Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 13

‘வீட்டுக்கு போயாச்சா??!!’ என்று வந்திருந்த சித்திரைச் செல்வனின் மெசேஜையே, வெகு நேரமாய் பார்த்தபடி இருந்தாள் மானசா.

கிட்டத்தட்ட அவள் வீட்டிற்கு வந்தும் ஒரு மணி நேரம் ஆகிப்போனது. அவன் இந்த மெசேஜ் அனுப்பியும் கூட ஒருமணி நேரம் ஆகிப்போனது.

அதாவது அவள் கிளம்பிய நேரத்தில் இருந்து, அவள் அங்கே சென்று சேரும் நேரம் வரைக்கும் கணக்கிட்டு சரியாய் அந்த நேரத்திற்கு கேட்டிருக்கிறான்.. அப்படியெனில், இத்தனை நேரமும் அவனும் அவளைத்தான் நினைத்துக்கொண்டு இருந்தானா??!!

அது அவளுக்குப் புரியாது போகுமா என்ன??!!

அவனின் மெசேஜ் என்றதுமே ஒரு துள்ளுள் மனதினுள் எழத்தான் செய்தது. இதற்கும் அவள் பிரயாணப்படும் நேரம் எல்லாம் அடிக்கடி ஷில்பாவோ, பாஸ்கியோ அழைத்து எந்த இடத்தில் இருக்கிறாய் என்று அவ்வப்போது கேட்டுக்கொண்டு தான் இருந்தார்கள்.

சென்னையில் இருந்து எத்தனை முறை அவள் இப்படி தனியே ஊட்டி வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இப்படி யாரும் விசாரணை செய்தது கிடைதாது. அதையும் தாண்டி சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து அப்பாவின் கார் தயாராய் நிற்கும்.

இங்கேயானால் அவள் மதுரை சென்று விமானம் ஏறி கோவை செல்ல வேண்டும். அதெல்லாம் தாண்டி மானசாவிற்கு  பேருந்து பயணம் என்பது மிகப் பிடிக்கும். ஆகையினாலேயே தான் இதில் வருவது போவது எல்லாம். ஆனால் இன்றோ இந்த பேருந்து பயணம் அவளுக்கு பல உணர்வுகளை கொடுத்திருந்தது.

இத்தனைக்கும் கிளம்பியிருப்பது அவளின் அப்பாவின் பிறந்தநாளுக்கு என, அந்த உற்சாகம் கூட அவளிடம் தற்போது இல்லை. மாறாக ஒரு தவிப்பு. அதன் காரணமும் அவளுக்குப் புரியவில்லை.

என்னவோ இங்கிருந்து செல்லவே முடியாது யாரோ தன்னை கட்டாயப் படுத்தி இழுத்துச் செல்வதாய் இருந்தது மானசாவிற்கு.

வீட்டிற்கு வந்தபிறகும் கூட அதே உணர்வு தான்.

“என்ன மனு டயர்டா இருக்கா??” என்று தனுஜாவும், செந்தமிழும் மாறி மாறி கேட்டாகிவிட்டனர்.

‘இல்லையே ஐம் ஆல்ரைட்..’ என்று அவளும் கேட்கையில் எல்லாம் சொல்லியாகிவிட்டது.

இருந்தும் இதோ இப்படியோர் நிலையில் தான் அவள் இருக்கிறாள்..

இன்னமும் கூட பேருந்தில் இவள் ஏறி அமர்ந்தபின் நடந்தவை தான் நினைவில் நின்றுகொண்டு இருந்தது.

சித்திரைச் செல்வன் வர மாட்டான் என்று மானசாவின் மனது எண்ணிய அந்த நொடி, அதை பொய்யாக்கும் விதத்தில் அவன் வந்துவிட, அவளால் பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அத்தனை நேரம் ஜன்னல் பக்கம் வெறித்துக்கொண்டு இருந்தவள், அப்படியே தலையை உள்ளிழுத்து, தன் முகத்தினை மறைத்துகொண்டாள்.

