Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 14

அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வழக்கத்தை விட சிறப்பாகவே நடந்து முடிய, மனசாவிற்கும் சரி, தனுஜாவிற்கும் சரி, நிறைய நிறைய வேலைகள் இன்னும் மிச்சம் இருந்தது.

என்னதான் அனைத்தையும் செய்ய ஆட்கள் இருந்தாலும், வீட்டுப் பெண்களாய் நின்று கவனிக்க வேண்டியது இவர்களின் பொறுப்பில் இருக்க, அந்த பொறுப்பை நன்கு உணர்ந்தே இருந்தனர் இருவரும்.

செந்தமிழுக்கு எப்போதுமே தன் பெண்களை எண்ணிப் பெருமையே…

அதே பெருமை இன்றும் இருக்க, “போதும்டா.. ரெண்டு பெரும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.. எல்லாம் மார்னிங் பண்ணிக்கலாம்..” என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

“டாடி..!!! நைட் பஸ் எனக்கு.. கிளம்புறதுக்குள்ள இதெல்லாம் முடிச்சிட்டா பெட்டர்…” என்று மானசா சொல்ல,

“நீ போய் ரெடியாகு..” என்று தனுஜா விரட்ட,

“நல்லா விரட்டு.. நீ மட்டும் அப்பாவோட டெல்லி போறல்ல..” என்று கொனட்டியபடி நகர்ந்தாள் மானசா.

“உன்னை யார் அவ்வளோ டிஸ்டன்ஸ்ல போய் சர்டிபிகேட் கோர்ஸ் படிக்கச் சொன்னா..” என்று தனுஜாவும் கேட்க,

“அவளைப் பத்தித்தான் தெரியுமே… விடு தனும்மா..” என்று செந்தமிழ் சொல்ல, இப்படி அப்படியென்று இதோ மானசா திரும்ப கல்லூரி கிளம்பிவிட்டாள்.

எப்படியும் இப்போது கிளம்பினால், சரியாய் கல்லூரி முன்பு போய் இறங்க, அதிகாலை நான்கு மணி ஆகிவிடும்.

‘ஹ்ம்ம் அந்த நேரத்துல ஆட்டோ கூட இருக்காது… நடந்து தான் போகணும்…’ என்று அவள் நினைத்தாலும், அந்த நேரத்தில் தனியே நடந்து செல்வது எண்ணி கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது.

செக்கியூரிட்டிகள் ஆங்காங்கே இருந்தாலும், விளக்கு வெளிச்சங்கள் இருந்தாலும் ஒருவித பயம் அவளினுள் எழத்தான் செய்தது.

‘பாஸ்கி அண்ணாட்ட கூட சொல்லிருக்கலாமோ…’ என்றுதான் பேருந்தில் வரும்போதெல்லாம் எண்ணிக்கொண்டு வந்தாள்.

ஆனால் சொல்லிடவில்லை. ஏனோ அதற்கு மனதும் வரவில்லை. ஷில்பா அவளால் தனியே வந்து எப்படி அழைத்துச் செல்ல முடியும்??!! எஞ்சி இருப்பது சித்திரைச் செல்வன் மட்டுமே..

அன்றைக்கு பேசியபிறகு அவனோடு பேசிடவில்லை. அவனும் எதுவும் அடுத்து கேட்டிடவில்லை. அத்தனை ஏன் பாஸ்கியும் ஷில்பாவும் சொன்னதுபோல ‘அப்பாவிற்கு வாழ்த்துக்களை சொல்லிவிடு..’ என்றுகூட அவன் சொல்லிடவில்லை.

இருந்தும் அவனைத் தான் மனம் தேடுகிறது.

இதோ இன்னும் சிறிது நேரத்தில் இறங்கவேண்டியது தான். ‘யுனிவெர்சிட்டி ஸ்டாப் வரப்போகுது..’ என்று கண்டக்டர் சொல்ல, சற்றே ஆயத்தமாகி நிமிர்ந்து அமர்ந்தாள் மானசா.

