மேம்.. வெய்டிங் பார் ஹிஸ் ரிப்ளை.. தே ஆர் இன் ட்ராவல்..” என்றான் சித்து.

“ஓகே.. அவர் பதில் சொல்லட்டும்.. நான் பேசுறேன்.. தென் நீங்க கூட்டிட்டு போறதுல எந்த பிரச்சனையும் இல்லை..” என்றிட, அடுத்து அவர்களின் துறைக்கு வந்து மானசாவிற்கு விடுமுறை எதற்கு என்று காரணம் சொல்லி, அனைத்தும் ஏற்பாடுகள் செய்துவிட்டான்.

அதற்குள்ளே மானசாவிற்கு இரண்டு பாட்டில் ட்ரிப்ஸ் ஏற்றிவிட, “சாப்பாடு மட்டும் கொஞ்சம் பார்த்து எடுத்துக்கோங்க.. மைல்டா.. மத்தபடி ஒன்னும் பிரச்சனை இல்லை..” என்றுவிட்டார் மருத்துவர்.

அவளுக்கே சித்திரைச் செல்வன் செய்வது எல்லாம் சற்று அதிகப் படி என்று தோன்றியதோ என்னவோ??!!

அதை அவனிடமும் சொல்லியும் விட்டாள், “ஏன் இவ்வளோ ரியாக்ட் பண்றீங்க.. புட் மட்டும் தான் பார்த்து எடுத்துக்கணும் சொன்னாங்க.. மத்தபடி ஐம் ஆல்ரைட்..” என,

“ஓ.. அப்போ உனக்கு ஹாஸ்டல்ல கஞ்சி வச்சு கொடுப்பாங்களா??” என்று அவனும் கேட்க,

“ம்ம்ச் ரூம்லேயே பண்ணிப்பேன்..” என்றாள்.

“கிழிச்ச…” என்று அவன் பதிலுக்கு எகிற,

“எந்தா சாரே இது…” என்று அவள் தான் இறங்கி வரவேண்டிய நிலை.

சித்திரைச் செல்வனுக்கு இங்கே வைத்து எதுவும் பேசும் எண்ணமில்லை. ஆக “பரவாயில்ல நீ என்னோட வர..” என்றவன்,

“இன்னும் டூ டேஸ்ல டிபார்ட்மெண்ட் கேம்ப் ஆரம்பிக்குது.. இப்போதான் நோட்டீஸ் பார்த்தேன். ஒன் வீக் கேம்ப்.. சோ எல்லாருக்கும் லீவ் தான்.. உன் டாடி வந்ததுக்கு அப்புறம் நீ ஊருக்கு போகணும்னா அப்போ போயிக்கலாம்..” என்று பேச,

மானசா பதில் ஏதும் சொல்லாது ஷில்பாவை பார் என்று பார்வையை மட்டும் காட்டினாள்.

அப்போது தான் அவனுக்கு அங்கே ஷில்பா என்ற ஒருத்தி இருக்கிறாள், இவள் பாட்டில் கிளம்பி வந்து தங்கள் வீட்டில் இருந்துகொண்டால், அவள் என்ன செய்வாள் என்ற யோசனையே வந்தது.

‘ஷ்..!!’ என்று தலையைக் கோதிக் கொண்டவன் “ஷில்பா…” என,

“ம்ம் சேட்டா…” என்றாள் அவளும்.

“சர்டிபிகேட் ஸ்டூடன்ஸ் யாரும் நார்மலா கேம்ப் வர மாட்டாங்க.. சோ நீயும் மனுவோட எங்க வீட்டுக்கு வா..” என,

“இல்ல சேட்டா…” என்று தயங்கினாள்.

“சாரி ஷில்பா.. நான் ஒரு டென்சன்ல..” என்று சித்து மன்னிப்பு வேண்ட, “அய்யே.. அது இல்லா ப்ராப்ளம்..” என்றவள் “ஒன் வீக் லீவ்.. சோ நான் ஊருக்கு பூவாம்..” என,

“ஓ..!!” என்றான் சித்திரைச் செல்வன்.

இதனை எல்லாம் மௌனமாய் கண்ணூரும் பார்வையாளன் மட்டுமே பாஸ்கர். அவனுக்கு சித்திரைச் செல்வனின் உணர்வுகள் நன்கு புரிய, இனி எதுவும் சொல்வதாய் இல்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டான்.

மானசாவும் எதுவும் சொல்லாது இருக்க “என்ன மனு.. நான் வீட்டுக்கு பூவாம்..” என்று ஷில்பா சொல்ல,

“ம்ம் உன்னோட விருப்பம் சிப்ஸ்..” என்றாள் அவளும்.

இப்படியே நேரம் செல்ல, மானசா சொன்னதுபோல, செந்தமிழ் மதியம் மேலே சித்திரைச் செல்வனுக்குத் தான் அழைத்தார். அவரின் குரலிலேயே பதற்றம் தெரிய, அவன்தான் பேசி சமாதானம் செய்ய, அதன் பின்னர் தான் மகளிடம் பேசினார்.

“என்ன மனும்மா..” என்று அவர் கேட்கும்போதே அப்படியொரு வருத்தம்.

“டாடி.. ப்ளீஸ்.. இவங்க சொல்றது போல எல்லாம் இல்லை..” என்றாள் வேகமாய்.

சித்து எதிர் நின்று முறைக்க, ‘ப்ளீஸ்…’ என்று உதடு அசைத்தவள் “ஜஸ்ட் டூ டேஸ் சாப்பாடு மட்டும் பார்த்து எடுத்துக்கிட்டா ஐ வில் பி நார்மல் ப்பா..” என,

“மிஸ்டர். சித்திரைச் செல்வன் அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் சொல்றார்..” என்றார் செந்தமிழ்.

“ம்ம்.. எஸ் ப்பா..” என்றவள் “போக வாப்பா..” என,

“உனக்கு அங்க கம்பர்டபில்னா போ.. இல்லன்னா சொல்லு நான் ஸ்டெல்லா ஆன்ட்டியை அனுப்புறேன்..” என,

“அய்யோ.. நோ நோ.. இதுக்கு எங்க சாரே பரவாயில்ல..” என்றுவிட்டாள் பட்டென்று.

இதனைக் கேட்டு செந்தமிழ் நகைத்துவிட, சித்துவோ ‘அடிப்பாவி…’ என்று பார்த்தான்.

Advertisement