“என்னடா திடீர்னு வந்து நிக்கிற..” என்று பாஸ்கி கேட்க,

“இல்லையே முன்னாடி போங்க.. வர்றேன்னு தானே சொன்னேன்..” என்றவன் “எங்க பஸ் ஏறிட்டாளா ??” என்று பேருந்தைப் பார்க்க, மானசாவின் முகமே தெரியவில்லை.

“என்னடா காணோம்..” என்று இவர்களை கேட்க,

“இருந்தாளே சித்து சேட்டா…” என்று ஷில்பா பேருந்தினைக் காண, சித்திரைச் செல்வனுக்கு எதுவோ புரிவது போலிருந்தது.

‘நான் போய் பாக்கிறேன்..’ என்று சைகை செய்தவன், பேருந்தின் உள்ளே ஏறி அவளின் இருக்கை அருகே வந்து நிற்க, தன்னருகே எதோ அரவம் உணர்ந்து, யாரேனும் வந்து அமரப் போகிறார்களோ என்றெண்ணி, முகத்தினை அழுந்தத் துடைத்தவள், சற்று தள்ளி அமர,

“இப்போ நான் இங்க உட்காரனுமா??” என்றான் சித்திரைச்செல்வன்.

அவனின் குரல் கேட்டு திடுக்கிட்டு மானசா நிமிர, கைகளை கட்டி அவன் அவளைப் பார்த்து நிற்க, இவளுக்குத் தான் இதயம் தாறுமாறாய் துடிக்கத் தொடங்கியது.

கண்கள் வேறு சிவந்து இருக்க, சித்திரைச்செல்வனின் பார்வையோ அவளின் விழிகளில் நிலைத்திட, அவளாள் இமைகளை தட்டிட கூட முடியவில்லை.

விழி அகலாமல் அவனையே பார்த்து இருக்க, “என்ன மானசா??” என்றான் அமைதியாய்.. அழுத்தமாய்..

“ம்ம்ஹும்..” என்று தலையை மறுப்பாய் ஆட்டியவளுக்கு, “நீ.. நீங்க போங்க..” என,

“அது தெரியும்.. நீ ஏன் இப்படி உக்காந்து இருக்க..??” என்றான் விடாப்பிடியாய்.

இன்று பார்த்தா இந்த பேருந்து இப்படி நிற்க வேண்டும் என்றுதான் தோன்றியது அவளுக்கு. இவன் பேசினாலும் இம்சை. பேசாது போனாலும் பெரிம்சையாய் இருக்க, இவனின் இந்த கரிசனம் வேறு பெரும் அவஸ்தை கொடுத்தது. 

நல்லவேளை அதற்குள் நடத்துனர் ஏறிவிட, பேருந்து கிளம்புவதற்கான விசிலும் அடித்துவிட

“நீங்க போங்க சித்து சார்..” என்றாள் மானசா இறங்கிய குரலில்.

“ம்ம்..” என்றவன் “டேக் கேர்.. பார்த்து போ..” என்றவனுக்கு இவளை தனியே அனுப்புவதா என்ற கேள்வி.

அதற்காக ஊட்டி வரை சென்று விட்டு வரவா முடியும்…!!

“நா.. நான் போயிப்பேன்..” என்றவள், திரும்பவும் காரணமே இல்லாது “சாரி..” என,

“லூசு…. நீயா எதுவும் நினைச்சுக்காத..” என்றவன், “வீட்டுக்கு போயிட்டு இன்பார்ம் பண்ணு..” என்றபடி இறங்கி கீழே வந்துவிட,

மானசாவிற்கு ‘ஐயோ போகிறானே..’ என்று மனம் பதற, வேகமாய் ஜன்னல் புறம் எட்டிப்பார்க்க, அதற்குள் பேருந்து நகரத் தொடங்கியிருந்தது.