இங்கே வேராரும் இறங்குகிறார்களா என்று அவளின் பார்வை சுற்றி முற்றி பார்க்க, யாரும் அசைவதாய் கூட காணோம்.

‘காட்.. நான் மட்டும்தானா??!!’ என்று முகத்தை சுளித்தவள், பேருந்து நிற்கவும், தன் பையைத் தூக்கிக்கொண்டு இறங்க, அந்த சாலை முழுவதும் அப்படியோர் நிசப்தம். நான்கு வழிச் சாலையின் ஒருபுறம் இவள் இருக்க, நடுவே சாலையை கடந்து தான் பல்கலைகழகத்தின் நுழைவு வாயிலை எட்ட முடியும்.

ஜில்லென்று குளிர் காற்று வீசிட, மானசா இருபுறமும் சாலையை ஒருமுறை பார்த்து கடந்து, நுழைவு வாயில் அருகே வர, எப்போதும் அங்கிருக்கும் டீ கடை கூட இன்னும் திறந்தபாடில்லை.

‘நான் நேரங்கெட்ட நேரத்துல வந்தா.. டீ ஷாப் கூடவா ஒப்பன்ல இருக்கும்..’ என்று முணுமுணுத்தபடி மானசா எட்டு வைக்க, எதிரே யாரோ சைக்கிளில் வருவது தெரிந்தது.

‘இந்த நேரத்துல எவன்…’ என்று கண்களை கூர்மையாக்கிப் பார்க்க, நிஜமாய் வந்தவனைக் கண்டு அவளால் நம்பிட முடியவில்லை.

பின்னே வந்தது அவளின் ‘எந்தா சாரே..’ அல்லவா..

நிஜமாகவே அவன்தானா?? இல்லை தன் மனது கற்பனையா??!!  என்று அவள் ஒரு முடிவிற்கு வரும் முன்னம்

“அறிவிருக்கா உனக்கு..??” என்றபடி தான் அவள் முன்னே சைக்கிளை நிறுத்தினான்.

‘திட்றதுக்குன்னே வருவான் போல…’ என்று கழுத்தை நொடித்தவள், அமைதியாகவே நிற்க,

“உன்னைத்தான் மனு..” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

“ம்ம்ச் இப்போ எதுக்கு வந்தீங்க நீங்க??” என்று அவள் குரல் உயர்த்தும் போதே, உள்ளே ‘அப்பாடி வந்துட்டான்.. நிம்மதியா போகலாம்..’ என்ற ஆசுவாசமும் எழுந்தது நிஜம்.

‘திட்டினா திட்டிக்கட்டும்..’ என்றுதான் அவளும் ஒரு சண்டைக்கு தயாராக,

“எப்பவுமே நீ இப்படித்தானா.. அன்னிக்கு என்னன்னா சைக்கிள்ள தனியா வந்துட்டு இருக்க.. இப்போ இந்த டைம்ல தனியா வர.. கொஞ்சமாவது சென்ஸ் வேண்டாம்.. அன்னிக்கே சொன்னேன்தானே.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடனும்னு..” என்று சித்திரைச் செல்வன் பேசிக்கொண்டே போக,

நின்று நிதானமாய் அவன் முகம் பார்த்தவள், அதில் கோபம் குறையாது இருப்பது கண்டு,

“சரி நீங்க திட்டிட்டே பின்னாடி வாங்க.. நான் மெதுவா முன்னாடி நடந்து போறேன்..” என்று நடக்கத் தொடங்க,

“ஏய் நில்லு டி..” என்றான் அதட்டலாய்.