எப்படியோ ஒருவழியாய் ஊர் வந்து சேர்ந்துவிட்டாள். அதுவே பெரிய அதிசயமாய் தோன்றியது இப்போது அவளுக்கு. இப்போதோ,  அவனுக்கு பதில் அனுப்பும் எண்ணம் கூட இல்லாது, அவன் கேட்டிருக்கும் கேள்வியையே பார்த்தபடி இருக்க, அவள் தான் அனுப்பிய மெசேஜ் படித்துவிட்டாள் என்பதற்கான அறிகுறி காட்ட, அவளின் பதில் வருமா என்று பார்த்திருந்தவன்,

பின் ‘அவ பேமிலியோட பேசிட்டு இருப்பா…’ என்று அவனே அவனை சமாதானம் செய்துகொள்ள, மானசாவின் கரம் அதுவாகவே அவனின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தது.

ஏன் அழைக்கிறாள் என்பது கூட அவளுக்கு விளங்கவில்லை, அலைபேசி ஒலி எழுப்பவும், சித்திரைச் செல்வன் அப்போதுதான் உறக்கத்தின் பிடியில் சென்றவன்  எடுத்துப் பார்க்க, அழைப்பது அவள் என்று தெரிந்ததும், வேகமாய் அழைப்பை ஏற்று,

“ஹலோ..” என,

“ம்ம்..” என்றாள். குரலே அவளுக்கு எழும்பவில்லை.

“ஹலோ.. மானசா..” என்றவனின் குரலில் அத்தனை மென்மை.

அவள் அப்போதும் “ம்ம்…” என்று சொல்ல,

“என்னாச்சு?? ஏன் இப்படி அமைதியா இருக்க.. கோபமா..” என்றான் ஆதுரமாய்.

எப்படியெல்லாம் கோபத்தில் கத்தியவன், இப்போது இப்படி பேச, அவனின் குழைவில் அவளும் தான் தன்னிலை மறக்க “எனக்கென்ன கோபம்..??” என்றாள் சலுகையாய்.

“பின்ன ஏன் ரிப்ளை பண்ணல..??”

“நான் ரிப்ளை பண்ணலன்னாலும் அதெல்லாம் நீங்க பெருசா எடுத்துப்பீங்களா என்ன??” என்று அவள் வேண்டுமென்றே கேட்க,

“அடடா… இப்படியெல்லாம் நினைக்கிறியா நீ.. நான் எப்போ உன்னை பெருசா நினைக்காம இருந்திருக்கேன்… பஸ் ஸ்டாப் வந்து பார்த்தா நீ தலையை கூட வெளிய காட்டல..” என்று அவனும் கேட்க,

“ம்ம் என்னவோ அழுகை வந்திடுச்சு..” என்றாள் அப்போதும் கூட முகத்தை சுருக்கி.

“ஏன் அழனும்.. எதுக்கு அழுகை வரணும்??? கிளாஸ்லயும் அழுத நீ.. எனக்கு என்னவோ நான் தான் உன்னை ரொம்ப படுத்துறேனோ தோணிடுச்சு..” என்றவன்,

“பொறுத்துக்கோ நெக்ஸ்ட் வீக் இருந்து ஜார்ஜ் சர் கிளாஸ்.. நீ நிம்மதியா இருக்கலாம்..” என்றதும்,

“ஓகே.. ரொம்ப தேங்க்ஸ்..” என்று கடுப்பாய் சொல்லிவிட்டு வைத்தவள், அப்படியே அழைப்பையும் துண்டித்துவிட, 

இங்கே பாஸ்கி, இவனை விசித்திரமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான். இருவரும் அவர்களுக்கு தங்குவதற்கு ஒதுக்கியிருந்த அறையில் தான் இருந்தார்கள். அவர்களின் படிப்பு சார்ந்து முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால், இருவருமே வாரக் கடைசியிலும் வீடு செல்லவில்லை.

இங்கேயே தங்கிவிட, இப்போதோ பாஸ்கரின் கேள்விப் பார்வைக்கு சித்திரைச் செல்வன் பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலை.