‘என்னது டி யா…!!!!!’ என்று மானசா அதிர்ந்து திரும்பிப் பார்க்க, அதற்குள் சித்திரைச் செல்வனும் சுதாரித்து “போறதுன்னா போ.. எனக்கு என்ன.. நான் இதோ சைக்கிள்ள சர்ருன்னு போயிடுவேன்..” என,

“என்ன சொன்னீங்க.. டி யா.. டி ன்னு சொன்னீங்களா??” என்று மானசா கேள்வி கேட்கவும்,

“வாட்??!! என்ன உளறல் இது..” என்றான் ஒன்றும் புரியாதவன் போல.

“இப்போ நீங்கதானே சொன்னீங்க..??”

“நான் என்ன சொன்னேன்…??” என்றவன் சைக்கிளை உருட்டத் தொடங்க, பேச்சு வாக்கில் அவளின் நடையும் அவனின் உருட்டலோடு சேர்ந்து வரத் தொடங்கியது.

“நீங்க என்னை டின்னு சொன்னீங்க.. எவ்வளோ தைரியம் உங்களுக்கு..” என்று அவள் தலையை சிலுப்ப,

“நான் அப்படி சொல்லவே இல்லையே…” என்று சாதித்தான்.

“சொல்லவே இல்லையா??!!” வியப்பாய் அவளின் விழிகள் பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க,

“எஸ்..” என்று அவனின் முகம் பாவனையோடு சொல்ல, அப்போதுதான் அவனை நன்றாய்ப் பார்த்தாள், அன்றைய தினம் போல இன்றும் ஷார்ட்ஸ் அண்ட் டி ஷர்டில் வந்திருந்தான்.

என்னவோ திடீரென்று ஒரு இதம் வந்தமர்ந்தது போலிருக்க, “நிஜமா சொல்லலையா ??” என்றாள் இறங்கிய குரலில்.

“ம்ம்ஹும்..” என்று தலையை ஆட்டியவன் பார்வை நேராகவே இருக்க,

“ம்ம்…” என்று இழுத்தவள் “ஆமா இந்த நேரத்துல என்ன சைக்கிளிங்??” என்றாள் யோசனையோடு.

“வேறென்ன வேண்டுதல்..” என்றவனின் குரலில் நக்கல் இருந்ததுவோ என்னவோ, ஆனால் பார்வை மட்டும் இவள்பக்கம் வரவேயில்லை.

“என்ன வேண்டுதல்??!!”

“ம்ம் உன் அப்பா எனக்கு கூப்பிட்டு மானசா அங்க வர்றப்போ அன்டைம் ஆகிடும்.. சோ கொஞ்சம் பார்த்து கூட்டிட்டு வர முடியுமான்னு கேட்டார்.. அந்த வேண்டுதல்..” என்று நிறுத்தி நிதானமாய் வார்த்தைகளை விட்டுச் சொன்னவன், நடந்துகொண்டே இருக்க,

“என்னது டாடியா??!!!!!!” என்று அதிர்ந்தவள், வேகமாய் அவனுக்கு நேரே போய் நின்று “நிஜமா அப்பாவா??!!” என்றாள் நம்ப முடியாமல்.

“இப்போ நீ ஏன் இப்படி வந்து நிக்கிற??” என்றவன், “நீ இந்த டைம்ல வர்றேன்னு எனக்கு எப்படித் தெரியும்?” என,

இத்தனை நேரம் சைக்கிளின் மறுபக்கம் நடந்தவள், இப்போது சித்துவின் அருகில் நடந்துவரத் தொடங்க, அதிகம் விலகியும் இல்லது, அதிகம் ஒட்டியும் இல்லாது, இது ஒரு புதுவித நெருக்கமாய் இருக்க, இருவருக்குமே அந்த நேரத்து சில்லிப்பையும் தாண்டி ஒருவித வெப்பம் உள்ளுக்குள்ளே பரவத்தான் செய்தது.

அடுத்து ஒரு ஐந்து நிமிடம் அமைதியிலேயே இருவரும் நடக்க, “இனிமே இப்படி வராத மானசா..” என்றான் உணர்வுகளற்ற குரலில்.

“ஏன்?!!”

“ஏன்னு கேட்டா.. இட்ஸ் நாட் சேப்.. எல்லா நேரமும் நான் வந்து கூட்டிட்டு போவேன் சொல்லிட முடியாது..”

“ஓ..!!” என்றவள், பின் யோசித்து “இப்பவும் நீங்க வேணும்னா முன்னாடி போங்க. எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை..” என்றாள்.

“இப்போ நான் வந்தது உனக்காக இல்லை.. உன் டாடி சொன்னதுக்காக..” என்றவன் “வாய் மூடிட்டு நடந்து வர.. வந்த எனக்கு போகவும் தெரியும்..” என்று கடுகடுக்க,

“ம்ம்ச் சும்மா திட்டாதீங்க சாரே.. நானே பசியா இருக்கேன்..” என்றவளுக்கு நிஜமாகவே பசித்தது.

“இப்படி கண்ட நேரத்துல கிளம்பி வந்தா பசிக்கத்தான் செய்யும்..” என்றவன், சற்று தள்ளி வந்த ஒரு சிறு சந்து போன்ற அமைப்பினும் சைக்கிளை விட,

“இந்த சைட் இல்லையே…” என்று அவள் சொல்லும்போதே, சற்று தூரத்தில் சிறு சிறு வீடுகள் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தது.

இதுவரைக்கும் மானசா இந்த பக்கம் வந்தது இல்லை. அப்போதுதான் புரிந்தது பேச்சோடு பேச்சாய் வந்த வழியை அவள் கவனிக்கவில்லை என்று. எப்போதோ வழி மாறியிருக்கிறது அது இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.

‘ம்ம் என்ன கவனத்துல வந்திருக்க மனு..’ என்று தனக்கு தானே குட்டிக்கொள்ள, அதற்குள் அங்கே வீடு இருக்கும் பகுதிக்கு அருகே சித்திரைச் செல்வன் சென்றிருக்க, இவளின் நடை தன்னைப்போல் குறைந்திருந்தது.

திரும்பிப் பார்த்தவன் “மானசா…” என்றழைக்க,

“ம்ம்..” என்றபடி பார்வையை மட்டும் அவனைத் தொடும்படி நின்றுவிட்டாள்.

“வா இங்க..” என,

“இங்க எதுக்கு??” என்றாள் பார்வையை சுற்றிலும் சுழற்றி.

அவள் முகம் காட்டும் ஒவ்வொரு பாவனையும் சித்திரைச் செல்வனுக்கு அத்துனை பிடித்தது என்றால், அதற்குமேல் அவளை உள்ளுக்குள்ளே ரசித்தபடி தான் வந்தான் என்று சொல்வது தான் நிஜம்.

“பசிக்குது சொன்னதானே..” என,

“இங்க கடை எதுவும் இல்லையே..” என்றாள் மானசா..

“கடை இல்லை.. ஆனா இவங்க வீட்ல போடற சுக்குமல்லி காப்பி செமையா இருக்கும். சின்னதா வீட்ல மெஸ் போல வச்சிருக்காங்க..” என்று சித்து சொல்லும்போதே, உள்ளிருந்து பால் கொதிக்கும் வாசனை வந்தது.

அந்த அதிகாலை பொழுதில், அதிலும் குளிர் கால காலைப் பொழுதில், இந்த பால் காயும் வாசம் கூட அப்படியொரு இனிமை கொடுக்க, ஆழ்ந்து மூச்செடுத்து விட்டவள்,

“செம்மையா இருக்கு..” என்றாள் உணர்ந்து.

நொடிப்பொழுது அவள் கண்கள் மூடித் திறக்கும் வரைக்கும், அவனின் பார்வையில் இருந்த மாற்றத்தை மானசா கண்டிருக்க வாய்ப்பில்லை.