என்ன கேட்கப் போகிறான் என்று தெரிந்தே “டேய் என்ன??” என்று அதட்ட,

“இது நான் கேட்கணும்..” என்றவன் “என்ன நடக்குது இங்க??” என,

“இப்போ என்னாச்சு??” என்றான் சித்துவும் எதுவும் தெரியாதவன் போல்.

“டேய் டேய்.. நடிக்காதடா.. ஆமா அந்த பொண்ணு கிளம்புறப்போ ஏன் அழுத்துச்சு.. நீ ஏன் திடீர்னு வந்து அங்க நின்ன.. பஸ்ல வேற போய் பேசின.. இப்போ இந்த அர்த்த சாமத்துல போன் வேற..” என்று பாஸ்கி அடுக்க,

“போதும் போதும்…” என்று சித்து சொல்ல,

“இங்க பாரு சித்து.. ஒரு விஷயம் இருக்குன்னா அதை ஆமான்னு அக்சப்ட் பண்ணிக்கணும்.. இல்லைன்னா அதையும் அக்சப்ட் பண்ணிக்கணும்.. நீயும் சரி மானசாவும் சரி கிட்ஸ் கிடையாது.. உங்களுக்குள்ள இப்போ என்ன பீலிங்க்ஸ் போயிட்டு இருக்குனு உங்களுக்கே புரியாத அளவுக்கு ரெண்டுபேருமே விபரம் இல்லாத ஆளுங்களும் கிடையாது..” என,  படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தே விட்டான், சித்திரைச் செல்வன்.

எழுந்து அமர்ந்தவன் எதுவும் சொல்லாது இருக்க “என்ன சித்து.. லவ் பண்றியா??” என்ற பாஸ்கியின் நேரடி கேள்விக்கு அவனால் பதில் சொல்லிட முடியவில்லை.

அமைதியாகவே இருக்க, “என்னடா… சும்மா அது இதுன்னு சொல்லி சமாளிக்காத.. ஆமான்னா ஆமான்னு சொல்லு.. இல்லன்னா இல்லைன்னு சொல்லு..” என,

“ஆமான்னு சொல்லத்தான் ஆசை.. ஆனா வேணாம்னு தோணுதுடா..” என்றான் சித்து கரகரத்த குரலில்.

‘இது என்ன புது டிசைன்…’ என்றுதான் பாஸ்கருக்குத் தோன்றியது. அதைக் கேட்காது பார்வையில் கேட்க,

“எஸ் பாஸ்கி.. உனக்கே தெரியும், டாக்டரேட் வாங்குறது என்னோட எத்தனை வருஷ கனவுன்னு… அதும் இல்லாம மானசா.. ம்ம்.. அவளோட லைப் ஸ்டைல் வேற.. என்னோடது டோட்டலா வேற பாஸ்கி.. அவளும் இதுல ஸ்டிக் ஆக மாட்டா…” என, பாஸ்கர் இம்முறை முறைத்தான்.

‘இதெல்லாம் ஒரு காரணமா..’ என்று பாஸ்கர் கேட்க,

“ஐ க்னோ அவளுக்குமே எதோ ஒரு டிஸ்டர்பன்ஸ் இருக்கு.. ஆனா இங்க இருந்து போயிட்டா அவ சரியகிடுவா.. நீ வேணா பாரேன் ரிட்டன் வர்றப்போ அவ எப்படி வர்றான்னு.. சின்ன பொண்ணு தானே.. அதான் இப்படி..” என்று சித்திரைச் செல்வன், அவனாய் யூகனம் செய்து சொல்ல,

“அவ நம்மளை விட மெச்சூர் டா…” என்றான் பாஸ்கி.