“பரவாயில்ல சாரே… நீங்களும் கொஞ்சம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க..” என்று அவள் சிரிப்போடு சொல்ல, சித்து உள்ளே போய் இருவருக்குமான சுக்குமல்லி காப்பி வாங்கி வர,

“தேங்க்ஸ்…” என்றவள் வாங்கிப் பருக ஆரம்பித்தாள்.

அமைதியாய் இரண்டு நிமிடத்தில் அவள் பருகி முடித்துவிட, “என்ன நீ இப்படி வேகமா குடிச்சிட்ட, சிப் பை சிப் குடிச்சாதான் டெஸ்ட் தெரியும்..” என்று சித்து சொல்ல,

“இட்ஸ் ஓகே சர்…” என்றவள், அவன் குடித்து முடிக்கும் வரைக்கும் காத்திருந்தாள்.

அவள் காத்திருக்கிறாள் என்பதற்காக சித்துவும் சீக்கிரம் குடித்துவிட, உள்ளே சென்று பணம் கொடுத்துவிட்டு வந்தவன் “போலாமா..” என்று சைக்கிளை எடுக்க,

“ஓகே ..” என்றவள் அடுத்து எதுவுமே பேசவில்லை.

கிட்டத்தட்ட அடுத்து ஒரு பத்து நிமிட நடை, அவளின் ஹாஸ்டல் வந்துவிட “தேங்க்ஸ் சாரே..” என்றவள், அவளின் பையை தூக்கிக்கொண்டு அவனின் பதிலுக்காகக் கூட காத்திராது உள்ளே சென்றுவிட்டாள்.

சித்திரைச் செல்வனுக்குத் தான் சட்டென்று என்னவோபோல் ஆகிட ‘என்ன இவ இப்படி போறா…’ என்று குழம்பிப் போனான்.

தான் ஏதேனும் தவறாய் பேசினோமா??!! என்று கூட அவன் யோசிக்க அப்படி எதுவும் பேசியதாகவும் அவனுக்குத் தெரியவில்லை.

‘திடீர்னு என்னாச்சு இவளுக்கு…’ என்று எண்ணியவன், ‘ச்சே…’ என்று ஒருவித சலிப்போடு சைக்கிளை மிதித்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அத்தனை நேரமிருந்த அந்த இதம் பட்டென்று அறுபடுவது போலிருக்க ‘நோ சித்து.. டோன்ட் திங் எனிதிங்…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.

இத்தனைக்கும் சித்திரைச் செல்வன் கிளம்பி வந்தது பாஸ்கருக்குத் தெரியாது. இப்போது அவன் அறைக்கு வரவும் தான்

“எங்கடா போயிட்டு வர்ற இந்த டைம்ல..” என்று எழுந்து அமர்ந்து கேட்டான்.

“ம்ம்.. உன் பாசமலரை கூட்டிட்டு வந்தேன்..” என்றவன், கடுப்போடு அமர,

“என்னாது..??!!!!” என்று விழிகளை கசக்கி விளங்காது பார்த்தான் பாஸ்கர்.

“அவ அப்பா நைட் கால் பண்ணி சொன்னார்டா.. பார்த்து கூட்டிட்டு வர முடியுமான்னு.. அதான்..”

“நானும் இங்க தானேடா இருந்தேன்.. சொல்லவே இல்ல..” என்று பாஸ்கர் வியப்பாய் கேட்க,

“நீ ரெஸ்ட் ரூம் போயிருந்த..” என்றவன் இப்போது கவுந்தடித்து படுக்க,

“போயிட்டு.. அங்கேயே படுத்துத் தூங்கிட்டேனா?? திரும்ப வந்து இங்க தானே படுத்தேன்.. அப்போ கூட சொல்லல..” என்ற பாஸ்கருக்கு நிஜமாகவே கடுப்பாக இருந்தது.

அவள் மீது விருப்பம் என்பானாம்.. வேண்டாம் என்று இருப்பானாம்.  ஆனால் இப்படி விடிந்தும் விடியாத பொழுதில் அவளுக்காக இங்கிருந்து சைக்கிள் மிதித்து போய் அழைத்து வருவானாம். அதுவும் கூடவே இருக்கும் தன்னிடம் கூட சொல்லாது. எந்த ஒரு தோழனுக்குத் தான் கடுப்பு வராது.

“ம்ம்ச் முழிச்சு பார்த்தப்போ நீ நல்லா தூங்கிட்டு இருந்தடா.. அதான் எழுப்ப வேண்டாம்னு நானா போனேன்.. இப்போ என்ன..” என்று சித்து பதில் வர,

“ஓஹோ… நீ என்னவோ சொல்ற.. ம்ம் பாப்போம் எவ்வளோ தூரம்னு..” என்றவனும் படுக்க, சித்து உறங்கி இருந்தான்.

அதாவாது பாஸ்கி முன்னம் உறங்குவது போல் கண்களை மூடி படுத்திருந்தான். கடைசியாய் மானசா ஏன் அப்படிப் போனாள் என்று மண்டை குடைந்துகொண்டே இருந்தது.

அதற்கான பதில் காலை எட்டு மணி போல் ஷில்பாவின் அழைப்பில் கிட்டியது.

சித்திரைச் செல்வன் குளிக்கச் சென்றிருக்க, அவனின் அலைபேசிக்கு அழைத்தவள், எடுத்தவன் பாஸ்கி என்றதும் “பாஸ்கி சேட்டா மானசா ஹெல்த் சரியில்ல.. ஹெல்த் சென்டர்ல இருக்கோம்..” என,

“ஹேய்.. என்னாச்சு??!!” என்றான் அவனுமே பதறி அடித்து.

“வந்ததுல இருந்து ஒரே வாமிட்டிங்…. ரொம்ப முடியலை..” என்றவளின் குரலே வெகுவாய் பதற்றம் காட்ட,

“ஓகே.. நாங்க இதோ வர்றோம்..” என்றவன் “டேய் சித்து சீக்கிரம் வா..” என்று ரெஸ்ட் ரூம் கதவினைத் தட்ட, சரியாய் அவனும் வெளியே வந்துவிட்டான்.

“வா கிளம்பு..” என,

“என்னடா.. என்னாச்சு??” என்றான் சித்து சாவகாசமாய்.

“ம்ம்ச் டேய்.. மானசாக்கு ஹெல்த் சரியில்லை போல.. இங்க ஹெல்த் சென்டர்ல இருக்காங்களாம்.. இப்போதான் ஷில்பா கால் பண்ணா..??” என,

“வாட்??!! என்னடா சொல்ற.. நல்லாதானே டா வந்தா??” என்று கேட்டவனுக்கு எதுவும் ஓடவில்லை.

வேறு உடை மாற்றக் கூட தோன்றாமல் அப்படியே அவனின் கால் செருப்பினை மாட்ட,

“டேய்.. ட்ரெஸ் மாத்திட்டு வா..” என்று பாஸ்கர் தான் உலுக்க,

“அ.. அ..” என்றவன், எத்தனை வேகத்தில் உடை மாற்றினானோ, அப்படியே கிளம்ப, அவனின் தலையில் குளித்து வந்த ஈரம் அப்படியே இருக்க, அவனின் பதற்றம் கண்டு பாஸ்கருக்கே சங்கடமாய் போனது.

இத்தனை பிடித்தம் மனதில் வைத்துவிட்டு, இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று. மனதினில் இருப்பதை வெளிப்படையாய் சொல்லிவிட்டால் கூட நல்லது தானே. அவள் ஒன்றும் புரிந்துகொள்ள முடியாத அளவு சிறு பெண் இல்லையே..

இதை எப்போது இவன் புரிந்துகொள்ளப் போகிறான் என்று இருந்தது பாஸ்கருக்கு.

Advertisement