“அதுவும் தெரியும். அதனால தான் நான் இப்படி ஒரு முடிவுல இருக்கேன். என் மனசுல என்ன இருந்தாலும் சரி.. அதை நான் சொல்லப் போறது இல்லை.. என்ன ஜஸ்ட் அவ இங்க இருக்கிறது வரைக்கும் கொஞ்சம் நல்லபடியா ட்ரீட் பண்ணனும்.. அவ்வளோதான்..” என்று சித்து சொல்ல,

“ஏன்டா உன்னால லவ் லைப் அண்ட் ஆம்பிஷன் பேலன்ஸ் பண்ண முடியாதா?? அவ்வளோ வீக் பெர்சனா நீ??” என,

“ஹா ஹா…” என்று சிரித்தவன் “அனாவசியமா ஒரு பொண்ணோட மனச நான் கலைக்க விரும்பல பாஸ்கி. ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட்.. நான் இப்படி பீகேவ் பண்ணியே இதோ, கிளம்புறப்போ அழுது சாரி கேட்டுட்டு போறா.. எனக்குமே இப்போல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா நடந்துக்க முடியலை தான்..

ஆனா இதெல்லாம் வேண்டாம்னு மட்டும் உறுதியா தோணுது பாஸ்கி..  கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.. பட் சரியாகிடும்..” என்றவன் மீண்டும் படுத்துவிட,

பாஸ்கருக்குத்தான் தலை சூடாகியது. அவனவன் காதல் வந்தால், அடுத்த நிமிடமே சொல்லி, சம்மதம் வாங்கி, என்னென்னவோ செய்கிறார்கள். இங்கே என்றால் இவன் இப்படி என்று வியப்பாய் இருக்க, ஒருபக்கம் சித்திரைச் செல்வன் சொன்ன காரணங்கள் கண்டு குழப்பமாகவும் இருந்தது.

இதெல்லாம் எத்தனை நாளைக்கு நிலையாய் இருக்கும்..??

என்னதான் வேண்டாம் வேண்டாம் என்று அணைபோட்டு கட்டினாலும், காதல் என்ற ஒன்றை பிரதிபலிக்க ஒரு சொல்லோ, இல்லை ஒரு பார்வையோ, இல்லை ஒரு சிறு ஸ்பரிசமோ ஏதாவது ஒன்று போதுமே..

நியாயமாய் நடந்துவிட வேண்டும் என்றெண்ணி, மானசாவை கஷ்டப்படுத்தப் போகிறான் என்பதும், தானும் சிக்கி வருந்தப் போகிறான் என்பதும் மட்டும் தெள்ளத் தெளிவாய் தெரிந்தது பாஸ்கருக்கு.

“ஹ்ம்ம்…” என்ற ஒரு ஆழ்ந்த பெருமூச்சு வெளியிட்டு, பாஸ்கரும் படுக்க, சித்திரைச் செல்வனின் உறக்கம் பறந்தோடி இருந்தது.

காதலை உணர்ந்தும் இது தனக்கு வேண்டாம் என்று மறுப்பவன் உலகினில் உண்டோ??!!

இவனுக்கு இந்த நிலையெனில், மானசாவிற்கோ இப்போது சித்திரைச் செல்வன் மீது கோபம் கோபமாய் வந்தது. இவன் முன்னைப் போலவே கடுகடுப்போடே இருந்திருக்க வேண்டியது தானே என்று. திடீர் என்று கரிசனம் காட்டுவதும், அக்கறை கொள்வதும், பின் திடீரென்று விலகி நின்று பேசுவதாய் இருக்க, இவளுக்கு இப்போது எரிச்சல் ஆகியது.

ஏதாவது ஒரு நிலையில் இருந்தால் தான் என்ன..

‘இருக்கட்டும்.. ஊருக்கு போய் பேசிக்கிறேன்..’ என்று இவளும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டாள்.

பின்னே தான் இப்படி அழுமூஞ்சியாய் இருப்பது யாருக்குத்தான் பிடிக்கும்..

அதிலும் மானசா போன்ற ஒருத்திக்கு, தான் சோர்ந்து போவது என்பது பிடித்த விசயமா என்ன??!!

‘நோ.. நெவர்…’ என்று தலையை சிலுப்பிக்கொண்டாள்.

Advertisement